03 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 164

அவர்கள் இருவரும் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சிறிது நேரம் குழம்பிப் போய் அமர்ந்திருந்தனர்.

பெரியவருடைய மகனை பார்க்க ஒரு விதத்தில் பாவமாகத்தான் இருந்தது. அதுவரை நிர்வாக பாகஸ்தராகவிருந்த பெரியவருடைய மூத்த தாரத்து மகன்தான் நிறுவனத்தின் எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்திவந்திருக்கிறார். நிர்வாக சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளையும்  அவரே தன்னிச்சையாக எடுத்து வந்திருந்தார் என்பதையும் நான் அறிவேன்.

வங்கிக்கும் அவர் வந்துதான் நான் பார்த்திருக்கிறேன். எந்த வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து எப்போது L.C. (Letter of Credit) வரவேண்டும். ஒவ்வொரு L.C. யின் முடிவு தேதி எப்போது, ஒவ்வொரு L.C. க்கும் எடுத்த Packing Credit Loan  எவ்வளவு,  எப்போது சரக்கை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதெல்லாம் வங்கி மேலாளரான எனக்கு தெரியுமோ இல்லையோ அவருக்கு எல்லாம் அத்துப்படி.

அவருடைய நிறுவனத்திற்கென்று சொந்தமாக மீன்படகுகள் ஏதும் இல்லையெனினும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படகுகள் கட்டுவதற்கு, அவற்றை பராமரிக்க கும் செலவினங்களுக்கென கடன் கொடுத்து வைத்திருப்பார். வட்டி ஏதும் வாங்க மாட்டார். ஆனால் அம்மீனவர்கள் அவர்களுடைய பிடிப்பு அவ்வளவையும் அவருடைய நிறுவனத்திற்குமட்டுமே கொடுக்க வேண்டும். நியாயமான சந்தை விலைக்குத்தான். அதில் எந்தவித தில்லுமுல்லும் இருக்காது.

அவருடைய தனி ஆதிக்கத்தில் நிறுவனம் அமோகமாக நடந்துக்கொண்டிருந்ததால் சகோதரர்கள் இருவரும் நிறுவனத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ அல்லது வர்த்தகத்தைப் பற்றியோ அதிகம் தெரிந்து வைத்திருக்கவில்லை.

அதனால்தான் அவர்கள் முழுவதும் நம்பியிருந்த சகோதரரே கைவிட்டுவிட்டதும் என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப் போய்விட்டனர்போலும் என்று நினைத்தேன்.

விவரம் தெரியாத வழக்கறிஞர் வேறு. பெரியவரின் தயவில் படித்து பட்டம் பெற்று அவருடைய நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் என்ற பதவியுடன் நிறுவனத்தில் முதலீடு ஒன்றும் செய்யாத ஒர்க்கிங் பார்ட்னர் என்ற அந்தஸ்த்தையும் பெரியவர் அவருக்கு கொடுத்து வைத்திருந்தார் என்பதை நான் கிளையில் சேர்ந்த சில வாரங்களிலேயே தெரிந்து வைத்திருந்தேன்.

அவர் பேருக்குத்தான் சட்ட ஆலோசகர். நிறுவனத்தின் சட்ட பிரச்சினைகளை கவனிக்க வேறொரு நல்ல வழக்கறிஞரைத்தான் ஆலோசிப்பார் நிர்வாக பாகஸ்தர் என்பதையும் கேள்விப்பட்டிருந்தேன்.

ஆனால் அவருக்கு பந்தாவுக்கு ஒன்றும் குறைவில்லை. நிச்சயம் அவர் இங்கு புறப்பட்டு வருவதற்கு முன் நான் எடுத்த முடிவுக்கெதிராக ஏதாவது கூறியிருப்பார் என்று நான் ஊகித்திருந்தேன். இருப்பினும் இந்த நேரத்தில் அதைப் பெரிதுபடுத்துவதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்தேன்.

ஏற்கனவே குழம்பிப்போய் அமர்ந்திருந்த அவரிடம் ‘சார் இன்னொரு விஷயம்..’என்றேன்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியாததுபோல் பார்த்தார்.

‘நீங்க வேற பேங்குக்கு போகணும்னு நெனச்சாலும் அதுலயும் கொஞ்சல் சிக்கல் இருக்குன்னு சொல்ல வந்தேன்.’ என்றேன்.

‘நாங்க அப்படி போறதா இல்ல சார். அப்படியே நினைச்சாலும் நம்ம ஊர்லருக்கற ஏறக்குறைய எல்லா பாங்க்லயும் அப்பா வச்சிருந்த டெப்பாசிட்ட ஒங்க பேங்குக்கு மாத்துனதுக்கப்புறம் எங்கள எந்த பேங்க்லசார் சீந்தப் போறாங்க? அதிருக்கட்டும் சார், நீங்க சொல்ல வந்த விஷயத்த சொல்லுங்க.’

காலையில் நிர்வாக பாகஸ்தரின் தொலைப்பேசி வந்தவுடன் நான் சேகரித்து குறித்து வைத்திருந்ததை எடுத்து ஒருமுறை பார்த்தேன். ‘சார் ஒங்க கணக்குல நீங்க கலெக்ஷனுக்கு போட்டுரக்கற எக்ஸ்போர்ட் பில்ஸ், அப்புறம் லோக்கல் கலெக்ஷன்ல போட்டுருக்கற காசோலைகள், வங்கி டிராஃப்டுகள் எல்லாம் கலெக்ஷனாயி வரும்போது ஒங்களோட ஓவர்டிராஃப்டுல வரவு வைக்க முடியாது.’

சட்டென்று அவருடைய முகம் கோபத்தில் சிவந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். ‘ஏன் அப்படி சொல்றீங்க?’ என்றார்.

நான் பொறுமையுடன் விளக்கினேன். ‘சார் நீங்க கலெக்ஷனுக்கு போட்டுருக்கற செக்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி ஒங்க கணக்குல வரவு வைச்சா ஒங்க கணக்குலருக்கற பாலன்ஸ் பாதியா குறையறதுக்கு வாய்ப்பிருக்கு.’

அவர் குறுக்கிட்டு, ‘அது நல்லதுதானே சார்.’ என்றார்.

நான் அவருடைய வழக்கறிஞரைப் பார்த்தேன். அவர் புரிந்துக்கொண்டு, ‘அது இல்லடா.. ஒங்கண்ண ரிசைன் செஞ்சிட்டேன்னு எழுதி குடுத்ததுக்கப்புறம் நாம இஷ்யூ செஞ்சிருக்கற செக்ஸ இவர் இப்போதைக்கு நம்ம ஓவர்டிராஃப்டுல பாஸ் பண்ண முடியாதில்லையா? நாம போட்டுருக்கற பில், செக், டிராஃப்ட மட்டும் கணக்குல வரவு வச்சிட்டா அப்புறம் நாம எப்படி செக் குடுத்தவங்களுக்கு பணத்த குடுக்கறது? என்ன சார் நான் சொல்றது சரிதானே?’ என்றார்.

‘ஓ.. அப்படியா..’ என்ற பாகஸ்தர் ‘அதுக்கு என்ன பண்ணலாம் சார்.. நீங்களே சொல்லுங்களேன்..’ என்றார்.

‘முதல்ல நான் சொன்னா மாதிரி ஒங்கண்ணன்கிட்ட சமாதானம் செய்யப் பாருங்க. அப்படி செய்ய முடியலைன்னா ஒங்க பார்ட்னர்ஷிப்லருந்து அவர் விலகினாலும் இப்ப இருக்கற முழு தொகைக்கும் மீதி பார்ட்னர்ஸ் பொறுப்பேத்துக்கறதா எல்லாரும் கைப்பட எழுதிகுடுங்க. அப்புறம் ஒங்க ஃபர்ம் பேர்ல புதுசா ஒரு கணக்க துவங்கி அதுல இப்பருக்கற கணக்குல டெப்பாசிட் செஞ்சிருக்கற இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் எல்லாத்தையும் வரவு வைக்கணும்னும் நீங்க இப்பருக்கற கணக்குலருந்து இஷ்யூ பண்ண செக்ஸ்ல முக்கியமானவங்களுக்கு குடுத்துருக்கற செக்ஸ் மட்டுமாவது புது கணக்குல பாஸ் பண்ணணும்னும் எழுதி குடுங்க.’ என்றேன்.

என்னுடைய உத்தியை ஆமோதிப்பதுபோல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள அப்படியே செய்வதென தீர்மானிக்கவே என்னுடைய வங்கியில் புதியதாய் ஒரு வர்த்தக கணக்கு துவங்குவதற்கான படிவங்களை என்னுடைய ஊழியர் ஒருவரைக் கொணரச் செய்து எங்கெங்கு பாகஸ்தர்கள் ஒப்பிடவேண்டும் என்று காண்பித்தேன்.

அவர்கள் நான் கொடுத்த உறையைப் பெற்றுக்கொண்டு எதையோ சொல்ல வந்து தயங்குவதைப்போல் தெரியவே நான், ‘என்ன சார் எதையோ சொல்ல வந்து தயங்குவது போல தெரியுது.. எதாருந்தாலும் சொல்லுங்க.’ என்றேன்.

பெரியவருடைய மகன் தன்னுடன் வந்திருந்த வழக்கறிஞரைப் பார்த்தார். அவர், ‘வேறொன்னுமில்ல சார்.. பெரியவர் பேர்லருக்கற டெப்பாசிட்டோட டீடெய்ல்ஸ் தந்தீங்கன்னா அத எப்படி யூஸ் பண்ணலாம்னு வீட்ல டிஸ்கஸ் பண்ணலாம்னு...’ என்று தயங்கினார்.

அது ஒரு சிக்கலான விஷயமாயிற்றே அதை எப்படி இவர்களுக்கு விளக்குவதென யோசித்தேன். அது பெரியவர் பெயரில் இருந்தாலும் அதைப்பற்றி தன்னுடைய குடும்பத்திலிருந்த எவருக்குமே தெரியாமல் அவர் மறைத்ததன் பின்னணியே அந்த தொகை முழுவதும் தனக்குப் பின்னால தன்னுடைய மனைவிக்கு செல்லவேண்டும் என்ற நினைப்பில்தான் என்று எனக்கு தெரிந்திருந்தது.

அவருடைய அந்த விருப்பதிற்கு மாறாக அதை எப்படி இவர்களிடம் கூறுவதென யோசித்தேன்.

ஆகவே, ‘இப்ப எதுக்கு சார் கேக்கறீங்க? அத அப்புறம் பாக்கலாமே?’ என்றேன் தயக்கத்துடன்..

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மீண்டும் பார்த்துக்கொண்டனர். பிறகு, ‘எதுக்கு சார் தயங்கறீங்க? அது எப்படியிருந்தாலும் அவரோட பிள்ளைங்க இவங்கள சேர வேண்டிய தொகைதானே?’ என்றார் வழக்கறிஞர்.

இனியும் இவர்களிடமிருந்து மறைப்பதில் பயனில்லை என்று நினைத்து, ‘நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. அந்த தொகை முழுசையும் தன்னுடைய சாவுக்கப்புறம் ஒங்க தாயாருக்குத்தான்னு எழுதி குடுத்துருக்கார்..’ என்றேன்..

பெரியவருடைய மகன் நம்பமுடியாததுபோல் என்னைப் பார்த்தார். ‘என்ன சார் சொல்றீங்க? அப்பா கைப்பட எழுதிக்குடுத்துருக்காரா? அவரால எழுதவே முடியாதே சார்? அவர் எப்படி... என்ன மாமா நீங்க என்ன நினைக்கறேள்.. அப்பாவுருக்கற கை நடுக்கத்துல எழுதி குடுத்துருப்பாருன்னு... என்னால நம்ப முடியலை..’

அவருடன் வந்திருந்தவரும் என்னை நம்பமுடியாமல் பார்த்தார். ‘சார்.. பெரியவர் எழுதிகுடுத்த லெட்டர நாங்க பாக்கலாமா?’

நான் இருவரையும் மாறி, மாறி பார்த்தேன். ‘என்ன சார் நான் சொல்றத நீங்க நம்பாததுபோல தெரியுது? எழுதி குடுத்துருக்காருன்னா அவரேதான் எழுதணுமா என்ன? அவர் கையெழுத்து போட்டு குடுத்து அனுப்பன பேப்பர்ல நாந்தான் அவர் சொன்னா மாதிரி டைப் செஞ்சேன்..’ என்றேன்..

நான் உண்மைக்கு புறம்பாக எதையாவது சொல்லி அது பின்னால் உண்மையில்லை என்பது தெரியவந்தால் வீண் பிரச்சினை என்றுதான் என்ன நடந்ததோ அப்படியே சொல்லிவைத்தேன்.

பெரியவருடைய மகனுடைய நிம்மதி தெரிந்தது. ‘அப்போ அப்பா அப்படி எழுதனது அம்மாவுக்கு தெரியாதுல்ல இல்லையா சார்?’ என்றார்.

அவருடைய கேள்வியின் நோக்கம் புரிந்தது எனக்கு. ஆகவே முன் ஜாக்கிரதையாக, ‘அது எனக்கு தெரியலை சார். சொல்லியிருப்பார்னுதான் நினைக்கேன்.  நீங்க வேணும்னா ஒங்கம்மாக்கிட்ட கேட்டுக்கங்களேன்..’ என்றேன்.

அவர் தன்னருகில் அமர்ந்திருந்த வழக்கறிஞரைப் பார்த்தார். அவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே இதைக் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள் என்பது அவருடைய அடுத்த கேள்வியிலிருந்தே தெரிந்தது.

தொடரும்..

6 comments:

துளசி கோபால் said...

அதெப்படிங்க, 'அம்மாவுக்குத் தெரியாம' பிள்ளைகள் பணத்தை எடுத்துக்க நினைக்குறாங்க?

என்னமோ போங்க.பணத்துக்கு முன்னலே எதுவுமே நிக்காது போல (-:

tbr.joseph said...

வாங்க துளசி,

அதெப்படிங்க, 'அம்மாவுக்குத் தெரியாம' பிள்ளைகள் பணத்தை எடுத்துக்க நினைக்குறாங்க?//

நீங்க வேறங்க.. அந்த பெரியவர் இறக்க காரணமா இருந்ததே இந்த பண விஷயம்தானே..


பணத்துக்கு முன்னலே எதுவுமே நிக்காது போல//

அதிலென்ன சந்தேகம்..

ஜி.ரா அவரோட பின்னூட்டத்துல சொன்னாப்பல பணம் ஜாஸ்தியா இருந்தாலே உறவுகள் பாரமாத்தான் தெரியும்..

sivagnanamji(#16342789) said...

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் நில்லாதடி-குதம்பாய்
காசு முன் நில்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும்
காசுக்குப் பின்னாலே-குதம்பாய்
காசுக்குப் பின்னாலே"
"பராசக்தி"(பழையது)படப் பாடல்

tbr.joseph said...

வாங்க ஜி!

சார் கலக்குறீங்க..

ஒங்க பின்னூட்டத்துக்காகவே பதிவுகள் எழுதற காலம் வரப்போவுதுன்னு நினைக்கிறேன்..

சமயத்துக்கு ஏத்தா மாதிரி எடுத்து விடறீங்க பாருங்க.. சூப்பர்..

G.Ragavan said...

அப்பாடியோவ்.......இந்த மாதிரி விஷயங்களை ஒருத்தருக்கு எடுத்துச் சொல்றதே எவ்வளவு கஷ்ட்டம்....ம்ம்ம்...அறத்துன்பங்குறது இதுதான்.

பணம் படுத்தும் பாடு அப்பப்பா!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இந்த மாதிரி விஷயங்களை ஒருத்தருக்கு எடுத்துச் சொல்றதே எவ்வளவு கஷ்ட்டம்//

ஆமாங்க.. ஒரு மேலாளருடைய வேலையில இந்த மாதிரி வேலைகள்தான் மிகவும் சிரமமாக தெரியும்..

சில சமயங்கள்ல இந்த மாதிரி ஆளுங்கக்கிட்ட பேசி முடிச்சதும் ஏண்டா இந்த பொழப்புன்னும் தோனும்..