07 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 182

அப்படியென்றால் இது யாருடைய வேலை என்ற நினைப்புடன் என்னுடைய வீட்டில் மொசைக் தளம் இட்டவரை அழைத்து அடுத்த நாள்முதல் வந்து பாலிஷிங் வேலையை துவங்கலாம் என்றேன்..

இதுதான் என்னுடைய வீடுகட்டும் அனுபவத்தில் எனக்கு ஏற்பட்ட இறுதி சோதனை.

நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த பொறியாளர் அடுத்த சில வாரங்களில் என்னுடைய அலுவலகம் வந்திருந்தார்.

அவர் வந்ததன் நோக்கத்தை நான் கூறவும் வேண்டுமா?

அவர்தான் ஏற்கனவே கூறியிருந்தாரே, ‘எங்களுக்கும் பணமுடைன்னு வந்தா ஒங்களத்தேடித்தான சார் வரணும்?’ என்று.

அவருக்கு பணமுடை வந்திருக்கிறது என்பதை குறிப்பாலேயே உணர்த்தினார் அவர்.

பெரிதாய் ஒன்றுமில்லை. ‘பெர்சனல் லோன் ஒன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன் சார்.’ என்று ஆரம்பித்தார்.

அதான் தெரியுதே என்று மனதுக்குள் நினைத்த நான். ‘எதுக்கு சார்?’

அவர் அசட்டு சிரிப்புடன், ‘அதான் பெர்சனல்னு சொன்னேனே சார்.’ என்றார்.

‘அது எத்தனை பெர்சனல் விஷயம்னாலும் அத ஒங்க லோன் அப்ளிக்கேஷன்ல போடணுமே சார். அதுக்காக கேக்கறேன்.’ என்றேன் பிடிவாதமாக.

அவர் சற்று தயங்கிவிட்டு, ‘ஒங்கள மாதிரிதான் சார். நான் போல்ட்டன்புறத்துல சின்னதா ஒரு வீட்டு வேல தொடங்கினேன். ரூஃப் வரைக்கு போட்டுருக்கேன் பூச்சு வேலை முடிக்கணும்.. கொஞ்சம் துண்டு விழுந்திருச்சி அதான்..’ என்று இழுத்தார்.

அவர் கூறிய விதத்திலிருந்தே உண்மையான காரணம் அதல்ல என்பது எனக்கு விளங்கியது.

ஆகவே, ‘அதுக்கெதுக்கு சார் பர்சனல் லோன்? வீடு கட்டுறதுக்குன்னே நாங்க தனியா ஒரு ஸ்கீம் வச்சிருக்கோமே? ஒங்க எஸ்டிமேட்ல ஐம்பது சதவிகிதம் வரைக்கும் லோன் குடுக்கறமே?’ என்றேன்.

பொறியில் அகப்பட்ட எலிபோல் விழித்தார். இந்த மாதிரி ஆட்களைத்தான் மலையாளத்தில், ‘எடா ஆணக் கள்ளா, எண்டெடத்து வேண்டாங் கேட்டோ..’ என்பார்கள்..

தமிழில் கூறவேண்டுமென்றால், ‘டேய் திருடா, எங்கிட்ட வேணாம் என்ன?’ எனலாம்.

இருப்பினும் சமாளித்துக்கொண்டு, ‘இல்ல சார், ஏற்கனவே நிலத்தோட பத்திரத்த வச்சித்தான் கோப்பரேட்டிவ் பேங்க்ல லோன் வாங்கியிருக்கேன். வேலை இழுத்துக்கிட்டு பட்ஜெட்டுக்கு மேல போயிருச்சி.. மறுபடியும் போயி அங்க கேக்க முடியாது. அதான்..’ என்று இழுத்தார்.

என்னுடைய வங்கியில் பெர்சனல் லோன் என்கின்ற திட்டம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவருக்கு அதை கொடுக்க எனக்கு தயக்கமாக இருந்தது.

ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு நேர்மையற்ற அதிகாரி. ஆகவே அவருக்கு கடன் கொடுத்தால் திருப்பி அடைப்பார் என்பது சந்தேகமே.  

அத்துடன் பெர்சனல் லோன் திட்டத்தின் கீழ் வீட்டுவதற்கோ அல்லது அதை விரிவுபடுத்துவதற்கோ கடன் வழங்க வாய்ப்பில்லை.

இல்லாத ஒரு காரணத்தைக் காட்டி கடன் வழங்குவது என்பது என்னுடைய மனசாட்சிக்கு ஒத்துவராத விஷயம். ஆகவே எந்த எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டாலும் அவருக்கு கடன் வழங்குவதில்லை என்ற முடிவுடன், ‘சாரி சார். சரியான காரணம் இல்லாம பெர்சனல் லோன் குடுக்கறது கஷ்டம்.’ என்றேன்.

அவர் வெகுண்டெழுந்து சென்றுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அது தன்மானம் உள்ளவர்கள் செய்யும் காரியம் அல்லவா?

அவர் சிரித்து மழுப்பியவாறு, ‘அதானாலென்ன சார். நான் வேற ஏதாவது ஒரு காரணத்த சொல்லி லோன் கேட்டுட்டு போறேன். நீங்களே சொல்லுங்க, என்ன காரணத்த போட்டா சரியாயிருக்கும்னு.. அதயே போட்டுடறேன். இது ஒரு பெரிய விஷயமா சார்?’ என்றார்.

இதேதடா வில்லங்கம் என்று நொந்துபோன நான் இவரை எப்படி கையாள்வதென சிறிது நேரம் யோசித்தேன்.

பிறகு, ‘சரி சார். யோசிச்சி சொல்றேன். எவ்வளவு வேணும் ஒங்களுக்கு? அதச் சொல்லுங்க.’ என்றேன்.

அவர் தொகையைக் குறிப்பிட்டதும் சட்டென்று, ‘சார் அவ்வளவெல்லாம் பெர்சனல் ஸ்கீம்ல கிடைக்காது.’ என்றேன் இதுதான் சாக்கு நிராகரித்துவிடலாம் என்ற எண்ணத்தில்.

ஆனால் அவரோ விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்களே அதுபோல் இருந்தார். ‘சரி சார். எவ்வளவு தரமுடியும்னு சொல்லுங்க. அந்த அளவு போறும். மீதிய வேற எங்கனா பாத்துக்கறேன்.’

ஆக, கடன் வாங்காமல் போவதில்லை என்ற முடிவுடந்தான் வந்திருக்கே போலருக்கு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு இண்டர்காமில் என்னுடைய உதவி மேலாளரை அழைத்தேன்.

அவர் வந்ததும், ‘சார் இவருக்கு ஏதோ பெர்சனல் லோன் வேணுமாம். இவர் கிட்ட நம்ம திட்டத்தோட டீட்டெய்ல்ஸ் எல்லாம் சொல்லிட்டு ஒரு செட் அப்ளிக்கேஷன் ஃபார்ம்சையும் குடுத்து ஃபில் அப் செஞ்சி கொண்டு வரச்சொல்லுங்க. அவர் சப்மிட் செஞ்சதும் நீங்க ஸ்க்ரூட்டினி செஞ்சி ஒங்க ரெக்கமண்டேஷனோட எனக்கு அனுப்புங்க..’ என்றேன் பந்தாவாக.

அவரும் என்னடா புதுசா மேனேஜர் ஏதோ புருடா விடறாரே என்பதுபோல் பார்க்காமல் என்னுடைய நிர்பந்தத்தைப் புரிந்துக்கொண்டு உடனே, ‘சரி சார் அப்படியே செஞ்சிடறேன்.’ என்றவாறு என் முன்னே அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘வாங்க சார் நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்.’ என்று ங்கிலத்தில் கூற நம்முடைய பொறியாளார் விவரம் புரியாமல் விழித்தார்.

‘என்ன சார் நீங்க அப்ளிக்கேஷன் அப்படி இப்படீங்கறீங்க? நீங்க கேட்டு வந்ததும் நா செஞ்சி குடுத்தா மாதிரி நீங்க செய்வீங்கன்னு பார்த்தா என்னென்னமோ சொல்றீங்க? இதெல்லாம் ஒரு மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட்தான சார்? நாம என்ன எல்லாத்தையும் ரூல்ஸ் படியா செய்யறோம்?’ என்றார் படபடப்புடன்.

என்னுடைய உதவி மேலாளருக்கோ அவர் சொன்ன, ‘நீங்க கேட்டு வந்ததும் நா செஞ்சி குடுத்தா மாதிரி’ என்ற வாக்கியம்தான் இடித்தது என்று நினைத்தேன். என்ன இது நம்ம மேனேஜர் இவர்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டார் போலருக்கே.. என்ற ஒரு சங்கடத்தில் என்னை ஓரக்கண்ணால் பார்த்தார்.

எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. நான் ஏதோ செய்யக்கூடாத காரியத்தை இவரிடம் செய்ய வற்புறுத்தியது போலவும் இவர் ஏதோ பெரிய ரிஸ்க் எடுத்து அதை செய்துக்கொடுத்தது போலவும் அவர் பேசிய விதம் இருந்தது. இதை முளையிலேயே மறுத்து பேசாமல் இருந்தால் என்னுடைய பெயரே ரிப்பேராகிவிடும் என்பதை உணர்ந்த நான் என்னுடைய உதவி மேலாளரை அமருங்கள் என்று சைகைக் காட்டினேன்.

அவர் தயக்கத்துடன் அமர்ந்ததும் நான் பொறியாளரைப் பார்த்து, ‘நீங்க இப்ப என்ன சொல்ல வரீங்க சார்? அதாவது நீங்க ரூல்ச பாக்காம எனக்கு பவர் கனெக்ஷன் குடுத்தீங்க. அதுக்கு பதில் நானும் எங்க ரூல்ச பாக்காம லோன் குடுக்கணும், அப்படித்தானே?’ என்றேன்.

என்னுடைய கேள்வியிலிருந்த கேலியையாவது புரிந்துக்கொண்டு தன்னுடைய கோரிக்கையை விட்டுவிடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவரோ அதற்கு நேர் மாறாக ‘அதேதான் சார். இப்பவாவது உங்களுக்கு புரிஞ்சிதே.’ என்றார் நக்கலாக.

அத்துடன் நில்லாமல் ‘பார்த்தியா ஒங்க மேனேஜர எப்படி மடக்குனேன்னு’ என்பதுபோல் என்னுடைய உதவி மேலாளரை பார்த்தார், அவருக்கு புரிந்ததோ இல்லையோ தலையைக் குனிந்துக்கொண்டார்.

‘சாரி சார். நானும் ஒங்க ரூல்சுக்கு எதிரா எந்த உதவியும் உங்கக்கிட்ட கேக்கலை. நீங்களும் எந்த ரூல்சுக்கும் எதிரா எனக்கு உதவியும் செய்யலை. ஒங்க ரூல்ஸ் பிரகாரம் நாலு மடங்கு கட்டணம் கட்டணும்னு சொன்னீங்க. அதே மாதிரிதான் நா கட்டப்போறேன்..’ என்றேன் பிடிவாதமாக.

அவர் அப்போதும் பதறாமல், ‘அப்ப அந்த மீட்டர் அட்ஜஸ்ட்மெண்ட்?’ என்றார் ஓரக்கண்ணால் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தவாறு.. அவருக்கோ அந்த அறையிலிருந்து எழுந்து ஓடினால் என்ன என்று தோன்றியிருக்க வேண்டும்.. இருக்கையின் முனைக்கு நகர்ந்து என்னை பரிதாபமாகப் பார்த்தார்.

நான் அவரைக் கண்டுக்கொள்ளாமல் பொறியாளரைப் பார்த்தேன். இவரிடம் இதுவரை கோபப்படாமல் இருந்தது தவறு என்று உணர்ந்தேன்.

‘சார் நான் ஒங்கள அந்த மாதிரி மீட்டர அட்ஜெஸ்ட் செஞ்சி தாங்கன்னு கேக்கவும் இல்ல. ஒங்க ளுங்க ஃபிக்ஸ் பண்ண வந்தப்போ நா அத அனுமதிக்கவும் இல்ல. ஒங்க ஒர்க்கர்ஸ கேட்டுப் பாருங்க. அவங்க ஃபிக்ஸ் பண்ணதிலருந்து ரெண்டு வாரமா மொசைக் பாலிஷ் போடறதுக்கு யூஸ் பண்ணிருக்கேன். தோராயமா எவ்வளவு யூனிட் வந்திருக்கும்னு கணக்கு பண்ணி மீட்டர வேணும்னாலும் வந்து செக் பண்ணிக்குங்க. அதனால சொல்றேன் நீங்க பெருசா ஏதும் செஞ்சி தந்துடல.. அப்படியே இருந்தாலும் அதுக்கு ஈடா எங்க பேங்கோட ரூல்ச மீறி என்னால எதுவும் செய்ய முடியாது, மன்னிச்சிக்குங்க.’ என்றேன்.

அதுவரை கேலியும் கிண்டலுமாய் உரையாடிக்கொண்டிருந்தவர் சட்டென்று கோபத்துடன் எழுந்து நின்றார். ‘முடிவா என்னதான் சார் சொல்றீங்க?’

நான் பதறாமல், ‘நான் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேன்.. எங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒங்களுக்கு ஏதாவது லோன் குடுக்க முடிஞ்சா குடுக்கேன். அத விட்டு என்னால ஒன்னும் செய்யமுடியாது.’ என்றேன்.

அவர் கோபத்துடன் என்னையும் என்னுடைய உதவி மேலாளரையும் மாறி மாறி பார்த்துவிட்டு வெளியேற நான் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்து நீங்க போகலாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.

அவரும் மறுபேச்சு பேசாமல் எழுந்து சென்றார்.

என்னுடைய அன்றைய செயல் நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை விளைவிக்கும் என்று எதிர்பார்த்தேன்.

தொடரும்..
8 comments:

கோவி.கண்ணன் said...

ஜோசப் ஐயா !.... வணக்கம் !
விடுமுறைகள் இனிதே சென்றதா ?... இடுகையில் உங்கள் பதிவை படிக்கிறேனோ இல்லையோ, உங்கள் பதிவையும் இன்னும் அருமை நண்பர்கள் பலரது பதிவையும் பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி ... அன்பு ஐயா! .. நண்பர் தின நல்வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

மீண்டும் குழப்பங்கள்/தகராறுகள்.
ஆளை நிம்மதியா இருக்கவே விடமாட்டாங்களா?

எல்லாத்துக்கும் பதில் உதவி செய்யணுமுன்னா வாழ முடியுமா?

பழூர் கார்த்தி said...

என்ன ஜோசப், வழக்கம்போல் சஸ்பென்ஸ் வச்சிட்டீங்க.. பொறியாளர் போய் கனெக்ஷனை கட் பண்ணி இருப்பாரே !!

****

// என்ன சார் நீங்க அப்ளிக்கேஷன் அப்படி இப்படீங்கறீங்க? நீங்க கேட்டு வந்ததும் நா செஞ்சி குடுத்தா மாதிரி நீங்க செய்வீங்கன்னு பார்த்தா என்னென்னமோ சொல்றீங்க? //

சட்டத்திற்குட்பட்டு கடமையை செய்வதையே, பெரிசா சொல்லிக் காட்டுறாரு பாருங்க !!!

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

நான் சென்றது அலுவலக நிமித்தம் என்றாலும் என்னுடைய பயணம் இனிமையாக இருந்தது.

இன்று காலையில்தான் திரும்பினேன். வந்தவுடன் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிவை பதிந்தேன்.

நண்பர்கள் தின வாழ்த்துக்களுக்கு நன்றி.. உங்களூக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

வாங்க துளசி,

மீண்டும் குழப்பங்கள்/தகராறுகள்.
ஆளை நிம்மதியா இருக்கவே விடமாட்டாங்களா?//

அப்படித்தான் நானும் பல சமயங்களில் நினைத்து மனம் நொந்துபோயிருக்கிறேன்.

எல்லாத்துக்கும் பதில் உதவி செய்யணுமுன்னா வாழ முடியுமா? //

அதானே? அதுவும் நியதிகளுக்கு மீறி.

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

பொறியாளர் போய் கனெக்ஷனை கட் பண்ணி இருப்பாரே !!//

வேறென்ன செய்வார்? அதான அவரால முடியும்?

சட்டத்திற்குட்பட்டு கடமையை செய்வதையே, பெரிசா சொல்லிக் காட்டுறாரு பாருங்க//

இம்மாதிரி அதிகாரிகளை கட்டுக்குள் கொண்டுவர தைரியம் உள்ள மேலதிகாரிகள் இல்லாததே இதற்கு காரணம். ஆகவேதான் இவரைப் போன்றவர்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று நடந்துக்கொள்கிறார்கள்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்....நல்லவனைப் பகைச்சுக்கிறதுல்ல நமக்கு நல்லது நடக்குதோ இல்லையோ அவனால கெட்டது நடக்காது. ஆனா கெட்டவனப் பகைச்சுக்கிட்டா அவனால நல்லது நடக்காதது மட்டுமல்ல கெட்டது கண்டிப்பா நடக்கும். அதுதான் இவரு விஷயத்துல நடந்திருக்கும்னு நெனக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நல்லவனைப் பகைச்சுக்கிறதுல்ல நமக்கு நல்லது நடக்குதோ இல்லையோ அவனால கெட்டது நடக்காது. ஆனா கெட்டவனப் பகைச்சுக்கிட்டா அவனால நல்லது நடக்காதது மட்டுமல்ல கெட்டது கண்டிப்பா நடக்கும்//

இடம் ஏவல் அறிந்து நட்பு கொள்வது மட்டுமல்ல பகையும் அப்படித்தான்.

நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரி.