06 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 167

வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்னு சும்மாவா சொல்லியிருக்காங்க..

அப்பப்ப்பா.. ஒரு சின்ன வீட்ட கட்டி முடிக்கறதுக்குள்ள பட்டபாடு இருக்கிறதே ரெண்டு ஜென்மத்துக்கும் காணும்..

நான் பிறந்து வளர்ந்தது சென்னை என்றாலும் தூத்துக்குடியில் வீடு கட்டுவதற்கு தீர்மானித்ததன் முக்கிய காரணம் கட்டுமான நேரத்திலும், பிறகு வீட்டு பராமரிப்பிலும் என்னுடைய மாமனார் வீட்டில் இருப்பவர்களுடைய சரீர ஒத்தாசையாவது இருக்குமே என்று கருதியதால்தான்.

ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் என்னுடைய மைத்துனருக்கு வாங்கிய நிலம் சம்பந்தமான விஷயத்தில் குளறுபடி நடந்து குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு அந்த எண்ணம் நிறைவேறாமல் போனது.

ஆக, ஊர் பேர் தெரியாத ஊரில் தனியாளாக நின்று எல்லா பணிகளையும் நானே பார்க்க வேண்டியிருந்தது.

என்னுடைய அலுவலக நண்பர்கள், முன்பின் பழக்கமில்லாத என்னுடைய கிளை வாடிக்கையாளர்கள் என பலரும் எனக்கு இந்த விஷயத்தில் உதவியாயிருந்ததை மறக்க முடியாது..

வீடு கட்டும் நேரத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்களை நான் விலாவாரியாக என்னுடைய நாட்குறிப்புகளில் எழுதி வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் என் நினைவில் இப்போதும் பல சுவையான, விசித்திரமான, சோகமான சம்பவங்கள் பதிந்திருக்கின்றன..

அதை சிலவற்றை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

***

நான் நிலத்தை வாங்கும்போது அதன் தெற்கு மூலையில் ஒரு சிறு குடிசை இருந்தது. அது மிகவும் சிதிலமடைந்து இருந்ததால் அதை இடித்துவிடுவதென தீர்மானித்து ஆட்களை ஏற்பாடு செய்தேன்.

என்னுடைய கிளையில் பணியாற்றிய ஒரு பெண் குமாஸ்தாவும் அப்போது அவருடைய வீட்டை எழுப்பிக்கொண்டிருந்தார். அவருடயை வீட்டில் பணியாற்றிய கொத்தனார்களைக் கொண்டே இதையும் இடித்து தள்ளினோம்..

இடித்து முடித்து நிலைத்தை சமன்படுத்திவிட்டு ஏதோ ஒரு சாதனையை செய்து முடித்ததுபோல் நின்றுக்கொண்டிருந்தேன்..

மாலை சுமார் ஏழுமணி இருக்கும். என்னுடைய நிலத்துக்கு மேற்கே (இடது புறம்) குடியிருந்தவர் தூத்துக்குடி துறைமுகத்தில் மெக்கானிக்கல் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் அலுவலக வாகனத்தில் வந்திறங்கி என்னை பார்த்து புன்னகையுடன் ‘என்ன சார் வீட்டு வேலைய ஆரம்பிக்க போறீங்க போலருக்கு?’ என்றவாறு என்னை நோக்கி வந்தார்.

நான் பெருமையுடன், 'ஆமா சார்.. அதான் இதுலருந்த குடிசையை இடிச்சி போட்டுட்டேன்.. கட்டட வேலைக்கு இடைஞ்சல்னு மட்டுமில்ல.. இதெதுக்கு திருஷ்டிமாதிரி..’ என்றேன்..

அவர் திடுக்கிட்டு நிலத்தை எட்டிப் பார்த்தார்.

பிறகு, ‘என்ன சார்.. என்ன காரியம் செஞ்சீங்க? இந்த குடிசைய வச்சித்தானே இந்த நிலத்துக்கு ஒரு டோர் நம்பரே முனிசிபல்ல குடுத்துருக்காங்க? அதத்தானே ஒங்க வீட்டு ப்ளான் சாங்ஷன்லயும் குறிச்சிருப்பாங்க? நீங்க பாட்டுக்கு வீட்ட இடிச்சிட்டீங்க? என்ன சார் என்னைய ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்லே?’ என்றார் படபடப்புடன்.. ‘அது மட்டுமா? அந்த குடிசைய ஒரு கெடங்கு மாதிரி யூஸ் பண்ணியிருக்கலாம்.. சிமெண்ட் சாக்கு, கட்டட ஜாமான்லாம்கூட போட்டு வச்சிக்க உபயோகமா இருந்திருக்குமில்ல?’

என் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.. வீட்டை இடித்து தள்ள வந்திருந்த மேஸ்திரியும் என்னை ‘ஏன் சார் நாந்தான் அப்பவே சொன்னேனே’ என்பதுபோல் என்னை பார்த்தார்.

உண்மைதான். நான் குடிசையை இடிக்க வேண்டும் என்றபோது, ‘எதுக்கு சார்.. அதுபாட்டுக்கு ஓரமா இருக்கட்டுமே.. கட்டட வேலை நடக்கற சமயத்துல ஜாமான், ச்சட்டி, அப்புறம் மரஜாமான்லாம் போட்டு வச்சிக்கலாம் சார்.. ஒரு கதவ மட்டும் மாட்டி பூட்றா மாதிரி செஞ்சிக்குடுத்துருங்க’ என்று சொன்னார்..

என்னுடைய அடுத்த வீட்டு நண்பர் (அவர் பெயரை ராஜேந்திரன் என்று வைத்துக்கொள்ளலாம்) ராஜேந்திரன் சட்டென்று நினைவுக்கு வந்தவராய்.. ‘சார் இதுல ஒங்களுக்கு பண நஷ்டமும் இருக்கு.’ என்றார்.

‘என்ன சார் சொல்றீங்க, பண நஷ்டமா?’ என்றேன்..

‘ஆமா சார். இப்ப இந்த நிலத்துக்கு எவ்வளவு தீர்வை கட்டறீங்க?’

நான் தொகையை கூறினேன்..

‘நான் எவ்வளவு தீர்வை கட்டறேன் தெரியுமா?’ என்று அவர் கட்டும் வரித்தொகையைக் கூறினார்.

நான் அடைக்கும் தொகையைவிட பலமடங்கு அதிகம்.

‘நீங்க கட்டியிருந்தது ஒரு ரூம் குடிசை. கரண்ட் இல்லை. குடிநீர் வசதி இல்லை. அதனால அவ்வளவு கம்மி. அந்த வீட்ட காட்டியே நீங்க கரண்ட் கனெக்ஷன், பைப் கனெக்ஷன் எல்லாம் எடுத்துருக்கலாம். குடிசை வீடுன்னா டாரிஃபும் கம்மி, பைப் கனெக்ஷ்ன் அட்வான்ஸ் தொகையும் கம்மி. ஒங்க புது வீடு கட்டி முடிச்சி முனிசிபல் வால்யூவர் வந்து ரீவேல்யூ பண்ணி முடிக்கறவரக்கும் இந்த வரியையே கட்டிக்கிட்டு இருந்திருக்கலாம். அத எல்லாத்தையும் நீங்க பாழாக்கிட்டீங்க.’

அவர் அடுக்கிக் கொண்டே போக என் முகம் சுத்தமாக களையிழந்துபோனதை அவர் கவனித்திருக்க வேண்டும்.

இறுதியில் அவர், ‘இப்பவும் ஒன்னும் கெட்டுபோகலை சார். ராத்திரியோட ராத்திரியா நீங்க இடிச்சத மறுபடியும் கட்டி முடிங்க. நல்ல வேளையா நீங்க பிரிச்சிப் போட்ட ஓலையெல்லாம் அப்படியே கெடக்கு.. என்ன.. நீங்க கட்டப் போற சுவர்தான் புதுசு மாதிரி தெரியும்.. அதுக்குக்கூட நீங்க எதையாச்சும் இந்த ஏரியா பில் கலெக்டருக்கு குடுத்து சரிக்கட்டிரலாம். என்ன மறுபடியும் கட்ட போறீங்களா? இல்ல..’ என்று இழுக்க நான் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறிப்போனேன்.

ராஜேந்திரனின் யோசனையை கேட்ட மேஸ்திரியோ, ‘சார் ராத்திரியோட ராத்திரியா செய்யற வேலையெல்லாம் நான் ஏத்துக்கறதில்ல.. அத்தோட பிரிச்சி போட்ட இந்த ஓலைய மறுபடியும் வச்சி கூரைய மேய முடியாது சார்.. எனக்கு இடிக்கறதுக்கு பேசின கூலிய குடுத்துருங்க.. எனக்கு நாளைலருந்து ரெண்டு வாரத்துக்கு வேற சோலி இருக்கு..’ என்றவாறு கையை நீட்டினார்.

என்னடா இது ஆரம்பமே சரியில்லையே என்று தோன்றியது..

இந்த மேஸ்திரி போனால் வேற ஆளை எங்கே போய் தேடுவது என்று நான் தடுமாற ராஜேந்திரன் ஆபத்பாந்தவனாய் வந்தார். ‘சார் இவர கூலி குடுத்து அனுப்பிட்டு உள்ள வாங்க. எனக்கு ஒரு ஆள தெரியும். இங்கனதான் ஆறாவது தெருவுல இருக்கார்.. நானே வந்து பேசி முடிச்சி தாரன்.’ என்றவாறு அவருடைய வீட்டிற்குள் நுழைய நான் மேஸ்திரியை கூலி கொடுத்தனுப்பிவிட்டு ராஜேந்திரன் பின்னால் சென்றேன்.

அவருடைய மனைவியும் மிகவும் நல்லவர். அடுத்து வந்த சில மாதங்களில் அவர்களுடைய  குடும்பம் முழுவதுமே  எனக்கு ஒத்தாசையாக இருந்ததை மறக்கவே முடியாது.

அன்று அவர்மட்டும் உடன் வந்திருந்து அவருக்கு தெரிந்த மேஸ்திரியை முடித்து தராமல் விட்டிருந்தால் என்பாடு திண்டாட்டமாக போயிருக்கும்..

அவருடைய ஆலோசனைப்படி அன்றே இரவோடு இரவாக இரண்டு வண்டி லோடு களிமண், ஒரு லோடு மொரைக்கல் (இது சுண்ணாம்பு கல் போன்றது. தூத்துக்குடியில் பழைய வீடுகளை இடிக்கும் இடங்களில் கிடைக்கும்) ஆகியவற்றை  திரேஸ்புரத்திலிருந்து விலைக்கு வாங்கி கொண்டுவந்து இரவு சுமார் பதினோரு மணியளவில் இறக்கினேன்.

ராஜேந்திரன் பரிந்துரைத்த ஆட்கள் படு சுறுசுறுப்பாக அன்று இரவு முழுவதும் வேலை செய்து விடிவதற்குள் பழைய குடிசை வீட்டை அதே 'அலங்கோல'த்துடன் புதிதாக நிர்மாணிக்க எனக்கு மீண்டும் மூச்சு வந்தது..

புதிய களிமண் சுவர் மீது பழைய குடிசை சுவர்களை பொடியாக்கி தண்ணீரில் குழைத்து (அதற்கு மோட்டார் வைத்து தன்னுடைய கிணற்றிலிருந்து நீரை இறைத்து கொடுத்தது ராஜேந்திரந்தான்) பூச புதிய சுவார் ஒருவாறு பழைய சுவரானது!

மறுபடியும் மேயமுடியாது சார் என்று பழைய மேஸ்திரி மறுத்த அதே ஓலைகளை படு லாவகமாய் மேய்ந்து கொடுத்த புது மேஸ்திரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

யாருக்கு சார் வேணும் ஒங்க பாராட்டு என்பதுபோல் இருந்தது அவர் வேலையை முடித்ததும் என்னிடம் பேசிய பேரம்!

பண விஷயத்தை முதலில் பேசி முடிச்சிருக்க வேண்டியதுதானே என்கிறீர்களா?

அந்த நிலையில்தான் நான் அப்போது இல்லையே.. எங்கே அவர் ஏடாகூடமாக கூலி கேட்டு என்னுடைய பாங்கர் மூளையும் மனசும் (பாங்க்ல வேல செய்யறவங்க எல்லாருமே என்னைப்போலவே கொஞ்சம் (கொஞ்சம் என்ன கொஞ்சம்? நிறையவே என்பார் என் மனைவி!) கஞ்சனாகத்தான் இருப்பார்கள் என்பது எண்ணம். ஏன்னா எங்களுக்குத்தானே பணத்தோட உண்மையான அருமை தெரியும்?) பேரம் பேசி காரியத்தை கெடுத்துவிடுமோ என்று அஞ்சித்தான் ராஜேந்திரன் சாடை மாடையாய் அறிவுறுத்தியும் கூலியை பேசி முடித்துக்கொள்ளாமல் ‘வேலைய முடிச்சி தந்துருங்கய்யா நீங்க கேட்ட கூலிய கொடுத்துடறேன்.’ என்று எல்லாம் தெரிந்ததுபோல் பேசி அவரை அமர்த்தினேன்?

என்னுடைய அவசர நிலைமையை ஆரம்பத்திலேயே அவர் புரிந்துக்கொண்டுவிட்டார் போலிருக்கிறது.  அதனால்தான் பழைய வீட்டை இடித்து முடிக்க நான் செலவு செய்த தொகைக்கு பத்து மடங்கு கூலியை அதையே ரீப்ரொட்யூஸ் செய்யறதுக்கு கேட்டார்.

அவரை ஏற்பாடு செய்திருந்த ராஜேந்திரனுக்கே அது பகல் கொள்ளையாக தெரிந்தது. இருப்பினும் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்.

இரவு முழுவதும் விழித்திருக்கவேண்டியிருந்த களைப்பில் சரி தொலைஞ்சி போட்டும், இது நம்ம முட்டாள்தனத்துக்கு கூலி என்று நினைத்துக்கொண்டு அவர் கேட்ட தொகையை கொடுத்தனுப்பிவிட்டு ராஜேந்திரனைப் பார்த்தேன். ‘ஒங்க ஹெல்புக்கும் அட்வைசுக்கும் ரொம்ப நன்றி சார்.. நீங்க மட்டும் இந்த ஐடியாவ குடுக்கலைன்னா..’

அவர் சிரித்துக்கொண்டே.. ‘சார் நான் ஒன்னு சொல்லட்டுமா?’ என்றார்..

‘சொல்லுங்க சார்’ என்றேன் விளங்காமல்..

‘நீங்க இப்ப கூலியா குடுத்தீங்களே அதுக்கு மேல ஒன்னும் நீங்க கட்டப்போற வரி வந்திருக்காது சார்.. நீங்க அடுத்த ரெண்டு வருசத்துல குடுக்கப்போற வரிய மொத்தமா இவருக்கு கூலியா குடுத்துட்டீங்க.. இப்படியே முன்னபின்ன யோசிக்காம காரியங்கள செஞ்சீங்கன்னு வச்சிக்குங்க, நீங்க கட்டி முடிக்கறதுக்குள்ள...’ தான் சொல்ல வந்ததை முடிக்காமல் அவர் சிரிக்க நான் அசடு வழிந்து நின்றேன்..

இப்ப இந்த பதிவோட முதல் வரிய படிங்க..

இப்படித்தான் துவங்கியது என்னுடைய வீடு கட்டும் படலம்..

வீடு கட்டி முடிக்கும்போது முற்றும் தெரிந்த - சாரி, துறந்த - முனிவர் நிலையில் இருந்தேன் நான்..

தொடரும்..

12 comments:

sivagnanamji(#16342789) said...

சின்ன வீட்டுக்கே இவ்வளவு கஷ்டம்னா பெரிய வீட்டுக்கு எவ்ளோவ்
கஷ்டப் படனும்?
"செத்த ஆடு கால் பணம்;சுமைக்கூலி
முக்கால் பணம்"னு கேள்விப்பட்டிருக்கீங்களா?

tbr.joseph said...

வாங்க ஜி!

செத்த ஆடு கால் பணம்;சுமைக்கூலி
முக்கால் பணம்//

ஆக்சுவலா ஜி, இந்த பழமொழியத்தான் நான் உபயோகிக்கணும்னு மண்டைய ஒடச்சிக்கிட்டு முளிச்சேன்.. சுமக்கூலி முக்காப் பணங்கறது மட்டும் மனசுல வருதேயொழிய முன்பாதி ரொம்ப நேரம் யோசிச்சும் நினைவுல வரவேயில்லை.. நம்ம போட்டோக்ராஃபி மெமரிக்கு பெரிய சவாலாயிருச்சி.. சரின்னு கடைசில போனாபோறதுன்னு விட்டுட்டேன்..

அத கரெக்டா நீங்க போட்டுட்டீங்க.. இதுக்குத்தான் டெலிபதிங்கறது:)

துளசி கோபால் said...

சிஜி சொன்னது நான்வெஜிடேரியன்.

இதோ ஒரு வெஜிடேரியன் பழமொழி.

சுண்டைக்காய் காப்பணம் சுமைகூலி முக்காப்பணம்:-)

tbr.joseph said...

வாங்க துளசி,

சுண்டைக்காய் காப்பணம் சுமைகூலி முக்காப்பணம்:-)//

அட! இத இத இதத்தான் நானும் தலைய ஒடச்சிக்கிட்டு யோசிச்சேன்..

ஜி! ஒங்களத இல்ல..

துளசியோடததான்..

இது டெலிபதி நம்பர் 2!

G.Ragavan said...

நல்ல தொடக்கம். வரி போகட்டும் விடுங்க...ஆனா சாமஞ் செட்டு போட்டு வைக்க ஒரு நல்ல இடம் கிடைச்சதில்லையா...அதுக்குச் சந்தோசப் படுங்க.

வீடு கட்டுறது ஒன்னும் லேசான வேல கிடையாது. ரொம்பக் கஷ்டமான வேலை. எனக்கும் அந்தக் கஷ்டம் தெரியும். எதை எடுத்து எங்க போடலாம்னுதான் மூளை யோசிக்கும். வீடு முடிஞ்சும் கொஞ்ச நாளைக்கு அது இதுன்னு செலவு இருந்துக்கிட்டேயிருக்கும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆனா சாமஞ் செட்டு போட்டு வைக்க ஒரு நல்ல இடம் கிடைச்சதில்லையா...அதுக்குச் சந்தோசப் படுங்க.//

அதென்னவோ உண்மைதான் ராகவன். அந்த குடிசை மட்டும் இல்லேன்னா அவ்வளவுதான், அல்லாடி போயிருப்பேன்.

வீடு கட்டுறது ஒன்னும் லேசான வேல கிடையாது. ரொம்பக் கஷ்டமான வேலை.//

நல்லா அழுத்தி சொல்லுங்க..

அப்ப்ப்ப்ப்ப்பா... முதல் முதலா எனக்கு ப்ரஷன் 130 தாண்டுனது அப்பத்தான்..

ஆனா ஒன்னு ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில இப்படியொரு அனுபவம் நிச்சயம் தேவை..

Crisis Managementனா என்னங்கறத அனுபவபூர்வமா கத்துக்கலாம்..

மணியன் said...

நான் அப்பார்ட்மென்ட் வாங்கியதால் இவ்வளவு தொந்தரவு இல்லை. என்ன, இங்கிருந்து அதை பராமரிப்பதுதான் நான் படும் கஷ்டம்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

நான் அப்பார்ட்மென்ட் வாங்கியதால் இவ்வளவு தொந்தரவு இல்லை.//

அதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. நேரம் வரும்போது கூறுகிறேன்.

என்ன, இங்கிருந்து அதை பராமரிப்பதுதான் நான் படும் கஷ்டம்.//

உண்மைதான். கட்டுமான சமயத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் முதலில் பிரமிப்பாய் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி கொள்ளும்போது கிடைக்கும் சந்தோஷம் ஒரு அலாதியான அனுபவம். ஆனால் கட்டி முடித்தபிறகு அதில் தங்கவும் முடியாமல்போய் வாடகைக்கு விட்டுவிட்டு படும் அவஸ்தை இருக்கிறதே அது அதைவிட கொடுமை.

துளசி கோபால் said...

டெலிபதின்னு நீங்க குறிப்பிட்டதாலே இதையும் சொல்றேன்.

நாங்க வீடு கட்டுனதை எழுதி வச்சுருக்கேன், அப்புறம் போடறேன்னு
சொன்னேன் பாருங்க. அதோட முதல் வரியும் நீங்க எழுதி இருக்கறதும் ஒண்ணேதான்.

நானும் இப்படித்தான் ஆரம்பிச்சுருந்தேன்:-)))

உங்களது முடியட்டும். அப்புறம் என்னதைப் போடறேன்.

tbr.joseph said...

அதோட முதல் வரியும் நீங்க எழுதி இருக்கறதும் ஒண்ணேதான்.//

பாத்தீங்களா அதுக்குத்தான் இப்பல்லாம் காப்பிரைட் எடுத்து வச்சிக்கணுங்கறது:)

பழூர் கார்த்தி said...

அட இந்த டெலிபதியெல்லாம் விடுங்க சார்.. நான் இந்த வீடு கட்டும் அனுபவ பதிவுகளையெல்லாம் ரிவர்சில் அதாவது 170-லிருந்து படித்து வருகிறேன்.. போன பதிவில பின்னூட்டம் போட்டுட்டு இந்த பதிவுக்கு வந்தா.. என்னோட பின்னூட்டம்தான் இந்த பதிவோட முதல் வரியா இருக்கு !!! - வாழ்த்துக்கள் சார், ஆனா கட்டின வீட்டில் தங்க முடியாட்டா ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும் அல்லவா !!!

tbr.joseph said...

போன பதிவில பின்னூட்டம் போட்டுட்டு இந்த பதிவுக்கு வந்தா.. என்னோட பின்னூட்டம்தான் இந்த பதிவோட முதல் வரியா இருக்கு !!! - வாழ்த்துக்கள் சார்//

வாழ்த்துக்கள் ஒங்களுக்குத்தான் சொல்லணும். ஏன்னா நீங்கதானே கரெக்டா எழுதியிருக்கீங்க?

ஆனா கட்டின வீட்டில் தங்க முடியாட்டா ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும் அல்லவா !!!//

ஆமாங்க. நான் என் வீட்டுல முழுசா ஆறு மாசம் கூட இருக்கலை.. அதுக்குள்ள மதுரைக்கு மாத்திட்டாங்க. இதோ இன்னைக்கு வரைக்கும் தூத்துக்குடிக்கு திரும்ப போமுடியலை.. இனி ரிட்டையரானாத்தான்.. ஹூம்..