14 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 186

என்னுடைய வீடு கட்டுமானப் பணியில் எனக்கு பெரியதாக எந்த பிரச்சினையும் வைக்காதவர் மர வேலை செய்த ஆசாரிதான்.

அதாவது நான் கிரஹப்பிரவேசத்திற்கு நாள் குறிக்கும்வரை..

வீடு கட்டுமானப் பணியில் ஈடுபடும் மேஸ்திரி, எலெக்ட்ரிஷியன், மரவேலை செய்யும் ஆசாரி எல்லோருமே ஒரு வீட்டு வேலை முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது இடத்தில் வேலை கிடைக்குமா என்று அலைய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஏதும் தவறு இல்லை.

இவர்கள் மூவருமே தூத்துக்குடி போன்ற சிறிய ஊர்களில் ஏதாவது பொறியாளர் ஒருவரையே சார்ந்திருப்பர். அப்பொறியாளர் எந்த இடத்தில் கட்டுமானப் பணியை துவக்கினாலும் இவர்களும் இடம் பெயர்ந்து அங்கு சென்றுவிடுவது வழக்கமாக நடக்கக்கூடியதுதான். இதிலும் தவறேதும் இல்லை.

ஆனால் அதற்காக தற்போது வேலை நடக்கும் இடத்தில் வேலையை முடிக்காமலே சிலர் சென்றுவிடும்போதுதான் பிரச்சினையே..

முதலில் என்னுடைய மேஸ்திரி வேலையை அரைகுறையாய் விட்டுவிட்டு சென்றதற்கும் என்னுடைய பொறியாளர்தான் முக்கிய காரணமாய் இருந்தார். பிறகு என்னுடைய நண்பர் ராஜேந்திரனுடைய சமயோசித தலையீட்டால் அவர் திரும்பிவந்ததுடன் மக்கார் செய்துக்கொண்டிருந்த மேஸ்திரியையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்தார்.

மின் இணைப்பு செய்து தர ஒப்புக்கொண்டிருந்தவர் எனக்கு என் மூத்த சகோதரர் வழியாக தூரத்து சொந்தமாக இருந்துப்போனதால் அவரால் எந்த பிரச்சினையும் எழவில்லை.

மர வேலை ஆசாரியோ என்னுடைய கிளையின் முக்கியமான வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்த செல்வந்தர்கள் வீடுகளில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்பதால் அவருடைய கூலி சற்றே அதிகமாயிருந்தாலும் வேலையில் நல்ல நேர்த்தி இருந்தது.

மேலும் எந்தவித பெரிய தில்லுமுல்லும் இல்லாமல் நேர்மையாகவே நடந்துக்கொண்டிருந்தார். அதாவது அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே அவர் பரிந்துரைத்த மரக்கடைகளிலேயே நானும் எனக்கு தேவைப்பட்ட மரச்சட்டங்களையும் பலகைகளையும் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம்.

என் கெட்ட நேரமா நல்ல நேரமா தெரியவில்லை. சென்னையில் நான் குடியிருந்த வீட்டில் இருந்ததைப் போன்று வாசலுக்கு கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் கதவை வடிவமைக்கலாம் என்று நினைத்து நான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த சில வடிவங்களை அவரிடம் காட்டினேன். ஆனால் அவருக்கு அவற்றில் எதுவுமே விருப்பபடவில்லை.

‘சார்.. இந்த மாதிரி கதவுங்கள எல்லாம் மிஷின்லதான் செய்ய முடியும்.. தூத்துக்குடியில முடியாது.’ என்றார் பிடிவாதமாக.

சரி இவரிடம் மேற்கொண்டு பேசுவதில் எந்த பயனும் இருக்கப் போவதில்லையென்று நினைத்த நான், ‘மெட்றாஸ்ல ரெடி மேடா கூட கதவுங்க கிடைக்கும் அத வாங்கிக் குடுத்தா பொருத்தி தரீங்களா?’ என்றேன்.

அதற்கும் அவருக்கு விருப்பமில்லையென்பது என்பது அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிந்தது. சரி இதற்கு என்னதான் வழி என்று நினைத்தவாறு, ‘சரிங்க.. இதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க. எனக்கு முன்வாசல் கதவு மத்த வீடுங்க போல இல்லாம வித்தியாசமா இருக்கணும்..’ என்றேன்.

‘அதுக்கு நா என்ன சார் செய்ய முடியும்? என்னால முடிஞ்சது என்னன்னு ஒங்கக்கிட்ட சொல்லிட்டேன்.. அதுக்கு வேணுங்கற பலகைய வாங்கி தந்துருங்க.. இல்ல நீங்க நினைக்கற மாதிரிதான் வேணும்னா வேற ஆள வச்சி செஞ்சிக்குங்க.. நா வேணாங்கல.. இதுவரைக்கும் நான் செய்திருக்கற வேலைக்கு செட்டில் பண்ணிருங்க..’  என்றவர் தன்னுடைய வேலையாட்களைப் பார்த்து, ‘எலேய்.. மிச்ச இருக்கற வேலைய முடிச்சிட்டு வந்து சேருங்கலே.. நா வாரன்..’

முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டு என்னுடைய பதிலுக்கு காத்திராமல் அவர் செல்ல நான் சற்று நேரம் செய்வதறியாது நின்றேன்.

அவர் தன்னுடைய சைக்கிளில் சென்று மறையும்வரை காத்திருந்த நான் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு சாலைக்கு மறுபக்கத்திலிருந்த என்னுடைய தற்காலிக வீட்டை நோக்கி கிளம்பினேன்.

நான் சாலையைக் கடக்கும் போது, ‘சார் கொஞ்சம் நில்லுங்க.’ என்ற குரல் கேட்டு திரும்ப ஆசாரியின் கீழே வேலை பார்த்துவந்தவர்களுள் ஒருவர் என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன்.

அவர் என்னை நெருங்கியதும் மீண்டும் ஆசாரியின் தலை தெரிகிறதா என்று ஒருமுறை பார்த்துவிட்டு, ‘சார் நா வேணும்னா ஒங்க வேலைய முடிச்சி தரேன்.. மேஸ்திரிக்கு மட்டும் தெரியாம நீங்க பார்த்துக்கிட்டா போறும்..’ என்றார்.

நான் அவரை தயக்கத்துடன் பார்த்தேன். ஆரம்பமுதலே அவருக்கும் அவருடைய மேஸ்திரிக்கும் அவ்வளவாக ஒத்துவரவில்லையென்பதை நான் அவ்வப்போது கவனித்திருந்தேன். இருப்பினும் இவரை நம்பி இந்த காரியத்தில் இறங்க வேண்டுமா என்று யோசித்தேன்.

இருப்பினும், ‘சரி வாங்க.. என் கிட்டருக்கற சில டிசைன்கள காட்டறேன்.. பார்த்துட்டு சொல்லுங்க.’ என்று அவரை அழைத்துக்கொண்டு என்னுடைய வீட்டில் வைத்திருந்த வடிவங்களை அவரிடம் காட்டினேன்.

அவர் அதை பார்த்ததும், ‘செஞ்சிரலாம் சார். நான் கல்ஃப்லருந்தப்போ இத விட கஷ்டமான ஒர்க் எல்லாம் செஞ்சிருக்கேன்..’ என நான் வியப்புடன், ‘நீங்க கல்ஃப்ல இருந்திருக்கீங்களா?’ என்றேன்.

அவர் உடனே தன்னுடைய ஐந்து வருட கல்ஃப் வாசத்தை விவரித்துவிட்டு இறுதியில், ‘என் பெஞ்சாதி பிள்ளைங்கள விட்டுட்டு இருக்க முடியல சார். அதான் வந்துட்டேன்.. இப்ப இந்த மேஸ்திரி கிட்ட வேலை செய்யறதுக்கு இஷ்டம் இல்லதான்.. ஆனா என்ன செய்றது.. அங்க சம்பாதிச்சதையெல்லாம் வீட்டு மேல போட்டுட்டு இப்ப இந்த மாதிரி ஆளுங்கக்கிட்டு வேல செய்ய வேண்டியிருக்கு..’ என்று நொந்துக்கொண்டார்.

‘சரிங்க.. இதுக்கு என்ன கூலி எதிர்ப்பார்க்கறீங்க?’

அவர் சற்று தயங்கினார். கூலியை கணக்கு பார்க்கிறாரோ என்று நினைத்தேன்.

அவரோ, ‘சார் நீங்க இதுக்கு கூலி எதுவும் தரவேணாம் சார். நான் தனியா ஒரு தச்சு பட்டறை தொடங்கலாம்னு பாக்கேன். ஒங்க பேங்க்ல அதுக்கு ஒரு லோன் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.. கரெக்டா மாசா மாசம் கட்டிருவேன் சார்..’ என்றார்.

நான் அவர் இந்த எண்ணத்தை எத்தனை நாளாக மனதுக்குள் வைத்துக்கொண்டிருந்தாரோ என்று நினைத்தேன். இருப்பினும் புன்னகையுடன், ‘அது வேற இது வேற.. இந்த வேலைக்கு வேண்டிய கூலிய நீங்க வாங்கிக்கிருங்க. அப்புறம் ஒங்க பட்டறை திட்டத்த எழுதி அதுக்கு என்ன செலவாகும்.. அதுக்கு செக்யூரிட்டியா என்ன குடுப்பீங்கன்னு எல்லாம் எழுதி கொண்டாங்க.. முடிஞ்சா கண்டிப்பா குடுக்கேன்.’ என்றேன்.

அவர் சற்று தயங்கினாலும் பிறகு, ‘சரி சார். கல்ஃப்லருந்தப்போ நா கட்டுன வீடு இன்னைக்கி ரேட்டுல எப்படியும் மூனு நாலு லட்சம் பொரும்.. அத ஜாமீனா தரேன்.. என் மாமனாரும் தனியா ஒரு பட்டறை வச்சிருக்கார். அவரையும் ஜாமீன் கையெழுத்து போடச் சொல்றேன்..’ என, ‘சரிங்க.. பாக்கலாம்.. முதல்ல இந்த வேலைய முடிச்சி தாங்க.. சதுர அடிக்குன்னு ஒரு ரேட்டு போட்டு தாரேன்.. கதவு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.. நீங்களே கூட வந்து மரத்த செலக்ட் செஞ்சிருங்க..’ என்றேன்.

கிரஹப் பிரவேசத்திற்கு நாள் குறித்துவிட்டிருந்ததால் மீதமிருந்த வேலைகளை விரைவில் முடிக்கும் எண்ணத்துடன் இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்திருந்தேன். ஆகவே அவரை என்னுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அப்போதே கிளம்பினேன்..

நான் ஏற்கனவே மரச்சட்டங்களை வாங்கியிருந்த கடைகளுக்கு செல்லாமல் அவர் வேறு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அவர் மரப்பலகையைத் தேர்ந்தெடுத்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு வரும் வரை காத்திருந்தேன்.

‘சார்.. மரத்த தேர்ந்தெடுத்துட்டேன்.. ரேட் பேசி முடிச்சிரலாம். வாங்க..’ என்றவாறு கடை முதலாளியிடம் அழைத்துச்செல்ல அவர் கணக்கிட்டு கொடுத்த தொகை மிகவும் நியாயமானதாக இருக்கவே  மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிட்டு கிளம்பினேன்..

வீடு வந்து சேர்ந்ததும் எப்போதும் போலவே என்னுடைய செலவினங்களை குறித்து வைக்கும் நோட்டுப்புத்தகத்தில் எழுத ஆரம்பித்தபோதுதான் விளங்கியது நான் இதற்கு முன்பு வாங்கியிருந்த மரங்களின் ரேட்டும் இப்போது வாங்கியிருந்த ரேட்டுக்கும் இருந்த வித்தியாசம்.

வித்தியாசம் கொஞ்சமாக இருந்திருந்தால் அதை நான் கவனித்திருக்க மாட்டேன்.. ஆனால் இருந்த வித்தியாசம் சதுர அடிக்கு கணிசமாக இருந்ததால் அதிர்ந்து போனேன்..

ச்சை.. இவரைப் போய் இத்தனை காலம் நம்பியிருந்தேனே என்று நொந்துப்போனேன்.

சரி.. இதை பெரிதுபடுத்தி புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பினால் வீட்டு வேலை தடைபட்டு போய்விடுமே என்று நினைத்து என்னுடைய மனைவியிடமிருந்து கூட இதை மறைத்து மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கலானேன்.

நல்ல வேளையாக மேஸ்திரி கோபித்துக்கொண்டு போய் அடுத்த பத்து நாட்களுக்கு வராமல் இருந்தது நன்றாகப் போனது.

அந்த இடைப்பட்ட நாட்களில் அவருடன் வேலை பார்த்தவர் நேரம் காலம் பார்க்காமல் அருமையாக வேலையை முடித்துக் கொடுத்தார். அவருடைய வேலை உண்மையிலேயே மிக நேர்த்தியாக இருந்தது. என்னுடைய நண்பர் ராஜேந்திரனே வந்து பார்த்துவிட்டு, ‘சார் இந்த ரோட்லயே ஒங்க வீடு தனியா தெரியப் போகுது பாருங்க. மேஸ்திரிய விட இவரே மேல் போலருக்கு.’ என்றார் மகிழ்ச்சியுடன்.

அத்துடன் மேஸ்திரி திரும்பி வர காத்திராமல் மற்ற வாசற்கதவுகள், ஜன்னல் கதவுகள் சகலவற்றையும் அவரே அவருக்கு தெரிந்த ஒரு சிறுவனை வைத்துக்கொண்டு பொருத்திக் கொடுத்தார். ஒருவேளை தனக்கு கடனுதவி கிடைக்கும் என்று நினைத்து இந்த வேலைகளை முடித்து கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில் அவருடைய உதவி எனக்கு பேருதவியாக இருந்தது என்பதென்னவோ உண்மை.

அவருடைய வேலைத் திறனும், நேர்மையும் என்னையும் மிகவும் கவர்ந்தது. கவே என்னுடைய கிரஹப் பிரவேசம் முடிந்த வாரத்திலேயே அவரை வங்கிக்கு வரவழைத்து என்னுடைய உதவி மேலாளரிடம் அறிமுகப்படுத்தி அவருடைய வீட்டை மதிப்பிட கூறி அவருக்கு தேவைப்பட்ட கடனையும் கொடுத்தேன்.


தொடரும்..23 comments:

அருண்மொழி said...

சார், ஒரு வழியா வீட்டு வேலை முடிந்ததா இல்லை இன்னும் ஏதாவது last minute surprises இருக்கின்றதா?. அப்படியே வீட்டு கிரஹப்பிரவேச படங்கள் இருந்தால் upload செய்யவும். இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை நாங்களும் பார்த்து ரசிக்க வேண்டாமா.

sivagnanamji(#16342789) said...

வீடு கட்டும் தொழிலில் ஈடுபடும் கைவினைஞர்களில் மிகப்பெரும்பாலோரிடம் இவ்வகை அடாவடித்தனம் உள்ளது...ஆயினும்
அத்தி பூத்தது போல் சிலரும் உள்ளனர்.
சும்மாவா சொன்னார்கள்"வீட்டைக்கட்டிப்பார்...."
என்று?

துளசி கோபால் said...

ஆமாமாம், வீட்டு முகப்புக் கதவு அழகா அருமையா இருந்தாத்தான் வீட்டுக்கே மதிப்பு. இந்த வரைக்கும்
இந்த வேலையாவது ரொம்ப அலைக்கழிக்காம முடிஞ்சதே, அதுவரை சந்தோஷம்தான்.
ஆமாம், படங்கள் எதுவும் இருந்தா கூடவே போட்டுருக்கலாமுல்லே?

tbr.joseph said...
This comment has been removed by a blog administrator.
clown said...

ஏனோ, "புலவரின் பொய் தச்சரின் அரைப் பொய்க்கு ஈடாகாது" என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

அப்படியே வீட்டு கிரஹப்பிரவேச படங்கள் இருந்தால் upload செய்யவும். //

கிரஹப்பிரவேச படங்கள் இல்லை.. இப்படியொரு தொடர் எழுதும் எண்ணம் இருந்திருந்தால் பாதுகாத்து வைத்திருப்பேன். வீட்டு படங்கள் உள்ளன. தேடிப்பிடிக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

அப்படியே வீட்டு கிரஹப்பிரவேச படங்கள் இருந்தால் upload செய்யவும். //

கிரஹப்பிரவேச படங்கள் இல்லை.. இப்படியொரு தொடர் எழுதும் எண்ணம் இருந்திருந்தால் பாதுகாத்து வைத்திருப்பேன். வீட்டு படங்கள் உள்ளன. தேடிப்பிடிக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ஜி!

ஆயினும்
அத்தி பூத்தது போல் சிலரும் உள்ளனர்.//

உண்மைதான்.

tbr.joseph said...

வாங்க துளசி,

வீட்டு முகப்புக் கதவு அழகா அருமையா இருந்தாத்தான் வீட்டுக்கே மதிப்பு. //

ஆனா பாருங்க. அந்த வீட்ல குடியிருந்தவர் கதவு ஆட்டோமேட்டிக்காக லாக்காகிருங்கறது தெரியாம சாவிய எடுக்காம சாத்திட்டு என்கிட்ட சொல்லாம பூட்டை உடைத்து திறந்து கதவையே சேதாரப்படுத்திவிட்டார். கஷ்டப்பட்டு உண்டாக்கிய கதவை மாடி கட்டும்போது மாற்றி சாத ப்ஃள்ஷ் டோர் போடவேண்டியதாகிவிட்டது.

tbr.joseph said...

டெலீட் செஞ்ச கமெண்ட் என் பெயரிலேயே ஒரு ஈனப்பிறவி (போலி) எழுதியது. இது போன்றவர்களியும் இவ்வுலகம் தாங்கிக் கொண்டிருக்கிறதே..

மன நல விடுதியில் இருக்க வேண்டிய ஜன்மங்கள் இவை..

tbr.joseph said...

வாங்க clown,

ஏனோ, "புலவரின் பொய் தச்சரின் அரைப் பொய்க்கு ஈடாகாது" என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. //

ரொம்ப சரியான பழமொழிங்க.. நன்றி.

அருண்மொழி said...

Try to remove the entire link. The name is still there. If some one clicks ....

Anitha Pavankumar said...

veedu katradunna ivvalavu kashtama...

Sivaprakasam said...

<--- ஆனால் இருந்த வித்தியாசம் சதுர அடிக்கு கணிசமாக இருந்ததால் அதிர்ந்து போனேன்.. --->
எல்லா பொருளையும் 2,3 கடைகளில் விசாரிச்சு வாங்கணும்போல.

G.Ragavan said...

அப்பாடா வீடு நல்லபடியா முடிஞ்சது. நிம்மதிப் பெருமூச்சு விடலாந்தானே?

நல்ல திறமையுள்ளவர் அந்தப் புதுத் தச்சர் என நினைக்கிறேன். அவர் வேலை செய்து கொடுத்தார் என்று பழைய தச்சர் வம்பு செய்யவில்லையா?

tbr.joseph said...

Try to remove the entire link. The name is still there. If some one clicks .... //

I think it is not there now. But what is the use? He is using my name on so many blogs on almost every day..

tbr.joseph said...

வாங்க அனிதா,

veedu katradunna ivvalavu kashtama... //

பயந்துராதீங்க, எல்லாருக்கும் இப்படி ஆகும்னு சொல்ல முடியாது. இது என்னுடைய அனுபவம், அவ்வளவுதான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அவர் வேலை செய்து கொடுத்தார் என்று பழைய தச்சர் வம்பு செய்யவில்லையா? //

செய்யாம இருப்பாரா?

நாளைக்கு விரிவாக சொல்கிறேன்.

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

எல்லா பொருளையும் 2,3 கடைகளில் விசாரிச்சு வாங்கணும்போல. //

கண்டிப்பா.. அதுவுமில்லாம மேஸ்திரியோ, எலெக்ட்ரிஷியனோ அல்லது ஆசாரியா சார் இந்த கடையில வாங்குங்க, நயமா, நியாயமா இருக்கும்னு சொன்னா அங்க ஏதோ பிரச்சினை இருக்குன்னு அர்த்தம்.. அங்க மட்டுமில்லாம வேற ரெண்டு கடைகள்லயும் விசாரிச்சிட்டு வாங்கறது நல்லது.

பழூர் கார்த்தி said...

ஆகா, தச்சு வேலை செய்தவரும் நல்லா விளையாண்டுண்ட்டாரா.....

பரவாயில்லை, இப்பவாவது நேர்மையான ஒருவர் செய்து முடித்தாரே...

***

கிரகப்பிரவேசத்துக்கு வடை, பாயசம் உண்டுல்ல.. என்ன மறக்காம கூப்பிடுனும், சரியா ???

tbr.joseph said...

ஆகா, தச்சு வேலை செய்தவரும் நல்லா விளையாண்டுண்ட்டாரா.....

பின்னே இல்லாமையா? இதுலருந்து நா கத்துக்கிட்ட பாடம் என்னன்னா யாரையும் அவங்கள ரெக்கமெண்ட் பண்ண ஆள் சொன்னாரேன்னு அப்படியே நம்பிரக்கூடாது..

பரவாயில்லை, இப்பவாவது நேர்மையான ஒருவர் செய்து முடித்தாரே...//

கொள்ளையடிக்க பத்து பேர் இருந்தா நல்லவங்க அட்லீஸ்ட் ஒருத்தராவது இருக்கணும்.. இல்லன்னா இந்த ஒலகம் தாங்காது..

***

கிரகப்பிரவேசத்துக்கு வடை, பாயசம் உண்டுல்ல.. என்ன மறக்காம கூப்பிடுனும், சரியா ??? //

பின்னே.. நிச்சயம் உண்டு.. என்ன ஒரு இருபது வருசம் முன்னால உண்டாக்குனது.. அவ்வளவுதான்..:)

மணியன் said...

புதிய தச்சர் வாழ்வில் சாதிக்க வேண்டியிருந்ததால் உண்மையாக உழைத்தார் என எண்ணுகிறேன். வியாபாரம் பெருகியபின்னர் அதே போல் இருந்தாரா எனத் தெரியவில்லை.
இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு நீங்கள் கட்டிய வீட்டின் படத்தை பழைய கதவுடன் காண ஆசை.

tbr.joseph said...

வாங்க மணியன்,

வியாபாரம் பெருகியபின்னர் அதே போல் இருந்தாரா எனத் தெரியவில்லை. //

ஐந்தாறு வருடங்கள் கழித்து அவரை சந்தித்தபோதும் பெரியதாய் மாற்றம் ஒன்றும் அவரிடம் நான் காணவில்லை. அதே நேர்மையுடன் இருந்தார். அதன்பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை.

இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு நீங்கள் கட்டிய வீட்டின் படத்தை பழைய கதவுடன் காண ஆசை. //

சாரிங்க.. அந்த புகைப்படங்களை நான் பாதுகாத்து வைக்கவில்லை. அதன் பிறகு சுமார் எட்டு ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்றதில் எனக்கு ஏற்பட்ட எத்தனையோ இழப்புகளில் என்னுடைய புகைப்பட ஆல்பங்களும் அடங்கும்..

ஐந்து வருடங்களுக்கு முன் நான் தூத்துக்குடி சென்றபோது எடுத்த படங்கள் இருக்கின்றன.. நாளை விடுமுறையல்லவா தேடி கண்டுபிடித்து புதன் கிழமை இடுகிறேன்.