14 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 173

அவருக்கு என்ன தோன்றியதோ, ‘சாரி ஜோசப்.. நீங்க சொல்றது எனக்கு புரியுது.. நான் மேஸ்திரிய ஒடனே வரச்சொல்றேன்.. நான் முன்னே சொன்ன அதே நேரத்துல ஒங்க வேலைய முடிச்சி குடுத்துடறேன்.. கவலைப் படாம போங்க.’ என்றார்..

ஆனால் அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் நான் விடுப்பு எடுத்துக்கொண்டு காத்திருந்ததுதான் மிச்சம். இருவருமே வரவேயில்லை.

என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் நின்றேன். இந்த விஷயத்தில் என்னுடைய மாமனார் உதவியை அதுவரை நாடாதிருந்த நான் இனியும் தாமதிப்பதில் பயனில்லை என்று நினைத்து அன்று மாலைவரை காத்திருப்பதெனவும் அவர்கள் இருவரும் வராத பட்சத்தில் என்னுடைய மாமனார் உதவியை கேட்பதெனவும் நானும் என் மனைவியும் தீர்மானித்தோம்.

அதற்கு அவசியமில்லாமல் அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு என்னுடைய மேஸ்திரி அவருடைய இரண்டு சகாக்களுடன் வந்து இறங்கினார்.

‘என்ன சார் நீங்களும் பக்கத்து வீட்டுக்காரரும் என்னை பத்தியும் என் கூட வேல பாக்கறவங்கள பத்தியும் தாறுமாறா பேசிட்டு வந்தீங்களாமே..’ என்றார் எடுத்த எடுப்பிலேயே.

நான் விவாதத்தை வளர்ப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில், ‘இங்க பாருங்க மேஸ்திரி இவ்வளவும் நடந்ததுக்கப்புறமும் ஒங்கள தேடிக்கிட்டு வாரதுக்கு ஒங்களவிட்டா இந்த ஊர்ல ஆளுங்க இல்லங்கறதுக்காக இல்ல. தேவையில்லாம பேசறத விட்டுட்டு இனியும் இந்த வேலைய ஒங்களால தொடர்ந்து செய்ய முடியுமான்னு மட்டும் சொல்லுங்க. முடியும்னா நாளைலருந்து எந்த சுணக்கமும் இல்லாம தொடர்ந்து வந்து முடிச்சி தரணும்.. முடியலையா இதுவரைக்கும் நீங்க செஞ்சதுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. செட்டில் பண்ணிரலாம்.. இனியும் இந்த மாதிரி டென்ஷன்ல ஆஃபீசுக்கு லீவு போட்டுட்டு காத்து கெடக்க முடியாது..’ என்றேன் சற்று கோபத்துடன்.

என்னுடைய கோபத்தை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய முகமே காட்டி கொடுத்தது. ‘இப்ப முடியாதுன்னு யார் சார் சொன்னா? ஒங்கள எனக்கு ஒரு மாசமாத்தான் சார் தெரியும். ஆனா எங்க எஞ்சினியர் ஐயா எங்களுக்கு தெய்வம் மாதிரி. அவராலதான் இப்ப ஒங்க கிட்ட வந்து நிக்கேன்.. இதுவரைக்கும் அவர் எடுத்துருக்கற வேலையெல்லாம் நானும் இவனுங்களுந்தான் செஞ்சிக்கிட்டு வாரோம். இதுவரைக்கும் எந்த வேலையையும் பாதியில விட்டுட்டு ஓடுனதில்ல.. அதனாலதான் அவரும் எங்களுக்கு தொடர்ந்து வேலைய குடுத்துக்கிட்டிருக்கார். தெரிஞ்சிக்குங்க.’ என்றார்.

‘இருக்கலாங்க.. அப்புறம் ஏங்க நம்ம வேலைய பாதியில விட்டுட்டு போய்ட்டீங்க?’

‘அதுக்கு நீங்களுந்தான் சார் காரணம். என்னைய சந்தேகப்பட்டீங்க. பொறுத்துக்கிட்டேன். இப்ப நம்ம எஞ்சினியர் ஐயாவையுமில்ல சந்தேகப்படறீங்க? இங்க பாருங்க சார். இனி அந்த பக்கத்து வீட்டய்யா எங்க வேலைல அநாவசியமா குறுக்கே வரக்கூடாது. அதுக்கு நீங்க காரண்டி குடுத்தா நாளைலருந்து வேலைக்கு வரோம். இல்லையா நீங்க இப்ப சொன்னா மாதிரி செட்டில்மெண்ட் செஞ்சிருங்க. ஒங்களுக்கும் அவருக்கும் யார புடிக்கிதோ அவங்கள வச்சி வேலைய முடிச்சிக்குங்க.’

என்னுடைய நண்பர் அவருடைய வீட்டு வாசலில் நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுத்தான் மேஸ்திரி இப்படி வேண்டுமென்றே உரத்த குரலில் பேசுகிறார் என்பது எனக்கு புரிந்தது. அவரும் அதை கேட்டுவிட்டு அங்கிருந்தே, ‘மேஸ்திரி’ என்று குரல் கொடுத்தார்.

மேஸ்திரி வேண்டுமென்றே கேட்காததுபோல் இருக்க ராஜேந்திரன் அங்கிருந்தே பதிலளித்தார். ‘இங்க பாருங்க மேஸ்திரி, நீங்க சொன்னா மாதிரி இனி ஒங்க வேலையில நான் தலையிடலை. நாளைலருந்து வேலைக்கு வந்துருங்க. எனக்காக அவர ஏன் படுத்துறீங்க.’ என்று
கூறிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

இதை எதிர்பார்க்காத நானும் அவருடைய குரலைக் கேட்டு வாசலுக்கு வந்து நின்ற என் மனைவியும் திகைத்துப் போய் நின்றோம்.

அதுவரை இந்த விஷயத்தில் தலையிடாதிருந்த என் மனைவிக்கும் மேஸ்திரியின் பேச்சு கோபத்தை மூட்டியிருந்ததை நான் உணர்ந்தேன்.

‘ஏங்க மேஸ்திரி. ஒங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கீங்க? நீங்க வேலைய ஒளுங்கா செஞ்சிருந்தா அவங்க ஏங்க இதுல தலையிடப் போறாங்க? எங்கப்பாவும் ஒன்னுக்கு ரெண்டு வீடு கட்டியிருக்காங்க. ஏதோ இவங்க எங்கப்பா உதவியெல்லாம் வேணாம் நாமளே பாத்துக்கலாம்னு சொன்னதால ஒங்களமாதிரி ஆளுங்க கூட நாங்க மல்லுக்கு நிக்க வேண்டியிருக்கு. முடிஞ்சா செய்ங்க.. இல்லையா இவங்க சொன்னா மாதிரி ஒங்க கூலிய வாங்கிக்கிட்டு போய்ட்டே இருங்க.’ என்று ஒரு போடு போட மேஸ்திரி பதிலேதும் பேசாமல் அவர் வந்த சைக்கிளில் ஏறிக்கொண்டு போய்விட்டார்.

எனக்கும் என் மனைவி திடீரென்று இப்படி பேசிவிட்டாரே என்று தோன்றினாலும் அவர் கூறியதில் எந்த தவறும் இல்லையென்பதால் இவர் போனால் போகட்டும் இன்னும் ஒரு நாள் பார்த்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று விட்டுவிட்டு ராஜேந்திரனின் வீட்டுக்கு நானும் என் மனைவியும் சென்று அவரை சமாதானப்படுத்தினோம்..

அவரும் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே என்ன சார் நீங்க? நான் அவன் சொன்னதையெல்லாம் பெருசா எடுத்துக்கலை. நீங்க சொன்னா மாதிரி இன்னும் ஒரு நாள் பார்ப்போம். வரலையா எனக்கு தெரிஞ்ச ஒரு மேஸ்திரி இருக்கார். அவர வச்சி முடிச்சிருவோம். இனிமே ரூஃப் போடறதுதான மேஜர் ஒர்க். அத இவன் எப்படியிருந்தாலும் வேற ஆள வச்சித்தான் போடப் போறான்.. கவலைய விடுங்க.’ என நானும் என் மனைவியும் வீடு திரும்பினோம்.

ஆனால் அடுத்த நாள் காலை மேஸ்திரி தன் முழு பரிவாரங்களுடன் வந்து இறங்க நானும் என் மனைவியும் அதிசயித்துப்போனோம்.

‘நாங்க காங்க்ரீட் எல்லாம் போடறதில்லை சார்’ என்று கூறியவர் அதற்குத் தேவையான ஆட்களையும் அழைத்து வந்திருந்தார்.

அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருந்ததாலும் ஏற்கனவே கம்பி கட்டுபவர்கள் வந்து அவர்களுடைய வேலையை முடித்து வைத்திருந்ததாலும் நானும் என்னுடைய அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்துவிட்டு கூடவே இருந்து பணியை துவக்கினோம்.

அடுத்த அரை மணியில் பொறியாளரும் வந்திறங்க நான் எதிர்பார்த்ததுக்கும் விரைவாகவே லிண்டெல் லெவலில் கான்க்ரீட் பெல்ட் இடும் பணி அன்று மாலைக்குள் முடிந்தது.

அந்த பிணக்கத்திற்குப் பிறகு பொறியாளரும் மேஸ்திரியும் தங்களுடயை சில்மிஷங்களை வெகுவாக குறைத்துக்கொண்டனர் என்றுதான் கூற வேண்டும்..

ஆனால் என்னுடைய கட்டுமான பொருட்களை வீணடிப்பதில் தன்னுடைய கவனம் முழுவதையும் காட்டலானார்.

அதில் சிலவற்றை மட்டும் இங்கே விவரிக்கிறேன்.

நம்முடைய வீடுகளிலெல்லாமே சுவர் அலமாரிகளை அமைத்திருப்போம்.

அத்தகைய அலமாரிகளை நம்முடைய வீட்டுக்கான வரைபடத்தை தயாரிக்கும்போதே எந்தெந்த இடத்தில் அவை அமையவேண்டும் என்பதை தீர்மானித்துவிடவேண்டும். அப்படித்தான் நானும் செய்திருக்க வேண்டும். ஆனால் அனுபவமின்மை காரணமாக அதை நான் விட்டுவிட்டேன்.

ராஜேந்திரன் அவர்கள் என்னுடைய தவற்றை சுட்டிக்காட்டியவுடன் எனக்கு வரைபடம் தயாரித்து முனிசிபல் அனுமதி பெற்றுத்தந்திருந்த பொறியாளரை அணுகி இதைக் குறித்து ஆலோசித்தபோது அவர், ‘சார் கவலைப்படாதீங்க. நீங்க எங்கெங்க ஷெல்வ்ஸ் வைக்கணும்னு நினைக்கீங்களோ அங்க வச்சிருங்க. கடைசியில ஆல்டரேஷன் ப்ளான போட்டு முனிசிபல் அப்ரூவல் வாங்கிரலாம்’ என்று கூறி நான் காண்பித்த இடங்களில் அலமாரிகளை வைக்க எந்த அளவுக்கு சுவரில் இடம் ஒதுக்க வேண்டும் என்று ஒரு மாதிரி படத்தையும் வரைந்து கொடுத்தார்.

நானும் அதை என்னுடைய மேஸ்திரியிடம் காண்பித்து இந்த மாதிரி செஞ்சிருங்க என்றேன். அவர் உடனே ‘சார் நீங்க எங்கிட்ட சொல்றதையெல்லாம் என்னால செய்ய முடியாது. நீங்க எஞ்சினியர் ஐயா கிட்ட சொல்லிருங்க. அவர் சரின்னு சொன்னா செஞ்சி தரேன்.’ என்று பிடிகொடுக்காமல் பேச சரி பிரச்சினை வேண்டாம் என்று அடுத்த முறை என்னுடைய பொறியாளர் வந்தபோது அவரிடம் மேஸ்திரி சொன்னதை கூறினேன்.

அவரும் என்னுடைய மாற்று வரைபடத்தை பார்த்துவிட்டு கூலாக, ‘சார், நீங்க சொன்னா மாதிரி இப்ப மாத்தி அமைக்க முடியாது. வேணும்னா சுவர கட்டி முடிச்சதும் எங்க ஷெல்ஃப் வேணுமோ அங்க ஒடச்சி தட்டுங்கள சொருகிக்கலாம். இல்லன்னா தட்டுங்கள வச்சிட்டு சுத்தி செங்கல் வச்சிட்டா ஷெல்ஃபாயிரும். என்ன கொஞ்சம் இடம் வேஸ்டாயிரும். அதுக்கு நீங்க ஆரம்பத்துலயே என்கிட்ட எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் கேக்காம விட்டதால வந்தது. ஒங்க ப்ளான காமிச்சி இதுமாதிரி கட்டணும்னு சொன்னீங்களேயொழிய என் ஒப்பீனியன் என்னன்னு கேக்கலையே?’ என்றார்.

அவருடைய பதிலில் திருப்தியடையாத நான் அன்று மாலையே என்னுடைய நண்பர் ராஜேந்திரனுடன் இதைக் குறித்து பேசினேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘சார்.. இவனுங்களுக்கு ஒங்க மேலருக்கற கோபம் இன்னும் தீரலை.. ஒங்க எஞ்சினியர் வேணும்னே ஒங்களுக்கு வேலையயும் கூலியையும் இழுத்துவிட பாக்கார்னு நினைக்கேன். ஆனாலும் வேற வழியில்லை சார். என்ன முன்னே பின்னே போன ஒரு மூனு நாலு நாள் வேலையும் கொஞ்சம் மெட்டீரியல் நஷ்டமும் ஆகும்..’ என்றார்.

சரி என்று பல்லக்கடித்துக்கொண்டு மேஸ்திரி சொன்ன வழியிலேயே செல்வதென தீர்மானித்தேன்.

இதில் என்ன சிக்கல் என்று சொல்கிறேன்.

விசிட்டிங்-கம்-டைனிங் அறை என்ற வடிவமைப்பு கொண்டது என்னுடைய வீட்டின் முகப்பு அறை. இரண்டுக்கும் நடுவே ஒரு ஷெல்ஃப் அமைப்பதாக திட்டம். அதில் இரண்டு புறமும் பொருட்களை வைக்க வசதியிருக்க வேண்டும்.

சுமார் இருபதடிக்கு பதினைந்தடி என்ற நீள் செவ்வக அமைப்பிலிருந்த அறைக்கு குறுக்கே கீழிருந்து மூன்றடிக்கு செங்கற் சுவர் எழுப்பி அதற்கு மேல் ஒரு ஆறடிக்கு பொய்ச்சுவர் எழுப்பி அதற்குமேல் லிண்டெல் பெல்ட் இட்டு அதற்கு மேல் கூரை வரை மீண்டும் செங்கற்சுவர் எழுப்ப வேண்டும் என்பது என் எண்ணம். இம்முறையில் சுவரின் அகலம் ஒரு அடி என்று வைத்துக்கொண்டால் வரவேற்பறை மற்றும் உணவறைகளில் சுவரை விட்டு சுமார் அரையங்குலம் மட்டுமே அலமாரியின் விளிம்பு வெளியே தள்ளி நிற்கும்.

அதை விட்டுவிட்டு தரையிலிருந்து கூரை வரை சுவரை எழுப்பிவிட்டு அலமாரிக்கான பலகையை வைத்து அவற்றை தாங்கி நிற்க அவற்றை சுற்றி சுவரெழுப்பினால் சுவரிலிருந்து வரவேற்பரை பகுதியில் ஒன்னரையடியும் உணவறை பகுதியில் ஒன்னரையடியும் இடம் வீணாகுமே என்று எத்தனை வாதாடியும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த மேஸ்திரியையும் அதற்கு ஒத்து ஊதிய பொறியாளரையும் என்ன செய்வது?

அத்துடன் எழுப்பிய சுவரை அலமாரிக்கான பலகைகளைப் பொறுத்த உடைத்தெடுக்கலாம் என்ற யோசனை வேறு.

இம்மாதிரியான ஆட்களுடன் பொறுமையாயிருந்து வீட்டைக் கட்டி முடித்தேனே என்று இப்போது நினைத்தாலும்...

தொடரும்..

8 comments:

puddhuvai said...

Its good to see your patience in building a house. Thats why our fore fathers told us "Veetai Katti Paar Kalyanathai Panni Paar" enru.

sivagnanamji(#16342789) said...

'நாயர் புடிச்ச புலிவால்'னு கேள்வி பட்டிருக்கேன்

பழூர் கார்த்தி said...

//இம்மாதிரியான ஆட்களுடன் பொறுமையாயிருந்து வீட்டைக் கட்டி முடித்தேனே என்று இப்போது நினைத்தாலும்//

பொறுத்தார் பூமி ஆள்வார் !!

***

இப்ப இருக்கிற மேஸ்திரி முன்னாடி 'சிமெண்ட்' ப்ரச்சினையில சண்டை போட்ட அதே மேஸ்திரியா, இல்ல வேற ஆளா ??

துளசி கோபால் said...

எனக்கு ஒண்ணும் புரியலை. சுவத்தைக் கட்டிட்டு அப்புறம் உடைச்சு எடுப்பாங்களா?

அதுக்கு ஏன் மூணடி இடம் போயிரும்?

tbr.joseph said...

வாங்க புதுவை,

வீடுகட்டும்போது அதுவும் நம்முடைய கருத்துக்கு நேரெதிராக நினைக்கும் பணியாட்களை வைத்துக்கொண்டு கட்டும்போது பொறுமை நிறையவே தேவை..

இல்லையென்றால் நமக்குத்தான் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும்..

tbr.joseph said...

வாங்க ஜி!

'நாயர் புடிச்ச புலிவால்'னு கேள்வி பட்டிருக்கேன் //

கரெக்டா சொன்னீங்க.

tbr.joseph said...

இப்ப இருக்கிற மேஸ்திரி முன்னாடி 'சிமெண்ட்' ப்ரச்சினையில சண்டை போட்ட அதே மேஸ்திரியா, இல்ல வேற ஆளா ?? //

அதே மேஸ்திரிதான்.

tbr.joseph said...

வாங்க துளசி,

அதுக்கு ஏன் மூணடி இடம் போயிரும்? //

எப்படி விளக்குறது?

படம் போட்டுத்தான் காட்டணும்..

தனி மயிலில் அனுப்புகிறேன்:)