31 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 180

என்னுடைய நிலத்திலிருந்த குடிசைக்கு முனிசிபல் கதவு எண் இருந்ததால் அதற்கு தேவையான, அதாவது ஒரேயொரு மின் விளக்குக்கான மின்சார இணைப்பு இருந்தது.

அது என்னுடைய புதிய வீட்டின் கட்டுமான வேலைக்கு தேவையான கிணற்று நீரை இரைத்துப் பாய்ச்ச போதுமானதாக இருக்கவில்லை. ஆகவே அதன் விசையைக் கூட்டுவதற்காக மின்சார கழக அலுவலகத்திற்கு மனு செய்திருந்தேன். கூடுதலாக அடைக்க வேண்டியிருந்த கட்டணத்தையும் செலுத்தியிருந்தேன். ‘சார் ஒங்க அப்ளிகேஷன் திருநெல்வேலி வட்டார ஆஃபீசுக்கு போய் வரணும். அதனால எப்படியும் இரண்டு வாரம் ஆவும். அதுக்கப்புறம் வந்து பாருங்க.’ என்று சம்பந்தப்பட்ட அலுவலர் கூற நான் மேலும் ஒருவாரம் கழித்து சென்று பார்த்தேன்.

நல்லவேளையாக என்னுடைய விண்ணப்பத்திற்கு வட்டார அலுவலகத்திலிருந்து அனுமதி வந்திருந்தது.

‘அதான் சாங்ஷன் வந்து ஒரு வாரம் ஆயிருச்சே சார். அப்புறம் ஏங்க இன்னும் ஒர்க்கர்ஸ் ஸ்பாட்டுக்கு வரலே.’ என்றேன்.

என்னுடைய நிலம் இருந்த பகுதிக்கு பொறுப்பாயிருந்த அலுவலர் தயக்கத்துடன், ‘சார் நீங்க எதுக்கும் ஏ.யி.ய (துணை பொறியாளர்) போய் பாருங்க.’ என்றார்.

சரி இதுலயும் வில்லங்கம் இருக்கு போலருக்கு என்ற நினைப்புடன் ஏ.யி அறையை நோக்கி சென்றேன். வாயிலில் அமர்ந்திருந்த பணியாளர் ஒருவர் தடுத்தி நிறுத்தி, ‘சார் இப்ப ஐயாவ பாக்க முடியாது. முக்கியமான மீட்டிங் நடக்குது. இங்கன இருங்க.பத்து நிமிசமாவுது ஆவும்’ என்று அருகில் இருந்த பார்வையாளர்கள் இருக்கையைக் காட்ட நான் வேறு வழியில்லாமல் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் வாயிலிலிருந்த பணியாளரும் எழுந்து செல்ல நான் என் தலைவிதியை நொந்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

பத்து நிமிடம் அரை மணி நேரமாகியும் யாரும் அறையிலிருந்து வெளியே வராததால் நான் பொறுமையிழந்து அறைக்கதவை லேசாக தள்ளினேன். அறையில் துணை பொறியாளர் மேசையில் அமர்ந்திருக்க எதிரே ஒரேயொரு அலுவலர் அமர்ந்திருந்தார். அவர்களும் அலுவல் சம்பந்தமாக உரையாடிக்கொண்டிருப்பதாக தெரியவில்லை.

சட்டென்று நிமிர்ந்து என்னை பார்த்த பொறியாளர், ‘யார் சார் நீங்க? பேசிக்கிட்டிருக்கோம்லே? நீங்க பாட்டுக்கு உள்ளார வாரீங்க?’ என்றார் எரிச்சலுடன்.

நான் வந்திருந்த காரணத்தை சுருக்கமாக கூற அவர் நிதானமாக, ‘அதனால? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார். ஊர்லருக்கற ஸ்ட் ரீட் லைட்ஸ் விஷயமா பேசிக்கிட்டிருக்கோம். எப்படியும் இன்னும் அரை மணி நேரமாவது ஆவும். ஒன்னும் வெய்ட் பண்ணுங்க, இல்லன்னா போய்ட்டு பிறகு வாங்க.’ என்று கூறிவிட்டு நான் அந்த அறையில் இல்லாதது போல் தன் எதிரிலிருந்தவரிடம் உரையாடலைத் தொடர்ந்தார்.’

அதிகம் போனால் அவர் என்னை விட ஒன்றோ அல்லது இரண்டு வயது பெரியவராயிருப்பார். அதெப்படி இந்த இளம் வயதிலேயே இந்த அரசு அதிகாரிகளுக்கு ஆணவம் வந்துவிடுகிறது? அரசு அலுவலர்களுக்கே இத்தகைய ஒரு தனி குணம் இருப்பதை நான் பல நேரங்களிலும் பார்த்திருக்கிறேன்.

அவர்களில் பலருக்கும் ஏதோ போனால் போகிறதென்று அலுவலகத்திற்கு வந்து செல்லும் ஒரு மெத்தன மனப்பாண்மை இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அலுவலக நேரத்தில் தங்களுடைய சொந்த வேலையை பார்ப்பது, தொலைப்பேசியில் நேரம் போவதே தெரியாமல் உரையாடிக்கொண்டிருப்பது, சக ஊழியர்களுடன் அரட்டையடிப்பது இதுதான் இவர்களுக்கு முக்கியம்.

அரசு நியதிகளுக்குட்பட்டு செய்துக்கொடுக்க வேண்டிய அலுவல்களுக்கும் ‘ஏதாவது போட்டுக் கொடுத்தால்தாங்க முடியும்’ என்று கூசாமல் கேட்பதில் ஆண்கள் என்ன பெண் அலுவலர்களும் மன்னர்கள்..

நம்முடைய வேலை முடியவேண்டுமே என்று நம்மில் பலரும் பல்லைக் கடித்துக்கொண்டு அவர்களுடைய அளும்பைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாளில் முடியவேண்டிய விஷயத்துக்கும் வாரக் கணக்காக, ஏன் மாதக் கணக்கிலும்கூட அலைகிறோம்.

‘இந்த சின்ன வேலையகூட முடிக்க முடியல. இதுல வீடு கட்டுறேன்னு இறங்கிட்டீங்க.’ இது நம்ம வீட்டாளுங்களோட அளும்பு.

அவர்களிருவரும் தங்களுடைய உரையாடலை விட்ட இடத்திலிருந்து துவங்க நான் சில நொடிகள் காத்திருந்துவிட்டு என்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு வெளியேற அப்போதுதான் வெளியே போயிருந்த அவருடைய பணியாளர் உள்ளே நுழைந்தார். நான் அறையிலிருந்து வெளியேறியதைப் பார்த்தவர், ‘சார்.. என்ன நீங்க? நாந்தான் இருங்கன்னு சொன்னேன்லே.. நீங்க பாட்டுக்கு உள்ளுக்கு போய்ட்டீங்க? அவரே ஒரு முசுடு. நீங்க பாட்டுக்கு உள்ளுக்கு போய்ட்டீங்க.. அவர் என்னையெல்ல ஏசுவாரு.. என்ன சார் நீங்க?’ என்றார் சலிப்புடன்..

என் வேலை கெட்டுப் போய்விடுமே என்ற நினைப்பில் பொங்கி வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அறைக்கு வெளியிலிருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலுவலர் வெளியேறினார். நான் அறைவாசலில் அமர்ந்திருந்த பணியாளரைப் பார்த்தேன். ‘என்னங்க இப்பவாவது ஒங்க ஐயா ஃப்ரீயாய்ட்டாரா?’ என்றேன்.

‘ஐயா கூப்டுவார் சார். நானா உள்ள போனேன்னு வச்சிக்கிருங்க. அதுக்கு வேற ஏச்சு விளும்..’

என்னுடைய அலுவலகத்தில் அரை மணியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு வந்த நான் பொறுமையிழக்கலானேன். ‘ஏங்க நானும் ஆஃபீசுக்கு போகனுங்க.. போய் பாருங்க. ஏதாச்சும் ஏசினார்னா நான் பாத்துக்கறேன்.’

அவர் சிரித்தார். ‘நீங்க வேற சார். என்னைய ஏசுனப்புறம் நீங்க என்ன பாத்துக்கறது?’ ஆனாலும் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டு அடுத்த நொடியே திரும்பி வந்தார். ‘போங்க சார்.’

அறைக்குள் நுழைந்த என்னை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் முன்னாலிருந்த கோப்பைப் பார்த்தவாறே ‘சொல்லுங்க சார்.’ என்றவரையே பார்த்தேன். இவருடைய கழுத்தை நெரித்தாலென்ன என்று தோன்றியது.

வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் நான் வந்த விஷயத்தை கூறினேன். நான் கூறியது அவருடைய காதில் வாங்கிக்கொண்டதற்கான எந்த அறிகுறியும் அவருடைய முகத்தில் தெரியவில்லை.

‘சார் ஒங்க நிலத்துல புது வீட்ட கட்டிக்கிட்டிருக்கீங்களோ?’

‘அப்படி சொல்லித்தான சார் கனெக்ஷன் அப்க்ரேட் கேட்டிருக்கேன்?’

நான் எத்தனை முயன்றும் என்னுடைய உள்ளத்திலிருந்த கோபம் குரலில் தெரியவே அவர் கோபத்துடன், ‘சார் எடக்கு மடக்கா பேசாதீங்க. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.’

‘போடா நீயும் ஒன் கோபமும்.. என் வேல மட்டும் முடியட்டும் வச்சிக்கறேன்.’ இத வெளியில் சொல்ல ஆசைதான்.. ஆனால் வந்த வேலை கெட்டுவிடுமே..

‘ஆமாங்க.’ என்றேன் பொறுமையுடன்..

அவர் புரியாததுபோல் ‘என்ன சார்?’ என்றார்.

என் கோபம் தலைக்கேறியது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.

‘புது வீடுதான் கட்டிக்கிட்டிருக்கேன்னேன்.’

ஓ அப்படியா, நெனச்சேன் என்பதுபோல் தலையை ஆட்டினார்.
அதான் என் அப்ளிக்கேஷன்லயே போட்டிருக்கடா என்றேன் மனதுக்குள்..

‘அப்ப வீட்ட கட்டி முடிச்சி புதுசா நம்பர எடுத்துக்கிட்டு வாங்க. அப்கிரேட் பண்ணி தாரன். வீடு கட்டற நேரத்துல டெம்பரவரி லைந்தான் தரமுடியும்.’

இதென்ன அடாவடித்தனமாருக்கு என்று நினைத்தேன். பிறகெதற்கு வைப்புத் தொகையாக இரண்டாயிரத்தை வசூலித்தார்கள்? மனதில் நினைத்ததை அவரிடமே கேட்டேன்.

‘சார் ஒங்க அப்ளிக்கேஷன்ல குடுத்துருக்கற நம்பர பாத்துட்டு எங்க எஸ்.இ ஆஃபீஸ்ல அப்க்ரேட் சாங்ஷன் குடுத்துருப்பாங்க. அது பழயை வீட்டோட நம்பர்னு அவங்களுக்கு ஜோஸ்யமா தெரியும்?’

‘அப்படியொரு ரூல் இருந்தா நா அப்ளை பண்ணப்பவே சொல்லியிருக்கணுங்க. அத விட்டுட்டு டெப்பாசிட் எல்லாம் கட்ட சொல்லிட்டு இப்ப டெம்ப்பரவரி கனெக்ஷன் எடுங்கன்னு சொல்லி மறுபடியும் திருநெல்வேலிக்கு அனுப்பி ரெண்டு வாரம் ஆக்குவீங்களோ?’

அட! உள்ளத சொன்னா கோபம் வருதோ என்ற பாணியில் என்னை கேலியுடன் பார்த்தவரை என்ன செய்தாலும் தகும் என்று தோன்றியது.

நானும் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் பல ஆணவம் பிடித்த அதிகாரிகளை என்னுடைய வங்கியிலேயே சந்தித்திருக்கிறேன். சென்னையில் கிளை திறந்த நேரத்திலும் அரசு அதிகாரிகளை பலரையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவரைப் போன்ற இளம் வயதிலேயே இத்தனை ஆணவம் பிடித்த அதிகாரியை சந்தித்திருக்கவில்லை.

‘டெம்பரவரி லைனுக்கெல்லாம் திருநெல்வேலி போவேண்டாங்க. ரெண்டு மாசத்துக்கு என்ன வரும்னு தோராயமா கணக்கு போட்டு டெப்பாசிட் கட்ட சொல்வாங்க.. கட்டிட்டு வாங்க.. ஒர்க் ஆர்டர் போட்டு தாரன். ரெண்டு, மூனு நாளைக்குள்ள வந்துரும்..’

சரி இனியும் பேசி பலனில்லை என்ற நினைப்புடன் அவருடைய அறையிலிருந்து வெளியேறினேன். அதற்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்ததால் அலுவலகம் சென்றுவிட்டு அடுத்த நாள் வரலாம் என்று கிளம்பினேன்.

நான் வாயிலை அடையவும் பொறியாளரின் பணியாளர் என்னை அழைத்தவாறு வருவது கேட்கவே நின்று திரும்பி பார்த்தேன்.

அவர் அருகில் வந்ததும், ‘என்னங்க?’ என்றேன்.

அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘இந்தால வாங்க சார்.’ என்று ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார்.

எனக்கு விஷயம் புரிந்தது. இருப்பினும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருடன் சென்றேன்.

‘என்ன சார் சொன்னார்?’ என்றவரை பார்த்தேன்.

‘டெம்பரவரி லைனுக்கு டெப்பாசிட் கட்டிட்டு வாங்க, தரேங்கறார். பணம் கொண்டு வரலை.. அதான் போய்ட்டு நாளைக்கு வருவோம்னு போறேன்.’

சுற்றிலும் யாரும் இல்லையென்றாலும் பழக்க தோஷத்தால் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘என்ன சார் நீங்க? வெவரம் தெரியாம. டெம்பரவரி கனெக்ஷன்னா யூனிட்டுக்கு நாலு மடங்க கட்டணும் சார். அதனால..’ என்றார்.

எனக்கு அவர் சொல்ல வந்தது புரிந்தாலும், ‘அதுக்கு என்ன செய்யணுங்கறீங்க?’ என்றேன்..

‘சாருக்கு ----------- குடுத்துருங்க. அவர் சொன்னா அடுத்த நாளே டெம்பரவரி மீட்டர பொருத்திட்டு கனெக்ஷன் குடுத்திருவாங்க. நீங்க கட்டி முடிச்சி நம்பர் வாங்குனதும் ரெகுலர் செஞ்சிருவாங்க.. என்ன சொல்றீங்க?’

அதான பார்த்தேன்.. என்னடா பம்முறாரே இதுக்கு பின்னால எதாச்சும் இருக்கணுமே என்று நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது..

தொடரும்..
13 comments:

துளசி கோபால் said...

'லஞ்ச லாவண்யம்' 'லஞ்சப்பேய் தலை விரித்தாடுகிறது' இப்படியெல்லாம் சொல்றதோட
அர்த்தம் இதுதானா?

பேசாம' சொன்னதும் சொல்ல நினைத்ததும்'னு போட்டுருக்கணும்.

சும்மா நினைச்சுப் பார்த்தேன், நீங்க சொல்ல நினைச்சதை வாய்விட்டுச் சொல்லி இருந்தா
என்ன ஆகி இருக்குமுன்னு:-))))))

G.Ragavan said...

அரசு அலுவலர்களே அப்படித்தான் சார். பெங்களூர்ல அப்பார்மெண்டு பதிவு செய்யப் போறப்போ.....அதப் பதிவு செய்ய ஒரு பெரிய தொகைய டீகாப்பி சாப்பிடக் குடுக்க வேண்டியிருந்தது. அதுவும் அலுவலகத்துக்குள்ளயே. அதுக்குன்னு ஒரு ஆளு. அவன் கையில குடுத்தாப் போதும். அது எப்படியெப்படியோ போயி போக வேண்டிய எடத்துக்கு போயிரும். குடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாது. இதுல சேட்டுங்க கட்டுறாங்கன்னா ரேட்டு கூடுமாம். அடேங்கப்பா! ஆனா அதுக்காக கன்னடிகர்னா ரேட்டக் கொறைக்க மாட்டாங்க.

பழூர் கார்த்தி said...

லஞ்சம் வாங்கறதை ஒரு கடமையாக நினைச்சுக்கிட்டு இருக்காங்க சில அரசு பணியாளர்கள்.. இவர்களால் நேர்மையாக இருக்கும் எத்தனையோ பணியாளர்களுக்கும் அவப்பேறு ஏற்படுது பாருங்க..

****

/// சாருக்கு ----------- குடுத்துருங்க. அவர் சொன்னா அடுத்த நாளே டெம்பரவரி மீட்டர பொருத்திட்டு கனெக்ஷன் குடுத்திருவாங்க. //

எவ்ளோ சார், நூற்றுக் கணக்கா..இல்ல ஆயிரக் கணக்கா ??

sivagnanamji(#16342789) said...

//அரசு அதிகாரிகளிடம் ஆணவம்//அது ஆணவமில்லே.......
அதுதான் டெக்னிக்.
சுமுகமா பேசினால் காசு கிடைக்காதோ
என்ற பயம்

tbr.joseph said...

வாங்க துளசி,

பேசாம' சொன்னதும் சொல்ல நினைத்ததும்'னு போட்டுருக்கணும்.//

கரெக்ட்..

சும்மா நினைச்சுப் பார்த்தேன், நீங்க சொல்ல நினைச்சதை வாய்விட்டுச் சொல்லி இருந்தா
என்ன ஆகி இருக்குமுன்னு//

நம்ம வேலை கெட்டுபோயிருக்கும்:(

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அதுக்குன்னு ஒரு ஆளு. அவன் கையில குடுத்தாப் போதும். அது எப்படியெப்படியோ போயி போக வேண்டிய எடத்துக்கு போயிரும்.//

அதுதான் எப்படித்தான் போகுதோ, அவங்களுக்குத்தான் வெளிச்சம்.

இதுல சேட்டுங்க கட்டுறாங்கன்னா ரேட்டு கூடுமாம். அடேங்கப்பா!//

இது வேறயா? அவங்க வட்டி வாங்கியே கொழுத்தவங்களாச்சேன்னு நினைச்சிருக்கலாம்:)

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

இவர்களால் நேர்மையாக இருக்கும் எத்தனையோ பணியாளர்களுக்கும் அவப்பேறு ஏற்படுது பாருங்க..//

அதப்பத்தி அவங்களுக்கென்ன கவலை? சமீபத்துல ஒரு தாசில்தார் வீட்லருந்து கோடி கணக்குல பிடிச்சத படிச்சீங்களா? இவங்களுக்கெல்லாம் திருப்தியே இருக்காது. அந்த தாசில்தார் கரன்சி நோட்டுகள பெட்டியில வச்சிருந்தாராம். அதுவும் எவ்வளவு? ஒரு கோடிக்கும் மேல!

பசியெடுத்தா அதையே சாப்பிடலாம்னு நினைச்சிருந்திருப்பார்!

tbr.joseph said...

எவ்ளோ சார், நூற்றுக் கணக்கா..இல்ல ஆயிரக் கணக்கா //

நூறா? அது போறுமா என்ன?

tbr.joseph said...

வாங்க ஜி!

சுமுகமா பேசினால் காசு கிடைக்காதோ
என்ற பயம் //

இருக்கும்.. யார் கண்டா?

srishiv said...

இவங்க செய்யறதை எல்லாம் பார்த்துட்டுதான் அம்மா கையில சாட்டைய எடுத்தாங்கன்னு நெனைக்கறேன் ஐயா ;), இதே எஞ்சினியர் இந்த வேலை வாங்கறதுக்குமுன்னாடி எவ்வளவு அதிகாரிக்கு கூழை கும்பிடு போட்டிருப்பார்? இன்னைக்கு அடுத்தவரின் பிரச்சனையை யோசிக்கவே மாட்டாங்களே? அரசுப்பணியில் இப்படி அக்கிரமம் செய்யறவங்க ( அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி) நடு ரோட்டில் நிற்கவைத்து கல்லால அடிச்சி காறிதுப்பனும் ஐயா...:(
ஸ்ரீஷிவ்...

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

இவங்க செய்யறதை எல்லாம் பார்த்துட்டுதான் அம்மா கையில சாட்டைய எடுத்தாங்கன்னு நெனைக்கறேன் ஐயா//

யார சொல்றீங்க? ஜெ?

நடு ரோட்டில் நிற்கவைத்து கல்லால அடிச்சி காறிதுப்பனும் ஐயா.//

அடிய வாங்கிக்கிட்டு அதுக்கும் காசு கேட்டாலும் கேப்பாங்க:)

கோவி.கண்ணன் said...

ஜோசப் ஐயா,
இதை நேரமிருந்தால் படித்து மகிழுங்கள்.
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_27.html

Sivaprakasam said...

<---
இந்த சின்ன வேலையகூட முடிக்க முடியல. இதுல வீடு கட்டுறேன்னு இறங்கிட்டீங்க.’ இது நம்ம வீட்டாளுங்களோட அளும்பு --->

எல்லா வீடலயும் ஒரே மாதிரிதான்போல
-)))