10 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 169

ஆனால் என்னுடைய அந்த செயல் கட்டிட வேலை அடுத்த ஒரு வாரம் ஸ்தம்பித்துபோகவும் காரணமாக இருந்தது!

என்னுடைய நிலத்தில் நான் மீண்டும் அமைத்திருந்த குடிசை மேஸ்திரி கூறியதுபோலவே கட்டுமான பொருட்களை வைத்து பாதுகாக்க மிகவும் உதவியாக இருந்தது. அதை மீண்டும் கட்டி முடித்த மறுநாளே தூத்துக்குடி கார்னேஷன் திரையரங்கு அருகாமையிலிருந்த பழைய மரசாமான்கள் விற்கும் கடைகளிலிருந்து ஒரு கதவுடன் கூடிய நிலைவாசலை அப்படியே விலைபேசி வாங்கி வந்து பொருத்தி ஒரு பூட்டையும் மாட்டினேன்.

அந்த சமயத்தில் சிமெண்ட் மூட்டைகள் கிடைப்பதில் சிறிது சிரமம் இருந்தது.ஆனால் என்னுடைய வாடிக்கையாளர்களுள் ஒருவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் மொத்த ஸ்டாக்கிஸ்டுகளில் ஒருவராய் இருந்தது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது.

‘சார் மார்கெட்லருக்கற சிரமத்த பார்க்காதீங்க. ஒங்களுக்கு எவ்வளவு மூடை வேணும்னாலும் போன் செஞ்சிருங்க. என்ன ஒரு சிரமம், நடுநிசி சமயத்துலதான் வந்து இறக்க முடியும். இல்லன்னா என்னடா இவருக்கு மட்டும் மொத்தமா போய் எறக்குறானேன்னு கேப்பான்வ.. அத மாத்தும் பாத்துக்கிருங்க.’ என்றார்.

நான் குடியிருந்த இடமோ வங்கி கட்டிடத்தில். நான் வீடு கட்டிக்கொண்டிருந்த இடம் அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக.ஆதலால் சிமெண்ட் மூட்டைகளை இறக்கி வைக்க நான் நடுநிசியில் போய் காத்திருப்பதென்பது முடியாத காரியம். அத்துடன் கட்டட வேலை துவங்கிவிட்டால் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்களை வைக்க நான் அமைத்திருந்த குடிசையும் போறாது.

என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் ராஜேந்திரனுடன் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தபோது அவர், ‘சார் எதுத்தாப்லருக்கற ஓட்டு வீடு காலியாத்தான் இருக்கு. வீடு சின்னதுதான்னாலும் சுத்திவர பெரிய நிலம் கிடக்கு பாருங்க. ஒங்க ஆசாரிங்ககூட  நிம்மதியா ஒக்காந்து வேல பாக்கலாம்.  சின்னதா ஒரு ஓல டெண்ட் அடிச்சி குடுத்தா போறும்னு நெனக்கேன். ஓனர் பஜார்ல ஹார்ட் வேர் கடை வச்சிருக்கறார். நமக்கு தெரிஞ்சவர்தான். ஒங்களுக்கும் ஒரு வேளை தெரிஞ்சிருக்கும். அவர் வீடுகூட இங்கனதான் சிதம்பர நகர் ரெண்டுல. காலையில போய் பாத்தீங்கன்னா இருப்பார். பேசி முடிச்சிரலாம். ஜாமான்ங்கள் போட்டு வைக்கன்னு கேட்டீங்கன்னா தரமாட்டார். நீங்களே குடியிருக்கணும்னு கேளுங்க. ஏதாச்சும் தயங்கனார்னா சொல்லுங்க  நாளைக்கு ஆஃபீஸ்லருந்து வரும்போது சொல்லிட்டு வாரன்.’ என்றார்.

அந்த ஓனருடைய பெயர் பஜாரில் பிரபலம் என்றாலும் எனக்கு பழக்கமில்லை. இருப்பினும் போய்தான் கேட்போமே என்று நினைத்து அடுத்த நாள் காலையில் அவரைப் போய் சந்தித்தேன். அவர் என்ன நினைத்தாரோ என்ன ஏது என்று கேட்காமலேயே
‘சரி சார். மூனே பேர்னு சொல்றீங்க. குடுக்கறேன்.’ என்று கூறிவிட்டு வாடகை, முன்பணம் என்ன என்று கூறினார். வீட்டின் அளவையும் தரத்தையும் வைத்து பார்த்தால் சற்று அதிகந்தான். ஆனால் நான் ஒரு வங்கி மேலாளராயிற்றே கொஞ்சம் கூடுதல் கொடுத்தால்தான் என்ன என்று அவர் நினைத்திருப்பார்போல் தெரிந்தது. எனக்கும் அதிகபட்சம் ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மேல் தேவையிருக்காதே என்று தோன்றவே சரியென்று உடனே ஒத்துக்கொண்டு கையோடு கொண்டுவந்திருந்த தொகையை அவரிடம் நீட்டினேன்.

அவர், ‘என்ன சார் ரெடியாத்தான் வந்திருக்கீங்க போலருக்கு. வீட்ட பாக்க கீக்க வேணாமா?’ என்றார் புன்னகையுடன்.

நான் ‘பரவாயில்லை சார் வெளியிலிருந்த பார்த்தபோதே எனக்கும் என் மனைவிக்கும் பிடிச்சிபோச்சி.  சாவிய குடுத்தீங்கன்னா நாளைக்கே சுத்தம் செஞ்சி பால் காச்சி குடியேறுவேன்.’ என்றேன். என் அவசரம் அப்படி. அவரும் சரியென்று சம்மதித்து சாவியை கொடுக்கவே அடுத்த நாளே பேருக்கு கொஞ்சம் வீட்டு பொருட்களுடன் குடியேறினேன். கட்டட வேலைகள் இருக்கும்போது மட்டும் அங்கு தங்குவதாக திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் வீட்டில் இருந்த இரு அறைகளுமே நல்ல காற்றோட்டமாக இருந்ததுடன், வீடும் எங்கள் இருவருக்கும் வசதியாக இருக்கவே வாரத்தில் ஆறு நாட்கள் தங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் என்னுடைய வங்கி குடியிருப்பில் தங்குவதெனவும் தீர்மானித்தோம். எதிரில் இருந்த ராஜேந்திரன் குடும்பத்தினருடன் என் மகள் ஒட்டிக்கொண்டதும் இதற்கு முக்கிய காரணம்.

ஆக, அங்கு நான் குடியேறிய அடுத்த நாளே என்னுடைய வாடிக்கையாளர் தயவில் சுமார் நூறு மூட்டை சிமெண்ட் வந்திறங்க என்னுடைய நிலத்திலிருந்த குடிசையில் இருந்த சில்லறை ஜாமான்களையெல்லாம் எதிரே இருந்த என்னுடைய ஓட்டு வீட்டிற்கு மாற்றிவிட்டு அங்கு சிமெண்ட் மூட்டைகளை அடுக்கினேன்.

மேஸ்திரியும் அவருடைய ஆட்களும் கட்டட வேலைக்கு கொண்டுவந்திருந்த அவர்களுடைய உபகரணங்கள், உணவு பாத்திரங்கள் ஆகியவற்றை வைத்திருக்கவும் குடிசையை உபயோகிப்பது வழக்கம். ஆகவே காலையில் அவரிடம்  குடிசைச் சாவியை கொடுத்துவிட்டு மாலையில்  பெற்றுக்கொள்வேன்.

அஸ்திவாரத்துக்கு பொறியாளர் கூறியிருந்தபடி மேலும் இரண்டடி ஆழம் தோண்டுவதற்கு சற்று கூடுதலாகவே ஆட்களை அமர்த்திவிட்டு நான் அலுவலகம் சென்றேன். இந்த கட்டத்தில் நேரில் நின்று மேற்பார்வையிட தேவையில்லை என்று ராஜேந்திரன் கூரியிருந்ததால் நான் விடுப்பு எடுக்கவில்லை.

மாலையில் என்னுடைய அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே புறப்பட்டு வந்தேன். மேஸ்திரியும் அவருடைய ஆட்களும் கை கால் கழுவிக்கொண்டு புறப்பட தயாராக இருந்தனர். தினக்கூலிக்கு அமர்த்திர்யிருந்த ஆட்களுக்கு மாலையில் கூலியை கொடுத்தனுப்புவது வழக்கம்.

நான் நிலைத்தை அடைந்த நேரத்தில் நிலத்திற்கு முன்பாக சாலையில் வேலையாட்களின் உணவு பாத்திரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் முந்தைய நாள் ராஜேந்திரன் என்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது.

நான் அந்த பாத்திரங்களையே பார்த்தபடி சற்று நேரம் என்ன செய்யலாம் என்ற திட்டமிட்டுக்கொண்டிருந்தேன். எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பதுபோல், ‘என்ன சார் அப்படி பாக்கீங்க? இந்த பாத்திரத்துல எதையாச்சும் ஒளிச்சி கொண்டு போறோம்னு நினைகீங்க போலருக்கு.’ என்றார் மேஸ்திரி நக்கலாக.

நாகர்கோவில் ஆளுங்க கோவை ஆளுங்கள போல நக்கலடிக்கறதுல கில்லாடிகள் என்று எனக்கு தெரியும். அதுவும் அண்டை மாநிலமான கேரள வாடையும் நாகர்கோவில்ஆட்களிடத்தில் இருந்ததால் கேட்கவே வேண்டாம்.

‘என்ன மேஸ்திரி என்ன சொல்றீங்க? இதுல என்னத்த மறைச்சி வச்சிருக்க முடியும்?’ என்றேன் அப்பாவியாக.

‘சார் அப்படி சொல்லிராதீங்க. என்னத்த வேணும்னாலும் கொண்டு போலாம்.ஆனா நானோ எங்க ஆளுங்களோ அப்படியில்லை. வேணும்னா பாருங்க’ என்று முதல் வரிசையிலிருந்த பாத்திரங்களில் ஒன்றை எடுத்து திறந்து காட்டினார். காலியாயிருந்தது. அத்துடன் நில்லாமல் அடுத்த வரிசையிலிருந்த ஒன்று, அதற்கு பின்னாலிருந்த வரிசையிலிருந்த ஒன்று என காட்ட எல்லாமே காலியாகத்தானிருந்தது.

‘என்ன மேஸ்திரி நீங்க? எதுக்கு நீங்க இதையெல்லாம் காட்டறீங்க? நான் ஒங்களுக்கு இன்னைக்கி எவ்வளவு கொடுக்கணும் அதச் சொல்லுங்க என்றவாறே அவர் என்னிடம் காட்டிய பாத்திரத்தை அவர் கையிலிருந்து வாங்கி முதல் வரிசையில் வைத்துவிட்டு வேகமாக அவரை நோக்கி திரும்பும் சாக்கில் அதே வரிசை கோடியிலிருந்த ஒரு பாத்திரத்தை கையால் ஓங்கி தட்டிவிட்டேன். பாத்திரம் நான் தட்டிய வேகத்தில் உருண்டு அதனுடைய மூடி திறந்து தரையெங்கும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிந்தி சிதறியது.

மேஸ்திரியின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. ஆனால் அதை சமாளிக்க நன்றாக நாடகமாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆவேசத்துடன் திரும்பி தன்னுடைய ஆட்களைப் பார்த்து எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்து தீர்த்துவிட்டு, ‘எலேய் எந்த பயலுதுறா இந்த பாத்திரம்? வாங்கலே முன்னால.. சார் நம்மளபத்தி என்ன நினைப்பார்? மானத்த வாங்கிபுட்டியளேல.. வாங்கலே..’ என்று இரைந்தார்.

அவர் நாடகமாடினாரோ என்னவோ, அவருடைய ஆட்கள் உண்மையிலேயே மிரண்டு போய் நின்றிருந்தனர். அவருடைய இரைச்சலைக் கேட்டு அடுத்த வீட்டிலிருந்த ராஜேந்திரனுடைய மனைவியும், என்னுடைய மனைவியும் என்னுடைய நிலத்துக்கு கிழக்கே இருந்த பள்ளி ஆசிரியையும் அவருடைய கணவரும் ஓடிவந்தனர்.

என்னடா இது பிரச்சினையாயிரும் போலருக்கே என்று நினைத்த நான் என்னுடைய மனைவியையும் ராஜேந்திரனுடைய மனைவியையும் கண்சாடை காட்டி நீங்க போங்க என்று அனுப்பி வைத்தேன். ஆனால் அடுத்த வீட்டு டீச்சரும் அவருடைய கணவரும் லேசில் செல்வதாயில்லை.

அதுவும் டீச்சருடைய கணவர் ஒரு அரசு துறையில் கடைநிலை ஊழியராக இருந்தவர். ஏற்கனவே முன்கோபி. அவர் தரையில் திறந்துக்கிடந்த பாத்திரத்தையும் அதிலிருந்து சிதறிக்கிடந்த சிமெண்ட் பொடியையும் கண்டதும் நான் தடுப்பதற்குள் அங்கு இருந்த நான்கைந்து பாத்திரங்களை திறக்க எல்லாவற்றிலும் கழுத்துவரை சிமெண்ட்..

அவ்வளவுதான் மனிதர் சாமியாடிவிட்டார். நான் எத்தனை தடுத்தும் முடியாமல் அவர் மேஸ்திரியின் ஆட்களில் ஒருவரை கைநீட்டி அடித்துவிட மேஸ்திரி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய ஆட்கள் ப்க்கத்து வீட்டு டீச்சர் கணவரை  நையப் புடைத்துவிட்டனர். தடுக்கச் சென்ற எனக்கும் ஐந்தாறு அடிகள் விழ நான் பதறிப்போய் விலக அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே ஒரு போர்க்களம்போலானது.

இந்த நேரம் பார்த்து அலுவலகத்திலிருந்து ராஜேந்திரன் வந்திறங்கினார். அவரும் அவருடன் வந்திருந்த ஓட்டுனரும், அவருடைய நண்பர்களும் தலையிட்டு டீச்சரின் கணவரை மீட்டனர். அவர் பார்ப்பதற்கே பரிதாபமாக.. பாவம் எனக்காக வாதாட சென்ற அவருக்கா இந்த நிலை என்று இருந்தது எனக்கு.

உடனே அவரையும் பதற்றத்துடன் நின்றுக்கொண்டிருந்த அவருடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு பறந்தது ராஜேந்திரனின் வாகனம்.

மேஸ்திரி கோபத்துடன் தன்னுடைய ஆட்களை அழைத்துக்கொண்டு வெளியேறினார், ‘சார் நீங்க எப்படி வீட்ட கட்டி முடிக்கிறீங்கன்னு பாத்துடறோம்.’ என்றவாறு.

அடுத்து என்ன செய்வதென புரியாமல் விழித்துக்கொண்டு நிற்க, ‘அவங்க கெடக்காறுனுங்க சார். ஒங்க எஞ்சினியர் நம்ம காம்பஸ்லதான வேல பாக்கார். நான் பாத்து பேசி நாளைக்கு கூட்டிக்கிட்டு வாரன். பேசி முடிவு பண்லாம். நீங்க போங்க.’ என்றார் ராஜேந்திரன்.

தொடரும்


18 comments:

துளசி கோபால் said...

ஏங்க திருடனதும் இல்லாம வெல்லுவிளி வேறயா?

மாட்டிக்கிட்டவுடனே என்னெல்லாம் செய்யறாங்க பாருங்க.

sivagnanamji(#16342789) said...

"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.."
(கண்ணதாசன் - பறக்கும் பாவை)

மணியன் said...

சிலசமயங்களில் நல்லது செய்ய வருபவர்களால் இந்த மாதிரி சிக்கல்களும் ஏற்படுவதுண்டு. இதேபோல் சமையல்காரர்களும் நீங்கள் என்னதான் கூலியைக் கூட்டிக் கொடுத்தாலும் வீட்டிலிருந்து ஏதாவது சாமான் நமக்குத் தெரியாமல் எடுத்து செல்லாமல் இருக்க முடியாது.அதிலும் சிமென் ட் அந்தக் குறிப்பிட்ட லைசன்ஸ்ராஜ் காலத்தில் தட்டுபாட்டினால் 'விலை' மதிக்க முடியாததே!

tbr.joseph said...

வாங்க துளசி,

ஏங்க திருடனதும் இல்லாம வெல்லுவிளி வேறயா?//

அப்பத்தானே தப்பிக்கமுடியும்?

tbr.joseph said...

வாங்க ஜி!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்//

பேதை நெஞ்சம்னு என்னையா சொல்றீங்க?

tbr.joseph said...

வாங்க மணியன்,

சிலசமயங்களில் நல்லது செய்ய வருபவர்களால் இந்த மாதிரி சிக்கல்களும் ஏற்படுவதுண்டு. //

ஆமாங்க.. அவர் நல்லதா செய்றதா நினைச்சிக்கிட்டு அவர் செஞ்ச காரியம் எவ்வளவு பெரிய வம்புல போயி முடிஞ்சிருச்சி பாருங்க..

மா சிவகுமார் said...

வீடு கட்டுவதில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. எங்கள் அப்பாவும் எங்கள் வீடு கட்டும் போது கிட்டத்தட்ட இதே மாதிரி அனுபவம் நடந்ததைச் சொன்னார்கள். வீட்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது. அதற்கு மேல் வருமானம் ஏன் தேடுகிறார்கள்?

வீடு எல்லாம் கட்டுகிறார்களே, நமக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்தால் என்ன என்ற எண்ணமாக இருக்குமோ?

அன்புடன்,

மா சிவகுமார்

tbr.joseph said...

வாங்க சிவகுமார்,

வீடு எல்லாம் கட்டுகிறார்களே, நமக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்தால் என்ன என்ற எண்ணமாக இருக்குமோ?//

இருக்கும், யார் கண்டா? இந்த மாதிரி ஆளுங்களுக்கு திருடறதுக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும்.. அவ்வளவுதான்.

sivagnanamji(#16342789) said...

குடந்தையில் வீடு கட்டும் எல்லோருமே காவிரியில்தான் மனல் எடுபார்கள்.என் கோல்லீக் வீடு கட்டினார். ஒரு மாணவனிடம் ட்ராக்டர்
இருந்தது. அவன் இலவசமாக 5 ட்ராக்டர் மனல் அடித்துக் கொடுத்தான். வந்தது வினை. அந்த மனலை பயனபடுத்தி வீடு கட்ட மேஸ்திரி மறுத்துவிட்டார்.. வேறு மனல் வேண்டும் இதை அப்புறப்படுத்தினால்தான் வேலை தொடரும் என்று சாதித்துவிட்டார். நாங்க எல்லாம் பேதைகளாய் அவன் சோன்னதை ஏற்றுக்கொண்டோம். வேறுவழி?

sivagnanamji(#16342789) said...

வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டிருப்போர் பொருளாதார ரீதியாக
சுபிட்சமாக இருந்து பார்த்திருக்கின்றீர்களா?

G.Ragavan said...

மா.சிவகுமார், நீங்க சொல்றது உண்மைதான். வீடு கட்டுறாங்களே இன்னும் கொஞ்சம் கொடுத்தா கொறஞ்சா போயிருவாங்கன்னு எண்ணந்தான். நான் வீடு கட்டும் போது உதவிக்குக் கூப்பிட்ட அத்தனை பேரும் (காசுக்குத்தான்) "சொந்த்த மனே மாடீதீரா...சந்த்தோஷவாகி இன்னு ஜாஸ்தி கொடி சார்" (சொந்த வீடு எடுத்திருக்கீங்க...சந்தோசமா இன்னும் நெறையக் கொடுங்க சார்)னுதான் சொல்லுவாங்க.

G.Ragavan said...

ஆகா...அந்தத் தூக்குவாளிக்குள்ளல்லாம் சிமெண்ட்டா....அடக்கடவுளே....

tbr.joseph said...

அந்த மனலை பயனபடுத்தி வீடு கட்ட மேஸ்திரி மறுத்துவிட்டார்.. வேறு மனல் வேண்டும் இதை அப்புறப்படுத்தினால்தான் வேலை தொடரும் என்று சாதித்துவிட்டார்//

வீட்டு கட்டுமானத்திற்கு தேவைப்படும் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் போன்றவைகளை சப்ளை செய்யும் ஆட்களுக்கும் நம்முடைய மேஸ்திரிக்கும் தொடர்பு நிச்சயம் இருக்கும். உன் முதுகை நான் சொறிந்தால் என் முதுகை நீ சொறி என்ற ஒப்பந்தமும் இருக்கும். எல்லாருமாக சேர்ந்து நம் தலையில் மொட்டையடிப்பதிலேயே குறியாயிருப்பார்கள்.

tbr.joseph said...

வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டிருப்போர் பொருளாதார ரீதியாக
சுபிட்சமாக இருந்து பார்த்திருக்கின்றீர்களா?//

மேஸ்திரி, கொத்தனார், தச்சர்களைத்தானே சொல்கிறீர்கள்? அவர்கள் ஈட்டுவதையெல்லாம் குடியிலும் சீட்டாட்டத்திலுமே விட்டுவிடுவார்கள். வீடு போய் சேர்வதையும் வீட்டுப் பெண்கள் தாம் தூம் என்று செலவழித்துவிட்டு இன்னும் யாரை மொட்டையடிக்கலாம் என்று அலைவார்கள். இதில் சுபிட்சமாக எங்கே இருப்பது?

tbr.joseph said...

ராகவன்,

சொந்த வீடு எடுத்திருக்கீங்க...சந்தோசமா இன்னும் நெறையக் கொடுங்க சார்//

சொந்தமா வீடுகட்டுறவன் கட்டி முடிக்கறப்போ எங்க சந்தோஷமா இருக்கறது? கருப்புப் பணம் இருந்தால் பரவாயில்லை. கடன் வாங்கி வீடு கட்டும் நம்மைப்போன்ற நடுத்தரவாசிகளுக்கு வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்ததுமே கண்ணில் தெரிவது கடனும் வேலையாட்களிடம் இப்படி மோசம் போய்விட்டோமே என்ற கவலையுந்தானே..

tbr.joseph said...

ஆகா...அந்தத் தூக்குவாளிக்குள்ளல்லாம் சிமெண்ட்டா....அடக்கடவுளே.... //

இதமட்டும் அனுபவசாலியான ராஜேந்திரன் தான் ஏமாந்துபோன விஷயத்தை என்னிடம் பகிர்ந்துக்கொள்ளவில்லையென்றால் இன்னும் எவ்வளவு நாள் என்னை ஏமாற்றியிருப்பார்களோ..

அண்டை அயலாரிடம் நட்புறவு பாராட்டவேண்டும் என்பது இதற்குத்தான்போலும்.

பழூர் கார்த்தி said...

// வீட்டு கட்டுமானத்திற்கு தேவைப்படும் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் போன்றவைகளை சப்ளை செய்யும் ஆட்களுக்கும் நம்முடைய மேஸ்திரிக்கும் தொடர்பு நிச்சயம் இருக்கும்.//

மிகவும் உண்மை.. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் !!

****

ஆனால் நேர்மையான மேஸ்திரிகளும், தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.. எங்க மாமா, எங்க கிராமத்தில் ஒரு வீடு கட்டினார்.. மேஸ்திரியும், தொழிலாளர்களும் நேர்மையாக உழைத்தனர்.. இருந்தாலும் யாரவது ஒரு ஆள் எப்போதும் இருந்து கொண்டு கண்காணிப்பது நல்லதுதான் !!

tbr.joseph said...

எங்க கிராமத்தில் ஒரு வீடு கட்டினார்.. மேஸ்திரியும், தொழிலாளர்களும் நேர்மையாக உழைத்தனர்//

உண்மைதாங்க. கிராமப்புறங்களில் பணிசெய்வோர் உண்மையாகத்தான் இருப்பார்கள். ஒன்று அவர்கள் சூதுவாது தெரியாதவர்கள். இரண்டு கிராமம் என்றாலே ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களாகத்தானெ இருப்பார்கள்.அவர்களை ஏமாற்றுவது நம் குடும்பத்தாரையே ஏமாற்றுவது போலாயிற்றே என்று பணியாட்களும் தயங்குவார்கள்.

நகர்ப்புறவாசிகள் சாதாரணமாகவே தில்லுமுல்லுகளுக்கு சளைத்தவர்களல்லவே..