19 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 174

(இதைப் படிக்க இங்கு செல்லுங்கள் http://mail.google.com/mail/?view=att&disp=attd&attid=0.1&th=10c8549887db476f)

லிண்டெல் மட்டத்தில் கான்க்ரீட் பெல்ட் இட்டு முடிக்கும்வரை பல தடங்கல்களை சந்தித்த என்னுடைய வீட்டின் கட்டுமானப்பணி அதற்குப் பிறகு மளமளவென நடந்தது.

ஸ்டார்ட்டிங் ட்ரபிள் என்பார்களே அதுபோல் அஸ்திவார நிலையிலிருந்து எனக்கும் என்னுடைய பொறியாளர் மற்றும் மேஸ்திரி கூட்டணிக்கும் இடையே இருந்த தன்மான போராட்டங்கள் நாளடைவில் வேலையின் மும்முரத்தில் குறைந்து பிறகு முற்றிலும்  இல்லாமல்போனது.

இதற்கு என்னுடைய நண்பர் ராஜேந்திரனின் தலையீடு குறைந்துபோனதும் ஒரு காரணம். என்ன காரணத்தினாலோ அவருடயை தலையீட்டை பொறியாளர்-மேஸ்திரி கூட்டணிக்கு அறவே பிடிக்கவில்லை. இதையுணர்ந்த ராஜேந்திரனும் இரவு நேரங்களில் என்னிடம் பேசுவதோடு நிறுத்திக்கொண்டார்.

ஆனாலும் மேஸ்திரி என்னுடைய கட்டுமானப் பொருட்களை வீணடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவர் வேண்டுமென்றே இதைச் செய்தாரா இல்லை அவருக்கு அனுபவம் போறாத காரணத்தால் அவரையுமறியாமல் இதைச் செய்தாரா என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

இதில் நான் மேலே கூறிய இரண்டாவது ஐயம் எனக்கு ஏற்பட காரணமாயிருந்தது  சுவர் அலமாரிகளுக்கு தட்டுகளைத் தயாரிப்பதில் அவர் செய்த குளறுபடி. அவருடைய செய்கையால் எனக்கு பணமும் நேரமும் வீணானதுதான் மிச்சம். அத்துடன் அவருடைய வேலையின் தரமும் எனக்கு மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது.

சுவர் அலமாரிகளுக்கு கடப்பா கருங்கற்களிலான தட்டுகள் வைப்பது இப்போதெல்லாம் சென்னையில் மிகவும் சகஜமாகிவிட்டது. ஏன், நான் சென்னையில் வசித்து வந்த குடியிருப்பில் அப்போதே இத்தகைய தட்டுகளைக் கொண்ட அலமாரிகள்தான்.

ஆகவே என்னுடைய வீட்டிலும் இத்தகைய தட்டுகளை வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை என்னுடைய பொறியாளரிடமும் மேஸ்திரியிடமும் கூறினேன். பொறியாளரோ, ‘சார் அதெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும்னு காரண்டி குடுக்க முடியாது. பின்னால ஏதாச்சும் ஹெவியா ஜாமான வச்சி தட்டு ரெண்டா ஒடங்சிருச்சின்னு நீங்க புகார் சொன்னீங்கன்னா என்னால ஒன்னும் செய்யமுடியாது. யோசிச்சிக்குங்க. அதுவுமில்லாம தூத்துக்குடியில க்வாலிட்டியான கல்லெல்லாம் கிடைக்கும்னு எனக்கு தோனல. மதுரையிலோ இல்லன்னா திருநெல்வேலியிலோ கிடைக்கலாம். நமக்கு வேண்டிய அளவுல வெட்டி குடுப்பாங்களான்னு கேட்டுப்பார்த்தாத்தான் தெரியும்.’ என்று கழன்றுக்கொண்டார்.

மேஸ்திரியோ ஒரு ஏளனச் சிரிப்புடன், ‘என்ன சார் நீங்க. கான்க்ரீட் ஸ்லாபே சில சமயத்துல ஒடஞ்சி விழுந்துருது. நீங்க கடப்பா கல்லுங்கறீங்க? அதெல்லாம் சரிபட்டு வராது சார். நானே கம்பி கட்டி சூப்பரா ஒரு அலமாரிக்கு வேண்டியத போட்டு தாரன். பார்த்துட்டு சொல்லுங்க.’ என்றார்.

அப்போது தளம் போட்டு முடித்திருந்தது. இனி அலமாரிகளை அமைத்து பூச்சு வேலையும் செய்து முடித்தால் முக்கால் வீடு முடிந்த மாதிரிதான். மேஸ்திரியுடைய யோசனையில் எனக்கு எந்தவித ஒப்புதலும் இல்லையென்றாலும் இந்த நேரத்தில் இவரை பகைத்துக்கொள்ள வேண்டுமா என்று நினைத்து, ‘சரிங்க மேஸ்திரி. கிச்சன் அலமாரிக்கு வேண்டிய ஸ்லாப செய்ங்க. பாத்துட்டு சொல்றேன்.’ என்றேன்.

அவர் வேலையை துவக்கிய விதமே எனக்கு அதிருப்தியை அளித்தது. ‘என்ன மேஸ்திரி மணல் தரையில வச்சி போடறீங்க? கீழ் பகுதி ஒழுங்கில்லாமல்ல இருக்கும்?’ என்றேன். அவர் அலட்சியமாக, ‘சார் ஒன்னு நீங்க செய்ங்க. இல்லன்னா நா செஞ்சி முடிக்கற வரைக்கும் பொறுமையா இருங்க.’ என்றார்.

அவர் தொடர்ந்து செய்வதைப் பார்த்து பொறுமையிழந்த நான் அதற்கு மேலும் அங்கு நின்று அவர் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் கோபத்தில் ஏதாவது சொல்லப்போய் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிடுமோ என்ற அச்சத்தில் என் மனைவியிடம் ‘அப்பப்போ வந்து பாத்துக்க’ என்று கூறிவிட்டு ஏற்கனவே எடுத்திருந்த விடுப்பை ரத்து செய்துவிட்டு அலுவலகம் திரும்பினேன்.

அவர் சமையலறைக்குத் தேவையான தட்டுகளை செய்து முடிக்கும்வரை அதை சென்று பார்ப்பதில்லை என்றும் தீர்மானம் செய்து அந்த வேலை நடந்த பக்கமே செல்லாமலிருந்தேன் ஒரு வார காலம்.

கூரையை அமைத்து பதினைந்து நாட்கள்வரை தண்ணீர் விட்டு கெட்டிப்படுத்த வேண்டியிருந்ததால் அலமாரி தட்டுகளை அமைக்க மேஸ்திரியும் இரண்டு சித்தாள்கள் மட்டுமே வேலைக்கு வந்து சென்றனர்.

ஒரு வார காலம் முடிந்ததும் மேஸ்திரியாகவே வந்து, ‘சார் வாங்க. வந்து நம்ம வேலைய பார்த்துட்டு சொல்லுங்க.’ என்றார் பெருமையுடன்.

முந்தைய நாள் இரவுதான் அவர் வீடு திரும்பியதும் நான் பொறுக்கமாட்டாமல் சென்று பார்த்திருந்தேன். அவருடைய வேலையின் தரத்தைக் கண்டு கொதித்துபோய் ராஜேந்திரனையும் அழைத்து காண்பித்திருந்தேன்.  

இருப்பினும் என்னுடைய கோபத்தை வெளியே காட்டாமல் அவருடன் சென்றேன். அவர் தட்டுகளை மூடியிருந்த சாக்கு துணியை எடுத்து பெருமிதமாக, ‘பாத்தீங்களா சார். இந்த அளவுக்கு ஸ்மூத்தா அதே சமயத்துல ஸ்ட்ராங்கா ஒங்க கடப்பா ஸ்லாப் இருந்துருமா?’ என்றார்.

நான் சலிப்புடன், ‘ஒன்னு செய்ங்க மேஸ்திரி. இந்த ஸ்லாபுகள ஒங்களுக்கு சும்மாவே குடுத்துடறேன். ஒங்க வீட்லயோ இல்ல நீங்க வேற எங்கயாச்சும் வீடு கட்றீங்கன்னா அங்கயோ வச்சிக்குங்க. என் வீட்ல வேணாம்.’ என்றேன்.

மேஸ்திரியின் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே. ‘என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? போன ஒருவாரமா என் வேலைய எல்லாம் விட்டுப்போட்டு செஞ்சிருக்கேன். நான் இதுவரைக்கும் கட்ன வீட்லல்லாம் என் கைபடதான் சார் ஸ்லாப செய்யறது வழக்கம். யாருமே இதுவரைக்கும் ஒங்கள மாதிரி சொன்னதில்ல சார்.’ என்றார்.

நான் இதைக்குறித்து மேலும் விவாதிக்க விரும்பாமல், ‘மேஸ்திரி நீங்க ஒன்னு செய்ங்க. வீட்ல நாம வைக்கப்போற எல்லா அலமாரி தட்டுங்களோட அளவையும் எழுதி குடுங்க. இங்க போல்ட்டன்புரத்துல ஒரு கடப்பா ஸ்டோன் பட்டறை இருக்கறத பார்த்தேன். எல்லாத்தையும் அவங்கக்கிட்டவே ஆர்டர் செஞ்சா வெல கொறச்சி தரேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க ஃபிட் பண்ணி குடுத்தா போறும்.’ என்றேன்.

அவர் அவ்வளவு எளிதில் சம்மதிப்பதாயில்லை. ‘சார் நீங்க வேணுக்குன்னே என்னைய அவமானப் படுத்தறீங்க. இதுல என்ன கொறைய நீங்க கண்டுட்டீங்க. சொல்லுங்க.’

நான் என்னுடைய கையோடு கொண்டு வந்திருந்த மெட்டல் டேப்பைக்கொண்டு அவர் இட்டிருந்த தட்டுகளில் ஒன்றின் உயரத்தை (Thickness) அளந்தேன். ‘இத பார்த்தீங்களா, ரெண்டு இஞ்ச் இருக்கு. அலமாரியோட மொத்த ஒயரமே ஆறடி. நீங்க செஞ்சிருக்கற ஆறு ஸ்லாபையும் அதுல ஏத்துனேன்னு வைங்க. தட்டுங்களுக்கு நடுவுல பத்து இஞ்ச் கூட முழுசா கிடைக்காது. கடப்பா கல் ஸ்லாபுன்னா அதிகபட்சம் போனா அரை இஞ்ச் இருக்கும்.’

மேஸ்திரி நக்கலுடன், ‘இருக்கும். சாமான் வச்சீங்கன்னா ரெண்டா ஒடஞ்சி விழும்.’ என்றார்.

அதுவரை பொறுமையுடன் இருந்த நான், ‘சும்மா பேச்சுக்கு விவாதம் பண்ணாதீங்க. கிச்சன் ஷெல்ஃப்ல என்ன ஆட்டுக்கல்லையா தூக்கி வைக்கப்போறேன்? மளிகை சாமாங்கள தானங்க? நீங்க என்னமோ ஒரு யானைய தூக்கி வைக்கறாமாதிரி ஸ்லாபுக்கும் மேலயும் கீழயும் முக்கால் இஞ்ச் அளவுக்கு சிமெண்ட பூசி வச்சிருக்கீங்க? இந்த ஸ்லாப போடறதுக்கு நீங்க யூஸ் செஞ்ச கம்பி, கான்க்ரீட், பூச்சுக்கு சிமெண்ட், ஒங்களுக்கும் சித்தாள்ங்களுக்கும் குடுத்த கூலிய கணக்கு பண்ணா கடப்பா ஸ்லாபோட விலையவிட கூடத்தான் இருக்கும். இந்த சைஸ் ஸ்லாபுகள் வச்சி ஷெல்ஃப செஞ்சேன்னு வைங்க. பாக்கறவங்க சிரிப்பாங்க. முன்ன பின்ன கடப்பா ஷெல்ஃப பாக்காத ஆள்கிட்ட பேசறாமாதிரி எங்கிட்ட பேசாதீங்க.’ என்றேன் எரிச்சலுடன்.

மேற்கொண்டு பேச வாய் எடுத்த மேஸ்திரி என்ன நினைத்தாரோ, ‘சரி சார். ஒங்க இஷ்டம். நா அளவுங்கள குறிச்சி குடுக்கேன். தட்டுங்கள வாங்கி குடுங்க. வச்சித் தாரன். ஆனா ஒன்னு நாள பின்ன கீறல் விழுந்துருச்சுன்னு எங்கிட்ட வந்து நிக்காதீங்க. இப்பவே சொல்லிட்டேன்.’ என்று பயமுறுத்த நான், ‘அப்படியெல்லாம் நடக்கவும் நடக்காது.. அப்படியே நடந்தாலும் நிச்சயம் ஒங்கக்கிட்ட வந்து நிக்க மாட்டேன்.’ என்றேன் பிடிவாதமாக.

ஆக, அந்த பிரச்சினை அத்துடன் முடிந்தது.

அப்படித்தான் நான் நினைத்தேன்.

அடுத்த நாளே மேஸ்திரி குறித்துக்கொடுத்த அளவுகளை எடுத்துக்கொண்டு என்னுடைய அலுவலகம் செல்லும் பாதையிலிருந்த அந்த பட்டறைக்குச் சென்றேன்.

அந்த பட்டறையிலிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் ஒரு போக்குவரத்து சந்திப்பு இருந்தது. அது ஒரு நாற்புற சந்திப்பானதால் சாதாரணமாகவே வாகனப் போக்குவரத்து இருக்கும்.

அன்று வழக்கத்திற்கு மாறாகவே வாகன நெரிசல் இருந்ததால் சந்திப்பில்  காத்திருக்க நேர்ந்தது. காவல்துறை அதிகாரியும் அங்கு இருந்ததால் அவர் சைகை காட்டும்வரை சந்திப்பைக் கடக்க முடியாமல் என் வாகனத்தில் அமர்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் அந்த பட்டறையின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு சைக்கிளில் ஏறிச் சென்றவரை கவனித்தேன்.

என்னுடைய மேஸ்திரி!

இங்கயும் தன் கைவரிசையைக் காட்ட வந்துவிட்டார் போலிருக்கிறது என்று நினைத்து நொந்துபோனேன்..

நான் நினைத்தது சரியாக இருந்தது.

முந்தைய நாள் என்னை சிரிப்புடன் வரவேற்று உபசரித்த பட்டறை முதலாளி என்னைக் கண்டதும், ‘சார் நேத்து நீங்க வந்தப்போ ஒங்க தேவையை சரியா புரிஞ்சிக்காம ஒரு ரேட் சொல்லிட்டேன். ஆனா எம் பையன் சாயந்திரம் வந்து என்னைய சத்தம் போட்டுட்டான். அதனால..’ என்று இழுத்தார்.

தொடரும்..

10 comments:

sivagnanamji(#16342789) said...

நாய் வாலை நிமிர்த்தவே முடியாது

பழூர் கார்த்தி said...

நீங்க பேச்சோடு பேச்சா, கடப்பா கல்லு வாங்கற இடத்தை மேஸ்திரிக்கு சொன்னது எவ்ளோ பெரிய தப்பாயிருச்சின்னு பாருங்க... நீங்க இடத்தை சொல்லாம இருந்திருக்கணும்..

***

இரண்டு நாளா என்னடா, வீடு தொடரைக் காணாமேன்னு கவலைப் பட்டுக்கிட்டு இருந்தேன்

***

ப்ளாக்ஸ்பாட் தடை ஏதாவது அங்கயும் இருக்கா ??

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

நீங்க இடத்தை சொல்லாம இருந்திருக்கணும்..//

பட்டதுக்கப்புறந்தானே புத்தியே வருது. இந்த மாதிரி தப்ப நம்ம தமிழ்மண நண்பர்களும் செய்யாம இருக்கணுமேன்னுதான் இத எழுதினேன்.

ப்ளாக்ஸ்பாட் தடை ஏதாவது அங்கயும் இருக்கா ?? //

நம்ம சுதந்திர தாய்நாட்டிலதான இருக்கேன்.. தடை இப்போ போற மாதிரி தெரியல..

tbr.joseph said...

வாங்க ஜி!

நாய் வாலை நிமிர்த்தவே முடியாது //

எல்லாம் உழைக்காமலே பணம் ஈட்ட வேண்டும் என்ற பேராசைதான்.

G.Ragavan said...

போல்டன்புரமா....புதுக்கிராமம் மாட்டாஸ்பித்திரி பக்கத்துலதான் இருக்கு. ஆகா....சரி. சரி.

விட்ட கொற தொட்ட கொறங்குறது இதுதாங்க.....மேஸ்திரி செஞ்ச வேலையத்தான் சொல்றேன்.

அவ்வளவு தூரம் போனவங்க பக்கத்துலயே ரமணி டீக்கடைல ரெண்டு பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். ரொம்ப நல்லாயிருக்கும். இல்லைன்னா மாட்டாஸ்பித்திரி எதுக்க இருந்த பேக்கரியில தேங்காபன்னு வாங்கியிருந்திருக்கலாம். எதப் பத்துன பதிவுல எதப் பத்திச் சொல்றேன்........

துளசி கோபால் said...

ஆமா இதைச் சொல்லக்கூடாது அதைச் சொல்லக்கூடாதுன்னா எதைத்தான் 'பரம ரகசியமா' வைக்கறது?

இடம் தெரிஞ்சுபோச்சுன்னா உடனே போட்டுக் கொடுக்கணுமா என்ன?
சரியான ஆளுதான் போல உங்க மேஸ்திரி.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அவ்வளவு தூரம் போனவங்க பக்கத்துலயே ரமணி டீக்கடைல ரெண்டு பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். ரொம்ப நல்லாயிருக்கும். இல்லைன்னா மாட்டாஸ்பித்திரி எதுக்க இருந்த பேக்கரியில தேங்காபன்னு வாங்கியிருந்திருக்கலாம்//

நீங்க சொன்ன எல்லாத்தையுந்தான் செஞ்சிருக்கேன். இதையெல்லாம் எழுதணுமாக்கும்னு விட்டுட்டேன்.

எதப் பத்துன பதிவுல எதப் பத்திச் சொல்றேன்//

அதனாலென்ன:)

tbr.joseph said...

வாங்க மேஸ்திரி,

இடம் தெரிஞ்சுபோச்சுன்னா உடனே போட்டுக் கொடுக்கணுமா என்ன?
சரியான ஆளுதான் போல உங்க மேஸ்திரி. //

அதானே..

ஆனா ஒன்னுங்க.. ஒரு ஆளை எப்படியெல்லாம் கவுக்கறதுங்கறதுல அவர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கார்ன்னு நினைப்பேன்.

delphine said...

இந்த பிரச்சினை எல்லா எடத்திலும் உண்டு. வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று சும்மாவா பெரியவங்க சொன்னாங்க சார். your narration is really superb Sir

வடுவூர் குமார் said...

ஜோசப்
இதெல்லாம் நான் ஒரளவுக்கு கேள்விப்பட்டேனே தவிர.நேரடியாக அனுபவிக்கலை.
உங்க செலவுல அநுபவித்துவிட்டேன்.
கட்டுமானத்துறை மதிப்பில்லாமல் போனதுக்கு இந்த மாதிரி மேஸ்திரிகளும் காரணம்.ஆனால் சென்னையில் நிலமை கொஞ்சம் மேம்பட்டுள்ளது போல் உள்ளது.
உங்க எழுத்து நடை நல்லா இருக்கு.