16 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 188

என் கைவசம் இருந்த இரு மரக்கடைகளின் பில்களையும் தலைமை ஆசாரியின் முன் விரித்ததுமே மனிதர் அடங்கிப் போய்விட்டார். மேலும் அவர் மேல் குற்றம் சாட்டி எனக்கு ஒன்றும் பெரிதாக ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்த நான் அவருக்கு கொடுக்க வேண்டிய கூலியைக் கொஞ்சமும் குறைக்காமல் கொடுக்கவே மனிதர் கூனிக்குறுகிப் போய் தன் நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு தலையைக் குனிந்துக்கொண்டே சென்றார்.

‘என்ன ஜோசப் அந்த ஆள் செஞ்சதுக்கு அவந்தானே ஒங்களுக்கு குடுக்க வேண்டியிருக்கும்? நீங்க பாட்டுக்கு மீதி கூலிய குடுத்து அனுப்பறீங்க?’ என்றார் ராஜேந்திரன்.

‘இல்ல சார், அவருக்கு குடுக்க வேண்டிய கூலிய பிடிச்சி வச்சி நான் ஒன்னும் பெரிசா சேமிச்சிரப் போறதில்ல. ஆனா அவரப் பாருங்க. அவர் வந்த வேகம் என்ன இப்ப போற போக்கென்ன? இனி இந்த மாதிரி தில்லுமுல்லு பண்ணுவாருங்கறீங்க? மாட்டார். அதான் அப்படி செஞ்சேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.’

ராஜேந்திரனுக்கு அப்போதும் இதில் ஒப்புதல் இல்லையென்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ‘சரியான ஏமாளி ஜோசஃப் நீங்க’ என்று முனகியவாறு அவர் விலகிச் செல்ல நான் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தேன்.

***

ஆக, சுமார் நான்கு மாத கால போராட்டத்திற்குப் பிறகு மனதில் ஒருவகை நிம்மதி, மகிழ்ச்சி.

அன்று பிற்பகல் என்னுடைய மாமனார் வீட்டார் விடைபெற்று சென்றதும் அமர்ந்து முதல் நாள் முதல் விடாமல் எழுதி வைத்திருந்த கணக்கைப் பார்த்தேன். நான் துவக்கத்தில் தயாரித்து வைத்திருந்த பட்ஜெட்டுக்கு எந்த சம்பந்தமுமில்லாமல் இருந்தது மொத்த செலவு. இருப்பினும் வங்கியில் நான் எடுத்திருந்த கடனைத் தவிர வெளியில் வேறெங்கும் கடன் வாங்காமல் முடிக்க முடிந்ததே என்ற திருப்தி இருந்தது.

வங்கி குடியிருப்பில் இருந்த மீதி சாமான்களையும் அடுத்த நாளே எடுத்துக்கொண்டு புது வீட்டில் வசிக்க ஆரம்பித்தோம். என் மூத்த மகளின் பள்ளி மட்டும்தான் சற்று தூரம். மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை..

மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில் மொட்டை மாடியில் ஈசிச் சேரைப் போட்டுக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் நீலவானத்தைப் பார்த்தவாறு கழித்த அந்த சுகமான நாட்களை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். சொந்த வீட்டில் வசிப்பதில் இருக்கும் இன்பமே தனிதான்.

ஆனால் அதை முழுவதுமாய் அனுபவிக்க முடியாமல் அடுத்த ஆறே மாதத்தில் தூத்துக்குடியில் இருந்து மாற்றம் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

சாதாரணமாக எங்களுடைய வங்கியில் சம்பந்தப்பட்டவரிடமிருந்து மாற்றம் தேவையென்று கோரிக்கை வராமல் ஒரு ஊரிலிருந்து மூன்று வருடத்திற்குள் மாற்ற மாட்டார்கள். சொந்த ஊர் அல்லது கிளையின் வர்த்தகத்தில் அபிரிதமான வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் மேலும் ஒரு வருட காலம் அங்கேயே இருப்பதற்கும் தடை இருநததில்லை.

அதற்கிடையில் மாற்றம் ஏற்படுகிறதென்றால் ஒன்று சம்பந்தப்பட்டவர் ஏதாவது சொந்த காரணத்திற்காக தனக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட கிளையில் அவருடைய செயல்பாட்டில் ஏதாவது குறை இருக்க வேண்டும். அல்லது அவர் மீது வாடிக்கையாளர்கள் யாராவது புகார் கூறியிருக்க வேண்டும்.

நான் தூத்துக்குடி கிளைக்கு வந்தபோது இருந்த பிரச்சினைகளையெல்லாம் வங்கிக்கு பெரிய பாதகம் இல்லாமல் தீர்த்ததுடன் அங்கிருந்த இரு வருடங்களில் வர்த்தக வளர்ச்சிக்கென என்னுடைய வட்டார மேலாளர் நிர்ணயித்த எல்லா இலக்குகளையும் எட்டியதுடன் கிளையின் மொத்த  வர்த்தகத்தையும் ஏறக்குறைய இரு மடங்காக்கியிருந்தேன். அதற்கென பாராட்டு கடிதமும் என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து வந்திருந்தது என்னுடன் பணியாற்றிய எல்லா அலுவலர்களுக்கும் தெரியும்.

நான் தூத்துக்குடியிலிருந்து மாற்றப்படுவதாக எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்த Transfer Listல் என்னுடைய பெயர் இருந்ததைப் பார்த்ததும் நான் அதிர்ந்துபோனேன். இதை முற்றிலும் எதிர்பாராத என்னுடைய உதவி மேலாளரும் மற்ற பணியாளர்களும் கூட அதிர்ச்சியடைந்தனர்.

‘என்ன சார் நான் என் சொந்த ஊர் ஹைதராபாத்துக்கு இங்க வந்ததுலருந்தே கேட்டுக்கிட்டிருக்கேன் எனக்கு குடுக்க மாட்டேங்குறாங்க. நீங்க சொந்த ஊர்ல இருக்கறீங்க. வந்து ரெண்டு வருசத்துக்குள்ள ஒங்கக் கிட்ட கேக்காமயே மாத்திட்டாங்க. எச்.ஓவில கூப்ட்டு கேளுங்க சார்.’ என்று படபடத்தார் என்னுடைய உதவி மேலாளர்.

நான் மாற்றப்பட்டிருந்த ஊர் மதுரை. தூத்துக்குடியிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே என்றாலும் மாற்றம் மாற்றம்தானே. அதுவும் சொந்த ஊருக்கு வந்து முழுதாய் இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில் எதற்கு இந்த முன்னறிவிப்பில்லாத மாற்றம் என்று மாய்ந்துபோனேன்.

என்னுடைய தலைமையலுவலக மேலதிகாரிகள் மட்டத்தில்  சமீபத்தில் பதவியேற்றிருந்த சேர்மன் ஏற்படுத்தியிருந்த அதிரடி மாற்றங்களில் எனக்கு தெரிந்த பல அதிகாரிகள் எச்ஆர் இலாக்காவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமலிருந்த இலாக்காக்களில் இருந்தனர்.

அப்போதைய எச். ஆர். தலைவரை எனக்கும் கொஞ்சமும் பழக்கமில்லை. ஆனால் சேர்மன் மற்றும் பொது மேலாளர்களாகவிருந்த இருவரிடமும் நான் குமாஸ்தாகவும், உதவி மேலாளராகவும் பணியாற்றியிருந்தேன்.

இருப்பினும் என்னுடைய வங்கியின் அதிகார ஏணியில் (hierarchy) நான் அப்போதிருந்த இருந்த இடம் கடை நிலைக்கும் சற்று மேலே.. இடை நிலை என்று கூறுவதற்கு இன்னும் ஒரு நிலை இருந்தது. நான் எப்படி பொது மேலாளரையோ அல்லது சேர்மனையோ தொலைப்பேசியில் தொடர்பு கொள்வது என்ற தயக்கத்தில் அன்று முழுவதும் மருகிக்கொண்டே இருந்தேன்.

என்னுடைய வட்டார மேலாளரை தொடர்புக் கொண்டு விசாரித்தாலென்ன என்றும் தோன்றியது. உடனே அவரை அழைத்தேன்.

‘டி.பி.ஆர். எனக்கும் ஏன்னு விளங்கலே. ஒரு வாரத்துக்கு முன்னால நம்ம ஜி.எம் கூப்ட்டு சேர்மன் டி.பி.ஆர மதுரைக்கு ப்ரொப்போஸ் பண்றார், நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். நா இல்ல சார் அவர் இப்பத்தான் அங்க ஸ்டெபிலைஸ் ஆகி புது பிசினஸ்லாம் கொண்டு வர ஆரம்பிச்சிருக்கார். இந்த நேரத்துல அவர அங்கருந்து டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு சொன்னேன். அவரும் சரி நான் சேர்மன் கிட்ட சொல்றேன்னு வச்சிட்டார். சரி, ஒங்கள இந்த வருசம் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சி ஒங்கக்கிட்ட இந்த விஷயத்த சொல்லாம இருந்துட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னால வந்த டிராஃப்ட் லிஸ்ட்ல கூட ஒங்க பேர் இல்ல டிபிஆர். ஆனா கடைசி நேரத்துல சேர்மனே ஒங்க பேர சேர்க்க சொல்லிட்டாராம். ஏன்னு தெரியல.. எச். ஆர் ஹெட்டுக்கும் தெரியாதாம். நீங்க கூப்டறதாருந்தா சேர்மனத்தான் கூப்பிடணும். அவர்கிட்டத்தான் நீங்க மெட்றாஸ்ல ஒர்க் பண்ணியிருக்கீங்களே.. தயங்காம கூப்டுங்க.’ என்றார் அவர்.

என்னடாயிது சோதனை என்றிருந்தது எனக்கு. அப்போதிருந்த மனநிலையில் சேர்மனைக் கூப்பிட வேண்டாம். மாலையில் என்னுடயை மனைவி மற்றும் மாமனார் வீட்டில் கலந்தாலோசித்துவிட்டு அடுத்த நாள் கூப்பிடலாம் என்று நினைத்து கலக்கமடைந்திருந்த மனதை ஒரு நிலைப்படுத்தி என்னுடைய அலுவல்களில் கவனத்தைச் செலுத்த முயன்றேன்.

என்னுடைய மாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய கிளையில் சரிசெய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. முந்தைய நான்கு மாதங்களில் வீட்டு வேலைக்காக ஏறத்தாழ ஐந்து வாரங்கள் விட்டு விட்டு விடுப்பு எடுத்திருந்ததால் கிளையின் பல முக்கிய பொறுப்புகளை என்னுடைய உதவி மேலாளர் வசம் விட்டிருந்தேன்.

நான் அங்கேயே அடுத்த வருடம் இருப்பதென்றால் சாவகாசமாக அவர் செய்திருந்த அலுவல்களை எல்லாம் சரிபார்த்திருக்கலாம். ஆனால் மாற்றம் உறுதியாகி நான் மதுரை செல்ல வேண்டிவந்தால் அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் அவை எல்லாவற்றையும் சரிபார்த்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றையும் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் எனக்கு பின்னால் வருகிறவர் என்னைப் பற்றி குறை கூற வாய்ப்பிருக்கிறது.

அன்று மாலை என்னுடைய மனைவியிடம் கூறியதும் அவர் வருத்தமடைவார் என எதிர்பார்த்திருந்ததற்கு நேர்மாறாக, ‘அப்படியா மதுரை பெரிய ஊராச்சேங்க.. பிராஞ்சும் இத விட பெரிசாச்சே.. போயிரலாங்க.’ என்றார் மகிழ்ச்சியுடன்.

நான் அதிர்ச்சியுடன், ‘ஏய் என்ன நீ? நா எங்க அப்பா அம்மா ஊர்லயே இருந்துக்கறேன் நீங்க மட்டும் போங்கன்னு சொல்வேன்னு பார்த்தேன்.  நீ என்னடான்னா...’ என்று இழுத்தேன்.

அவரோ சலிப்புடன், 'ஆமா.. நானும் அப்படி நினைச்சித்தான் தஞ்சாவூர்லருந்து வர்றப்ப சந்தோஷப்பட்டேன். ஆனா.. வேணாங்க.. அதையெல்லாம் எதுக்கு இப்போ நினைச்சிக்கிட்டு.. எங்க அண்ணன் கேஸ் வேற கோர்ட்ல இருக்கு. அதுக்கு அவங்களுக்கு சாதகமா முடிவு வந்தா வெட்டியா செலவ இழுத்து விட்டுட்டீங்கம்பாங்க.. எதிரா வந்தா நாந்தான் அப்பவே சொன்னேனே இவர் வேணும்னே என் மாப்பிள்ளைக்கு இப்படியொரு நிலத்த வாங்கி வச்சிட்டாரும்பாரு அவங்க மாமனார். போறுங்க.. பேசாம புதுசா வர்ற மேனேசர்க்கே இந்த வீட்ட வாடகைக்கு விட்டுட்டு நாம் மதுரைக்கே போயிரலாம்.’ என்றார்.

அவர் கூறியதிலிருந்த நியாயமும் வேதனையும் எனக்கு தெளிவாக விளங்கியது. இருந்தாலும் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகளையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. அவளுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்து பார்க்க முடியாத வயது.. இருந்தும் அவளிடம், ‘ஏய் குட்டி அப்பாக்கு மதுரைக்கு டிரான்ஸ்ஃபர் யிருச்சி.. நீ புது ஸ்கூலுக்கு போணும். பரவாயில்லையா?’ என்றதுமே முகம் சோர்ந்து போய்விட்டது.

கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது, ‘அப்போ என் ஃப்ரெண்ட்ஸ்?’ என்றாள்.

நான், ‘இல்லடா அங்க போய் நிறைய ஃப்ரெண்ட்ச புடிச்சிக்கலாம்.. இத விட பெரிய ஸ்கூலாச்சே.’ என்றேன். அவளுக்கு விளங்கிற்றோ இல்லையோ, ‘சரிப்பா..’ என்றாள் அரைமனதுடன்.

‘அப்போ ஒங்க அப்பா வீட்ல போயி டிஸ்கஸ் பண்ண வேணாமா?’ என்றேன் என் மனைவியிடம்.

‘ஆமா... டிஸ்கஸ் பண்ணா என்ன சொல்வாங்கன்னு நீங்க நினைக்கறீங்க? என்ன மாப்பிள்ளை இங்கயே இருங்களேன்னா? நிச்சயமா சொல்ல மாட்டாங்க. ஒங்கண்ணன் கப்பல்லருந்து வந்தா மறுபடியும் நிச்சயமா ஏதாவது பிரச்சினை வரும்டி. அதுக்குள்ள ஒங்களுக்கு இங்கருந்து டிரான்ஸ்ஃபர் ஆயிட்டா கூட நல்லதுன்னுதான் தோனுதுன்னு அம்மாவே ஒரு தடவ சொல்லியிருக்காங்க. ஒங்கக்கிட்ட சொன்னா கவலப்படுவீங்களேன்னுதான் சொல்லாம இருந்தேன். அதனால அவங்ககிட்ட போயி இப்ப இதப்பத்தி டிஸ்கஷன்லாம் பண்ண வேணாம்.’

‘சரி..ஆனா நம்மகிட்ட சொல்லாமயே எதுக்கு ரெண்டு வருசத்துக்குள்ள மாத்தனாங்கன்னு நீ கேக்கவேயில்லையே?’ என்றேன்.

அதற்கும் அவரிடம் பதிலிருந்தது. ‘என்னங்க நீங்க? நாம தஞ்சாவூர்லருந்து ரிக்வெஸ்ட்லதான இங்க வந்தோம். அப்பவும் மூனு வருசம் ஆவலேல்லே? நாம கேட்டதும் குடுத்தாங்க இல்லே? சரி சொந்த ஊர் போயி வீட்டை கட்டி முடிச்சிட்டார். இனி மாத்திரலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒங்கக்கிட்ட கேட்டா நிச்சயமா நீங்க ஒத்துக்கிட்டிருக்க மாட்டீங்க. அதான் கேக்காமயே போட்டுட்டாங்க. இத கெஸ் (guess) பண்றதுக்கு பெரிசா யோசிக்கணுமாக்கும். நீங்க வேணும்னா ஒங்க எச். ஓ.வில கேட்டு பாருங்க.. நா சொன்னா மாதிரிதான் இருக்கும்.’

நான் வாயடைத்துப் போய்.. அட! அப்படியும் இருக்கலாமோ என்று நினைத்தேன்..

அப்படியேதான் இருந்தது.

அடுத்த நாள் பலமுறை தயங்கி சுமார் நண்பகல் வேளையில் என் சேர்மனுடைய காரியதரிசியை அழைத்தேன். முந்தைய சேர்மனுக்கிருந்தவரேதான். என்னிடம் குமாஸ்தாவாக வேலை செய்தவர் என்பதால் பரிச்சயமிருந்தது. ‘சேர்மன் இப்ப என்ன மூட்ல இருக்கார்?’ என்றேன் அவரிடம்.

அவர் சிரித்துக்கொண்டு, ‘சார் நல்ல மூட்லதான் இருக்கார், குடுக்கறேன்.’ என்று இணைப்பைக் கொடுத்தார்.

‘யெஸ் டி.பி.ஆர். எப்படி இருக்கீங்க? ஒங்க வீட்டு ஹவுஸ் வார்மிங் இன்விட்டேஷன பார்த்தேன். வர முடியாம போயிருச்சி. ஒரு அஞ்சாறு மாசமாயிருச்சில்லே.. அந்த டென்ஷன்லாம் போயிருக்குமே..’ என்றார் சிரித்தவாறு..

அடச்சை... இவருக்கு அழைப்பிதழ் அனுப்பியதுதான் தவறு என்று நினைத்தேன். நாம நிம்மதியா சொந்த வீட்லருக்கறது பொறுக்கல போல..

'ஆமா சார்.’ என்று அசடு வழிந்தேன்.. தொடர்ந்து நான் கேட்க வந்த விஷயத்தை மெள்ள கூறினேன்..

அவர் சீரியசாக, ‘டிபிஆர். I will tell you why I selected you.. என்று துவங்கி அடுத்த ஐந்து நிமிடங்கள் என்னை மதுரை கிளைக்கு மேலாளராக தேர்ந்தெடுத்த காரணத்தை பொறுமையுடன் விளக்கி எனக்கு மறுத்து பேச வாய்ப்பளிக்காமல் All the best, you have one more month.. Don’t ask for more time.. You presence is needed in Madurai..’ என்றவாறு இணைப்பைத் துண்டிக்க நான் சலிப்புடன் ஒலிவாங்கியை வைத்துவிட்டு யோசனையில் ழ்ந்தேன்.

ச்சை.. எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது என்று நினைத்தேன். தூத்துக்குடிக்கு மாற்றலாகி வந்த முதல் ஆறு மாதம் படாத பாடெல்லாம் பட்டு இங்கிருந்த குளறுபடிகளையெல்லாம் சரி செய்து அதன் பிறகு வர்த்தகத்தைக் கூட்ட சிரமப்பட்டு கிளை வளர்ச்சி பாதையில் இருக்கும்போது அதனுடைய பலனை அனுபவிக்க முடியாமல் இதற்கு மேல் குளறுபடிகள் நிறைந்த கிளைக்கு பொறுப்பேற்று.. இது தேவையா என்று நொந்துப்போனேன்.

வங்கியின் சேர்மனுடைய நேரடி பார்வையில் இருந்த கிளை மதுரை என்பது அவரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது. நான் தூத்துக்குடி கிளையிலிருந்த காலத்தில் மதுரை கிளைக்கு இரண்டு, மூன்று முறை சென்றிருக்கிறேன். கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்தான் மேலாளராக இருந்தார். நான் சென்றபோதெல்லாம், ‘இந்த பிராஞ்ச மேனேஜ் பண்றது பெரிய தொல்லை டிபிஆர். இத ஒங்கள மாதிரி தமிழ் நல்லா பேச தெரிஞ்ச ஆளுங்கதான் மேனேஜ் பண்ண முடியும். நான் கோயம்புத்தூர்ல இருந்துருக்கேன். அங்க மலையாளம் பேசினாலே ஆளுங்க புரிஞ்சிப்பாங்க. இங்க நா சொல்றது கொஞ்சமும் கஸ்டமர்ங்களுக்கு புரிய மாட்டேங்குது.. அவங்க பேசற தமிழும் கொஞ்சங்கூட எனக்கு புரிய மாட்டேங்குது.. இதுல வர்ற ப்ராப்பர்ட்டி டாக்குமெண்ட்ஸ்லாம் வேற தமிழ்லயே இருக்குது.. இங்கருக்கற சூட் ஃபைல்ட் கேசுங்களுக்கு வேற கோர்ட்டுக்கு தினம் போவணும்.. அங்கயும் எல்லாரும் தமிழ்தான் பேசறாங்க.. முடியல டிபிஆர்.’ என்று புலம்புவார்.

தமிழ் பிறந்து வளர்ந்த ஊராயிற்றே.. வேறெந்த மொழியில் பேசுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன்..

அம்மேலாளர் என்னைவிட இரண்டு வருடங்கள் சீனியர். மதுரைக் கிளையும் தூத்துக்குடி கிளைக்கு மட்டுமல்ல நான் அதுவரை மேலாளராக பணியாற்றிய மூன்று கிளைகளையும் விட வர்த்தகத்தில் பெரியது, பிரச்சினைகள் நிறைந்தது என கேள்விப்பட்டிருந்தேன்..

ஆனால் சேர்மனே தலையிட்டு என் பெயரை பரிந்துரைத்திருந்ததால் அந்த சோதனையிலிருந்து விடுபட முடியாமல் தூத்துக்குடிக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்ப வேண்டியிருந்தது..

நாளை முதல் மதுரையில்..

தொடரும்..
19 comments:

துளசி கோபால் said...

சரி. பத்திரமா மூட்டை கட்டிட்டுக் கிளம்புங்க. அங்கே மதுரையிலே வந்து பார்க்கறோம்:-)))))

திறமைசாலின்னா இந்தமாதிரி அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.
அதான் வீட்டம்மா சரியா கெஸ் பண்ணிட்டாங்க.

Krishna said...

படிக்கத் தவறாதீர், மண் மணக்கும் மதுரையிலே, மனங்கவர் சூசை அய்யாவின், திகில் அனுபவங்களை....

tbr.joseph said...

வாங்க துளசி,

வீட்டம்மா சரியா கெஸ் பண்ணிட்டாங்க.//

இதைத்தான் பின்புத்து என்பார்கள் போலிருக்கிறது. பின்னால் வருவதை முன்கூட்டியே பகுத்தறியும் புத்தி..

அது என் மனைவிக்கு அதிகமாகவே இருந்ததை பல நேரங்களிலும் உணர்ந்திருக்கிறேன்.

அருண்மொழி said...

சென்னை, தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை .....அடுத்தது எந்த ஊர் சார்?

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

படிக்கத் தவறாதீர், மண் மணக்கும் மதுரையிலே, மனங்கவர் சூசை அய்யாவின், திகில் அனுபவங்களை.... //

இதையே அறிவுப்பு பலகையா ஒரு பதிவில போட்டுரலாமா?

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

சென்னை, தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை .....அடுத்தது எந்த ஊர் சார்? //

என்னங்க நீங்க? இன்னும் மதுரைக்கே போய் சேரலை.. அதுக்குள்ள அடுத்த ஊர்னா? எனக்கென்ன தெரியும்.. இன்னும் ஒரு மூனு வருசமாவது நிம்மதியா மதுரையில இருக்க முடியாதாங்கற நினைப்புல போறேன்.. அதுக்குள்ள நீங்க.. பயமுறுத்தாதீங்க:(

Krishna said...

அருண்மொழி, அவ்வளவு எளிதாக ஜோசப் அய்யா சஸ்பென்சை உடைக்க மாட்டாருங்க....

tbr.joseph said...

அருண்மொழி, அவ்வளவு எளிதாக ஜோசப் அய்யா சஸ்பென்சை உடைக்க மாட்டாருங்க.... //

அதானே..:)

G.Ragavan said...

தூத்துக்குடிக்கு இத்தோட வணக்கமா! ம்ம்ம்...அடுத்து மதுரை. அங்க ஒரு வருசம் படிச்சிருக்கேன். என்ன பாக்குறீங்க...எங்கப்பாவும் அரசாங்க வேலதான். அதுனால அடிக்கடி பள்ளிக்கூடம் மாத்துற கஷ்டம் தெரியும்.

தூத்துக்குடியில இருந்து மதுரைக்கு ரெண்டு வழியில பஸ் இருக்கு. ஒன்னு...குறுக்குச்சால, எட்டயாவரம் மதுரைக்குப் போறது. இன்னொன்னு குறுக்குச்சால, விளாத்திகொளம், நாகலாபுரம், புதூரு, அருப்புக்கோட்டைன்னு மதுரைக்குப் போறது. மொத வழி சுருக்கு. ரெண்டாவது சுத்து. நா ரெண்டுலயும் போயிருக்கேன். நீங்க எதுல போனீங்க?

sivagnanamji(#16342789) said...

மதுரை மூதூர்-அப்படித்தான் சிலப்பதிகாரம் கூறுகின்றது குறைவானப் பிரச்சினைகளும்
நிறைவான அனுபவங்களும் செறிந்ததாக மதுரை வாழ்வு அமையட்டும்...

"வேலை செய்றவனுக்கு வேலையக் கொடு;செய்யாதவனுக்கு கூலியக்கொடு"னு கேள்விப்பட்டு
இருக்கீங்களா?

srishiv said...

ஹா ஹா
மெகா தொடர் மன்னன் எங்கள் அன்பு அண்ணன், கார்மேக வண்ணன், மாயக்கண்ணன் திரு.ஜோசப் ஐயா அவர்களின் விஜயங்கள் தொடரட்டும்...:) மதுரை மல்லிக்காக காத்திருக்கின்றேன் ஐயா....:)
ஸ்ரீஷிவ்..:)

tbr.joseph said...

வாங்க ராகவன்,

எங்கப்பாவும் அரசாங்க வேலதான். //

ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருக்கீங்க.

அதுனால அடிக்கடி பள்ளிக்கூடம் மாத்துற கஷ்டம் தெரியும்.//

ஆமாங்க. அத அனுபவிச்சவங்களுக்குத்தான் அதனுடைய கஷ்டம் புரியும். என் ரெண்டு பொண்ணுங்களுமே கொறஞ்சது அஞ்சி ஸ்கூல்லயாவது படிச்சிருப்பாங்க. பாவம்.

நா ரெண்டுலயும் போயிருக்கேன். நீங்க எதுல போனீங்க? //

நானும் ரெண்டுலயும் போயிருக்கேன்:)

tbr.joseph said...

வாங்க ஜி!

குறைவானப் பிரச்சினைகளும்
நிறைவான அனுபவங்களும் செறிந்ததாக மதுரை வாழ்வு அமையட்டும்...//

பிரச்சினைகள் இருந்தாத்தான் அனுபவமும் கிடைக்கும் பேராசிரியர் சார்:)

"வேலை செய்றவனுக்கு வேலையக் கொடு;செய்யாதவனுக்கு கூலியக்கொடு"னு கேள்விப்பட்டு
இருக்கீங்களா? //

அட! இது நல்லாருக்கே.. வேலைய செய்யறவன் தோள்ல மேல, மேல பாரத்த ஏத்தறது.. வேலையே தெரியாதவனுக்கு கைநிறைய சம்பளமும் முடிஞ்சா கிம்பளமும் குடுக்கறது. நல்ல நியாயம்யா:)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

மதுரை மல்லிக்காக காத்திருக்கின்றேன் ஐயா....//

ஆமாங்க. மதுரை மல்லி மார்க்கெட்டுக்கு போயிருக்கேன்..

அதன் அனுபவமே தனிதான்..

பழூர் கார்த்தி said...

உங்க பதிவை நேற்று படிக்காததால், இன்று இரண்டு பாகங்களையும் படித்தேன்..

***

கஷ்டப்பட்டு கட்டின வீட்டில் இருக்க முடியாமல், இப்ப உடனே அடுத்த கிளைக்கு மாறுவது ரொம்ப கஷ்டம்தான்..

***

அப்ப, இனிமே மதுர அனுபவங்கள் தூள் கிளப்புமா ???

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

அப்ப, இனிமே மதுர அனுபவங்கள் தூள் கிளப்புமா ??? //

தெரியலையே, படிச்சிட்டு நீங்கதான் சொல்லணும்.

Sivaprakasam said...

இவ்ளோ கஷ்டப்பட்டு வீட்டை கட்டி முடிச்சி 'அப்பாடா' என்று நிம்மதியாஇ இருக்க விட்டால், எங்களுக்கு எப்படி கதை கிடைக்குமாம்? புது ஊருக்கு/கிளைக்கு நல் வரவு.

tbr.joseph said...

வாங்க சிவா,

'அப்பாடா' என்று நிம்மதியாஇ இருக்க விட்டால், எங்களுக்கு எப்படி கதை கிடைக்குமாம்? //

ஆக, இந்த மாதிரியெல்லாம் ஒரு சீரியல் எழுதணுங்கறதுக்காகவே என்னெ ஊர் ஊரா மாத்தியிருக்காங்கன்னு சொல்றீங்க? ஹூம்..

delphine said...

you really narrate so well.. I enjoyed reading this part. Thank you..