24 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 177

எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கு முன்பு அதனால் ஏற்படவிருக்கும் சாதக பாதகங்களை சரிவர ஆய்ந்து அறிந்தபிறகு எடுப்பதுதான் நல்லது.

அத்தகைய ஆய்வை நாம் நடத்துகையில் நம்முடைய மனநிலை ஒரே சீராக இருத்தல் மிகவும் அவசியம். அதாவது, நாம் கோபத்திலோ, பதற்றத்திலோ இருக்கும் சமயங்களில் முக்கியமான எந்த ஒரு முடிவையும் எடுக்கலாகாது.

முக்கியமாக நாம் எடுக்கும் முடிவு நம் சொந்த வாழ்க்கையில் என்றால் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நம்முடைய அலுவலக வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் தவறாகிவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஏனெனில் நிமிடத்திற்கு ஒன்று, நொடிக்கு ஒன்று என்னும் வேகத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஆகவே ஒவ்வொரு முடிவுக்கும் நாம் ஆய்ந்து ஆராய்ந்து மற்றவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுப்பேன் என்று நினைக்க துவங்கினால் நம்முடைய முடிவை எதிர்பார்த்திருக்கும் நம் அதிகாரத்திற்கு கீழ் பணிபுரிபவர்களின் நன்மதிப்பை இழக்க வேண்டிவரும். அதே சமயம், அலுவலகங்களில் நடக்கும் பல தவறுகளையும் நம்மால் பெருத்த சேதாரம் இல்லாமலே சரிசெய்துக்கொள்ள முடியும்.

ஆனால் நம்முடைய சொந்த அல்லது குடும்ப வாழ்வில் அப்படியல்ல. முக்கியமாக, சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் எடுக்கும் சில முடிவுகள் தீர்க்கமுடியாத பிரச்சினையை ஏற்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் நான் சென்னையில் வசித்து வந்த காலத்தில் (1993-95 வருடங்கள்) நடந்த ஒரு சுவையான (துரதிர்ஷ்டமான என்றும் கூறலாம்)சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அப்போது சென்னையில் மிகவும் பிரபலமாகவிருந்த 'ராம்ஸ்' நிறுவனத்தினரால் கட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் (appartment) வசித்து வந்தேன். அந்த குடியிருப்பில் தளத்திற்கு நான்கு குடியிருப்புகள் (flats) என பதினாறு குடியிருப்புகள் இருந்தன.

கட்டடத்தின் தரை தளத்தில் (ground floor) மூலைக்கு ஒன்றாக நான்கு குடியிருப்புகள் அமைந்திருந்தன. அந்த நான்கு குடியிருப்புகளின் அளவு முதல் தளம் முதல் அமைக்கப்பட்டிருந்த மற்ற குடியிருப்புகளைவிட சுமார் முன்னூறு சதுர அடிகள் கூடுதல்.

அவற்றுள் ஒன்றில் நான் வாடகைக்கு குடியிருந்தேன். கழிவறை மற்றும் குளியலறைகளை உள்ளடக்கிய இரண்டு படுக்கையறைகள், சுமார் முன்னூறு சதுர அடி வரவேற்பறையும் உணவறையும் சேர்ந்த ஹால், விசாலமான சமையலறை என குடியிருப்பு ஏறத்தாழ எல்லா வசதிகளையும் கொண்டிருந்தது.

கட்டடத்தைச் சுற்றிலும் வாகனங்களை நிறுத்திவைப்பதற்கான இடமும் இருந்தது. ஆனால் ஒரேயொரு குறை. என்னைப்போன்ற ஒரு சிலர் வைத்திருந்த நாற்சக்கர வாகனங்களை நிறுத்திவைக்க அந்த இடம் அவ்வளவு போதுமானதாக இல்லை.

ஆயினும் நான் அந்த குடியிருப்பில் முதலில் குடியேறியவர்களுள் ஒருவன் என்பதாலும் நான் குடியேறிய காலக் கட்டத்தில் வெகு சிலரே குடியேறியிருந்ததாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்க என்னுடைய நாற்சக்கர வாகனத்தை நிறுத்த போதிய இடமிருந்தது. ஆனால் குறுகிய வாயில்கள் வழியாக ஏற்றி இறக்க சிரமப்பட வேண்டியிருந்தது.

நான் சென்னையில் பொறுப்பேற்றிருந்த கிளையில் இத்தகைய குடியிருப்புகள் சிலவற்றிற்கு கடனுதவி அளித்திருந்ததால் ஒரு நாள் அதன் சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அந்த கோப்பிலிருந்த குடியிருப்புகளில் ஒன்று  நான் குடியிருந்த குடியிருப்பைப் போன்ற் அமைப்புடன் இருந்ததைக் கண்டேன். அதே வடிவமைப்பு, நான்கு மாடிகள், பதினாறு குடியிருப்புகள். எல்லாமே சரி. ஆனால் தரைதளத்திலிருந்த குடியிருப்புகளின் உள் அளவு மற்ற குடியிருப்புகளைவிட சுமார் நானூறு சதுர அடிகள் குறைவாக இருந்தது என்னுடைய கவனத்தை ஈர்த்தது.

அந்த வரைபடத்தை கோப்பிலிருந்து எடுத்து என்னுடைய கைப்பெட்டியில் வைத்துக்கொண்டேன். மாலை வீடு திரும்பியதும் என்னுடைய கட்டடத்திலிருந்த வேறொரு தரைதள குடியிருப்பின் உரிமையாளரிடம் நான் கொண்டு வந்திருந்த வரைபடத்தைக் காண்பித்து, ‘சார் இத பாருங்க. இதுவும் நம்ம பில்டிங்கும் ஒரே மாதிரி இருக்கு.’ என்றேன்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, 'ஆமாம் சார்.’ என்றார்.

நான் அவருக்கு தரைதளத்திலிருந்த குடியிருப்புகளின் அளவை சுட்டிக்காட்டி, ‘சார்.. இந்த ஃப்ளாட்சோட சைஸ பாருங்க. மாடியிலருக்கற மத்த ஃப்ளாட்சோட சின்னதாருக்கு.’ என்றேன்.

அவரும் அதை பார்த்துவிட்டு அதற்கென்ன இப்போ என்பதுபோல் பார்த்தார்.

நான், ‘ஏன்னு பாருங்க சார். இந்த ப்ளான்லருக்கற பார்க்கிங் ஏரியா சைஸ பாருங்க. நம்ம பில்டிங்க்லருக்கற பார்க்கிங் ஏரியாவையும் பாருங்க. இந்த படத்துலருக்கற சைசுல பார்க்கிங் ஏரியா இருந்தா இப்ப நாம நம்ம கார நிறுத்தறதுக்கு படற அவஸ்தை இருக்காதில்லே. எனக்கென்னவோ நம்ம பில்டிங்கலயும் இந்த மாதிரிதான் செஞ்சிருக்கணும்னு தோனுது.. நீங்க என்ன நினைக்கறீங்க?’ என்றேன்.

அவருக்கும் நான் கூறியதிலிருந்த நியாயம் புரிந்திருக்க வேண்டும். அவர் வைத்திருந்த அம்பாசடர் காரை கட்டட வளாகத்தில் ஏற்றி இரக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தவர்.
‘எனக்கும் அப்படித்தான் தோனுது சார்.’ என்றவர் சட்டென்று, ‘சார் ஒருவேளை நம்ம பில்டிங் ப்ளான்லயும் அப்படித்தான் இருக்குமோ என்னவோ?’ என்றார்.

அப்படி ஆரம்பித்த சம்பாஷனையின் இறுதியில் எங்களுடைய குடியிருப்பின் வரைபடத்தையும் பார்ப்பது என்று தீர்மானித்தோம். ஆனால் அடுத்த வந்த ஒரு வாரம் அவர் கட்டடத்தை எழுப்பிய ராம்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததுதான் மிச்சம். வரைபடம் கிடைக்கவே இல்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் என்னுடைய வங்கி சட்ட ஆலோசகரை அணுகினோம்.

அவர் வியப்புடன், ‘என்ன சார்.. நீங்கல்லாம் படிச்சவங்க. நீங்களே இப்பிடி செஞ்சா இப்படி? அதுக்குத்தான CMDA இருக்கு? நீங்க எந்த கம்பெனியோட பில்டிங்ல ஃப்ளாட் வாங்கப்போறீங்கன்னு தீர்மானிச்சதுமே அங்க போய் ப்ளான் காப்பிக்கு அப்ளை பண்ணியிருக்கலாமே? அது சரி. நீங்க கம்பெனி ஆஃபீசுக்கு போயும் அவங்க பில்டிங்கோட ப்ளான தர மறுக்கறாங்கன்னா இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால நீங்க சம்மதிச்சீங்கன்னா அஃபிஷியலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம்.’ என்றார்.

அவருடைய பரிந்துரைப்படியே என்னுடைய நண்பர் தனிப்பட்ட முறையில் அதற்கடுத்த சில நாட்களில் நோட்டீஸ் அனுப்ப பிரச்சினை வில்லங்கமாகிப்போனது. நிறுவனத்தின் அடியாட்கள் அவரை தொலைப்பேசியிலும் நேரிலும் நேரங்காலம் தெரியாமல் வந்து மிரட்ட அவர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றுவிட்டார்.

பிறகுதான் தெரிந்தது. நான் என்னுடைய அலுவலக கோப்பில் பார்த்த வரைபடத்திலிருந்ததைப் போலத்தான் இருந்தது என்னுடைய குடியிருப்பு வரைபடத்திலும். ஆனால் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கியிருந்த இடத்தை தரைதளத்திலிருந்த குடியிருப்புகளுடன் சேர்த்து மேல் தளங்களிலிருந்த குடியிருப்புகளை விட பெரியதாக அமைத்து நல்ல விலைக்கு விற்று காசாக்கியிருந்தார்கள் நிறுவனத்தினர்.

இந்த நிறுவனத்தினர் இத்தகைய தில்லுமுல்லுகளுக்கு மிகவும் பிரபலமானவர்கள் என்பதும் பிறகுதான் பல உரிமையாளர்களுக்கும் தெரிய வந்தது. நாளடைவில் இந்நிறுவனத்தினரின் தில்லுமுல்லுகள் அளவுக்கு மீறிப் போக CDMA அவர்களுடைய பெயரை  Black list செய்தது.

ஆனால் அவசரப்பட்டு எந்த விசாரனையும் செய்யாமல் ஒரு நிறுவனத்தின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்து குடியிருப்புகளை வாங்கியவர்கள் எத்தனை துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும்?

அதேபோன்று என்னுடைய அடுத்த நிலத்துக்காரர் என்னுடைய நிலத்தில் சில அடி தூரம் ஆக்கிரமித்ததைக் கண்டதும் ஏற்பட்ட கோபம் அடங்கும் முன்பே என்னுடைய பொறியாளர் பரிந்துரைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவசரப்பட்டு அவர் அமைத்திருந்த வேலியை பெயர்த்தெடுக்க விஷயம் விஸ்வரூபமெடுத்தது.

அவர் காவல்துறையில் எனக்கெதிராக கொடுத்திருந்த புகாரை விசாரிக்க அடுத்த நாள் காலை சுமார் ஏழு மணிக்கு என்னுடைய பகுதியிலிருந்த  காவல் நிலையத்திலிருந்து ஒரு காவலர் வந்தபோதுதான் விவகாரத்தின் வீரியம் எனக்கு தெரியவந்தது.

நல்லவேளையாக ராஜேந்திரன் வீட்டில் இருந்தார். நான் விசாரிக்க வந்தவரை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று நானும் அவருமாக நடந்ததை விவரித்தோம்.

ராஜேந்திரன் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சிமெண்ட் விவகாரத்தை விவரித்து அன்று அவர் காவல் நிலையத்தில் கொடுத்திருந்த புகாரை வற்புறுத்தி திருப்பி பெற வைத்ததிலிருந்தே அவர் அவ்வப்போது செய்து வந்திருந்த சிறு சிறு தகராறுகளையும் விவரித்தார். அத்துடன் காவலரை என்னுடைய நிலத்திற்கு அழைத்துச் சென்று அவர் க்கிரமித்திருந்த இடத்தையும் காண்பித்தோம்.

அவருக்கு என்னுடைய செயலில் இருந்த நியாயம் புரிந்ததுபோல்தான் தெரிந்தது. இருந்தும், ‘சார் நீங்க சொல்றது எனக்கு புரியாம இல்லை. ஆனா புகார்னு வந்தப்பிறகு விசாரிக்காம இருக்கமுடியாதில்லையா? அதுக்குத்தான் ஐயா என்னெ அனுப்பிருக்கார். நீங்க இப்ப சொன்னத நான் ஐயாக்கிட்ட போயி சொல்லுதேன். அவர் என்ன நினைக்காரோ அதுப்படித்தான் நடக்கும். நீங்க எதுக்கும் ஆஃபீஸ் போற வழியில ஒரு எட்டு ஸ்டேசனுக்கு வந்துட்டு போயிருங்க.’ என்றார்.

‘ஸ்டேசனுக்கா? நானா? எதுக்கு?’ என்றேன்.

அவர் புன்னகையுடன், ‘ஐயா.. இது நீங்க நெனக்கறா மாதிரி ஈஜியா முடியற விசயம் இல்லேங்க.. அவரா அவர் குடுத்திருக்கற கம்ப்ளெய்ண்ட வித்ட்றா பண்றவரைக்கும் இது சம்பந்தமா கூப்டறப்ப எல்லாம் நீங்க ஸ்டேசனுக்கு வந்துதான்யா ஆகணும். ஒங்கள மாதிரி படிச்சவங்களுக்கு இது சங்கடந்தானாலும் வேற வழியில்லங்கய்யா.. நீங்க செஞ்சது சரியா கூட இருக்கலாம். இல்லேங்கலே.. ஆனா இந்த மாதிரியான புகாருக்கு வழியில்லாம செஞ்சிருந்துருக்கலாம்னுதான் எனக்கு தோனுது.. நம்ம ஐயாவும் ஒரு மாதிரி ஆளுங்க.. நீங்களா ஸ்டேசனுக்கு வந்து ஒங்க பக்கத்துலருக்கற நியாயத்த எடுத்து சொல்லி இந்த விசயத்த சுமுகமா முடிச்சிக்கறதுதான் நல்லது.. நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. அப்புறம் ஒங்க இஷ்டம்..’ என்றவாறு கிளம்பிச் செல்ல நான் திகைத்துப் போய் ராஜேந்திரனைப் பார்த்தேன்.

தொடரும்..

12 comments:

G.Ragavan said...

போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போயாச்சுன்னா...அப்புறம் அவங்க ஆட்டுறாப்புலதான்...வெறும் வாய மெல்லுறவனுக்கு அவலப் படிப்படியாக் கொடுத்தாப்புல நீங்க மாட்டியிருக்கீங்க....விடுவாரா இந்த இன்சுபெக்டர்?

tbr.joseph said...

வாங்க ராகவன்

வெறும் வாய மெல்லுறவனுக்கு அவலப் படிப்படியாக் கொடுத்தாப்புல நீங்க மாட்டியிருக்கீங்க.விடுவாரா இந்த இன்சுபெக்டர்? //

ஆமா ராகவன். அவர் வாய்ல அகப்பட்ட அவல் மாதிரிதான் இருந்தது என் நிலையும்..

அவசரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு.. எவ்வளவு கரெக்டா சொல்லியிருக்காங்க பாருங்க..

துளசி கோபால் said...

புகார்லே உங்க பேர் இருக்குன்னு தெரிஞ்சதும் அவருக்கு வெல்லம் சாப்புட்டாப்புலே
இருந்திருக்கும்.

அதுசரி. சென்னையிலே ஒரு ஃப்ளாட் வாங்கிப் போடலான்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நீங்க அபார்ட்மெண்ட் பத்தி எழுதனதைப் பார்த்தா ஒரு பயம் வந்துருச்சே.

tbr.joseph said...

வாங்க துளசி,

அதுசரி. சென்னையிலே ஒரு ஃப்ளாட் வாங்கிப் போடலான்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நீங்க அபார்ட்மெண்ட் பத்தி எழுதனதைப் பார்த்தா ஒரு பயம் வந்துருச்சே. //

அப்படி இல்லை. யார்கிட்டருந்து வாங்குனாலும் நாம பாக்க வேண்டியதையெல்லாம் சீரா பார்த்து வாங்குனா ப்ராப்ளம் ஒன்னும் இருக்காது.சென்னையில இப்பல்லாம் நல்ல கம்பெனிங்கல்லாம் வந்துருக்காங்க.. நான் சொன்ன காலக்கட்டத்துலருந்த தில்லுமுல்லுங்க இப்ப குறைஞ்சிருக்குன்னு நினைக்கேன்..

வங்கிகள் நிறைய அளவுல கடன் கொடுக்க ஆரம்பிச்சிருக்கறதுனால அவங்களே அவங்க ஃபைனான்ஸ் பண்ணப் போற ஃப்ளாட்சுக்கு CMDA அப்ரூவல் இருக்கா, அப்ரூவ்ட் ப்ளான்லருந்து ப்ரொமோட்டர் ஏதாச்சும் டீவியேஷன் பண்றாங்களான்னு எல்லாம் கவனிச்சிக்கிறாங்க..

என்ன இருந்தாலும் நம்ம டைம்னு ஒன்னு இருக்குல்லே.. அது நல்லாருந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும். இல்லன்னா என்னதான் கண்ணுல வெளக்கெண்ணெய விட்டு பார்த்தாலும் எங்கயாவது பிசகிப்போயிரும்..

G.Ragavan said...

டீச்சர், சென்னையில் நீங்கள் தாராளமாக பிளாட் வாங்கலாம். ஆனால் நல்லா யோசிச்சு, தேடி வாங்கனும். இப்பல்லாம் சில பில்டர்ஸ் நல்லாவே செய்றாங்க.

srishiv said...

ஐயா
இரண்டாம் முறை குறிப்பிடும்போது CMDAவை CDMA என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள், அதை சிறிது எடிட் செய்துவிடவும், CDMA என்பது மொபைல் தொலைபேசியின் ஒரு தொழில் நுட்பம், CMDA என்பது சென்னை மெட்ரோ டெவலப்மெண்ட் என்று வரும் என்று நினைக்கின்றேன்?,மற்றபடிக்கு விளக்கங்கள் அருமை, ஐயா, உங்களின் முன் அனுமதி இன்றி, எங்கள் கூகுள் குழுமத்தில் தங்களின் அனுபவங்களை தங்கள் பெயர் மற்றும் வலைப்பூ முகவரியுடன் வெளியிட்டு வருகின்றேன், சில நேரங்களில் மிகவும் நான் ரசித்தவைகளை, தவறாக எண்ணவேண்டாம், உங்களின் தகவலுக்கு இது, ஏதேனும் தங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும், நீக்கிவிடுகின்றேன்..
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...

tbr.joseph said...

வாங்க ஸ்ரிஷிவ்,

இரண்டாம் முறை குறிப்பிடும்போது CMDAவை CDMA என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்//

ஆமாங்க.. எடிட் செய்துவிடுகிறேன்.. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி..

ஏதேனும் தங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும், நீக்கிவிடுகின்றேன்..//

நிச்சயம் இல்லை.. உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து செய்யுங்கள்.. நாந்தான் அதற்கு உங்களுக்கு நன்றி கூறவேண்டும்..

உங்களுடைய ஆர்வத்துக்கு நன்றி..:)

tbr.joseph said...

அன்பு ஜோசப்,

திரும்பிப் பார்க்கிறேன் - 177 படித்தேன். பின்னூட்டமளிக்க Post your comment லின்க் வேலை செய்ய வில்லை. ப்ரச்சனை எனது கணிணியிலா அல்லது உங்கள் வலைப்பதிவிலா தெரியவில்லை.. இந்த பின்னூட்டத்தை உங்கள் பதிவில் சேர்த்து விடவும்..

****

ஆக, இப்போ போலிஸ் ஸ்டேசனுக்கு போகனுமா ??? இதனால் எவ்வுளவு அலைச்சல், மன உளைச்சல்...

****

கடைசியில், பக்கத்து வீட்டுக்காரர் மெயின் வில்லனாக மாறி விட்டரா ?? இப்போது அவரிடம் தொடர்புள்ளதா, இல்லையா ??

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

திரும்பிப் பார்க்கிறேன் - 177 படித்தேன். பின்னூட்டமளிக்க Post your comment லின்க் வேலை செய்ய வில்லை. ப்ரச்சனை எனது கணிணியிலா அல்லது உங்கள் வலைப்பதிவிலா தெரியவில்லை.. இந்த பின்னூட்டத்தை உங்கள் பதிவில் சேர்த்து விடவும்..//

என்னுடைய வலைப்பூவில் பிரச்சினையில்லையென்பது உங்களுடைய பின்னூட்டத்தை வெளியிட்டதிலிருந்து தெரிகிறது..

கடைசியில், பக்கத்து வீட்டுக்காரர் மெயின் வில்லனாக மாறி விட்டரா ?? //

அப்படி சொல்ல முடியாது. அவர் நல்லவர்தான். என் போறாத நேரம் அவரையும் பாதித்திருக்கிறது.


இப்போது அவரிடம் தொடர்புள்ளதா, இல்லையா ?? //

ஆமாம்..இருக்கிறது..

sivagnanamji(#16342789) said...

பழைய தோஸ்துகள் சந்திக்கப்போகின்றீர்கள்....ஒரே உட்டாலங்கிடி வேலையா இருக்குமே.
"காக்கிச்சட்டையும் கருப்பு ரோஜவும்" னு ஒரு தனிப்பதிவே போடலாமே!

tbr.joseph said...

வாங்க ஜி!

"காக்கிச்சட்டையும் கருப்பு ரோஜவும்" னு ஒரு தனிப்பதிவே போடலாமே! //

கா.ச.யும் கருப்பு ராஜாவும்னு வேணும்னா தலைப்பு வைக்கலாம்:)

tbr.joseph said...

இப்பல்லாம் சில பில்டர்ஸ் நல்லாவே செய்றாங்க. //

துளசி ஜி.ரா சொல்றா மாதிரி சில பில்டர்ஸ் நல்லாவேத்தான் செய்றாங்க. என்ன, நாம போய் மாட்டற பில்டர் அந்த சில பில்டர்ஸ்ல ஒருத்தரா இருக்கணும்..

என்ன ஜி.ரா?