25 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 178

நீங்களா ஸ்டேசனுக்கு வந்து ஒங்க பக்கத்துலருக்கற நியாயத்த எடுத்து சொல்லி இந்த விசயத்த சுமுகமா முடிச்சிக்கறதுதான் நல்லது.. நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. அப்புறம் ஒங்க இஷ்டம்..’ என்றவாறு கிளம்பிச் செல்ல நான் திகைத்துப் போய் ராஜேந்திரனைப் பார்த்தேன்.

*****

அன்று என் வீட்டுக்கு வந்திருந்த காவலர் என்னை வரச் சொன்ன காவல் நிலையத்தின் பெயரைக் கேட்டதும்தான் என்னுடைய முட்டாள்தனத்தின் தீவிரம் எனக்கு புரிந்தது. அந்த நிலையத்தின் ஆய்வாளருடனான என்னுடைய மோதல் முடிவுக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை.

மீண்டும் அவர் முன் எப்படி போய் நிற்கப்போகிறேன் என்று நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ச்சே.. என்ன ஒரு முட்டாள்தனம் என்று என்னுடைய அப்போதைய நிலமையை நினைத்து நொந்துப்போனேன்.

ஆனால் வேறுவழியிருக்கவில்லை. இதை தவிர்க்க வேண்டுமென்றால் என்னுடைய அடுத்த வீட்டுக்காரருடைய தயவை நாடுவதுதான் ஒரே வழி என்று தோன்றியது.

அந்த ஆய்வாளருடைய மேலதிகாரி வழியாக அவரை என்னுடைய மைத்துனரின் நிலத்தகராறு விஷயத்திலிருந்து விலக வைத்த காயம் அவர் மனதில் இப்போதும் இருக்கும் என்பதையும் உணர்ந்திருந்த நான் அவரை எதிர்கொள்வதை விட என்னுடைய அடுத்த வீட்டுக்காரரை அணுகி மன்னிப்பு கேட்டு அவராகவே அவருடைய புகாரை திருப்பி பெற்றுக்கொள்ள வைப்பதுதான் புத்திசாலித்தனம் என தீர்மானித்தேன்.

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் விழுவது நல்லதல்லவா?

ஆனால் அதை எப்படி செயல்படுத்துவதென்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருந்தது. ‘இன்னைக்கி காலைல வேணும்னா நாம அந்த இன்ஸ்பெக்டர போயி பாக்காம இருக்கலாம். ஆனா அதுக்கப்புறம்? நம்ம பக்கத்து வீட்டுக்காரர் புகார் குடுத்துருக்கறது என்னெ பத்திதான் அந்தாளுக்கு தெரிஞ்சிது.. அவ்வளவுதான்.. வேற வெனையே வேணாம்.’ என்றேன் என் மனைவியிடம்.

அவருக்கும் என்மேல்தான் கோபம் வந்தது. ‘நீங்க மட்டும் அந்த எஞ்சினியர் பேச்ச கேட்டு இந்த முட்டாளதனத்த செய்யாம இருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காதுல்லே?’ என்றார்.

‘நீ சொல்றது சரிதான். ஒத்துக்கறேன். ஆனா அதப்பத்தி இப்ப பேசி என்ன பண்றது? இனி என்ன செய்யலாம்? அதச் சொல்லு.’

என் மனைவி சிறிது நேரம் யோசித்துவிட்டு சட்டென்று, ‘ஏங்க நாம இப்படி செஞ்சா என்ன?’ என்றார்.

‘என்ன?’

‘நீங்களும் நானும் அந்த விக்டோரியா ரோட்லருக்கற ஒருத்தங்கள பாக்க போனோமே.. அதாங்க ஒங்க பாங்க்லருந்து ஷிப் சேட்லிங்குக்கு கூட லோன் வாங்கியிருக்காங்களே? அவங்க கட்ற வீடுகூட  எதுத்தாப்பலதான  இருக்கு? அன்னைக்கி கூட அவங்க வீட்டுக்காரர் வந்திருந்தப்போ அந்த டீச்சர்கூட நின்னு பேசிக்கிட்டிருந்தத பார்த்தேன். அவங்க வழியா அப்ரோச் பண்ணா இவர் கேப்பாருன்னு நினைக்கேன். ட்ரை பண்ணி பாக்கலாம். நீங்க ஆஃபீசுக்கு லீவு சொல்லிட்டு வாங்க, போய்ட்டு வரலாம்.’

எனக்கும் முயற்சி செய்து பார்த்தாலென்ன என்று தோன்றியது. நானும் என்னுடைய மனைவியும் இளைய மகளுடன் என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று என்னிடமிருந்த பாதுகாப்பு பெட்டகத்தின் அறைச் சாவியை என் உதவி மேலாளரிடம் கொடுத்துவிட்டு விடுப்பு எடுத்துக்கொண்டு என் மனைவி கூறியிருந்தவரைச் சென்று பார்த்து விவரித்தோம்.

அவரும் நான் விவரிக்கும்வரை கேட்டிருந்துவிட்டு, ‘நீங்க சொல்றது சரிதான். அந்த இன்ஸ்பெக்டருக்கு இந்த விஷயத்த ஒங்கள பழிவாங்கறதுக்கு கிடைச்ச சான்ஸா நினைக்க வாய்ப்பிருக்கு. ஆனா..’ என்று தயங்கினார்.

‘என்ன விஷயம்?’ என்றேன்.

‘நான் சொன்னா அந்த டீச்சர் கேப்பாங்க. ஆனா அந்த மனுஷன் கொஞ்சம் முன்கோபி. அத்தோட நீங்க அந்த ராஜேந்திரன் ஃபேமிலிகூட ஃப்ரெண்ட்லியாருக்கறது வேற அவருக்கு பிடிக்கல. அந்த மனுசனே இத எங்கிட்டயும் என் ஹஸ்பெண்ட் கிட்டயும் பலதடவ சொல்லியிருக்கார். அதான் யோசிக்கேன்.’

நான் இனியும் இவரிடம் பேசி பலனில்லை என்று, ‘சரிங்க.. நான் வேற ஏதாவது வழியிருக்கான்னு பாக்கேன்.. தாங்ஸ்..’ எழுந்து நின்றேன்.

அவர் ஏதோ நினைவுக்கு வந்தது போல், ‘சார்.  ஒங்க வக்கீல் இருக்கார் இல்ல?’ என்றார்.

‘யார சொல்றீங்க? எங்க லீகல் அட்வைசரா?’ என்றேன்.

‘ஆமாம் சார். அவர் முனிசிபல் ஆஃபீஸ்க்கும் வக்கீலாச்சே. அங்கதான அந்த மனுசனும் பியூனாருக்கார்? அவர் சொன்னா வேற வழியில்லாம ஒத்துப்பார். நீங்க அவர்கிட்ட இந்த விஷயத்த சொல்லுங்க. நிச்சயம் நடக்கும்னு நினைக்கேன்.. நானும் அந்த டீச்சர மதியானமா பாத்து பேசிட்டு வரேன்.’

அட! இந்த யோசனை எனக்கு ஏன் உதிக்காமல் போனது என்று நினைத்தேன்.

‘ஏங்க அந்த மனுசன் அங்கனதான் வேல பாக்காருன்னு ஒங்களுக்கு தெரியும்லே.. இத முன்னாலயே நினைச்சி பாத்திருக்கலாம் இல்லே..’ என்றார் என் மனைவி.

‘எங்க? போலீஸ் ஸ்டேசனுக்கு மறுபடியும் போணுமேன்னு நினைச்ச கொழப்பத்துல இந்த ஐடியா எனக்கு வரவே இல்ல.. சரி ஒன்னு செய்வோம். நா ஒன்னெ ஒங்க வீட்ல விட்டுட்டு கோர்ட்டுக்கு போய் அவர சந்திக்க முடியுமான்னு பார்த்துட்டு வரேன்.’ என என் மனைவியும் சம்மதித்தார்.

நல்லவேளையாக நான் நீதிமன்றத்தைச் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்களுடைய ஓய்வறையில்தான் இருந்தார். நான் சென்ற விபரத்தைக் கூறி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டவர் இறுதியில், ‘ஒங்களுக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் ஏதோ பூரண ஜென்ம பகை இருந்திருக்கும்போல. அதான் மறுபடியும் அவர்கிட்டவே போய் நிக்கிறீங்க.’ என்றார் புன்னகையுடன்.

ஆனால் அன்றே மாலையே அவருடைய நீதிமன்ற அலுவல்கள் முடிந்ததும் முனிசிபல் அலுவலகத்தில் அவருக்கு ஒதுக்கியிருந்த அலுவலக அறைக்கு திரும்பி என் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து பேசியிருப்பார் போல் தெரிந்தது. அன்று இரவே எனக்கெதிராக புகார் அளித்தவர் அதை திரும்பிப் பெற காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

ஆனால் நம் ய்வாளர்தா வில்லங்கம் பிடிச்சவராயிற்றே. புகாரை திரும்பப் பெற சென்றவரை மிரட்டி அவர் அளித்த புகார் எனக்கெதிராகத்தான் என்பதை அறிந்துக்கொண்டு, ‘போய் நீங்க யாருக்கு எதிரா புகார் குடுத்தீங்களோ அவர வரச்சொல்லுங்க. அவர விசாரிச்சி அவர் மேல தவறு இருக்கா இல்லையான்னு விசாரிக்காம ஒங்க புகார திரும்பப் பெற விடமாட்டேன். போங்க.’ என்று விரட்டியடித்திருக்கிறார்.

அத்துடன் நிற்காமல் ஏற்கனவே அனுப்பி வைத்த காவலரையே மீண்டும் அடுத்த நாள் காலை என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான் அவருக்கே எனக்கும் அவருடைய ‘ஐயாவுக்கும்’ இடையே ஏற்கனவே இருந்த மனத்தாங்கல் தெரிந்திருக்கிறது.  

‘அவர் இப்பிடித்தாங்க. அவர் புடிச்ச முயலுக்கு காலு மூனுன்னு நிப்பார். நீங்க ஒரு நேரம் ஸ்டேஷனுக்கு வந்து போனா போறும்யா. இந்த ஃபைல முடிச்சிறலாம். ஒங்கள அநாவசியமா ஏதும் பேசாம இருக்கறதுக்கு நீங்க வேணும்னா ஒங்க வக்கீலய்யா கூட வந்துருங்க. அவருக்கு கோபம் வரத்தான் செய்யும்.. ஆனா என்ன செய்ய?’

அவர் கூறியதும் நியாயமாகப்படவே நான் அவர் கிளம்பிச் செல்ல என்னுடைய அலுவலகம் செல்லும்வழியில் என்னுடைய சட்ட ஆலோசகரை சந்தித்துவிட்டு செல்லும் உத்தியில்  புறப்பட்டுச் சென்றேன். நான் காவலர் கூறியதை அவரிடம் சொன்னதும் எப்போதுமே அமைதியாக இருக்கும் அவர் சட்டென்று கோபப்பட்டு நான் வேண்டாம் என்று கூறியும் அந்த காவல் நிலையத்தை அழைத்து அந்த ஆய்வாளரை அழைத்து அதே கோபத்துடன் காரசாரமாக பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

‘நீங்க பாட்டுக்கு ஒங்க வேலைய பாருங்க சார். இனியும் அவர் ஏதாச்சும் பிரச்சினை பண்ணினார்னா நா பாத்துக்கறேன். எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லையா?’ என்றார்.

நான் அப்போதும் சமாதானம் அடையாமல் அமர்ந்திருந்தேன்.

அவர் சற்று நேரத்தில் அமைதியானார். ‘சார் ஒங்களுக்கு தெரியாது. ஒங்க மச்சான் நில விஷயத்துல கடைசியா நம்ம ஆஃபீஸ்ல வச்சி பேசினதுமே அந்த சைட்ல சரி போதும்னு விடத்தான் இருந்தாங்க. இவர்தான் அங்க போயி இவ்வளவு தூரத்துக்கு வந்தபிறகு நீங்க ஒதுங்கி போனீங்கன்னா எனக்குத்தான் சார் அவமானம். பேசாம ஸ்டே வாங்கி அவரையும் மேக்கொண்டு வேல செய்ய விடாம தடுங்கன்னு சொல்லி நோட்டீஸ் விட செஞ்சிருக்கார். அதான் எப்படா எங்கிட்ட மாட்டுவார்னு காத்துக்கிட்டிருந்தேன்.’ என்றார். ‘இன்னொன்னும் ஒங்கக்கிட்ட சொல்லிக்கறேன் ஜோசப். இவரால அவங்க குடும்ப வக்கீலா  ஏறக்குறைய பதினஞ்சு வருசமா இருந்த எனக்கும் அவங்களுக்கும் இப்ப கொஞ்ச நாளா பேச்சு வார்த்தையே இல்லா போயிருச்சி. அந்த கோபமும் இருக்கு எனக்கு..’

‘ஆனா இந்த விஷயத்த அவர் இப்படியே விட்டுருவார்னு நீங்க நினைக்கீங்களா சார்?’ என்றேன் தயக்கத்துடன்.

‘நீங்க சொல்றது சரிதான். அவ்வளவு ஈசியா விட்டுடமாட்டார்தான். ஆனா அதால ஒங்களுக்கு ஒரு பாதிப்பும் வராம நா பாத்துக்கறேன் ஜோசப். நீங்க கவலப்படாம போங்க. நான் ----------- (என் பக்கத்து வீட்டுக்காரர்) கூப்ட்டு என்னாச்சி கேக்கேன். முடிஞ்சா டிப்பார்ட்மெண்ட்லருந்ந்து ஒரு ஆஃபீசர அனுப்பி பார்த்துட்டு வரச்சொல்றேன். அதுக்கும் அவர் மசியலன்னா அப்புறம் இருக்கு அவருக்கு.. நீங்க போங்க.’ என்றார்.

அவர் கூறியதில் எனக்கு அவ்வளவாக திருப்தியில்லையென்றாலும் வேறு வழியின்றி அரைமனதுடன் என் அலுவலகம் கிளம்பிச் சென்றேன்.

அன்று பகலுணவை அலுவலகத்திலேயே முடித்துக்கொண்டு என் அறையில் அமர்ந்திருக்க என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் பதற்றத்துடன் என் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

தொடரும்..

15 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்த சஸ்பென்ஸ்ல முடிக்கிறதே உங்க வழக்கமா போச்சு. இந்த கனெக்ஷனை எல்லாம் வேலி மேல கை வைக்கறதுக்கு முன்னாடியே யூஸ் பண்ணி இருக்கலாமில்ல. அவசரப் பட்டு எதையாவது பண்ணிட்டு, இப்போ எல்லாருக்கும் சங்கடம்.

tbr.joseph said...

வாங்க இ.கொத்தனார்,

அவசரப் பட்டு எதையாவது பண்ணிட்டு, இப்போ எல்லாருக்கும் சங்கடம். //

இந்த மாதிரி அவசரப்பட்டு காரியங்கள செஞ்சா என்ன அவஸ்தைப்படணுங்கறத எல்லாருக்கும் சொல்றதுக்குத்தான இத எழுதிக்கிட்டிருக்கறேன்..

இப்ப சங்கடம்னு சொல்லி என்ன பிரயோசனம்.. சங்கடம்தான்.. இத நா எப்படி சமாளிச்சேங்கறதுதான் இப்ப முக்கியம்..

சொல்றேன்..

துளசி கோபால் said...

ச்சும்மா இருக்கமாட்டீங்க......
இப்ப பிபி வேற எகிருது.

எல்லாரும் அவுங்கவுங்க கோபத்தைத் தீர்க்க எப்படா நேரம் வருமுன்னு காத்துருக்காங்க பார்த்தீங்களா?
உங்க வக்கீலைத்தான் சொல்றேன்.

நன்மனம் said...

ஜோசப் சார்,

காப்பிரைட் அப்ளை பண்ணிடுங்க... சார் எனக்கு ஒன்னு புரியல, இத மாதிரி கதைய ஏன் சீரியலா எடுக்க மாட்டேங்கறாங்க.... எவ்வளவோ நல்ல விசயம் தெரிஞ்சுக்கலாம் இல்ல அத விட்டுட்டு....

ஆனாலும் கொத்ஸ் சொல்லறா மாதிரி எந்த எடத்துல கொக்கி வெச்சா நாளைக்கு மறக்காம வருவாங்கங்கற டெக்னிக்க சரியா கணிச்சு வெச்சிருக்கீங்க சார் :-)

tbr.joseph said...

வாங்க துளசி,


எல்லாரும் அவுங்கவுங்க கோபத்தைத் தீர்க்க எப்படா நேரம் வருமுன்னு காத்துருக்காங்க பார்த்தீங்களா?
உங்க வக்கீலைத்தான் சொல்றேன்.//

ஆமா.. அவர் வருத்தம் அவருக்கு.

ஆனா அதுவே எவ்வளவு பெரிய பிரச்சினைய கொண்டு வந்தது..

tbr.joseph said...

வாங்க நன்மனம்,

ஆனாலும் கொத்ஸ் சொல்லறா மாதிரி எந்த எடத்துல கொக்கி வெச்சா நாளைக்கு மறக்காம வருவாங்கங்கற டெக்னிக்க சரியா கணிச்சு வெச்சிருக்கீங்க //

சேச்சே அப்படியெல்லாம் இல்லை..

மசமசன்னு எழுதிக்கிட்டு போனா.. படிக்கறவங்களுக்கும் ஒரு ஈடுபாடு வேணும்லே.. அதுக்குத்தான்..

sivagnanamji(#16342789) said...

எதிலும் நேர்மை நியாயம் சத்தியம்
என்றிருப்பவர்கள் இப்படிப்பட்ட இக்கட்டுகளை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும்.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..நீ
தலைநிமிர்ந்து உணை உணர்ந்து வெல்லடா..."னு பாடிட்டே போய்ட்டு
இருக்கவேண்டியதுதான்

G.Ragavan said...

எல்லாருஞ் சொல்ற மாதிரி.....நீங்க கருணாநிதி வழியா சன் டீவியில முயற்சி செஞ்சா இந்தக் கதையை தொடர் நாடகமா எடுத்துறலாம். ஆனா ஒன்னு இன்ஸ்பெக்டர் வேசத்த எனக்குத்தான் குடுக்கனும். இப்பவே சொல்லீட்டேன்.

பழூர் கார்த்தி said...

ஆமாங்க, இப்படி ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா சஸ்பென்ஸ் வைக்குறீங்க...நிஜமாவே இத ஒரு சீரியலா எடுக்கலாங்க :-)

***

என்னங்க இது, புகார் கொடுத்தவரே வாபஸ் வாங்கிறேன்னு சொன்னா விட வேண்டியதுதானே..

***

ஆய்வாளர் நின்னு விளையாடுறார் போலிருக்கே..

tbr.joseph said...

வாங்க ஜி!

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..நீ
தலைநிமிர்ந்து உணை உணர்ந்து வெல்லடா..."னு பாடிட்டே போய்ட்டு
இருக்கவேண்டியதுதான் //

எங்க ரோட்லயா:)

அப்புறம் அதுக்கு வேற நியூசன்ஸ் கேஸ் போட்டா என்ன பண்றது?

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

என்னங்க இது, புகார் கொடுத்தவரே வாபஸ் வாங்கிறேன்னு சொன்னா விட வேண்டியதுதானே..

***

ஆய்வாளர் நின்னு விளையாடுறார் போலிருக்கே..//

பின்னே வேற என்ன?

எல்லாம் ஈகோ பிரச்சினைதான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நீங்க கருணாநிதி வழியா சன் டீவியில முயற்சி செஞ்சா இந்தக் கதையை தொடர் நாடகமா எடுத்துறலாம். //

அதென்ன கருணாநிதி வழியா?

அவர்தான் அவர் பேர்லருந்த ஷேரையெல்லாம் வித்து காசாக்கிட்டாரே?

ஆனா ஒன்னு இன்ஸ்பெக்டர் வேசத்த எனக்குத்தான் குடுக்கனும். இப்பவே சொல்லீட்டேன். //

ஆனா ஒங்க ஃபேஸ் அந்த காரக்டருக்கு ஒத்து வராதே? இந்த காதல் படத்துல ஒருத்தர் நடிச்சாரே சாராயக்கடை பார்ட்டி.. அவர வேணும்னா போடலாம்:)

12:42 PM

aravindaan said...

அதுக்குதான் அப்பவே சொன்னாங்கா வீட்டை கட்டிபார், கல்யானத்தை பண்ணிப்பார். எதை எப்படி செய்யவேண்டும் எப்படி பொருமையா இருக்க வேண்டும்.ஒரு முதிர்ச்சி வந்துவிடும். சீரியால எடுத்தா நல்ல ரேட்டிங் வரும். அதுவும் பெண்ணாக இருந்தால் ...கேடகவேண்டாம்.

sivagnanamji said...

சொல்ல மறந்துவிட்டேன்... தொடர் அருமையாக போகிறது. அப்படியே புத்தகமாகவும் வெளியிடலாம். என் வலைப்பதிவை படித்தீர்களா? நிறைய எழுதி இருக்கிறேன்.

G.Ragavan said...

// tbr.joseph said...
வாங்க ராகவன்,
ஆனா ஒன்னு இன்ஸ்பெக்டர் வேசத்த எனக்குத்தான் குடுக்கனும். இப்பவே சொல்லீட்டேன். //

ஆனா ஒங்க ஃபேஸ் அந்த காரக்டருக்கு ஒத்து வராதே? இந்த காதல் படத்துல ஒருத்தர் நடிச்சாரே சாராயக்கடை பார்ட்டி.. அவர வேணும்னா போடலாம்:) //

சார்...ஒரு விஷயம்..இப்பல்லாம் அப்படிப் பாக்கக் கூடாது....பால் வடியும் முகமா இருக்கனும்...ஆனா அட்டூழியம் செய்யனும். கரடுமுரடா இருந்து பயமுறுத்திக்கிட்டேயிருந்து கடைசீல நல்லவனாக் காட்டனும். இதுதான் சினிமாவுல இப்பத்தைய டிரெண்டு.