09 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 184

அப்பொறியாளர் இந்த அளவுக்கு ஆத்திரமடைய நான் செய்த தவறு என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன்.

அவருக்கு பணமுடை இருந்திருந்தால் அதற்கு ஒரு வங்கி மேலாளர் என்ற முறையில் என்னை நேர் வழியில் அணுகுவதை விட்டுவிட்டு நான் உங்களுக்கு ஒரு சலுகை செய்து கொடுத்திருக்கிறேன் ஆகவே நீங்களும் நியதிகளுக்கு புறம்பாக ஒரு சலுகை செய்து தரவேண்டும் என்று நிர்பந்தித்திருக்க வேண்டுமா என்ன?

ஒரு வங்கி மேலாளர் பதவி என்பது பொதுமக்களுடைய பணத்தை எடுத்து வழியில் போவோர் வருவோர்க்கெல்லாம் வினியோகம் செய்யும் பதவி என்று பலரும் நினைத்திருப்பது துரதிர்ஷ்டம்தான். அதிலும் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரியே அப்படி நினைத்தால் என்ன செய்வது?

இவரைப் போன்றே பலரும் நினைக்கிறார்கள். அத்தகைய ஒரு கணிப்பு பொது மக்களிடையே ஏற்படுவதற்கு ஏதுவாக ஒரு சில வங்கி மேலாளர்கள் நடந்துக்கொள்வதும் உண்டுதான். முக்கியமாக அரசுடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள். அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு பணிந்து அவர்களுடைய அடியாட்களுக்கும், கைத்தடிகளுக்கும் பொது மக்களின் பணத்தை எடுத்து தாரைவார்த்ததும் உண்மைதான்.

ஆனால் அத்தகைய மேலாளர்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக இப்படி நியதிகளுக்கு புறம்பாக கடன் வழங்குகிறார்கள் என்று பழி கூற முடியாது.

பொது வாழ்வில் ஈடுபடும் ஒரு சில அரசியல்வாதிகள், அரசு பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு சில அதிகாரிகள் ஆகியோருக்கு அஞ்சி நியதிகளை மீறி கடன் வழங்கும் பல மேலாளர்கள் நாளடைவில் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு பணி நீக்கம் ஏன் சில சமயங்களில் சிறைத் தண்டனையும் கூட அனுபவித்திருப்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் முடிந்த அளவுக்கு எந்தவித மிரட்டலுக்கும் பணியாமல் பொது நோக்குடன், நியதிகளுக்கு உட்பட்டு, நேர்மையாக பணியாற்ற வேண்டியது ஒரு மேலாளரின் கடமையாகும். அதை செயல்படுத்தும்போது நான் அனுபவித்ததுபோன்ற இடைஞ்சல்களை பல சமயங்களில் சந்திக்க நேரிடுவது இயற்கைத்தான். இதைத்தான் ஆக்குபேஷனல் ஹசார்ட் என்கிறோம்.

அத்தகைய நேரங்களில் நமக்கு பக்கப்பலமாக, நல்ல ஆலோசகராக, நல்ல துணைவராக ஒரு மனைவி அமைந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்பதை அனுபவித்து உணர்ந்தவன் நான்.

அப்பொறியாளரை நேரில் சென்று சந்தித்தாலொழிய இப்பிரச்சினைக்கு தீர்வு காண இயலாதென்பதை உணர்ந்த நான் அதற்கு முன்பாக அவரை நன்கு தெரிந்து வைத்திருந்த என்னுடைய வீட்டிற்கு மின் வயரிங் செய்து தர இசைந்திருந்த ரவேல்ஸ் நிறுவன உரிமையாளரை சந்தித்தாலென்ன என்று தோன்றியது.

என்னுடைய யோசனையை என்னுடைய மனைவியிடம் தெரிவிக்க அவருக்கும் அவரையும் அவருடைய மனைவியையும் நன்கு பரிச்சயம் என்பதால், ‘சரிங்க போய் பாக்கலாம், நானும் ஒங்கக் கூட வரேன்.’ என்று கிளம்பினார்.

சாதாரணமாகவே அந்நிறுவன உரிமையாளர் ஒரு லோ ப்ரொஃபைல் ஆசாமி என்பது எனக்கு தெரியும். தூத்துக்குடி என்ன நெல்லை மாவட்டத்திலேயே பெரிய மின் ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களில் (Govt. Electrical Contractors) ஒன்று அவருடைய நிறுவனம். ஆயினும் அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார் என்பது மட்டுமல்ல யாரிடமும் அதிகம் உரையாடவும் மாட்டார்.

என்னுடைய மூத்த சகோதரருக்கு பெண் எடுத்த குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்றிருந்தும் நான் தூத்துக்குடி கிளையில் மேலாளராக இருந்த இரண்டாண்டு காலத்தில் எந்த ஒரு நிதி பற்றாக்குறைக்கும் என்னை அணுகியதே இல்லை.

நான் வீடு கட்டிக்கொண்டிருந்த சமயத்தில் மின் சாதனங்கள் வாங்குவது, மற்றும் வயரிங் வேலைகளுக்கு நான் தகுந்த ஒரு நிறுவனத்தைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் என்னுடைய மாமனார்தான் இவருடைய நிறுவனத்தைப் பரிந்துரைத்தார்.

அந்த காரணத்திற்காக அவரை அணுகி உரையாடியபோதுதான் அவர் என்னுடைய மைனியின் குடும்பத்துக்கு உறவு என்றே தெரியவந்தது. அவருக்கிருந்த அலுவல்களில் சிறு வீடுகளுக்கு இணைப்பைப் பெற்றுத்தரவோ அல்லது வயரிங் செய்து கொடுக்கவோ நேரம் இருக்கவில்லையென்றாலும் உறவினராகப் போனதால் தவிர்க்க முடியாமல் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்றுதான் நினைத்தேன்.

அவருடைய அரசு ஒப்பந்த வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள தூத்துக்குடி மற்றும் நெல்லை வட்டார மின் அலுவலகங்களில் பொறுப்பு மிக்க பதவியில் இருந்த சகல அதிகாரிகளுடனும் நெருக்கமாயிருந்தவர் என்பது எனக்கு தெரிந்திருந்தது. அதே சமயம் அந்த உறவில் நீக்குபோக்குடன் நடந்துக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து அரசு ஒப்பந்தகளைப் பெற்று தொடர்ந்து இத்தொழிலில் நீடித்திருக்க முடியும் என்பதையும் நான் தெரிந்துவைத்திருந்தேன்.

ஆகவேதான் எனக்கும் அப்பொறியாளருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினையில் அவர் தலையிட்டு எந்த அளவுக்கு எனக்கு உதவ முடியும் என்பது எனக்கு யோசனையாக இருந்தது. இருப்பினும் வேறு வழியில்லாமல் அவரை அணுகி இதில் ஒரு தீர்வைக் காண முடிந்தால் நல்லதுதானே என்ற நோக்கத்தில்தான் அடுத்த நாள் காலையில் அதாவது அவர் அலுவலகம் புறப்பட்டு செல்லும் முன்பு வீட்டில் வைத்து சந்திக்கலாம் என்ற நினைப்பில் நானும் என் மனைவியும் புறப்பட்டுச் சென்றோம்.

நல்ல வேளையாக அவர் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவிக்கு என்னை பரிச்சயமில்லையென்றாலும் என் மனைவியை தெரிந்து வைத்திருந்தார். எங்களிருவரைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்று அமரவைத்துவிட்டு தன் கணவரை அழைத்தார்.

பிரம்மாண்டமான வீட்டின் உள் அறைகள் ஒன்றிலிருந்து வெளி வந்த அவர் என்னைக் கண்டதும் வியப்புடன், ‘என்ன சார் அதிசயமா?’ என்றவாறு வந்தமர்ந்தார்.

நான் வந்த விஷயத்தைச் சுருக்கமாக எடுத்துக் கூறினேன்.

‘நானும் கேள்விப்பட்டேன் சார்.’ என்று அவர் கூறியதிலிருந்தே அப்பொறியாளரே இவரிடம் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றியது. நான் நினைத்ததையே என் மனைவியும் நினைத்தார் என்று அவருடைய அடுத்த கேள்வியிலிருந்து தெரிந்தது.

‘அந்த எஞ்சினியரே ஒங்கக்கிட்ட வந்து சொல்லியிருப்பார்னு நெனக்கேன்.. சரிதானே அங்கிள்?’ என்றார் என் மனைவி.

அவரும் புன்னகையுடன், ‘ஆமாம்மா..’ என்று தலையை அசைத்துவிட்டு, ‘நீங்க சாமர்த்தியமா பேசினதையும் சொன்னார். அவரோட ஒய்ஃப் அவர விட ஒலகந் தெரிஞ்சவரா இருக்காங்கன்னு சொன்னார். எத மனசுல வச்சி அப்படி சொன்னார்னு தெரியல.’ என்றார் தொடர்ந்து..

நானும் வியப்புடன் என் மனைவியைப் பார்த்தேன், ‘நீ எதையாச்சும் அந்த மனுசங்கிட்ட சொல்லி வச்சியா?’ என்பது போல. அவர் இல்லைங்க என்று தலையை அசைப்பார் என்று எதிர்பார்த்தேன். அவரோ என்னுடைய பார்வையை தவிர்த்து, ‘ஒங்கக் கிட்ட அவர் ஏதாச்சும் வேணுங்கறாமாதிரி கேட்டாரா அங்கிள்?’ என்று கேட்க ‘அதெப்படி அவ்வளவு கரெக்டா கேக்கீங்க? அவர் சொன்னது சரிதான் போலருக்கே?’ என்றார் புன்னகையுடன்.

நான் அவர்கள் இருவருக்கிடையில் நடைபெற்ற சம்பாஷனையில் குறுக்கிட இயலாமல் அமர்ந்திருக்க என் மனைவி, ‘அவர் நேத்தைக்கி பேசன தோரணைய வச்சி சொல்றேன்.. அவருக்கு ஏதாச்சும் செஞ்சிக் குடுக்கறத வேற வழியில்ல.. இவங்கக்கிட்ட சொன்னா கோவந்தான் வருது..’ என்றார் சலிப்புடன்.

காப்பிக் கோப்பைகளுடன் வரவேற்பறக்குள் நுழைந்த ரவேல்ஸ் உரிமையாளருடைய மனைவி ‘பாருங்களேன் இவ பேசறத? மெட்றாஸ் போயி ரொம்பத்தான் விவரமாய்ட்டேடி நீ? நானும் இத்தன வருசமா இவங்க பிசினஸ பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. இங்க யார் வந்து போனாலும் காப்பி குடுக்கற வேலையத்தவிர வேற ஒன்னுத்தயும் நான் தெரிஞ்சிக்கிட்டதில்ல.. நீ என்னடான்னா..’ என்றார் புன்னகையுடன் என் மனைவியைப் பார்த்து.

என் மனைவி, ‘அப்படியில்ல அத்தை.. இவங்க ஊருக்கு புதிசில்லையா அதான்..’ என்று இழுக்க, ‘ஏய்.. நா சும்மாத்தான் சொன்னேன்.. எங்கள மாதிரி புருசன் என்ன செய்றார்னே தெரிஞ்சிக்காம இருக்கறத விட ஒன்னைய மாதிரி இருக்கறது நல்லதுதான்.. நீங்க பேசிக்கிட்டிருங்க..’ என்றவாறு அவர் காப்பி கோப்பைகளை எங்கள் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.

நாங்களிருவரும் சுடச்சுட இருந்த காப்பியைப் பருக அடுத்த சில நிமிடங்கள் மவுனத்தில் கரைந்தன.

பிறகு அவர் தயக்கத்துடன், ‘சார் நா சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. நா ஒங்க விஷயத்துல இதுவரைக்கும் தலையிடமா இருந்ததுக்கு காரணம் இந்த சின்ன விசயத்துக்காக அந்த எஞ்சினியர பகைச்சிக்க வேணாமேன்னுதான். நா ஒரே சமயத்துல அஞ்சாறு காண்ட்ராக்ட் எடுத்து செய்யற லைன்ல இருக்கேன். அதுல எவ்வளவோ குடுக்கல் வாங்கல் இருக்கறதுதான். அதுவே அவருக்கு போதும். இருந்தாலும் சின்னத்தனமா ஒங்கள மாதிரி சின்ன சின்ன வேலைகளுக்காக வர்றவங்கக் கிட்டயும் புடுங்கணும்னு நினைக்கறதுதான் அந்தாளோட பேராசை.. ஆனாலும் எங்களால ஒன்னும் செய்ய முடிய மாட்டேங்குது. ஒங்க வீட்ட மாதிரிதான் மச்சாது வீட்டுக்கு செய்யறேன்னு ஏத்துக்கிட்டிருக்கேன். அவர் எவ்வளவு பெரிய மனுசன்.. அவர் வீட்டு விசயத்துலயும் இப்படித்தான் செய்யறார்.. அவங்க பிசினஸ் பண்றவங்க.. இந்த மனுசன் கேட்டத் தொகைய குடுத்துட்டாங்க.’

நான் எப்படி ரியாக்ட் செய்வதென தெரியாமல் அமர்ந்திருக்க என் மனைவி, ‘அப்படி என்னதான் செய்யணுமாம் அவருக்கு? ஒங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாரா அங்கிள்?’ என்றார் என் மனைவி.

அவர் மீண்டும் புன்னகையுடன், ‘ஆமாம்மா.. பேங்க்லருந்து வாங்குறா மாதிரி கேட்டா சாருக்கும் புரிஞ்சிரும்னு நினைச்சார் போலருக்கு. ஆனா சாருக்கு புரிஞ்சிதோ இல்லையே ஒரேயடியா முடியாதுன்னு சொல்லிட்டாராமே.. அதான் வீம்புக்குன்னாலும் கனெக்ஷன கட் பண்ணிட்டு போயிருக்கார்.’ என்றார்.

‘எவ்வளவு கேக்கார் அந்த மனுசன்?’ என்ற என் மனைவியை வியப்புடன் பார்த்தேன். ஏன் கேட்டு என்ன ச்செய்யப் போறே? என்று நினைத்தேன்.

‘கொஞ்சம் ச்சாஸ்தியாத்தான் கேக்கான்.. ஆனா என்ன ச்செய்ய? பேங்க் மேனேஜர்ன்னா பல வழியிலயும் பணம் வரும்னு நெனக்கான் போலருக்கு.. எல்லாரும் சார மாதிரின்னு அவனுக்கு தெரியலல்லே..?’

அவர் கூறிய தொகையை என்னை வியப்பில் அல்ல அதிர்ச்சியில் ஆழ்த்தியது..

ஆனால் என் மனைவியோ, ‘அங்கிள் அவ்வளவு பெரிய தொகைய எப்படி ச்சும்மா குடுக்க? கடனா வேணும்னா அப்பாக் கிட்ட சொல்லி வாங்கித் தாரன்.. வட்டி குடுக்க வேணாம்.. ஒரு ஆறு மாசத்துக்குள்ள தவணையாவோ மொத்தமாவோ திருப்பித் தரச் சொல்லுங்க.’ என்றார் சர்வ சாதாரணமாக..

நான் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க என்னுடைய மனைவியின் புத்திசாலித்தனமான பதில் அவருக்கு திருப்தியளித்திருக்க வேண்டும்..

அவர் புன்னகையுடன் எழுந்து நின்றார். ‘சரிம்மா.. நா அவர்கிட்ட சொல்றேன்.. நீங்க சொன்னதும் ச்சரியாத்தான் இருக்கு.. அநேகமா அவர் ஒத்துப்பார்.’ என்றவர் ‘ஆனா இதுல ஒரு வில்லங்கமும் இல்லாம இல்ல.’ என்றார் தொடர்ந்து..

என் மனைவியோ புன்னகையுடன், ‘என்ன குடுக்காம இளுத்தடிப்பார்.. அத அப்பா பாத்துக்குவாங்க..’ என்றார் கூலாக..

இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவர் வியப்புடன் என்னையும் என் மனைவியையும் மாறி, மாறி பார்த்தார்.. ‘ஒங்களுக்கு இப்படியொரு மனைவியா?’ என்பது போல.. பிறகு புன்னகையுடன், ‘நீ தூத்துக்குடி ஆளில்லையாம்மா? அதான்.. அதுக்கு இடம் குடுக்க மாட்டார்னு நெனக்கேன்.. நீங்க போங்க. நான் சொல்லி பாக்கேன்.’

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் வழியெல்லாம் இது இனியும் வில்லங்கத்தில் கொண்டுவிடுமோ என்ற நினைப்பே எஞ்சி நின்றது..

என் மனைவியின் யோசனையை என்னுடைய மாமனார் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டு அவ்வளவு பெரிய தொகையை கடனாக அதுவும் வட்டியில்லா கடனாக கொடுப்பார் என்பது ஒன்று..

அத்துடன், ஒருவேளை அப்பொறியாளர் பணத்தைத் திருப்பித்தராமல் வம்பு செய்தால் என்ன செய்வது என்ற ஐயமும் இருந்தது..

என் மனதிலிருந்த ஐயத்தை குறிப்பால் உணர்ந்த என் மனைவி, ‘நீங்க ஒன்னுத்துக்கும் மனத்த போட்டு அலட்டிக்காதீங்க. முதல்ல பணத்த குடுக்கறேன்னு சொல்லி வேலைய முடிப்போம். பெறவு பாக்கலாம்.’ என்று கூற , ‘நீ என்ன சொல்ல வரே.. வேலைய முடிச்சிக்கிட்டு பணத்த குடுக்காம இருந்துரலாம்னா?’ என்றேன் எரிச்சலுடன். ‘அந்த மாதிரி நினைப்புலத்தான் அங்க அப்படி சொன்னியா? இது நல்லாருக்காது. சொன்னா சொன்னபடி செய்யணும்.. இல்லையா சொல்லக்கூடாது.’

என் மனைவியோ பதட்டமடையாமல், ‘நா சொல்ல வந்தது வேறங்க. கேட்ட தொகைய குடுக்காம இருக்க முடியாதுதான்.. ஆனா அந்த மனுசன அலைய விடலாமில்லே?’ என்றார்.

‘நீ குடுக்கற நேரத்துல அலையவிட்டேன்னு வையி.. அவர் திருப்பி குடுக்கற நேரத்துல ஒங்கப்பாவ அலைய விடுவார்.. இது நான் எங்க பேங் வேலையில படிச்ச பாடம்..’

‘அதான் சொன்னேனே.. அப்படி அந்த மனுசன் செஞ்சார்னா.. அத எங்கப்பா பாக்கற விதத்துல பாத்துக்குவாங்க.. அவங்க இந்த லைன்ல எத்தன வருசமா இருக்காங்க.. அவங்களுக்கு தெரியாத வழியா?’ என்றார் என் மனைவி மர்மமாக..

திருமணமான இந்த ஐந்து வருடங்களில் எனக்கு தெரிந்திராத ரகசியம் என் மாமனார் இப்படி கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பதுதான்..

‘சரி.. சரி.. நீயாச்சி ஒங்கப்பாவாச்சி.. என் பேர ரிப்பேராக்கிராத அவ்வளவுதான்..’ என்பதோடு நிறுத்திக்கொண்டேன்..

ஆக, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல் இந்த தடங்கலும் பெரிய சேதாரமில்லாமல் அடுத்த ஒரு வாரத்தில் நீங்க மீதமிருந்த கட்டுமான வேலைகளை முடித்து செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் புதுமனை புகுவிழாவுக்கு நாள் குறித்தேன்...

தொடரும்..

8 comments:

பழூர் கார்த்தி said...

// அடுத்த ஒரு வாரத்தில் நீங்க மீதமிருந்த கட்டுமான வேலைகளை முடித்து செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் புதுமனை புகுவிழாவுக்கு நாள் குறித்தேன்...//

அப்ப்ப்ப்ப்பாடா, ஒரு வழியா கிரகப்பிரவேசத்துக்கு வந்துட்டோமா, வாழ்த்துக்கள் !!

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

அப்ப்ப்ப்ப்பாடா, ஒரு வழியா கிரகப்பிரவேசத்துக்கு வந்துட்டோமா//

ஆமாங்க.. எனக்கும் அப்படித்தான் இருந்தது..

G.Ragavan said...

அடேங்கப்பா! என்ன விவரம்...என்ன விவரம்...நல்ல வேள சார். அவங்க இருக்கப் போயி ஒங்களுக்குச் சரியாப் போச்சு. பெரிய ஆளுதான் அவங்க. நான் அவங்கள தூத்துக்குடிக்காரங்கற முறையில பாராட்டினேன்னு சொல்லுங்க.

துளசி கோபால் said...

செப்.8ஆ? அடடா... இன்னும் 4 வாரம்தான் இருக்கு. அதுக்குள்ளே அங்கெ வர்றதுக்கு டிக்கெட் கிடைக்குமான்னு தெரியலையே.:-))))

வாழ்த்து(க்)கள்.அதுக்குள்ளே வேற வம்புலே மாட்டிக்காம வேலையை முடியுங்க.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அவங்க இருக்கப் போயி ஒங்களுக்குச் சரியாப் போச்சு. பெரிய ஆளுதான் அவங்க. //

ஆமா, ஆமா. அவங்க இருக்கப் போயி இன்னும் எத்தனையோ வில்லங்கத்துலருந்தெல்லாம் தப்பிச்சிருக்கேன். நான் மும்பை, கொச்சி என்று சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் வாடகைக்கு வைப்பது, வாடகை வசூலிப்பது எல்லாமே அவங்கதான்.. படே ஆளுங்க அவங்க:)

நான் அவங்கள தூத்துக்குடிக்காரங்கற முறையில பாராட்டினேன்னு சொல்லுங்க./

சொல்லிட்டா போச்சி:)

tbr.joseph said...

வாங்க துளசி,

அதுக்குள்ளே அங்கெ வர்றதுக்கு டிக்கெட் கிடைக்குமான்னு தெரியலையே/

1985ம் வருசம்.. அப்பல்லாம் விமான பயணச் சீட்டுக்கு இவ்வளவு டிமாண்ட் இருந்திருக்காதே:)

அதுக்குள்ளே வேற வம்புலே மாட்டிக்காம வேலையை முடியுங்க. //

வம்புக்கும் எனக்கும் நெருங்கிய உறவுங்க:)

Sivaprakasam said...

<---
அவரோ என்னுடைய பார்வையை தவிர்த்து, ‘ஒங்கக் கிட்ட அவர் ஏதாச்சும் வேணுங்கறாமாதிரி கேட்டாரா அங்கிள்?’ என்று கேட்க
-->
அதானெ பார்த்தேன்.அவர் எப்படி சமாளிச்சு இருப்பார்னு மண்டையை உடைச்சுகிட்டேன்.சும்மா சொல்லக்கூடாது.மகா புத்திசாலிதான்.

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

சும்மா சொல்லக்கூடாது.மகா புத்திசாலிதான்.//

யார்? என் மனைவிதானே.. ஆமாம்.. சில நேரங்களில் மகா, மகா புத்திசாலியாகிவிடுவது எனக்கே கொஞ்சம் தர்மசங்கடாமாகிவிடும்:)