22 ஜூலை 2006

கடந்து வந்த பாதை 3

செல்வராணி டீச்சர்

ஹீரோ ஒர்ஷிப் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். என்னுடைய பள்ளி பருவத்தில் எனக்கு ஒருவர் மீது ஹீரோயின் ஒர்ஷிப் இருந்தது.

அவர்தான் என்னுடைய பள்ளி ஆசிரியை செல்வராணி. சகலகலாவல்லி.

அவருடைய பதவி என்னவோ ஓவிய ஆசிரியைதான். ஆனால் அவரில்லாமல் அந்த பள்ளியே அசையாது என்பதுபோன்ற ஒரு ஆதிக்கம்....

ஓவியம் வரைவது அவர் கற்றறிந்தது. ஆனால் கல்லாதது உலகளவு என்பார்களே அதுமாதிரி அவருக்கு கைவராத கலைகளே இல்லையெனலாம்.

பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தின விழா, தலைமையை ஆசிரியையின் பிறந்தநாள் விழா என எல்லா விழா கொண்டாட்டங்களையுமே அவருடைய ஈடுபாடில்லாமல் நடத்தவே முடியாது.

அதனால்தான் அவரை சகலகலாவல்லி என்றேன்.

நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியளித்து, இயக்கி வேண்டுமென்றால் அவரும் நடித்து கலக்கிவிடுவார்.

என்னுடைய அதே பள்ளியில் மெர்சி என்றொரு ஆசிரியையும் இருந்தார்.

என்னுடைய நாயகியான செல்வராணி என்னைப்போலவே கருத்த மேனியைக்கொண்டவர் என்றால் அந்த மெர்சி செக்கச் செவேல் என ஜொலிக்கும் கலரில்..

செல்வராணி தலித் இனத்தை சார்ந்த சராசரி பொருளாதாரத்தில் நடுத்தரத்துக்கும் சற்று தாழ்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர். குடும்பத்தில் மூத்தவர். இரு தங்கைகள், இரு தம்பிகள், உடல் ஊனமுற்ற தாய். தந்தையை இளம் வயதிலேயே பறிகொடுத்தவர் என்பதால் முப்பது வயதைக் கடந்தும் திருமணத்தைப் பற்றி சிந்திக்கக்கூட திராணியில்லாமல் இருந்தவர்.

மெர்சியோ நேர் எதிர். சென்னை வேப்பேரி வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஜவுளிக்கடை முதலாளியின் ஒரே வாரிசு. மேற்குடியினர் என்று என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். அழகும் பணமும் அந்த காலத்திலேயே பட்டதாரி ஆசிரியை என்ற கர்வமும்..

அவரும் படு திறமைசாலிதான். அவருக்கும் செல்வராணி டீச்சருக்கிருந்த எல்லா திறமைகளும் இருந்தன. அவர் ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஆசிரியை. அந்த வகுப்பு மாணவர்கள் பங்குபெறும் நாடகங்களை மெர்சி டீச்சரே எழுதி இயக்கி தனக்கு பிடித்த நல்ல நிறமுள்ள, அம்சமான மாணவர்களை மட்டுமே தெரிந்தெடுத்து நடிக்கவைப்பார்.

அவருக்கு என்னைப்போன்ற கருத்த நிறமுள்ள மாணவர்களை ஏன் சக ஆசிரியர்களைக்கூட கண்டாலே பிடிக்காது. வெறுப்பை நேரே முகத்திற்கு முன்னரே காட்டுவார். ஆகவே நான் அவருடைய வகுப்பில் படித்தாலும் என்னை அவருடைய எந்த நாடகத்திலும் தேர்வு செய்யமாட்டார்.

நான் ஆறாவது படித்து முடிக்கும்வரை செல்வராணி டீச்சருக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். அவருடைய எல்லா நாடகங்களிலும் குறிப்பாக கிறித்துவ மத வேதபுத்தகத்திலிருந்து தயாரிக்கப்படும் நாடகங்களில் நிச்சயம் நான் இருப்பேன். ‘மேக்கப் போட்டுட்டா கருப்பென்ன செவப்பென்னடா.. நல்லா வசனம் பேசி நடிச்சா போறும்.’ என்பார். அவர் வசனம் பேசி, நடித்துக்காட்டுவதில் பாதியை செய்தாலே போதும்.. சமாளித்துவிடலாம். அப்படியொரு திறமையான நடிகை அவர். அவரே பாடல்களை எழுதி ஒரு ஆர்மோனிய பெட்டி மற்றும் தபேலா சகிதம்  இசையமைத்து, அவரே பாடவும் செய்வார். இனிமையான குரலுக்கும் சொந்தக்காரர் அவர்.

எனக்கு நினைவிலிருக்கும்வரை எங்களுடைய பங்கு தேவாலயத்தில் (எனக்கு திருமணம் நடந்ததும் இதே தேவாலயத்தில்தான். அத்தனை வருடங்கள் ஒரே பங்கில் இருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!) செல்வராணி டீச்சர்தான் ஆர்மோனியத்தை வாசிப்பார். பாடகர் குழுவில் யார் வந்தாலும் வராவிட்டாலும் ஒற்றை ஆளாக இருந்து ஜமாய்த்துவிடுவார். பார்ப்பவர்களையெல்லாம் கடித்துக் குதறும் எங்களுடைய பங்கு குருவும் கூட செல்வராணி டீச்சரை தனி மரியாதையுடன் நடத்துவார்.

என்னுடைய பள்ளியில் ஆறாம் வகுப்புவரையிருந்த மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் ஒரு குழுவாகவும் அதற்குமேல் எட்டாவது வரை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் வேறொரு குழுவாகவும் பிரிந்து நிற்பதை பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ மாணவர்களும் அப்படித்தான்.

பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டங்களும் கூட இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறு நாட்களில்தான் நடக்கும். முதல் குழுவினருக்கு செல்வராணி டீச்சர் தலைவி என்றால் மெர்சி டீச்சர் இரண்டாவது குழுவுக்கு தலைவி.

ஆறாம் வகுப்பு வரை செல்வராணி டீச்சரின் நாடகங்களில் எல்லாவற்றிலும் நான் இருந்தேன். ஏழாம் வகுப்புக்கு மாறியதும் மெர்சி டீச்சர் எனக்கு வாய்ப்பளிப்பார் என்று காத்து ஏமாந்தது இப்போதும் நினைவிருக்கிறது. ஒருநாள் ஏமாற்றத்துடன் நான் வகுப்பில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தபோது செல்வராணி டீச்சர் வந்து என்னை அப்படியே அணைத்து ஆறுதலளித்து என்னை தேற்றியதும் இன்றும் நினைவில் நிற்கிறது. அன்று முதல் அவர்களுடைய நாடகங்களில் என்னையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அதுவே மெர்சி டீச்சருக்கும் அவருக்கும் இடையே இருந்த பகையை ஊதி பெரிதாக்கியது.

அவர்களுக்கிடையே அவ்வப்போது நடந்த சில்லறை தகராறுகளையும் வாக்குவாதங்களையும் இப்போது நினைத்து பார்க்கிறேன். வேடிக்கையாக இருக்கிறது..

நான் எட்டாவது முடித்து காட்பாடி செல்ல இதெல்லாம் மனதில் நீங்காத நினைவாக நின்றுபோனது..

அதன் பிறகு நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்தும் என்னுடைய பள்ளி இருந்த அதே சாலையில்தான் வசித்துவந்தோம். நாங்கள் சென்றதும் அதே தேவாலயம்தான்.

செல்வராணி டீச்சரை நான் பலமுறை சாலையில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் என்னை அவர் அடையாளம் தெரிந்தும் தவிர்க்க முயன்றதை பார்த்திருக்கிறேன். என்னுடைய பள்ளிப்பருவதில் நான் பார்த்த டீச்சரல்ல அவர். முகமெல்லாம் சோர்ந்துபோய், துள்ளல் இல்லாத நடையுடன் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். அப்போதெல்லாம், ‘என்ன டீச்சர் என்னெ அடையாளம் தெரியலையா.. நாந்தான் டீச்சர் போஸ்கோ’ என்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய பெயரைப் பற்றி ஒரு இடைச்செருகல். என்னுடைய முழுப்பெயர் தாமஸ் போஸ்கோ ரொசாரியோ ஜோசஃப் ஃபெர்னாண்டோ (அப்பாடா முழுசா மூச்சுவிடாம சொல்லிட்டேன்) முதல் பெயர் என்னுடைய தந்தையுடையது. இரண்டாவது, என்னுடைய தாய் மாமன் (இரண்டாவது மாமா) மூன்றாவது, என்னுடைய சித்தியின் பெயர் (Our Lady of Rosaryயைக் குறிக்கிறது எனவும் கொள்ளலாம்) நான்காவது பெயர் என்னுடைய தாத்தா சூசை மாணிக்கம். ஐந்தாவது, என்னுடைய குலப்பெயர். என்னுடைய பள்ளியிறுதி மற்றும் பி.காம் பட்ட சான்றிதழ்களிலெல்லாம் இந்த முழுப்பெயரும் இருக்கும்.. குலப்பெயரைத் தவிர.. என்னுடைய தந்தை நல்லவேளையாக இந்த குலப்பெயரை ஆரம்பத்திலேயே தவிர்த்திருந்தார். நான் பணியில் சேர்ந்தபோதுதான் அதை சுருக்கி டி.பி.ஆர். ஜோசஃப் என்று வைத்துக்கொண்டேன். (ஆமா, இது ரொம்ப முக்கியம்!)

செல்வராணி டீச்சர் தயக்கத்துடன், ‘தெரியாமயா.. நீ பண மரம் மாதிரி வளர்ந்து நிக்கற.. ஒங்கிட்ட நின்னு பேசறதுக்கே தயக்கமாருக்கு.. ஒங்கப்பாக்கிட்டதான் ஒன்னைய பத்தி அப்பப்ப கேட்டுக்குவேன்..’ என்றவாறு கழன்றுக்கொள்வார்.

என்னுடைய திருமணம் தூத்துக்குடியிலும் பின்னர் சென்னையில் இதே பங்கு ஆலய வளாகத்தில் வரவேற்பும் (Reception) நடந்தபோதுகூட ‘வரமுடியவில்லை போஸ்கோ’ என்று தன் சகோதரருடைய பிள்ளைகள் மூலம் செய்தியனுப்பியது நினைவிருக்கிறது.

அப்போதுதான் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார் என்பதை அறிந்துக்கொண்டேன். பிறகு அவரை சந்திக்கவே முடிந்ததில்லை.

பிறகு நானும் பதவி உயர்வு பெற்று ஊர் ஊராக மாறிச் சென்று 1987ம் ஆண்டு மீண்டும் சென்னை கிளை ஒன்றிற்கு மேலாளராக திரும்பி வந்தேன். சென்னை கீழ்ப்பாக்கம் அன்னை பாத்திமா பங்கு தேவாலயத்துக்கு அருகில் குடியிருந்தேன். அதே வளாகத்தில்தான் மெர்சி ஹோம் இருந்தது (ரஜினிகாந்தும் குட்டி மீனாவும் நடித்த ‘அன்புள்ள ரஜினி’ திரைப்படத்தை இங்குதான் படம் பிடித்தனர்).

என்னுடைய அலுவலக விஷயமாக அந்த மெர்சி ஹோம் இல்லத்தின் தலைவியாகவிருந்த கன்னியரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது, ‘ஒங்களுக்கு சேத்துப்பட்டுலருக்கற முதியோர் இல்லத்துல பார்ட் டைம் சோஷியல் ஒர்க்கரா வேல செய்யறதுக்கு விருப்பமா?’ என்றார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சரி என்று சம்மதித்தேன். அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலையே முதியோர் இல்ல தலைவியை சென்று சந்தித்து அந்த வார இறுதியிலிருந்தே என் பணியை துவக்கினேன்.

ஒவ்வொரு வாரமும் சனி மாலையும் ஞாயிறு காலையிலிருந்து நண்பகல் வரை சென்றால் போதும்.

இல்லத்திலிருந்த முதியோர்களுக்கு உணவூட்டுவது, அவர்கள் உடுத்த உதவுவது, சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து வளாகத்தினுள் மாலை உலா அழைத்து செல்வது இப்படிப்பட்ட சிறு, சிறு உதவிகளை செய்வதுதான் நம் பணியாக இருக்கும்.

இல்லத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்தனர். அவர்களுடன் மாலை நேரங்களில் அமர்ந்து அவர்கள் கூறுவதை கேட்பதும் ஒரு பணியாகும். ஆனால் அதுதான் மிகவும் சிரமமான பணி. ஒவ்வொருவருடைய கதையும் ஒரு தனி சோகம். கேட்கவே மனம் தாங்காது. அங்கு பணியாற்றிய சுமார் இரண்டாண்டு காலத்தில் (அதன்பிறகு மாற்றலாகி சென்றுவிட்டதுதான் காரணம்) எத்தனை நாள் நிம்மதியாக உறங்கியிருப்பேன் என்பது கேள்விக்குறி. அவர்களுடைய அனுபவத்தை கேட்டு  நம்முடைய மனம் அப்படி  பதறிப்போகும்.. அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகவே கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்..

அந்த இல்லத்திலேயே பலர் மரித்துவிடுவர். நாள்தோறும் ஒரு மரணமாவது இருக்கும். அந்த சமயங்களில் அவருடைய பிள்ளைகளும், சகோதர, சகோதரிகளும் போடும் நாடகங்களை நேரில் பார்க்கவேண்டும். என்ன உலகமடா இது என்று எண்ணத்தோன்றும்..

வாழ்ந்த காலத்தில் யாருக்கும் வேண்டப்படாதவர்களாகிவிடும் இவர்களுடைய மரணத்திற்குப்பிறகு சடலத்தை கொண்டு செல்ல துடிக்கும் துடிப்பு என்ன, மேள தாளத்துடன் அவர்களை அலங்கார ஊர்திகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதென்ன..

அப்படி பல மரணங்களை சந்தித்து வெறுத்துப்போய் நாளடைவில் அந்த சம்பவங்களையே கண்டுகொள்ளாமலிருக்க ஆரம்பித்தோம் நானும் என்னைப் போன்ற சக ஊழியர்களும்.

ஆனால் அன்று ஏனோ தெரியவில்லை என்னால் அப்படி இருக்க முடியவில்லை..

அந்த மரணத்திற்கு வந்திருந்த பலரும் எனக்கு அறிமுகவானவர்களாக இருந்தனர். அதாவது என்னுடைய பள்ளி தோழர்கள், என்னுடைய பழைய வேப்பேரி தேவாலய நண்பர்கள், பாடகர்குழுவைச் சார்ந்தவர்கள் என ஏறத்தாழ எல்லோருமே எனக்கு பரிச்சயமான முகங்களாகவே இருந்ததும் ஒரு காரணம்..

என்னை அடையாளம் கண்டுகொண்டு புன்னகை செய்த என் பள்ளி தோழன் ஒருவரை அணுகி, ‘யார்றா.. ஒங்க ஒறவுக்காரங்க யாராச்சுமா?’ என்றேன்.

அவர் வியப்புடன், ‘என்னடா போஸ்கோ தெரிஞ்சிதான வந்திருக்கே.. அப்புறம் எதுக்கு கேக்கே?’ என்றார்.

‘இல்லடா.. நா இங்கதான் பார்ட் டைம் ஒர்க்கரா இருக்கேன். எல்லா வாரமும் சனி, ஞாயிறு இங்கதான் இருப்பேன். அதான் வந்தேன்.. யார்றா இறந்தது?’ என்றேன்.

‘நம்ம செல்வராணி டீச்சர்றா. இன்னைக்கி காலைலதான் இறந்துருக்காங்க. டீச்சருக்கு பிரதர்ஸ், சிஸ்டர்சுன்னு இருந்தும் யாருமே அவங்க குடுத்த விலாசத்துல இப்ப இல்லையாண்டா.. என்ன அநியாயம் பாத்தியா? அப்படியே இருந்தாலும் அதெப்படிறா நமக்கு தெரிஞ்சிருக்கறப்ப அவங்க யாருக்கும் தெரியாம இருக்கும்? ஆனா இதுவரைக்கும் யாருமே வரல பாரேன்.. அதான் இங்கருக்கற சாப்பல்லயே பூசைய வச்சிட்டு நாங்களே கீழ்பாக்கம் கல்லறையில அடக்கம் செஞ்சிரலாம்னு நிக்கோம்.’

நாமளும் போன ஒரு மாசமா இங்க வந்துக்கிட்டிருக்கோம். இவங்கள மிஸ் பண்ணிட்டோமே என்று மாய்ந்து போனேன். கூட்டத்தை விலக்கிக்கொண்டு தேவாலய பீடத்திற்கு முன்பு சவப்பெட்டியில் வைத்திருந்த உருவத்திற்கு அருகில் சென்று பார்த்தேன். ‘இவங்களா, இவங்களா என்னோட செல்வராணி டீச்சர்?’என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய உருவம் முற்றிலுமாக சீர்குலைந்து போயிருந்தது. இவர்களை நான் பலமுறை இதே இல்லத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று நினைத்தபோது மனம் ஆறவில்லை..

பிறகுதான் தெரிந்தது..

அவர் வளர்த்து ஆளாக்கிவிட்ட இரு சகோதரர்களும், சகோதரிகளும் நல்ல நிலையில் சென்னையிலேயே இருந்தும் யாரும் அவரை தங்களுடன் வைத்து காப்பாற்ற விரும்பவில்லை என்று..

‘பாவிப்பயலுக.. வாழ்ந்தபோது வராட்டாலும் சாவுக்காவது மூனாம் மனுசங்கபோல வந்து போகக்கூடாது?’ என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மரணத்துக்கு வந்திருந்த ஒரு வயதானவர்..

அதானே?



********






15 கருத்துகள்:

  1. மனசு கனத்துப் போச்சுங்க. இங்கேயும் முதியோர்கள் இல்லத்துலெ 'கதைகள்' ஏராளம்.
    ஆனா ஒண்ணு, அரசாங்கம் காசு கொடுத்துருது.

    நானும் முந்தியெல்லாம் போயிட்டுவந்த நாலு நாளைக்கு மனசைப் போட்டு உழப்பிக்கிட்டு இருப்பேன்.
    அப்புறதான் கோபால் என்ன அங்கே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

    டீச்சரின் சொந்தக்காரர்கள் ......என்ன மனுஷங்க(-:

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி

    அப்புறதான் கோபால் என்ன அங்கே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.//

    நல்லதுக்குத்தாங்க. நானும் ஒரு வருசத்துக்கு முன்னால சென்னை திரும்பி வந்தப்போ மறுபடியும் அங்க போனா என்னன்னு நினைச்சேன். ஆனா ப்ள்ட பிரஷர் இருக்கறதுனால என் வீட்ல வேணாம்னு தடுத்துட்டாங்க.

    அப்பப்போ அங்க போறதுதான். ஆனா இல்லத்துலருக்கறவங்க கிட்ட அவ்வளவா பேசிக்கறமாட்டேன்..

    அவங்கள பாக்கும்போதெல்லாம் மனசு கிடந்து அடிச்சுக்கும். நமக்கும் இப்படி ஒரு நிலைமை வந்தா..ன்னு தோனும்.. அப்படியொரு நிலமை வரக்கூடாதுன்னு நினைப்பேன்..

    டீச்சரின் சொந்தக்காரர்கள் ......என்ன மனுஷங்க(-://

    ஆமாங்க.. ஏறக்குறைய அங்கருந்த எல்லாருக்குமே இப்படிப்பட்ட பிள்ளைகளும் சொந்தங்களுந்தான்.. இது நம்ம நாட்டுல மட்டுமில்லீங்க.. ஒலகம் முழுசும்..

    பதிலளிநீக்கு
  3. (அ)நாகரிக உலகில் நன்றி உணர்வு அருகி வருகின்றது.இதுவும் ஒருவகை
    நம்பிக்கைத்துரோகமே

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜி!

    இதுவும் ஒருவகை
    நம்பிக்கைத்துரோகமே //

    உண்மைதாங்க.. இந்த நம்பிக்கை துரோகம் இப்போதெல்லாம் ஃபாஷனாகி வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. 'அண்ணனென்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று சிவாஜி பாடுவது காதில் ஒலிக்கிறது. முதியவர்களை சுமையாக எண்ணுபவர்கள் தான் அதிகமாகி வருகிறார்கள்.மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ஐயா
    உண்மைகள் சுடும், உண்மையில் என் கண்கள் குளமாயின, என்ன ஒரு மனிதர்கள்?சொந்தம் பந்தம் எல்லாம் கிராமம் வரைதானா? நகரத்தில் மனிதத்தன்மை செத்துவிட்டதா? மனம் கனத்தது ஐயா...வருத்தமுடன்.
    ஸ்ரீஷிவ்...:(

    பதிலளிநீக்கு
  7. வாங்க மணியன்,

    முதியவர்களை சுமையாக எண்ணுபவர்கள் தான் அதிகமாகி வருகிறார்கள்.மனம் கனக்கிறது. //

    ஆமாம் மணியன். அவசர உலகில் அன்பும் பரிவும் மறைந்தே போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஸ்ரிஷிவ்,

    நகரத்தில் மனிதத்தன்மை செத்துவிட்டதா? மனம் கனத்தது//

    பந்தமும் பாசமும் நகரமென்ன கிராமமென்ன எல்லோருக்கும் பொதுதான்..

    ஆனா நீங்க சொல்றா மாதிரி கிராமப்புறங்களில் இது குறைவுதான்..

    பதிலளிநீக்கு
  9. // . யார்றா இறந்தது?’ என்றேன். நம்ம செல்வராணி டீச்சர்றா.

    சுவாரசியமான கதையென்றால் மெர்சி டீச்சராய் இருந்திருக்கும். ஆனால் நிஜங்களில் ???

    -- Vignesh

    http://vicky.in/dhandora

    பதிலளிநீக்கு
  10. என்ன சொல்றதுன்னே தெரியல ஜோசப்ஜி.

    பதிலளிநீக்கு
  11. வாசித்ததும் மனம் மிகவும் கலங்கி போய்விட்டது.

    http://lifeexperiencenhospital.blogspot.com/2006/02/do-we-need-senior-citizens-home.html.
    நான் கோயம்பத்தூரில் ஒரு senior citizens home visit செய்தேன். தயவு செய்து வாசித்துவிட்டு பதில் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க விக்னேஷ்,

    சுவாரசியமான கதையென்றால் மெர்சி டீச்சராய் இருந்திருக்கும். ஆனால் நிஜங்களில் ???//

    நிஜ வாழ்க்கையில நியாயமே இருக்கறதில்லீங்க. அதனாலதா கதாசிரியர்கள் கற்பனையில நிகழ்ச்சிகள அவங்களுக்கு எது நியாயம்னு படுதோ அப்படி உருவாக்குறாங்க.

    இதே கதைன்னா நான் மெர்சி டீச்சருக்கு அப்பா இறந்ததும் யாரும் இல்லேங்கறதுனால இப்படியொரு சாவும் அதே சாவுக்கு செல்வராணி டீச்சர் தன் சகோதர, சகோதரிகள், அவர்களுடைய பிள்ளைகள் சூழ வந்திருந்ததாகவும் சோடித்திருப்பேன்..

    உண்மை எப்போதுமே சுடத்தான் செய்யும்:(

    பதிலளிநீக்கு
  13. வாங்க மனசு,

    என்ன சொல்றதுன்னே தெரியல ஜோசப்ஜி. //

    ஆமாங்க. இந்த மாதிரியான சமயங்கள்ல மவுனம் சொற்களைவிட அதிகம் ஆறுதலாருக்கும்..

    பதிலளிநீக்கு
  14. வாங்க டெல்ஃபின்,

    வாசித்ததும் மனம் மிகவும் கலங்கி போய்விட்டது. //

    ஆமாங்க. அத இத்தன வருசத்துக்கப்புறம் எழுதனப்போ நானே சில நிமிடங்கள் அந்த நிகழ்ச்சிக்கே சென்று வந்ததில் கலங்கித்தான் போனேன்.

    பதிலளிநீக்கு
  15. இறுதிக் காலத்திலே, யாருமே இல்லாத அனாதையாய் இருப்பது கொடுமைதான்.ஆனால்,எல்லோருமே விளைவுகளைத்தான் நினைகிறோம். காரணத்தை ஆராய்வதில்லை.வாழும்போது யாரும் வேன்டாம் என்று வீம்பாய் இருந்து விடுகிறோம்.

    பதிலளிநீக்கு