13 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 172

நம்முடைய பொறியாளருடைய சில்மிஷத்தை இனியும் பொறுக்கலாகாது என்று நினைத்த நான் அவரை பரிந்துரைத்த என்னுடைய வாடிக்கையாளரிடம் புகார் கூற வேண்டும் என்று தீர்மானித்து தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டேன் இதனால் எழவிருக்கும்  பிரச்சினையை உணராதவனாய்..

***

என்னுடைய வாடிக்கையாளர் நான் கூறியதைக் கேட்டவுடன், ‘அப்படியா சார்? எங்கிட்ட சொல்லிட்டீங்கல்லே.. நான் பாத்துக்கறேன்.. நானும் இத எதிர்ப்பாக்கலை.. என்ன செய்யறது சொல்லுங்க.. அந்த ஆளுக்கு எங்க குடும்பத்துலருந்து ஃபீசே ஆயிரக் கணக்குல குடுத்துருக்கேன். இப்ப நீங்க சொன்னதுந்தான் புரியுது.. எங்க விஷயத்துலயும் இந்த மாதிரி தில்லுமுல்லுங்கள செஞ்சிருக்காரோ என்னவோ..’ என்றார்..

‘நீங்க கேக்கறதுல எனக்கு ஆட்சேபனையில்ல சார்.. ஆனா அவர் பாட்டுக்கு கோபப்பட்டுட்டு சைட்டுக்கு வராமயே இருந்துரப்போறார். சீலிங் போடற நேரத்துலதான் அவரோட உதவியே தேவைப்படும்.. அதனால...’ என்று நான் இழுக்க அவர் சிரித்தவாறே.. ‘ஒங்க சங்கடம் புரியுது சார்.. நான் பாத்துக்கறேன்.. நீங்க போங்க.. அப்படியே அந்தாளு கோச்சிக்கிட்டு போனாலும் ஒங்க வேலை தடைபடாம நடக்கறதுக்கு நான் கியாரண்டி..’ என நான் சமாதானத்துடன் வீடு திரும்பினேன்..

அவர் கூறியபடியே நடந்துக்கொண்டாலும் பொறியாளர் அடுத்த முறை சைட்டுக்கு வந்தபோது பயங்கர அஃபிஷியலாக நடந்துக்கொண்டார். நான் வாங்கி வந்திருந்த கம்பியின் தரம் சரியில்லை என்று கோவித்துக்கொண்டார். ‘சார் நாள பின்னே ரூஃப்ல விரிசல் விழுந்தா என்னெ கேக்காதீங்க.. சும்மானாச்சும் சேலம் இரும்புன்னு போடுவானுங்க.. இந்த சைஸ் கம்பி இங்க பஜார்ல நீங்க வாங்குன விலைக்கு கிடைச்சிதுன்னா சொல்லுங்க நான் ரெண்டு லோடு எடுத்துக்கறேன்..’ என்றார் வீம்புடன்.

அவருடைய கட்டளையோ என்னவோ மேஸ்திரியும் அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் தெனாவட்டாக நடந்துக்கொள்ள ஆரம்பித்தார். லிண்டல் பீமுக்கு கம்பி கட்டி வைத்துவிட்டு ‘கான்க்ரீட் நாங்க பண்றதில்லை சார்.. வெளியில அதுக்கு தனியா ஆளுங்க இருக்காங்க.. ஒன்னு நீங்களே அரேஞ்ச் செஞ்சிக்குங்க.. இல்லன்னா நான் செய்யறேன்.. நீங்க என்ன ஏதுன்னு கேக்காம நா கேக்கற கூலிய குடுத்துரணும்.. அப்படீன்னா நா ஆளுங்கள கூட்டிக்கிட்டு வாரன்.’ என்றார்..

நான் பல்லைக் கடித்துக்கொண்டு வேலை முடிந்தால் போதும் என்ற நினைப்பில் , ‘சரிங்க நீங்களே ஆள கொண்டாங்க..’ என்று ஒப்புக்கொண்டு நான் என்னுடைய அலுவலகத்துக்கு அடுத்த நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு காத்திருக்க அவரை ஆளையே அடுத்த ஒரு வாரத்திற்கு காணவில்லை..

பிறகுதான் தெரியவந்தது அந்த பொறியாளர் தூத்துக்குடி மூனாம் மைல் அருகே வேறொரு வேலையை எடுத்திருக்கிறார் என்பதும் அதில் இதே மேஸ்திரியும் அவருடைய குழுவினரும் வேலை செய்கின்றனர் என்றும்..

இது அவர்கள் இருவரும் சேர்ந்து வேண்டுமென்றே செய்த சதியா இல்லை அவர்கள் உண்மையாகவே தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொண்ட வேலையா என்று தெரியாமல் குழம்பிப் போனேன்..

லிண்டெல் லெவல் வரை வந்து நின்றுபோன கட்டுமான பணியை வேறு ஆட்களை வைத்து நடத்துவது என்பது நடைமுறையில் முடியாத காரியம். ஆகவே பொறியாளரை எப்படியாவது சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்துவருவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தேன்.

ஆனால் மீண்டும் அவரை பரிந்துரைத்த என்னுடைய வாடிக்கையாளரின் உதவியை நாடாமல் நேரடியாக அவருடன் அதே வளாகத்தில் பணிபுரிந்த ராஜேந்திரனை அணுகுவதென தீர்மானித்து ஒரு நாள் இரவு உணவு வேளைக்குப் பிறகு அவருடைய வீட்டு தோட்டத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவரை அணுகி விஷயத்தை தெரிவித்தேன்.

அவர் அதிர்ச்சியுடன், ‘அப்படியா சார்? அதான் என்னடா ஒரு வாரமா வேல நடக்கற சத்தத்தையே காணமேன்னு பார்த்தேன். இத எங்கிட்ட முன்னமே சொல்லியிருக்கலாமே சார்.’ என்றார்.

பிறகு சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு, ‘சார் நீங்க ஒன்னு செய்ங்க.. நாளைக்கு எங்க ஆஃபீசுக்கு பகல் ஒரு மூனு மணிக்கு வந்துருங்க.. அவர் ஃபீல்டுலதான் இருப்பார். நாம ரெண்டு பேரும் போய் பேசி பாக்கலாம். சரிபட்டு வந்தா சரி.. இல்லையா அவர எப்படி மடக்கணும்னு எனக்கு தெரியும்.. அத இப்ப செய்ய வேணாமேன்னு பாக்கேன்..’ என்றார்.

நான் சரியென்று சம்மதித்து அடுத்த நாள் பிற்பகல் என்னுடைய உதவி மேலாளரிடம் கூறிக்கொண்டு ராஜேந்திரனுடைய அலுவலகம் சென்றடைந்தேன்.

என்னுடைய பொறியாளர் எங்களை எதிர்பார்க்கவில்லையென்பது அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிந்தது. ‘என்ன சார் இந்த பக்கம்?’ என்றார் என்னைப் பார்த்து.

நான் உடனே சமாளித்தேன். ‘இல்ல சார் இந்த பக்கம் ஒரு சால்ட் பேன் அட்வான்ஸ் இருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டு  ராஜேந்திரன் சாரையும் பாக்காம எப்படி போறதுன்னுதான் வந்தேன்.. அத்தோட நீங்களும் சைட்டுக்கு வந்து ரெண்டு வாரமாவுதே அதான் என்ன விஷயம்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்..’

அவர் நான் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ராஜேந்திரனைப் பார்த்து, ‘சொல்லுங்க சார்.. என்ன விசேஷம்?’ என்றார்.

ராஜேந்திரன் சிரிப்புடன் அவரைப் பார்த்து, ‘என்ன சார்.. ஒங்க மேஸ்திரி ஒரு வாரமா வராம இழுத்தடிக்கிறாராமே. நீங்க கொஞ்சம் சொல்லக்கூடாதா?’ என்றார்.

‘அப்படியா? தெரியவே தெரியாதே..?’ என்றார். அப்போதும் என்னுடைய பார்வையை தவிர்ப்பதை கவனித்த ராஜேந்திரன்.. ‘நீங்க வேறெங்கயோ வேலை எடுத்திருக்கறதாகவும் அங்க அந்த மேஸ்திரி வேலை செஞ்சிக்கிட்டிருக்கறதாவும் யாரோ இவர்கிட்ட வந்து சொல்லியிருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேனே?’ என்றார் நான் முற்றிலும் எதிர்பார்க்காமல்..

என்னுடைய பொறியாளரின் முகம் சட்டென்று மாறிப்போனது. ‘ஆமா சார். உண்மைதான். இவர்தான் எதுக்கெடுத்தாலும் அவர் மேல சந்தேகப்படறாராமே.. இவர்கிட்ட என்னால வேலை செய்யமுடியாது சார். நீங்க வேற ஆள பாத்து குடுத்துறுங்கன்னு போன வாரம் வந்து எங்கிட்ட சொன்னார். அதான் நான் புதுசா எடுத்துருக்கற வேலைய அவருக்கு குடுத்துருக்கேன்.. இனி ஒரே வழிதான் இருக்கு..ஒன்னு இவர் வேற ஒரு டீமை வச்சி வேலைய தொடரட்டும்.. இல்லன்னா இப்ப எடுத்துருக்கற வேல முடியறவரைக்கும் காத்திருக்கட்டும்..’ என்றவர் என்னைப் பார்த்து, ‘என்ன சார்.. நீங்கதான் சொல்லணும்?’ என்றார் நக்கலாக.

எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்க நான் சிரமப்படுவதைப் பார்த்து, ‘சார் இப்ப கோபப்பட்டு ஒன்னும் பிரயோஜனமில்லை.. இத நீங்க முன்னாலயே யோசிச்சிருக்கணும்.. நீங்க அந்த மதுர பார்ட்டிக்கிட்ட பொய் சொல்லி, நாடகமாடி செஞ்ச தில்லுமுல்ல நானும் இன்னமும் மறக்கலே..’ என்றார் எகத்தாளமாக..

ராஜேந்திரனுக்கு என்ன தோன்றியதோ கோபத்துடன், ‘சார் ஒங்க இமிடீயட் பாஸ் எனக்கு தூரத்து ஒறவுன்னு தெரியுமா ஒங்களுக்கு?’ என்றார் சட்டென்று..

என்னுடைய பொறியாளர் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார்.

பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘என்ன ராஜேந்திரன் எதுக்கு அத இப்போ சொல்றீங்க? மிரட்டறீங்களா?’ என்றார் வீம்புடன்..

ராஜேந்திரன் சிரித்தார். ‘இல்ல சார்.. மிரட்டலை.. ஆனா தேவைப்பட்டா அத செய்யவும் தயங்கமாட்டேன்னு சொல்றேன்.. ஜோசப்புக்கும் எனக்கும் இடையில இருக்கப்போற உறவு இன்னும் எத்தனை வருசத்துக்கு தொடருமோ தெரியலை.. அவர் எனக்கு நெய்பரா போறவரு.. நீங்க எனக்கு வெறும் கொல்லீக்தான்.. அதனால் சொல்றேன்.. நீங்களா இவரான்னு வந்தா இவர்னுதான் நான் முடிவு பண்ணவேண்டியிருக்கும்.  நீங்க இவர் விஷயத்துல நடந்துக்கறது சரியில்லை. அவ்வளவுதான் சொல்வேன்.. அப்புறம் ஒங்க இஷ்டம்.. வாங்க ஜோசப்.’ என்றவாறு என்னையும் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு அவருடைய இலாக்காவுக்கு சென்றார்.

செல்லும் வழியில், ‘ஜோசப் ஒங்கள அவரோட பாஸ்சுக்கு அறிமுகப்படுத்தறேன். அவர் எனக்கு தூரத்து ஒறவெல்லாம் ஒன்னுமில்லை. நான் போற அதே சர்ச்சுக்குத்தான் அவரும் வருவார். அந்த பழக்கம்தான். மனுசன் ரொம்பவும் தங்கமானவர். இப்ப ஒன்னும் சொல்ல வேணாம்.. தேவைப்பட்டா சொன்னா போறும்.. நான் இப்ப சொன்னதே அவரை யோசிக்க வச்சிருக்கும்னு நினைக்கேன்.. பாக்கலாம்.’ என்றவர் என்னை அழைத்துச் சென்று என்னுடைய பொறியாளருடைய மேலதிகாரிக்கு அறிமுகப்படுத்தினார்.

என்னுடைய அதிர்ஷ்டம் அவரும் என்னுடைய வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவராயிருந்தார். அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லையென்றாலும் அவருக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது.

எங்களைப் பார்த்ததுமே, ‘எங்க சார் இந்த பக்கம்?’ என்றவர், ‘என்ன ராஜேந்திரன் இவர ஒங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று வினவ ராஜேந்திரன் சுருக்கமாக நான் வீடு கட்டும் விஷயத்தை எடுத்துரைத்தார்.

நான் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டேன்.. துறைமுக வளாகத்திற்குள் எந்த தனியார் வாகனமும் அனுமதிக்கப்படாதென்பதால் வாசலில் நிறுத்திவைத்திருந்த என்னுடைய வாகனத்தை நோக்கி நான் நடக்க வழியில் வைத்து என்னை சந்தித்த என்னுடைய பொறியாளர், ‘சார்.. நான் மேஸ்திரிய பார்த்து இந்த வாரக் கடைசியில வரச் சொல்றேன்.. நானும் வரேன்.. மூனு பேருமா பேசி ஒரு முடிவு பண்லாம்.’ என்றார்..

நான் உடனே, ‘சார்.. இதுல முடிவுக்கு பண்றதுக்கு என்ன இருக்கு? ஒங்களுக்கும் சரி மேஸ்திரிக்கும் சரி பேசின தொகையில இதுவரை ஒரு பைசா கூட குறைக்கலே.. நீங்க சொன்ன எடத்துல நான் சில சாமான்கள வாங்கலேங்கற காரணத்துக்காக இப்படி வராம இருக்கறது சரியில்லை.. நான் கடன் வாங்கிதான் இந்த கட்டட வேலைய செஞ்சிட்டிருக்கேங்கறதயும் பலதடவ ஒங்கக்கிட்ட சொல்லியிருக்கேன்.. வீட்லயும் இதனால ஒரே டென்ஷன். நீங்க புரிஞ்சிக்கிட்டா சரி.. ’ என்றேன் உண்மையான வருத்தத்துடன்..

அவருக்கு என்ன தோன்றியதோ, ‘சாரி ஜோசப்.. நீங்க சொல்றது எனக்கு புரியுது.. நான் மேஸ்திரிய ஒடனே வரச்சொல்றேன்.. நான் முன்னே சொன்ன அதே நேரத்துல ஒங்க வேலைய முடிச்சி குடுத்துடறேன்.. கவலைப் படாம போங்க.’ என்றார்..

அவருடைய முகத்தைப் பார்த்தபோது அதில் எந்த உள் அர்த்தமும் தெரியாததால் நான் அவருடைய கரத்தைப் பற்றி நன்றி தெரிவித்துவிட்டு வாசலை நோக்கி நடந்தேன்..

தொடரும்..

12 comments:

sivagnanamji(#16342789) said...

"ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கனும்;
பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக்கறக்கனும்..."
ஆக இப்ப ஆடவும் அறிஞ்சிட்டீங்க;
பாடவும் பழகிட்டீங்க!

G.Ragavan said...

எந்த உள்ளர்த்தமும் தெரியாததாலன்னு சொல்லும் போதே அங்க உள்ளர்த்தம் இருந்திருக்குன்னு தெரியுது. ம்ம்ம்..அதையும் தெரிஞ்சிக்கக் காத்திருக்கிறோம்.

ஊராந் துட்டுல மஞ்சக்குளிக்க நம்மூருல எத்தன பேருங்கடா சாமி.

tbr.joseph said...

வாங்க ஜி!

ஆக இப்ப ஆடவும் அறிஞ்சிட்டீங்க;
பாடவும் பழகிட்டீங்க! //

பழகித்தானே ஆகணும்? இல்லன்னா மொட்டையடிச்சிட்டில்ல போயிருவாங்க?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஊராந் துட்டுல மஞ்சக்குளிக்க நம்மூருல எத்தன பேருங்கடா சாமி.//

அதுதான் ஆயிரக் கணக்குல, லட்சக் கணக்குல இருக்காங்களே..

அவங்கக்கிட்ட ஏமாறுறதுக்குந்தான் நாம இருக்கோமே..

துளசி கோபால் said...

இப்பவும் நிலமை இப்படித்தான் இருக்கா? இல்லேன்னா நம்பி காரியத்துலே இறங்கலாமா?

பயங்கரமாப் போகுதேங்க.....

ம்ம்ம் அப்புறம்?

tbr.joseph said...

வாங்க துளசி,

இப்பவும் நிலமை இப்படித்தான் இருக்கா? //

நான் பட்ட கஷ்டங்கள் என்னுடைய நண்பர்களும், உறவினர்களும் பட்ட கஷ்டங்களுக்கு முன்னால ஒன்னுமே இல்லீங்க. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் அவருடைய பொறியாளரை விரோதிக்க அவருடைய வீட்டுப்பணி முடிய மூன்றாண்டுகள் ஆனது!

இன்னமும் இந்த அக்கிரமங்கள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்ன அன்னைக்கி சின்ன, சின்ன மேஸ்திரிங்க.. இப்ப பெரிய, பெரிய பில்டர்ங்க.. அவ்வளவுதான் வித்தியாசம்.

பழூர் கார்த்தி said...

என்ன சார், இப்படி சஸ்பென்ஸா முடிச்சுட்டீங்களே.. நாளைக்கு வரைக்கும் காத்திருக்கணுமா ??

***

இஞ்சீனியரும், மேஸ்திரியும் நல்லா மேட்ச் விளையாண்டுருக்காங்க போங்க... உங்களுக்கு இந்த சமயங்கள்ள ஆபிஸ்லயும் வேல ஒழுங்கா ஓடியிருக்காதே ??

tbr.joseph said...

வாங்க சோ.பையன்!

உங்களுக்கு இந்த சமயங்கள்ள ஆபிஸ்லயும் வேல ஒழுங்கா ஓடியிருக்காதே ??//

ஏன் கேக்கறீங்க? பொழுதன்னைக்கும் இந்த நினைப்புதாங்க.. அந்த வீட்ட கட்டி முடிச்சி கிரஹப்பிரவேசம் வரைக்கும் நான் பட்ட அவஸ்தைய நினைச்சா இப்பக்கூட சில சமயங்கள்ல தூக்கம் வராது..

sivagnanamji(#16342789) said...

இல்லேன்னா மொட்டைஅடிச்சிட்டுல்லெ
போய்டுவாங்க//
அதாவது இப்ப இருக்கிறது வீடு கட்டினதாலே இல்லேங்கிறீங்க?

மணியன் said...

இப்படி அலுவலக விதிகளுக்குப் புறம்பாக வேலை எடுக்கும்போதே இவர் இத்தனை தினாவட்டாக இருக்கிறார். நீங்களும் இராஜேந்திரனும் சரியாகத் தான் வைத்தீர்கள் செக் (தமிழ்மணத்தில் ஆப்பு).

tbr.joseph said...

அதாவது இப்ப இருக்கிறது வீடு கட்டினதாலே இல்லேங்கிறீங்க? //

என்ன ஜி! நீங்களும் நக்கல் பண்றீங்க..

இது மொட்டையா? வழுக்கைங்க:)

அவனுங்க அடிச்ச மொட்டையிலல்லாம மறுபடியும் முடி வளர்ந்து அலுவலக டென்ஷன்ல இப்போ வழுக்கையாயிருச்சி. அதான் உண்மை..

tbr.joseph said...

வாங்க மணியன்,

நீங்களும் இராஜேந்திரனும் சரியாகத் தான் வைத்தீர்கள் செக் //

அதுக்கு முழு க்ரெடிட் என்னுடைய நண்பர் ராஜேந்திரனுக்குத்தான்.