07 July 2006

கடந்து வந்த பாதை - 3

கணக்குப்பிள்ளை கண்ணையன் மாமா!
(கற்பனைப் பெயர்)

இந்த தொடரின் முதல் பதிவில் என்னுடைய வீடு சாலையிலிருந்து நூறடி உள்வாங்கி இருந்ததெனவும் என் வீட்டை அடைய ஒரு குறுகிய சந்து வழியாக செல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தேன்

அதற்கு காரணம் எங்களுடைய வீட்டிற்கு முன்னாலிருந்த இரண்டு பெரிய வீடுகள்தான்..

அந்த வீடுகளில் இடப்புறம், அதாவது எங்களுடைய வீட்டிற்கு மேற்கே, இருந்த வீட்டில் குடியிருந்தவர்தான் நம்முடைய இன்றைய கதாநாயகர் கணக்குப்பிள்ளை கண்ணையன்.. வீட்டு உரிமையாளர் வெளியூரில் இருந்ததால் தான்தான் வீட்டு உரிமையாளர் என்பதுபோல் நடந்துக்கொள்வார்.

அந்த காலத்தில், ஏன் கணினி படையெடுத்து இவர்களுடைய பிழைப்பில் மண்ணள்ளி போடும்வரை, இவரைப் போன்ற கணக்குப்பிள்ளைகளுடைய சேவை வணிகர்களுக்கு அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாயிருந்தது.

நம்முடைய கணக்குப்பிள்ளை, சிறுவணிகர் பலருக்கும் அவர்களுடைய அன்றாட வரவு செலவுகளை கணக்கிட்டு ஆண்டு இறுதியில் விற்பனை வரித்துறை ஆய்வுக்கு அனுப்பும் கணக்கு புத்தகங்களை தயாரித்து கொடுப்பவர்.

அதாவது இப்போதைய மொழியில் கூறவேண்டுமென்றால் Chartered Accountant..

சொல்லப்போனால்  எல்லா CA க்களுமே ஒருவகையில் glorified கணக்குப்பிள்ளைகள்தானே..

அப்படித்தான் கண்ணையன் மாமாவும்..

நான் படிக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலும் இருப்பது கண்ணையன் மாமா வீட்டில்தான்.. அடுத்த வீடு என்பதால் தாத்தாவும் கண்டுக்கொள்ள மாட்டார்.

செக்க செவேல் மேனியில் சட்டையேதும் அணியாமல் நடுக்கூடத்தில் அவருக்கென பிரத்தியேகமாக செய்யப்பட்ட (டேய் பையா, இது பர்மா டீக் வுட்ல செஞ்சதாக்கும்.. என்பார் அடிக்கடி) குறு மேசையில் அமர்ந்து நாள்தோறும் ஒரு தடி புத்தகத்தில் குனிந்து எழுதுவதும் அருகிலிருந்த சிறு, சிறு தாள்களை பார்த்துக்கொள்வதுமாய் இருந்த அவரை பார்க்கும்போதெல்லாம் இவர் என்ன பண்றாருன்னு கேக்க தோணும். ஆனால் அவரிடம் கேட்க தைரியம் வராது..

‘உமா அக்கா.. ஒங்கப்பா என்னத்த எப்ப பார்த்தாலும் எளுதிக்கிட்டேருக்காங்க..?’ என்பேன் அவருடைய மூத்த மகளிடம். உமா அக்காவையும் சேர்த்து அவருக்கு நான்கு பெண்கள்..

ஆண்பிள்ளை இல்லை.. ‘அடுத்தது ஆணா பொறக்கும், ஆணா பொறக்கும்னுதான் பாத்தோம்.. எல்லாமே பொட்டையா போயிருச்சி.. ஹ¥ம்..’ என்று அடிக்கடி அவர்களுடைய வீட்டு பாட்டி (கண்ணையன் மாமாவுடைய தாயார்) புலம்புவதை பார்த்திருக்கிறேன்..

உமா அக்கா பத்தாவது படிச்சிட்டு வீட்டோட இருந்தாங்க.. அவங்களோட மூனு தங்கைகளும் படிச்சிக்கிட்டிருந்தாங்க. அதுல விஜயா என் வயசு. அடுத்தது ராஜேஸ்வரி.. ரெண்டு வயசு சின்னது.. அதுக்கடுத்தது மாலா என்னை விட மூனு வயசு சின்னது..

உமா அக்கா என்னுடைய கேள்விக்கு பதில் தராமல் சிரிக்கும். ‘என்னக்கா சிரிக்கீங்க.. ஒங்கப்பா என்ன செய்யறாங்கன்னு ஒங்களுக்கே தெரியாதாக்கும்.’ என்பேன்..

‘அதில்லடா. ஒனக்கு சொன்னாலும் புரியாதுல்ல.. அதான்..’

எனக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வரும்.. ‘என்னக்கா அப்படி சொல்லிட்டீங்க? நான் எட்டாம்ப்பு படிக்கேன்.. கணக்குல புலியாக்கும்.. ஒங்கப்பா கணக்குதான போட்டுக்கிட்டுருக்கார்..’ என்பேன் பிடிவாதமாக..

‘அப்படித்தான் வச்சுக்கயேன்..’ என்றவாறு சிரித்து மழுப்பிவிடுவார் உமா அக்கா..

அவர் என்ன செய்தாரோ.. ஆனால் அவரைச் சந்திப்பதற்கு நாள் முழுவது ட்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள்..

அவர்களை வீட்டு வாசலில் இருந்த திண்ணையில் அமர்த்திவிட்டு உள்ளே வந்து அவரிடம் தெரிவிக்க என் வயதொத்த ஒரு சிறுவனை வைத்திருந்தார். அவன் பெயர் மாசிலாமணி..

என்னுடந்தான் படித்துக்கொண்டிருந்தான். அப்பா இல்லை.. அம்மா இட்லி சுட்டு விற்பார்.. படிச்சது போதும் என்று நினைத்தார்களோ என்னவோ திடீரென்று ஒருநாள் அவன் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டான்..

அப்புறம்தான் தெரிந்தது கண்ணையன் மாமா வீட்டில் வேலை செய்கிறான் என்பது..

அவர் வீட்டு வாசலில் எங்களுடைய வீட்டிலிருந்ததைப் போலவே இரண்டு பெரிய திண்ணைகள் இருந்தன. அதில் கண்ணையன் மாமாவை காண வருவோரை இருத்திவைப்பான் மாசிலாமணி..

பிறகு வீட்டிற்குள் வந்து இன்னின்னார் காத்திருப்பதாக கூறுவான்..

மாமா சலிப்புடன், ‘சரிடா.. போய் ‘இன்னாரை’ அனுப்பு என்பார்.’ அவன் போய் அவரை மட்டும் அழைத்து வருவான்.

அவர் வந்தமர்ந்ததும் அவருடைய கணக்கு வழக்குகளில் மாமா கண்ட நிறை, குறைகளை புத்தகத்தையோ அல்லது அவர் அடிக்கடி refer செய்யும் சிறு தாள்களையோ (அவை எல்லாம் பில் புத்தகங்கள் என்பது பல மாதங்கள் கழித்து உமா அக்காவின் தங்கை விஜயா சொல்லித்தான் எனக்கு விளங்கியது) பார்க்காமல் சரளமாக மளமளவென்று எடுத்துரைப்பார். வந்திருப்பவர் அட.. எப்படிய்யா என்று வியந்துபோய்விடுவார்.

‘சரி இன்னும் ரெண்டு நாளைல ஒங்க கணக்கு ரெடியாயிரும்.. ஒரு நூறு ரூபாய உமாகிட்ட குடுத்துட்டு போங்க.’ என்பார்..

வந்தவர்.. ‘ஐயா இதுவரைக்கும்..--------- குடுத்துருக்கேனே.. மீதிய கணக்க முடிச்சி குடுத்துட்டு...’ என்பதுபோல் இழுப்பார். மாமா உடனே சிரித்துக்கொண்டு.. ‘எனக்கு தெரியாமயா இருக்கு.. நீர் பண்ணி வச்சிருக்கற தில்லுமுல்லுவையெல்லாம் சரி செய்ய வேணாமாய்யா.. அதுக்குத்தான்..’ என்பார்..

அவரும் தன் தலைவிதியை நொந்துக்கொண்டு முனகியவாறே கூடத்தின் வேறொரு மூலையில் இருந்த குறுமேசைக்கு முன் அமர்ந்திருக்கும் உமா அக்காவிடம் பணத்தை கொடுத்துவிட்டு செல்வார்.. உமா அக்கா உடனே ஒரு நோட்டு புத்தகத்தைப் புரட்டி அவர் கொடுத்த பணத்தை குறித்துக்கொள்வார்..

இது நாள் தவறாமல் நடக்கும்.. வந்து செல்லும் ஆட்கள்தான் மாறுபடுவர்.. மாமாவின் பேச்சென்னவோ ஒரே போல்தான் எனக்கு தோணும்.. ஆனாலும் வருபவர்களெல்லோரும் வியப்பில் வாய் திறந்திருப்பதுகூட தெரியாமல் அவர் கூறுவதையே கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பர். இறுதியில் அவர் பணம் கேட்டதும் அவர்களுடைய முகம் சுருங்கிப் போய்விடும். இருப்பினும் வேறு வழியில்லாமல் அவர் கேட்டதை உமா அக்காவிடம் கொடுத்துவிட்டு முனுமுனுத்தவாறே செல்வதை பார்த்திருக்கிறேன்..

எனக்கு ஒன்றும் விளங்காவிட்டாலும் மாமவும் அவர்களும் பேசுவதை வாய்க்குள் ஈ போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன்..

இருட்டியதும் உமா அக்கா தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் எண்ணி குறித்துவைத்திருந்த நோட்டுப்புத்தகத்துடன் சேர்த்து அவர்கள் வீட்டிலிருந்த ஒரு மர பீரோவில் வைத்து பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக்கொள்வார்..

சரி நாடகம் முடிந்தது என்று நானும் எழுந்து சென்றுவிடுவேன்..

இப்படியே தினமும் நடக்கும்..

என்னுடைய வீட்டில் தாத்தா கூறியபடிதான் சமையல் நடக்கும்.. என்றைக்கு என்ன சமைக்கலாம், என்றைக்கு மீன், என்றைக்கு கறி என்பதிலெல்லாம் தாத்தா வைத்ததுதான் சட்டம்..

வாரத்தில் ஒரு நாள் மீன்.. ஞாயிறானால் ஆட்டுக்கறி.. மற்ற நாட்களில் ப்யூர் வெஜிடேரியன்.. தினமும் உப்பு சப்பில்லாத காய்கறிகளைத் தின்று நாக்கு செத்துவிடும்..

ஆனால் கண்ணையன் மாமா வீட்டில் தினமும் நான் - வெஜிடேரியந்தான்..

மாமாவின் மனைவி கமலா மாமி சூப்பரான குக்.. அவங்க கைமணம் திண்ணைல ஒக்காந்திருக்கறவங்களையே அசத்தும்..

மாமிக்கு தாராள மனசு.. ஆறு பேர் அடங்கிய குடும்பத்துக்கு பத்து பேர் சாப்பிடறா மாதிரி செஞ்சிருவாங்க.. மீந்துதானே போவும்..? ராத்திரி படுக்க போறதுக்கு முன்னால மீந்திருக்கற அவ்வளவையும் கூசாம ரோட்லருக்கற குப்பைத்தொட்டியில கொண்டு கொட்டிருவாங்க.. ரோட்லருக்கற நாய், பன்றி என எல்லா காலநடைகளுக்கும் தினமும் விருந்து சாப்பாடு அவங்க புண்ணியத்துல..

‘அடிப்பாவி இப்படி எல்லாத்தையும் வீணாக்குறயே.. எம்புள்ள சம்பாதிக்கறதெல்லாத்தையும் தின்னே தீத்துருவ போலருக்கேடி..’என்று புலம்பும் மாமியாரை, ‘ஏ கெளவி வாய மூடிக்கிட்டு இருக்கறதானா இரி.. இல்லையா ஊர பாக்க போய் சேர்.’ என்பார் மாமி நிர்த்தாட்சண்யமாக..

மாமா தினந்தோறும் மாசிலாமணி வாங்கி வரும் பாட்டில்களிலிருந்த கலர், கலர் சர்பத்தை அருந்திவிட்டு மணக்க, மணக்க வெற்றிலை அணிந்துக்கொண்டு சிறிது நேரம் பிள்ளைகள் புடைசூழ அமர்ந்து ஜோக் அடிப்பார்..

மாமியும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணய சைசில் குங்குமப் பொட்டும் வீட்டுக்கே பட்டு புடவையுமாக தினமும் மாலையானால் தலை நிறைய பூவுடன் வலம் வருவார்..

இப்படித்தான் சென்றது அவர்களுடைய வாழ்க்கை..

நான் எட்டாவது வகுப்பின் முடிவில் காட்பாடி சென்றுவிட்டேன். அவர்களுடனான தொடர்பு அறுந்துப் போயிற்று..

நான் பள்ளி படிப்பு முடிந்து திரும்பி வந்தபோது அந்த வீடு விலைபோயிருந்தது..

கண்ணையன் மாமா குடும்பத்தினரைக் காணவில்லை..

என்னுடைய தாத்தாவும் அவரும் எதிர் துருவங்களாயிருந்தும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

என்னுடைய தாத்தாவின் திடீர் மரணம் அவரை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும் ஆகவே அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் மாறிச் சென்றுவிட்டதாகவும் என் அம்மா தெரிவித்தார்..

அதன் பிறகும் எப்போதாவது மாசிலாமணியை பார்ப்பேன்..

கண்ணையன் மாமாவைப் பற்றி கேட்டால்.. ‘ஒன் வேலையை பாத்துக்கிட்டு போடா’ என்று கூறிவிட்டு சென்றுவிடுவான்..

அவனுடைய போக்கிலும் நிறைய மாறுதல் தெரிந்தது. பாக்கெட்டில் எப்போதும் பணம் புரண்டது.. கையில் வாட்ச்.. கூலிங் கண்ணாடி என்று ஜொலித்ததைப் பார்த்தபோது எனக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் அவனை கேட்பதால் பயனில்லை என்று அவனை எதிரில் கண்டால் ஒதுங்கி சென்றுவிடுவேன்..

பத்து வருடங்கள்..

நான் என்னுடைய வங்கியின் சென்னை புரசைவாக்கம் கிளையில் குமாஸ்தாவாக  பணிபுரிந்துக்கொண்டிருந்த நேரம்.

அப்போதெல்லாம் அலுவலகங்களிலிருந்த தொலைப்பேசிகளை முக்கியமாக ஒலிவாங்கியை வாசனை திரவியத்தில் நனைத்த பஞ்சால் துடைத்து செல்லவே நிறைய ஏஜென்சிகள் இருந்தன.. ஒரு தொலைப்பேசிக்கு ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை வசூலிப்பார்கள். அப்படிப்பட்ட வேலையை செய்வதற்கு பெரும்பாலும் இளம் பெண்களையே நியமித்திருந்தனர்..

அப்படியொரு நாள் என்னுடைய கிளையிலிருந்த மூன்று தொலைப்பேசிகளை துடைத்து சுத்தம் செய்ய வந்திருந்த இளம் பெண்ணைப் பார்த்து திகைத்துப் போனேன்..

எனக்கு நன்கு பரிச்சயமாயிருந்த முகம்.. பெயர் நினைவுக்கு வரவில்லை...

அவரையே பார்த்தேன்.. எங்கோ பார்த்திருப்பதுபோல் தெரிந்தது..

அவரும் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டபோதுதான் அடையாளம் தெரிந்தது..

விஜயா!

கணக்குப்பிள்ளை கண்ணையா மாமாவின் இரண்டாவது மகள்!

உமா அக்காவின் தங்கை!

நாளை நிறைவு பெறும்..

4 comments:

sivagnanamji(#16342789) said...

"வாழ்ந்தவர் கெட்டால் வற ஓட்டுக்குக் கூட ஆகாது"
பொதுவாக, பணம் எவ்வளவு சுலபமாக வருகின்றதோ அவ்வளவு சுலபமாக வெளியேறும்

tbr.joseph said...

வாங்க ஜி!

வாழ்ந்தவர் கெட்டால் வற ஓட்டுக்குக் கூட ஆகாது//

மிகப்பொருத்தமான சொல்..

பொதுவாக, பணம் எவ்வளவு சுலபமாக வருகின்றதோ அவ்வளவு சுலபமாக வெளியேறும் //

ஆமா.. நானும் நிறைய பாத்திருக்கேன்..

துளசி கோபால் said...

அடடா.... விஜயாவா?

பாவம், அவுங்களுக்கு எவ்வளோ மனக் கஷ்டமா இருந்திருக்கும்?

tbr.joseph said...

வாங்க துளசி,

பாவம், அவுங்களுக்கு எவ்வளோ மனக் கஷ்டமா இருந்திருக்கும்?//

அவளுக்கு மட்டுமா, எனக்குந்தான்.

விஜயா வீட்டுக்குக்கூட பட்டு பாவாடை சட்டை போட்டுக்கிட்டு கால்ல தங்க கொலுசுன்னு ஜில்லுன்னு இருக்கற பொண்ணுங்க..

அவள அந்த கோலத்துல பாத்துட்டு.. திடீர்னு..

பயங்கர கொடுமைங்க..