05 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 166

என்னுடைய இருக்கைக்கு நான் வந்து அமரவும் அவர் கோபத்துடன் என்னுடைய அறையைவிட்டு வெளியேறியதை பார்க்க முடிந்தது..

***

என்னுடைய அறிவுரையை ஏற்று அவருடைய சகோதரர்களுடன் சமரசம் செய்துக்கொள்வார் என்று நான் எதிர்பார்த்ததுக்கு நேர் மாறாக எல்லாம் நடந்தது.

அடுத்த நாள் பெரியவரின் மகன்கள் நான் கொடுத்தனுப்பிய படிவத்துடன் வராமலிருந்தபோதே பிரச்சினை வில்லங்கமாகிப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

அதுபோலவே, மூன்றாம் நாள் காலை என்னுடைய வங்கிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்திலிருந்து ஒரு இடைக்கால தடையுத்தரவு வந்து சேர்ந்தது. அதில் முன்னாள் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்திருந்த மனுவின்படி பெரியவருடைய நிறுவன கணக்குகளை நிறுத்தும்படியும், அவர் தன்னுடைய பெயரில் முதலீடு செய்திருந்த தொகையை வழக்கு நிலுவையில் இருக்கும்வரை யாருக்கும் கொடுக்கலாகாது என்றும் கூறியிருந்தது...

நான் உடனே என்னுடைய வட்டார அலுவலகத்தையும், என்னுடைய தூத்துக்குடி சட்ட லோசகரையும் கலந்துக்கொண்டு பதில் மனு தாக்கல் செய்தேன். அதில்

1. மனுதாரர் குறிப்பிட்ட நிறுவனத்தில் பாகஸ்தர் இல்லையென்பதால் வங்கி அளித்திருந்த கடன் கணக்கில் வரவு செலவை நிறுத்துவது கூடாது என்றும்

2. நீதிமன்ற உத்தரவின்படி பெரியவரின் பெயரில் முதலீடு செய்திருந்த தொகையை யாருக்கும் பைசல் செய்யாமல் இருப்பதாகவும் கூறியிருந்தேன்

எங்களுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் நிறுவன கணக்கில் மீதான இடைக்கால தடையுத்தரவை நீக்கிக்கொண்டது.

அடுத்து வந்த சில வாரங்களில் என்னால் னமட்டும் சகோதரர்களிடையே சமரசத்தை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போனேன்..

நீதிமன்றம் தடையுத்தரவை நீக்கினாலும் நான் அறிவுரைத்தபடி புதிய கணக்கை துவங்குவதற்கு பாகஸ்தர்கள் எந்தவித அக்கறையும் காட்டாததால் அந்த நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அளித்திருந்த எல்லா காசோலைகளையும் நான் வேறு வழியில்லாமல் திருப்பியனுப்பினேன்.

அதன் விளைவாக  நிறுவனத்திற்கு சரக்கு சப்ளை செய்திருந்தவர்கள், தாற்காலிக கடன் வழங்கியிருந்த கந்து வட்டிக்காரர்கள் எல்லோரும் நிறுவன அலுவலகத்தை முற்றுகை செய்ய பெரியவரின் பிள்ளைகள் இருவரும் தாற்காலிகமாக தலைமறைவாயினர் என்பதை கேள்விப்பட்டபோது வேதனையாயிருந்தது.

நிறுவனத்திற்கு தேவையான சரக்கு கொள்முதல் செய்வது நின்றுபோனதுமல்லாமல் அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியமளிக்கவும் கையில் பணம் இல்லாமல் போகவே அவர்களுடைய பதப்படுத்தும் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது.

மூத்தவர் கொடுத்த வழக்கில் முடிவு தெரியவே ஒரு வருடம் சென்றது. இறுதியில், தன்னுடைய காலத்திற்குப்பிறகு தன்னுடைய மனைவியின் பெயருக்கு முதலீட்டு தொகை முழுவதையும் மாற்றவேண்டும் என்று பெரியவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அதன் மீதான தடையுத்தரவையும் நீக்கிக்கொண்டது. இருப்பினும் சகோதரர்களுக்குள் எந்த சமரசமும் ஏற்படாததால் அதன் காலம் முடிந்தபிறகும் அந்த தொகை வங்கியிலேயே இருந்தது.

என்னுடைய வங்கியிலிருந்து கொடுத்த கடனுக்கு அசலும் கடந்த ஓராண்டுகாலமாக சேர்ந்திருந்த வட்டியையும் மூன்று மாத காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டுமென்றும் தவறினால் வழக்கு தொடரப்படும் என்று என்னுடைய வங்கி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடவே கடன் வழங்கிய காலத்தில் அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டிருந்த எல்லா பாகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினேன்.

தான் அந்நிறுவனத்தின் பாகஸ்தர் இல்லை எனவும் ஆகவே வங்கி தன் மீதும் வங்கியில் நிறுவனத்தின் கடனுக்கு ஈடாக அடகு வைத்திருந்த தன்னுடைய பெயரிலிருந்த சொத்துக்கு எதிராகவும் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்று மூத்தவர் சமர்ப்பித்திருந்த பதில் நோட்டீசை நீதிமன்றம் நிராகரித்தது.

அதற்குப்பிறகு என்னை தனிப்பட்ட முறையில் அவர் பலமுறை தொலைப்பேசி வழியாக மிரட்டியும் நான் பணியாமல் குறிப்பிட்ட மூன்று மாத காலம் வரை காத்திருந்து நிறுவனம் மற்றும் பெரியவருடைய குடும்பத்தைச் சார்ந்த பாகஸ்தர்கள் - ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் - அனைவர் மீதும் வழக்கு தொடர்ந்தோம்..

நான் அந்த கிளையிலிருந்து மாற்றலாகி செல்லும்தருவாயில் தூத்துக்குடி நீதிமன்றம் எங்களுடைய வங்கிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

வழக்கு நடந்துக்கொண்டிருந்த இரண்டாண்டு காலத்தில் நிறுவனம் அடியோடு சீரழிந்துபோனது. சரக்கு சப்ளை செய்திருந்தவர்களும், கைமாற்றாக கடன் வழங்கியிருந்தவர்களும் தலைமறைவாயிருந்த பாகஸ்தர்களை தேடிப்பிடித்து அடியாட்களை வைத்தி மிரட்டி பெரியவர் தன்னுடைய மனைவிக்கென விட்டு சென்றிருந்த குடும்ப வீட்டையும் பறித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டே அவர்களை அப்புறப்படுத்தினர்.

காலத்தின் கோலம் ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக தூத்துக்குடி நகரில் செல்வாக்குடன் வாழ்ந்திருந்த பெரியவரின் குடும்பம் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ காரணமாக சீரழிந்து போனது..

இதற்கிடையில் பெரியவரின் மனைவியும் நோய்வாய்ப்பட்டு காலமானார்.. அப்போதாவது சகோதரர்கள் மூவரும் சமரசத்துடன் பெரியவர் விட்டுச் சென்ற மூதலீட்டுத் தொகையை வங்கியிலிருந்து திரும்பப் பெற்று அதை கடனுக்காகவாவது செலுத்தியிருக்கலாம்..

சகோதரர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆடிட்டர், வழக்கறிஞர்கள் எல்லோரையும் அணுகி இந்த யோசனையை முன்வைத்தும் சகோதரர்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த முடியவில்லை. இளையவர்கள் இருவரும் அவர்களுடைய தாயார் மரணமடைந்த பிறகு ஒரு காலக்கட்டதில் இறங்கி வந்து மூத்தவருடன் சமரசம் செய்துக்கொள்ள தயாராக இருந்தனர்.

ஆனால் தனக்கு சித்தியும் அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவருடைய பேச்சைக்கேட்டுக்கொண்டு தன்னுடைய சகோதரர்கள் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றதையும் மன்னிக்க மூத்தவர் தயாராயில்லை.

வழக்கை மேல் முறையீட்டிற்கு மதுரை நீதிமன்றத்திற்கும் அங்கும் என்னுடைய வங்கிக்கு சாதகமாக தீர்ப்பு வரவே மீண்டும் சென்னை நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்று இறுதியில் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு அங்கும் வங்கிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோது கடனுக்கு ஈடாக பாகஸ்தர்கள் அடகு வைத்திருந்த நான்கு வீடுகளும், நிறுவனத்தின் தொழிற்பட்டறை, அலுவலகம் எல்லாவற்றையும் ஜப்தி செய்தும் கடனை முழுவதுமாக வசூலிக்க முடியாமல் மூன்று ஆண் பாகஸ்தர்களையும் கைது செய்ய வேண்டுமென்று வங்கி விண்ணப்பித்ததை கேள்விப்பட்டபோது நான் சென்னையில் என்னுடைய சென்னை வட்டார அலுவலகத்தில் இருந்தேன்.

இதற்கிடையில் பெரியவருடைய பெயரில் வங்கியில் நான் இருந்த சமயத்தில் இடப்பட்டிருந்த தொகையை யாரும் கேட்டு வராததால் வங்கியின் நியதிப்படி அது யாரும் கோராத தொகையாக கருதப்பட்டு (unclaimed deposits) தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

நான் இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை நன்கு அறிந்திருந்ததால் பெரியவரின் பெயரில் வங்கியில் இருக்கும் தொகை பாகஸ்தர்களுக்கு சேர வேண்டிய தொகை எனவும் ஆகவே அவர்கள் பெயரிலுள்ள சொத்தை ஜப்தி செய்ததுபோக மீதமுள்ள கடன் தொகைக்காகிலும் இந்த பணத்தை வரவு வைத்துக்கொண்டு அவர்களை கைது செய்வதை தவிர்க்கலாம் எனவும் எனக்கு மேலதிகாரியாக இருந்த என்னுடைய வட்டார மேலாளர் வழியாக பரிந்துரை செய்ய அதனை ஏற்றுக்கொண்டு என்னுடைய தலைமை அலுவலகம் சம்பந்தப்பட்ட பாகஸ்தர்களுக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியது..

இத்தனைக் காலம் சமரசத்துக்கு வர மறுத்த மூன்று சகோதரர்களும் கைது வாரண்டுக்கு அஞ்சி வேறு வழியில்லாமல் அவர்களுடைய ஆடிட்டர் வழியாக சமரசத்துக்கு வந்து மூவரும் அவருடைய சகோதரிகளுமாக எல்லோரும் சேர்ந்து விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்க வங்கி அதனை ஏற்று பெரியவர் பெயரிலிருந்த தொகையிலிருந்து வங்கிக்கு வரவேண்டிய கடனுக்கு வரவு வைத்துக்கொண்டு மீதமிருந்த சொற்ப தொகையை அவர்களுக்கு திருப்பியளித்தது..

என்னவொரு முட்டாள்தனம் பாருங்கள்...

காலங்கடந்து தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் இழந்து நின்றபோதுதான் அவர்களுக்கு ஞானோதயம் வந்திருந்தது.

***

ஒன்றன்பின் ஒன்றாக வந்த இத்தகைய பிரச்சினைகள் என்னுடைய வீடு கட்டும் பணியை பெரிதாகவே பாதித்திருந்தது..

என்னுடைய வங்கியிலிருந்து கடனாக நான் விண்ணப்பித்திருந்த தொகை வந்து சேர்ந்ததுமே ஆடி மாதம் முதல் நாள் வீட்டின் அஸ்திவார பணியை துவக்கினேன்.

அந்த நேரத்தில்தான் என்னுடைய மைத்துனர் பெயரில் நிலம் வாங்கிய வில்லங்கமும் நடந்துக்கொண்டிருந்தது..

ஆகவே என்னுடைய அஸ்திவார பணியை துவக்கிய நாள் அன்று என்னுடைய மாமனார், மாமியார் மட்டுமே எங்களுடன் கலந்துக்கொண்டனர்.

என்னுடைய மைத்துனர் ஊரில் இல்லாததாலும் அவருடைய மாமனார் வீட்டில் அவருடைய மனைவி இருந்ததாலும் என்னுடைய மனைவி அவரை அந்த விழாவுக்கு அழைக்க விரும்பவில்லை..

நான் பணியை துவக்கிய அதிர்ஷ்டமோ என்னவோ முந்தைய தினம் வரை அடித்து கொளுத்திய கதிரவன் அன்றைக்கு பார்த்து மேகங்களுக்குள் மறைந்துக்கொள்ள நாங்க பூமி பூஜையை துவக்கவும் மழைதுவங்கவும் மிகச் சரியாக இருந்தது..

அதைப்பார்த்ததும். ‘சார்  இது ரொம்ப நல்ல சகுணம். நீங்க வேணும்னா பாருங்க, ஒங்க வீட்ட எந்த தடங்கலும் இல்லாம  கட்டி முடிக்க போறீங்க.’ என்றார் கட்டட வேலையை மேற்பார்வையிட நான் அமர்த்தியிருந்த கட்டட பொறியாளர்.

அவர் வாய் முகூர்த்தம், எந்தவித பெரிய சிக்கலும் இல்லாமல் சரியாக நான்கு மாதத்தில் என்னுடைய கட்டட வேலை முடிந்தது..

பெரிய சிக்கல் இல்லைதான். ஆனால் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கத்தான் செய்தது..

சில விசித்திரமானவை..

இந்த கால கட்டத்தில் நான் பல அரசாங்க இலாக்காவினரை சந்திக்க வேண்டியிருந்தது..

அதில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை நாளை முதல் சில தினங்களுக்கு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

அத்துடன் என்னுடைய தூத்துக்குடி அனுபவங்கள் நிறைவுபெறும்..

தொடரும்..  

10 comments:

sivagnanamji(#16342789) said...

"கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்"
-பெரியவர் குடும்பத்தில் நடந்தது

இனி speed money விபரங்களா? ஜமாய்ங்க1

துளசி கோபால் said...

உங்க தூத்துக்குடி அனுபவங்கள்தான் எத்தனை விசித்திரம்!

எல்லா சொத்தும் வீம்பாக இருந்து அவுங்களே அழிச்சுக்கிட்டாங்க இல்லையா?

வீடு கட்டுனதுலே இருந்த சிக்கல்களையும் சொல்லி இருக்கலாமுல்லெ.

tbr.joseph said...

வாங்க ஜி!

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்//

சரியா சொன்னீங்க. இந்த வெட்டி ஈகோ பிடிச்சி அலையறவங்க எல்லாருமே ஒரு காலகட்டத்துல இறங்கிவந்துதானே ஆகணும்..

tbr.joseph said...

வாங்க துளசி,

எல்லா சொத்தும் வீம்பாக இருந்து அவுங்களே அழிச்சுக்கிட்டாங்க இல்லையா?//

ஆமாங்க.. கடன் வாங்குனது பாதின்னா வட்டி மீதி.. பெரியவரோட வைப்பு நிதிய முதல்லயே வாங்கி கடன்ல அடைச்சிருந்தா அவங்க சொத்துல பாதிக்கு மேல காப்பாத்தியிருக்கலாம்..

எத்தனை செல்வாக்கோட இருந்த குடும்பம்னு நினைக்கீங்க.. இப்ப அதுல ஒருத்தர் ஐஸ் தயாரிக்கற ஒரு சின்ன பட்டறைய வச்சி நடத்திக்கிட்டிருக்கறத பார்த்தா மனசு கலங்கி போயிரும்..

என்னோட அனுபவத்துல இந்த மாதிரி எத்தனையோ குடும்பங்கள பாத்திருக்கேன்..

மணியன் said...

இதுபோல பொருளாதார முடிவுகளை விட ஆறாக்கோப முடிவுகள் எல்லோருக்கும் சிலசமயங்களில் ஏற்படுவதுதான். ஆனால் stakes அதிகமாக இருக்கும் போது நிதானத்திற்கு வந்திருக்கலாம். இதில் கூட இருப்பவர்களின் தூபமும் பாதி காரணம்.

G.Ragavan said...

நான் நினைக்கிறேன்...அந்தப் பெரியவரின் கடின உழைப்பில் உண்டான பணத்தை அனுபவிக்கும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்று. நல்லுழைப்பின் காசு அவர்கள் தகுதியின்மையால் இறைவன் தடுத்து விட்டாரோ.....பிள்ளையாகப் பிறந்ததால் மட்டும் கொஞ்சம் தொகை...அதுவும் கடைசியில்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

ஆனால் stakes அதிகமாக இருக்கும் போது நிதானத்திற்கு வந்திருக்கலாம்.//

இதுக்காக நான் எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறேன் தெரியுமா? இதை பின்னோக்கி பார்க்கும்போது நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப்போனதே என்பதை நினைத்தால் இப்போதும் வலிக்கிறது.. இதில் அவர்கள் இழந்த சொத்தின் மதிப்பை நான் வெளியிட்டால் நம்பமாட்டீர்கள்.. அத்தனை பெரிய இழப்பு அவர்களுடையது..

அக்காலத்திலேயே வரவேற்பறை முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டு, வெனிஷியன் ப்ளைண்டுகளால் ஜன்னல்கள் எல்லாம் மறைக்கப்பட்டு.. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வெறும் வீம்புக்காக இழந்தவர்களை என்னவென்று சொல்வது?

இதில் கூட இருப்பவர்களின் தூபமும் பாதி காரணம். //

நிச்சயமாக. இத்தகைய சில புல்லுருவிகள்தான் இதற்கு காரணம்..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அந்தப் பெரியவரின் கடின உழைப்பில் உண்டான பணத்தை அனுபவிக்கும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை //

அவர்களுடை அப்போதைய, இப்போதைய வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்தால் அன்று அவர்கள் ஆடிய ஆட்டத்துக்கு நீங்கள் கூறியதைப் போல ஆண்டவர் அவர்களுக்கு அந்த பாத்தியதையை அளிக்கவில்லையென்றே நினைக்க தோன்றுகிறது..

செங்கமலம் said...

அன்பும் அடக்கமும் இருக்கும் இடத்தில் தான் மகாலட்சுமி நிலைத்து இருப்பாள். இது பெறியோர் வாக்கு.

tbr.joseph said...

வாங்க செங்கமலம்,

அன்பும் அடக்கமும் இருக்கும் இடத்தில் தான் மகாலட்சுமி நிலைத்து இருப்பாள்.//

சரியா சொன்னீங்க.