08 August 2006

திரும்பிப் பார்க்கிறேன். 183

என்னுடைய அன்றைய செயல் நிச்சயம் எதிர்மறையான விளைவுகள¨ விளைவிக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அடுத்த நாள் எனக்கு என்னுடைய வட்டார அலுவலகத்தில் ஒரு முக்கியமான மேலாளர் கூட்டம் இருந்ததால் நான் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது.

நல்லவேளையாக நான் புறப்பட்டு செல்லும்போது பொறியாளருடனான என்னுடைய சந்திப்பை என்னுடைய மனைவியிடம் விவரித்துவிட்டு அதனால் வில்லங்கம் வர வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரித்திருந்தேன்.

அன்றும் வழக்கம் போலவே கூட்டம் முடிந்தபோது இரவு எட்டு மணி ஆகியிருந்தது. எல்லா மேலாளர் கூட்டத்துக்கும் படு சிரத்தையாக அஜெண்டா என்கிற நிகழ்ச்சிநிரலை தயாரித்து முன்கூட்டியே மேலாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

கூட்டம் என்னவோ சரியான நேரத்துக்கு துவங்கிவிடும். ஆனால் முடியும் நேரமோ நம்முடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்திருக்கிறது. அதாவது, வேறெந்த வேலையும் இல்லாத நேரங்களில் கூட்டம் சரியாக ஐந்து மணிக்கு முடிந்துவிடும். அன்றுபோல் ‘எப்படா கூட்டம் முடியும், ஊர் போய் சேரலாம்’ என்ற தவிப்புடன் காத்திருக்கும் நேரங்களில் கூட்டம் ஆமை வேகத்தில் நகர்ந்து நோகடித்துவிடும்.

அன்று கூட்டம் முடிந்ததும் அடித்துபிடித்துக்கொண்டு சக மேலாளர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் பேருந்தைப் பிடித்தாலும் ஊர் வந்து சேர்ந்தபோது விடியற்காலையாகியிருந்தது.

ஊர் வந்து சேர்ந்ததுமே என்னுடைய முதல் கவலை அந்த பொறியாளர் கோபத்தில் மின் இணைப்பைத் துண்டித்திருந்தாரா என்பதை அறிந்துக்கொள்வதில்தான்.

என்னிடமும் மாற்று சாவி இருந்ததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என் மனைவியை தொந்தரவு செய்யாமல் வீட்டிற்குள் நுழைந்து பெட்டியை வைத்துவிட்டு எதிரில் இருந்த புது வீட்டிற்குள் நுழைந்தேன்.

நல்லவேளை. ஃப்யூஸ் கேரியர் இருந்த இடத்தில் இருந்தது. நான் மனநிம்மதியுடன் வீடு திரும்பி உடை மாற்றிக்கொண்டு படுக்கையில் விழுந்தேன்.. அடுத்த நொடியே பயணக் களைப்பில் உறங்கிப் போனேன்.

கண் விழித்தபோது நண்பகலாகியிருந்தது. சாதாரணமாக ஆறு மணி நேரத்திற்கும் கூடுதலாக இரவு பயணம் செய்ய வேண்டி வந்தால் அடுத்த நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற நியதி இருந்ததால் அன்று அலுவலகம் செல்லவேண்டியிருக்கவில்லை.

நான் எப்போது எழுவேன் என்று காத்திருந்ததுபோலிருந்தது என்னுடைய மனைவியின் முகபாவனை. நான் காலக்கடன்களை முடித்துக்கொண்டு வந்ததும் காப்பி கோப்பையை கொடுத்தவாறே, ‘நீங்க நல்லா தூங்கிக்கிட்டிருந்ததால எழுப்ப வேணாம்னு இருக்கற வேலைய எல்லாம் விட்டுட்டு காத்துக்கிட்டிருக்கேன்.’ என்றார்.

‘எதுக்கு? நான் காலைல வந்ததுமே பாத்தேனே ஃப்யூஸ் கேரியர் அப்படியே இருந்துச்சே?’ என்றேன்.

‘அது நம்ம ராஜேந்திரன் சார் வீட்டுதுங்க. அவர் ஸ்பேரா வச்சிருந்தது.’

நான் அதிர்ச்சியுடன், ‘என்ன சொல்றே.. நான் போனப்புறம் ஈ.பிலருந்து யாராச்சும் வந்திருந்தாங்களா என்ன?’ என்றேன்.

‘ஆமாங்க. விடிஞ்சதும் விடியாததுமா வந்து நானும் ராஜேந்திரன் சார் வொய்ஃபும் எவ்வளவோ சொல்லியும் கேக்காம வந்து பிடுங்கிக்கிட்டு போய்ட்டானுங்க.’

இது நான் எதிர்பார்த்திருந்ததுதான். ஆனால் என் மனைவி அடுத்த வீட்டு ஃப்யூஸ் கேரியரை இட்டிருந்தது நான் எதிர்பார்க்காதது. அது சட்டவிரோத செயல் என்பது என் மனைவிக்கு தெரியுமோ இல்லையோ எனக்கு தெரிந்திருந்தது.

‘சரி.. ஆனா நீ பாட்டுக்கு ராஜேந்திரன் வீட்லருந்த ஃப்யூஸ் கேரியர எதுக்கு போட்டு வச்சிருக்கே. அது அந்தாளுக்கு தெரியவந்தா பெரிய பிரச்சினையாயிருமே.’

என் மனைவியின் முகத்தில் சலிப்பே தெரிந்தது. ‘எனக்கு தெரியாமயா? எல்லாம் அந்த மொசைக் காரராலதான். நான் வேலக்காரங்களோட வந்துட்டேம்மா.. இதால ஒங்களுக்கு ஏதும் வராம நா பாத்துக்கறேன்னு சொல்லி நச்சரிச்சி போட வச்சார். அப்புறம் அவர் போயி சிதம்பர நகர் எலெக்ட்ரிக் ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வந்தார். ‘குடுக்க வேண்டியத குடுத்தா நடக்க வேண்டியது நடந்துருமா’ன்னு வசனம் வேர பேசினார். அவர் வேலைய முடிச்சிட்டு போம்போதே சொன்னேன். அந்த கேரியர எடுத்துருங்க, நீங்க போனப் பெறகு யாராச்சும் வந்து நிக்க போறாங்கன்னேன். அதெல்லாம் ஒன்னும் வேணாம்மான்னுட்டு போய்ட்டார். இப்ப அதுவே வெணையாயிருச்சி.’ என்றார்.

நான் அதிர்ச்சியுடன், ‘ஏன் இன்னைக்கி யாராச்சும் வந்தான்களா?’ என்றேன். ‘என்னெ எழுப்ப வேண்டியதுதானே..’

என் மனைவி சலிப்புடன், ‘ஒங்கள எழுப்பியிருந்தா வில்லங்கமாத்தான் போயிருக்கும். அந்த மனுசன் ஒங்கள அப்படி செஞ்சிருவேன் இப்படி செஞ்சிருவேன்னு குதிச்ச குதிப்புக்கு நீங்க இருந்திருந்தா இன்னும் பிரச்சினையா போயிருக்கும். அதனால நீங்க ஊர்ல இல்லன்னு சொல்லி சமாளிச்சேன். அவர் வந்தா ஆஃபீசுக்கு வந்து எக்ஸ்ப்ளெய்ன் பண்ண சொல்லுங்க. இல்லன்னா திருட்டுத்தனமா பவர் எடுத்து யூஸ் பண்ணீங்கன்னு போலீசுக்கு கம்ப்ளெய்ண்ட் செய்ய வேண்டி வரும்னு சொல்லிட்டு போய்ட்டார்.’ என்றார்.

என் மனைவியின் சமயோசித யுக்தியை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மனைவி என்பவர் ஒரு நல்லாலோலசனை கூறும் ஆலோசகராக மட்டுமல்ல, சமயத்தில் முழு பொறுப்பையும் கையிலெடுத்துக்கொண்டு சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் செயலாற்றவும் வேண்டும் என்பது எத்தனை சரியாக இருக்கிறது என்று நினைத்துப்பார்த்தேன்.

மனைவி என்பவர் மெத்த படித்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. கணவருக்கு இணையாக படித்தவராகவோ மேதாவியாகவோ இருக்க வேண்டுமென்பதும் முக்கியமல்ல. சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் நடந்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு புத்திசாலியாக இருந்தாலே போதும் என்பதற்கு சரியான உதாரணம் என் மனைவி.

பள்ளியிறுதி வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்டவர் என் மனைவி. இருப்பினும் சுமார் நான்கு மாநிலங்களில் பத்து பதினைந்து நகரங்களில் குடியிருக்க நேர்ந்தும காலையில் கிளம்பி நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பும் என்னுடைய உதவியையே சார்ந்திராமல் தன்னந்தனியாக குடும்பம் நடத்திய நேர்த்தி, நான் உடன் இல்லாத நேரங்களிலும் என் இரு மகள்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்துக்கொடுத்து பல சமயங்களில் என்னையும் விட நேர்த்தியாக முடிவெடுத்து செயலாற்றியவிதமே குடும்பத்தை செவ்வனே நடத்தி செல்ல படிப்பை விட சமயோசித அறிவே போதும் என்பதை பல நேரங்களிலும் உணர்த்தியிருக்கிறது.

அந்த பொறியாளர் என்னைப் பற்றி கூறியதை அன்றிரவு ராஜேந்திரனின் மனைவி கூறியபோதுதான் எனக்கு முழுவதும் தெரிந்தது. அந்த சூழ்நிலையில் நான் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் விஷயம் விபரீதமாகத்தான் முடிந்திருக்கும் என்பதை நானும் உணர்ந்தேன்.

‘ஒங்க ஒய்ஃப் ரொம்ப சாமர்த்தியமா ஒங்கள ப்ரொட்டக்ட் செஞ்சிருக்காங்க சார். அவங்க மட்டும் ஒங்கள தூக்கத்துலருந்து எழுப்பி கூட்டிக்கிட்டு வந்திருந்தா ஒங்க கோபத்துக்கு நீங்களும் சும்மாருக்காம எதையாவது பேசி விஷயத்த பெரிசாக்கிருப்பீங்க. என் வொயஃபா இருந்தாக்கூட (அவருடைய மனைவி பட்டதாரி என்பதுமட்டுமல்ல பல வருடங்கள் ஆசிரியையாக பணிபுரிந்திருந்தவர்) கண்டிப்பா இவ்வளவு பொறுமையா இருந்திருக்க மாட்டாங்க.’ என்று என்னுடைய நண்பர் ராஜேந்திரன் கூறியபோதும் கூட தெரியவில்லை. அந்த பொறியாளரை அடுத்த நாள் சந்தித்தபோதுதான் நான் இந்த விஷயத்தில் எவ்வளவு கொடுத்து வைத்தவன் என்பது புரிந்தது..

தொடரும்..6 comments:

துளசி கோபால் said...

இந்தப் பதிவு எனக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்துச்சுன்னு தனியா சொல்லவும் வேணுமோ?

உங்க மனைவிக்கு வாழ்த்து(க்)கள். நல்லா இருக்கட்டும்.
என்றும் அன்புடன்,
துளசி.

srishiv said...

உண்மைதான் ஐயா
சில சமயங்களில் முக்கிய முடிவெடுப்பதில் ஆண்களை விட, பெண்களே சாமார்த்திய சாலிகளாக இருக்கின்றனர், சில பெண்களுக்கே அந்த கலை கை வருகின்றது, மேலும் அந்த பொறுமை அவர்களுள் சிலருக்கே வரும்...:)
சிவா @ ஸ்ரீஷிவ்...

பழூர் கார்த்தி said...

//குடும்பத்தை செவ்வனே நடத்தி செல்ல படிப்பை விட சமயோசித அறிவே போதும்//

மிகச்சரியான வார்த்தைகள், நாளைக்கு வரைக்கும் காத்திருக்கனுமா ??

tbr.joseph said...

வாங்க துளசி,

இந்தப் பதிவு எனக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்துச்சுன்னு தனியா சொல்லவும் வேணுமோ?//

அதானே.. குடும்பத் தலைவியை மனம் விட்டு பாராட்டும் மிகச் சில(!) கணவர்களில் ஒருவரைப் பார்த்துவிட்டீர்களே:)

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

சில சமயங்களில் முக்கிய முடிவெடுப்பதில் ஆண்களை விட, பெண்களே சாமார்த்திய சாலிகளாக இருக்கின்றனர், சில பெண்களுக்கே அந்த கலை கை வருகின்றது, மேலும் அந்த பொறுமை அவர்களுள் சிலருக்கே வரும்..//

பார்த்தீங்களா? அந்த மிகச் சிலரில் என் மனைவியும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயம்தானே:)

tbr.joseph said...

வாங்க சோ.பையன்

மிகச்சரியான வார்த்தைகள், நாளைக்கு வரைக்கும் காத்திருக்கனுமா ?? //

பின்னே? இன்னைக்கே மறுபடியும் ஒரு பதிவா? ஒன்னெ படிக்கறதுக்கே ஆளக் காணோம்.. இதுல ரெண்டு பதிவா:(