26 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 179

அன்று பகலுணவை அலுவலகத்திலேயே முடித்துக்கொண்டு என் அறையில் அமர்ந்திருக்க என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் பதற்றத்துடன் என் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

அவர் ஏற்கனவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்பது தெரிந்ததுதான். ஆனால் அன்று அவருடைய முகத்திலிருந்தது கோபம் அல்ல, ஒருவித அச்சம்.

என்னுடைய அறைக்குள் நுழைந்தவர் படபடப்புடன் காணப்படவே நான் எழுந்து அவரை ஆசுவாசப்படுத்தி எனக்கெதிரே இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு என்னுடைய இருக்கையில் சென்றமர்ந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘என்னங்க, சொல்லுங்க? ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கீங்க?’ என்றேன்.

‘சார்.. அந்த இன்ஸ்பெக்டர் என்னை ஃபோன்ல கூப்ட்டு மிரட்டறார் சார்..’

நான் இதை எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும், ‘என்னன்னு?’ என்றேன்.

‘என்னை நீங்களும் ஒங்க வக்கீலும் மிரட்டி கம்ப்ளெய்ண்ட திருப்பி வாங்க சொல்றீங்கன்னு மறுபடியும் ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி குடு..இல்லன்னா ஒனக்குதான் ப்ராப்ளம்கறார்.. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. அதான் ஒங்கள பாக்க வந்தேன்.’

அவர் மீது அதுவரை இருந்த கோபம்போய் அவரை பார்க்கவே பாவமாக இருந்தது எனக்கு.

சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களை தங்களுடைய அதிகாரத்தை உபயோகித்து  எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் என்று நினைக்கும் அரசு அதிகாரிகள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுள் ஒருவர்தான் இந்த அதிகாரியும் என்று நினைத்தேன்.

இருப்பினும் அவரை மேலும் ஆத்திரமடையச் செய்யாமல் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதெப்படி என்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்.

சென்ற முறை என்னுடைய மைத்துனர் விஷயத்தில் இவருக்கெதிராக மாவட்ட எஸ்.பியிடம் புகார் செய்ததுபோல் இப்போது செய்வதிலும் சிக்கல் இருந்தது.

கடந்த முறை நான் எனக்காக அவரிடம் செல்லவில்லை.  என்னுடைய மைத்துனருக்காக. மேலும் என்னுடைய மைத்துனருடைய தரப்பில் நியாயம் இருந்தது. அவருக்கெதிராக யாரும் புகார் கொடுத்திருக்கவில்லை. அத்துடன் என்னுடைய செயலுக்கு நான் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவர் அதை அதே கண்ணோட்டதிலிருந்து பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

ஒரு பொறுப்புள்ள வங்கி மேலாளர் செய்யக்கூடிய காரியத்தையா நான் செய்திருந்தேன்? என்னுடைய அவசரபுத்தியை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தபோது அதை அவர் முன்னிலையில் எப்படி என்னால் நியாயப்படுத்த முடியும்?

‘என்ன சார்.. என்னமோ யோசிச்சிக்கிட்டிருக்கீங்க போலருக்கு? இதுக்கு என்ன வழி சார்? சாயந்திரத்துக்குள்ள நான் ஸ்டேஷனுக்கு போலன்னா அந்த மனுசன் என்ன செய்வார்னே தெரியல சார்..’

உண்மையிலேயே அவர் அரண்டு போயிருந்தார் என்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

‘கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. என்ன வழின்னு யோசிச்சிதான் முடிவுக்கு வரணும்.’ என்றேன்.. ‘நீங்க வேணும்னா ஒங்க ஆஃபீசுக்கு போங்க. நான் ஒரு நாலு மணி போல அங்க வரேன்.’

ஆனால் அவர் நகர்வதாய் இல்லை. ‘இல்ல சார். நா அங்க போனாலும் ஒழுங்கா வேல செய்ய முடியாது. சேர்மன் ஐயா வேற ஊர்ல இல்லைய்யா.. இல்லன்னா அவர வச்சி ஏதாச்சும் செஞ்சிருக்கலாம்.’

சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘இப்ப என்ன சொன்னீங்க? மறுபடியும் சொல்லுங்க?’ என்றேன்.

அவர் குழப்பத்துடன் பார்த்தார்.

‘இல்லங்க.. இப்ப ஏதோ சேர்மன் ஐயான்னு சொன்னீங்களே?’

'ஆமா சார். நா நம்ம முனிசிபல் சேர்மனோட பெர்சனல் பியூனாருக்கேன். ஒரு ஆறு மாசமாத்தான் இந்த போஸ்ட்டிங். அவரப்பத்தி ஊர்ல என்ன பேசினாலும் என் விஷயத்துல ரொம்ப நல்லபடிங்க.. அவர் ஊர்ல இருந்திருந்தாலாவது பரவால்லைன்னு நினைச்சேன்.’

‘அவர் இல்லாட்டி என்னங்க? அவர் பி.ஏ., செகரட்டரின்னு யாராச்சும் இருப்பாங்க இல்லே?’

அவர் அப்போதும் விளங்காமல், ‘ஆமா சார். அவரும் நம்ம கோயிலுக்குதான் வருவார்.. எதுக்கு கேக்கீங்க?’ என்றார்.

‘யார், பேர சொல்லுங்க?’ என்றேன் எனக்கும் ஒருவேளை அவரை தெரிந்திருக்குமோ என்ற நினைப்பில்.

அவர் பெயரை தெரிவித்ததும், ‘அட இவரா.. சரி இவர வச்சே அந்தாள மடக்குவோம். என்னதான் என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கடைநிலை ஊழியரானாலும் அவரும் ஒரு முனிசிபல் ஊழியர்தானே. சென்னை போன்ற நகரங்களில் ஒரு கார்ப்பரேஷன் ஊழியரை இப்படி ஒரு போலீஸ் அதிகாரியால் மிரட்டி பணியவைக்க முடியுமா என்ன?’ என்று தோன்றியது எனக்கு.

‘அவர் இப்ப ஆஃபீஸ்ல இருப்பாரா?’

அவருக்கு அப்போதும் விளங்கவில்லை. ‘இருப்பார் சார். சேர்மன் ஐயா இல்லாத நாள்ல அவர் சாதாரணமா ராத்திரி ஏழு எட்டு மணி வரைக்கும் ஆஃபீஸ்லதான் இருப்பார்.ஆனா அவருக்கு என்ன கண்டாலே ஆகாதுங்க. எப்பவும் ஏதாச்சும் சொல்லி ஏசிக்கிட்டே இருப்பார். எதுக்கு கேக்கீங்க?’

நான் என் இருக்கையிலிருந்து எழுந்து என்னுடைய மேசையை சுற்றிக்கொண்டு சென்று அவருக்கருகில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றினேன். என்னுடைய செயலை முற்றிலும் எதிர்பார்க்காத அவர் பதறிக்கொண்டு தள்ளியமர்ந்தார்.

‘என்ன சார் நீங்க போயி...’ என்றார் சங்கடத்துடன்.

‘இங்க பாருங்க. நான் அன்னைக்கி நீங்களும் டீச்சரும் ஆஃபீஸ்லருந்து வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிருக்கலாம். அந்த எஞ்சினியர் பேச்ச கேட்டு முட்டாத்தனமா.. என்னை மன்னிச்சிருங்க --------.’ என்றேன்..

என்னுடைய குரலிலிருந்து உண்மையான வருத்தம் அவரை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.

‘என்ன சார் நீங்க? நீங்க ஒரு தப்பு செஞ்சீங்க சரி.. நானுமில்ல அவசரப்பட்டு செஞ்சிப்போட்டு இப்ப முளிச்சிக்கிட்டு நிக்கேன்? டீச்சரும் எவ்வளவோ சொல்லத்தான் சார் செஞ்சாங்க.. நாந்தா புத்தி கெட்டுப்போயி.. (அவர் தன்னுடைய மனைவியையே டீச்சர் என்றுதான் அழைப்பார்).’

நான் எழுந்து நின்றேன். ‘சரி வாங்க.. ஒங்களோட நானும் ஒங்க ஆஃபீஸ் வரைக்கும் வரேன்.’

அவர் தயக்கத்துடன் எழுந்து, ‘நீங்க எதுக்கு சார்? நானே போய்க்கறேன்.. அந்தாள் என்ன ரோட்ல வச்சி என்ன செஞ்சிரப்போறார்? அவர் ஃபோன்ல மிரட்டனதும் பயந்து போயிதான் ஒங்கக்கிட்ட ஓடிவந்தேன். ஆனா இப்போ அது கொஞ்சம் தெளிஞ்சிருச்சி சார்.’ என்றார்.

அவருடைய முகத்தில் தெரிந்த அச்சம் சற்று தெளிந்திருந்தாலும் அவருடைய குரலில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

‘நான் வந்து  ஒங்க சேர்மன் ஐயாவோட பி.ஏவை பார்த்து இந்த விஷயத்த பத்தி பேசி பாக்கலாம்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க?’

அவருடைய முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா வியப்பா என்று விளங்காமல் ஒரு நொடி திகைத்துப்போனேன்..

‘என்னங்க ஒரு மாதிரி ஆய்ட்டீங்க? என்ன விஷயம்?’

அவர் என்னுடைய முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தார். ‘சார் நீங்க வந்து எங்க ஐயாக்கிட்ட ஹெல்ப் கேக்க போயி அவர் என்னெ இந்த ஊர விட்டே தூக்கியடிச்சாலும் அடிச்சிருவார் சார். என்னதான் நம்ம மதத்த சேர்ந்தவர்னாலும் நான் கீழ்சாதிக்காரந்தானே சார்.. அதனால அவருக்கு என்ன கண்டாலே ஆகாது. இதையே சாக்கா வச்சி என்னெ தூக்கியடிச்சிட்டா.. அதான் சார் யோசிக்கேன்.’

அவரை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் எனக்கும் வேறு வழியில்லை என்பதால், ‘பரவாயில்லை வாங்க. ஒங்க மேல தப்பு இல்லாத மாதிரி பேசி சமாளிக்கிறேன். அதுதானேங்க உண்மையும் கூட? நீங்க வாங்க.. நீங்க நினைக்கறா மாதிரி ஒன்னும் வராது..’ என்று அவரை வற்புறுத்தி அழ¨த்துச் சென்றேன்.

நான் அவருடைய ‘ஐயாவை’ ஓரிருரை முறை மட்டுமே சர்ச்சில் வைத்து சந்தித்திருந்தாலும் அவர் என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுக்கொண்டு சிரிப்புடன் வரவேற்று உபசரித்தார். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் என்னை தொடர்ந்து வாசலில் தயங்கி நிற்க, ‘என்ன ---------------- எங்க போயிருந்தே.. ஒன்னெ எத்தன தடவ சொல்லியிருக்கேன்? சொல்லாம கொள்ளாம வெளிய போகாதேன்னு..’ என்று எரிந்து விழுந்தார்.

நான் உடனே தலையிட்டு, ‘சார், இவர் என்னை பார்க்கத்தான் வந்தார். ஒரு இக்கட்டான சூழ்நிலை சார். அதான் ஒங்கக்கிட்டக் கூட சொல்லாம வந்திருப்பார்னு நினைக்கேன்..’ என்றவாறு நான் வந்த விஷயத்தை சுருக்கமாக கூறினேன்.

நான் என்னைப் பற்றி கூறியதையெல்லாம் அவர் கேட்கவில்லையோ என்று தோன்றியது அவர் ரியாக்ட் செய்த விதம். ‘இவனோட முன்கோபம்தான் சார் பெரிய ப்ராப்ளம். சேர்மன் இவன் மேல வச்சிருக்கற பரிதாபத்த இவன் அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு.. என்னதான் அவன் வீட்டுக்கு பக்கத்துல நீங்க இருக்கீங்கன்னாலும் அவனோட பொசிஷன் என்னன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்க வேணாம்? அம்பாசமுத்திரத்துல திண்டாடிக்கிட்டிருந்தவன் நம்ம சேர்மன் எலெக்டானதும் யார் யாரையோ புடிச்சி இங்க வந்து முழுசா ஆறு மாசம் கூட கலை.. இப்ப பாருங்க.. என்ன செஞ்சிட்டு வந்து நிக்கான்னு? அந்த இன்ஸ்பெக்டர் வேற ஒரு முரண்டு பிடிச்ச ஆள் மிஸ்டர் ஜோசஃப். நான் சொன்னால்லாம் கேக்கற ஆள் இல்லை.. இருந்தாலும் சேர்மன் சொன்னார்னு வேணும்னா சொல்லிப் பாக்கேன்.. முடிஞ்சா சரி.. இல்லன்னா ஒங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆனா இவன் பாடுதான் திண்டாண்ட்டமாயிரும்..’

எனக்கே அவர் பேசிய விதம் சங்கடத்தையளித்தது. அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாததால் நான் மேற்கொண்டு பேச விரும்பாமல், ‘சரி சார். ஒங்களுக்கு சிரமமா இருந்தா வேணாம். நான் வேற ஏதாச்சும் வழியிருந்தா பாத்துக்கறேன்.’ என்றவாறு எழுந்து நின்றேன்.

அவரும் கூடவே எழுந்து என்னுடன் வாயில்வரை வந்தார். என்னுடைய அலுவலகம் சமீபத்திலிருந்ததால் என்னுடைய வாகனத்தை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தேன்.

நான் முனிசிபல் அலுவலக வாயிலை நெருங்கியதும், ‘மிஸ்டர் ஜோசஃப் அவன் முன்னால வச்சி நான் ஒடனே இத முடிச்சி தாரன்னு சொன்னேன்னு வைங்க.. அவன் இதான் சாக்குன்னு அடுத்த நாளே இந்த மாதிரி்  வேற ஒரு வில்லங்கத்தோட வந்து நிப்பான். அதான் அப்படி பேசினேன்... நீங்க கவலைப்படாம போங்க.. நான் அவர்கிட்ட பேசி முடிச்சிடறேன். நான் சொல்லி அவர் கேக்காம இருப்பாரா என்ன? நான் பாத்துக்கறேன்.’ என்றார் புன்னகையுடன்.

அவருடைய திடீர் மாற்றத்தில் வியப்படைந்தாலும் சமாளித்துக்கொண்டு அவருடைய கரங்களைப் பற்றி குலுக்கிவிட்டு என் அலுவலகம் நோக்கி நடந்தேன்..

அவர் கூறியிருந்தபடியே அந்த ஆய்வாளருக்கு ஃபோன் செய்திருக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் முந்தைய இரு நாட்களும் வந்திருந்த காவலர் மீண்டும் வந்திருந்தார். என்னைப் பார்க்க அல்ல.. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்க..

நான் என்னுடைய வீட்டு மேல்தளத்தில் தண்ணீரை நிரப்பிவிட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். அந்த காவல்காரர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

‘இங்க பார்யா? நீ யாரு, என்னன்னு எப்பவும் மனசுல இருக்கணும்.. அத மறந்துட்டு எடுத்தோம் கவுத்தோம்னு என்னத்தையாச்சும் செஞ்சிட்டு வந்து நிக்காத. சொல்லிட்டேன்.. இதான் ஒனக்கு லாஸ்ட் வார்னிங்.. ஆஃபீசுக்கு போம்போது வந்து ஒன் புகார வித்ட்றா செய்றதா எழுதி குடுத்துட்டு போ.. நம்ம ஐயா இல்லாத நேரம் அதான்.. அவர் இருக்கும்போது வந்து மறுபடியும் வீணா பிரச்சினையில மாட்டிக்காத. என்ன, நாஞ்சொல்றது வெளங்குதா?’

அவருடைய குரலிலிருந்த அலட்சியத்தையும், ஆணவத்தையும் உணர்ந்த நான் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் என்னிடம் வந்து பேசிய அதே காவலர்தானா இவர் என்ற வியப்புடன் படிகளில் இறங்கி கையிலிருந்த பைப்பை போட்டுவிட்டு அவரை நோக்கி விரைந்தேன்..

ஆனால் அவர் அதற்குள் தான் வந்திருந்த சைக்கிளில் ஏறிக்கொண்டு செல்ல அவரையே பார்த்தவண்ணம் திகைத்துப் போய் நின்றிருந்த என் பக்கத்து வீட்டுக்காரரையும் அவருடைய மனைவியையும் நெருங்கி, ‘அவர் பேசியத மனசுல வச்சிக்காதீங்க.. டிச்சர் நீங்களுந்தான்..’ என்றேன்..

அவர் என்னைப் பார்த்த பார்வையில் தெரிந்த அடிபட்ட உணர்வு என்னை மிகவும் பாதித்தது..

மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தேன்..

மேலும் ஒரு சிக்கல் எனக்கு ஏதும் பெரிய பாதிப்பில்லாமல் விலகியும் ஏனோ என் மனதில் மகிழ்ச்சியைவிட சோகமே மிஞ்சி நின்றது..

தொடரும்..16 comments:

aravindaan said...

ஒரு வழியா ஒரு பிரச்சனை முடிந்தது.

sivagnanamji(#16342789) said...

அடுத்ததா எந்த பிரச்சினையிலே மாட்டப் போரீங்க?எதா இருந்தாலும்
கா.சட்டை தலையிடுற மாதிரி வச்சுக்காதீங்க

G.Ragavan said...

சார், இது போன்ற பிரச்சனைகளுக்குப் பிறகு ஒரு தர்மசங்கடச் சூழல் இருக்கும். அது ரொம்பவே படுத்தும். முறையாகக் கையாளவில்லை என்றால் அது நிரந்தர விலகலைக் கொடுத்து விடும்.

நானும் முன்பு வீம்பும் வம்பும் செய்து கொண்டுதான் இருந்தேன். சண்டையோ சண்டை. ஆனால் அதை உணர்ந்த ஒருநாளில் திருந்தினேன். நம்புங்கள். என்னோடு சண்டை போட்ட எல்லாருமே எனது நல்ல நண்பர்கள். மேற்குறிப்பிட்ட தர்மசங்கட நேரத்தில் உடனடி உறவாடலும் நாமே சென்று வேறு நல்ல விஷயங்களைப் பேசித் திருப்புவதும் நன்று. தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்கலாம். அட என்னங்க....எவ்வளவு காலம் நம்ம வாழ்க்க...இது என்ன மானம் மரியாத....நிம்மதிதான் பெருசு.

துளசி கோபால் said...

எனக்கு உண்மையிலே பிடிக்காத விஷயம் என்னன்னா, மனுஷனைமனுஷனாப் பார்க்காம,
அவன் தொழில், அந்தஸ்த்து இதையெல்லாம் கனக்குவச்சுப் பார்க்கறது. என்னதான் கடை நிலை ஊழியரா
இருந்தாலும் இன்னொரு சக மனுஷந்தானே? சிலபேர் வயசுக்கும் மரியாதை தர்றது இல்லை.
இதெல்லாம் நல்லாவா இருக்கு?

நீங்க அவர் பக்கத்துலே உட்கார்ந்துக் கையைப் பிடிச்சதும் மனுஷன் எப்படி பதறிட்டார் பாருங்க.
அவுங்க மனசுலெயேயும் ஒரு அடிமைத்தனத்தை நாம்( இந்த இடத்துலே நாம்ன்னா இந்த உலகம்)
விதைச்சிருக்கோம் பாருங்க.

நீங்க செஞ்சது ரொம்ப நல்ல காரியம். நாம் செஞ்ச தப்பை ஒப்புக்கிட்டது. இது எனக்கு ரொம்பப்
பிடிச்சிருக்குங்க.

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

ஒரு வழியா ஒரு பிரச்சனை முடிந்தது. //

ஆமாங்க.. அதுக்குள்ளத்தான் எத்தனை திருப்பங்கள், குழப்பங்கள்.. முடிஞ்சப்போ கொஞ்சம் மனவருத்தம் இருந்தாலும் நிம்மதியா இருந்தது..

மணியன் said...

ஒரு பிரச்சினை முடிந்தது. அடுத்தது நாளையிலிருந்தா ? என்ன, சோதனைதான் வாழ்க்கையடா என்றிருக்கிறதே உங்களுடையது.
புறநகர்களில் அலுவலகங்களில் கடைநிலை ஊழியருக்குத் தரப்படும் மரியாதையே தனிதான். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அவர்கள்தான் ஆட்சி.

srishiv said...

அடிபட்டது அவர் மனம் மட்டும் அல்ல, எங்கள் மனமும்தான், சமுதாயத்தில் என்னதான் வசதிவாய்ப்பிருந்தாலும் அந்த சாதி என்ற ஒன்று? :( பாவம் அவர், செய்ததெல்லாம் தவறே , இருப்பினும், தங்களின் கடைசி வரிகளில்தொட்டுவிட்டீர்கள் ஐயா....
வாழ்த்துக்கள்,
ஸ்ரீஷிவ்..

Sivaprakasam said...

ஒரு பிரச்னை முடின்சிடுச்சி. அடுத்த பிரச்னை எப்பவோ?

tbr.joseph said...

வாங்க ஜி!

அடுத்ததா எந்த பிரச்சினையிலே மாட்டப் போரீங்க?//

கடவுளுக்குத்தான் தெரியும்!

எதா இருந்தாலும்
கா.சட்டை தலையிடுற மாதிரி வச்சுக்காதீங்க..//

ஆமாங்க.. கா.சட்டை மோதல் எவ்வளவு ஆபத்தானதுங்கறத ஜன்மத்துக்கும் மறக்க முடியாது..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆனால் அதை உணர்ந்த ஒருநாளில் திருந்தினேன். நம்புங்கள். //

நம்பிட்டேன்:) நானும் அப்படித்தானிருந்தேன்.. ஒரு காலத்தில்!

தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்கலாம். அட என்னங்க....எவ்வளவு காலம் நம்ம வாழ்க்க...இது என்ன மானம் மரியாத....நிம்மதிதான் பெருசு. //

சரியா சொன்னீங்க ராகவன். மன்னிச்சிக்குங்கன்னு சொல்லும்போது எந்த மூர்க்க எதிராளியும் இறங்கி வந்துருவாங்கங்கறத நான் கண்கூடா பார்த்திருக்கிறேன்.. காக்கி சட்டைய தவிர..

tbr.joseph said...

வாங்க துளசி,

மனுஷனைமனுஷனாப் பார்க்காம,
அவன் தொழில், அந்தஸ்த்து இதையெல்லாம் கனக்குவச்சுப் பார்க்கறது. என்னதான் கடை நிலை ஊழியரா
இருந்தாலும் இன்னொரு சக மனுஷந்தானே?//

ஆமாங்க.. இத தெரிஞ்சிக்காம சிலர் பேசறதும், நடந்துக்கறதும்.. ஹும்..

அவுங்க மனசுலெயேயும் ஒரு அடிமைத்தனத்தை நாம்( இந்த இடத்துலே நாம்ன்னா இந்த உலகம்)
விதைச்சிருக்கோம் பாருங்க.//

உண்மைதாங்க.. நாம எல்லாருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அதுக்கு உடந்தையாயிருந்திருக்கோம்.. தெரிஞ்சோ, தெரியாமலோ..

நாம் செஞ்ச தப்பை ஒப்புக்கிட்டது..//

ஜி.ரா சொல்றா மாதிரி.. எவ்வளவு காலங்க நம்ம வாழ்க்கை.. மன்னிச்சிட்டோம்கற சிந்தனையே நமக்கு எவ்வளவு நிம்மதிய கொடுக்குது..

tbr.joseph said...

வாங்க மணியன்,

புறநகர்களில் அலுவலகங்களில் கடைநிலை ஊழியருக்குத் தரப்படும் மரியாதையே தனிதான். //

உண்மைதான் மணியன். மதுரை, நெல்லை தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் இவர்களை நடத்தும்விதமே அலாதியானது..ஆனால் நான் கூறியவரைப் போன்ற அதிகாரிகளூம் இருக்கத்தான் செய்கின்றனர்..

ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அவர்கள்தான் ஆட்சி. //

ஏன் கொஞ்ச நேரம் யோசிங்களேன். ஆரம்ப காலத்தில் அவர்களை அடக்கி ஆட்கொண்டதால்தான் இப்போது அவர்கள் கிளர்ந்து எழுகின்றனர் என்று நினைக்கிறேன்.. ஆனால் அவர்கள் செய்வது சரியென்று கூற நான் வரவில்லை.. அதன் பின்புலத்தை மட்டும் பார்க்கிறேன்..

tbr.joseph said...

வாங்க ஸ்ரிஷிவ்,

அடிபட்டது அவர் மனம் மட்டும் அல்ல, எங்கள் மனமும்தான், சமுதாயத்தில் என்னதான் வசதிவாய்ப்பிருந்தாலும் அந்த சாதி என்ற ஒன்று? :( பாவம் அவர், //

ஆமாங்க.. அன்றைக்கு காலைல காவலர் அவரை எச்சரித்துவிட்டு சென்றவுடன் அவருடைய முகத்திலிருந்த அவமானத்தைப் பார்த்தபோது எனக்கு அவரைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடிந்தது. ஏனென்றால் நானும் அத்தகைய தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறேனே..

அடிபட்டவனுக்குத்தானே தெரியும் அடியின் வலியும் வீரியமும்..

tbr.joseph said...

வாங்க சிவா,

ஒரு பிரச்னை முடின்சிடுச்சி. அடுத்த பிரச்னை எப்பவோ?
//

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை போரடிச்சிருங்க.. இந்த தொடர நீங்க தொடர்ந்து படிக்கறதுக்கு என்ன காரணம்.. நான் சந்தித்த பிரச்சினைகளை எழுதுவதால்தானே..

ஒவ்வொரு பிரச்சினைகளையும் வெற்றிகொள்ளும்போது ஏற்படும் சுகம் இருக்கிறதே அது அந்த பிரச்சினையால் நாம் பட்ட அவதிகளையெல்லாம் மறக்க செய்துவிடும்..

எனக்கோ என்னுடைய அலுவலக வாழ்க்கையில்தான் பிரச்சினை.ஆனால்
சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையாகிவிடுகிறதே..

அவர்களை நினைத்துப்பாருங்கள்..

Seemachu said...

என்ன ஜோசப் சார் .. இன்னும் நீங்க இன்றைய சூடான இட்லி வடை படிக்கலை போல இருக்கே..

அருமையா உங்களை (நம்ம ஜி.ராகவன் பின்னூட்டத்துடன் கூட) மிமிக் பண்ணிருக்கார் இட்லிவடை.. அதுக்கு உங்க பின்னூட்டம் எப்படியிருக்கும்-னு பார்க்க நான் வைட் பண்ணிக்கிட்டிருக்கேன்..

http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_26.html

அன்புடன்
சீமாச்சு

பழூர் கார்த்தி said...

//பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை போரடிச்சிருங்க.. இந்த தொடர நீங்க தொடர்ந்து படிக்கறதுக்கு என்ன காரணம்.. நான் சந்தித்த பிரச்சினைகளை எழுதுவதால்தானே..//

மிகச் சரியாக சொன்னீர்கள், ஜோசப்..
ப்ரச்சனைகளை எதிர்கொண்டு வெல்ல வேண்டும்..

****

ஆக ஒருவழியா, வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ணப் போறீங்க போலிருக்கு (இந்த தொடர்ல), வாழ்த்துக்கள் !!!