30 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 192

முத்துக்கருப்பனுக்கெதிராக எங்களுடைய வங்கியிலிருந்து அனுப்பப்பட்டிருந்த புகாரின் மீது மதுரை பார் கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு அவர் எங்களுடைய வங்கிக்கு அடைக்க வேண்டிய தொகையை ஒரு மாதத்திற்குள் வட்டியுடன் அடைக்க வேண்டும் என்று நம் வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது என்பதை எங்களுடைய பெண் வழக்கறிஞர் வழியாக கேள்விப்பட்டபோது எனக்கும் லேசாக வருத்தம் தோன்றியது.

அவசரப்பட்டுவிட்டோமோ என்றும் தோன்றியது. இத்தனை வருட காலம் மதுரையில் மதிப்புடன் தொழில்புரிந்து வந்த ஒரு மூத்த வழக்கறிஞரை அவருடைய சக வழக்கறிஞர்களின் முன்பு வைத்து தலைகுனிய வைத்துவிட்டோமோ என்றும் தோன்றியது.

அவர் கவுன்சில் உத்தரவை மறு பரிசீலனை செய்ய பலவாறு முயன்றும் வெற்றிபெறாமல் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மாதத்திற்குள் முழு தொகையையும் அடைக்க வேண்டியதாயிற்று.

அவருக்கிருந்த தொழிலுக்கும் வருமானத்திற்கும் இத்தொகை பெரியதல்ல. ஆனாலும் அவர் தலைவராயிருந்து இத்தகைய முடிவுகளை முன்பு எடுத்திருந்த நிலையில் அவரே அத்தகைய தீர்ப்புக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்பட்டதைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவர் அப்படி வங்கியை ஏமாற்றியதற்கு விவரமில்லாத என்னுடைய கிளையின் முந்தைய மேலாளரும் ஒருவகையில் காரணம்தானே என்று நினைத்தேன். வங்கியின் பெயரில் இருந்த காசோலையை வழக்கறிஞரின் கணக்கில் வரவு வைத்ததே பெரிய தவறு. அத்துடன் அவரை அத்தொகை முழுவதையும் கணக்கிலிருந்து எடுக்க அனுமதித்தது அதை விட பெரிய தவறு.

இந்த சிக்கலுக்குப் பிறகு அவரிடம் நிலுவையில் நின்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை அவரிடமிருந்து பெற்று கணேசன் வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்குள் போறும், போறும் என்றாகிவிட்டது.

மதுரை கிளையில் இருந்த பெரிய சிக்கல் ஒன்று தீர்க்கப்பட்டது என்னுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையாகாது.

முழு தொகையையும் அவரிடமிருந்து வசூலித்தாகிவிட்டதென்று என்னுடைய வட்டார மேலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்த இரு வாரங்களுக்குள் என்னுடைய சேர்மனே என்னைத் தொலைப்பேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்தது மறக்க முடியாத சம்பவம்.

***

நான்கு வருடங்களுக்கு முன்பு கோவையைச் சார்ந்த தமிழ் மேலாளர் வழங்கிய கடன்களில் ஒருசிலவற்றைத் தவிர எல்லா கணக்குகளும் அவற்றைச் சார்ந்த வணிகம், மற்றும் தொழில் நிறுவனங்களுமே மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக சந்தித்து அவர்களுடைய நிறுவன வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் தொகையை என்னுடைய தலைமையகத்திற்கு பரிந்துரைப்பதில் அடுத்த ஆறு மாதங்கள் கழிந்தன.

இதற்கிடையில் அக்கிளையில் இருந்த என்னுடைய பணியாளர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததில் கிளையின் வணிகமும் முந்தைய இரு வருடங்களில் இருந்த அளவைக் கடந்து முன்னேறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

மதுரையில் இருந்த சமயத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்த விஷயம் மதுரைய லயன் கிளப்பில் அங்கத்தினராயிருந்தது.

கிளைக்கு பொறுப்பேற்ற முதல் நாளே என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவராயிருந்த மதுரை மேற்கு லயன் க்ளப்பின் பொருளாளர் என்னை வற்புறுத்தி அவருடைய க்ளப்பில் அங்கத்தினராக்கினார்.

இத்தகைய க்ளப்பில் அங்கத்தினர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களும் தொழிலதிபர்களாகவுமே இருந்தனர் என்றாலும் பல நல்ல காரியங்களையும் அவர்கள் செய்து வந்திருந்தனர். மதுரையைச் சுற்றிலும் இருந்த பல குக்கிராமங்களையும் தத்தெடுத்துக்கொண்டு என்னைப் போன்ற வங்கி மேலாளர்கள் உதவியுடன் பல நலத்திட்டங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வந்தனர்.

அவர்களுடைய பரிந்துரையில் நான் என்னுடைய கிளையிலிருந்து பல சிறு வணிகர்களுக்கும், கைத்தொழிலாளர்களுக்கும் கடனுதவி செய்தேன். அவை அனைத்துமே மிகச் சரியாக திருப்பி அடைக்கப்பட அத்தொண்டு நிறுவனங்களே பொறுப்பேற்றிருந்ததால் என்னால் மேலும், மேலும் பல குடும்பங்களுக்கு கடனுதவி செய்ய முடிந்தது.

இத்தகைய சிறு, சிறு கடன்களை நலிந்த மக்களுக்கு அளித்து அவர்கள் அதன் மூலம் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டதை நேரடியாக கண்டு அனுபவிக்கும் சந்தோஷம் வேறெந்த தொழிலிலும் கிடைக்காது என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தகைய கடன்களை கொடுப்பதில் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படி ஏற்படுகின்ற நஷ்டம் வங்கிகளின் மொத்த வணிகத்தைக் கணக்கிட்டு பார்க்கையில் கேவலம் 0.01%க்கும் குறைவாகவே இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் பெரும் பணமுதலைகளுக்கும், மொத்த வணிகர்களுக்கும் கொடுத்த கடன்கள் வாராக் கடன்களாக மாறும்போது அதனால் பாதிக்கப்படுவது வங்கிகள் மட்டுமல்ல அத்தகைய கடன்களை வழங்கிய என்னைப் போன்ற மேலாளர்களும்தான்.

மதுரைக் கிளையிலிருந்த காலத்தில் அத்தகைய அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவி காலத்தில் அவரிடமிருந்து கடன் பெற்றிருந்த எல்லா நிறுவனங்களையுமே நான் பொறுப்பேற்றதும் சென்று சந்தித்திருந்தேன்.

என்னுடைய கிளை இருந்த இடத்திலிருந்து சுமார் பத்து பதினைந்து சதுர கிலோ மீட்டர் வட்டாரத்திலிருந்த பல வர்த்தக நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்திருந்த நான் என்னுடைய கிளைக்கு மிக அருகாமையிலிருந்த ஒரு மொத்த ப்ளைவுட் மற்றும் லாமினேஷன் பலகைகளை விற்பனை செய்து வந்திருந்த கடையை ஆய்வு செய்ய மறந்துப்போனேன்.

அருகிலிருந்த கடைதானே என்று மெத்தனமாக இருந்தது மட்டுமல்லாமல் முந்தைய மேலாளர் கொடுத்திருந்த தொகை தங்களுடைய் வளர்ச்சிக்கு போறுமானதாக இல்லையென்று பாகஸ்தர்கள் என்னை அணுகியபோது அவர்களுடைய நிதியறிக்கையை மட்டும் பார்த்து அவர்களுக்கு தேவையான தொகையை என்னுடைய வட்டார மேலாளருக்கு பரிந்துரைக்க அவரும் என்னுடைய பரிந்துரையை ஏற்று என்னுடைய தலைமையகத்திற்கு பரிந்துரைக்க முந்தைய மேலாளர் கொடுத்திருந்தை விட இரு மடங்கு தொகை வழங்கி உத்தரவும் வந்தது.

கூடுதல் தொகை வழங்கி என்னுடைய தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததும் அதை அவர்களுக்கு பைசல் செய்வதற்கு முன் அவர்களுடைய கிடங்கை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்பது உத்தரவிலிருந்த நியதிகளுக்குள் ஒன்று.

சாதாரணமாக இம்மாதிரியான மொத்த வணிகர்களுக்கு வழங்கப்படும் கடன் இருவகை. ஒன்று வணிகர்களுடைய கடையிலிருந்த சரக்கின் மேல் ஹைப்பாத்திகேஷன் (Hypothecation) எனப்படும் ஓவர்டிராஃப்ட் கணக்கு. இது கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கின் மதிப்பில் 75% வரை கடனாக வழங்கப்படும். கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கின் விவரத்தை மாதா மாதம் அறிக்கையாக வங்கிக்கு சமர்ப்பித்தால் போதும்.

இரண்டாவது வகை வணிகர்களின் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கை Pledge எனப்படும் அடகு முறையில் மொத்த மதிப்பில் 50ல் இருந்து 75% வரை வழங்கப்படும்.

இவ்விருவகை கடன்களிலும் உள்ள முக்கிய வித்தியாசம் முதல் வகையில் நிறுவனத்தின் சரக்கு கடை உரிமையாளருடைய பொறுப்பில் விட்டுவைக்கப்படும். இரண்டாவது வகை கடனுக்காக கிடங்கின் சாவி வங்கியில் வைக்கப்பட வேண்டும்.

அதாவது கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் சரக்கின் மதிப்பில் கடனாக எடுத்த 50 அல்லது 75% மதிப்பை வங்கியில் திருப்பி அடைக்காமல் சரக்கை எடுக்க முடியாது. வங்கியில் அடைக்கப்பட வேண்டிய தொகை அடைக்கப்பட்டதும் வங்கி மேலாளரோ அல்லது துணை
அதிகாரிகளில் ஒருவரோ வங்கியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்துக்கொண்டு சென்று கிடங்கை திறந்து குறிப்பிட்ட சரக்கை மட்டும் வணிகர் எடுக்க அனுமதிப்பார்.

ஆகவே எந்த ஒரு நேரத்திலும் வங்கியில் எடுக்கப்பட்டிருந்த கடன் தொகைக்கும் கூடுதல் மதிப்புள்ள சரக்கு கிடங்கில் இருக்க வேண்டும்.

கிடங்கை ஆய்வு செய்ய வேண்டுமென்ற தீர்மானித்த நான் கிடங்கிலிருந்த சரக்கு விவரங்களைக் குறித்து வைத்திருந்த ரெஜிஸ்டரை எடுத்துக்கொண்டு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சாவியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு என்னுடைய வாடிக்கையாளரின் கடைக்கு சென்றேன்.

நல்ல வேளையாக நான் சென்றபோது கடையில் உரிமையாளர் இருந்தார். என்னைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றவர் என் கையிலிருந்த கனத்த புத்தகத்தைப் பார்த்தார்.

‘என்ன சார் புத்தகமும் கையுமா வந்திருக்கீங்க? எங்கயாவது இன்ஸ்பெக்ஷனுக்கு போய்க்கிட்டிருக்கீங்களா?’ என்றார்.

நான் புன்னகையுடன், ‘ஆமா சார். கரெக்டா சொல்லிட்டீங்க. வாங்க போலாம்.’ என்றேன்.

அவருடைய முகம் சட்டென்று இருளடைந்ததை என்னால் காண முடிந்தது. ‘என்ன சார் சொல்றீங்க?’ என்றார்.

‘நீங்க கேட்டிருந்த கூடுதல் லிமிட் சாங்ஷன் ஆகி வந்திருக்கு. அத டிஸ்பர்ஸ் பண்றதுக்கு முன்னால ஒங்க கொடவுன்லருக்கற ஸ்டாக்க வெரிஃபை செஞ்சி ரிப்போர்ட் பண்ணணும். அதான் வந்தேன்.. வரீங்களா?’

அவர் வருவதாயில்லை. ‘சார் இன்னைக்கி நாள் நல்லாயில்லை. நீங்க வந்த நேரமும் நல்லாயில்லை சார். நீங்க கிறிஸ்துவங்க, அதல்லாம் பாக்க மாட்டீங்க. ஆனா நாங்க அப்படியில்ல. கொடவுன திறக்கறதுக்கு நேரம் பார்த்துத்தான் சார் போவோம். நாளைக்கு காலைல வந்தா செக் பண்ணிரலாம்.. தப்பா நினைச்சிக்காதீங்க.’

என்னடா இது? நான் பிராஞ்சுக்கு வந்ததுக்கப்புறம் கூட பல நாட்கள்ல இதே நேரத்துல குட்ஸ் ரிலீஸ் செஞ்சிருக்காங்களே என்று நினைத்த நான் கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தை திறந்து ஆராய்ந்தேன். நான் நினைத்தது போலவே கடந்த வாரம் ஒரு நாள் இதே நாள் இதே நேரத்தில் கணிசமான தொகைக்கு ஈடான சரக்கை ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை அவரிடம் காட்டினேன்.

அதற்குப் பிறகும் அவர் வருவதற்கு தயங்கவே கடையிலிருந்த பணியாட்களைப் பார்த்தேன். எல்லோருமே என்னுடைய பார்வையை தவிர்க்கவே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறதென்பதை உணர்ந்த நான் பிடிவாதமாக, ‘சார் நீங்க வராட்டி பரவாயில்லை. ஒங்க மேனேஜர என் கூட அனுப்புங்க. இன்னைக்கே இன்ஸ்பெக்ட் செஞ்சி ரிப்போர்ட் அனுப்பணுங்கறது எங்க ஜோனல் மேனேஜரோட ஆர்டர். அவர் நாளைக்கே எங்க பிராஞ்ச் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்துட்டா எனக்கு பெரிய பிரச்சினையாயிரும். நீங்க சரக்கு எதுவும் எடுக்கவோ வைக்கவோ போறதில்லை இல்லையா? அதனால நேரம் அவ்வளவு முக்கியமில்ல, வாங்க.’ என்றவாறு அழைத்துக்கொண்டு சென்றேன்.

அங்கு சென்றதும்தான் தெரிந்தது அவர் ஏன் வர தயங்கினார் என்பது.

தொடரும்..

28 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 191

வழக்கறிஞர் முத்துக்கருப்பனுக்கு என்னுடைய வங்கியின் புதிய பெண் வழக்கறிஞர் மூலமாக நான் நீதிமன்றத்திலிருந்து விவரங்களைத் திரட்டிய விவரம் அடுத்த இரு நாட்களிலேயே தெரிந்துவிட்டது.

ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து கிளம்பிக்கொண்டிருந்தபோது என்னை தொலைப்பேசியில் அழைத்து, ‘சார் நீங்க ஃப்ரீயாருந்தா வரட்டுமா?’ என்றார்.

அன்று எனக்கு வேறெந்த அலுவலும் இல்லாததாலும் அவருடைய அலுவலகம் என் வீடு செல்கின்ற வழியிலேயே இருந்ததாலும் 'நானே வீட்டுக்கு போற வழியில வரேன் சார்.' என்றேன்.

ஆனால் அவர் பதறிக்கொண்டு, ‘வேணாம் சார். நீங்க இங்க வந்தா ப்ரைவசி இருக்காது. நானே அங்கே வரேன். பத்து நிமிஷத்துக்குள்ள வந்துருவேன்.’ என்று எனக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டிக்க நான் வேறு வழியின்றி அவருடைய வருகைக்காகக் காத்திருந்தேன்.

அவர் வாக்களித்தபடியே அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.

என் மேசைக்கெதிரிலிருந்த இருக்கையை அவருக்கு சுட்டிக்காட்ட அவர் அதில் அமர்ந்து சிறிது நேரம் எப்படி துவங்குவது என ஆலோசிப்பவர்போல் பேசாமல் இருந்தார். நானும் அவராகவே துவங்கட்டும் என்று என் முன்பிருந்த கோப்பை படிப்பதுபோல் அமர்ந்திருந்தேன்.

‘சார் நா ஒங்க பேங்க் இங்க துவங்குனதுலருந்தே லீகல் அட்வைசரா இருக்கேன். அஞ்சு வருசத்துக்கு முன்னாலருந்தாரே ஒரு கவுண்டர் மேனேசர் அவர் இருந்தப்போ எனக்கு நல்ல பழக்கம். அவர் போனதுக்கப்புறம் வந்த ரெண்டு பேரும் நம்ம ஆஃபீஸ் பக்கம் வந்ததுக்கூட இல்லை. இருந்தாலும் ஒங்க கேஸ் எதுவும் நமக்கு எதிரா தீர்ப்பானதில்ல சார். அவ்வளவு கவனமா நான் வேல செஞ்சிருக்கேன். அதயெல்லாம் நெனச்சி பார்க்காம நேத்து படிச்சி முடிச்ச அந்த லேடி அட்வகேட் சொன்னத வச்சி நீங்க இப்படி செஞ்சிருக்க வேணாம்னு தோனுது சார்.’

அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் இருந்த நான் அவரை கூர்ந்து பார்த்தேன். ‘நான் என்ன செஞ்சேன்னு சொல்ல வரீங்க சார்? நான் போன வாரத்துல ஒரு நாள் முன்கூட்டியே சொல்லிட்டு ஒங்கள பாக்க வந்தேன். நீங்க சரியாவே என்கிட்ட பேசல. அன்னைக் அட்வகேட் கணேசன் சார் ஆஃபீசுக்கும் போயிருந்தேன். அவர் எங்க கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா கட்டுகளையும் நான் கேட்டதும் மறுநாளே கொண்டு வந்து குடுத்துட்டார். அத பார்த்துத்தான் எவ்வளவு கேஸ்ல ஜட்ஜ்மெண்ட் வந்துருக்கு, எத்தனையில ஈ.பி ஃபைல் பண்ணிருக்கு, எத்தன ஈ.பில அட்டாச்மெண்ட் ஆர்டர் பாசாயிருக்கு, அதுல எத்தன கேஸ்ல ரிக்கவரி வந்திருக்குன்னுல்லாம் என்னால தெரிஞ்சிக்க முடிஞ்சிது. அத்தோட அவர் கோர்ட்லருந்து க்ளெய்ம் செஞ்சிருக்கற அமவுண்ட் எவ்வளவு? எவ்வளவு தொகைய அவர் பேங்க்ல இதுவரைக்கும் கட்டியிருக்கார்னு பார்த்தப்போ எல்லாத்தையுமே கோர்ட்லருந்து கிடைச்சதுமே இங்க கட்டியிருக்கார்னு தெரிஞ்சிக்க முடிஞ்சது. ஏறக்குறைய அதே சமயத்துல ஒங்க வழியா ஃபைல் பண்ண கேஸ்லயும் இதே மாதிரி ரிக்கவரி ஆயிருக்கணும் இல்லையா? அத தெரிஞ்சிக்கத்தான் எங்க கேஸ் கட்டுங்கள கேட்டேன். நீங்க இதோ, அதோன்னு இழுத்தடிச்சதுமல்லாம என் ஸ்டாஃப் கிட்ட இந்த கேஸ் கட்ட படிச்சி என்னத்தய்யா கிழிக்கப் போறார் ஒங்க மேனேஜர்னு கிண்டலா கேட்டிருக்கீங்க. அதான் ஒங்களுக்கு தெரியாம நானே அந்த லேடி வக்கீல் மூலமா எல்லா டீட்டெய்ல்சையும் கோர்ட்லருந்து கலெக்ட் செஞ்சேன். ஏன் அத ஒங்கக்கிட்ட காட்டவா?’ என்றேன் சற்றே கோபத்துடன்.

அவர் மறுபேச்சு பேசாமல் அமர்ந்திருந்தார்.

நான் தொடர்ந்தேன். ‘இங்க பாருங்க சார். இதுவரைக்கும் நீங்க கோர்ட்லருந்து எவ்வளவு கலெக்ட் பண்ணியிருக்கீங்கங்கற பர்ட்டிகுலர்ஸ் எங்கிட்ட இருக்கு. நான் போன மேனேசர கேட்டப்போ இத கோர்ட்லருந்து வித்ட்ரா பண்றதுக்கு ஒங்களுக்கு எந்தவிதமான பவர் டாக்குமெண்ட்லயும் கையெழுத்து போட்டு தரலைன்னு சொல்றார். அப்படி அவர் குடுத்திருக்காத பட்சத்துல ஒங்களால எப்படி கோர்ட்லருந்து பணத்த வித்ட்ரா பண்ண முடிஞ்சதுங்கறத நீங்கதான் சொல்லணும். அத்தோட எங்க பேங்க் பேர்லதான் கோர்டலருந்து செக் குடுத்திருப்பாங்க. அத எப்படி நீங்க என்கேஷ் பண்ணீங்கன்னு சொன்னா நல்லாருக்கும்.’

என்னுடைய நேரடி குற்றச்சாட்டுக்களின் தாக்கம் அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிந்தது.

சிறிது நேரம் எவ்வாறு பதிலளிக்கலாம் என்று சிந்தித்தவாறு அமர்ந்திருந்த முத்துக்கருப்பன் தான் கையோடு கொண்டு வந்திருந்த தன்னுடைய வங்கி கணக்குப் புத்தகத்தை என்னிடம் விரித்து காட்டினார். ‘சார் நீங்க சொல்றது ஒன்னுமே சரியில்லைங்கறத என் பாஸ் புத்தகத்த பார்த்தாலே தெரிஞ்சிரும். கோர்ட்லருந்து கிடைச்ச எல்லா செக்கையும் அந்தந்த டேட்லயே ஒங்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணியிருக்கேன். இந்தாங்க பாருங்க.’

நான் பதில் பேசாமல் அவர் நீட்டிய கணக்கு புத்தகத்தை வாங்கி பார்த்தேன். அவர் கூறியதுபோலவே கடந்த ஓராண்டு காலமாக அவருடைய கணக்கில் பல காசோலைகள் வரவு வைத்திருப்பதைக் கண்டேன்.

‘சரி சார். இதுலருந்து நான் என்ன தெரிஞ்சிக்கணும்னு நீங்க சொல்றீங்க?’ என்றேன்.

அவர் கேலியுடன், ‘என்ன சார் விளையாடறீங்களா? நான் ஒங்க பேங்க்ல எல்லா செக்கையும் டெப்பாசிட் செஞ்சிருக்கறப்போ நீங்க எப்படி நான் அத கட்டவேயில்லன்னு சொல்லலாம்?’ என்றார்.

எனக்குள் பொங்கிவந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘சார் நான் ஏறக்குறைய அஞ்சி வருசமா மேனேஜரா இருக்கேன். அதனால நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு நல்லாவே புரியுது. சரி. இப்ப நா கேக்கப்போற கேள்விக்கு பதில் சொல்லுங்க. இது யாரோட பாஸ்புக்?’

அவர் சீரியசாக, ‘ஏன் சார். பார்த்தா தெரியல? என்னோடதுதான். எதுக்கு கேக்கீங்க?’ என்றார்.

நான் என்ன நோக்கத்துடன் அந்த கேள்வியைக் கேட்டேன் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும் என்னை சோதிக்கவே அவ்வாறு கேட்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.

‘நீங்க கோர்ட்லருந்து எங்க பேங்க் பேர்ல கிடைச்ச செக்க ஒங்க கணக்குல எப்படி சார் டெப்பாசிட் பண்லாம்? அதுக்கு பதில் சொல்லுங்க. கணேசன் சார் ஒவ்வொரு செக்கோடயும் இந்த தொகை எந்த கணக்குக்காக கிடைச்சது அப்படீங்கற டீட்டெய்ல்ட் குறிப்பு வச்சி அனுப்புவார். அதனால அவர் டெப்பாசிட் பண்ண எந்த செக்குமே அவரோட பர்சனல் அக்கவுண்ட்ல வரவு வைக்கப்படல. ஆனா நீங்க அப்படி செய்யாம இருந்திருப்பீங்க. இந்த பிராஞ்சில ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேல செக்குங்கள கஸ்டமர்ஸ் டெப்பாசிட் செய்றாங்க. அதுல ஒங்க செக்கும் ஒன்னாருக்கும். செக்குங்க கிடைச்சி ஒரு மணி நேரத்துக்குள்ள க்ளியரிங்ல ப்ரெசெண்ட் பண்ணணும். இதுல நீங்க ஒங்க கணக்குக்குன்னு செல்லான் எழுதி குடுத்தனுப்பற செக்க ஒங்க கணக்குல வரவு வைக்க வேண்டியதுதானான்னு செக் பண்ணவேண்டியது எங்க பொறுப்புன்னு சொல்லி நீங்க தட்டிக்கழிக்க முடியாது. அதான் எல்லா செக்கையும் ஒங்க கணக்குல வரவு வச்சிட்டாங்க.’

அவர் எகத்தாளமாக, ‘சார் ஒங்க பேங்க்லருக்கறவங்க மூளை இல்லாம செஞ்ச காரியத்துக்கு என்னெ ஏன் சார் குறை சொல்றீங்க?’ என்றார்.

இனி வாளாவிருந்து பயனில்லையென்று நினைத்த நான். ‘சரி சார், அவங்களுக்குத்தான் மூளையில்லை ஒத்துக்கறேன். நீங்க எப்படி சார் அவ்வளவு பணத்தையும் வரவு வச்சவுடனே வித்ட்ரா பண்லாம்? நீங்க டெப்பாசிட் பண்ண செக் அமவுண்டையெல்லாம் அப்படியே கணக்குல மெய்ண்டெய்ன் செஞ்சிரூந்திங்கன்னா நீங்க சொல்ற வாதம் சரி. ஆனா உண்மை அது இல்லையே.. சும்மா கோர்ட்ல பண்ற வாதத்தையெல்லாம் இங்க வச்சி பயனில்லை சார். நீங்க செஞ்சிருக்கற காரியம் சரியில்லைன்னு ஒங்களுக்கே தெரியும். கோர்ட்லருந்து வாங்குன பணம் முழுசையும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கட்டிருங்க. இல்லன்னா ஒங்க பேர்ல பார் கவுன்சில்க்கு புகார் அனுப்பவும் தயங்க மாட்டேன்.’ என்றேன் சூடாக. ‘அதுமட்டுமில்ல சார். நீங்க ஹேண்டில் செஞ்சிட்டிருக்கற எல்லா கேஸ்களோட கட்டையும் ரெண்டு நாளைக்குள்ள எனக்கு அனுப்பித்தரணும்.’

என்னுடைய பதிலில் இருந்த மிரட்டல் தொனியும் என்னுடைய கோபமும் அவரை எந்த அளவுக்கு கோபப்படுத்தியிருக்க வேண்டும் என்பதை அவருடைய உதடுகள் நடுங்குவதிலிருந்தே என்னால் உணரமுடிந்தது. பேச முயன்றும் வார்த்தைகள் வராமல் தடுமாறினார்.

‘சார்.. ஒங்க வயசு எனக்கு அனுபவம். முப்பது, முப்பத்தஞ்சி வருசத்துக்கும் மேல நான் இங்க ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கிறேன். ரெண்டு தடவ பார் கவுன்சில் தலைவரா இருந்திருக்கேன். என்னோட இண்டெக்ரிட்டிய சந்தேகப்படறா மாதிரி பேசிட்டீங்க. போட்டும். நீங்க சொன்ன ஒரு வாரம் என்ன சார், நாளைக்கே முழுப்பணத்தையும் கட்டிடறேன். இனிமே ஒங்க பேங்கோட கேசும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் சார். எங்கிட்டருக்கற கேஸ் கட்டுங்களையெல்லாம் நாளைக்கே குடுத்து விடறேன். நீங்களே என்ன வேணுமோ செஞ்சிக்கிருங்க. நான் ஒரு வார்த்தை சொன்னா போறும் கணேசனும் ஒங்க பேங்க்லருந்து விலகிருவார். அப்புறம் அந்த பொம்பளைய வச்சிக்கிட்டு நீங்க எப்படி கேசுங்கள நடத்தி ஜெயிக்கறீங்கன்னு நா பாக்கத்தான போறேன்.. ஒவ்வொரு கேசா தோக்கும்போது ஒங்க எச்.ஓவுக்கும் தெரியவரும். நான் வரேன்.’

கோபத்துடன் செல்லும் அவரை தடுத்து நிறுத்த தோன்றாமல் நான் அமர்ந்திருந்தேன். ஒருவேளை நான் அவரை தடுத்து நிறுத்துவேன் என்று எதிர்பார்த்தோரோ என்னவோ வாசலை நெருங்கியும் வெளியேறாமல் சிறிது நேரம் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

ஆனால் நான் இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கவே திரும்பி என்னை ஒருமுறை கோபத்துடன் முறைத்துப்பார்த்துவிட்டு வெளியேற நான் சிறிது நேரம் கழித்து எழுத்து வங்கி வாசலில் அமர்ந்திருந்த நைட் வாட்ச்மேன் உதவியுடன் முன்கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

அவர் உறுதியளித்திருந்தபடி நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த தொகையை ஒரு வார காலமாகியும் திருப்பி அடைக்காததால் முன்னறிவிப்பின்றி நான் அவரைக் குறித்து ஒரு விளக்கமான கடிதத்தை மதுரை வழக்கறிஞர் சங்கத்திற்கு ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பினேன்.

என்னுடைய புகாரின் பலன் அடுத்த இரு தினங்களிலேயே தெரிந்தது..

தொடரும்..

23 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 190

என்னுடைய கிளையிலிருந்து தொடுத்திருந்த வழக்குகளை கையாள்வதற்கு இரண்டு வழக்கறிஞர்களை வங்கி நியமித்திருந்தது.

அவ்விருவருமே நல்ல அனுபவம் மிக்கவர்கள். மதுரை வழக்கறிஞர்களுடைய ‘பார் கவுன்சிலின்’ மூத்த உறுப்பினர்கள்.

மொத்தமிருந்த சுமார் 125 வழக்குகளில் பெரும்பாலானவற்றை முத்துக்கருப்பன் என்பவரும் மற்றவற்றை கணேசன் (இரண்டுமே புனைப்பெயர்கள்) என்பவரும் கையாண்டு வந்திருந்தனர்.

அவர்களுள் முன்னவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த சமயத்தில் தான் அதிகம் வேலையிருந்ததுபோல் காண்பித்துக்கொண்டார். உண்மையிலேயே அவருடைய அலுவலகத்தை நான் சென்றடைந்தபோது நான்கைந்து வாடிக்கையாளர்கள் அவரை சந்திக்க காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவர் அபிநயித்த அளவுக்கு அவர் அத்தனை பிசியாக இல்லையென்பது மட்டும் தெரிந்தது. ‘சார் இன்னைக்கி திங்கக்கிழமை (அதான் தெரியுதே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்). சாதாரணமாவே திங்கக் கிழமைகள்ல நான் ரொம்ப பிசியா இருப்பேன். நீங்க சனிக்கிழமையே இன்னைக்கி வரேன்னு சொன்னதாலத்தான் நான் ஒங்கள பாக்க ஒத்துக்கிட்டேன். ஆனாலும் பாருங்க இன்னைக்கி ஹியரிங் வர்ற கட்டுங்களையெல்லாம் ஒருதரம் பார்க்கக்கூட எனக்கு நேரமில்லை. அதனால நீங்க நம்ம ஜூனியர் ஒருத்தர பார்த்து பேசிட்டு போங்க. நாம ரெண்டு மூனு நாள் கழிச்சி ஒருநாள் சாயந்தரமா சாவகாசமா சந்திச்சி பேசலாம்.’ என்று கழன்றுக்கொள்ள நான் முதல் நாளே வில்லங்கம் செய்யவேண்டாம் என்று நினைத்து நான் அவருடைய ஜூனியர் வழக்கறிஞரைச் சந்தித்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்கு சம்பந்தமாக  நான் முந்தைய இரண்டு நாட்களில் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை கொடுத்து, ‘எனக்கு இதுக்கெல்லாம் டீட்டெய்லா ஒரு ரிப்போர்ட் வேணும் சார்.’ என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.

அன்று மாலையே வழக்கறிஞர் கணேசனைம் சென்று சந்தித்தேன். அவர் முத்துக்கருப்பனைப் போலவே பிரபலமாயிருந்த வழக்கறிஞர் என்றாலும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே அவரிடம் உரையாடிக்கொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரை, ‘சார் ஒரு அரைமணி நேரம் காத்திருங்க. நான் இவரை அனுப்பிவிட்டு ஒங்கள கூப்பிடறேன்’ என்று சாமர்த்தியமாக அனுப்பிவிட்டு நான் சொல்ல வந்ததை முழுவதுமாக கேட்டு அவரே குறிப்பெடுத்துக்கொண்டார்.

‘சார். எனக்கு எங்க கேஸ் சம்பந்தப்பட்ட கட்டெல்லாம் வேணும். நானே அத படிச்சி பார்த்து ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணணும். ஒரு நாலு நாளைக்குள்ள திருப்பி தந்துருவேன்.’ என்றதும் ‘அதுக்கென்ன சார், தர்றேன்.’ என்று தன்னுடைய குமாஸ்தாவை அழைத்து, ‘சார் தான் நம்ம ----------க்கு வந்திருக்கற புது மேனேசர். இவங்க சம்பந்தப்பட்ட கேஸ் கட்டுகளையெல்லாம் கலெக்ட் பண்ணி ஒரு லிஸ்ட் போட்டு நாளைக்கு நீங்களே பேங்க்ல கொண்டு போய் குடுத்திட்டு அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கிட்டு வந்துருங்க. அப்புறம் திருப்பி வாங்கிக்கலாம். மறந்துராதீங்க. நாளைக்கு கொண்டு கொடுக்கணும்..’ என்று உத்தரவிட்டுவிட்டு, ‘வேற ஏதாச்சும் வேணுமா சார்?’ என்றார் புன்னகையுடன்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு திரும்பினேன்.

அவர்கள் இருவரிடமும் பேசிவிட்டு திரும்பும்போதே இருவரைப் பற்றியும் லேசாக கணிக்க முடிந்தது.

நான் என்னுடைய அலுவலகம் திரும்பி நான் குறித்துவைத்திருந்த குறிப்புகளை என்னுடைய கிளையிலிருந்த வழக்கு சம்பந்தப்பட்ட புத்தகங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன்.

வழக்கு தொடரப்பட்டிருந்த சுமார் 125 வழக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் வங்கிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் 95% வழக்குகளில் தீர்ப்பின் நகல் பெறப்பட்டு Execution Petition எனப்படும் தீர்ப்பை செயல்படுத்து மனுவை வங்கி குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே சமர்ப்பித்திருந்தது.

ஏறத்தாழ எல்லா கணக்குகளுக்கும் ஒரு அரசு ஊழியரின் ஜாமீன் இருந்ததால் அவர்களுடைய மாத வருமானத்திலிருந்து ஒரு பகுதியை மாதத் தவணையாக பிடித்து வங்கிக்கு அடைக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தன. ஆகவே, நீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட ஜாமீந்தாரர்கள் பணியாற்றிவந்த அரசு இலாக்கா அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமை வங்கியின் வழக்கறிஞர்களுக்கு இருந்தது.

வழக்கறிஞர் கணேசன் தன்னுடைய அலுவலை சரிவர செய்திருந்தபடியால் உத்தரவு வழங்கப்பட்டிருந்த எல்லா அரசு அதிகாரிகளிடமிருந்தும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி தவணைத் தொகை பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்தது.

இப்படி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்ட தொகையை பெற வங்கியின் சார்பில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மனு செய்யவேண்டும் என்பது நியதி. அதை அவர் குறிப்பிட்ட காலத்தில் என்னுடைய முந்தைய மேலாளரிடம் கையொப்பம் பெற்று நீதிமன்றத்தில் அவ்வப்போது சமர்ப்பித்து கிடைத்த காசோலையை வங்கியில் உடனே செலுத்தியிருந்ததையும் பார்த்தேன்.

ஆனால் முத்துக்கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து எந்த தொகையும் பெறப்படாமலிருந்ததால் எனக்கு அவருடைய நடவடிக்கையைப் பற்றி பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே அன்றே அமர்ந்து அவருக்கு ஒரு நீண்ட தெளிவான கடிதத்தை எழுதி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகள் சம்பந்தமான கேஸ் கட்டுகளை உடனே வங்கி அலுவலகத்துக்கு கொடுத்தனுப்பும்படி அனுப்பினேன்.

வழக்கறிஞர் கணேசனுடைய அலுவலகத்திலிருந்து அடுத்த நாளே அவருடைய குமாஸ்தா அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த எல்லா வழக்குகளின் கோப்பையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்ல முத்துக்கருப்பன் ஒரு வாரத்திற்கு மேலாகியும் என்னுடைய கடிதத்திற்கு பதிலும் அனுப்பாமல் இருந்தார்.

அவரைப் பற்றி என்னுடைய வாடிக்கையாளர்களில் சிலரிடம் விசாரித்ததில் அவர் மதுரையிலேயே பிரபலமாயிருந்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்றும் அரசியலிலும் செல்வாக்கு வாய்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

ஆக, அவரை என்னுடைய வழிக்கு கொண்டுவருவது அத்தனை எளிதல்ல என்பது தெளிவாகியது.

வழக்கறிஞர் கணேசனும் அவரைப் பற்றி ஒன்றும் கருத்து கூற விரும்பவில்லை என்று கழன்றுக்கொண்டார்.

அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்த தொகையையும் தோராயமாக கணக்கிட்டு பார்த்தபோது நீதிமன்றத்திலிருந்து பெறப்படவேண்டிய தொகை கணிசமானாதாக தோன்றவே அவர் அவற்றை நீதிமன்றத்திலிருந்து வங்கியின் சார்பாகவே பெற்றிருந்தாரா இல்லையா என்பதை கண்டுபிடித்தால்தான் ஆயிற்று என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இதைக் குறித்து என்னுடைய கிளையிலிருந்த எந்த அதிகாரிக்கும் தெரியாததால் திண்டுகல்லுக்கு மாற்றலாகிப் போயிருந்த அந்த பெண் அதிகாரியை தொலைப்பேசியில் அழைத்தேன். அவரும் ‘எனக்கு ஒன்னும் தெரியாது சார். மேனேசர்தான் வக்கீல பாக்க போவார். எங்கிட்ட ஒன்னும் டிஸ்கஸ் பண்ண மாட்டார் சார்.’ என்று ஒதுங்கிக்கொள்ள ஆந்திர கிளைகள் ஒன்றில் மேலாளராக இருந்த என்னுடைய முந்தைய மேலாளரை அழைத்தேன்.

‘எனிக்கொன்னும் பிடி இல்லையா கேட்டோ..  முத்துக்கருப்பன் ஒரு ஃப்ராடான.. அது மட்டும் அறியாம். நீயே போய் கேட்டுக்கோ.’ என தமிழில் பாதி மலையாளத்தில் பாதியுமாக கூறிவிட்டு என்னுடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டிக்க நான் மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன்.

ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும் என்றார்போல் நான் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு தீர்வு கிடைத்தது.

அடுத்த இரண்டு வாரங்களில் ஒருநாள் மாலை ஒரு கணவன் -– மனைவி ஜோடி என்னை வந்து சந்தித்தது.

அந்த பெண்ணுடைய கணவன் என்று மதிப்பிடமுடியாத வயதான தோற்றத்தில் ஆணும் அவருடைய மனைவியா என்று வியப்படையும் விதத்தில் மிக இளைய வயதும், அழகும் கொண்ட பெண்ணும் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஜோடி!

பிறகுதான் தெரிந்தது அவர் இரண்டாவது மனைவி என்று.

சரி அது நமக்கு முக்கியமில்லை.

கணவர் தான் கொண்டுவந்திருந்த மூடப்பட்டிருந்த ஒரு காகிதக் உறையை என்னிடம் நீட்டினார்.

அதனுள் அவருடைய மனைவியை என்னுடைய கிளையின் வழக்கறிஞராக நியமித்து என்னுடைய தலைமையகம் அவருக்கு அனுப்பியிருந்த உத்தரவின் நகல் இருந்தது. அதில் உத்தரவின் வேறொரு நகல் எனக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்படியொரு நகல் என்னுடைய கிளைக்கு வந்ததாக எனக்கு நினைவில்லாததால், ‘இந்த ஆர்டர் காப்பி எனக்கு இன்னும் வரலீங்க.’ என்றேன். ‘அதனால பரவாயில்ல¨. சொல்லுங்க. நா இப்ப என்ன செய்யணும்?’ என்றேன்.

அப் பெண் வழக்கறிஞர் தன்னை தேவகி (புனைப் பெயர்) என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘சார் நான் எல்.எல்.பிதான்னாலும் கோயம்புத்தூர்லருந்தப்போ ஒங்க பேங்க் கேஸ்லல்லாம் ஆஜராகியிருக்கேன். அங்கருந்த நிறைய கேஸ்ங்கள்ல ஈ.பி (Execution Petition) ஃபைல் பண்ணாமயே இருந்துது. கேஸ் டீல் பண்ண வக்கீல்ங்க ஈ.பி. ஃபைல் பண்றதுல பெருசா ஃபீஸ் கிடைக்காதுன்னு இதுல அக்கறையே காட்ட மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். அத நா எடுத்து சொன்னப்பதான் ஒங்க ஜோனல் மேனேஜருக்கே தெரிஞ்சிது சார். ஏறக்குறைய முன்னூறு கேசுங்கள்ல நானே ஈ.பி ஃபைல் பண்ணி அமவுண்ட கோர்ட்லருந்து வாங்கி குடுத்துருக்கேன். இப்ப இவருக்கு இங்க டிரான்ஸ்ஃபர் ஆயிட்டதால இங்க ஷிஃப்ட பண்ணி வந்துருக்கோம். ஒங்க கோயம்புத்தூர் ஜோனல் மேனேஜர்தான்  ஒங்கள எங்க மதுரை பிராஞ்சுக்கு வக்கீலா அப்பாய்ண்ட்மெண்ட் செய்ய ரெக்கமெண்ட் பண்றோம்னு சொல்லியிருந்தாங்க சார்.’ என்றார் விளக்கமாக.

அட! நமக்கேத்த ஆள் வந்தாச்சி என்று நினைத்து அவரிடம் கடந்த் இரு வாரங்களில் நான் செய்த முயற்சிகளை அவரிடம் விவரித்து முத்துக்கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளில் அவர் ஈ.பி ஃபைல் செய்திருந்தாரா, அப்படி செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த தொகை என்னவாயிற்று என்று விசாரித்து கூற முடியுமா என்று கேட்டேன்.

அவர் உடனே, ‘நிச்சயமா சார். எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க. நான் விசாரிச்சி சொல்றேன்.’ என்றார் உற்சாகத்துடன்.

நானும் மகிழ்ச்சியுடன், ‘அப்படி மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா இனி கொஞ்சம் கொஞ்சமா எல்லா கேஸ்கள்லயும் ஈ.பி ஃபைல் பண்ற பொறுப்ப ஒங்கக்கிட்டயே குடுக்கறதுக்கு நான் பொறுப்பு.’ என்றேன்.

இருவரும் விடைபெற்றுக்கொண்டு செல்ல நான் உருப்படியாய் ஒரு காரியம் இன்று செய்து முடித்தோம் என்ற திருப்தியுடன் என்னுடைய அலுவல்களைப் பார்க்க துவங்கினேன்.

அவர் கூறியிருந்தபடியே அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்றத்திலிருந்தவர்களை எப்படியோ வளைத்துப் போட்டு நான் கேட்டிருந்த எல்லா தகவல்களையும் சேகரித்து அவர் தயாரித்த ஒரு நீண்ட பட்டியலுடன் என்னை வந்து சந்தித்தார்.

நான் அவரை வரவேற்று அமர்த்தி அவர் அடுத்த பத்து நிமிடங்கள் தான் அதுவரை செய்து முடித்திருந்தவற்றை விவரித்து முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டேன்.

அவர் கூறிய விஷயங்களையே நம்பமுடியாமல் நான் மலைத்துப் போய் அமர்ந்திருக்க இறுதியில் அவர் கைவசம் கொண்டிருந்த நீண்ட பட்டியலை என் மேசையில் விரித்தபோது அசந்து போனேன்.

முத்துக்கருப்பன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருந்த அத்தனை தொகையையும் கடந்த ஒரு வருட காலமாக உடனுக்குடன் வங்கியின் சார்பாக மனுக்களை சமர்ப்பித்திருக்கிறார். நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காசோலைகளின் பணத்தை வங்கியில் கட்டாமல் கையாண்டிருக்கிறார் என்பதையும் கண்டேன்.

அவர் அதுவரை நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த தொகையைக் கண்டதும் மலைத்துப்போய் இதை அவரிடமிருந்து எப்படி வசூலிப்பது என்ற சிந்தனையில் அதிர்ந்துபோனேன்.

‘இதுக்கு ஒங்களால ஏதாச்சும் செய்ய முடியுமா தேவகி? (சார் என்னெ தயவு செஞ்சி மேடம்னு கூப்டாதீங்க என்று கேட்டிருந்தார்)’ என்றேன்.

அவர் வருத்தத்துடன், ‘சாரி சார். முத்துக்கருப்பன் நான் செஞ்சிருக்கறத கேள்விப்பட்டார்னா என்னெ பார் கவுன்சில்லருந்தே தூக்கறதுக்கு ட்ரை பண்ணுவார். இதுல அவர் கலெக்ட் பண்ணிருக்கற தொகைய நான் போய் கேட்டேன்னு வச்சிக்குங்க.. அவ்வளவுதான், நா இந்த ஊர்ல ப்ராக்டீசே பண்ண முடியாதபடி ஏதாச்சும் செஞ்சாலும் செஞ்சிருவார். அவரப்பத்தி நா கேட்டிருக்கறத வச்சி சொல்றேன். இத நீங்களே க்ளெவர டீல் பண்றதுதான் நல்லது.’ என்று விடைபெற்றுச் செல்ல என்னடா இது நாயர் புடிச்ச புலிவாலாயிருச்சே.. இப்ப என்ன பண்றது என்ற யோசனையில் நேரம் போனது தெரியாமல் அமர்ந்திருந்தேன், ‘என்ன சார் வீட்டுக்கு போகலையா?’ என்று என்னுடைய இரவு வாட்ச் மேன் வந்து கேட்கும் வரை.

தொடரும்..

     

22 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 189

மதுரை கிளையின் மொத்த வர்த்தகம் தூத்துக்குடி கிளையிலிருந்த வர்த்தகத்தை விட இரு மடங்குக்கும் கூடுதல்.

அதுபோலவே சிக்கல்களும் அதிகம் இருந்தன.

சாதாரணமாக வர்த்தகம் மற்றும் தொழில் துவங்கவும், விரிவுபடுத்தவும் வழங்கப்படும் கடன்கள் ஓவர்டிராஃப்ட் என ஓராண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதுண்டு.

வர்த்தக/தொழில் நிறுவனங்களின் நிதி நிலமை, கடன் கணக்கில் நடத்தப்பட்டிருக்கும் வரவு, செலவு ஆகியவற்றையின் அடிப்படையில் மட்டுமே அவை புதுப்பிக்கப்படும்.

ஆகவே ஒவ்வொரு வருடமும் புதிதாக வழங்கப்படும் கடன்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு புதிப்பிக்கப்பட வேண்டிய கணக்குகளையும் காலாகாலத்தில் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.

கிளை மேலாளரின் அதிகாரத்துக்குட்படாத கடன்  கணக்குகளை புதுப்பிக்க அதற்கென குறிக்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்திசெய்து கடன் பெற்றிருந்த நிறுவனத்தின் வருடாந்தர நிதியறிக்கையுடன் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.

மதுரைக் கிளையில் எனக்கு முன்பிருந்த இரு மேலாளர்களும் புதிதாக கடன் வழங்குவதில் குறியாயிருந்தனரே தவிர அதற்கு முன்பிருந்த மேலாளர் வழங்கிய கடன்களை புதுப்பிக்க எந்தவித முயற்சியும் செய்யாததால் அதுவே வங்கியின் ஆய்வாளர்களுடைய கணிப்பில் கிளையின் ஒட்டுமொத்த கணிப்பு கீழிறங்கியிருந்தது.

அத்துடன் கிளை துவக்கப்பட்டு பதினைந்தாண்டுகள்  ஆகியிருந்ததால் வழக்குத் தொடரப்பட்ட கணக்குகளும் இருந்தன. இத்தகைய கணக்குகளைப் பராமரிப்பது பெரிய தலைவலி.

வழக்குகள் தொடரப்பட்டுவிட்டபிறகு அவை எப்போது நீதிமன்றத்தின் விசாரனைக்கு வருகின்றன, அப்போதெல்லாம் வங்கியின் வழக்கறிஞர் தவறாமல் ஆஜராகிறாரா, பிரதிவாதிகளின் தரப்பில் வைக்கப்படும் வாதங்களை சரியான முறையில் எதிர்கொள்கிறாரா, விசாரனை முடிந்துவிட்டதென்றால் தீர்ப்பு தேதி எப்போது, தீர்ப்பு வங்கிக்கு சாதகமாக வந்திருக்கும் பட்சத்தில் அதை செயல்படுத்த வழக்கறிஞர் நடவடிக்கை எடுத்துள்ளாரா, வங்கிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அதை எதிர்த்து அப்பீல் மனு குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்கப்படுகிறதா என பல நிலைகளிலும் மேலாளர் கவனமாக இருக்க வேண்டும்.

ஓரிரண்டு வழக்குகள் இருந்தாலே மண்டை காய்ந்துவிடும். இந்த லட்சணத்தில் மதுரை கிளையில் இத்தகைய கணக்குகள் நூற்றுக்கும் மேல் இருந்தன.

பதினைந்து வருடத்தில் இத்தனை கணக்குகள் எப்படி என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அதற்கு காரணம் இருக்கிறது.

வங்கி மதுரையில் துவக்கப்பட்ட முதல் ஐந்தாண்டுகள் மேலாளராக இருந்தவர் ஒரு ஆடம்பரப் பிரியர். எதையுமே க்ராண்டாக (grand) செய்யவேண்டும் என்று நினைப்பவர். கிளை இருந்த கட்டடம் அப்போது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாயிருந்த ஒரு லாட்டரி சீட்டு விற்பனையாளருக்கு சொந்தமானது.

அவருக்கு அன்று ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சி பிரமுகர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது. அவருடைய தொடர்பு எங்களுடைய மேலாளருக்கும் அரசியல் சூதாடிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

‘சார் ஒங்களுக்கு நம்ம தலைவர்கிட்ட சொல்லி கவர்ன்மெண்ட் ·பண்ட்ஸ் டெப்பாசிட்டா வாங்கித் தரோம்’ என்று  அவர்கள் நம்முடைய மேலாளருக்கு ஆசையை ஊட்டி வளர்த்திருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் சிறியதொரு கிளையில் மேலாளராக இருந்துவிட்டு தமிழகத்திற்கு முதன்முதலாக மாற்றலாகி வந்திருந்தவர் அவர்களுடைய போலி வார்த்தைகளை நம்பி அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றிருக்கிறார்.

அவர்கள் அவரிடமிருந்து கறக்க வேண்டியதையெல்லாம் கறந்துவிட்டு கடைசியாக ஒரு அஸ்திரத்தை பிரயோகித்திருக்கின்றனர். ‘சார் வர்ற மாசம் நம்ம தலைவர் முதல்வரா பதவியேற்று முதல் வருசம் பூர்த்தியாவுது. நீங்க அன்னைக்கி ஒரு நூறு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கறதுக்கு கடன் குடுத்தீங்கன்னா தலைவரோட கவனத்த இழுத்துரலாம். இந்த நிகழ்ச்சிக்கு தலைவர கூப்பிட நீங்களும் மெட்றாசுக்கு எங்கக் கூட வாங்க. நீங்களே நேர்ல கூப்பிட்டா தலைவர் நிச்சயம் வருவார். விழா முடிஞ்சதும் நீங்களே கவர்ன்மெண்ட் டெப்பாசிட்ட கேட்டீங்கன்னா தலைவரே உடனே கூட வர்ற அதிகாரிங்கக் கிட்ட சொல்லிருவாரு. அப்புறம் சம்பந்தப்பட்ட அதிகாரிங்கக் கிட்ட பேசி அவங்களுக்கு குடுக்க வேண்டியத குடுத்து டெப்பாசிட்ட வாங்கிரலாம் சார்.’

நம் நண்பருக்கு உச்சி குளிர்ந்து போயிருக்க வேண்டும். அவர் அப்போதிருந்த சேர்மனுக்கு தூரத்து உறவாக வேறு இருந்தார். பிறகென்ன தலா ரூ.1500/- வீதம் நூறு பேருக்கு கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது.

அக்கட்சியைச் சார்ந்த மதுரை பிரமுகர்கள் புடைசூழ காரில் சென்னை சென்றார் நம் நண்பர். ஒரு வாரகாலம் அன்று சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட ச்சோழா நட்சத்திர விடுதியில் கட்சி பிரமுகர்களை தன் சொந்த செலவில் உபசரித்து, ‘தலைவர் கட்சி மாநாட்டு வேலையில பயங்கர பிசியாம் சார். நம்ம மதுரை வட்ட தலைவர வச்சி விழா நடத்திக்குங்க. மெனேசருக்கு டெப்பாசிட் குடுக்கறதுக்கு நா ஒடனே ஆர்டர் போடச் சொல்றேன்னு தலைவரே சொல்லிட்டார். வாங்க ஊருக்கு போய் ஆகவேண்டிய வேலைய பார்ப்போம்.’ என்றபோதாவது நம் நண்பருக்கு உரைத்திருக்க வேண்டும்.

கோடிக் கணக்கில் கிடைக்கப் போகிற டெப்பாசிட் தொகை அவருடயை கண்ணையும் மூளையும் மறைக்க கட்சியின் அப்போதைய மதுரை மாவட்ட முக்கியமான பிரமுகர் ஒருவரின்  தலைமையில் நடந்த அட்டகாசமான விழாவில் மேடையில் வைத்து  இருபத்தைந்து பேருக்கு  ரிக்ஷா  வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கும் அடுத்த ஒரு மாத காலத்தில் கடன் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

கடனை ரொக்கமாக பெற்றவர்களும் சரி விழா மேடையில் ரிக்ஷாவாக பெற்றவர்களும் சரி திருப்பியடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றவர்களல்ல என்பது நம்முடைய நண்பருக்கு தெரியவந்தபோது அவருடைய நிலமையே மோசமாகி போய்விட்டிருந்தது.

அரசு பணத்தை டெப்பாசிட்டாக பெறலாம் என்ற அவருடைய கனவும் கனவாகவே போக மனிதர் அதற்கென வங்கியிலிருந்து நியதிகளுக்கு புறம்பாக எடுக்கப்பட்டிருந்த தொகையும் முழுவதுமாக கரைந்து போனபிறகுதான் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது விளங்கியிருக்கிறது.

அப்போதைய சேர்மனுக்கு உறவுக்காரராக இருந்தும் கடுமையாக தண்டிக்கப்பட்டார். வேலை போகாமல் தப்பித்ததே பெரிய விஷயம்.

நல்ல வேளையாக அவரைத் தொடர்ந்து வந்த மேலாளர் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த தமிழர். பயங்கரமான புத்திசாலி. அவர் பொறுப்பேற்ற சமயத்தில்தான் முந்தைய மேலாளர் கொடுத்திருந்த அத்தனை கடன்களும் வழக்கு தொடரப்பட வேண்டிய கட்டத்தை நெருங்கியிருந்தன.

அவரும் கோவை மாவட்டத்திலிருந்த அரசியல் செல்வாக்குள்ளவர்களுடைய தொடர்புள்ளவர் என்பதால் அவர்கள் வழியாக கடன் பெற்றிருந்த அனைவரையும் சுற்றி வளைத்து அவர்கள் வழியிலேயே சென்று நயமாக பேசி வழக்கு தொடராமலிருக்க ஒவ்வொரு கடனுக்கும் ஒரு அரசு ஊழியருடைய ஜாமீன் என்ற கணக்கில் ஏறத்தாழ எல்லா ரிக்ஷா கடன்களுக்கும் ஜாமீன் பெற்று எங்களுடைய தலைமையகத்திலிருந்து கடன்களை மேலும் ஓராண்டுக்கு நீட்டி உத்தரவு பெற்றிருக்கிறார்.

ஜாமீன் பெற்றபோதே அவர்கள் கடனை எப்படியும் திருப்பி அடைக்க போவதில்லை என்பதை அறிந்திருந்தவர் சரியாக ஒருவருடம் காத்திருந்து முன்னறிவிப்பின்றி எல்லா கடன்களையும் வசூலிக்க பெரும்பாடுபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வங்கிக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டபோது அவர் மாற்றலாகி சென்றுவிட தீர்ப்புகளை செயலாக்கி கடனை வசூலிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு பின் வந்த இரு மேலாளர்கள் தலையிலும் விழுந்திருக்கிறது.

ஆனால் மதுரைக்கு மாற்றலாகி வந்ததே ஒருவிதத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்று நினைத்திருந்த இருவருமே உள்ளூர் மொழி தெரியவில்லையென்பதை சாக்காக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்ட கணக்குகளை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

இதுவும் மதுரைக் கிளை unsatisfactory என்ற கணிப்பிடப்பட ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

நான் சென்னை மத்திய கிளையில் பணியாற்றிய காலத்தில் இத்தகைய வழக்குகளை கையாண்ட அனுபவம் இருந்தது. இது அப்போது எனக்கு மேலாளராக இருந்த இப்போதைய சேர்மனுக்கு நன்றாக தெரியும். அதுவே என்னை மதுரைக்கு மேலாளராக நியமிக்க அவரை தூண்டியிருக்கவேண்டும் என்பது அப்போதுதான் எனக்கு விளங்கியது.

‘நீங்க பிராஞ்சோட பிசினஸ பல மடங்கு வளர்ப்பீங்கங்கறதுக்காக ஒங்கள போடல ஜோசஃப். I want you to concentrate on house keeping and follow up of the suit filed accounts. நீங்க தூத்துக்குடியில செஞ்ச மாதிரியே இங்கயும் செய்வீங்கன்னு நினைச்சித்தான் நானே ஒங்க பேர ப்ரொப்போஸ் செஞ்சேன்..’ நான் மதுரைக் கிளைக்கு பொறுப்பேற்றதும் என்னுடைய சேர்மனை தொலைப்பேசியில் அழைத்தபோது அவர் கூறிய அறிவுரை.

ஆக, அதுதான் என்னுடைய முதல் பணி என்பதை உணர்ந்த நான் அவ்வார இறுதியில் அவ்வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை திரட்டி மூட்டையாய் கட்டி என் சிப்பந்தி ஒருவர் மூலம் வீட்டுக்கு கொண்டு சென்றேன்.

அவ்வார சனிக்கிழமை பகல் என் மனைவியையும் இரு மகள்களையும் தூத்துக்குடிக்கு பேருந்தில் ஏற்றிவிட்டு விட்டு அன்றும் அடுத்த நாளும் கண்விழித்து எல்லா கோப்புகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. அந்த வயதில் அத்தனை மூர்க்கத்தனமாக இருந்தேன் என்னுடைய அலுவலக விஷயத்தில்.

அடுத்த திங்கட் கிழமை முதல் காரியமாக அவ்வழக்குகளை பொறுப்பேற்று நடத்திய எங்களுடைய வங்கியின் இரு வழக்கறிஞர்களை தொலைப்பேசியில் அழைத்து அன்று மாலையே அவர்களை சந்திக்க வருவதாக கூறிவிட்டு அவர்கள் இருவரில் மூத்தவரை முதலில் சென்று சந்தித்தேன்.

தொடரும்
17 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 188

எங்களுடைய மதுரை கிளை அப்போது மேல மாசி வீதியில் இருந்தது.

துவக்க முதலே கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்களே மேலாளர்களாக இருந்துவந்திருந்தனர் - ஒரேயொருவரைத் தவிர. அவர் கோவையில் இருந்த பெரும்பான்மையினத்தைச் சார்ந்தவர். வர்த்தகம் செய்வதில் வித்தகர். நேர்மையானவர். திறமையானவர். கடின உழைப்பாளி.

அவர் இருந்த சமயத்தில் கிளையின் வர்த்தகம் பன்மடங்கு உயர்ந்திருந்தது என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த இரு மேலாளர்கள் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

அவர்கள் இருவரும் மேலாளர்களாகவிருந்த சுமார் நான்காண்டு காலத்தில் கிளையின் வர்த்தகம் குறைந்ததுமல்ல internal housekeeping என்பதும் முற்றிலுமாக சீர்குலைந்து போயிருந்தது.

நான் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்திருந்த உள் (Internal) மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆய்வில் (Inspection) unsatisfactory என்ற ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்த மிகச் சில கிளைகளில் அதுவும் ஒன்றாயிருக்கவே அக்கிளை வங்கி சேர்மனின் நேரடி பார்வையில் கொண்டுவரப்பட்டிருந்தது.

எங்களுடைய வங்கியின் அப்போதைய சேர்மன் சென்னை மத்திய கிளையில் முதன்மை மேலாளராக இருந்த சமயத்தில் துணை மேலாளராக ஆறு மாத காலம் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஆகவே வீட்டிற்கு சென்று என்ன செய்வது என்ற நினைப்பில் வங்கிலேயே இரவு ஒன்பது மணி வரை இருந்து அலுவல்களை முடிப்பேன்.

கணினி என்ற நாமமே இல்லாதிருந்த காலம் அது. ஆகவே தினசரி அலுவல்களை முடித்துவிட்டுத்தான் வீடு திரும்ப வேண்டும் என்றால் இரவு பத்துமணி வரை அமர்ந்தாலும் முடியாது. அப்போது சென்னை பாரீஸ் கார்னரிலிருந்து நான் வசித்து வந்திருந்த பெரம்பூர் பகுதிக்கு கடைசி பல்லவன் பேருந்து 9.15 மணிக்கு. அதை விட்டுவிட்டால் நடராஜா சர்வீஸ்தான். சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் நடப்பதென்பது இயலாத காரியம் அல்லவா? ஆகவே வேலை முடிந்தாலும் முடியாவிட்டாலும் சரியாக ஒன்பது மணிக்கு நானும் என்னுடைய கணக்காளராக (Accountant) பணியாற்றிய என் நண்பரும் வங்கியின் முகப்பு ஷட்டர் கதவை இழுத்து மூடிவிட்டு ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தத்தை அடைவோம்.

என்னுடைய கடின உழைப்பை(!) பார்த்து என்னுடைய மேலாளர் அப்போதே சொல்வார், ‘TBR, take it from me.. You are destined to go to the top in your career.’ என்பார் பெருந்தன்மையுடன். நிதானமாக எதையும் சிந்தித்து மிகச் சரியான முடிவெடுப்பதில் மன்னர். எங்களுடைய வங்கியில் அடிப்படை அதிகாரியாக (Junior Officer) சேர்ந்து வங்கியின் முதல்வராக (Chairman) உயர்ந்த ஒரே அதிகாரி அவர். எனக்கு தெரிந்து இந்திய வங்கிகளில் அடிப்படை அதிகாரியாக சேர்ந்து அதே வங்கியில் சேர்மனாக பதவியமர்த்தப்பட்டவர்கள் மிக, மிகச் சிலரே. அவர்மேல் எனக்கு அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.

ஆகவே அவரே என்னுடைய பெயரை நினைவு கூர்ந்து மதுரை கிளைக்கு மேலாளராக நியமித்தபோது அவர் என்மேல் வைத்திருந்த நல்லெண்ணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன்.

நான் மதுரைக்கு மாற்றலான விஷயத்தை என்னுடைய தாய்க்கு கடிதம் மூலம் அறிவித்தபோது அவரிடமிருந்து இப்படி பதில் வந்தது. ‘நீ பிறந்த ஊர்ல கொஞ்ச நாள் வேலை செய்யணுங்கறது கடவுள் சித்தம் போல.. கவனமா செய். உங்கப்பா வீட்டாளுங்க அங்கதான் இருக்காங்க. மறக்காம போய் பார்.’ என்று ஞானஒளி புரத்தில் என் தந்தையின் மைனி (எனக்கு பெரியம்மா. பெரியப்பா காலமாயிருந்தார்) மற்றும் அரசரடியில் வசித்து வந்த என் தந்தையின் ஒரே சகோதரி (என் அத்தை)ஆகியோருடைய விலாசத்தையும் எழுதியிருந்தார்.

என்னுடைய முந்தைய மேலாளரும் அரசரடியில்தான் குடியிருந்தார். அந்த வீடு என்னுடைய வங்கியின் பெயரில் லீஸ் எடுக்கப்பட்டிருந்ததால் நானும் அவரைத் தொடர்ந்து அங்கேயே வசிக்க முடிந்தது. தூத்துக்குடியில் எதிரும் புதிருமாக இருந்த இரு சாதியினர்களில் ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் அவ்வீட்டின் உரிமையாளர்கள். அதைப் பற்றி பிறகு..

அதே பகுதியில் வசித்து வந்த என்னுடைய அத்தையின் வீட்டை நான் மதுரை வந்த அதே வாரத்தில் தேடிப்பிடித்தேன். அவரும் ஒரு மகளிர் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். ஆனால் அது ஒரு கிறிஸ்த்துவ பள்ளியென்றாலும் அரசு பள்ளியென்பதால் (Government aided school) என் மகளை அங்கு சேர்க்க நான் விரும்பவில்லை

அப்பகுதியில் என் மகள் படிக்க ஏதுவாக வேறு பள்ளிகள் இல்லாததால் சற்று தள்ளியிருந்த ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு சேர்த்தேன். மூன்றாவது வகுப்பிற்கு இடம் கிடைக்கவே இத்தனை சிரமமா என்று நொந்துபோனேன்.

ஒருவழியாக என்னுடைய பெர்சனல் தேவைகளான பள்ளி சேர்க்கை, கேஸ் இணைப்பு, இத்யாதி, இத்யாதிகளை செய்து முடிக்கவே முதல் ஒரு வாரம் போனது.

இருந்தாலும் இக்காரியங்களில் கவனத்தை செலுத்தி கூடிய விரைவில் செய்து முடிக்காவிட்டால் அலுவலக வேலைகளில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாமலே போய்விடும் என்பதால் அலுவலகத்திலிருந்து ஒரு நான்கு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவற்றை முடித்தேன். என் மகளுடைய பள்ளி நான் குடியிருந்த இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தாலும் வீட்டினருகிலிருந்தே பள்ளி பேருந்து வசதியிருந்ததால் முதல் இரண்டு நாட்கள் மட்டும் காலையில் பேருந்து வரை கொண்டு சென்றேன். அதன் பிறகு என் மகளே செல்ல பழகிக்கொண்டாள். அத்தனைச் சமர்த்து! பள்ளியிலும் சேர்ந்த ஒரே வாரத்தில் நண்பர்களைப் பிடித்துக்கொண்டாள். படிப்பிலும் சுட்டி என்பதால் அவளைப் பற்றி நான் கவலைப்பட தேவையிருக்கவில்லை.

என் மனைவியும் அப்படித்தான். குடும்பத்தை நடத்திச் செல்ல என்னுடைய உதவி அவருக்கு எப்போதுமே தேவையிருக்கவில்லை. திருமணமான புதிசிலும் நான் வீடு திரும்பவே இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிடும். தூத்துக்குடி போன்ற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தபோதே தன்னந்தனியாக நாள் முழுவதும் தன்னந்தனியாக இருக்க வேண்டி வந்தபோதும் எந்தவித புகாரும் கூறமாட்டார்.

அதுவும் மதுரை கிளை இருந்த நிலையில் முதல் ஆறுமாதம் இரவு பதினோரு மணிக்கு முன்னர் நான் வீடு திரும்பியதே இல்லை. அத்தனை குளறுபடிகளை என்னுடைய முந்தைய இரு மேலாளர்களும் செய்து வைத்திருந்தனர்.

அவர்களுக்கு முன்னர் இருந்த தமிழ் மேலாளர் வர்த்தகத்தை பன்மடங்கு விரிவாக்கியிருந்ததும் அதற்குப் பிறகு இத்தகைய கிளைய¨ நிர்வகித்திராத, உள்ளூர் மொழி மற்றும் இடம் பழக்கமில்லாத மேலாளர்கள் பொறுப்பில் இருந்ததுமே இதற்கு முக்கிய காரணம்.

கிளை பஜாருக்கு மத்தியில் இருந்ததாலும் மேல மாசி வீதியிலும் அதைச் சுற்றியும் இருந்த வர்த்தக நிறுவனங்களில் பெரும்பாலானவை அந்த தமிழ் மேலாளருடைய சமூகத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்பட்டவை என்பதாலும் அவருடைய சாமர்த்தியத்தையும் பழக்கத்தையும் விரும்பி பலரும் தங்களுடைய வர்த்தக கணக்கை எங்களுடைய கிளையில் வைத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்கு வர்த்தக கடன்களையும் (overdraft) கொடுத்திருந்தார். அவர் இருந்த நேரத்தில் அவற்றில் எந்தவித குளறுபடிகளும் இருக்கவில்லை. அவர் நேர்மைக்கு பெயர்போனவர் என்பதால் அவர் தெரிந்தெடுத்திருந்த அத்தனை வாடிக்கையாளர்களும் எங்களுடைய வர்த்தக பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் highly valuable customersஆக இருந்தனர்.

ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த மேலாளர்கள் கேரளத்திலும் சின்ன சின்ன ஊர்களில் அதுவும் deposit oriented கிளைகளிலும் மேலாளர்களாக பணிபுரிந்திருந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு வர்த்தக கடன்களை வினியோகிக்கும் விதமோ அல்லது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த கணக்குகளை பராமரிக்கும் விதமோ சரிவர தெரியாமலிருந்தது.

அதுவும் எனக்கு முன்னாலிருந்த மேலாளர் செல்வந்தர் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலை இல்லை. ஆகவே மெனக்கெட்டு எதையும் செய்ய விரும்பாமல் அப்படியே சமாளித்துக்கொண்டிருந்தார்.

உண்மையில் சொல்லப் போனால் அவருக்குக் கீழ் கடைநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்து நான்கு வருடங்களே ஆகியிருந்த உள்ளூரைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரிதான் அக்கிளையை நிர்வகித்து வந்திருந்தார். அவருக்கு மேல், துணை மேலாளராகவிருந்தவரும் கேரளத்தைச் சார்ந்தவராக இருக்கவே அப் பெண் அதிகாரி தனக்கிருந்த நான்காண்டு அனுபவத்தில் தனக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு அக்கிளையை நிர்வகித்து வந்திருந்தார். மேலாளரோ வங்கியில் இருந்த நேரத்தை விட வீட்டிலிருந்த நேரம்தான் அதிகம் என்று அவர் புறப்பட்டுச் சென்றபின் வீட்டு உரிமையாளரிடமிருந்து தெரிந்துக்கொண்டேன்.

வங்கியின் இயக்குனர் ஒருவருடைய நெருங்கிய உறவினர் என்பதால் அவரை அப்போது தட்டிக் கேட்க அக்கிளை இருந்த கோவை வட்டார மேலாளருக்கும் தைரியும் இருக்கவில்லை. சுமார் இரண்டாண்டுகள் பேருக்கு மேலாளராக இருந்துவிட்டு சொந்த ஊருக்கே போய்விடலாம் என்று நினைத்திருப்பார் போல் தெரிந்தது. ஆனால் என்னை மதுரை கிளைக்கு நியமித்த அதே சேர்மன் அவரை பலத்த எதிர்ப்பிருந்தும் ஆந்திராவிலிருந்த ஒரு கிளைக்கு மாற்றியிருந்தார். அவர் தலைகீழாக நின்று முயன்றும் அதை ரத்து செய்ய இயலாமல் போக நான் பொறுப்பேற்க சென்ற நேரத்தில் அதனால் ஏற்பட்ட கோபத்தில் என்னிடம் முகம் கொடுத்துகூட பேச விரும்பவில்லை.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடன் வந்திருந்து என்னுடைய வீட்டுக்குத் தேவையான தரமான இரும்புக் கம்பிகளை நியாயமான விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்தான் அவர். ஆனால் நான் பொறுப்பேற்க சென்றபோது என்னை ஏதோ வேண்டாதவர்போல் நடத்தியது மனதை கஷ்டப்படுத்தினாலும் அவர் இருந்த நிலையில் நான் இருந்தாலும் ஒருவேளை அப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பேன் என்ற எண்ணத்தில் அதை நான் பெரிதுபடுத்தவில்லை.

‘ஜோசஃப் ஒங்களுக்கு இந்த ஊர் பழக்கமான ஊர்தானே. நீங்களே போய் எல்லா கஸ்டமர்களையும் மீட் பண்ணிக்குங்க. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏதாச்சும் தெரியணும்னா மேடத்துக்கிட்ட கேட்டுக்குங்க.’ என்றார் ஒருவித சலிப்புடன்.

அவர் மேடம் என்று அழைத்தது அவரை விட சுமார் பத்து வயது இளைய அதிகாரியை. நான் கிளையில் பொறுப்பேற்க சென்றிருந்த முதல் இரண்டு நாட்களில் அவரை சந்திக்க யார் வந்தாலும் இரண்டொரு வார்த்தைகளுக்குப் பிறகு, ‘அந்த மேடத்த போயி கேளு’ என்று மலையாளம் கலந்த தமிழில் அனுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் குறிப்பிட்ட அந்த மேடமோ இருந்த இடத்தில் அமர்ந்தவாறே புருவத்தை ஸ்டைலாக உயர்த்தி என்னங்க என்பதுபோல் வாடிக்கையாளர்களைப் பார்ப்பார்.

சந்திக்க வந்தவர்களில் பலரும் 'இந்த ச்சின்னப் பொண்ணுக்கிட்ட போயி சொல்லி என்ன ஆவப்போவுது' என்ற முனுமுனுப்புடன் செல்வதைப் பார்த்த நான் இவரும் இங்கிருந்து மாற்றலாகிச் சென்றால்தான் நம்மால் இந்த கிளையை சரிவர நிர்வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

என்னை அக்கிளைக்குப் பரிந்துரைத்தவர் சேர்மன் என்பதாலும் அவரே நான் தூத்துக்குடியிலிருந்து விடுவிக்கப்பட்ட தினத்தன்று தொடர்புக்கொண்டபோது ‘ஒங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னே நேரடியா காண்டாக்ட் பண்லாம் ஜோசஃப்.’ என்று கூறியிருந்ததாலும் அன்றிரவே அவரை தொலைப் பேசியில் அழைத்து என்னுடைய எண்ணத்தை கூறினேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘You are absolutely right TBR. She is the culprit for most of the mess created there. I was expecting this request from you. She will not be there by the time you assume charge of the branch, don’t worry.’ என்றார்.

நான், ‘அவங்கள பக்கத்துலருக்கற திண்டுக்கல்லுக்கு மாத்தினா நல்லாருக்கும் சார். அவங்களுக்கும் அதிக டிஸ்டர்பன்ஸ் இருக்காம இருந்தா நல்லது.’ என்றேன் பணிவுடன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கறேன்.’ என்று உறுதியளித்தார்.

அடுத்த இரு தினங்களுக்குள் அவருக்கு மாற்றல் உத்தரவு வர கோபத்துடன் என்னிடம் வந்து, ‘சார் நா இல்லாம ஒங்களால இந்த பிராஞ்ச நடத்திர முடியும்னு நீங்க நினைச்சா அது தப்பு சார். போகப் போக ஒங்களுக்கே தெரியும்’ என நான் அவருடைய ஆணவத்தைப் பார்த்து அசந்துபோய் அவரைப் பார்த்தேன். எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த இந்த சம்பாஷனை என்னுடயை முந்தைய மேலாளரை சந்தோஷப்படுத்தியது என்பதுபோலிருந்தது அவருடைய பார்வை...

தொடரும்...

16 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 188

என் கைவசம் இருந்த இரு மரக்கடைகளின் பில்களையும் தலைமை ஆசாரியின் முன் விரித்ததுமே மனிதர் அடங்கிப் போய்விட்டார். மேலும் அவர் மேல் குற்றம் சாட்டி எனக்கு ஒன்றும் பெரிதாக ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்த நான் அவருக்கு கொடுக்க வேண்டிய கூலியைக் கொஞ்சமும் குறைக்காமல் கொடுக்கவே மனிதர் கூனிக்குறுகிப் போய் தன் நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு தலையைக் குனிந்துக்கொண்டே சென்றார்.

‘என்ன ஜோசப் அந்த ஆள் செஞ்சதுக்கு அவந்தானே ஒங்களுக்கு குடுக்க வேண்டியிருக்கும்? நீங்க பாட்டுக்கு மீதி கூலிய குடுத்து அனுப்பறீங்க?’ என்றார் ராஜேந்திரன்.

‘இல்ல சார், அவருக்கு குடுக்க வேண்டிய கூலிய பிடிச்சி வச்சி நான் ஒன்னும் பெரிசா சேமிச்சிரப் போறதில்ல. ஆனா அவரப் பாருங்க. அவர் வந்த வேகம் என்ன இப்ப போற போக்கென்ன? இனி இந்த மாதிரி தில்லுமுல்லு பண்ணுவாருங்கறீங்க? மாட்டார். அதான் அப்படி செஞ்சேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.’

ராஜேந்திரனுக்கு அப்போதும் இதில் ஒப்புதல் இல்லையென்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ‘சரியான ஏமாளி ஜோசஃப் நீங்க’ என்று முனகியவாறு அவர் விலகிச் செல்ல நான் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தேன்.

***

ஆக, சுமார் நான்கு மாத கால போராட்டத்திற்குப் பிறகு மனதில் ஒருவகை நிம்மதி, மகிழ்ச்சி.

அன்று பிற்பகல் என்னுடைய மாமனார் வீட்டார் விடைபெற்று சென்றதும் அமர்ந்து முதல் நாள் முதல் விடாமல் எழுதி வைத்திருந்த கணக்கைப் பார்த்தேன். நான் துவக்கத்தில் தயாரித்து வைத்திருந்த பட்ஜெட்டுக்கு எந்த சம்பந்தமுமில்லாமல் இருந்தது மொத்த செலவு. இருப்பினும் வங்கியில் நான் எடுத்திருந்த கடனைத் தவிர வெளியில் வேறெங்கும் கடன் வாங்காமல் முடிக்க முடிந்ததே என்ற திருப்தி இருந்தது.

வங்கி குடியிருப்பில் இருந்த மீதி சாமான்களையும் அடுத்த நாளே எடுத்துக்கொண்டு புது வீட்டில் வசிக்க ஆரம்பித்தோம். என் மூத்த மகளின் பள்ளி மட்டும்தான் சற்று தூரம். மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை..

மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில் மொட்டை மாடியில் ஈசிச் சேரைப் போட்டுக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் நீலவானத்தைப் பார்த்தவாறு கழித்த அந்த சுகமான நாட்களை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். சொந்த வீட்டில் வசிப்பதில் இருக்கும் இன்பமே தனிதான்.

ஆனால் அதை முழுவதுமாய் அனுபவிக்க முடியாமல் அடுத்த ஆறே மாதத்தில் தூத்துக்குடியில் இருந்து மாற்றம் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

சாதாரணமாக எங்களுடைய வங்கியில் சம்பந்தப்பட்டவரிடமிருந்து மாற்றம் தேவையென்று கோரிக்கை வராமல் ஒரு ஊரிலிருந்து மூன்று வருடத்திற்குள் மாற்ற மாட்டார்கள். சொந்த ஊர் அல்லது கிளையின் வர்த்தகத்தில் அபிரிதமான வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் மேலும் ஒரு வருட காலம் அங்கேயே இருப்பதற்கும் தடை இருநததில்லை.

அதற்கிடையில் மாற்றம் ஏற்படுகிறதென்றால் ஒன்று சம்பந்தப்பட்டவர் ஏதாவது சொந்த காரணத்திற்காக தனக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட கிளையில் அவருடைய செயல்பாட்டில் ஏதாவது குறை இருக்க வேண்டும். அல்லது அவர் மீது வாடிக்கையாளர்கள் யாராவது புகார் கூறியிருக்க வேண்டும்.

நான் தூத்துக்குடி கிளைக்கு வந்தபோது இருந்த பிரச்சினைகளையெல்லாம் வங்கிக்கு பெரிய பாதகம் இல்லாமல் தீர்த்ததுடன் அங்கிருந்த இரு வருடங்களில் வர்த்தக வளர்ச்சிக்கென என்னுடைய வட்டார மேலாளர் நிர்ணயித்த எல்லா இலக்குகளையும் எட்டியதுடன் கிளையின் மொத்த  வர்த்தகத்தையும் ஏறக்குறைய இரு மடங்காக்கியிருந்தேன். அதற்கென பாராட்டு கடிதமும் என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து வந்திருந்தது என்னுடன் பணியாற்றிய எல்லா அலுவலர்களுக்கும் தெரியும்.

நான் தூத்துக்குடியிலிருந்து மாற்றப்படுவதாக எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்த Transfer Listல் என்னுடைய பெயர் இருந்ததைப் பார்த்ததும் நான் அதிர்ந்துபோனேன். இதை முற்றிலும் எதிர்பாராத என்னுடைய உதவி மேலாளரும் மற்ற பணியாளர்களும் கூட அதிர்ச்சியடைந்தனர்.

‘என்ன சார் நான் என் சொந்த ஊர் ஹைதராபாத்துக்கு இங்க வந்ததுலருந்தே கேட்டுக்கிட்டிருக்கேன் எனக்கு குடுக்க மாட்டேங்குறாங்க. நீங்க சொந்த ஊர்ல இருக்கறீங்க. வந்து ரெண்டு வருசத்துக்குள்ள ஒங்கக் கிட்ட கேக்காமயே மாத்திட்டாங்க. எச்.ஓவில கூப்ட்டு கேளுங்க சார்.’ என்று படபடத்தார் என்னுடைய உதவி மேலாளர்.

நான் மாற்றப்பட்டிருந்த ஊர் மதுரை. தூத்துக்குடியிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே என்றாலும் மாற்றம் மாற்றம்தானே. அதுவும் சொந்த ஊருக்கு வந்து முழுதாய் இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில் எதற்கு இந்த முன்னறிவிப்பில்லாத மாற்றம் என்று மாய்ந்துபோனேன்.

என்னுடைய தலைமையலுவலக மேலதிகாரிகள் மட்டத்தில்  சமீபத்தில் பதவியேற்றிருந்த சேர்மன் ஏற்படுத்தியிருந்த அதிரடி மாற்றங்களில் எனக்கு தெரிந்த பல அதிகாரிகள் எச்ஆர் இலாக்காவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமலிருந்த இலாக்காக்களில் இருந்தனர்.

அப்போதைய எச். ஆர். தலைவரை எனக்கும் கொஞ்சமும் பழக்கமில்லை. ஆனால் சேர்மன் மற்றும் பொது மேலாளர்களாகவிருந்த இருவரிடமும் நான் குமாஸ்தாகவும், உதவி மேலாளராகவும் பணியாற்றியிருந்தேன்.

இருப்பினும் என்னுடைய வங்கியின் அதிகார ஏணியில் (hierarchy) நான் அப்போதிருந்த இருந்த இடம் கடை நிலைக்கும் சற்று மேலே.. இடை நிலை என்று கூறுவதற்கு இன்னும் ஒரு நிலை இருந்தது. நான் எப்படி பொது மேலாளரையோ அல்லது சேர்மனையோ தொலைப்பேசியில் தொடர்பு கொள்வது என்ற தயக்கத்தில் அன்று முழுவதும் மருகிக்கொண்டே இருந்தேன்.

என்னுடைய வட்டார மேலாளரை தொடர்புக் கொண்டு விசாரித்தாலென்ன என்றும் தோன்றியது. உடனே அவரை அழைத்தேன்.

‘டி.பி.ஆர். எனக்கும் ஏன்னு விளங்கலே. ஒரு வாரத்துக்கு முன்னால நம்ம ஜி.எம் கூப்ட்டு சேர்மன் டி.பி.ஆர மதுரைக்கு ப்ரொப்போஸ் பண்றார், நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். நா இல்ல சார் அவர் இப்பத்தான் அங்க ஸ்டெபிலைஸ் ஆகி புது பிசினஸ்லாம் கொண்டு வர ஆரம்பிச்சிருக்கார். இந்த நேரத்துல அவர அங்கருந்து டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு சொன்னேன். அவரும் சரி நான் சேர்மன் கிட்ட சொல்றேன்னு வச்சிட்டார். சரி, ஒங்கள இந்த வருசம் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சி ஒங்கக்கிட்ட இந்த விஷயத்த சொல்லாம இருந்துட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னால வந்த டிராஃப்ட் லிஸ்ட்ல கூட ஒங்க பேர் இல்ல டிபிஆர். ஆனா கடைசி நேரத்துல சேர்மனே ஒங்க பேர சேர்க்க சொல்லிட்டாராம். ஏன்னு தெரியல.. எச். ஆர் ஹெட்டுக்கும் தெரியாதாம். நீங்க கூப்டறதாருந்தா சேர்மனத்தான் கூப்பிடணும். அவர்கிட்டத்தான் நீங்க மெட்றாஸ்ல ஒர்க் பண்ணியிருக்கீங்களே.. தயங்காம கூப்டுங்க.’ என்றார் அவர்.

என்னடாயிது சோதனை என்றிருந்தது எனக்கு. அப்போதிருந்த மனநிலையில் சேர்மனைக் கூப்பிட வேண்டாம். மாலையில் என்னுடயை மனைவி மற்றும் மாமனார் வீட்டில் கலந்தாலோசித்துவிட்டு அடுத்த நாள் கூப்பிடலாம் என்று நினைத்து கலக்கமடைந்திருந்த மனதை ஒரு நிலைப்படுத்தி என்னுடைய அலுவல்களில் கவனத்தைச் செலுத்த முயன்றேன்.

என்னுடைய மாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய கிளையில் சரிசெய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. முந்தைய நான்கு மாதங்களில் வீட்டு வேலைக்காக ஏறத்தாழ ஐந்து வாரங்கள் விட்டு விட்டு விடுப்பு எடுத்திருந்ததால் கிளையின் பல முக்கிய பொறுப்புகளை என்னுடைய உதவி மேலாளர் வசம் விட்டிருந்தேன்.

நான் அங்கேயே அடுத்த வருடம் இருப்பதென்றால் சாவகாசமாக அவர் செய்திருந்த அலுவல்களை எல்லாம் சரிபார்த்திருக்கலாம். ஆனால் மாற்றம் உறுதியாகி நான் மதுரை செல்ல வேண்டிவந்தால் அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் அவை எல்லாவற்றையும் சரிபார்த்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றையும் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் எனக்கு பின்னால் வருகிறவர் என்னைப் பற்றி குறை கூற வாய்ப்பிருக்கிறது.

அன்று மாலை என்னுடைய மனைவியிடம் கூறியதும் அவர் வருத்தமடைவார் என எதிர்பார்த்திருந்ததற்கு நேர்மாறாக, ‘அப்படியா மதுரை பெரிய ஊராச்சேங்க.. பிராஞ்சும் இத விட பெரிசாச்சே.. போயிரலாங்க.’ என்றார் மகிழ்ச்சியுடன்.

நான் அதிர்ச்சியுடன், ‘ஏய் என்ன நீ? நா எங்க அப்பா அம்மா ஊர்லயே இருந்துக்கறேன் நீங்க மட்டும் போங்கன்னு சொல்வேன்னு பார்த்தேன்.  நீ என்னடான்னா...’ என்று இழுத்தேன்.

அவரோ சலிப்புடன், 'ஆமா.. நானும் அப்படி நினைச்சித்தான் தஞ்சாவூர்லருந்து வர்றப்ப சந்தோஷப்பட்டேன். ஆனா.. வேணாங்க.. அதையெல்லாம் எதுக்கு இப்போ நினைச்சிக்கிட்டு.. எங்க அண்ணன் கேஸ் வேற கோர்ட்ல இருக்கு. அதுக்கு அவங்களுக்கு சாதகமா முடிவு வந்தா வெட்டியா செலவ இழுத்து விட்டுட்டீங்கம்பாங்க.. எதிரா வந்தா நாந்தான் அப்பவே சொன்னேனே இவர் வேணும்னே என் மாப்பிள்ளைக்கு இப்படியொரு நிலத்த வாங்கி வச்சிட்டாரும்பாரு அவங்க மாமனார். போறுங்க.. பேசாம புதுசா வர்ற மேனேசர்க்கே இந்த வீட்ட வாடகைக்கு விட்டுட்டு நாம் மதுரைக்கே போயிரலாம்.’ என்றார்.

அவர் கூறியதிலிருந்த நியாயமும் வேதனையும் எனக்கு தெளிவாக விளங்கியது. இருந்தாலும் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகளையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. அவளுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்து பார்க்க முடியாத வயது.. இருந்தும் அவளிடம், ‘ஏய் குட்டி அப்பாக்கு மதுரைக்கு டிரான்ஸ்ஃபர் யிருச்சி.. நீ புது ஸ்கூலுக்கு போணும். பரவாயில்லையா?’ என்றதுமே முகம் சோர்ந்து போய்விட்டது.

கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது, ‘அப்போ என் ஃப்ரெண்ட்ஸ்?’ என்றாள்.

நான், ‘இல்லடா அங்க போய் நிறைய ஃப்ரெண்ட்ச புடிச்சிக்கலாம்.. இத விட பெரிய ஸ்கூலாச்சே.’ என்றேன். அவளுக்கு விளங்கிற்றோ இல்லையோ, ‘சரிப்பா..’ என்றாள் அரைமனதுடன்.

‘அப்போ ஒங்க அப்பா வீட்ல போயி டிஸ்கஸ் பண்ண வேணாமா?’ என்றேன் என் மனைவியிடம்.

‘ஆமா... டிஸ்கஸ் பண்ணா என்ன சொல்வாங்கன்னு நீங்க நினைக்கறீங்க? என்ன மாப்பிள்ளை இங்கயே இருங்களேன்னா? நிச்சயமா சொல்ல மாட்டாங்க. ஒங்கண்ணன் கப்பல்லருந்து வந்தா மறுபடியும் நிச்சயமா ஏதாவது பிரச்சினை வரும்டி. அதுக்குள்ள ஒங்களுக்கு இங்கருந்து டிரான்ஸ்ஃபர் ஆயிட்டா கூட நல்லதுன்னுதான் தோனுதுன்னு அம்மாவே ஒரு தடவ சொல்லியிருக்காங்க. ஒங்கக்கிட்ட சொன்னா கவலப்படுவீங்களேன்னுதான் சொல்லாம இருந்தேன். அதனால அவங்ககிட்ட போயி இப்ப இதப்பத்தி டிஸ்கஷன்லாம் பண்ண வேணாம்.’

‘சரி..ஆனா நம்மகிட்ட சொல்லாமயே எதுக்கு ரெண்டு வருசத்துக்குள்ள மாத்தனாங்கன்னு நீ கேக்கவேயில்லையே?’ என்றேன்.

அதற்கும் அவரிடம் பதிலிருந்தது. ‘என்னங்க நீங்க? நாம தஞ்சாவூர்லருந்து ரிக்வெஸ்ட்லதான இங்க வந்தோம். அப்பவும் மூனு வருசம் ஆவலேல்லே? நாம கேட்டதும் குடுத்தாங்க இல்லே? சரி சொந்த ஊர் போயி வீட்டை கட்டி முடிச்சிட்டார். இனி மாத்திரலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒங்கக்கிட்ட கேட்டா நிச்சயமா நீங்க ஒத்துக்கிட்டிருக்க மாட்டீங்க. அதான் கேக்காமயே போட்டுட்டாங்க. இத கெஸ் (guess) பண்றதுக்கு பெரிசா யோசிக்கணுமாக்கும். நீங்க வேணும்னா ஒங்க எச். ஓ.வில கேட்டு பாருங்க.. நா சொன்னா மாதிரிதான் இருக்கும்.’

நான் வாயடைத்துப் போய்.. அட! அப்படியும் இருக்கலாமோ என்று நினைத்தேன்..

அப்படியேதான் இருந்தது.

அடுத்த நாள் பலமுறை தயங்கி சுமார் நண்பகல் வேளையில் என் சேர்மனுடைய காரியதரிசியை அழைத்தேன். முந்தைய சேர்மனுக்கிருந்தவரேதான். என்னிடம் குமாஸ்தாவாக வேலை செய்தவர் என்பதால் பரிச்சயமிருந்தது. ‘சேர்மன் இப்ப என்ன மூட்ல இருக்கார்?’ என்றேன் அவரிடம்.

அவர் சிரித்துக்கொண்டு, ‘சார் நல்ல மூட்லதான் இருக்கார், குடுக்கறேன்.’ என்று இணைப்பைக் கொடுத்தார்.

‘யெஸ் டி.பி.ஆர். எப்படி இருக்கீங்க? ஒங்க வீட்டு ஹவுஸ் வார்மிங் இன்விட்டேஷன பார்த்தேன். வர முடியாம போயிருச்சி. ஒரு அஞ்சாறு மாசமாயிருச்சில்லே.. அந்த டென்ஷன்லாம் போயிருக்குமே..’ என்றார் சிரித்தவாறு..

அடச்சை... இவருக்கு அழைப்பிதழ் அனுப்பியதுதான் தவறு என்று நினைத்தேன். நாம நிம்மதியா சொந்த வீட்லருக்கறது பொறுக்கல போல..

'ஆமா சார்.’ என்று அசடு வழிந்தேன்.. தொடர்ந்து நான் கேட்க வந்த விஷயத்தை மெள்ள கூறினேன்..

அவர் சீரியசாக, ‘டிபிஆர். I will tell you why I selected you.. என்று துவங்கி அடுத்த ஐந்து நிமிடங்கள் என்னை மதுரை கிளைக்கு மேலாளராக தேர்ந்தெடுத்த காரணத்தை பொறுமையுடன் விளக்கி எனக்கு மறுத்து பேச வாய்ப்பளிக்காமல் All the best, you have one more month.. Don’t ask for more time.. You presence is needed in Madurai..’ என்றவாறு இணைப்பைத் துண்டிக்க நான் சலிப்புடன் ஒலிவாங்கியை வைத்துவிட்டு யோசனையில் ழ்ந்தேன்.

ச்சை.. எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது என்று நினைத்தேன். தூத்துக்குடிக்கு மாற்றலாகி வந்த முதல் ஆறு மாதம் படாத பாடெல்லாம் பட்டு இங்கிருந்த குளறுபடிகளையெல்லாம் சரி செய்து அதன் பிறகு வர்த்தகத்தைக் கூட்ட சிரமப்பட்டு கிளை வளர்ச்சி பாதையில் இருக்கும்போது அதனுடைய பலனை அனுபவிக்க முடியாமல் இதற்கு மேல் குளறுபடிகள் நிறைந்த கிளைக்கு பொறுப்பேற்று.. இது தேவையா என்று நொந்துப்போனேன்.

வங்கியின் சேர்மனுடைய நேரடி பார்வையில் இருந்த கிளை மதுரை என்பது அவரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது. நான் தூத்துக்குடி கிளையிலிருந்த காலத்தில் மதுரை கிளைக்கு இரண்டு, மூன்று முறை சென்றிருக்கிறேன். கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்தான் மேலாளராக இருந்தார். நான் சென்றபோதெல்லாம், ‘இந்த பிராஞ்ச மேனேஜ் பண்றது பெரிய தொல்லை டிபிஆர். இத ஒங்கள மாதிரி தமிழ் நல்லா பேச தெரிஞ்ச ஆளுங்கதான் மேனேஜ் பண்ண முடியும். நான் கோயம்புத்தூர்ல இருந்துருக்கேன். அங்க மலையாளம் பேசினாலே ஆளுங்க புரிஞ்சிப்பாங்க. இங்க நா சொல்றது கொஞ்சமும் கஸ்டமர்ங்களுக்கு புரிய மாட்டேங்குது.. அவங்க பேசற தமிழும் கொஞ்சங்கூட எனக்கு புரிய மாட்டேங்குது.. இதுல வர்ற ப்ராப்பர்ட்டி டாக்குமெண்ட்ஸ்லாம் வேற தமிழ்லயே இருக்குது.. இங்கருக்கற சூட் ஃபைல்ட் கேசுங்களுக்கு வேற கோர்ட்டுக்கு தினம் போவணும்.. அங்கயும் எல்லாரும் தமிழ்தான் பேசறாங்க.. முடியல டிபிஆர்.’ என்று புலம்புவார்.

தமிழ் பிறந்து வளர்ந்த ஊராயிற்றே.. வேறெந்த மொழியில் பேசுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன்..

அம்மேலாளர் என்னைவிட இரண்டு வருடங்கள் சீனியர். மதுரைக் கிளையும் தூத்துக்குடி கிளைக்கு மட்டுமல்ல நான் அதுவரை மேலாளராக பணியாற்றிய மூன்று கிளைகளையும் விட வர்த்தகத்தில் பெரியது, பிரச்சினைகள் நிறைந்தது என கேள்விப்பட்டிருந்தேன்..

ஆனால் சேர்மனே தலையிட்டு என் பெயரை பரிந்துரைத்திருந்ததால் அந்த சோதனையிலிருந்து விடுபட முடியாமல் தூத்துக்குடிக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்ப வேண்டியிருந்தது..

நாளை முதல் மதுரையில்..

தொடரும்..
15 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 187

செப்டம்பர் எட்டு.

புதுமனை புகுவிழா.

இந்த தேதியை தெரிந்தெடுக்க காரணமிருந்தது.

சாதாரணமாக என் குடும்பத்தில் நல்ல நாள் என்றெல்லாம் பார்க்கும் வழக்கமில்லை.

செப்டம்பர் எட்டாம் தேதி மரிய அன்னை (ஏசுவின் தாய்) யின் பிறந்த நாளாக கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது. அன்றுதான் அன்னை வேளாங்கன்னியின் திருவிழாவும் கூட.

எங்களுடய குடும்பத்தில் நடக்கும் அனேக சுப வைபவங்களை நடத்த இந்த நாளைத்தான் தேர்ந்தெடுப்பது வழக்கம். இதுதான் என்னுடைய தாயின் விருப்பமும் கூட.

ஆக அந்த நாளில் பால் காய்ச்சுவதென தீர்மானித்து சென்னையிலிருந்த என் பெற்றோர் சகோதரர்கள், மாமன்மார், தூத்துக்குடியிலிருந்த என் மனைவி வீட்டார் அனைவரையும் அழைத்தேன்.

என்னுடைய மைத்துனர் நில விஷயத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் நீதிமன்றத்தில் இருந்ததையும் மறந்து என் மாமனார் வீட்டில் அனைவரும் வந்திருந்து சிறப்பித்ததை மறக்கவே முடியாது.

அவர்களுடன் என்னுடைய கிளையில் பணிபுரிந்த ஊழியர்கள், நண்பர்கள், மிகப் பழக்கமான வாடிக்கையாளர்கள் என ஏறத்தாழ நூறு விருந்தினர்கள் சூழ்ந்திருக்க விழா எளிமையாக நடந்தது.

ஆனால் முந்தைய நாள்வரை பிரச்சினைகள் இல்லாமல் இருக்கவில்லை.

விழாவிற்கு பந்தல் ஏற்பாடு செய்திருந்தவர் கிழிசல் துணிகளை வைத்து பந்தல் இட்டிருந்ததைக் கவனித்த நான் உடனே அதை பிரித்து எடுத்துவிட்டு மாற்ற வற்புறுத்த ஊரிலிருந்து வந்திருந்த என்னுடைய பெற்றோர்கள், ‘டேய் அபசகுணம் மாதிரி போட்ட பந்தல பிரிக்க சொல்லாதடா.. இருந்துட்டு போட்டும்.. யார் பாக்கப்போறா?’ என்றனர்.

ஆனால் நான் கேட்டால்தானே, ‘அட நீங்க என்னம்மா? அபசகுணமாவது ஒன்னாவது? இவர் கிட்ட ஏற்கனவே தெளிவா சொல்லியிருந்தேன்.. இவர் கேட்ட கூலியில அஞ்சி பைசா கூட குறைக்காம ஒத்துக்கிட்டேன். எதுக்கு? இந்த மாதிரி கிழிசல் துணியில பந்தல் போடவா? நீங்க பேசாம இருங்க. இவர நா டீல் பண்ணிக்கறேன்.’ என்று அவர் ‘ஐயா எங்கிட்ட வேற துணி இல்லைங்கய்யா.. இன்னைக்கி ரெண்டு மூனு எடத்துல விசேஷங்க.. அதான்..’ என்று தயங்கியும் ஒத்துக்கொள்ளாத நான் ‘அப்படீன்னா பந்தலையே பிரிச்சி எடுத்துக்கிட்டு போயிருங்க. நா வேற ஆள பாத்துக்கறேன்.’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

அவர், ‘என்ன ஆளுய்யா நீங்க.. போட்டத பிரிக்க சொல்றீங்களே?’ என்று முனுமுனுத்தவாறு பந்தலை அவிழ்த்துக்கொண்டு செல்ல உடனே என்னுடைய வாடிக்கையாளராயிருந்த ஒரு திருமண மண்டப உரிமையாளரை அழைத்து விவரத்தைக் கூற அவர் உடனே அவருக்கு மிகவும் பழக்கமான பந்தல் இடுபவரை அனுப்பிவைக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் புத்தம் புது பந்தல் கனஜோராக தயாரானது.

எங்களுடைய வீடுகளில் பூஜையறை என்று தனியாக ஏதும் வைக்கும் பழக்கமில்லை. ஏசு, மரி, சூசை என்னும் திருக்குடும்பத்தின் படம், இருதய ஆண்டவரின் படம், மரியன்னையின் படம் என்று வரவேற்பறையிலேயே பொருத்துவது வழக்கம். இம்மூன்று படங்களும் என்னுடைய தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும்.

விழாவிற்கு முந்தைய நாள்வரை வண்ணம் பூசுபவர், மின் விளக்குகள¨ப் பொருத்துபவர், கதவுகள், வாசல் நிலைகள் ஆகியவற்றில் பாலிஷ் செய்யும் ஆசாரி ஆகியோர் அவரவர் வேலகைளை பார்த்துக்கொண்டிருக்க, அவர்களுடன் என்னுடைய சகோதரர்கள் மற்றும் மைத்துனர்கள் வீட்டை அலங்கரிப்பதில் தீவிரமாயிருக்க வீடே கலகலப்பாயிருந்தது.

இவர்களுக்கிடையில் என்னுடைய தாய் ஆசாரியை இந்த மூன்று படங்களையும் கிழக்கு திசையை நோக்கி இருந்த சுவரில் பொருத்தித் தரும்படி கூறிக்கொண்டிருந்தார். அவரோ, ‘இல்லீங்கம்மா, அந்த சுவர்ல போர்ட்டிக்கோ பீம் இருக்குது. அதும்மேல ட்ரில்லிங் மிஷின் வச்சிக்கூட ஓட்டை போட முடியாதுங்க. அதனால எதிர்த்தாப்லருக்கற சுவர்ல பொருத்தி தாரன்.’ என்றார் பணிவாக.

ஆனால் அம்மா ஒரு டீச்சராயிற்றே.. டீச்சர்கள் இருபத்தி நாலு மணி நேரமும் டீச்சர்களாகவேத்தான் இருப்பார்கள் என்பது என் அம்மாவை வைத்து நான் ஏற்கனவே கணித்திருந்தேன். அதை அம்மா மீண்டும் நிரூபித்தார்கள். ‘நீர் நா சொல்றத செய்யும்.. நீரா ஏதாச்சும் ஐடியா குடுக்கற வேலையெல்லாம் ஒங்க முதலாளிக்கிட்ட வச்சிக்கிரும்.’ என்றார்கள் எரிச்சலுடன்.

ஆசாரி என்னைப் பரிதாபமாக பார்த்தார். நான் சுற்றிலும் நின்றிருந்தவர்களை ஒருமுறை பார்த்தேன். அந்த கூட்டத்தினரிடையே ஆசாரி சொன்னதில் தவறில்லையென்று நான் கூறினால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்து, ‘சரிம்மா அவர் வேலைய முடிச்சிட்டு போறதுக்குள்ள அடிச்சிருவார். நீங்க ஏன் இந்த தூசியில நிக்கீங்க.. போய் வீட்ல இருங்க.’ என்று சமாளிக்க முனைந்தேன்.

ஆனால் அம்மா விடவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே பந்தல் விஷயத்தில் அவர்கள் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை என்ற மனத்தாங்கல். ஆகவே, ‘ஏன் இப்ப செஞ்சா என்னவாம்? எங்க நீ வைக்கமாட்டியோன்னு வேல மெனக்கெட்டு இந்த படங்கள எவ்வளவு கஷ்டப்பட்டு மெட்றாஸ்லருந்து பேக் பண்ணி கொண்டுவந்திருக்கேன். மொதல்ல இத வச்சி குடுத்துட்டு வேற வேல பாக்கச் சொல்லு.’ என்று பிடிவாதம் பிடிக்க நான் இதை கண்டுக்கொள்ளாதவர் போல் ஒரு அலங்கார தொங்கலை படு சிரத்தையுடன் பொருத்துவதில் மும்முரமாயிருந்த என்னுடைய மூத்த சகோதரரை நெருங்கி, ‘அண்ணே நீங்களாவது சொல்லுங்க. அம்மா சொல்றா மாதிரி அந்த பீம் மேல படங்கள ஃபிக்ஸ் பண்ண முடியாதுன்னு ஒங்களுக்கும் தெரியும்லே.. சொல்லுங்களேன்.’ என்று கிசுகிசுத்தேன்..

அவரோ, ‘டேய்.. என்னெ வம்புல மாட்டி விட்டுறாத.. அப்புறம் அம்மா மெட்றாஸ் போய் சேர்ற வரைக்கும் என்னை திட்டி தீர்த்துருவாங்க..’ என்று எனக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு செய்துக்கொண்டிருந்த வேலையையும் அப்படியே விட்டுவிட்டு நழுவினார். போகவிருந்தவர், ‘வேணும்னா ஒன்னு செய்.. போய் மைனிய புடி.. அவதான் இவங்களுக்கு சரி.. அவ சொன்னா இவங்க ஒன்னும் மறுபேச்சு பேசாம ஒத்துக்குவாங்க.’ என்றொரு அட்வைசை கிசுகிசுத்துவிட்டு சென்றார்.

அம்மாவுக்கு ஒருவாறு புரிந்தது. அதற்கு மேல் அங்கு நின்று விவாதம் செய்வதில் பயனில்லையென்று நினைத்தார்களோ என்னவோ.. ‘என்னமோ போங்க.. ஒங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்னு நினைச்சிக்கிட்டிருக்கற ஆளுங்களாச்சே நீங்க.. என்னமும் செய்ங்க..’ என்றவாறு வெளியேற நான் பின்னாலேயே ஓடி பெரும்பாடுபட்டு சமாதானம் செய்துவிட்டு திரும்பி வந்தேன்.

ஆசாரிக்கும் அங்கு குழுமியிருந்த வேலையாட்களுக்கும் இச்சம்பவம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. நான் மீண்டும் உள்ளே வந்ததும் மேஸ்திரி, ‘சார் அம்மா சொன்னா மாதிரியே செஞ்சிரலாம். அவங்க சொன்னதுல ஏதாச்சும் சாஸ்திரம் இருக்கும். பீமுக்கு அரையடி மேல ட்ரில் பண்ணி மாட்டிரலாம்.’ என எனக்கு சட்டென்று ஆசாரியின் மேல் கோபம் வந்தது. ‘இவர் சொன்னா மாதிரி நீங்க ஏங்க யோசிக்கல? வெட்டியா அம்மா டென்ஷ்னாயிருக்க மாட்டாங்கல்லே.. முதல்ல அந்த வேலைய முடிங்க.’ என்றேன் சற்றே எரிச்சலுடன்..

இப்படி சின்ன, சின்னதாக தடங்கல்கள்..

எல்லா கடைசி நேர வேலைகளையும் முடித்து பணியாட்களை அனுப்பிவிட்டு அன்று இரவு படுக்கச் சென்றபோது நள்ளிரவைக் கடந்திருந்தது.

ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி அடுத்த நாள் காலை 6.00 மணி வழிபாட்டிற்கு என்னுடைய பங்கு தேவாலயத்துக்கு சென்று வழிபாடு முடிந்த கையோடு என் பங்கு குருவை அழைத்துவந்தேன். அவருடன் குடும்பத்தோடு சேர்ந்து பிரார்த்தனை செய்தோம். பிறகு வீடு முழுவதும் புனித தீர்த்தத்தால் மந்தரித்துவிட்டு பாதிரியார் திரும்பிச் சென்றார்.

அதன் பிறகு காலை ஒன்பது மணிக்கு வீட்டு வரவேற்பறையில் ஒரு சின்ன குத்துவிளக்கில் என் பெற்றோர், என் மனைவியின் பெற்றோர் மற்றும் நானும் என் மனைவியும் விளக்கேற்ற அதன்பிறகு சம்பிரதாயமாக பால் காய்ச்சி அரை மணி நேரத்தில் விழா முடிந்தது.

*******

புது மனை புகு விழா தினத்தன்று மேஸ்திரிக்கும் தலைமை ஆசாரிக்கும் புது வேட்டி, புது சட்டை அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம் என்று என்னுடைய மாமனார் ஏற்கனவே கூறியிருந்தார்.

இதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் சரி செய்துவிட்டு போவோம் என்று தீர்மானித்து அதற்கு வேண்டியதை ஏற்பாடு செய்தேன்.

ஆரம்பத்திலும் இடையில் அவ்வப்போதும் எனக்கு இடைஞ்சல் அளித்துக்கொண்டிருந்த மேஸ்திரி நாளடைவில் மனம் மாறி நல்லபடியாய் வேலையை முடித்துக்கொடுத்தார் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஆரம்பத்திலும் மரவேலைகள் பெரும்பாலும் முடியும்வரையிலும் ஒழுங்காக இருந்து இறுதி நேரத்தில் கோபித்துக்கொண்டு சென்ற ஆசாரியை நினைத்துத்தான் மருகினேன். அவர் இல்லாத நேரத்தில் அவர் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் முடித்துக்கொடுத்த அவருக்குக் கீழ் பணியாற்றியவருக்கு அம்மரியாதையை செய்தாலென்ன என்று என் மனைவியிடம் கூற, ‘அப்படியே செஞ்சிரலாங்க.’ என்று சம்மதித்தார்.

அப்படியே செய்தும் முடித்தேன்.

ஆனால் விழாவிற்கு வந்திருந்த மற்ற சிஷ்ய ஆசாரிகள் அவரிடம் போய் வத்தி வைக்க அடுத்த நாள் விடியற்காலையிலேயே ஆக்ரோஷமான கூச்சலுடன் வந்து பிரச்சினை செய்தார் பழைய தலைமை ஆசாரி.

நல்ல வேளையாக முந்தைய நாள் விழா முடிந்த கையோடு சென்¨னையிலிருந்து வந்திருந்த என் பெற்றோர், சகோதரர்கள் யாவரும் அன்று இரவே புறப்பட்டு சென்றிருந்தனர்.

என்னுடைய மாமனார் மற்றும் மைத்துனர்கள் மட்டும் அன்றிரவு எங்களுடன் புதுவீட்டில் இருந்தனர்.

நான் ஆசாரியின் அநாகரீகமான கூச்சலைக் கேட்டு பதறிக்கொண்டு வெளியே வருவதற்குள் என் மைத்துனர்களும் அவர்களுடன் முந்தைய நாள் இரவில் தங்கியிருந்த அவருடைய நண்பர்களும் மாடியிலிருந்து இறங்கி வந்து அவருடைய சட்டையைப் பிடித்து தாக்க முயல சில நொடிகள் நான் தாமதித்திருந்தாலும் ரசாபாசமாக ஆகியிருக்கும்.

நல்லவேளையாக அடுத்த வீட்டு நண்பர் ராஜேந்திரனும் வீட்டிலிருந்ததால் அவர் தலையிட்டு ஆசாரியை என் மைத்துனர்களிடமிருந்து விடுவித்தார்.

அதற்குள் என்னுடைய மாமனார் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து என்னுடைய மைத்துனர்களைக் கடிந்து அழைத்துச் செல்ல விஷயம் விபரீதமாகாமல் தப்பித்தது.

ஆசாரியோ அடங்குவதாயில்லை. அப்போதே கணக்கு தீர்த்தால்தான் ஆயிற்று என்று ஒற்றைக்காலில் நின்றார். நான் பொறுமையுடன், ‘நீங்க ரெண்டு நாள் கழிச்சி நிதானமா வாங்க. கணக்க முடிச்சிரலாம்.’ என்று சொல்லியும் அவர் கேட்பதாயில்லை.

ராஜேந்திரனும் தன்னால் இயன்றவரை கூறிப்பார்த்தார். ஊஹ¤ம்.. அவர் கேட்பதாயில்லை.

ராஜேந்திரனுக்கும் அவருடைய தில்லுமுல்லுகளைப் பற்றி என் மூலம் ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவர் என்னைப் பார்த்து, ‘சரி ஜோசப் அவர் கேக்கறா மாதிரியே முடிச்சிரலாம்.. நீங்க போய் ஒங்க கணக்கு புஸ்தகத்த கொண்டு வாங்க.’ என்றார்.

புது வீட்டில் புகுந்த முதல் நாளே அதுவும் காலையில் இப்படியொரு வில்லங்கமா என்று நினைத்த நான் ஆசாரியை மீண்டும் பார்த்தேன். அவர் முகத்தை திருப்பிக்கொள்ள வேறு வழியில்லாமல் சாலையைக் கடந்து நான் தாற்காலிகமாக வாடகைக்கு எடுத்த வீட்டிலிருந்த கணக்கு புத்தகத்தையும் அவர் பரிந்துரைத்த மரக்கடை பில் ரசீதுகளையும், பிறகு முன்வாசல் கதவுக்காக பலகை வாங்கிய மரக்கடை பில்களையும் எடுத்துக்கொண்டு ஆசாரியை எதிர்கொண்டேன்.

தொடரும்..

நாளை தூத்துக்குடி அனுபவங்கள் நிறைவுபெறும்..

இத்துடன் இணைத்திருக்கும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் எடுத்தது.. மாடி கீழ்வீடு கட்டி முடித்து நான்கு வருடங்கள் கழித்து கட்டியது.. அது ஒரு தனி அனுபவம்..
வீட்டின் இடது புறம் இருப்பது ராஜேந்திரனின் வீடு.. வலது புறத்தில் இருந்த ஒத்தை ஒட்டு வீடு டீச்சருடைய காலி மனையில் இருந்தது.. இப்போதும் அது அதே நிலையில்தான் இருக்கிறது..

14 August 2006

திரும்பிப் பார்க்கிறேன் 186

என்னுடைய வீடு கட்டுமானப் பணியில் எனக்கு பெரியதாக எந்த பிரச்சினையும் வைக்காதவர் மர வேலை செய்த ஆசாரிதான்.

அதாவது நான் கிரஹப்பிரவேசத்திற்கு நாள் குறிக்கும்வரை..

வீடு கட்டுமானப் பணியில் ஈடுபடும் மேஸ்திரி, எலெக்ட்ரிஷியன், மரவேலை செய்யும் ஆசாரி எல்லோருமே ஒரு வீட்டு வேலை முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது இடத்தில் வேலை கிடைக்குமா என்று அலைய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஏதும் தவறு இல்லை.

இவர்கள் மூவருமே தூத்துக்குடி போன்ற சிறிய ஊர்களில் ஏதாவது பொறியாளர் ஒருவரையே சார்ந்திருப்பர். அப்பொறியாளர் எந்த இடத்தில் கட்டுமானப் பணியை துவக்கினாலும் இவர்களும் இடம் பெயர்ந்து அங்கு சென்றுவிடுவது வழக்கமாக நடக்கக்கூடியதுதான். இதிலும் தவறேதும் இல்லை.

ஆனால் அதற்காக தற்போது வேலை நடக்கும் இடத்தில் வேலையை முடிக்காமலே சிலர் சென்றுவிடும்போதுதான் பிரச்சினையே..

முதலில் என்னுடைய மேஸ்திரி வேலையை அரைகுறையாய் விட்டுவிட்டு சென்றதற்கும் என்னுடைய பொறியாளர்தான் முக்கிய காரணமாய் இருந்தார். பிறகு என்னுடைய நண்பர் ராஜேந்திரனுடைய சமயோசித தலையீட்டால் அவர் திரும்பிவந்ததுடன் மக்கார் செய்துக்கொண்டிருந்த மேஸ்திரியையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்தார்.

மின் இணைப்பு செய்து தர ஒப்புக்கொண்டிருந்தவர் எனக்கு என் மூத்த சகோதரர் வழியாக தூரத்து சொந்தமாக இருந்துப்போனதால் அவரால் எந்த பிரச்சினையும் எழவில்லை.

மர வேலை ஆசாரியோ என்னுடைய கிளையின் முக்கியமான வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்த செல்வந்தர்கள் வீடுகளில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்பதால் அவருடைய கூலி சற்றே அதிகமாயிருந்தாலும் வேலையில் நல்ல நேர்த்தி இருந்தது.

மேலும் எந்தவித பெரிய தில்லுமுல்லும் இல்லாமல் நேர்மையாகவே நடந்துக்கொண்டிருந்தார். அதாவது அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே அவர் பரிந்துரைத்த மரக்கடைகளிலேயே நானும் எனக்கு தேவைப்பட்ட மரச்சட்டங்களையும் பலகைகளையும் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம்.

என் கெட்ட நேரமா நல்ல நேரமா தெரியவில்லை. சென்னையில் நான் குடியிருந்த வீட்டில் இருந்ததைப் போன்று வாசலுக்கு கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் கதவை வடிவமைக்கலாம் என்று நினைத்து நான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த சில வடிவங்களை அவரிடம் காட்டினேன். ஆனால் அவருக்கு அவற்றில் எதுவுமே விருப்பபடவில்லை.

‘சார்.. இந்த மாதிரி கதவுங்கள எல்லாம் மிஷின்லதான் செய்ய முடியும்.. தூத்துக்குடியில முடியாது.’ என்றார் பிடிவாதமாக.

சரி இவரிடம் மேற்கொண்டு பேசுவதில் எந்த பயனும் இருக்கப் போவதில்லையென்று நினைத்த நான், ‘மெட்றாஸ்ல ரெடி மேடா கூட கதவுங்க கிடைக்கும் அத வாங்கிக் குடுத்தா பொருத்தி தரீங்களா?’ என்றேன்.

அதற்கும் அவருக்கு விருப்பமில்லையென்பது என்பது அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிந்தது. சரி இதற்கு என்னதான் வழி என்று நினைத்தவாறு, ‘சரிங்க.. இதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க. எனக்கு முன்வாசல் கதவு மத்த வீடுங்க போல இல்லாம வித்தியாசமா இருக்கணும்..’ என்றேன்.

‘அதுக்கு நா என்ன சார் செய்ய முடியும்? என்னால முடிஞ்சது என்னன்னு ஒங்கக்கிட்ட சொல்லிட்டேன்.. அதுக்கு வேணுங்கற பலகைய வாங்கி தந்துருங்க.. இல்ல நீங்க நினைக்கற மாதிரிதான் வேணும்னா வேற ஆள வச்சி செஞ்சிக்குங்க.. நா வேணாங்கல.. இதுவரைக்கும் நான் செய்திருக்கற வேலைக்கு செட்டில் பண்ணிருங்க..’  என்றவர் தன்னுடைய வேலையாட்களைப் பார்த்து, ‘எலேய்.. மிச்ச இருக்கற வேலைய முடிச்சிட்டு வந்து சேருங்கலே.. நா வாரன்..’

முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டு என்னுடைய பதிலுக்கு காத்திராமல் அவர் செல்ல நான் சற்று நேரம் செய்வதறியாது நின்றேன்.

அவர் தன்னுடைய சைக்கிளில் சென்று மறையும்வரை காத்திருந்த நான் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு சாலைக்கு மறுபக்கத்திலிருந்த என்னுடைய தற்காலிக வீட்டை நோக்கி கிளம்பினேன்.

நான் சாலையைக் கடக்கும் போது, ‘சார் கொஞ்சம் நில்லுங்க.’ என்ற குரல் கேட்டு திரும்ப ஆசாரியின் கீழே வேலை பார்த்துவந்தவர்களுள் ஒருவர் என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன்.

அவர் என்னை நெருங்கியதும் மீண்டும் ஆசாரியின் தலை தெரிகிறதா என்று ஒருமுறை பார்த்துவிட்டு, ‘சார் நா வேணும்னா ஒங்க வேலைய முடிச்சி தரேன்.. மேஸ்திரிக்கு மட்டும் தெரியாம நீங்க பார்த்துக்கிட்டா போறும்..’ என்றார்.

நான் அவரை தயக்கத்துடன் பார்த்தேன். ஆரம்பமுதலே அவருக்கும் அவருடைய மேஸ்திரிக்கும் அவ்வளவாக ஒத்துவரவில்லையென்பதை நான் அவ்வப்போது கவனித்திருந்தேன். இருப்பினும் இவரை நம்பி இந்த காரியத்தில் இறங்க வேண்டுமா என்று யோசித்தேன்.

இருப்பினும், ‘சரி வாங்க.. என் கிட்டருக்கற சில டிசைன்கள காட்டறேன்.. பார்த்துட்டு சொல்லுங்க.’ என்று அவரை அழைத்துக்கொண்டு என்னுடைய வீட்டில் வைத்திருந்த வடிவங்களை அவரிடம் காட்டினேன்.

அவர் அதை பார்த்ததும், ‘செஞ்சிரலாம் சார். நான் கல்ஃப்லருந்தப்போ இத விட கஷ்டமான ஒர்க் எல்லாம் செஞ்சிருக்கேன்..’ என நான் வியப்புடன், ‘நீங்க கல்ஃப்ல இருந்திருக்கீங்களா?’ என்றேன்.

அவர் உடனே தன்னுடைய ஐந்து வருட கல்ஃப் வாசத்தை விவரித்துவிட்டு இறுதியில், ‘என் பெஞ்சாதி பிள்ளைங்கள விட்டுட்டு இருக்க முடியல சார். அதான் வந்துட்டேன்.. இப்ப இந்த மேஸ்திரி கிட்ட வேலை செய்யறதுக்கு இஷ்டம் இல்லதான்.. ஆனா என்ன செய்றது.. அங்க சம்பாதிச்சதையெல்லாம் வீட்டு மேல போட்டுட்டு இப்ப இந்த மாதிரி ஆளுங்கக்கிட்டு வேல செய்ய வேண்டியிருக்கு..’ என்று நொந்துக்கொண்டார்.

‘சரிங்க.. இதுக்கு என்ன கூலி எதிர்ப்பார்க்கறீங்க?’

அவர் சற்று தயங்கினார். கூலியை கணக்கு பார்க்கிறாரோ என்று நினைத்தேன்.

அவரோ, ‘சார் நீங்க இதுக்கு கூலி எதுவும் தரவேணாம் சார். நான் தனியா ஒரு தச்சு பட்டறை தொடங்கலாம்னு பாக்கேன். ஒங்க பேங்க்ல அதுக்கு ஒரு லோன் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.. கரெக்டா மாசா மாசம் கட்டிருவேன் சார்..’ என்றார்.

நான் அவர் இந்த எண்ணத்தை எத்தனை நாளாக மனதுக்குள் வைத்துக்கொண்டிருந்தாரோ என்று நினைத்தேன். இருப்பினும் புன்னகையுடன், ‘அது வேற இது வேற.. இந்த வேலைக்கு வேண்டிய கூலிய நீங்க வாங்கிக்கிருங்க. அப்புறம் ஒங்க பட்டறை திட்டத்த எழுதி அதுக்கு என்ன செலவாகும்.. அதுக்கு செக்யூரிட்டியா என்ன குடுப்பீங்கன்னு எல்லாம் எழுதி கொண்டாங்க.. முடிஞ்சா கண்டிப்பா குடுக்கேன்.’ என்றேன்.

அவர் சற்று தயங்கினாலும் பிறகு, ‘சரி சார். கல்ஃப்லருந்தப்போ நா கட்டுன வீடு இன்னைக்கி ரேட்டுல எப்படியும் மூனு நாலு லட்சம் பொரும்.. அத ஜாமீனா தரேன்.. என் மாமனாரும் தனியா ஒரு பட்டறை வச்சிருக்கார். அவரையும் ஜாமீன் கையெழுத்து போடச் சொல்றேன்..’ என, ‘சரிங்க.. பாக்கலாம்.. முதல்ல இந்த வேலைய முடிச்சி தாங்க.. சதுர அடிக்குன்னு ஒரு ரேட்டு போட்டு தாரேன்.. கதவு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.. நீங்களே கூட வந்து மரத்த செலக்ட் செஞ்சிருங்க..’ என்றேன்.

கிரஹப் பிரவேசத்திற்கு நாள் குறித்துவிட்டிருந்ததால் மீதமிருந்த வேலைகளை விரைவில் முடிக்கும் எண்ணத்துடன் இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்திருந்தேன். ஆகவே அவரை என்னுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அப்போதே கிளம்பினேன்..

நான் ஏற்கனவே மரச்சட்டங்களை வாங்கியிருந்த கடைகளுக்கு செல்லாமல் அவர் வேறு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அவர் மரப்பலகையைத் தேர்ந்தெடுத்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு வரும் வரை காத்திருந்தேன்.

‘சார்.. மரத்த தேர்ந்தெடுத்துட்டேன்.. ரேட் பேசி முடிச்சிரலாம். வாங்க..’ என்றவாறு கடை முதலாளியிடம் அழைத்துச்செல்ல அவர் கணக்கிட்டு கொடுத்த தொகை மிகவும் நியாயமானதாக இருக்கவே  மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிட்டு கிளம்பினேன்..

வீடு வந்து சேர்ந்ததும் எப்போதும் போலவே என்னுடைய செலவினங்களை குறித்து வைக்கும் நோட்டுப்புத்தகத்தில் எழுத ஆரம்பித்தபோதுதான் விளங்கியது நான் இதற்கு முன்பு வாங்கியிருந்த மரங்களின் ரேட்டும் இப்போது வாங்கியிருந்த ரேட்டுக்கும் இருந்த வித்தியாசம்.

வித்தியாசம் கொஞ்சமாக இருந்திருந்தால் அதை நான் கவனித்திருக்க மாட்டேன்.. ஆனால் இருந்த வித்தியாசம் சதுர அடிக்கு கணிசமாக இருந்ததால் அதிர்ந்து போனேன்..

ச்சை.. இவரைப் போய் இத்தனை காலம் நம்பியிருந்தேனே என்று நொந்துப்போனேன்.

சரி.. இதை பெரிதுபடுத்தி புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பினால் வீட்டு வேலை தடைபட்டு போய்விடுமே என்று நினைத்து என்னுடைய மனைவியிடமிருந்து கூட இதை மறைத்து மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கலானேன்.

நல்ல வேளையாக மேஸ்திரி கோபித்துக்கொண்டு போய் அடுத்த பத்து நாட்களுக்கு வராமல் இருந்தது நன்றாகப் போனது.

அந்த இடைப்பட்ட நாட்களில் அவருடன் வேலை பார்த்தவர் நேரம் காலம் பார்க்காமல் அருமையாக வேலையை முடித்துக் கொடுத்தார். அவருடைய வேலை உண்மையிலேயே மிக நேர்த்தியாக இருந்தது. என்னுடைய நண்பர் ராஜேந்திரனே வந்து பார்த்துவிட்டு, ‘சார் இந்த ரோட்லயே ஒங்க வீடு தனியா தெரியப் போகுது பாருங்க. மேஸ்திரிய விட இவரே மேல் போலருக்கு.’ என்றார் மகிழ்ச்சியுடன்.

அத்துடன் மேஸ்திரி திரும்பி வர காத்திராமல் மற்ற வாசற்கதவுகள், ஜன்னல் கதவுகள் சகலவற்றையும் அவரே அவருக்கு தெரிந்த ஒரு சிறுவனை வைத்துக்கொண்டு பொருத்திக் கொடுத்தார். ஒருவேளை தனக்கு கடனுதவி கிடைக்கும் என்று நினைத்து இந்த வேலைகளை முடித்து கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில் அவருடைய உதவி எனக்கு பேருதவியாக இருந்தது என்பதென்னவோ உண்மை.

அவருடைய வேலைத் திறனும், நேர்மையும் என்னையும் மிகவும் கவர்ந்தது. கவே என்னுடைய கிரஹப் பிரவேசம் முடிந்த வாரத்திலேயே அவரை வங்கிக்கு வரவழைத்து என்னுடைய உதவி மேலாளரிடம் அறிமுகப்படுத்தி அவருடைய வீட்டை மதிப்பிட கூறி அவருக்கு தேவைப்பட்ட கடனையும் கொடுத்தேன்.


தொடரும்..12 August 2006

கோவா பயணம் நிறைவு பதிவு

நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பழைய கோவா.

அங்குதான் சுமார் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் தூய சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப் பிரசித்தமான தேவாலயங்களில் ஒன்றான பாம் ஜீசஸ் தேவாலயம் இருந்தது.

அத்தேவாலயத்திற்கு ஏற்கனவே ஒரு முறை, அதாவது நான் மும்பையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் (1995ம் ஆண்டு) சென்றிருக்கிறேன்.

அத்தேவாலயத்தில் வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் உடல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். அது 1995ல் நடந்தபோது நான் அலுவல் விஷயமாக கோவா செல்ல வேண்டியிருந்தது.

அடுத்த பத்தாண்டின் இறுதியில், அதாவது 2005ம் ஆண்டு அங்கு செல்ல விரும்பியும் முடியாமற் போகவே இம்முறை கோவா செல்ல வாய்ப்பு கிடைத்ததும் நிச்சயம் அத்தேவாலயத்திற்கு சென்று வருவதென தீர்மானித்தேன்.

பகல் சுமார் இரண்டரை மணிக்கு புறப்பட்ட நாங்கள் அடை மழை காரணமாக மோசமாக பழுதடைந்திருந்த சாலையில் வேகமாக செல்ல முடியாமல் நாற்பத்தைந்து நிமிடத்தில் முடிய வேண்டிய பயணம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்தது.

பிற்பகல் நேரமானதாலும் மழை பெய்துக்கொண்டே இருந்ததாலும் தேவாலய வளாகம் காலியாக இருந்தது.

சுற்றுலா தளமான பழைய கோவாவில் பிரசித்தமான சுற்றுலா தளமான இத்தேவாலயத்திற்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் என்றார் எங்களுடன் துணைக்கு வந்த மேலாளர்.

தேவாலய வளாகத்தின் முன்பு அமைந்திருந்த புகைப்பட ஸ்டுடியோக்களும், பல்பொருள் அங்காடியும், புனிதரின் புகைப்படங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கையில் மெழுகு திரிகள், மாலைகளை வைத்துக்கொண்டு எங்களை சூழ்ந்துக்கொண்ட கோவன், மலையாளி மற்றும் தமிழ் பேசும் பெண்களையும் பார்த்தபோது என்னுடைய நண்பர் கூறியது உண்மைதான் என்பது எங்களுக்கு விளங்கியது.

மழை சற்றே ஓய்ந்திருக்க என்னுடைய டிஜிட்டல் கேமராவிற்கு தேவையான பாட்டரிகளையும் சில மெழுகு திரிகளையும் வாங்கிக் கொண்டு ஆலயத்தை நோக்கி நடந்தோம்.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு புனிதப்படுத்தப்பட்ட கருங்கற்களாலான தேவாலயம் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளித்தது. 1946ம் ண்டு இந்தியாவின் முதல் மைனர் பசிலிக்காவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேவாலயம் அது என்பதை எங்கோ படித்த ஞாபகம்.

ஆலயத்தின் வாயிலில் நின்று உள்ளே பிரதான பலிபீடத்தைப் பார்த்தபோது அதனுடைய பிரம்மாண்டம் தெரிந்தது. சுமார் இருநூறடி நீளமும் அறுபதடி அகலமும் அறுபதடி உயரமும் கொண்ட தூண்களில்லாத பிரதான ஹால் பிரமிக்க வைத்தது.

என்னுடைய கேமராவை எடுத்து வாயிலிலிருந்து பிரதான பீடம் வரை மெதுவாக நடந்து அந்த பிரம்மாண்டத்தை முடிந்த அளவு பிடித்துக்கொண்டேன்.

நடுபீடத்திற்கு வலப்புறத்தில் இருந்த பிரம்மாண்ட பீடத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கோவாவின் கொல்லர்களால் செய்யப்பட்ட வெள்ளி பேழையில் தூய சவேரியின் அழியா உடல் வைக்கப்பட்டிருந்தது.
நடு பீடத்திற்கு வலப்புறத்தில் காவல் தூதரின் பீடமும் ஆலயத்தின் இடப்புறத்தில் தூய மரியாளின் பீடம் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

ஆலயம் முழுவதும் பழைய பொலிவு அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது நன்கு தெரிந்தது. அமைதியான அச்சூழலில் மெய்மறந்து மவுனமாய் அமர்ந்திருந்தேன். மனதில் இனம் புரியாத அமைதி, மகிழ்ச்சி. என் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோருக்காகவும் ஒரு நிமிடம் கண் மூடி இறைவனைப் பிரார்த்தித்தேன்.சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தபின் மீண்டும் விடுதி நோக்கி புறப்பட்டோம். கோவாவில் பிரசித்தமான முந்திரி பருப்பு, பிபின்கா அல்வா (உண்மையிலேயே சூப்பராக இருந்தது) ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விடுதிக்கு திரும்பினேன்.

தேவாலய வளாகத்தில் இறங்கியதும் அதிசயமாக நின்றிருந்த மழை வாகனத்தில் ஏறியதும் மீண்டும் துவங்கி விடுதி வந்து சேரவும் நின்று போனது!

போக வர சுமார் நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தூரம் ஆளை விழுங்கும் குழிகளில் விழாமல் பயணம் செய்த களைப்பில் நானும் என் நண்பரும் அவரவர் அறைக்கு திரும்பி குளித்து முடித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.

அன்று இரவு மீண்டும் கலகலப்பான கலை நிகழ்ச்சி இரவு ஒன்பது மணிக்கு..

முந்தைய நாள் கஜல் இசை என்றால் அன்று இந்தி சினிமா பாடல்கள் கச்சேரி.

மும்பையில் தற்போது மிகவும் பிரபலமான கே.கே என்ற இளைஞர் தலைமையில் நான்கு இளைஞர்களைக் கொண்ட குழு சுமார் மூன்று மணி நேரம் கலக்கியது.

முந்தைய நாள் இரவு சீனியர் கஜல் பாடகருக்கு மதிப்பு கொடுத்து அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மதுபான பார் இன்று அரங்கத்திற்குள்ளேயே!

முந்தைய நாள் அரங்கத்தின் முற்பகுதியில் விரிக்கப்பட்டிருந்த மெத்தை இருந்த இடத்தில் இன்று தரையிலிருந்து அரையடி உயரத்திற்கு சுமார் இருபது பேர் ஆடுவதற்க வசதியாக ஒரு குட்டி மேடை..

அதை சுற்றிலும் ஜோடி, ஜோடியாக அமர்ந்து ரசிப்பதற்கு இருக்கைகள்..

மேடையில் ஏறுவதற்கு அமைக்கப் பட்டிருந்த மூன்று படிகளும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு கலர் கலராய் கண்ணடிக்க மேடையில் அமர்ந்திருந்த ஐந்து இசைக் கலைஞர்களைச் சுற்றியும் இடைவிடாமல் மின்னிக்கொண்டிருந்தன வண்ண, வண்ண விளக்குகள்..

ஒரு திரைப்பட செட்டிங்கைப் போலிருந்த மேடையைப் பார்த்ததுமே சிஸ்கோ மற்றும் வங்கிகளைச் சார்ந்த இளம் அதிகாரிகள் படு உற்சாகமடைந்தனர்.

கச்சேரி துவங்குவதற்கு முன்பே இரண்டு, மூன்று சுற்றுகளை முடித்துவிட்டிருந்த இளைஞர்களும், இளைஞிகளும் (இவர்களில் பலரை முதல் முதலாக பார்க்கிறேன். விடுதியில் தங்கியிருந்த மேல் மட்டத்தை சேர்ந்தவர்கள்!) அளித்த உற்சாக வரவேற்புடன் மேடையில் தோன்றினார் ஒரு எலும்புக் குச்சி மனிதர்..

ஜோக் அடிப்பவராம்!

சரசரவென்று மூச்சு விடாமல் ஹிந்தியில் அவர் அடித்த பல ஜோக்குகளும் சென்சார் செய்யப்பட வேண்டியவை. ஆனாலும் போதையில் இருந்த குடி மகன், மகள்களுக்கு மத்தியில் அவை மிகவும் வரவேற்பை பெற்றன.

மட்ட ரகமான சிரிப்பு வெடிகளை ரசித்து கரவொலி எழுப்பிய அரங்கத்திலிருந்த இளைஞர்/இளைஞி கும்பலைப் பார்த்தபோது நாம் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறோம் என்று கேட்க தோன்றியது.

எனக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்த இரு நடுத்தர மேல்மட்ட பெண்கள் சிரித்த சிரிப்பில் இருக்கையிலிருந்தே விழுந்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர்கள் தன்னை மறந்து ஜோக் அடித்துக்கொண்டிருந்த இளைஞனையே பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன ரசனையோ என்று நினைத்தேன்.

இருப்பினும் அடுத்த ஒரு மணி நேரம் அவருடைய சர வெடிகள் அரங்கமெங்கும் சிரிப்பு வெடிகளாக எதிரொலிக்க ஹாலின் கோடியிலிருந்த 'பார்' பரபரப்பாக இருந்தது.

மணி பத்து!

பசி வயித்தைக் கிள்ள எழுந்து அரங்கத்தை அடுத்திருந்த வராந்தாவிற்குள் நுழைந்தோம் நானும் என் நண்பரும்.

வகை, வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவை சீந்த ஆள் இல்லை. எல்லோரும் ‘குடிப்பதிலேயே’ குறியாயிருந்தனர் போலும்.

சற்று முன் வரை வயிற்றைக் குடைந்தெடுத்த பசி பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைக் கண்டதும் போன இடமே தெரியவில்லை. பேருக்கு எப்போதும் சாப்பிடும் நான், மீன் கறி ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்தோம்.

மைக் டெஸ்டிங்.. செக் ஒன் டூ த்ரீ நடந்துக்கொண்டிருந்தது..

அடுத்த சில நொடிகளில் ஆடம்பரமில்லாத் ஜீன்ஸ், டீஷர்ட் உடையில் கையில் மைக்குடன் அட்டகாசமான டான்ஸ் மூவ்மெண்டுடன் மேடையில் நுழைந்த கே.கே என்ற அந்த இளைஞர் நள்ளிரவு கடந்தும் யாரும் கலைந்து செல்லா வண்ணம் தன்னுடைய திறமையில் கட்டிப் போட்டுவிட்டார் என்றால் மிகையாகாது.

அவர் அன்றைய நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்திருந்த பாடல்கள் அனைத்துமே ஆடாதவரையும் ஆடவைத்துவிடும் பாடல்களாக இருந்தன.

ஓரிரு பாடல்கள்வரை அரங்கம் அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்க வெறுத்துப் போன கே.கே மேடையிலிருந்து இறங்கி தரையில் அமைக்கப்பட்டிருந்த நடன மேடையில் வந்து பாடிக்கொண்டே முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞ்களைப் பார்த்தவாறே ஆட அவர்களும் உற்சாகம் மற்றும் போதை தலைக்கேற எழுந்து அவருடன் சேர்ந்து ஆட.. அரங்கத்திலிருந்த அனைத்து இளைஞர், இளைஞிகளும் மேடையை நோக்கி படையெடுக்க.. பிறகென்ன..

செடேட் சென்னை வாழ்க்கையைப் பார்த்து பழகிப்போன என்னைப் போன்றவர்களுக்கு அது ஒரு தனி உலகமாகத்தான் தெரிந்தது..

என்னருகில் அமர்ந்திருந்த அவ்விரு நடுத்தர இளைஞிகளுக்கும் ஆடுவதற்கு ஆசைதான்.. ஆனால் உடல் ஒத்துழைக்க வேண்டுமே.. சேர்த்து வைத்திருக்கும் சொத்து முழுவதுமே இடுப்பிலும் அதற்குக் கீழும் அல்லவா இருந்தது! இருக்கையிலிருந்தவாறே இடுப்பை வளைத்தும் கால்களை உதைத்தும் அவர்கள் பட்ட பாட்டை பார்த்து சிரிப்பதா அழுவதாவென தெரியாமல்..

நேரம் போனதே தெரியாமல் நள்ளிரவைக் கடந்து சுமார் இரண்டு மணி வரை நானும் அமர்ந்திருந்தேன்!

அடுத்த நாள் காலையிலேயே கிளம்பிச் செல்ல வேண்டியிருந்தவர்கள் காலை உணவுடன் விடைபெற்று செல்ல மழை சற்றே நின்றிருந்ததால் நானும் என்னுடைய நண்பரும் விடுதியையொட்டியிருந்த கடற்கரையை நோக்கி நடந்தோம்.

எங்களுடைய அறையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பச்சைப் பசேலென காட்சியளித்த புல் தரை, ஆங்காங்கே அம¨க்கப்பட்டிருந்த புதர்கள், மரத்தாலான டிசைனர் பாலங்கள், நீருற்றுகள் என அந்த சூழலே பார்க்க ரம்மியமாக இருந்தது.

வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் கடலும் ஆக்ரோஷமாக காட்சியளித்தது. சாதாரண உயரத்திற்கும் சற்று கூடிய உயரத்தில் அலைகள் கோபத்துடன் கரையை அறைந்துக் கொண்டிருக்கவே கடற்கரையில் விடுதியின் காவலர்கள் ஆங்காங்கே குளிக்க வருபவர்களைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர்.


சற்று நேரம் நின்றிருந்து மாசில்லாத காற்றை நெஞ்சு முழுக்க இழுத்து நிரப்பிக்கொண்டு பை, பை சொல்லிவிட்டு அறைக்கு திரும்பினோம்.

நன்பகல் விமானத்தைப் பிடித்து மும்பை வந்து சேர்ந்தபோது நல்ல மழை. நாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய விமானம் புறப்பட இன்னும் அரை மணியே இருந்த நிலையில் ஜெட் நிறுவனத்தின் மேலதிகாரி ஒருவர் எங்களுடைய விமானத்திற்கே வந்திருந்து போர்டிங் பாஸ்சில் கையொப்பமிட்டு கோவா விமானத்திலிருந்து சென்னை விமானத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றார்.

சென்னை வந்து சேர்ந்தபோது மாலை ஐந்து மணி..

இரண்டு இரவு மூன்று பகல்..

மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது கோவா பயணம்!

இத்துடன் Desk Top ல் சேமித்துக்கொள்ளும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் சேமித்துக்கொள்ளுங்கள்..

இப்போதெல்லாம் இந்த மலர்கள்தான் என்னுடைய மடிக் கணினியில் ஜொலிக்கின்றன.. அங்கிருந்து என்னுடைய செல் ஃபோனுக்கும் மாற்றி அங்கும் இவைதான் Desk Top Screens!

சார்.. போறும் சார்.. நாங்க ஒலகமெல்லாம் சுத்தி வந்துக்கிட்டிருக்கோம்.. நீங்க என்னவோ இங்கருக்கற கோவா போய் வந்துட்டு...

நிறுத்திட்டேன்:)

Image and video hosting by TinyPic

11 August 2006

கோவா பயணம் 2

ஆஹா.. போதையில் விழுந்தாலும் யாருக்கு தெரியப் போகிறதென்ற திருப்தியில் குடிமகன்கள் அனைவரும் கூடத்தின் பின் பகுதியிலிருந்த இருக்கைகளை தவிர்த்து கையிலிருந்த கோப்பைகளுடன் மெத்தைகளில் அமர இன்னிசை உதாஸ் சாப்பின் தங்கக் குரலுடன் துவங்கியது..


Photobucket - Video and Image Hosting
பங்கஜ் உதாஸ்சைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நான் பலமுறை அவருடைய பாடல்களை கேட்டிருந்தாலும், தொலைக் காட்சியில் பார்த்திருந்தாலும் அன்றுதான் அவரை மிக அருகில் இருந்து பார்க்கவும் அவருடைய இன்னிசையை கேட்கவும் முடிந்தது.

மாலை துவக்க விழாவில் அரங்கம் நிறைந்திருந்தாலும் அன்று இரவு இசை நிகழ்ச்சி குறிப்பிட்ட விருந்தினர்களுக்கென மட்டுமே நடந்ததால் அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை.

அரங்கத்தின் முன் பாதியில் தரையில் மெத்தைகளும் திண்டுகளும் பிற்பாதியில் சுமார் ஐம்பது இருக்கைகளும் என ஏற்பாடு சிறப்பாக இருந்தது.

காலையில் மிகவும் ஃபார்மலாக உடையணிந்து வந்திருந்த எல்.ஐ.சியின் முன்னாள் தலைவர், IIT Powai பேராசிரியர் உள்பட்ட அனைத்து முக்கிய விருந்தினரும் அவரவர் எத்னிக் உடைகளில் வந்திருந்தனர்.

என்னைப் போன்ற சிலர் டீஷர்ட், ஜிப்பா குர்த்தா உடையில். எல்லோருக்கும் கலர், கலரான துப்பட்டாக்களை இலவசமாகவே வழங்கினர்.

அரங்கம் மங்கலான விளக்கொளியில் மறைந்திருக்க பளிச்சென்ற விளக்கொளியில் மேடை பங்கஜ் உதாஸ் சாப் குழுவினர் காட்சியளித்தனர்.

சற்று முன் அரங்கத்திற்கு வெளியே கோப்பை கோப்பையாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தவர்கள்தான் - அந்த ஹீரோ உட்பட. அவரும் இசைக்கலைஞர்தான்- மேடையில் பங்கஜ் உதாஸ்சுடன் கலைஞர்களாக அமர்ந்திருந்தனர்!

அரங்கத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களுடைய கைகளில் இருந்த பாதி கோப்பைகளைப் பார்த்ததும் பங்கஜின் உதடுகளில் ஒருவித கேலிப் புன்னகை மலர 'தோடி, தோடி பியா கரோ' என்று துவங்க அரங்கமே வாஹ், வாஹ் என்று விகசித்தது.

அதனையடுத்து 'சாந்தி ஜைசா ரங் ஹை தேரா சோனே ஜைசா பால்,' பிறகு 'பியார் கரானே வாலே, ப்யார் காராத்தே ஹை ஷான் சே' என தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரம் உருது மற்றும் தூய ஹிந்தி பாடல்களை தனக்கே உரிய பாணியில் பாடிய போது என்னை போன்றவர்களுக்கு வார்த்தைகள முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவருடைய குரலிலும் உடனிருந்த இசைக் கலைஞர்களின் திறமையிலும் அமிழ்ந்துப் போய் நேரம் போனதே தெரியவில்லை.

கச்சேரி நடந்துக் கொண்டிருக்கையிலேயே அரங்கத்திலிருந்தவர்கள் அவ்வப்போது எழுந்து சென்று காலியாகிப்போன மது கோப்பைகளை நிரப்பிக் கொண்டு வருவதிலும் அவருக்கு எந்தவித இடைஞ்சலும் இருந்ததாக தெரியவில்லை.

உமர் கயாம் ஒரு நேரம் மசூதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தாராம். அப்போது ஒருவர், ‘இப்படி இறைவனின் சன்னிதானத்தில் மது அருந்தி புனிதத்தைக் கெடுக்கிறீர்களே’ என்று வருத்தப்பட்டாராம். அதற்கு உமர் ‘இறைவன் இல்லாத இடத்தை எனக்கு காட்டுங்கள் அங்கு மது அருந்தாமல் இருக்கிறேன்’ என்றாராம்.

ஆம்.. இறைவன் எங்குதான் இல்லை அங்கு மது அருந்தாமல் இருப்பதற்கு.

ஆனால் போதை தரும் மதுவும் பங்கஜ் அவர்களின் மனதை மயக்கும் இசையில் தோற்றுத்தான் போனது.

தொடர்ந்து எழுந்து சென்று மது கோப்பைகளை நிரப்புவதில் குறியாயிருந்த வெகு சிலரும் கச்சேரி சூடுபிடிக்க அதை மறந்தே போய் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அவ்வப்போது அரங்கத்தில் எழுந்த வாஹ், வாஹ் ஒலி இந்தியனாய் இருந்தும் மொழியில் அன்னியனாகிப் போனேனே என்று நொந்துப் போனேன்.

நள்ளிரவைக் கடந்து சென்ற அன்றைய இசையில் முழுமையாக மூழ்கிப்போன அனைவருமே அடுத்த நாள் காலையில் விழித்தெழ மிகவும் சிரமப்பட்டனர் என்பது அவர்களுடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

நானும் கண் விழித்தபோது மணி எட்டைக் கடந்திருந்தது. ஒன்பது மணி வரை காலை உணவு என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்ததால் குளித்து முடித்து காஷ¤வல் உடையில் முந்தைய நாள் இரவு உணவு பரிமாறப்பட்ட இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்த பஃபே வகை உணவை ஒரு கை பார்த்தேன்(!).

அடடடடா.. எத்தனை வகை உணவு.. இந்தியன் ரொட்டி எனப்படும் நான், பரோட்டாவிலிருந்து மேற்கத்திய வகை பேக்கன் வரை இருந்தும் நம் பக்கத்து இட்லி, கல் தோசை, உப்புமா சட்னி, சாம்பார் ருசியே தனிதானே..

புறப்படும்போதே என்னுடைய மனைவி இட்ட வேண்டுகோள் (உத்தரவு என்பதே சரி) காதில் ஒலிக்க நல்ல பிள்ளையாய் நம் பக்கத்து உணவு வகைகளோடு பசியை ஆற்றிக்கொண்டு.. முட்டை ஸ்க்ராம்பிள், முட்டை ம்லெட், பீஃப் சாண்ட்விச், என வகை வகையாய் அறுபது எழுபது வயதைக் கடந்த பெரியவர்கள் உள்ளே தள்ளுவதைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ‘பினா ஷக்கார் காஃபி தேனா’ என்று ஆர்டர் செய்வதை விட எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஹ¥ம்..

அன்றைய காலை நிகழ்ச்சிகள் சரியாக பத்து மணிக்கு துவங்கின. நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள் அனைவருமே இந்தியா பொருளாதார மற்றும் வங்கி உலகில் பிரபலமானவர்கள்.

அவர்களுள் ஐ.ஐ.டி பொவாய், மும்பை பேராசிரியர் டாக்டர் திபக் பத்தக் அவர்களின் நகைச்சுவைக் கலந்த பேச்சு மிகவும் பிடித்திருந்தது.

அவருடைய உரையின் இறுதியில் வேடிக்கையான கற்பனை நிகழ்ச்சி ஒன்றை விவரித்ததைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

இந்திய வங்கி உலகில் மேலதிகாரிகள் முக்கியமாக அரசு வங்கிகளில் கணினி மற்றும் தகவல் இலாக்காவில் தொழில்நுட்ப மாற்றங்களை வரவேற்க எவ்வளவு தயக்கம் காட்டுகின்றனர் என்பதை சுவைபட எடுத்துரைத்தார்.

பொதுவாகவே அரசு அதிகாரிகள், இதில் வங்கித்துறை மட்டும் விதிவிலக்காகுமா என்ன?, எந்த ஒரு முடிவு எடுக்கவும் தயங்குவார்கள். Pass the Buck Attitude தான் அதிகம் காணப்படும்.

வங்கித் துறையில் முக்கியமாக கணினி மற்றும் தகவல் துறை இலாக்காக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. காலதியாகிப் போன வன்பொருட்களை (Hardware) மாற்றி நடைமுறை சந்தையில் உள்ளவற்றை வாங்க அவர்களை மசிய வைப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதுவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனர் (CVC) என்ற அமைப்பு அமைக்கப்பட்டப் பிறகு தங்களுடைய எந்த ஒரு முடிவும் அவர்களால் பரிசீலிக்கப்படும் என்பதை காரணம் காட்டியே தங்களுடைய முடிவுகளைத் தள்ளிப்போடுவது வழக்கமாகிப்போனது.

கணினி இலாக்காவை சரிவர நடத்திச் செல்ல தகுதியான ஆட்களை பணிக்கு அமர்த்துவதும் அவ்வளவு எளிதானக் காரியமல்ல. இன்று வங்கித் துறையில் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கும் எவருமே கணினி துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. இருக்கவும் முடியாது. ஏனெனில் வங்கித்துறையில் இன்று உயர் பதவியில் இருப்பவர் அனைவருமே ஐம்பது, ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள். அவர்கள் கல்லூரியில் படித்த நாட்களில் கணினித் துறை சம்பந்தப்பட்ட படிப்பு இல்லை.

இருப்பினும் தங்களுக்கு பரிச்சயமில்லாத கணினி துறையை நிர்வகிக்க இளம் அதிகாரிகள் நிச்சயம் தேவை என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.

வங்கித் துறையில் நடைபெறும் பணியமர்த்தும் நடைமுறை செயல்பாட்டை (Recruitment Process) கேலி செய்து பத்தக் அவர்கள் இக்கற்பனை நிகழ்ச்சியை கூறினார்.

ஒருமுறை ஒரு வங்கி அதிகாரி தன்னுடைய வங்கி தலைமை அலுவலக வளாகத்திலிருந்த தென்னை மரங்களில் இருந்து காய்களைப் பறிக்க ஆள் எடுக்க விரும்பினார்.

எங்கே CVC நியதிகளை மீறினால் பிரச்சினையாகி விடுமோ என்று பயந்து ஒரு பணியமர்த்தும் வேலையை ஒரு வெளி மனித வள மேம்பாடு நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

அவர்கள் அதிகாரியின் அறிவுரைப்படி பணியில் அமர்த்தப்படுபவர்களின் தகுதிகளை பட்டியலிட்டனர்.

பணியமர்த்தபடுபவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல் தகுதி.

அதனைக் கண்ட அதிகாரி பதறிப்போய் ‘No, no. If you say that they should be human beings it would be treated as a specific brand and might be objected by CVC.’ என்றாராம்.

சரியென்று வேறுவழியின்றி தகுதி பட்டியலை மாற்றி அமைக்க.. அது கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது:

1. இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள் இருக்க வேண்டும். தகுதி மதிப் பெண்: 30
2. மரத்தில் வேகமாக ஏறி இறங்க தெரிந்திருக்க வேண்டும்: தகுதி மதிப்பெண்:60

மீதி பத்து மதிப்பெண்களுக்கு எந்த தகுதியை நிர்ணயிக்கலாம் என்று சிந்தித்த அதிகாரி இறுதியில் மூளையும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆக மூளைக்கு பத்து மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது.

தகுதிப் பட்டியல் வங்யின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதைக் கண்டு தங்களுக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்று நினைத்த பலரும் விண்ணப்பித்தனர்.

இதை காட்டில் வசித்த ஒரு குரங்கு பட்டாளமும் காண நேர அட! நமக்கேற்ற வேலை போலிருக்கிறதே என்று கருதி முழுப் பட்டாளமும் விண்ணப்பித்ததாம்.

மரம் ஏறுவதில் முழு மதிப்பெண்களையும் பெற்ற குரங்குப் பட்டாளம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட வங்கி அதிகாரி பரிந்துரைத்த நிறுவனத்தை நொந்துக்கொண்டாராம்..

இதை படிக்கிறபோது உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ இல்லையோ அவர் அன்று மேடையில் உடலசைவுகளுடன் எடுத்துரைத்தபோது அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

சிரிப்பொலி முழுவதுமாய் அடங்குவதற்குள் இந்திய செய்தி மற்றும் அரசியல் உலகில் புகழ் பெற்ற பத்திரிகையாளர் அருண் ஷோரியின் படு சீரியசான பேச்சு துவங்கியது.

அவர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாஜ்பேயி தலைமையிலான தன்னுடைய அரசு என்னவெல்லாம் செய்தது என்று எடுத்துரைத்ததுடன் நில்லாமல் இப்போதைய மன்மோகன்சிங் அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற தோரணையில் பேச அரங்கத்திலிருந்த பலரும் முகம் சுளித்தனர்.

சாதாரணமாக பத்திரிகைகளில் காரசாரமாக எழுதும் அருண் ஷோரி அன்று அவ்வளவாக பிரகாசிக்கவில்லையென்றுதான் கூறவேண்டும். சில கட்டங்களில் தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் திணறி நின்றதும் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

அரங்கத்தில் குழுமியிருந்த வங்கித்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆற்ற வேண்டிய உரையின் தரம் அவருடைய அன்றைய பேச்சில் இல்லை என்றுதான் கூறவேண்டும்..

எப்போதடா முடியும் என்று காத்திருந்தவர்கள் அவருடைய உரையின் முடிவில் பேருக்கு கரவொலி எழுப்பிவிட்டு உணவு இடைவேளைக்கு விரைந்தனர்.

வெளியே அடை மழை!

நானும் என் நண்பரும் காலையிலேயே எங்களுடைய கோவா கிளை மேலாளரிடம் பழைய கோவாவில் அமைந்திருந்த தூய சவேரியார் தேவாலயத்துக்கு செல்ல ஒரு வாகனத்தை ஹோட்டலுக்கு அனுப்புங்கள் என்று கூறியிருந்தோம்.

அவரும் சரியாக இரண்டு மணிக்கு வாகனத்துடன் வந்து சேர பகலுணவை முடித்த கையோடு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நானும் என் நண்பரும் செமினாருக்கு மட்டம் போட்டுவிட்டு கிளம்பினோம்..


Photobucket - Video and Image Hosting
படங்களுடன் அடுத்த இறுதிப் பதிவில்..

10 August 2006

கோவா பயணம் 1

என்னுடைய வீடு கட்டுமான பணியில் நான் சந்தித்த பிரச்சினைகள் முடிந்து மீதமுள்ள கட்டுமான பணிகள் நடந்துக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் நான் சமீபத்தில் 'விடுமுறையில்' கோவா சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு..
நான் ஐந்து நாட்களுக்கு விடுப்பு என்று அறிவித்ததுமே ‘விடுமுறைய ஜாலியா குடும்பத்தோட போய்ட்டு வாங்க சார்’ என்று வாழ்த்து தெரிவித்த நம் தமிழ் மண நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஆனால் அது உண்மையில் விடுமுறையல்ல. அலுவலக வேலையாகத்தான் கோவா செல்ல வேண்டியிருந்தாலும் அதுவும் ஒருவகை விடுமுறைபோல்தான் இருந்தது.

உலகின் மிகப் பெரிய வலை இணைப்பு நிறுவனமான (Networking Company) சிஸ்கோ வங்கி, காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கருத்தரங்கை (Seminar) கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த கருத்தரங்கிற்கு அழைப்பு வந்திருந்தபோதும் சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக எங்களுடைய வங்கியிலிருந்து யாரும் கலந்துக்கொள்ள இயலவில்லை.

ஆகவே இம்முறை நிச்சயம் வரவேண்டும் என்று எனக்கு மிகவும் நன்கு பரிச்சயமாயிருந்த நண்பர் ஒருவர் வற்புறுத்தியதால் என்னுடைய வங்கியிலிருந்து நானும் என்னுடைய இலாக்காவின் உதவி தலைவரான ஒரு துணைப் பொது மேலாளரும் கலந்துக்கொள்வதென தீர்மானித்தோம்.

இவ்வாண்டின் கருத்தரங்கு கோவாவின் பிரபல ஐந்து நட்சத்திர அந்தஸ்த்துடைய விடுமுறை வாசஸ்தலமான (Holiday Resort) பார்க் ஹையாட் (Park Hyatt Goa Resort and Spa)ல் இம்மாதம் மூன்றாம் தேதி மாலையில் துவங்கி ஐந்தாம் தேதி முடிவடைந்தது.

அதற்காக மூன்றாம் தியதி காலையில் சென்னையிலிருந்து மும்பைக்கு பறந்து அங்கிருந்து நன்பகல் கோவாவிற்கு பறந்தோம். சரியாக பகலுணவிற்கு அங்கு சென்றடைந்தோம். விமானத்தில் பகலுணவு என்ற பெயரில் வாய்க்கும் வயிற்றுக்கும் ஒட்டாத அளவு உணவு கிடைத்தும் கோவா சென்றடைந்தபோது பசி வயித்தைக் கிள்ளியது.

நிர்வாகத்திற்கு பெயர்பெற்ற இரு நிறுவனங்கள் சேர்ந்து (Cisco and Park Hyatt) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு என்றாலும் அங்கு சென்ற சேர்ந்த நேரத்தில் எங்களில் மிகச் சிலருக்கே அறைகள் தயாராக இருந்தன.இரண்டு நிறுவனங்களையும் சார்ந்த பல கடை, இடை, மேல் நிலை அதிகாரிகள் கைகளைப் பிசைந்துக்கொண்டு நின்ற காட்சியைக் கண்டதும் இதற்கு எங்கள் வங்கியே மேல் என்று தோன்றியது எனக்கும் என் நண்பருக்கும்.

ஒரு கேலிப் புன்னகையுடன் அவர்களுடைய தர்மசங்கட நிலையை ரசித்துக்கொண்டு நின்றோம். நாங்கள் இருவரும் மலையாளத்தில் உரையாடிக்கொண்டிருந்ததை செவியுற்ற ஒரு கோட் சூட்டிலிருந்த சிஸ்கோ நிறுவனத்தின் ஒரு மேல் நிலை அதிகாரி எங்களை நெருங்கி ‘ஞானும் மலையாளியானெ..’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் வாயை மூடிக்கொண்டு சும்மா இராமல், ‘அதான எங்கடா காணமேன்னு பார்த்தேன்.’ என்றேன் நக்கலாக.

அவர் அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் வாய் விட்டு சிரித்தார். ‘You are absolutely right sir. There is no place in this world where you can’t find a Malayalee.’ என்று அவர் தங்களுடைய மாநில மக்களின் அருமை பெருமைகளை பேச ஆரம்பிக்க அதே மாநிலத்தைச் சார்ந்த என்னுடைய நண்பரும் அவருடன் சேர்ந்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் அறை ஒதுக்கப்பட அரை மணி நேரத்துக்கும் மேலாகியும் நேரம் போனதே தெரியாமல் என்னுடைய நண்பரும் அவரும் சேர்ந்து ‘அறுத்து’ தள்ளிவிட்டனர்.

எங்களுடைய அறைகளின் அனுமதி அட்டை (Door Card) கிடைத்ததும் பெட்டியை சிஸ்கோ நிறுவனத்தின் கடைநிலை அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அருகிலிருந்த அறையில் தயாராயிருந்த பகலுணவை முடித்துக்கொண்டு அவரவர் அறைக்கு சென்றோம். ஐந்து நட்சத்திர விடுதிகளில் கிடைக்கூடிய தரத்துடன் இருந்த buffet lunch உண்மையிலேயே நன்றாக இருந்தது.

வரவேற்பறையிலிருந்தபோது தெரியாத பிரம்மாண்டம் எங்களுடைய அறைக்கு செல்ல புறப்பட்டபோதுதான் தெரிந்தது. சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்த விடுமுறை மற்றும் கேளிக்கை விடுதி பார்க்கும் இடமெல்லாம் டிசைனர் லேண்ட்ஸ்கேப் அமைப்புடன் பச்சை பசேலென இருக்க உடனே கையோடு கொண்டு வந்திருந்த டிஜிட்டல் (Cannon A342) காமராவை எடுத்து முடிந்த அளவு வீடியோவாகவும் ஸ்டில்களாகவும் பிடித்துக்கொண்டேன். மழை துளிகள் பூவென காற்றுடன் சேர்ந்து முகத்தை ஊசியாய் குத்த மீதமுள்ள இடங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அறைக்கு சென்றேன். இதற்கெனவே ஏறக்குறைய எல்லா அறை வாசலிலும் பிக்னிக் குடைகளை வைத்திருந்தனர்.நாளொன்றுக்கு ரூ.4000 முதல் 12000/- வரை வாடகை என்ற பலதரப்பட்ட அறைகளை மூன்று நாட்கள் இரண்டு இரவுகள் என்ற பாக்கேஜில் ரூ.3,000/- முதல் 9000/-வரை என்று ஏற்பாடு செய்தோம் என்று சிஸ்கோ அதிகாரி ஒருவர் கூறியபோது ‘ரீல் விடாதிங்க சார்’ என்று நினைத்த நான் என்னுடைய அறையைக் கண்டதும் உண்மைதான் போல என்று நினைத்தேன். அழைக்கப்பட்டிருந்த விருந்தினரின் பதவியைப் பொருத்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பதை என்னுடைய நண்பரின் அறையைப் பார்த்ததும் உணர்ந்தேன்.

சென்னையிலும் மும்பையிலும் பல ஐந்து நட்சத்திர விடுதிகளில் அலுவலின் நிமித்தம் பலமுறை தங்கியிருந்தாலும் கோவா விடுதியின் அறையின் அலங்காரமும் வசதிகளும் உண்மையிலேயே என்னை அசர வைத்தன. அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது. என்னுடைய மனைவிக்காகவே அறை முழுவதும் நடந்து வீடியோவில் பதிந்துக்கொண்டேன்.

அன்று மாலை நடக்கவிருந்த துவக்க விழாவுக்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த மடிக் கணினியை எடுத்து நம் வலைப்பூவைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது.

அறையில் அதற்கெனவே ஒரு இணைப்பும் இருந்தது. அதை என்னுடைய கணினியில் இணைத்து முடித்ததுமே ஒரு பாப் அப் ஸ்க்ரீன் வந்து பயமுறுத்தியது. இணைய வசதிக்கு நாளொன்றுக்கு ரூ.800!

இது தேவையா என்று என்னை நானே கடிந்துக்கொண்டு இணைப்பை துண்டித்துவிட்டு மொபைலில் நாலரை மணிக்கு அலாரம் வைத்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருந்ததால் மொபைலின் மெல்லிய அலார ஒலி என்னை எழுப்ப முடியாமல் போக என்னுடைய அறையிலிருந்த இண்டர்காமின் ஓங்கார ஒலி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பியபோது மணி ஐந்தைக் கடந்திருந்தது!

‘எந்தா சாரே ஒறங்கியோ.. இவ்விட சாரெயொழிச்சி பாக்கி சகலரும் வந்துண்டு கேட்டோ..’ என்ற என் நண்பருடைய ஒலி செவியில் விழ அடித்து பிடித்துக்கொண்டு எழுந்து பேருக்கு குளித்து முடித்து உடுத்திக்கொண்டு கிளம்பினேன்.

என் நண்பர் கூறியிருந்ததுபோல துவக்க விழா கூடம் முழுவதும் சுமார் நூறு பேர் குழுமியிருக்க மேடையில் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் அமர்ந்துக்கொண்டிருந்தனர்.

நான் வாசலில் நுழைந்ததுமே கூடத்தின் மத்தியில் அமர்ந்திருந்த என்னுடைய நண்பர் கையைசைத்து சிக்னல் செய்ய அரையிருட்டில் சில பல கால்களை மிதித்துக்கொண்டு என்னுடைய இருக்கையை சென்றடைந்தேன்.

விழாவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த கோவா மாநிலத்தின் முதன்மை காரியதரிசி (Chief Secretary)யின் துவக்க உரையுடன் துவங்கிய விழா சரியாக இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக முடிந்தது.

விழாவின் முடிவில் இரவு 8.45 மணிக்கு நடக்கவிருக்கும் ஹிந்தி கஜல் பாடகர் பங்கஜ் உஸ்தாதின் இசை விருந்தில் சந்திப்போம் என்ற அறிவுப்புடன் விடைபெற்று அவரவர் அறைக்கு திரும்பினோம்.

அன்று இரவு சரியாக எட்டு மணிக்கு துவக்க விழா நடந்த கூடத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த விசாலமான வராந்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாக சாந்தி துவங்கியது.
முன்னாள் காப்புறுதி கழகத் தலைவர், முன்னாள் மும்பை ஐஐடி பேராசிரியர் ஒருவர், மும்பை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் என்ற வி.வி.ஐ.பியிலிருந்து என்னைப் போன்ற வங்கி கணினி இலாக்கா தலைமையதிகாரிகள் மற்றும் இலாக்காவில் பணிபுரிந்த இள நிலை அதிகாரிகள் என சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வயது அந்தஸ்த்து வேறுபாடுகளை மறந்து ஒரே ‘குடிமகன்களாக’ குழுமியிருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அதில் ஒரு மூலையில் குழுமியிருந்த கையளவு எண்ணிக்கையுள்ள அதிகாரிகள் குழுமத்தைப் பார்த்தேன். அருகில் சென்றபோதுதான் தெரிந்தது கையில் பழசாற்றுடன் நின்றிருந்த அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் என்று. அவர்கள் எல்லோரையுமே பல கூட்டங்களில் சந்தித்திருந்ததால், ‘என்ன சார் மறுபடியும் ஒன்னா கூடி இந்த சூழ்நிலையையே கெடுக்கிறீங்களே?’ என்றேன் வேடிக்கையாக.

என்னுடைய கையிலிருந்த மது பானத்தைப் பார்த்த அவர்கள், ‘ஒங்களுக்கென்ன சார்.. அதான் நீங்க அந்த மாநில ஆளாவே மாறிட்டீங்களே?’ என்று பதிலுக்கு கிண்டலடிக்க இரவு களைகட்டியது.

என்னுடைய நண்பர் எங்களை விட்டு விலகி அவருடைய ‘நாட்டுக்கார’ கும்பலுடன் சேர்ந்துக்கொள்வதைப் பார்த்தேன். சரி நமக்கு ஒரு கும்பல்னா அவருக்குன்னு ஒரு கும்பலும் வேண்டுமே என்று நினைத்து கண்களை வராந்தா முழுவதும் அலைய விட்டேன். அன்றைய இரவு எப்படியும் அடுத்த நாள் விடியற்காலையில்தான் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த பலரும் சாவகாசமாக ‘அதை’ பருகிக்கொண்டிருக்க மூலையில் நான்கு பேர் அடங்கிய ஒரு சிறு குழுமட்டும் கபக், கபக்கென 'அதை' கோப்பை கோப்பையாக விழுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அனைவருமே கலரிலும், பாவனையிலும் ஹிந்தி திரைப்பட நடிகர்கள் போல தெரிந்தனர். அதில் ஒருவர் மட்டும் தலை நிறைய கருகருவென்ற சுருட்டை முடியுடன் அசல் ஹீரோ போன்று இருந்தார். நான் அவர்களையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, ‘என்ன சார் அப்படி மெய் மறந்து பாக்கீங்க? அவங்க யாருன்னா? இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்து பாருங்க தெரியும்.’ என்று என் விலாவை இடித்தார் நண்பர் ஒருவர்.

இரண்டு பெக்குகள் உள்ளே தள்ளுவதற்கு முன்பே கூடத்திலிருந்து திறந்திருந்த கதவுகள் வழியாக வந்தது அழைப்பு, ‘Pankaj saab is ready to start the programme. Please come in.’ என்று. கையில் பழச்சாற்றுடன் நின்றிருந்த அனைவரும் கோப்பைகளுடன் உள்ளே நுழைய என்னைப் போன்றவர்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றோம். அடுத்த நொடியிலேயே எங்களுக்கும் அழைப்பு வந்தது, ‘Don’t worry about your glasses. Carry them in.’ என்று.

இது போதாதா என்ற நினைப்புடன் அனைவரும் உள்ளே நுழைய பாதி கூடத்திற்கு தரையில் மெத்தைகள் விரிக்கப்பட்டு சாய்ந்துக்கொள்ள உருட்டை தலையணைகளும் இருந்தன..

ஆஹா.. போதையில் விழுந்தாலும் யாருக்கு தெரியப் போகிறதென்ற திருப்தியில் குடிமகன்கள் அனைவரும் கூடத்தின் பின் பகுதியிலிருந்த இருக்கைகளை தவிர்த்து கையிலிருந்த கோப்பைகளுடன் மெத்தைகளில் அமர இன்னிசை உஸ்தாத் சாப்பின் தங்கக் குரலுடன் துவங்கியது..

தொடரும்.