10 August 2006

கோவா பயணம் 1

என்னுடைய வீடு கட்டுமான பணியில் நான் சந்தித்த பிரச்சினைகள் முடிந்து மீதமுள்ள கட்டுமான பணிகள் நடந்துக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் நான் சமீபத்தில் 'விடுமுறையில்' கோவா சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு..
நான் ஐந்து நாட்களுக்கு விடுப்பு என்று அறிவித்ததுமே ‘விடுமுறைய ஜாலியா குடும்பத்தோட போய்ட்டு வாங்க சார்’ என்று வாழ்த்து தெரிவித்த நம் தமிழ் மண நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஆனால் அது உண்மையில் விடுமுறையல்ல. அலுவலக வேலையாகத்தான் கோவா செல்ல வேண்டியிருந்தாலும் அதுவும் ஒருவகை விடுமுறைபோல்தான் இருந்தது.

உலகின் மிகப் பெரிய வலை இணைப்பு நிறுவனமான (Networking Company) சிஸ்கோ வங்கி, காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கருத்தரங்கை (Seminar) கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த கருத்தரங்கிற்கு அழைப்பு வந்திருந்தபோதும் சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக எங்களுடைய வங்கியிலிருந்து யாரும் கலந்துக்கொள்ள இயலவில்லை.

ஆகவே இம்முறை நிச்சயம் வரவேண்டும் என்று எனக்கு மிகவும் நன்கு பரிச்சயமாயிருந்த நண்பர் ஒருவர் வற்புறுத்தியதால் என்னுடைய வங்கியிலிருந்து நானும் என்னுடைய இலாக்காவின் உதவி தலைவரான ஒரு துணைப் பொது மேலாளரும் கலந்துக்கொள்வதென தீர்மானித்தோம்.

இவ்வாண்டின் கருத்தரங்கு கோவாவின் பிரபல ஐந்து நட்சத்திர அந்தஸ்த்துடைய விடுமுறை வாசஸ்தலமான (Holiday Resort) பார்க் ஹையாட் (Park Hyatt Goa Resort and Spa)ல் இம்மாதம் மூன்றாம் தேதி மாலையில் துவங்கி ஐந்தாம் தேதி முடிவடைந்தது.

அதற்காக மூன்றாம் தியதி காலையில் சென்னையிலிருந்து மும்பைக்கு பறந்து அங்கிருந்து நன்பகல் கோவாவிற்கு பறந்தோம். சரியாக பகலுணவிற்கு அங்கு சென்றடைந்தோம். விமானத்தில் பகலுணவு என்ற பெயரில் வாய்க்கும் வயிற்றுக்கும் ஒட்டாத அளவு உணவு கிடைத்தும் கோவா சென்றடைந்தபோது பசி வயித்தைக் கிள்ளியது.

நிர்வாகத்திற்கு பெயர்பெற்ற இரு நிறுவனங்கள் சேர்ந்து (Cisco and Park Hyatt) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு என்றாலும் அங்கு சென்ற சேர்ந்த நேரத்தில் எங்களில் மிகச் சிலருக்கே அறைகள் தயாராக இருந்தன.இரண்டு நிறுவனங்களையும் சார்ந்த பல கடை, இடை, மேல் நிலை அதிகாரிகள் கைகளைப் பிசைந்துக்கொண்டு நின்ற காட்சியைக் கண்டதும் இதற்கு எங்கள் வங்கியே மேல் என்று தோன்றியது எனக்கும் என் நண்பருக்கும்.

ஒரு கேலிப் புன்னகையுடன் அவர்களுடைய தர்மசங்கட நிலையை ரசித்துக்கொண்டு நின்றோம். நாங்கள் இருவரும் மலையாளத்தில் உரையாடிக்கொண்டிருந்ததை செவியுற்ற ஒரு கோட் சூட்டிலிருந்த சிஸ்கோ நிறுவனத்தின் ஒரு மேல் நிலை அதிகாரி எங்களை நெருங்கி ‘ஞானும் மலையாளியானெ..’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் வாயை மூடிக்கொண்டு சும்மா இராமல், ‘அதான எங்கடா காணமேன்னு பார்த்தேன்.’ என்றேன் நக்கலாக.

அவர் அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் வாய் விட்டு சிரித்தார். ‘You are absolutely right sir. There is no place in this world where you can’t find a Malayalee.’ என்று அவர் தங்களுடைய மாநில மக்களின் அருமை பெருமைகளை பேச ஆரம்பிக்க அதே மாநிலத்தைச் சார்ந்த என்னுடைய நண்பரும் அவருடன் சேர்ந்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் அறை ஒதுக்கப்பட அரை மணி நேரத்துக்கும் மேலாகியும் நேரம் போனதே தெரியாமல் என்னுடைய நண்பரும் அவரும் சேர்ந்து ‘அறுத்து’ தள்ளிவிட்டனர்.

எங்களுடைய அறைகளின் அனுமதி அட்டை (Door Card) கிடைத்ததும் பெட்டியை சிஸ்கோ நிறுவனத்தின் கடைநிலை அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அருகிலிருந்த அறையில் தயாராயிருந்த பகலுணவை முடித்துக்கொண்டு அவரவர் அறைக்கு சென்றோம். ஐந்து நட்சத்திர விடுதிகளில் கிடைக்கூடிய தரத்துடன் இருந்த buffet lunch உண்மையிலேயே நன்றாக இருந்தது.

வரவேற்பறையிலிருந்தபோது தெரியாத பிரம்மாண்டம் எங்களுடைய அறைக்கு செல்ல புறப்பட்டபோதுதான் தெரிந்தது. சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்த விடுமுறை மற்றும் கேளிக்கை விடுதி பார்க்கும் இடமெல்லாம் டிசைனர் லேண்ட்ஸ்கேப் அமைப்புடன் பச்சை பசேலென இருக்க உடனே கையோடு கொண்டு வந்திருந்த டிஜிட்டல் (Cannon A342) காமராவை எடுத்து முடிந்த அளவு வீடியோவாகவும் ஸ்டில்களாகவும் பிடித்துக்கொண்டேன். மழை துளிகள் பூவென காற்றுடன் சேர்ந்து முகத்தை ஊசியாய் குத்த மீதமுள்ள இடங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அறைக்கு சென்றேன். இதற்கெனவே ஏறக்குறைய எல்லா அறை வாசலிலும் பிக்னிக் குடைகளை வைத்திருந்தனர்.நாளொன்றுக்கு ரூ.4000 முதல் 12000/- வரை வாடகை என்ற பலதரப்பட்ட அறைகளை மூன்று நாட்கள் இரண்டு இரவுகள் என்ற பாக்கேஜில் ரூ.3,000/- முதல் 9000/-வரை என்று ஏற்பாடு செய்தோம் என்று சிஸ்கோ அதிகாரி ஒருவர் கூறியபோது ‘ரீல் விடாதிங்க சார்’ என்று நினைத்த நான் என்னுடைய அறையைக் கண்டதும் உண்மைதான் போல என்று நினைத்தேன். அழைக்கப்பட்டிருந்த விருந்தினரின் பதவியைப் பொருத்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பதை என்னுடைய நண்பரின் அறையைப் பார்த்ததும் உணர்ந்தேன்.

சென்னையிலும் மும்பையிலும் பல ஐந்து நட்சத்திர விடுதிகளில் அலுவலின் நிமித்தம் பலமுறை தங்கியிருந்தாலும் கோவா விடுதியின் அறையின் அலங்காரமும் வசதிகளும் உண்மையிலேயே என்னை அசர வைத்தன. அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது. என்னுடைய மனைவிக்காகவே அறை முழுவதும் நடந்து வீடியோவில் பதிந்துக்கொண்டேன்.

அன்று மாலை நடக்கவிருந்த துவக்க விழாவுக்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த மடிக் கணினியை எடுத்து நம் வலைப்பூவைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது.

அறையில் அதற்கெனவே ஒரு இணைப்பும் இருந்தது. அதை என்னுடைய கணினியில் இணைத்து முடித்ததுமே ஒரு பாப் அப் ஸ்க்ரீன் வந்து பயமுறுத்தியது. இணைய வசதிக்கு நாளொன்றுக்கு ரூ.800!

இது தேவையா என்று என்னை நானே கடிந்துக்கொண்டு இணைப்பை துண்டித்துவிட்டு மொபைலில் நாலரை மணிக்கு அலாரம் வைத்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருந்ததால் மொபைலின் மெல்லிய அலார ஒலி என்னை எழுப்ப முடியாமல் போக என்னுடைய அறையிலிருந்த இண்டர்காமின் ஓங்கார ஒலி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பியபோது மணி ஐந்தைக் கடந்திருந்தது!

‘எந்தா சாரே ஒறங்கியோ.. இவ்விட சாரெயொழிச்சி பாக்கி சகலரும் வந்துண்டு கேட்டோ..’ என்ற என் நண்பருடைய ஒலி செவியில் விழ அடித்து பிடித்துக்கொண்டு எழுந்து பேருக்கு குளித்து முடித்து உடுத்திக்கொண்டு கிளம்பினேன்.

என் நண்பர் கூறியிருந்ததுபோல துவக்க விழா கூடம் முழுவதும் சுமார் நூறு பேர் குழுமியிருக்க மேடையில் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் அமர்ந்துக்கொண்டிருந்தனர்.

நான் வாசலில் நுழைந்ததுமே கூடத்தின் மத்தியில் அமர்ந்திருந்த என்னுடைய நண்பர் கையைசைத்து சிக்னல் செய்ய அரையிருட்டில் சில பல கால்களை மிதித்துக்கொண்டு என்னுடைய இருக்கையை சென்றடைந்தேன்.

விழாவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த கோவா மாநிலத்தின் முதன்மை காரியதரிசி (Chief Secretary)யின் துவக்க உரையுடன் துவங்கிய விழா சரியாக இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக முடிந்தது.

விழாவின் முடிவில் இரவு 8.45 மணிக்கு நடக்கவிருக்கும் ஹிந்தி கஜல் பாடகர் பங்கஜ் உஸ்தாதின் இசை விருந்தில் சந்திப்போம் என்ற அறிவுப்புடன் விடைபெற்று அவரவர் அறைக்கு திரும்பினோம்.

அன்று இரவு சரியாக எட்டு மணிக்கு துவக்க விழா நடந்த கூடத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த விசாலமான வராந்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாக சாந்தி துவங்கியது.
முன்னாள் காப்புறுதி கழகத் தலைவர், முன்னாள் மும்பை ஐஐடி பேராசிரியர் ஒருவர், மும்பை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் என்ற வி.வி.ஐ.பியிலிருந்து என்னைப் போன்ற வங்கி கணினி இலாக்கா தலைமையதிகாரிகள் மற்றும் இலாக்காவில் பணிபுரிந்த இள நிலை அதிகாரிகள் என சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வயது அந்தஸ்த்து வேறுபாடுகளை மறந்து ஒரே ‘குடிமகன்களாக’ குழுமியிருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அதில் ஒரு மூலையில் குழுமியிருந்த கையளவு எண்ணிக்கையுள்ள அதிகாரிகள் குழுமத்தைப் பார்த்தேன். அருகில் சென்றபோதுதான் தெரிந்தது கையில் பழசாற்றுடன் நின்றிருந்த அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் என்று. அவர்கள் எல்லோரையுமே பல கூட்டங்களில் சந்தித்திருந்ததால், ‘என்ன சார் மறுபடியும் ஒன்னா கூடி இந்த சூழ்நிலையையே கெடுக்கிறீங்களே?’ என்றேன் வேடிக்கையாக.

என்னுடைய கையிலிருந்த மது பானத்தைப் பார்த்த அவர்கள், ‘ஒங்களுக்கென்ன சார்.. அதான் நீங்க அந்த மாநில ஆளாவே மாறிட்டீங்களே?’ என்று பதிலுக்கு கிண்டலடிக்க இரவு களைகட்டியது.

என்னுடைய நண்பர் எங்களை விட்டு விலகி அவருடைய ‘நாட்டுக்கார’ கும்பலுடன் சேர்ந்துக்கொள்வதைப் பார்த்தேன். சரி நமக்கு ஒரு கும்பல்னா அவருக்குன்னு ஒரு கும்பலும் வேண்டுமே என்று நினைத்து கண்களை வராந்தா முழுவதும் அலைய விட்டேன். அன்றைய இரவு எப்படியும் அடுத்த நாள் விடியற்காலையில்தான் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த பலரும் சாவகாசமாக ‘அதை’ பருகிக்கொண்டிருக்க மூலையில் நான்கு பேர் அடங்கிய ஒரு சிறு குழுமட்டும் கபக், கபக்கென 'அதை' கோப்பை கோப்பையாக விழுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அனைவருமே கலரிலும், பாவனையிலும் ஹிந்தி திரைப்பட நடிகர்கள் போல தெரிந்தனர். அதில் ஒருவர் மட்டும் தலை நிறைய கருகருவென்ற சுருட்டை முடியுடன் அசல் ஹீரோ போன்று இருந்தார். நான் அவர்களையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, ‘என்ன சார் அப்படி மெய் மறந்து பாக்கீங்க? அவங்க யாருன்னா? இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்து பாருங்க தெரியும்.’ என்று என் விலாவை இடித்தார் நண்பர் ஒருவர்.

இரண்டு பெக்குகள் உள்ளே தள்ளுவதற்கு முன்பே கூடத்திலிருந்து திறந்திருந்த கதவுகள் வழியாக வந்தது அழைப்பு, ‘Pankaj saab is ready to start the programme. Please come in.’ என்று. கையில் பழச்சாற்றுடன் நின்றிருந்த அனைவரும் கோப்பைகளுடன் உள்ளே நுழைய என்னைப் போன்றவர்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றோம். அடுத்த நொடியிலேயே எங்களுக்கும் அழைப்பு வந்தது, ‘Don’t worry about your glasses. Carry them in.’ என்று.

இது போதாதா என்ற நினைப்புடன் அனைவரும் உள்ளே நுழைய பாதி கூடத்திற்கு தரையில் மெத்தைகள் விரிக்கப்பட்டு சாய்ந்துக்கொள்ள உருட்டை தலையணைகளும் இருந்தன..

ஆஹா.. போதையில் விழுந்தாலும் யாருக்கு தெரியப் போகிறதென்ற திருப்தியில் குடிமகன்கள் அனைவரும் கூடத்தின் பின் பகுதியிலிருந்த இருக்கைகளை தவிர்த்து கையிலிருந்த கோப்பைகளுடன் மெத்தைகளில் அமர இன்னிசை உஸ்தாத் சாப்பின் தங்கக் குரலுடன் துவங்கியது..

தொடரும்.

12 comments:

பழூர் கார்த்தி said...

//‘எந்தா சாரே ஒறங்கியோ.. இவ்விட சாரெயொழிச்சி பாக்கி சகலரும் வந்துண்டு கேட்டோ..’//

அதெல்லாம் சரி, எப்படி மலையாளம் உங்களுக்கு தெரியும் என்று சொல்லவே இல்லையே ???

***

கோவா நான் போனதே இல்ல, உங்க புண்ணியத்துல பாத்துடலாம்னு இருக்கேன் :-)

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

எப்படி மலையாளம் உங்களுக்கு தெரியும் என்று சொல்லவே இல்லையே ???//

ஏறக்குறைய இருபத்தஞ்சு வருசம் கேரளா வங்கியில வேல செஞ்சிட்டு மலையாளம் படிக்காம இருந்தா எப்படி?

எழுத படிக்க தெரியாது.. சரளமா பேச வரும்.

கோவா நான் போனதே இல்ல, உங்க புண்ணியத்துல பாத்துடலாம்னு இருக்கேன் //

கோவாவ சுத்தி பாக்க எங்க டைம் இருந்திச்சி.. பழைய கோவா மட்டும் போய் வந்தேன். அங்க ஒரு பழைய காலத்து சர்ச் இருக்குது. அந்த ஃபோட்டோவையும் போடறேன்.

மணியன் said...

அது பங்கஜ் உதாஸ். அவர் இசையில் உஸ்தாதாக இருப்பது வேறு விதயம். :))

பாம் ஜேஸஸ் பசில்லிகா சென்றிருந்தீர்களா ? அங்கு St. Francis Xavierஇன் உடல் பதனப்படுத்தப்பட்டு வைக்கப் பட்டிருக்கிறதே!

Babble said...

ஜோசப் சார்,
நீங்க பங்கஜ் உதாஸ்(Pankaj Udhas) -னு சொல்ல வந்தீங்களா? அவரோட பாட்டு முக்கால்வாசி கோப்பைய பத்தி தானே, கோப்பையோட உள்ள அனுமதிக்கலைனா எப்டி? :D

tbr.joseph said...

வாங்க மணியன்,

அது பங்கஜ் உதாஸ்.//

நான் சொல்ல வந்ததும் அவரைத்தான்..

உதாஸ் உஸ்தாத் ஆகிவிட்டது.. நீங்கள் கூறியதுபோலவே அவர் கஜல் பாடுவதில் உஸ்தாத் என்பதை தெளிவாகவே நிரூபித்தார்.


பாம் ஜேஸஸ் பசில்லிகா சென்றிருந்தீர்களா ? அங்கு St. Francis Xavierஇன் உடல் பதனப்படுத்தப்பட்டு வைக்கப் பட்டிருக்கிறதே! //

அங்கு செல்லாமலா? 1995ம் வருடம் அவருடைய உடல் வெளியே காட்சிக்கு வைத்திருந்தபோது சென்றிருக்கிறேன். கடந்த வெள்ளியன்று உணவு இடைவேளைக்குப் பிறகு செமினாருக்கு மட்டம் போட்டுவிட்டு சென்று வந்தேன். படங்களுடன் சனிக்கிழமை சொல்கிறேன்.

tbr.joseph said...

வாங்க Babble,

நீங்க பங்கஜ் உதாஸ்(Pankaj Udhas) -னு சொல்ல வந்தீங்களா?

ஆமாங்க.. போதையில நா பிறழ்து பாருங்க:)


அவரோட பாட்டு முக்கால்வாசி கோப்பைய பத்தி தானே, கோப்பையோட உள்ள அனுமதிக்கலைனா எப்படி?//

அதானே.. பியா தோ கரோன்னு அவர் ஆரம்பிச்சப்போ வாஹ், வாஹ்னு அரங்கம் முழுசும்..

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
மீண்டும் வருக!
புனித சவேரியார் உடலை பார்க்க முடிந்ததா? அடுத்த அத்தியாயத்துக்கு காத்திருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

புனித சவேரியார் உடலை பார்க்க முடிந்ததா?//

ஆமாம். பீடத்திற்கு மேல் ஒரு தங்கப் பேழையில் வைத்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இறக்கி பக்தர்களுடைய பார்வைக்கு வைப்பார்களாம். 2005ல் நடந்தது. படங்கள் எடுத்திருக்கிறேன். தனி மயிலிலும் அனுப்புகிறேன்.

G.Ragavan said...

ஆகா...கலக் கலக்குன்னு கலக்கீருக்கீங்க....நடக்கட்டும் நடக்கட்டும். கோவாவுக்குப் போவாமான்னு சொல்லீட்டு இப்பிடி கும்மாளமா! வீட்டுக்குத் தெரியுமா?

அது சரி...ஆரந்த ஹீரோ?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கோவாவுக்குப் போவாமான்னு சொல்லீட்டு இப்பிடி கும்மாளமா! வீட்டுக்குத் தெரியுமா?//

தெரியுமான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லணும்..

அவங்கள கேட்டா எதுக்கு போவீங்கன்னு தெரியாதாக்கும் என்பார்கள்..

எல்லாம் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்தானே:)

தேவ் | Dev said...

ஜோசப் சார் செம என்ஜாய்மென்ட் தான் போலிருக்கு
அப்போ அப்போ உஙக் ரெகுலர் தொடர்களோட இப்படி இதர விஷயங்களையும் எழுதுங்க சார்.

tbr.joseph said...

வாங்க தேவ்,

செம என்ஜாய்மென்ட் தான் போலிருக்கு//

பின்னே.. ரொம்ப நாளைக்கப்புறம்..

அப்போ அப்போ உஙக் ரெகுலர் தொடர்களோட இப்படி இதர விஷயங்களையும் எழுதுங்க. //

உத்தரவுங்க தேவ்.. அப்படியே செஞ்சிடறேன்..