12 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 171

வீடு கட்டுமான பணியில் இரும்பு கம்பிகளின் ஆதிக்கம் இப்போதெல்லாம் பெருகி வருவதைப் பார்த்திருப்பீர்கள்.

கீழ்த்தளம், முதல் மாடி என கட்டப்படும் சிறு, சிறு வீடுகளுக்கும் கூட கான்க்ரீட் தூண்கள் அமைத்து கட்டப்படுவதையும் பார்த்திருப்பீர்கள்.

இதெல்லாமே பொறியாளர்களுடைய பரிந்துரையால்தான்.

இரண்டு மாடிகளுக்கும் கூடுதலாக கட்டிடத்தை எழுப்ப நினைப்பவர்கள் மட்டும் இத்தகைய கட்டட அமைப்பை தேர்ந்தெடுத்தால் போதும்.

மற்ற வகை கட்டடங்களுக்கு செங்கல் சுவற்களே போதுமானது. ஆனால் இவ்வகை கட்டடங்களிலிருக்கும் ஒரே குறை கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு வீட்டின் உள்ளமைப்பை (Internal layout) மாற்றியமைக்க முடியாது என்பதுதான்.

கான்க்ரீட் தூண்கள் இல்லாமல் கட்டப்படும் வீடுகளில் ஏறத்தாழ எல்லா சுவர்களுமே சுமை தாங்கும் சுவர்களாகவே (Load bearing walls) அமைந்துவிடும். அத்துடன் எல்லா சுவர்களுமே கூரை வரை எழுப்பப்பட வேண்டியிருக்கும்.

கட்டடத்தின் குறுக்கே உத்தரங்கள் (Concrete Beams) இல்லாத நிலையில் கான்க்ரீட் கூரையை (ceiling) தாங்கி நிற்பவை செங்கற் சுவர்கள் என்பதால் எல்லா சுவர்களையுமே கூரைவரை அமைத்தல் அத்தியாவசியமாகிறது.

கட்டடத்தை சுற்றிலுமிருக்கும் சுவர்களை முக்காலடி சுவர்களாக அமைத்து லிண்டல் (ஜன்னலுக்கு மேலே) லெவலில் ஒரு கான்க்ரீட் பெல்ட்டும் இட்டு கூரையை அமைத்தால் சிறிது காலங்கழித்து லிண்டல் லெவலுக்கு கீழே சுவர்களை மாற்றி அமைத்தாலும் கட்டடத்திற்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்பட  வாய்ப்பில்லை.

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதென்னவென்றால் கூரையை தாங்கி நிற்கும் சுவர்களுக்கிடையே - அது குறுக்கில் இருந்தாலும் சரி நெடுக்கில் இருந்தாலும் சரி - பத்து பதினைந்தடிக்கும் கூடுதலான இடைவெளி இருக்கலாகாது. அறைகளின் அளவை திட்டமிடுகையில் இதை கவனத்தில் கொண்டு அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கான்க்ரீட் உத்தரங்கள் இல்லாத பட்சத்தில் பதினைந்தடிக்கும் கூடுதலான இடைவெளி இருந்தால் மேற் கூரையில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆகவே இத்தகைய வீடுகளில் கூரையின் உறுதி மிகவும் முக்கியம். இதை உறுதிபடுத்துவது கூரையை இணைத்து பிடித்து நிற்கும் இரும்பு கம்பிகளே.

கூரையின் விளிம்புகளைப் பிடித்து நிற்கும் கம்பிகள் சற்று பருமனாகவும் (எத்தனை mm இருக்க வேண்டும் என்பது ஒரு வீட்டின் அளவு, அமைப்பு, கீழே அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களின் தரம் இவற்றைப் பொறுத்திருக்கிறது) இடையில் நெடுக்கிலும் குறுக்கிலும் அமைக்கப்படும் கம்பிகள் அதைவிட ஒன்று அல்லது இரண்டு mm குறைவாகவும் இருக்க வேண்டும்.

வீட்டின் முன்னால் போர்ட்டிகோ (அதாவது தூண்கள் இல்லாமல்) அமைக்கப்படும் பட்சத்தில் அதை மேலிருந்து தாங்கி பிடிக்க சற்றே பருமனான கம்பிகள் கொண்ட உத்தரத்தை (beam) வீட்டின் முன்பக்க விளிம்பிலிருந்து சுமார் பதினைந்தடி தூரம் வரை அமைக்க வேண்டும்.

ஒரு வீட்டுக் கூரையின் (concrete roof) தரம் கான்க்ரீட்டை பிணைத்து நிற்கும் கம்பிகளின் தரத்தைப் பொறுத்தே இருக்கும். ஆகவேதான் அத்தகைய கம்பிகளை நல்ல தரமான நிறுவன தயாரிப்பாக இருப்பதுடன் அதை நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்தும் வாங்க வேண்டும்.

பெரும்பாலான பொறியாளர்களும், பொறியாளர்கள் இல்லாமல் கட்டப்படும் வீடுகளில் மேஸ்திரிகளும், இத்தகைய விற்பனையாளர்களிடம் ஒரு ரகசிய உறவு வைத்திருப்பார்கள். அப்படியில்லாதவர்கள் கிடைப்பது நம்முடைய பாக்கியம்.

என்னுடைய பொறியாளருடைய ‘நேர்மை’யைப் பற்றி ஏற்கனவே கோடியிட்டு காட்டியிருக்கிறேன்.

ஆகவே அவர் கம்பியின் அளவைக் குறித்துக் கொடுத்துவிட்டு அதை எங்கே வாங்கவேண்டும் என்றும் கூறியதும் ‘சரி.. மனுஷன் இதுலயும் தன்னோட சில்மிஷத்த காட்டுறார் போலருக்கே’ என்று நினைத்தவாறு அவரை பார்த்தேன்.

என்னுடைய பார்வையிலிருந்த நம்பகமின்மை அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘சார்.. இந்த பார்ட்டி மதுரையில ஃபேமசானவர். நீங்க பார்த்ததுமே புரிஞ்சுக்குவீங்க. அவங்க கடையிலருக்கற கம்பியோட கலர பார்த்தாலே தெரியும்.. இங்கருக்கற கம்பிங்களையும் பார்த்துட்டு போங்க.. அப்ப தெரியும் வித்தியாசம். நானும் போன பத்துவருசமா என் க்ளையண்ட்சையெல்லாமே அங்கதான் அனுப்பிக்கிட்டிருக்கேன்.. நிறைய பேர் நீங்களே வாங்கிட்டு வந்துருங்க சார்னு எங்கிட்டயே பொறுப்ப ஒப்படைச்சிருவாங்கன்னா பாத்துக்கங்களேன்..’ என்றார்.

அதாவது எதுக்கு சார் ஒங்களுக்கு சிரமம். என் கிட்ட குடுத்துருங்க. நான் பாத்துக்கறேன் என்பதை சொல்லாமல் சொல்கிறார் என்று நினைத்த நான், ‘இல்ல சார்.. எங்களுக்கு அங்க ஒரு பிராஞ்ச் இருக்கு.. அங்கருக்கற மேனேசரும் என் க்ளோஸ் ஃப்ரெண்டுதான்.. அவரையும் பார்த்தா மாதிரி இருக்குமில்லே. அதனால நானே போய் வாங்கிட்டு வந்திடறேன். அதான் ஃபோன் நம்பர், விலாசம் எல்லாம் தெளிவா குடுத்துர்க்கீங்களே?’ என்றேன்.

அவர் பதறிக்கொண்டு, ‘சார் நீங்க ஒங்க ஃப்ரெண்ட போய் பாருங்க.. வேணாங்கலே.. ஆனா அவர கூட்டிக்கிட்டு போயி வாங்காதீங்க. ஏன்னா நான் சொன்னேங்கறதுக்காக அவர் ஒங்களுக்கு ஸ்பெஷல் ரேட் போட்டு குடுப்பார். அத ஒங்க ஃப்ரெண்ட் பார்த்துட்டு அவருக்கு வேண்டியவங்களுக்கும் இதே ரேட்ல கேட்டா  கடைக்காரருக்கு தர்மசங்கடமாயிரும். அதனாலதான் சொல்றேன். நீங்க நேரா போயி சாமான வாங்கி ஏத்திவிட்டுட்டு ஒங்க ஃப்ரெண்ட போயி பாருங்க.’ என்று அறிவுரையையும் அளிக்கவே என்னுடைய ஐயம் உறுதியானது. நிச்சயம் என்னுடைய நண்பரை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து என்னுடைய நண்பர் ராஜேந்திரனிடம் கூறினேன்.

‘பரவாயில்ல சார். ரொம்ப சீக்கிரம் தேறிட்டீங்க. நீங்க எடுத்த முடிவுதான் சரியான முடிவு. ஒங்க ஃப்ரெண்ட் இல்லாமல் போகாதீங்க.’ என்றார் சிரித்துக்கொண்டே.

ஆக, அவ்வார இறுதியில் மதுரை செல்வதென தீர்மானித்து என்னுடைய நண்பரை தொலைப்பேசியில் அழைத்து பொறியாளர் குறித்துக்கொடுத்த கடை பெயரையும் விலாசத்தையும் அவரிடம் கூறி முடிந்தால் அவரைப் பற்றிய விபரத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்..

அவ்வார இறுதியில் அதாவது சனிக்கிழமை பகல் அலுவலக நேரம் முடிந்ததும் தூத்துக்குடியிலிருந்து பேருந்தைப் பிடித்து மாலை ஆறு மணி வாக்கில் மதுரை சென்றடைந்தேன். பேருந்து நிலையத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த என்னுடைய மேலாள நண்பர் என்னை அழைத்துக்கொண்டு எதிரே இருந்த ஒரு சிற்றுண்டியகத்துக்குள் நுழைந்து ஆர்டர் செய்துவிட்டு பேரர் அகன்றதும், ‘டிபிஆர். ஒங்க எஞ்சினியர் சொன்ன கடைக்கு போக வேணாம். அத விட பெரிய டீலர் நம்ம கஸ்டமர். அவர்கிட்ட நீங்க குடுத்த பட்டியல காட்டுனேன். எங்கிட்டயே இருக்கு வாங்க சார் அப்படீன்னார். ஒங்களுக்கு ஆட்சேபனையில்லன்னா..’ என்று இழுத்தார் தயக்கத்துடன்.

‘ஓக்கே சார். ஒங்க கஸ்டமர் கடைக்கே போலாம்.’ என்று சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் கிளம்பி அவருடைய வாடிக்கையாளர் கடைக்கு சென்றோம். அங்கு செல்லும் பாதையில்தான் என்னுடைய பொறியாளர் கூறியிருந்த கடையும் இருந்தது. அதைக் கண்டவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

‘சார் இதோ இந்த கடைதான் நம்ம எஞ்சினியர் சொன்ன கடை.. இங்க இறங்கி விலைய விசாரிச்சிக்கிட்டு போனா என்ன?’ என்றேன்.

அவர் வாகனத்தை உடனே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு என்னை திரும்பிப்பார்த்தார். ‘டிபிஆர். நான் நேத்தே நேர்ல வந்து விசாரிச்சேன். கடையிலருந்தவர் இந்த கடைய யார் சார் ஒங்களுக்கு சொன்னார்னு கேட்டார். எதுக்குங்கன்னேன்.. சரியா பதில் வரலை.. சரி.. விலைய மட்டும் சொல்லுங்கன்னேன்.. எந்த இண்ட்ரஸ்ட்டும் இல்லாம ஒரு விலைய எழுதிக்குடுத்தார். அத நம்ம கஸ்டமர்கிட்ட காட்டுனேன். அவர் அத வாங்கி பார்த்து சிரிச்சிட்டு நீங்க ஒங்க ஃப்ரெண்ட கூட்டிக்கிட்டு வாங்க சார்னு மட்டும் சொல்லிட்டார்.. இதுல ஏதோ சூட்சுமம் இருக்குன்னு நினைக்கிறேன்.’

நான், ‘இல்ல சார்.. நான் நம்ம எஞ்சினியர் பேர சொல்லிட்டு கேக்கேன். நீங்க வரவேணாம். நான் மட்டும் போய் கேட்டுட்டு வரேன்.’ என்று கூறிவிட்டு சற்று தள்ளி சாலைக்கு மறுபுறத்திலிருந்த கடையை அடைந்தேன்.

கல்லா பெட்டியிலிருந்தவரிடம் என் கைவசமிருந்த லிஸ்ட்டை அவரிடம் நீட்டினேன். அதில் தலைமாட்டிலிருந்த என்னுடைய பொறியாளருடைய பெயரைப் பார்த்ததுமே அவருக்கு வாயெல்லாம் பல்லானது. ‘வாங்க சார்.. ஒக்காருங்க.. என்ன சாப்பிடறீங்க.. காப்பியா, டீயா.. இல்ல கூலா எதாச்சும் சாப்பிடறீங்களா?’ என்றார்.

நானும் சளைக்காமல் அவர் காட்டிய இருக்கையிலமர்ந்து ‘ஒரு காப்பி மட்டும் சொல்லுங்க சார்.’ என்றேன்.

பிறகு ‘என் லிஸ்ட்லருக்கற சரக்கெல்லாம் இருக்கா சார்?’ என்றேன்.

‘பின்ன இல்லாமயா? நேத்தே ஒங்க எஞ்சினியர் ஃபோன் செஞ்சி சொன்னார் சார்.. அவரே என்னென்ன கம்பி வேணும் சொல்லிட்டதால எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கேன்.. ஒங்க முன்னாலயே எடைபோட்டு காமிக்கேன்..’ என்றாவாறு ‘டேய் யாரங்கே.. சாரோட ஜாமானெல்லாம் எடைபோட்றா.. சார் பாத்துக்கட்டும்.’ உள்ளே குரல் கொடுத்தார்.

நான் அவரைப் பார்த்தேன். ‘சார் நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. மூனு சைஸ் கம்பிங்க எஞ்சினியர் சொல்லியிருக்காருன்னு நினைக்கேன்.. சரிதானே?’

அவர் லிஸ்ட்டை பார்க்காமலே, ‘ஆமா சார்.. அதான் நேத்தைக்கே சார் சொல்லிட்டாரே?’ என்றார்.

‘தெரியும் சார். அதான் சொன்னீங்களே. எனக்கு எல்லா சைஸ்லயும் ஒரு சின்ன பீஸ் கட் பண்ணி தரணும்.. எனக்கு எடை போட்டதுக்கப்புறம் அதுலருந்து கட் பண்ணா போறும்.’

அவர் தயக்கத்துடன் என்னைப் பார்த்தார். ‘எதுக்கு சார் கேக்கீங்க?’ என்றார்.

‘இல்லை சார்.. நா ஆர்டர் பண்ற அதே சைஸ் கம்பிங்கதான் டெலிவரி ஆவுதான்னு செக் பண்ணிக்கத்தான். தப்பா நினைக்காதீங்க. நீங்களே டெலிவரி குடுத்தா பரவால்லை.. லாரியில ஏத்தி அனுப்ப போறீங்க. அதான்.. வழியில மாத்திராம இருக்கணுமில்ல?’

அவர் முகம் போன போக்கே சரியில்லை. இருப்பினும் சமாளித்துக்கொண்டு, ‘பயங்கர உஷார் ஆசாமியா இருக்கீங்க சார். அப்படித்தான் இருக்கணும்.. இருங்க கட் பண்ணி தரச் சொல்றேன். பில்ல செட்டில் பண்ணிட்டீங்கன்னா தந்துரலாம்.’ என்றார்.

நான் உடனே சரியென்று சம்மதித்தேன். ‘பில்லெல்லாம் ஒன்னும் வேணாம் சார். நீங்க ஒரு கடுதாசில ஒவ்வொரு கம்பியும் எவ்வளவு எடைன்னும் நான் எவ்வளவு குடுக்கணும்னுமட்டும் எழுதி எங்கூட ஒரு பையன அனுப்புங்க. எங்க பேங்கோட பிராஞ்ச் மேல மாசி வீதியில இருக்கு. மேனேஜர்கிட்ட பணத்த ரெடி பண்ணி வைக்க சொல்லிருக்கேன். நான் பணத்த குடுத்துட்டு அப்படியே பஸ் ஏறணும்.. பணம் வந்ததும் பக்கா பில் போட்டு ஜாமானோட அனுப்பிருங்க. என்ன சொல்றீங்க?’

என்னுடைய பதிலில் அவருக்கு அவ்வளவாக திருப்தியில்லையென்றாலும் வரும் வருமானத்தை விட மனமில்லாமல் நான் கூறியபடியே ஒவ்வொரு கம்பியிலும் ஓரங்குல அளவுக்கு வெட்டி கொடுத்தார். நான் அதை பெற்றுக்கொண்டு, ‘சார் தெருமுனைல நம்ம கார நிறுத்திட்டு வந்திருக்கேன். என் மனைவியும் மகளும் அதுல இருக்காங்க.. நான் போய் எடுத்துக்கிட்டு வந்திடறேன்.. வந்து ஒங்க பையன ஏத்திக்கிட்டு போறேன்.. ரெடியா வந்து வாசல்ல நிக்கச் சொல்லுங்க.’ என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் ஓட்டமும் நடையுமாக தெருமுனை நோக்கி விரைய சற்றுத்தள்ளி சாலையின் குறுக்கே நின்றுக்கொண்டிருந்த என்னுடைய நண்பர் விஷயத்தை ஒருவாறு புரிந்துக்கொண்டு தன்னுடைய வாகனத்தை திருப்பிக்கொண்டு வேகமாக தெருமுனையை சென்றடைந்து எனக்காக காத்திருக்க நான் அவரையடைந்ததும் என்னை ஏற்றிக்கொண்டு வந்த வழியே சென்று அடுத்த சாலை வழியாக தன்னுடைய வாடிக்கையாளருடைய கடையை அடைந்தார்.

நான் காட்டிய சாம்பிள் கம்பிகளைப் பார்த்த என்னுடைய நண்பரின் வாடிக்கையாளர், ‘சார் இந்த டீலர மாதிரி ஆளுங்களாலதான் எங்க தொழில் பேரே கெட்டு போவுது. ஒங்க எஞ்சினியர் குறிச்சி குடுத்த சைஸ் கம்பிய காட்டறேன்.. நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.. நான் ஒன்னும் சொல்றதுக்கில்லை..’ என்றாவாறு அவருடைய கடையிலிருந்த கம்பிகளைக் காட்டினார்.

ஒவ்வோரு சைஸிலும் சுமார் ஒரு mm குறைவாயிருந்தது என்னிடமிருந்த சாம்பிள் கம்பிகள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கம்பியிலும் சேலம் ஸ்டீல்ஸ் என்ற தர முத்திரையும் இருந்தது என்னுடைய வங்கி வாடிக்கையாளருடைய கம்பிகளில்.. நிறத்திலும் இரண்டு கம்பிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

‘நான் சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். ஒங்க கையிலருக்கறது இரும்பு ஸ்க்ரேப் (scrap) லருந்து செய்யறது சார்.. அதனாலதான் சைஸ்ல வித்தியாசம் இருக்கு. அதனால விலையும் நம்ம சரக்க விட கம்மியாத்தான் இருக்கணும்.. ஆனா நீங்க சொன்ன விலைய பார்த்தா நம்ம சரக்கோட விலையவிட ஜாஸ்தியாருக்கு..’

என்னுள் பொங்கிவந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு அவர் சொன்ன விலைக்கு கம்பிகளை வாங்கினேன். அவர், ‘நீங்க தைரியமா போங்க சார். நம்ம வண்டி ரெகுலரா தூத்துக்குடி வர்றதுண்டு.. அங்க ஏ.வி.எம் வீட்டு வேல ஒன்னு நடக்குது. அதோடயே ஒங்க கம்பியையும் போட்டு அனுப்பிடறேன்.. நம்ம வண்டியிலயே வெய்ட் மெஷினையும் போட்டுத்தான் அனுப்புவேன்.. என்னதான் பழகுனவராயிருந்தாலும் ஏ.வி.எம் வீட்ல  சைட்ல வச்சி எடைபோட்டு குடுத்தாதான் வாங்குவார். ஒங்கள்தையும் சைட்லயே ஒங்க எஞ்சினியர் முன்னாலயே எடை போட்டு குடுக்க சொல்றேன்.. அவருக்கும் திருப்தியாருக்குமில்ல?’ என ‘ரொம்ப நன்றி சார்..’ என்று விடைபெற்று என்னுடைய நண்பர் வாகனத்திலேயே பேருந்து நிலையத்துக்கு திரும்பினேன்..

நம்முடைய பொறியாளருடைய சில்மிஷத்தை இனியும் பொறுக்கலாகாது என்று நினைத்த நான் அவரை பரிந்துரைத்த என்னுடைய வாடிக்கையாளரிடம் புகார் கூற வேண்டும் என்று தீர்மானித்து தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டேன் இதனால் எழவிருக்கும்  பிரச்சினையை உணராதவனாய்..

தொடரும்..

18 comments:

Dharumi said...

எப்போது இத்தொடர் புத்தகமாக வெளிவரும்?
முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள்.

sivagnanamji(#16342789) said...

அவர் தடுக்கிலெ பாஞ்சா நீங்க கிடுக்கிலெ பூந்துட்டிங்க.....
'வீட்டைக்கட்டிப்பார்' தனிப்புத்தகமாக வந்தால் வீடுகட்ட முணைவோர்க்கு
உத்வியாக இருக்கும்

G.Ragavan said...

ஆகா.....அடப்பாவமே......இவரு கட்டுற வீட்டுல இந்தக் கம்பியப் போடுவாரா? அடுத்தவன் இருந்தா என்ன? செத்தா என்னங்குறதுதான எண்ணம்.

tbr.joseph said...

வாங்க தருமி சார்,

எப்போது இத்தொடர் புத்தகமாக வெளிவரும்?
முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள். //

அப்படீங்கறீங்க? போட்டா யார் வாங்குறாங்களோ இல்லையோ நம்ம தமிழ்மண நண்பர்கள் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன்..

சரிதானே:)

tbr.joseph said...

வாங்க ஜி!

தனிப்புத்தகமாக வந்தால் வீடுகட்ட முணைவோர்க்கு
உத்வியாக இருக்கும் //

அதாவது, நீங்க ஒரு காப்பி வாங்க மாட்டீங்க:)

tbr.joseph said...

வாங்க ராகவன்,

......இவரு கட்டுற வீட்டுல இந்தக் கம்பியப் போடுவாரா? //

அதானே.. இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாமே வியாபாரம்தான்..

துளசி கோபால் said...

என்னங்க பயங்கர தில்லு முல்லுகள்!

இந்த சிஜி வேற புத்தகத்துக்குப் பேர் வச்சுட்டார். இப்ப என் தலைப்பை மாத்தணுமா?
இல்லாட்டா நீங்க 'தமிழ்நாட்டில் வீட்டைக் கட்டிப்பார்'ன்னு வச்சுக்கிறீங்களா? :-)))))

உங்களுக்கும் இவுங்ககூடப் பழகிப் பழகி 'சரளமா' சரடு வருது:-))))

tbr.joseph said...

இப்ப என் தலைப்பை மாத்தணுமா?
இல்லாட்டா நீங்க 'தமிழ்நாட்டில் வீட்டைக் கட்டிப்பார்'ன்னு வச்சுக்கிறீங்களா?//

அடடடடடா..

இந்த தலைப்பு விஷயம் WTO ரேஞ்சுக்கு போயிருச்சே.. இப்ப என்ன பண்றது?

சரி நான் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துடறேன்..

சரி.. நீங்க மொட்டையா வீட்டைக் கட்டிப்பார்னுட்டு நியூசி அனுபவத்த எழுதினீங்கன்னா இங்க யார் வாங்குவா?

அதனால் என் நியூசி வீடு கட்டும் அனுபவம்னு வச்சிக்குங்க. என்ன நா சொல்றது..

துளசி கோபால் said...

//நியூசி அனுபவத்த எழுதினீங்கன்னா இங்க யார் வாங்குவா..//

என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க? உங்ககிட்டே ஒரு காப்பி வித்துறலாமுன்னு இருந்தேனே(-:

tbr.joseph said...

உங்ககிட்டே ஒரு காப்பி வித்துறலாமுன்னு இருந்தேனே//

அப்போ ஒரேயொரு காப்பிதான் போடப்போறீங்க? அப்ப சரி.. ஒங்க ப்பள்கேஷன் சக்சஸ்தான்.. அமோகமா செய்ங்க..:))

Senthil said...

//யார் வாங்குறாங்களோ இல்லையோ நம்ம தமிழ்மண நண்பர்கள் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன்..//

நாங்க ஏன் சார் வாங்க போறோம். படிச்சமா, நல்லா இருந்தா print எடுத்து office-லயே spiral binding செஞ்சிக்குவோம்.:) அதும் இல்லாம உங்களது பதிவுகளை தவறாமல் படித்து பின்னூட்டம் இடும் வாழவைக்கும் இந்த தமிழ்மண தெய்வங்களுக்கு நீங்களே ஒரு காப்பி (copy no coffee ) கொடுக்க மாட்டீங்களா என்ன ?

அன்புடன்
சிங்கை நாதன்

tbr.joseph said...

வாங்க செந்தில்,

நாங்க ஏன் சார் வாங்க போறோம். //

அதான பார்த்தேன்.. என்னடா யாரும் ஒன்னும் சொல்லலையேன்னு:)

அதும் இல்லாம உங்களது பதிவுகளை தவறாமல் படித்து பின்னூட்டம் இடும் வாழவைக்கும் இந்த தமிழ்மண தெய்வங்களுக்கு நீங்களே ஒரு காப்பி (copy no coffee ) கொடுக்க மாட்டீங்களா என்ன ?//

எனக்கு வர்ற பின்னூட்டங்களோட எண்ணிக்கைய வச்சி பார்த்தா கட்டுபடியாகக்கூடிய விஷயம்தான்.. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் இலவசமா ஒரு நகல் கொடுக்கலாம்..

பழூர் கார்த்தி said...

உங்க இஞ்சீனியர் கில்லாடின்னா, நீங்க டபுள் கில்லாடி சார்...

ஆமாம், உங்க முந்தைய பதிவில் தொழிலாளர்கள் உங்க பக்கத்து வீட்டுக்காரரை அடிச்சுட்டு உங்ககிட்ட 'எப்படி வீடு கட்டுறீங்கன்னு பாத்ருவோம்' சவால் விட்டுட்டு போறப்ப, அவங்க சாப்பாட்டு பாத்திரங்கள்ள மறைச்சு வச்சு இருந்த சிமெண்ட்ட திருப்பிக் கொடுத்தாங்களா இல்லயா ??

பழூர் கார்த்தி said...

//நாங்க ஏன் சார் வாங்க போறோம். படிச்சமா, நல்லா இருந்தா print எடுத்து office-லயே spiral binding செஞ்சிக்குவோம்//

இதை எழுத்துக்கு எழுத்து நான் ஆதரிக்கிறேன்.. இருந்தாலும், நீங்க ப்ரீ காப்பி கொடுக்கறதா இருந்தா, என் பேரையும் சேத்துக்கிடுங்க சார்..ஹி.ஹி..

tbr.joseph said...

அவங்க சாப்பாட்டு பாத்திரங்கள்ள மறைச்சு வச்சு இருந்த சிமெண்ட்ட திருப்பிக் கொடுத்தாங்களா இல்லயா ??//

பின்னே? யார் விட்டா?

tbr.joseph said...

வாங்க சோ.பையன்!

இதை எழுத்துக்கு எழுத்து நான் ஆதரிக்கிறேன்.. //

ஏன் ஆதரிக்கமாட்டீங்க:)

இருந்தாலும், நீங்க ப்ரீ காப்பி கொடுக்கறதா இருந்தா, என் பேரையும் சேத்துக்கிடுங்க//

அதான பார்த்தேன்..

aravindaan said...

மக்கள் எப்படி எல்லாம் இருக்காங்கா, நிலம் வாங்கும் போது பூங்காவிற்க்கு என ஒதுக்கிய நிலத்தையும் வித்துவிடுகிறார்கள்,பிலான் அப்புருவல் போகும்போதுதான் தெரியும். வீடும் கட்டமுடியாது. அடுத்தவன்கிட்ட இருந்து பணம் பிடுங்குவதிலே குறியா இருக்கங்க

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

அடுத்தவன்கிட்ட இருந்து பணம் பிடுங்குவதிலே குறியா இருக்கங்க //

அதான அவங்க மெய்ன் வேலையே!