01 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 181

‘சாருக்கு ----------- குடுத்துருங்க. அவர் சொன்னா அடுத்த நாளே டெம்பரவரி மீட்டர பொருத்திட்டு கனெக்ஷன் குடுத்திருவாங்க. நீங்க கட்டி முடிச்சி நம்பர் வாங்குனதும் ரெகுலர் செஞ்சிருவாங்க.. என்ன சொல்றீங்க?’

அதான பார்த்தேன்.. என்னடா பம்முறாரே இதுக்கு பின்னால எதாச்சும் இருக்கணுமே என்று நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது..

‘ஏங்க அத நான் வந்ததுமே சொல்லியிருக்கலாமில்ல? எதுக்கு இவ்வளவு நேரம் ஒக்கார வச்சி.. என் வேலையயும் நேரத்தையும் கெடுத்து.. சரி.. நான் பணம் கொண்டுவரல.. போய்ட்டு நாளைக்கு காலைல வரேன்.. ஒங்க ஐயா இருப்பாருல்ல?’

அவர் முகம் பளிச்சென்று பிரகாசமானது. ‘இருப்பார் சார்..’ என்றார். தொடர்ந்து, ‘அப்படியே என்னையும் லேசா...’ என்று இழுத்தார்.

கடவுளுக்கு கொடுக்கும்போது பூசாரிக்கு இல்லாமலா என்பது போல் அவரைப் பார்த்தேன். சரி என்று தலையை அசைத்துவிட்டு என்னுடைய அலுவலகம் திரும்பினேன்.

நான் சென்ற இடத்தில் ஒருவருக்காக காத்திருந்ததுபோல் எனக்காகவும் என்னுடைய அலுவலகத்தில் பாவம் ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக காத்திருந்திருக்கிறார். அதுவும் எனக்கு நன்கு தெரிந்திருந்த என்னுடைய வங்கிக்கு மிகவும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்.

நல்லவேளையாக என்னுடைய உதவி மேலாளர் அவரை என்னுடைய அறையில் அமர்த்தி குளிர்சாதனப் பெட்டியையும் இட்டிருந்தார். அத்தனை நேரம் காத்திருந்தும் அவரைக் கண்டதும், ‘மன்னிச்சிருங்க சார். போன எடத்துல கொஞ்சம் நேரமாயிருச்சி.’ என்ற என்னைப் பார்த்து, ‘பரவாயில்லை சார். ஒரு முக்கியமான வேலையா ஒங்கள பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.நீங்க பெர்சனல் விஷயமா போயிருக்கீங்கன்னு ஒங்க அசிஸ்டெண்ட் சொன்னார். அதான் இருந்து பார்த்துட்டு போயிரலாம்னு...’ என்றார் புன்னகையுடன்.

நான் உடனே என் இருக்கையிலமர்ந்து, ‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

அவர் வந்திருந்தது மிகவும் முக்கியமான விஷயம்தான். நான் வரும்வரை என்ன படப்படப்போடு காத்திருந்தாரோ என்று நினைத்தவாறு அவர் கேட்டு வந்ததை உடனே செய்துக்கொடுத்தேன்.

தான் வந்திருந்த வேலை முடிந்ததும் திருப்தியுடன், ‘என்ன வேலையா போயிருந்தீங்க சார்? சொல்றதுல தப்பில்லேன்னா சொல்லுங்க. என்னால முடியக்கூடிய விஷயம்னா முடிச்சி தரலாம் இல்லையா? நீங்க நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. என்னால முடியுதான்னு பாக்கேன்.’ என்றார்.

நான் சென்றிருந்த விஷயத்தையும் அவர் இறுதியில் கேட்ட தொகையையும் கூறினேன்.

அவர் சிரிப்புடன், ‘அவன் தான சார்? அவன் கதையே அப்படித்தான். இந்த வயசுலயே இப்படீன்னா இன்னும் போகப் போக என்னென்ன செய்வானோ. அவன பாக்கறதுக்கு நீங்க ஒரு மணி நேரம் காத்திருக்கணுமா சார்? ஒங்களுக்குத்தான் நம்ம ரவேல்ஸ தெரியும்ல? ஒங்க ஆளுங்கதான சார்? அவர்கிட்ட சொல்லியிருந்தாத்தான் சொடக்கு போடற நேரத்துல முடிச்சி குடுத்திருப்பாரே?’ என்றார்.

நான் வியப்புடன், ‘அவர்தான் சார் நம்ம வீட்டுக்கும் வயரிங் ஒர்க் பண்றார்.’ என்றேன்.

‘அப்படியா? அவங்களவிட்டா இதுக்கு தோதான ஆளுங்க இந்த ஊர்ல யார் சார் இருக்கா? பேசாம அவர்கிட்டயே இந்த வேலைய விட்டுருங்க. அவங்க பாத்துப்பாங்க.’ என்றவாறு விடைபெற்று சென்றார்.

நான் அவர் சென்றதும் இதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். கடந்த வாரம்கூட மின் இணைப்பு விஷயமாக ரவேல்ஸ் உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தேனே? அப்போதும் அவர் தான் செய்து தருவதாக ஏற்றுக்கொள்ளவில்லையே, ஏன்?

ஒருவேளை அந்த மின் பொறியாளரிடம் என் பொருட்டு கடன்பட விரும்பவில்லையோ? இருக்கும்!

அப்படி அவர் நினைத்திருந்தபட்சத்தில் நாம் ஏன் வீணாய் அவரை அணுகி அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்து நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். அந்த பொறியாளருக்கும் அவருடைய பணியாட்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகையை என்னுடைய கணக்கிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டேன். பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வந்த அலுவல்களில் மூழ்கிப்போய் இந்த விஷயத்தையே மறந்துபோனேன்.

மாலையில் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு வீடுதிரும்பும் நேரத்தில் என் தொலைபேசி ஒலிக்க யார் இந்த நேரத்தில் என்று நினைத்து எடுத்தேன்.

அந்த பொறியாளர்! என்னுடைய அலுவலக தொலைப்பேசியை என்னுடைய விண்ணப்ப படிவத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் என்று நினைத்தவாறு, ‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

‘சார் நீங்க நம்ம ரவேல்சுக்கு தெரிஞ்சவங்கன்னு தெரியாம போயிருச்சி. நீங்களாவது சொல்லியிருக்கலாம். காலைல நான் கொஞ்சம் அப்செட் மூட்ல இருந்தேன். அதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா பேசிட்டேன். தப்பா நினைச்சிகிராதீங்க. இப்ப ஃப்ரீயாருந்தா வீட்டுக்கு போற வழியில வந்தீங்கன்னா ஃபார்மாலிட்டிய முடிச்சிரலாம். நாளைக்கு நம்ம பசங்க வந்த மீட்டர ஃபிக்ஸ் செஞ்சி குடுத்துருவாங்க. டெம்பரவரி கனெக்ஷந்தான்.. வீடு முடிஞ்சதும் கம்ப்ளீஷன் சர்ட்டிஃபிகேட்ட வாங்கி குடுத்ததும் ரெகுலரைஸ் செஞ்சிரலாம்.’

என்னை சந்திக்க வந்திருந்த வாடிக்கையாளர் ரவேல்ஸ் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், ‘பரவாயில்ல சார். இந்த சின்ன விஷயத்துக்கு போய் அவர் பேர யூஸ் பண்ணணுமான்னுதான் சொல்லல. இப்பவே வரேன்.’ என்ற நான் தொடர்ந்து வேண்டுமென்றே, ‘ஒங்க பியூன் சொன்ன பணத்தையும் கொண்டு வரேன்.’ என்றேன்.

அவர் பதறிக்கொண்டு, ‘சேச்சே.. என்ன சார் நீங்க? அந்த பய நா கேக்காமலே எல்லார்கிட்டயும் சொல்றா மாதிரி ஒங்கக்கிட்டயும் சொல்லியிருக்கான். அதல்லாம் ஒன்னும் வேணாம், நீங்க வாங்க பேசிக்கலாம்.’ என்று என்னுடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டிக்க நான் புன்னகையுடன் ஒலிவாங்கியை அதன் இருக்கையில் வைத்துவிட்டு புறப்பட்டேன்.

நான் அவருடைய அலுவலகத்தையடைந்ததும் வாசலிலேயே வழிமறித்த காலையில் என்னிடம் பேரம் பேசிய பணியாளர், ‘என்ன சார் ஐயாக்கிட்ட போட்டு குடுத்திட்டீங்க?’ என்று வருத்தப்பட்டார்.

நான் புன்னகையுடன், ‘நீங்கதான சார் கேட்டார்னு சொன்னீங்க? அத கொண்டுகிட்டு வரேன்னுதான அவர்கிட்ட சொன்னேன்?’ என்றேன்.

அவர் சலிப்புடன், ‘என்னவோ.. போங்க சார்.. ஒங்களுக்காக வேண்டிதான் காத்துக்கிட்டிருக்கார்.’ என்று கையிலிருந்த பிளாஸ்க்கோடு வெளியேற நான் திறந்தே இருந்த பொறியாளருடைய அறைக்குள் நுழைந்தேன்.

காலையில் என்னைக் கண்டதும் எரிந்து விழுந்த பொறியாளர் வாயெல்லாம் பல்லாக எழுந்து என்னை வரவேற்றார்.

‘என்ன சார் நீங்க அவர தெரியும்னு ஒரு வார்த்தை சொல்ல வேணாமா.. அதுவுமில்லாம நீங்க ஒரு பேங்க் மேனேஜர்.. அதையாவது சொல்லியிருக்கலாம்லே..’

நான் புன்னகையுடன், ‘என்ன சார், பேங்க் மேனேஜர் போஸ்ட்ல என்ன இருக்கு? ஒங்க போஸ்ட்ட விடவா அது முக்கியம்?’ என்றேன் வேண்டுமென்றே..

‘பின்ன இல்லையா சார்? எங்களுக்கும் பணமுடைன்னா ஒங்கள தேடித்தான சார் வரணும்?’

இவர் வேறு எதற்கேனும் அடிபோடுகிறாரோ என்ற ஐயம் மனதுக்குள் எழுந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன்.

அவர் என்னுடைய விண்ணப்ப படிவம் இருந்த கோப்பு கட்டை எடுத்து அதின் என் விண்ணப்பத்துடன் இலாக்காவில் இணைத்திருந்த ஒரு சிறு படிவத்தை எடுத்து என் முன்னே நீட்டினார்.

ஒரு தற்காலிக இணைப்புக்காக இலாக்காவினர் தயாரித்திருந்த உத்தரவு என்பதை கண்டதும் புரிந்துக்கொண்டேன். இரண்டு மாத காலத்திற்கான இணைப்பு. மின் கட்டணத்தைப் பார்த்ததும்தான் ஷாக்காக இருந்தது. சாதா மின் கட்டணத்தைவிட நான்கு மடங்கு.

‘சார் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு டமஸ்ட்டிக் ரேட்ட விட நாலு மடங்கு. அத நான் நினைச்சாலும் குறைக்க முடியாது. ஒங்களுக்காக ஒன்னு செய்றேன். நம்ம பசங்க மீட்டர ஃபிக்ஸ் பண்ணும்போதே லேசா அட்ஜஸ்ட் பண்ணி வச்சிருவாங்க. ரீடிங் பாதியாயிரும். மீட்டர் வைக்க வர்றவனுங்ககிட்ட சொல்லி விடறேன். அந்த பயல்களுக்கு ஏதாச்சும் குடுத்தா போறும். எனக்கு ஒன்னும் வேணாம். ரெண்டு மாசத்துக்கு இவ்வளவுன்னு கணக்கு செஞ்சி முன்னாலயே கட்டணும்னு ஒரு ரூல் இருக்கு. நீங்க ஒரு மாசத்துலயே முடிச்சிருவேன்னு ஒரு லெட்டர் குடுத்துருங்க. ஒரு மாச டெப்பாசிட் போறும். நாளைக்கு காலைல உங்க பியூன் யார்கிட்டயாவது குடுத்து கவுண்டர்ல டெப்பாசிட் பணத்த கட்டிருங்க. என்ன சொல்றீங்க?’

என்ன அநியாயம் பாருங்கள். வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கில்லே? ஹ¥ம்.. இதுதான் இந்திய ஜனநாயகம். சுதந்திரம் பெற்று அறுபதாண்டு காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் அரசின் நலத்திட்டங்களின் தாக்கம் இன்றும் பாமரர்களை சென்றடையாததின் அடிப்படைக் காரணம் இவர்களைப் போன்ற அதிகாரிகள்தான்.

இருந்தும் அவரை அப்போதே எதிர்த்து நின்று என்னுடைய வேலையை கெடுக்க விரும்பாத நான், ‘சரி’ என்று சம்மதித்து அவர் காட்டிய படிவத்தில் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு எழுந்தேன். காலையில் நான் அவருடைய அறையிலிருந்து சென்றேனா என்று கூட கண்டுக்கொள்ளாத மனிதர் இப்போது வாசல்வரை மட்டுமல்ல என்னுடைய வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடம் வரை வந்து வழியனுப்பினார்.

அடுத்த நாள் காலை என்னுடைய அலுவலக சிப்பந்தியொருவரிடம் பொறியாளர் முந்தைய நாள் மாலை என்னிடம் கொடுத்த உத்தரவை கொடுத்து இரண்டு மாதத்திற்கு தேவையான வைப்புத் தொகையை செலுத்திவிட்டு வர அனுப்பினேன்.

அவரோ திரும்பிவந்து, ‘அவங்க ஒரு மாச தொகை போறும்னு சொல்லிட்டாங்க சார்.’ என்றார்.

நானும் என்னுடைய சிப்பந்தியிடம் முந்தைய நாள் நடந்த விஷயத்தை விவரிக்க விரும்பாமல் அவரிடமிருந்த ரசீதையும் அனுமதி கடிதத்தையும் பெற்றுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.

பொறியாளர் கூறியிருந்தபடியே அவருடைய பணியாட்கள் அடுத்த நாள் காலை என்னுடைய நிலத்துக்கு வந்து சக்தி கூடிய புதிய மின் இணைப்பை கொடுத்துவிட்டு ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த விசை குறைந்த மின் அளவையை (மீட்டர்) எடுத்துவிட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த அளவையை பொருத்தும் வேலையில் ஈடுபட்டனர்.

‘சார்.. நம்ம ஐயா இத கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சி வைக்க சொன்னாங்க.. அதுக்கு...’ என்று இழுத்த பணியாளரிடம், ‘அதெல்லாம் வேணாங்க. நீங்க அப்படியே ஃபிக்ஸ் பண்ணுங்க. ஒங்களுக்கு என்ன வேணுமோ தந்துடறேன். மிஞ்சிப் போனா ஒரு முனு வார வேலைதான் பாக்கியிருக்கு. மொசைக் பாலிஷ் போட்டு முடிச்சிட்டா வேல முடிஞ்சிரும்.. அதுக்கெதுக்கு வேண்டாத வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு..’ என்று நான் இழுக்க வந்திருந்த பணியாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பிறகு ஒன்றும் பதில் பேசாமல் அவர்கள் தங்களுடைய பணியில் ஈடுபட நான் அங்கிருந்து நகன்றேன்.

பணி முடிந்து செல்லும் வேளையில் நான் கொடுத்த அன்பளிப்பை சந்தோஷமாக பெற்றுக்கொண்ட அவர்கள், ‘சார் நாங்க அட்ஜஸ்ட் பண்ணி வைக்கலேன்னு ஐயாக்கிட்ட சொல்லிராதீங்க.’ என்றனர் தயக்கத்துடன்.

நான் புன்னகையுடன் இல்லை என்று தலையை அசைக்க, ‘தாங்ஸ் சார்..’ என்றவாறு விடைபெற்று சென்றனர்.

நானும் வேலை முடிந்த திருப்தியுடன் எனக்கு பரிச்சயமாயிருந்த ரவேல்ஸ் உரிமையாளரை வீட்டிலிருந்த தொலைப்பேசி வழியாக அழைத்து நடந்த விஷயத்தைக் கூறி நன்றி தெரிவித்தேன்.

அவர் நான் கூறியதைக் கேட்டதும், ‘அப்படியா சார்?’ என்று கேட்ட தொனியிலிருந்தே இவருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனக்கு புரிந்தது.

அப்படியென்றால் இது யாருடைய வேலை என்ற நினைப்புடன் என்னுடைய வீட்டில் மொசைக் தளம் இட்டவரை அழைத்து அடுத்த நாள்முதல் வந்து பாலிஷிங் வேலையை துவங்கலாம் என்றேன்..

தொடரும்..

18 comments:

துளசி கோபால் said...

'ஆளுங்களைத் தெரிஞ்சு வச்சுக்கணு'ங்கறது வாழ்க்கையிலே எவ்வளோ முக்கியம் பார்த்தீங்களா?

sivagnanamji(#16342789) said...

//பேங்க் மானேஜர் போஸ்ட்லே என்ன
இருக்கு? உங்க போஸ்ட்ட விடவா அது முக்கியம்?//
இதுதான் குசும்புங்கறது

tbr.joseph said...

வாங்க துளசி,

'ஆளுங்களைத் தெரிஞ்சு வச்சுக்கணு'ங்கறது வாழ்க்கையிலே எவ்வளோ முக்கியம் பார்த்தீங்களா?//

போற போக்க பார்த்தா சொர்க்கத்துக்குள்ள நுழையறதுக்குக்கூட
ஆள் தெரிஞ்சிருக்கணும்போலருக்கு:)

ஜயராமன் said...

ஜோசப் சார்,

நன்றாக தினசரி சுடச்சுட நாவல் மாதிரி விருவிருப்பாக தங்கள் பின்னுலகை படித்து மகிழ்கிறேன். பல சமயம் பின்னூட்டம் இட்டு நன்றி சொல்லிக்கொள்ள முடிவதில்லை. மன்னிக்கவும்.

இந்த vicious circle தான் நம் சாபக்கேடு. பல சமயங்களில் இம்மாதிரி விரோதமான செலவு செய்யாமல் நியாயமாக என்ன பேப்பர், பணம் தேவையோ அதை நாம் செய்ய தயாராக இருந்தாலும் பல சமயங்களில் இது முடிவதில்லை.

நான் வீட்டு பத்திரம் ரிஜிஸ்டர் செய்யப்போகும் போதும், பேர் மாற்ற கார்ப்பரேஷன், எலக்ட்ரிக் போர்ட் என்று அலையும் போதும் இதே கூத்துதான். ஏதாவது மாற்றி ஒழுங்காக நடக்க நினைத்தால், அது என்னை முன்னிலைப்படுத்தி நடத்தித்தரும் வக்கீல், மற்றும் ஏஜெண்ட்கள் அவர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக போகின்றன என்று நினைத்து நான் அவர்கள் சொன்னதுபோல் ஆட வேண்டியிருக்கிறது. இதுதான் பலரின் துர்பாக்கியமான நிலைமை.

இதை அழகாக விளக்கியதற்கு நன்றி.

இம்மாதிரி நிகழ்ச்சிகளை விவரிக்கும் தாங்கள், இம்மாதிரி சூழலில் நடந்து கொள்ளவேண்டிய விதம், சரியான அணுகுமுறை, தங்கள் அபிப்ராயம் என்றும் விவரித்தால் படிக்கும் என் போன்ற பாமரர்களுக்கு பாடமாக இருக்கும்.

நன்றி


பிகு: பூசாரிக்கு தான் கொடுக்க வேண்டும். சாமிக்கு அல்ல. சாமி நமக்கு கொடுக்கும். சாமிக்கு படைத்து பின் இந்த ஆசாமிகள் தான் சாப்பிடுகிறோம்... இந்த உதாரணம் பொருந்தவில்லை.

tbr.joseph said...

வாங்க ஜி!


இதுதான் குசும்புங்கறது //

அரசு அதிகாரிகளுங்கு இருக்கறதுல ஒரு பத்து பர்சண்டாவது நமக்கு இருக்க வேணாமா:)

G.Ragavan said...

ம்ம்ம்....நரிக்கு நாட்டாமைன்னா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்....அப்படித்தான் இருக்கு.

தெரிஞ்சவங்க வழியாப் போனா மரியாதையே தனிதான் சார். அப்படியில்லாமப் போனா கிழிச்சி எறிஞ்சாலும் எறிஞ்சிருவாங்க...ம்ம்ம்...என்னத்தச் சொல்ல...

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

இம்மாதிரி நிகழ்ச்சிகளை விவரிக்கும் தாங்கள், இம்மாதிரி சூழலில் நடந்து கொள்ளவேண்டிய விதம், சரியான அணுகுமுறை, தங்கள் அபிப்ராயம் என்றும் விவரித்தால் படிக்கும் என் போன்ற பாமரர்களுக்குபாடமாக இருக்கும்//

இதுல( பாமரர்களுக்கு )ஏதாவது உள்குத்து இருக்கா:)

என்னுடைய அபிப்ராயம்னு சொல்லி லெக்சர் அடிச்சா நல்லாருக்காதே.. நிறைய சமயங்கள்ல நமக்கு முற்றிலும் பிடிக்காத காரியங்களக் கூட நாம செய்ய வேண்டியிருக்குதே. திரைப்பட கதாநாயகர்களைப் போல அநியாயத்தை நம்மால் எதிர்த்து நிற்க முடியவில்லையே. நிறைய விஷயங்கள்ல காம்ப்ரமைஸ் செஞ்சிக்கிட்டுத்தானே வாழவேண்டியிருக்கு. வீடுகட்டற விஷயத்துல என்னுடைய கருத்துக்கு நேர்மறையான காரியங்கள நான் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கேனே.. நானே அப்படி செஞ்சிருக்கும்போது நான் எப்படி 'எப்படி நடந்துக்கணும்னு' சொல்றது? அப்படி சொன்னால் அது பத்தாம்பசலித்தனமாத்தான் இருக்கும்.

சாமிக்கு படைத்து பின் இந்த ஆசாமிகள் தான் சாப்பிடுகிறோம்... இந்த உதாரணம் பொருந்தவில்லை. //

கரெக்ட். ஒருவேளை தலைவருக்கு குடுக்குறப்போ தொண்டனுக்கு இல்லாமலான்னு சொல்லலாம்னு நினைக்கிறேன். சரிதானா? இல்ல, அதுலயும் வில்லங்கம் இருக்கா:)

செந்தழல் ரவி said...

////என்ன அநியாயம் பாருங்கள். வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கில்லே? ஹ¥ம்.. இதுதான் இந்திய ஜனநாயகம். சுதந்திரம் பெற்று அறுபதாண்டு காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் அரசின் நலத்திட்டங்களின் தாக்கம் இன்றும் பாமரர்களை சென்றடையாததின் அடிப்படைக் காரணம் இவர்களைப் போன்ற அதிகாரிகள்தான்.///

இது சத்தியமான வார்த்தைகள்..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

தெரிஞ்சவங்க வழியாப் போனா மரியாதையே தனிதான் சார். அப்படியில்லாமப் போனா கிழிச்சி எறிஞ்சாலும் எறிஞ்சிருவாங்க...ம்ம்ம்...என்னத்தச் சொல்ல... //

இந்த சமயத்துல ஒரு குட்டி கதை நினைவுக்கு வருது..

ஒரு கிறிஸ்துவ பாதிரியாரும், அதே மதத்தைச் சார்ந்த ஒரு குடிகாரனும் இறந்து மோட்ச வாசலுக்கு வெளியே வரிசையில கடைசியில நின்னுக்கிட்டிருந்தாங்களாம். அன்னைக்கு கோட்டா பிரகாரம் இனியும் ஒரேயொரு ஆளுக்குதான் இடம தரமுடியுங்கறதுனால இந்த ரெண்டு பேரையும் பார்த்து ஒங்கள்ல யாருக்கு நான் சொர்க்கத்துல இடம் தரணும், ஏன் அப்படீன்னு விளக்குங்கன்னு சொன்னாங்களாம் வாயிலில் நின்றிருந்த வானதூதர்.

பாதிரியார் முந்திக்கிட்டு எனக்குத்தான் தரணும் ஏன்னா நாந்தான் வாரத்துல ஏழுநாளும் சாமி பீடத்துல நின்னு பலி ஒப்புக்குடுக்கேன், பைபிளை தினம் ரெண்டு நேரம் படிக்கறேன், பிறருடைய பாவங்களை கேட்டு ஏசுவின் நாமத்தினால் மன்னிப்பு அளித்தேன், நிறைய பாவிகளை மனந்திருப்பினேன் என்று அடுக்கிக்கொண்டே சென்றாராம்.

சொர்க்கத்தின் வாயிலில் நின்ற வானதூதர் அவரைப் பார்த்து சரி என்று கூறிவிட்டு குடிகாரனைப் பார்த்து நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்றாராம். அவர் தலையைக் குனிந்துக்கொண்டு 'இல்லீங்கய்யா இந்த சாமிக்கு முன்னால நான் எம்மாத்திரம்? நா ஞாயித்துக்கிழமைக்கூட கோயிலுக்கு போனதில்லைய்யா? அதனால என்னெ கடவுளுக்கு புடிக்காதுன்னு நினைக்கேன்.' என்று நரகத்தை நோக்கி நடையை கட்டினானாம்.

அப்போது நரக வாயிலில் நின்ற பேய் ஒன்று பாதிரியாரை கைக்காட்டி எனக்கு இவரத்தான் நல்லா தெரியும் இந்த குடிகாரன எனக்கு தெரியவே தெரியாது அவன ஒங்க கடவுளுக்குத்தான் தெரியும். அதனால இவன் எங்களுக்கு வேண்டாம் என்றதாம்.

கடவுளும் தன் வானதூதரைப் பார்த்து ஆமாம் இவன் குடித்துவிட்டு போதையில் இருந்தாலும் கடவுளே இதுக்கு ஒனக்கே நியாயமா எனக்கு மட்டும் ஏம்பா கஷ்டத்தையே தரேன்னு நாளெல்லாம் என்னையே நினைச்சிக்கிட்டிருப்பான். இந்த பாதிரியாரோ பலி கொடுக்கும் நேரத்திலும், பாவிகளை மன்னிக்கும் நேரத்திலும் மட்டுமே என்னை நினைப்பார். ஆகவே இவரை விட அவனைத்தான் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்றாராம்.

அதாவது, நமக்கு பலரை தெரிந்திருந்தாலும் நம்மை சிலராவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் காரியம் நடக்கும்..

tbr.joseph said...

நம்மை சிலராவது தெரிந்திருக்க வேண்டும். //

நம்மை சிலருக்காவது என்று இருக்க வேண்டும்..

tbr.joseph said...

வாங்க ரவி,

இது சத்தியமான வார்த்தைகள்.. //

ஆமாங்க.. ஆனா நான் குறிப்பிட்ட சம்பவம் நடந்து இருபதாண்டுகளாகிவிட்டன.. இப்போதும் அதே நிலைதானே..:(

மணியன் said...

தெரிந்தவர் என்றால் நாம் ஒழுங்காக அரசுக்கு சேர வேண்டியதைக் கொடுப்பதைக்கூட தடுக்கிறார்களே! மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதன் காரணம் புரிகிறது. இவர்களை மேலதிகாரிகள் கூட கட்டுப்படுத்த முடியாது என்பது இவற்றின் ஆரம்பம்.

பழூர் கார்த்தி said...

//நரிக்கு நாட்டாமைன்னா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்//

நம்ம ராகவன் சொன்னாப்ல, நானும் ஒரு பழமொழி சொல்றேன்..

சாமிக்கே சாம்பார் இல்லயாம், பூசாரிக்கு புல்மீல்ஸ் கேக்குதா ???

சில சமயங்களில் ஆபிசர் பேரைச் சொல்லி, அவர் கீழிருக்கும் அதிகாரிகள் காசு பிடுங்கறாங்களே, அவங்களுக்குத்தான் இந்த பழமொழி..

***

என்னமோ போங்க, நீங்க சொல்றதெயெல்லாம் கேட்டு, வீடு கட்றதை டிவி சீரியல்ல பாத்தா கூட, உடம்பெல்லாம் நடுங்குது :-)

tbr.joseph said...

வாங்க மணியன்,

மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதன் காரணம் புரிகிறது. //

மின்வாரியம் மட்டுமா இன்று நம் நாட்டில் பல பொது நிறுவனங்களும் நட்டத்தில் இயங்க இவரைப்போன்ற அதிகாரிகள்தான் முக்கிய காரணம்.

இவர்களை மேலதிகாரிகள் கூட கட்டுப்படுத்த முடியாது என்பது இவற்றின் ஆரம்பம். //

கட்டுப்படுத்தறதா? துணைபோகாமல் இருந்தால் போதாது!

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

சில சமயங்களில் ஆபிசர் பேரைச் சொல்லி, அவர் கீழிருக்கும் அதிகாரிகள் காசு பிடுங்கறாங்களே//

உண்மைதான். இந்த மாதிரியும் நடக்கறதுண்டு..

நீங்க சொல்றதெயெல்லாம் கேட்டு, வீடு கட்றதை டிவி சீரியல்ல பாத்தா கூட, உடம்பெல்லாம் நடுங்குது //

அப்படியில்லை. எல்லாருமே அப்படித்தான்னு நினைச்சிக்கிட்டு இந்த வேலையில இறங்காம இருக்க முடியாது. இந்த தொல்லை flat வாங்கும்போது இருக்குமே.. அதுக்குன்னு வீடு கட்டாமயோ வாங்காமயோ இருக்க முடியுமா என்ன?

srishiv said...

ஹா ஹா
அப்போ குடிச்சா அதிகம் கடவுளை நினைக்கலாமா ஐயா? :D

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

அப்போ குடிச்சா அதிகம் கடவுளை நினைக்கலாமா //

அப்படியில்லீங்க.

நான் சொல்ல வந்தது இதுதான்.

நான் கடவுளுக்கு பக்கத்துலருந்தேன் அதனால கடவுளை எனக்கு நல்லா தெரியுங்கறாமாதிரி அந்த பாதிரியார் சொல்றார்.

ஆனால் அப்படியில்லை என்னை விட்டு வெகுதூரம் இருக்கும் இந்த குடிகாரன் என்னையே நினைத்துக்கொண்டிருந்தான். ஆகவே அவனைத்தான் எனக்கு நன்றாக தெரிகிறது என்கிறார் கடவுள்.

அதாவது நாம் கடவுளை தெரிந்துவைத்திருக்கிறோம் என்பதைவிட கடவுள் நம்மை தெரிந்துவைத்திருக்கிறாரா என்பதுதான் முக்கியம்.

Sivaprakasam said...

<---- என்ற நான் தொடர்ந்து வேண்டுமென்றே, ‘ஒங்க பியூன் சொன்ன பணத்தையும் கொண்டு வரேன்.’ என்றேன்--->
உங்களுக்கு குசும்பு அதிகம்தான்(துளசிக்கு நன்றி)