07 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 168

வீடு கட்டுமானப் பணி என்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல என்பதை முதல் நாளிலேயே அனுபவித்து தெரிந்துக்கொண்ட நான் இனி எதையும் ஆற அமர்ந்து ஆலோசிக்காமல் செய்யக்கூடாது என்று தீர்மானித்தேன்.

அடுத்த நாள் என் அலுவலக வேலை முடிந்ததும் கடைத்தெருவுக்கு சென்று ஒரு நீள்வடிவ கணக்கு புத்தகத்தை வாங்கினேன்..

வீடு திரும்பி பொறியாளர் தயாரித்து வழங்கிய என்னுடைய வீட்டு வரைபடத்தையும், கட்டுமான எஸ்டிமேட்டையும் என் அலுவலக மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு மொத்த வேலையையும் மூன்று பாகங்களாக பிரித்து ஒவ்வொரு நிலையையும் அடைய எத்தனை செலவாகும் என்பதை என்னுடைய கணக்கு புத்தகத்தில்

1.     கட்டுமான அளவுகள் (செங்கல் கட்டு, கூரை மற்றும் லிண்டல் கான்க்ரீட், பூச்சு வேலை என்ற பிரித்தேன்)
2.     கட்டுமான பொருட்கள் (அஸ்திவாரம் வரை, கூரை வரை, மேல் பூச்சு என பிரித்தேன்)
3.     இவற்றுக்கான ச.அடி/க.அடி கூலித்தொகை

குறித்துக்கொண்டேன்..

பிறகு அதிகபட்சம் எத்தனை சதவிகித அளவுக்கு மொத்தச் செலவு கூடுதல் ஆகலாம் என்பதையும் தோராயமாக கணக்கிட்டு குறித்துக்கொண்டேன்.

ஆனால் அதன்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அடுத்த சில வாரங்களிலேயே தெரிந்தது..

அஸ்திவாரத்துக்கென்று பொறியாளர் பரிந்துரைத்த ஆழம்வரை நிலத்தை  தோண்டி முடித்து அவர் ஊரில் இல்லாததால் அஸ்திவாரத்தின் அடியில் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த உயரத்திற்கு கான்க்ரீட் பெல்ட் இட்டு முடித்தோம்..

அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கூறியிருந்தபடியே தாராளமாக கிணற்று நீரை பாய்ச்சி கெட்டிப்படுத்தினோம்..

ஆனால் மூன்றாம் நாளை காலை நாங்கள் அமைத்திருந்த கான்க்ரீட் பெல்ட்டுக்கு மேலே அரையடி உயரத்தில் ஊற்று நீர் கட்டி நிற்க ஏதோ பிரச்சினை என்பது மட்டும் தெரிந்தது.

அதற்கு மேல் தண்ணீர் பாய்ச்சி என்ன பயன் என்று நினைத்து வேலையை நிறுத்திவிட்டு பொறியாளர் அவ்வார இறுதியில் வரும்வரை காத்திருந்தோம்.

அவர் வந்ததும்தான் தெரிந்தது இன்னும் இரண்டடி ஆழத்துக்கு நிலத்தை தோண்ட வேண்டியிருக்கும் என்பது. ‘இது கொஞ்சம் க்ளே சாய்லாருக்கும் போலருக்கு சார். அதான் ஊத்து தண்ணி இந்த ஆழத்துலயே வருது.. கட்டிக் கெடக்கற தண்ணிய எடுத்து கொட்டிட்டு ரெண்டு நாள் பாப்போம். அப்புறமும் வந்துக்கிட்டே இருந்தா இனியும் ரெண்டடி ஆழம் தோண்டறத தவிர வேற வழியில்ல.. நீங்க தோண்டி முடிச்சிட்டு மறுபடியும் பெல்ட் போடறதுக்கு முன்னால எனக்கு ஃபோன் செய்ங்க நா வந்து பார்த்துட்டு சொல்றேன்..’

ஆக, பெல்ட் போட்ட வகையில் கட்டுமான பொருட்கள், கூலி எல்லாம் வீணாகிப்போக என்னுடைய எஸ்டிமேட் தவிடுபொடியானது..

***

நான் வீடுகட்ட அமர்த்திய மேஸ்திரி பொறியாளருடைய ஆள்.. நாகர்கோவிலை சேர்ந்த கேரள மாநிலத்தவர். ஆனால் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். ஆகவே தமிழ் நன்றாக தெரிந்திருந்தது.

பொறியாளர் தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்துக்கொண்டே தனியாக வீடுகளுக்கு வரைபடம் மற்றும் எஸ்டிமேட் தயாரித்துக்கொடுப்பது. தேவைப்பட்டால் முனிசிபல் அனுமதி பெற்றுத்தருவதுபோன்ற வேலைகளை unofficial க அவருடைய மனைவியின் பெயரில் செய்துக்கொண்டிருந்தார். அவரும் கட்டட பொறியாளர் பட்டம் பெற்றிருந்ததால் இந்த ஏற்பாடு வசதியாக இருந்தது அவருக்கு.

அவருடைய சைட் பிசினஸ் அவருடைய அலுவலக அதிகாரிகளுக்கு தெரியவந்தால் வேலைக்கு வேட்டு வந்துவிடும் என்பதால் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களில் மட்டுமே என்னுடைய கட்டுமான இடத்துக்கு விஜயம் செய்வார். ஆளும் அத்தனை நேர்மையானவர் அல்ல.. அவர் அமர்த்தி தந்த மேஸ்திரியும் அவருடைய கூட்டாளிகளும் அப்படித்தான்.

இருப்பினும் எனக்கு நன்கு பரிச்சயமாயிருந்த வாடிக்கையாளர் வழியாக வந்தவர் என்பதால் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ‘அவர் கை அவ்வளவா சுத்தமில்லதான் சார். ஆனா நல்ல வெவரமான ஆளுங்கறதாலதான் நான் ஒங்களுக்கு ரெக்கமெண்ட் செஞ்சேன்.. எங்க குடும்பத்துல கட்டுன வீடு, ஃபேக்டரி எல்லாமே இவர் மேற்பார்வைல கட்டுனதுதான்.. இருபது வருசமா பளக்கம். ஒங்ககிட்ட ஏதும் விளையாட மாட்டார்ங்கறதுக்கு நா க்யாரண்ட்டி.. அப்படியும் ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சார்னா எங்கிட்ட ஒரு வார்த்த சொன்னா போறும். நா பாத்துக்கறேன்.’ என்று  என்னுடைய வாடிக்கையாளர் வாக்குறிதியளித்திருந்தாலும் அவரும் அவருடைய மேஸ்திரியும் செய்த சின்ன சின்ன சில்மிஷங்களை அவரிடம் கொண்டு சென்றால் நம் வேலையை இழுத்தடிக்க வாய்ப்பிருக்கிறதே என்று பொறுத்துப் போகவேண்டியிருந்தது.

தனியாளாக நின்று ஒரு வீட்டை கட்டி முடிப்பது என்பது ஒரு சரியான தலைவலி. அதற்காகத்தான் பலரும் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர் அல்லது கட்டிட காண்ட்ராக்டர் பொறுப்பில் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஒப்பந்தக்காரரும் பொறியாளரும் கூட்டு சேர்ந்துக்கொண்டு கட்டுமான பொருட்களில் தரமில்லாதவற்றை மலிவு விலையில் வாங்குவதுடன் ஒவ்வொரு கட்டத்துக்கும் தேவையான காலத்தை எடுத்துக்கொள்ளாமல் மளமளவென்று முடித்து லாபம் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் முடித்துக்கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.

நமக்கும், அட! இவ்வளவு வேகமாக வேலை நடக்குதே என்று தோன்றும்.. பிறகு வீட்டுச் சுவர்களில் பாளம் பாளமாக கீறல் விழும்போதுதான் தெரியும் அவர்களுடைய அவசர கோலத்தின் விளைவு..

இத்தகைய கீறல்கள் மிகச்சாதாரணமாக சென்னையில் கட்டப்படும் வீடுகளில் பார்க்கலாம்..

இவற்றுள் இரண்டு வகை உண்டு..

முதல் ரகம் மேலோட்டமாக மெல்லியதாக தரையிலிருந்து கூரைவரை ஓடுவது. அது பூச்சு கீறல். செங்கல் கட்டின் மீது சாந்து பூசி அடுத்த நாள் முதல் இரண்டு நாட்களுக்காகிலும் தண்ணீர் நனைய நனைய பாய்ச்சாமல் உலரவிட்டால் ஏற்படும். இது ஒரு காரணம்.

இரண்டாவது நம்முடைய கண்ணில் மண்ணை தூவிவிட்டு சாந்தில் தேவைக்கதிகமான மணலைக் கலந்து பூசினால் நாம் எத்தனைநாள் மாய்ந்து மாய்ந்து தண்ணீர் பாய்ச்சினாலும் நாளடைவில் கூடுதல் மணல் தன் சுயரூபத்தைக் காட்டிவிடும்.

ஆனால் இவ்வகை கீறல் சுவற்றின் தோற்றத்தை வேண்டுமானால் பாழ்படுத்துமே தவிர கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்காது.

இரண்டாவது ரக கீறல் செங்கல் கட்டு கீறல். இது பாளம், பாளமாக வெடிக்கும். இதுதான் அபாயமானது.

இதற்கு முக்கிய காரணம், தரமில்லாத செங்கற்கள்தான். செங்கற்களில் நாட்டு கற்கள் என்ற ஒருவகை இருக்கிறது. அதாவது தரம் குறைந்த களிமண், களிமண்ணில் அதிக அளவிலான மணலை கலப்பது, சரியாக சூளையில் வேகவைக்காமல் எடுக்கப்படும் இவ்வகை செங்கல் கற்கள் தரமான கற்களைக் காட்டிலும் இரு மடங்கு விலை குறைவாக கிடைக்கும்.

இவற்றைத்தான் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் உபயோகிப்பதை நானே பார்த்திருக்கிறேன். இதனுடைய அளவும் தரமான கற்களைக் காட்டிலும் சிறியதாகவும் ஒழுங்கில்லாமலும் இருக்கும். தரமான கற்கள் ஒரு வரிசைக்கு ஐம்பது தேவைப்படும் என்றால் இத்தகைய கற்கள் சுமார் அறுபதிலிருந்து எழுபது கற்கள் தேவைப்படும்.

அதனுடைய விளிம்புகளும் மொட்டையாக இருக்கும் என்பதால் கற்களுக்கிடையில் இடப்படுகின்ற சாந்தின் அளவும் கூடும்.. மேல் பூச்சுக்கும் பத்திலிருந்து பதினைந்து சதவிகித அளவு கூடுதல் சாந்து தேவைப்படும். வெகு விரைவிலேயே கற்களில் கீறல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய கீறல்கள் Load bearing சுவர்களில் ஏற்பட்டுவிட்டால் கட்டடத்தின் வலிமையே பாதிக்கப்பட்டுவிடும்.. கான்க்ரீட் உத்தரங்கள் (Beams) அமைத்து கட்டும் கட்டடங்களில் பெரும்பாலான இத்தகைய தரம் குறைந்த கற்களையே உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன்.

ஆகவேதான் நாமாகவே சிரமத்தை பாராமல் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்கி கொடுக்கவும் கூடவே நின்று வேலை வாங்கவும் பொறுமையும் நேரமும் இருந்தால் அதுதான் சிறந்தது..

நான் தூத்துக்குடி கிளையிலேயே பணிபுரிந்ததாலும், கடந்த சில ஆண்டுகளாக விடுப்பில் செல்லாமல் சேர்த்து வைத்திருந்ததாலும் எனக்கு பொறுமை இருந்ததோ இல்லையோ நேரம் நிறையவே இருந்தது.

ஆகவேதான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் இதனால் தேவைக்கும் சற்று அதிகமாக கட்டுமான பொருட்கள் தேவைப்பட்டது என்பது என்னவோ உண்மைதான்.

எப்படி என்று சொல்கிறேன்.

எந்த ஒரு கட்டட மேஸ்திரியும் அவருடைய கூட்டாளிகளும் அரையடி அல்லது ஒரு அடி தூக்கு சட்டியில்தான் பகலுணவு கொண்டு வருவார்கள்.. நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அதற்கு உடலை வருத்தி நாளெல்லாம் கொளுத்தும் வெயிலில் வேலை செய்பவர்கள் சற்று அதிகம் உண்ணுவது இயற்கைதானே என்றுதான் நாம் எல்லோரும் நினைப்போம்.

ஆனால் அதன் பின்னால் இருந்த சூட்சுமத்தை என்னுடைய நண்பர் ராஜேந்திரன் என்னிடம் கூறியபோது அவர் சும்மா கேலி செய்கிறார் என்று நினைத்தேன்.

‘சார்.. நா சொல்றபடி செய்ங்க.. அவனுக வேலைய முடிச்சிட்டு போம்போது நீங்க காஷ¤வலா அவனுக மூடி வச்சிருக்கற ச்சட்டியில ஒன்னெ காலால தெரியாதமாதிரி எத்துங்க.. அப்புறம் தெரியும் அந்த சூட்சுமம்..’

அவர் பூடகமாக என்னிடம் சொன்னதை அடுத்த நாளே நான் செய்து பார்க்க அதிர்ந்து போனேன்..

ஆனால் என்னுடைய அந்த செயல் கட்டிட வேலை அடுத்த ஒரு வாரம் ஸ்தம்பித்துபோகவும் காரணமாக இருந்தது!

தொடரும்..11 comments:

அருண்மொழி said...

ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். படிப்பது உங்கள் பதிவா அல்லது கட்டுமானத்துறை பதிவா என்று. தலைப்பை ஒரு முறை check செய்ய வேண்டியதாயிற்று :-)

துளசி கோபால் said...

இங்கே எங்க அனுபவம் வேற. அங்கே தமிழ்நாட்டு அனுபவம் முற்றிலும் வேறன்னு ஆரம்பத்துலேயே நல்லாப் புரியுது.

அதையும் தெரிஞ்சுக்கச் சான்ஸ் கிடைச்சதுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்.

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

என்னுடைய அனுபவங்கள்ல இந்த வீட்ட கட்டுறதும் ஒரு புது ஆனால் பயனுள்ள அனுபவமாக இருந்தது.

அதன் பிறகு என்னுடைய சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலருக்கும் consulantஆக இருந்திருக்கிறேன்:)

tbr.joseph said...

வாங்க துளசி,

தமிழ்நாட்டு அனுபவம் முற்றிலும் வேறன்னு ஆரம்பத்துலேயே நல்லாப் புரியுது.//

ஆமாம் அங்க நியு.சி யில இந்தமாதிரி தில்லுமுல்லுங்க நடக்கறதுக்கு சான்ஸ் அவ்வளவா இருக்காதுன்னு நினைக்கிறேன்..

இங்க கண்ணுல விளக்கெண்ணெய ஊத்திக்கிட்டு பக்கத்துலயே நிக்கலேன்னு வச்சிக்குங்க.. அவ்வளவுதான்.. என் நண்பர் ஒருத்தர் ஒருத்தர் கிட்ட காண்ட் ராக்ட் குடுத்துட்டு வீட்ட கட்டி முடிக்க மூனு வருசம் ஆச்சி..

G.Ragavan said...

நீங்க என்ன பட்ஜட் போடுங்க...கடைசீல அதுக்குக் கூடத்தான் ஆகும்.

தூக்குச்சட்டியக் காலால எத்துனீங்களா...அடடா!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நீங்க என்ன பட்ஜட் போடுங்க...கடைசீல அதுக்குக் கூடத்தான் ஆகும்.//

அது முன்னமேயே தெரிஞ்சிருந்தா வேலமெனக்கெட்டு அந்த பட்ஜெட்டையே போட்டிருக்க மாட்டேன்.

தூக்குச்சட்டியக் காலால எத்துனீங்களா...அடடா! //

எத்துனேன்னு சொல்ல முடியாது.. ஏறக்குறைய அந்த மாதிரிதான்..

sivagnanamji(#16342789) said...

இதுதாங்க முன்பே ஒரு பின்னூட்டத்திலே குறிப்பிட்டுள்ளேன்.
தப்பு செய்ய தயங்க மாட்டாங்க.அதை கண்டுபிடிச்சிட்டா அதுக்காக ந்ம்மீது கோபப் படுவாங்க;தப்பு செஞ்சதுக்கு வெட்கப்பட மாட்டாங்க.
'ஒருவர் வீடுகட்டினா அவர் ஆயுளிலே
சரி பாதி கொறஞ்சிடும்'னு சொல்வது வழக்கம்

tbr.joseph said...

வாங்க ஜி!

தப்பு செய்ய தயங்க மாட்டாங்க.அதை கண்டுபிடிச்சிட்டா அதுக்காக ந்ம்மீது கோபப் படுவாங்க;தப்பு செஞ்சதுக்கு வெட்கப்பட மாட்டாங்க.//

தப்பு செஞ்சவங்க வெட்கபட்டாதான் திருந்திருவாங்களே..

'ஒருவர் வீடுகட்டினா அவர் ஆயுளிலே
சரி பாதி கொறஞ்சிடும்'னு சொல்வது வழக்கம் //

அப்படியா? அப்போ நான் ஒரு 150 வருசம் வாழுவேன்னு கடவுள் தீர்மானிச்சிருந்தா நல்லது.. 75 வயசு வரைக்குமாவது வாழலாமே:)

பழூர் கார்த்தி said...

//வீடு கட்டுமானப் பணி என்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல //

ஆமா சார், அதுக்காகத்தானே வீட்டை கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்ன்னு சொல்லியிருக்காங்க பெரியவங்க..

ரொம்ப நல்ல அனுபவப் பாடம்தான் இது...

பாலசந்தர் கணேசன். said...

அனுபவங்கள் உபயோகமானவை என்றாலும் அதை படிப்பவர்கள் சுவாரசியமாக படிக்க வேண்டும். நீங்கள் அந்த மாதிரி எழுதுகிறீர்கள்.

tbr.joseph said...

நன்றி பா. கணேசன்.

தொடர்ந்து படிங்க. டைம் இருந்தா பின்னூட்டமும் போடுங்க.