31 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 180

என்னுடைய நிலத்திலிருந்த குடிசைக்கு முனிசிபல் கதவு எண் இருந்ததால் அதற்கு தேவையான, அதாவது ஒரேயொரு மின் விளக்குக்கான மின்சார இணைப்பு இருந்தது.

அது என்னுடைய புதிய வீட்டின் கட்டுமான வேலைக்கு தேவையான கிணற்று நீரை இரைத்துப் பாய்ச்ச போதுமானதாக இருக்கவில்லை. ஆகவே அதன் விசையைக் கூட்டுவதற்காக மின்சார கழக அலுவலகத்திற்கு மனு செய்திருந்தேன். கூடுதலாக அடைக்க வேண்டியிருந்த கட்டணத்தையும் செலுத்தியிருந்தேன். ‘சார் ஒங்க அப்ளிகேஷன் திருநெல்வேலி வட்டார ஆஃபீசுக்கு போய் வரணும். அதனால எப்படியும் இரண்டு வாரம் ஆவும். அதுக்கப்புறம் வந்து பாருங்க.’ என்று சம்பந்தப்பட்ட அலுவலர் கூற நான் மேலும் ஒருவாரம் கழித்து சென்று பார்த்தேன்.

நல்லவேளையாக என்னுடைய விண்ணப்பத்திற்கு வட்டார அலுவலகத்திலிருந்து அனுமதி வந்திருந்தது.

‘அதான் சாங்ஷன் வந்து ஒரு வாரம் ஆயிருச்சே சார். அப்புறம் ஏங்க இன்னும் ஒர்க்கர்ஸ் ஸ்பாட்டுக்கு வரலே.’ என்றேன்.

என்னுடைய நிலம் இருந்த பகுதிக்கு பொறுப்பாயிருந்த அலுவலர் தயக்கத்துடன், ‘சார் நீங்க எதுக்கும் ஏ.யி.ய (துணை பொறியாளர்) போய் பாருங்க.’ என்றார்.

சரி இதுலயும் வில்லங்கம் இருக்கு போலருக்கு என்ற நினைப்புடன் ஏ.யி அறையை நோக்கி சென்றேன். வாயிலில் அமர்ந்திருந்த பணியாளர் ஒருவர் தடுத்தி நிறுத்தி, ‘சார் இப்ப ஐயாவ பாக்க முடியாது. முக்கியமான மீட்டிங் நடக்குது. இங்கன இருங்க.பத்து நிமிசமாவுது ஆவும்’ என்று அருகில் இருந்த பார்வையாளர்கள் இருக்கையைக் காட்ட நான் வேறு வழியில்லாமல் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் வாயிலிலிருந்த பணியாளரும் எழுந்து செல்ல நான் என் தலைவிதியை நொந்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

பத்து நிமிடம் அரை மணி நேரமாகியும் யாரும் அறையிலிருந்து வெளியே வராததால் நான் பொறுமையிழந்து அறைக்கதவை லேசாக தள்ளினேன். அறையில் துணை பொறியாளர் மேசையில் அமர்ந்திருக்க எதிரே ஒரேயொரு அலுவலர் அமர்ந்திருந்தார். அவர்களும் அலுவல் சம்பந்தமாக உரையாடிக்கொண்டிருப்பதாக தெரியவில்லை.

சட்டென்று நிமிர்ந்து என்னை பார்த்த பொறியாளர், ‘யார் சார் நீங்க? பேசிக்கிட்டிருக்கோம்லே? நீங்க பாட்டுக்கு உள்ளார வாரீங்க?’ என்றார் எரிச்சலுடன்.

நான் வந்திருந்த காரணத்தை சுருக்கமாக கூற அவர் நிதானமாக, ‘அதனால? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார். ஊர்லருக்கற ஸ்ட் ரீட் லைட்ஸ் விஷயமா பேசிக்கிட்டிருக்கோம். எப்படியும் இன்னும் அரை மணி நேரமாவது ஆவும். ஒன்னும் வெய்ட் பண்ணுங்க, இல்லன்னா போய்ட்டு பிறகு வாங்க.’ என்று கூறிவிட்டு நான் அந்த அறையில் இல்லாதது போல் தன் எதிரிலிருந்தவரிடம் உரையாடலைத் தொடர்ந்தார்.’

அதிகம் போனால் அவர் என்னை விட ஒன்றோ அல்லது இரண்டு வயது பெரியவராயிருப்பார். அதெப்படி இந்த இளம் வயதிலேயே இந்த அரசு அதிகாரிகளுக்கு ஆணவம் வந்துவிடுகிறது? அரசு அலுவலர்களுக்கே இத்தகைய ஒரு தனி குணம் இருப்பதை நான் பல நேரங்களிலும் பார்த்திருக்கிறேன்.

அவர்களில் பலருக்கும் ஏதோ போனால் போகிறதென்று அலுவலகத்திற்கு வந்து செல்லும் ஒரு மெத்தன மனப்பாண்மை இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அலுவலக நேரத்தில் தங்களுடைய சொந்த வேலையை பார்ப்பது, தொலைப்பேசியில் நேரம் போவதே தெரியாமல் உரையாடிக்கொண்டிருப்பது, சக ஊழியர்களுடன் அரட்டையடிப்பது இதுதான் இவர்களுக்கு முக்கியம்.

அரசு நியதிகளுக்குட்பட்டு செய்துக்கொடுக்க வேண்டிய அலுவல்களுக்கும் ‘ஏதாவது போட்டுக் கொடுத்தால்தாங்க முடியும்’ என்று கூசாமல் கேட்பதில் ஆண்கள் என்ன பெண் அலுவலர்களும் மன்னர்கள்..

நம்முடைய வேலை முடியவேண்டுமே என்று நம்மில் பலரும் பல்லைக் கடித்துக்கொண்டு அவர்களுடைய அளும்பைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாளில் முடியவேண்டிய விஷயத்துக்கும் வாரக் கணக்காக, ஏன் மாதக் கணக்கிலும்கூட அலைகிறோம்.

‘இந்த சின்ன வேலையகூட முடிக்க முடியல. இதுல வீடு கட்டுறேன்னு இறங்கிட்டீங்க.’ இது நம்ம வீட்டாளுங்களோட அளும்பு.

அவர்களிருவரும் தங்களுடைய உரையாடலை விட்ட இடத்திலிருந்து துவங்க நான் சில நொடிகள் காத்திருந்துவிட்டு என்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு வெளியேற அப்போதுதான் வெளியே போயிருந்த அவருடைய பணியாளர் உள்ளே நுழைந்தார். நான் அறையிலிருந்து வெளியேறியதைப் பார்த்தவர், ‘சார்.. என்ன நீங்க? நாந்தான் இருங்கன்னு சொன்னேன்லே.. நீங்க பாட்டுக்கு உள்ளுக்கு போய்ட்டீங்க? அவரே ஒரு முசுடு. நீங்க பாட்டுக்கு உள்ளுக்கு போய்ட்டீங்க.. அவர் என்னையெல்ல ஏசுவாரு.. என்ன சார் நீங்க?’ என்றார் சலிப்புடன்..

என் வேலை கெட்டுப் போய்விடுமே என்ற நினைப்பில் பொங்கி வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அறைக்கு வெளியிலிருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலுவலர் வெளியேறினார். நான் அறைவாசலில் அமர்ந்திருந்த பணியாளரைப் பார்த்தேன். ‘என்னங்க இப்பவாவது ஒங்க ஐயா ஃப்ரீயாய்ட்டாரா?’ என்றேன்.

‘ஐயா கூப்டுவார் சார். நானா உள்ள போனேன்னு வச்சிக்கிருங்க. அதுக்கு வேற ஏச்சு விளும்..’

என்னுடைய அலுவலகத்தில் அரை மணியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு வந்த நான் பொறுமையிழக்கலானேன். ‘ஏங்க நானும் ஆஃபீசுக்கு போகனுங்க.. போய் பாருங்க. ஏதாச்சும் ஏசினார்னா நான் பாத்துக்கறேன்.’

அவர் சிரித்தார். ‘நீங்க வேற சார். என்னைய ஏசுனப்புறம் நீங்க என்ன பாத்துக்கறது?’ ஆனாலும் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டு அடுத்த நொடியே திரும்பி வந்தார். ‘போங்க சார்.’

அறைக்குள் நுழைந்த என்னை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் முன்னாலிருந்த கோப்பைப் பார்த்தவாறே ‘சொல்லுங்க சார்.’ என்றவரையே பார்த்தேன். இவருடைய கழுத்தை நெரித்தாலென்ன என்று தோன்றியது.

வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் நான் வந்த விஷயத்தை கூறினேன். நான் கூறியது அவருடைய காதில் வாங்கிக்கொண்டதற்கான எந்த அறிகுறியும் அவருடைய முகத்தில் தெரியவில்லை.

‘சார் ஒங்க நிலத்துல புது வீட்ட கட்டிக்கிட்டிருக்கீங்களோ?’

‘அப்படி சொல்லித்தான சார் கனெக்ஷன் அப்க்ரேட் கேட்டிருக்கேன்?’

நான் எத்தனை முயன்றும் என்னுடைய உள்ளத்திலிருந்த கோபம் குரலில் தெரியவே அவர் கோபத்துடன், ‘சார் எடக்கு மடக்கா பேசாதீங்க. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.’

‘போடா நீயும் ஒன் கோபமும்.. என் வேல மட்டும் முடியட்டும் வச்சிக்கறேன்.’ இத வெளியில் சொல்ல ஆசைதான்.. ஆனால் வந்த வேலை கெட்டுவிடுமே..

‘ஆமாங்க.’ என்றேன் பொறுமையுடன்..

அவர் புரியாததுபோல் ‘என்ன சார்?’ என்றார்.

என் கோபம் தலைக்கேறியது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.

‘புது வீடுதான் கட்டிக்கிட்டிருக்கேன்னேன்.’

ஓ அப்படியா, நெனச்சேன் என்பதுபோல் தலையை ஆட்டினார்.
அதான் என் அப்ளிக்கேஷன்லயே போட்டிருக்கடா என்றேன் மனதுக்குள்..

‘அப்ப வீட்ட கட்டி முடிச்சி புதுசா நம்பர எடுத்துக்கிட்டு வாங்க. அப்கிரேட் பண்ணி தாரன். வீடு கட்டற நேரத்துல டெம்பரவரி லைந்தான் தரமுடியும்.’

இதென்ன அடாவடித்தனமாருக்கு என்று நினைத்தேன். பிறகெதற்கு வைப்புத் தொகையாக இரண்டாயிரத்தை வசூலித்தார்கள்? மனதில் நினைத்ததை அவரிடமே கேட்டேன்.

‘சார் ஒங்க அப்ளிக்கேஷன்ல குடுத்துருக்கற நம்பர பாத்துட்டு எங்க எஸ்.இ ஆஃபீஸ்ல அப்க்ரேட் சாங்ஷன் குடுத்துருப்பாங்க. அது பழயை வீட்டோட நம்பர்னு அவங்களுக்கு ஜோஸ்யமா தெரியும்?’

‘அப்படியொரு ரூல் இருந்தா நா அப்ளை பண்ணப்பவே சொல்லியிருக்கணுங்க. அத விட்டுட்டு டெப்பாசிட் எல்லாம் கட்ட சொல்லிட்டு இப்ப டெம்ப்பரவரி கனெக்ஷன் எடுங்கன்னு சொல்லி மறுபடியும் திருநெல்வேலிக்கு அனுப்பி ரெண்டு வாரம் ஆக்குவீங்களோ?’

அட! உள்ளத சொன்னா கோபம் வருதோ என்ற பாணியில் என்னை கேலியுடன் பார்த்தவரை என்ன செய்தாலும் தகும் என்று தோன்றியது.

நானும் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் பல ஆணவம் பிடித்த அதிகாரிகளை என்னுடைய வங்கியிலேயே சந்தித்திருக்கிறேன். சென்னையில் கிளை திறந்த நேரத்திலும் அரசு அதிகாரிகளை பலரையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவரைப் போன்ற இளம் வயதிலேயே இத்தனை ஆணவம் பிடித்த அதிகாரியை சந்தித்திருக்கவில்லை.

‘டெம்பரவரி லைனுக்கெல்லாம் திருநெல்வேலி போவேண்டாங்க. ரெண்டு மாசத்துக்கு என்ன வரும்னு தோராயமா கணக்கு போட்டு டெப்பாசிட் கட்ட சொல்வாங்க.. கட்டிட்டு வாங்க.. ஒர்க் ஆர்டர் போட்டு தாரன். ரெண்டு, மூனு நாளைக்குள்ள வந்துரும்..’

சரி இனியும் பேசி பலனில்லை என்ற நினைப்புடன் அவருடைய அறையிலிருந்து வெளியேறினேன். அதற்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்ததால் அலுவலகம் சென்றுவிட்டு அடுத்த நாள் வரலாம் என்று கிளம்பினேன்.

நான் வாயிலை அடையவும் பொறியாளரின் பணியாளர் என்னை அழைத்தவாறு வருவது கேட்கவே நின்று திரும்பி பார்த்தேன்.

அவர் அருகில் வந்ததும், ‘என்னங்க?’ என்றேன்.

அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘இந்தால வாங்க சார்.’ என்று ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார்.

எனக்கு விஷயம் புரிந்தது. இருப்பினும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருடன் சென்றேன்.

‘என்ன சார் சொன்னார்?’ என்றவரை பார்த்தேன்.

‘டெம்பரவரி லைனுக்கு டெப்பாசிட் கட்டிட்டு வாங்க, தரேங்கறார். பணம் கொண்டு வரலை.. அதான் போய்ட்டு நாளைக்கு வருவோம்னு போறேன்.’

சுற்றிலும் யாரும் இல்லையென்றாலும் பழக்க தோஷத்தால் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘என்ன சார் நீங்க? வெவரம் தெரியாம. டெம்பரவரி கனெக்ஷன்னா யூனிட்டுக்கு நாலு மடங்க கட்டணும் சார். அதனால..’ என்றார்.

எனக்கு அவர் சொல்ல வந்தது புரிந்தாலும், ‘அதுக்கு என்ன செய்யணுங்கறீங்க?’ என்றேன்..

‘சாருக்கு ----------- குடுத்துருங்க. அவர் சொன்னா அடுத்த நாளே டெம்பரவரி மீட்டர பொருத்திட்டு கனெக்ஷன் குடுத்திருவாங்க. நீங்க கட்டி முடிச்சி நம்பர் வாங்குனதும் ரெகுலர் செஞ்சிருவாங்க.. என்ன சொல்றீங்க?’

அதான பார்த்தேன்.. என்னடா பம்முறாரே இதுக்கு பின்னால எதாச்சும் இருக்கணுமே என்று நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது..

தொடரும்..
26 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 179

அன்று பகலுணவை அலுவலகத்திலேயே முடித்துக்கொண்டு என் அறையில் அமர்ந்திருக்க என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் பதற்றத்துடன் என் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

அவர் ஏற்கனவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்பது தெரிந்ததுதான். ஆனால் அன்று அவருடைய முகத்திலிருந்தது கோபம் அல்ல, ஒருவித அச்சம்.

என்னுடைய அறைக்குள் நுழைந்தவர் படபடப்புடன் காணப்படவே நான் எழுந்து அவரை ஆசுவாசப்படுத்தி எனக்கெதிரே இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு என்னுடைய இருக்கையில் சென்றமர்ந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘என்னங்க, சொல்லுங்க? ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கீங்க?’ என்றேன்.

‘சார்.. அந்த இன்ஸ்பெக்டர் என்னை ஃபோன்ல கூப்ட்டு மிரட்டறார் சார்..’

நான் இதை எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும், ‘என்னன்னு?’ என்றேன்.

‘என்னை நீங்களும் ஒங்க வக்கீலும் மிரட்டி கம்ப்ளெய்ண்ட திருப்பி வாங்க சொல்றீங்கன்னு மறுபடியும் ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி குடு..இல்லன்னா ஒனக்குதான் ப்ராப்ளம்கறார்.. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. அதான் ஒங்கள பாக்க வந்தேன்.’

அவர் மீது அதுவரை இருந்த கோபம்போய் அவரை பார்க்கவே பாவமாக இருந்தது எனக்கு.

சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களை தங்களுடைய அதிகாரத்தை உபயோகித்து  எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் என்று நினைக்கும் அரசு அதிகாரிகள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுள் ஒருவர்தான் இந்த அதிகாரியும் என்று நினைத்தேன்.

இருப்பினும் அவரை மேலும் ஆத்திரமடையச் செய்யாமல் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதெப்படி என்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்.

சென்ற முறை என்னுடைய மைத்துனர் விஷயத்தில் இவருக்கெதிராக மாவட்ட எஸ்.பியிடம் புகார் செய்ததுபோல் இப்போது செய்வதிலும் சிக்கல் இருந்தது.

கடந்த முறை நான் எனக்காக அவரிடம் செல்லவில்லை.  என்னுடைய மைத்துனருக்காக. மேலும் என்னுடைய மைத்துனருடைய தரப்பில் நியாயம் இருந்தது. அவருக்கெதிராக யாரும் புகார் கொடுத்திருக்கவில்லை. அத்துடன் என்னுடைய செயலுக்கு நான் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவர் அதை அதே கண்ணோட்டதிலிருந்து பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

ஒரு பொறுப்புள்ள வங்கி மேலாளர் செய்யக்கூடிய காரியத்தையா நான் செய்திருந்தேன்? என்னுடைய அவசரபுத்தியை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தபோது அதை அவர் முன்னிலையில் எப்படி என்னால் நியாயப்படுத்த முடியும்?

‘என்ன சார்.. என்னமோ யோசிச்சிக்கிட்டிருக்கீங்க போலருக்கு? இதுக்கு என்ன வழி சார்? சாயந்திரத்துக்குள்ள நான் ஸ்டேஷனுக்கு போலன்னா அந்த மனுசன் என்ன செய்வார்னே தெரியல சார்..’

உண்மையிலேயே அவர் அரண்டு போயிருந்தார் என்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

‘கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. என்ன வழின்னு யோசிச்சிதான் முடிவுக்கு வரணும்.’ என்றேன்.. ‘நீங்க வேணும்னா ஒங்க ஆஃபீசுக்கு போங்க. நான் ஒரு நாலு மணி போல அங்க வரேன்.’

ஆனால் அவர் நகர்வதாய் இல்லை. ‘இல்ல சார். நா அங்க போனாலும் ஒழுங்கா வேல செய்ய முடியாது. சேர்மன் ஐயா வேற ஊர்ல இல்லைய்யா.. இல்லன்னா அவர வச்சி ஏதாச்சும் செஞ்சிருக்கலாம்.’

சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘இப்ப என்ன சொன்னீங்க? மறுபடியும் சொல்லுங்க?’ என்றேன்.

அவர் குழப்பத்துடன் பார்த்தார்.

‘இல்லங்க.. இப்ப ஏதோ சேர்மன் ஐயான்னு சொன்னீங்களே?’

'ஆமா சார். நா நம்ம முனிசிபல் சேர்மனோட பெர்சனல் பியூனாருக்கேன். ஒரு ஆறு மாசமாத்தான் இந்த போஸ்ட்டிங். அவரப்பத்தி ஊர்ல என்ன பேசினாலும் என் விஷயத்துல ரொம்ப நல்லபடிங்க.. அவர் ஊர்ல இருந்திருந்தாலாவது பரவால்லைன்னு நினைச்சேன்.’

‘அவர் இல்லாட்டி என்னங்க? அவர் பி.ஏ., செகரட்டரின்னு யாராச்சும் இருப்பாங்க இல்லே?’

அவர் அப்போதும் விளங்காமல், ‘ஆமா சார். அவரும் நம்ம கோயிலுக்குதான் வருவார்.. எதுக்கு கேக்கீங்க?’ என்றார்.

‘யார், பேர சொல்லுங்க?’ என்றேன் எனக்கும் ஒருவேளை அவரை தெரிந்திருக்குமோ என்ற நினைப்பில்.

அவர் பெயரை தெரிவித்ததும், ‘அட இவரா.. சரி இவர வச்சே அந்தாள மடக்குவோம். என்னதான் என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கடைநிலை ஊழியரானாலும் அவரும் ஒரு முனிசிபல் ஊழியர்தானே. சென்னை போன்ற நகரங்களில் ஒரு கார்ப்பரேஷன் ஊழியரை இப்படி ஒரு போலீஸ் அதிகாரியால் மிரட்டி பணியவைக்க முடியுமா என்ன?’ என்று தோன்றியது எனக்கு.

‘அவர் இப்ப ஆஃபீஸ்ல இருப்பாரா?’

அவருக்கு அப்போதும் விளங்கவில்லை. ‘இருப்பார் சார். சேர்மன் ஐயா இல்லாத நாள்ல அவர் சாதாரணமா ராத்திரி ஏழு எட்டு மணி வரைக்கும் ஆஃபீஸ்லதான் இருப்பார்.ஆனா அவருக்கு என்ன கண்டாலே ஆகாதுங்க. எப்பவும் ஏதாச்சும் சொல்லி ஏசிக்கிட்டே இருப்பார். எதுக்கு கேக்கீங்க?’

நான் என் இருக்கையிலிருந்து எழுந்து என்னுடைய மேசையை சுற்றிக்கொண்டு சென்று அவருக்கருகில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றினேன். என்னுடைய செயலை முற்றிலும் எதிர்பார்க்காத அவர் பதறிக்கொண்டு தள்ளியமர்ந்தார்.

‘என்ன சார் நீங்க போயி...’ என்றார் சங்கடத்துடன்.

‘இங்க பாருங்க. நான் அன்னைக்கி நீங்களும் டீச்சரும் ஆஃபீஸ்லருந்து வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிருக்கலாம். அந்த எஞ்சினியர் பேச்ச கேட்டு முட்டாத்தனமா.. என்னை மன்னிச்சிருங்க --------.’ என்றேன்..

என்னுடைய குரலிலிருந்து உண்மையான வருத்தம் அவரை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.

‘என்ன சார் நீங்க? நீங்க ஒரு தப்பு செஞ்சீங்க சரி.. நானுமில்ல அவசரப்பட்டு செஞ்சிப்போட்டு இப்ப முளிச்சிக்கிட்டு நிக்கேன்? டீச்சரும் எவ்வளவோ சொல்லத்தான் சார் செஞ்சாங்க.. நாந்தா புத்தி கெட்டுப்போயி.. (அவர் தன்னுடைய மனைவியையே டீச்சர் என்றுதான் அழைப்பார்).’

நான் எழுந்து நின்றேன். ‘சரி வாங்க.. ஒங்களோட நானும் ஒங்க ஆஃபீஸ் வரைக்கும் வரேன்.’

அவர் தயக்கத்துடன் எழுந்து, ‘நீங்க எதுக்கு சார்? நானே போய்க்கறேன்.. அந்தாள் என்ன ரோட்ல வச்சி என்ன செஞ்சிரப்போறார்? அவர் ஃபோன்ல மிரட்டனதும் பயந்து போயிதான் ஒங்கக்கிட்ட ஓடிவந்தேன். ஆனா இப்போ அது கொஞ்சம் தெளிஞ்சிருச்சி சார்.’ என்றார்.

அவருடைய முகத்தில் தெரிந்த அச்சம் சற்று தெளிந்திருந்தாலும் அவருடைய குரலில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

‘நான் வந்து  ஒங்க சேர்மன் ஐயாவோட பி.ஏவை பார்த்து இந்த விஷயத்த பத்தி பேசி பாக்கலாம்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க?’

அவருடைய முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா வியப்பா என்று விளங்காமல் ஒரு நொடி திகைத்துப்போனேன்..

‘என்னங்க ஒரு மாதிரி ஆய்ட்டீங்க? என்ன விஷயம்?’

அவர் என்னுடைய முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தார். ‘சார் நீங்க வந்து எங்க ஐயாக்கிட்ட ஹெல்ப் கேக்க போயி அவர் என்னெ இந்த ஊர விட்டே தூக்கியடிச்சாலும் அடிச்சிருவார் சார். என்னதான் நம்ம மதத்த சேர்ந்தவர்னாலும் நான் கீழ்சாதிக்காரந்தானே சார்.. அதனால அவருக்கு என்ன கண்டாலே ஆகாது. இதையே சாக்கா வச்சி என்னெ தூக்கியடிச்சிட்டா.. அதான் சார் யோசிக்கேன்.’

அவரை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் எனக்கும் வேறு வழியில்லை என்பதால், ‘பரவாயில்லை வாங்க. ஒங்க மேல தப்பு இல்லாத மாதிரி பேசி சமாளிக்கிறேன். அதுதானேங்க உண்மையும் கூட? நீங்க வாங்க.. நீங்க நினைக்கறா மாதிரி ஒன்னும் வராது..’ என்று அவரை வற்புறுத்தி அழ¨த்துச் சென்றேன்.

நான் அவருடைய ‘ஐயாவை’ ஓரிருரை முறை மட்டுமே சர்ச்சில் வைத்து சந்தித்திருந்தாலும் அவர் என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுக்கொண்டு சிரிப்புடன் வரவேற்று உபசரித்தார். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் என்னை தொடர்ந்து வாசலில் தயங்கி நிற்க, ‘என்ன ---------------- எங்க போயிருந்தே.. ஒன்னெ எத்தன தடவ சொல்லியிருக்கேன்? சொல்லாம கொள்ளாம வெளிய போகாதேன்னு..’ என்று எரிந்து விழுந்தார்.

நான் உடனே தலையிட்டு, ‘சார், இவர் என்னை பார்க்கத்தான் வந்தார். ஒரு இக்கட்டான சூழ்நிலை சார். அதான் ஒங்கக்கிட்டக் கூட சொல்லாம வந்திருப்பார்னு நினைக்கேன்..’ என்றவாறு நான் வந்த விஷயத்தை சுருக்கமாக கூறினேன்.

நான் என்னைப் பற்றி கூறியதையெல்லாம் அவர் கேட்கவில்லையோ என்று தோன்றியது அவர் ரியாக்ட் செய்த விதம். ‘இவனோட முன்கோபம்தான் சார் பெரிய ப்ராப்ளம். சேர்மன் இவன் மேல வச்சிருக்கற பரிதாபத்த இவன் அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு.. என்னதான் அவன் வீட்டுக்கு பக்கத்துல நீங்க இருக்கீங்கன்னாலும் அவனோட பொசிஷன் என்னன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்க வேணாம்? அம்பாசமுத்திரத்துல திண்டாடிக்கிட்டிருந்தவன் நம்ம சேர்மன் எலெக்டானதும் யார் யாரையோ புடிச்சி இங்க வந்து முழுசா ஆறு மாசம் கூட கலை.. இப்ப பாருங்க.. என்ன செஞ்சிட்டு வந்து நிக்கான்னு? அந்த இன்ஸ்பெக்டர் வேற ஒரு முரண்டு பிடிச்ச ஆள் மிஸ்டர் ஜோசஃப். நான் சொன்னால்லாம் கேக்கற ஆள் இல்லை.. இருந்தாலும் சேர்மன் சொன்னார்னு வேணும்னா சொல்லிப் பாக்கேன்.. முடிஞ்சா சரி.. இல்லன்னா ஒங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆனா இவன் பாடுதான் திண்டாண்ட்டமாயிரும்..’

எனக்கே அவர் பேசிய விதம் சங்கடத்தையளித்தது. அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாததால் நான் மேற்கொண்டு பேச விரும்பாமல், ‘சரி சார். ஒங்களுக்கு சிரமமா இருந்தா வேணாம். நான் வேற ஏதாச்சும் வழியிருந்தா பாத்துக்கறேன்.’ என்றவாறு எழுந்து நின்றேன்.

அவரும் கூடவே எழுந்து என்னுடன் வாயில்வரை வந்தார். என்னுடைய அலுவலகம் சமீபத்திலிருந்ததால் என்னுடைய வாகனத்தை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தேன்.

நான் முனிசிபல் அலுவலக வாயிலை நெருங்கியதும், ‘மிஸ்டர் ஜோசஃப் அவன் முன்னால வச்சி நான் ஒடனே இத முடிச்சி தாரன்னு சொன்னேன்னு வைங்க.. அவன் இதான் சாக்குன்னு அடுத்த நாளே இந்த மாதிரி்  வேற ஒரு வில்லங்கத்தோட வந்து நிப்பான். அதான் அப்படி பேசினேன்... நீங்க கவலைப்படாம போங்க.. நான் அவர்கிட்ட பேசி முடிச்சிடறேன். நான் சொல்லி அவர் கேக்காம இருப்பாரா என்ன? நான் பாத்துக்கறேன்.’ என்றார் புன்னகையுடன்.

அவருடைய திடீர் மாற்றத்தில் வியப்படைந்தாலும் சமாளித்துக்கொண்டு அவருடைய கரங்களைப் பற்றி குலுக்கிவிட்டு என் அலுவலகம் நோக்கி நடந்தேன்..

அவர் கூறியிருந்தபடியே அந்த ஆய்வாளருக்கு ஃபோன் செய்திருக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் முந்தைய இரு நாட்களும் வந்திருந்த காவலர் மீண்டும் வந்திருந்தார். என்னைப் பார்க்க அல்ல.. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்க..

நான் என்னுடைய வீட்டு மேல்தளத்தில் தண்ணீரை நிரப்பிவிட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். அந்த காவல்காரர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

‘இங்க பார்யா? நீ யாரு, என்னன்னு எப்பவும் மனசுல இருக்கணும்.. அத மறந்துட்டு எடுத்தோம் கவுத்தோம்னு என்னத்தையாச்சும் செஞ்சிட்டு வந்து நிக்காத. சொல்லிட்டேன்.. இதான் ஒனக்கு லாஸ்ட் வார்னிங்.. ஆஃபீசுக்கு போம்போது வந்து ஒன் புகார வித்ட்றா செய்றதா எழுதி குடுத்துட்டு போ.. நம்ம ஐயா இல்லாத நேரம் அதான்.. அவர் இருக்கும்போது வந்து மறுபடியும் வீணா பிரச்சினையில மாட்டிக்காத. என்ன, நாஞ்சொல்றது வெளங்குதா?’

அவருடைய குரலிலிருந்த அலட்சியத்தையும், ஆணவத்தையும் உணர்ந்த நான் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் என்னிடம் வந்து பேசிய அதே காவலர்தானா இவர் என்ற வியப்புடன் படிகளில் இறங்கி கையிலிருந்த பைப்பை போட்டுவிட்டு அவரை நோக்கி விரைந்தேன்..

ஆனால் அவர் அதற்குள் தான் வந்திருந்த சைக்கிளில் ஏறிக்கொண்டு செல்ல அவரையே பார்த்தவண்ணம் திகைத்துப் போய் நின்றிருந்த என் பக்கத்து வீட்டுக்காரரையும் அவருடைய மனைவியையும் நெருங்கி, ‘அவர் பேசியத மனசுல வச்சிக்காதீங்க.. டிச்சர் நீங்களுந்தான்..’ என்றேன்..

அவர் என்னைப் பார்த்த பார்வையில் தெரிந்த அடிபட்ட உணர்வு என்னை மிகவும் பாதித்தது..

மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தேன்..

மேலும் ஒரு சிக்கல் எனக்கு ஏதும் பெரிய பாதிப்பில்லாமல் விலகியும் ஏனோ என் மனதில் மகிழ்ச்சியைவிட சோகமே மிஞ்சி நின்றது..

தொடரும்..25 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 178

நீங்களா ஸ்டேசனுக்கு வந்து ஒங்க பக்கத்துலருக்கற நியாயத்த எடுத்து சொல்லி இந்த விசயத்த சுமுகமா முடிச்சிக்கறதுதான் நல்லது.. நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. அப்புறம் ஒங்க இஷ்டம்..’ என்றவாறு கிளம்பிச் செல்ல நான் திகைத்துப் போய் ராஜேந்திரனைப் பார்த்தேன்.

*****

அன்று என் வீட்டுக்கு வந்திருந்த காவலர் என்னை வரச் சொன்ன காவல் நிலையத்தின் பெயரைக் கேட்டதும்தான் என்னுடைய முட்டாள்தனத்தின் தீவிரம் எனக்கு புரிந்தது. அந்த நிலையத்தின் ஆய்வாளருடனான என்னுடைய மோதல் முடிவுக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை.

மீண்டும் அவர் முன் எப்படி போய் நிற்கப்போகிறேன் என்று நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ச்சே.. என்ன ஒரு முட்டாள்தனம் என்று என்னுடைய அப்போதைய நிலமையை நினைத்து நொந்துப்போனேன்.

ஆனால் வேறுவழியிருக்கவில்லை. இதை தவிர்க்க வேண்டுமென்றால் என்னுடைய அடுத்த வீட்டுக்காரருடைய தயவை நாடுவதுதான் ஒரே வழி என்று தோன்றியது.

அந்த ஆய்வாளருடைய மேலதிகாரி வழியாக அவரை என்னுடைய மைத்துனரின் நிலத்தகராறு விஷயத்திலிருந்து விலக வைத்த காயம் அவர் மனதில் இப்போதும் இருக்கும் என்பதையும் உணர்ந்திருந்த நான் அவரை எதிர்கொள்வதை விட என்னுடைய அடுத்த வீட்டுக்காரரை அணுகி மன்னிப்பு கேட்டு அவராகவே அவருடைய புகாரை திருப்பி பெற்றுக்கொள்ள வைப்பதுதான் புத்திசாலித்தனம் என தீர்மானித்தேன்.

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் விழுவது நல்லதல்லவா?

ஆனால் அதை எப்படி செயல்படுத்துவதென்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருந்தது. ‘இன்னைக்கி காலைல வேணும்னா நாம அந்த இன்ஸ்பெக்டர போயி பாக்காம இருக்கலாம். ஆனா அதுக்கப்புறம்? நம்ம பக்கத்து வீட்டுக்காரர் புகார் குடுத்துருக்கறது என்னெ பத்திதான் அந்தாளுக்கு தெரிஞ்சிது.. அவ்வளவுதான்.. வேற வெனையே வேணாம்.’ என்றேன் என் மனைவியிடம்.

அவருக்கும் என்மேல்தான் கோபம் வந்தது. ‘நீங்க மட்டும் அந்த எஞ்சினியர் பேச்ச கேட்டு இந்த முட்டாளதனத்த செய்யாம இருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காதுல்லே?’ என்றார்.

‘நீ சொல்றது சரிதான். ஒத்துக்கறேன். ஆனா அதப்பத்தி இப்ப பேசி என்ன பண்றது? இனி என்ன செய்யலாம்? அதச் சொல்லு.’

என் மனைவி சிறிது நேரம் யோசித்துவிட்டு சட்டென்று, ‘ஏங்க நாம இப்படி செஞ்சா என்ன?’ என்றார்.

‘என்ன?’

‘நீங்களும் நானும் அந்த விக்டோரியா ரோட்லருக்கற ஒருத்தங்கள பாக்க போனோமே.. அதாங்க ஒங்க பாங்க்லருந்து ஷிப் சேட்லிங்குக்கு கூட லோன் வாங்கியிருக்காங்களே? அவங்க கட்ற வீடுகூட  எதுத்தாப்பலதான  இருக்கு? அன்னைக்கி கூட அவங்க வீட்டுக்காரர் வந்திருந்தப்போ அந்த டீச்சர்கூட நின்னு பேசிக்கிட்டிருந்தத பார்த்தேன். அவங்க வழியா அப்ரோச் பண்ணா இவர் கேப்பாருன்னு நினைக்கேன். ட்ரை பண்ணி பாக்கலாம். நீங்க ஆஃபீசுக்கு லீவு சொல்லிட்டு வாங்க, போய்ட்டு வரலாம்.’

எனக்கும் முயற்சி செய்து பார்த்தாலென்ன என்று தோன்றியது. நானும் என்னுடைய மனைவியும் இளைய மகளுடன் என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று என்னிடமிருந்த பாதுகாப்பு பெட்டகத்தின் அறைச் சாவியை என் உதவி மேலாளரிடம் கொடுத்துவிட்டு விடுப்பு எடுத்துக்கொண்டு என் மனைவி கூறியிருந்தவரைச் சென்று பார்த்து விவரித்தோம்.

அவரும் நான் விவரிக்கும்வரை கேட்டிருந்துவிட்டு, ‘நீங்க சொல்றது சரிதான். அந்த இன்ஸ்பெக்டருக்கு இந்த விஷயத்த ஒங்கள பழிவாங்கறதுக்கு கிடைச்ச சான்ஸா நினைக்க வாய்ப்பிருக்கு. ஆனா..’ என்று தயங்கினார்.

‘என்ன விஷயம்?’ என்றேன்.

‘நான் சொன்னா அந்த டீச்சர் கேப்பாங்க. ஆனா அந்த மனுஷன் கொஞ்சம் முன்கோபி. அத்தோட நீங்க அந்த ராஜேந்திரன் ஃபேமிலிகூட ஃப்ரெண்ட்லியாருக்கறது வேற அவருக்கு பிடிக்கல. அந்த மனுசனே இத எங்கிட்டயும் என் ஹஸ்பெண்ட் கிட்டயும் பலதடவ சொல்லியிருக்கார். அதான் யோசிக்கேன்.’

நான் இனியும் இவரிடம் பேசி பலனில்லை என்று, ‘சரிங்க.. நான் வேற ஏதாவது வழியிருக்கான்னு பாக்கேன்.. தாங்ஸ்..’ எழுந்து நின்றேன்.

அவர் ஏதோ நினைவுக்கு வந்தது போல், ‘சார்.  ஒங்க வக்கீல் இருக்கார் இல்ல?’ என்றார்.

‘யார சொல்றீங்க? எங்க லீகல் அட்வைசரா?’ என்றேன்.

‘ஆமாம் சார். அவர் முனிசிபல் ஆஃபீஸ்க்கும் வக்கீலாச்சே. அங்கதான அந்த மனுசனும் பியூனாருக்கார்? அவர் சொன்னா வேற வழியில்லாம ஒத்துப்பார். நீங்க அவர்கிட்ட இந்த விஷயத்த சொல்லுங்க. நிச்சயம் நடக்கும்னு நினைக்கேன்.. நானும் அந்த டீச்சர மதியானமா பாத்து பேசிட்டு வரேன்.’

அட! இந்த யோசனை எனக்கு ஏன் உதிக்காமல் போனது என்று நினைத்தேன்.

‘ஏங்க அந்த மனுசன் அங்கனதான் வேல பாக்காருன்னு ஒங்களுக்கு தெரியும்லே.. இத முன்னாலயே நினைச்சி பாத்திருக்கலாம் இல்லே..’ என்றார் என் மனைவி.

‘எங்க? போலீஸ் ஸ்டேசனுக்கு மறுபடியும் போணுமேன்னு நினைச்ச கொழப்பத்துல இந்த ஐடியா எனக்கு வரவே இல்ல.. சரி ஒன்னு செய்வோம். நா ஒன்னெ ஒங்க வீட்ல விட்டுட்டு கோர்ட்டுக்கு போய் அவர சந்திக்க முடியுமான்னு பார்த்துட்டு வரேன்.’ என என் மனைவியும் சம்மதித்தார்.

நல்லவேளையாக நான் நீதிமன்றத்தைச் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்களுடைய ஓய்வறையில்தான் இருந்தார். நான் சென்ற விபரத்தைக் கூறி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டவர் இறுதியில், ‘ஒங்களுக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் ஏதோ பூரண ஜென்ம பகை இருந்திருக்கும்போல. அதான் மறுபடியும் அவர்கிட்டவே போய் நிக்கிறீங்க.’ என்றார் புன்னகையுடன்.

ஆனால் அன்றே மாலையே அவருடைய நீதிமன்ற அலுவல்கள் முடிந்ததும் முனிசிபல் அலுவலகத்தில் அவருக்கு ஒதுக்கியிருந்த அலுவலக அறைக்கு திரும்பி என் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து பேசியிருப்பார் போல் தெரிந்தது. அன்று இரவே எனக்கெதிராக புகார் அளித்தவர் அதை திரும்பிப் பெற காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

ஆனால் நம் ய்வாளர்தா வில்லங்கம் பிடிச்சவராயிற்றே. புகாரை திரும்பப் பெற சென்றவரை மிரட்டி அவர் அளித்த புகார் எனக்கெதிராகத்தான் என்பதை அறிந்துக்கொண்டு, ‘போய் நீங்க யாருக்கு எதிரா புகார் குடுத்தீங்களோ அவர வரச்சொல்லுங்க. அவர விசாரிச்சி அவர் மேல தவறு இருக்கா இல்லையான்னு விசாரிக்காம ஒங்க புகார திரும்பப் பெற விடமாட்டேன். போங்க.’ என்று விரட்டியடித்திருக்கிறார்.

அத்துடன் நிற்காமல் ஏற்கனவே அனுப்பி வைத்த காவலரையே மீண்டும் அடுத்த நாள் காலை என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான் அவருக்கே எனக்கும் அவருடைய ‘ஐயாவுக்கும்’ இடையே ஏற்கனவே இருந்த மனத்தாங்கல் தெரிந்திருக்கிறது.  

‘அவர் இப்பிடித்தாங்க. அவர் புடிச்ச முயலுக்கு காலு மூனுன்னு நிப்பார். நீங்க ஒரு நேரம் ஸ்டேஷனுக்கு வந்து போனா போறும்யா. இந்த ஃபைல முடிச்சிறலாம். ஒங்கள அநாவசியமா ஏதும் பேசாம இருக்கறதுக்கு நீங்க வேணும்னா ஒங்க வக்கீலய்யா கூட வந்துருங்க. அவருக்கு கோபம் வரத்தான் செய்யும்.. ஆனா என்ன செய்ய?’

அவர் கூறியதும் நியாயமாகப்படவே நான் அவர் கிளம்பிச் செல்ல என்னுடைய அலுவலகம் செல்லும்வழியில் என்னுடைய சட்ட ஆலோசகரை சந்தித்துவிட்டு செல்லும் உத்தியில்  புறப்பட்டுச் சென்றேன். நான் காவலர் கூறியதை அவரிடம் சொன்னதும் எப்போதுமே அமைதியாக இருக்கும் அவர் சட்டென்று கோபப்பட்டு நான் வேண்டாம் என்று கூறியும் அந்த காவல் நிலையத்தை அழைத்து அந்த ஆய்வாளரை அழைத்து அதே கோபத்துடன் காரசாரமாக பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

‘நீங்க பாட்டுக்கு ஒங்க வேலைய பாருங்க சார். இனியும் அவர் ஏதாச்சும் பிரச்சினை பண்ணினார்னா நா பாத்துக்கறேன். எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லையா?’ என்றார்.

நான் அப்போதும் சமாதானம் அடையாமல் அமர்ந்திருந்தேன்.

அவர் சற்று நேரத்தில் அமைதியானார். ‘சார் ஒங்களுக்கு தெரியாது. ஒங்க மச்சான் நில விஷயத்துல கடைசியா நம்ம ஆஃபீஸ்ல வச்சி பேசினதுமே அந்த சைட்ல சரி போதும்னு விடத்தான் இருந்தாங்க. இவர்தான் அங்க போயி இவ்வளவு தூரத்துக்கு வந்தபிறகு நீங்க ஒதுங்கி போனீங்கன்னா எனக்குத்தான் சார் அவமானம். பேசாம ஸ்டே வாங்கி அவரையும் மேக்கொண்டு வேல செய்ய விடாம தடுங்கன்னு சொல்லி நோட்டீஸ் விட செஞ்சிருக்கார். அதான் எப்படா எங்கிட்ட மாட்டுவார்னு காத்துக்கிட்டிருந்தேன்.’ என்றார். ‘இன்னொன்னும் ஒங்கக்கிட்ட சொல்லிக்கறேன் ஜோசப். இவரால அவங்க குடும்ப வக்கீலா  ஏறக்குறைய பதினஞ்சு வருசமா இருந்த எனக்கும் அவங்களுக்கும் இப்ப கொஞ்ச நாளா பேச்சு வார்த்தையே இல்லா போயிருச்சி. அந்த கோபமும் இருக்கு எனக்கு..’

‘ஆனா இந்த விஷயத்த அவர் இப்படியே விட்டுருவார்னு நீங்க நினைக்கீங்களா சார்?’ என்றேன் தயக்கத்துடன்.

‘நீங்க சொல்றது சரிதான். அவ்வளவு ஈசியா விட்டுடமாட்டார்தான். ஆனா அதால ஒங்களுக்கு ஒரு பாதிப்பும் வராம நா பாத்துக்கறேன் ஜோசப். நீங்க கவலப்படாம போங்க. நான் ----------- (என் பக்கத்து வீட்டுக்காரர்) கூப்ட்டு என்னாச்சி கேக்கேன். முடிஞ்சா டிப்பார்ட்மெண்ட்லருந்ந்து ஒரு ஆஃபீசர அனுப்பி பார்த்துட்டு வரச்சொல்றேன். அதுக்கும் அவர் மசியலன்னா அப்புறம் இருக்கு அவருக்கு.. நீங்க போங்க.’ என்றார்.

அவர் கூறியதில் எனக்கு அவ்வளவாக திருப்தியில்லையென்றாலும் வேறு வழியின்றி அரைமனதுடன் என் அலுவலகம் கிளம்பிச் சென்றேன்.

அன்று பகலுணவை அலுவலகத்திலேயே முடித்துக்கொண்டு என் அறையில் அமர்ந்திருக்க என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் பதற்றத்துடன் என் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

தொடரும்..

24 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 177

எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கு முன்பு அதனால் ஏற்படவிருக்கும் சாதக பாதகங்களை சரிவர ஆய்ந்து அறிந்தபிறகு எடுப்பதுதான் நல்லது.

அத்தகைய ஆய்வை நாம் நடத்துகையில் நம்முடைய மனநிலை ஒரே சீராக இருத்தல் மிகவும் அவசியம். அதாவது, நாம் கோபத்திலோ, பதற்றத்திலோ இருக்கும் சமயங்களில் முக்கியமான எந்த ஒரு முடிவையும் எடுக்கலாகாது.

முக்கியமாக நாம் எடுக்கும் முடிவு நம் சொந்த வாழ்க்கையில் என்றால் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நம்முடைய அலுவலக வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் தவறாகிவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஏனெனில் நிமிடத்திற்கு ஒன்று, நொடிக்கு ஒன்று என்னும் வேகத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஆகவே ஒவ்வொரு முடிவுக்கும் நாம் ஆய்ந்து ஆராய்ந்து மற்றவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுப்பேன் என்று நினைக்க துவங்கினால் நம்முடைய முடிவை எதிர்பார்த்திருக்கும் நம் அதிகாரத்திற்கு கீழ் பணிபுரிபவர்களின் நன்மதிப்பை இழக்க வேண்டிவரும். அதே சமயம், அலுவலகங்களில் நடக்கும் பல தவறுகளையும் நம்மால் பெருத்த சேதாரம் இல்லாமலே சரிசெய்துக்கொள்ள முடியும்.

ஆனால் நம்முடைய சொந்த அல்லது குடும்ப வாழ்வில் அப்படியல்ல. முக்கியமாக, சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் எடுக்கும் சில முடிவுகள் தீர்க்கமுடியாத பிரச்சினையை ஏற்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் நான் சென்னையில் வசித்து வந்த காலத்தில் (1993-95 வருடங்கள்) நடந்த ஒரு சுவையான (துரதிர்ஷ்டமான என்றும் கூறலாம்)சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அப்போது சென்னையில் மிகவும் பிரபலமாகவிருந்த 'ராம்ஸ்' நிறுவனத்தினரால் கட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் (appartment) வசித்து வந்தேன். அந்த குடியிருப்பில் தளத்திற்கு நான்கு குடியிருப்புகள் (flats) என பதினாறு குடியிருப்புகள் இருந்தன.

கட்டடத்தின் தரை தளத்தில் (ground floor) மூலைக்கு ஒன்றாக நான்கு குடியிருப்புகள் அமைந்திருந்தன. அந்த நான்கு குடியிருப்புகளின் அளவு முதல் தளம் முதல் அமைக்கப்பட்டிருந்த மற்ற குடியிருப்புகளைவிட சுமார் முன்னூறு சதுர அடிகள் கூடுதல்.

அவற்றுள் ஒன்றில் நான் வாடகைக்கு குடியிருந்தேன். கழிவறை மற்றும் குளியலறைகளை உள்ளடக்கிய இரண்டு படுக்கையறைகள், சுமார் முன்னூறு சதுர அடி வரவேற்பறையும் உணவறையும் சேர்ந்த ஹால், விசாலமான சமையலறை என குடியிருப்பு ஏறத்தாழ எல்லா வசதிகளையும் கொண்டிருந்தது.

கட்டடத்தைச் சுற்றிலும் வாகனங்களை நிறுத்திவைப்பதற்கான இடமும் இருந்தது. ஆனால் ஒரேயொரு குறை. என்னைப்போன்ற ஒரு சிலர் வைத்திருந்த நாற்சக்கர வாகனங்களை நிறுத்திவைக்க அந்த இடம் அவ்வளவு போதுமானதாக இல்லை.

ஆயினும் நான் அந்த குடியிருப்பில் முதலில் குடியேறியவர்களுள் ஒருவன் என்பதாலும் நான் குடியேறிய காலக் கட்டத்தில் வெகு சிலரே குடியேறியிருந்ததாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்க என்னுடைய நாற்சக்கர வாகனத்தை நிறுத்த போதிய இடமிருந்தது. ஆனால் குறுகிய வாயில்கள் வழியாக ஏற்றி இறக்க சிரமப்பட வேண்டியிருந்தது.

நான் சென்னையில் பொறுப்பேற்றிருந்த கிளையில் இத்தகைய குடியிருப்புகள் சிலவற்றிற்கு கடனுதவி அளித்திருந்ததால் ஒரு நாள் அதன் சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அந்த கோப்பிலிருந்த குடியிருப்புகளில் ஒன்று  நான் குடியிருந்த குடியிருப்பைப் போன்ற் அமைப்புடன் இருந்ததைக் கண்டேன். அதே வடிவமைப்பு, நான்கு மாடிகள், பதினாறு குடியிருப்புகள். எல்லாமே சரி. ஆனால் தரைதளத்திலிருந்த குடியிருப்புகளின் உள் அளவு மற்ற குடியிருப்புகளைவிட சுமார் நானூறு சதுர அடிகள் குறைவாக இருந்தது என்னுடைய கவனத்தை ஈர்த்தது.

அந்த வரைபடத்தை கோப்பிலிருந்து எடுத்து என்னுடைய கைப்பெட்டியில் வைத்துக்கொண்டேன். மாலை வீடு திரும்பியதும் என்னுடைய கட்டடத்திலிருந்த வேறொரு தரைதள குடியிருப்பின் உரிமையாளரிடம் நான் கொண்டு வந்திருந்த வரைபடத்தைக் காண்பித்து, ‘சார் இத பாருங்க. இதுவும் நம்ம பில்டிங்கும் ஒரே மாதிரி இருக்கு.’ என்றேன்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, 'ஆமாம் சார்.’ என்றார்.

நான் அவருக்கு தரைதளத்திலிருந்த குடியிருப்புகளின் அளவை சுட்டிக்காட்டி, ‘சார்.. இந்த ஃப்ளாட்சோட சைஸ பாருங்க. மாடியிலருக்கற மத்த ஃப்ளாட்சோட சின்னதாருக்கு.’ என்றேன்.

அவரும் அதை பார்த்துவிட்டு அதற்கென்ன இப்போ என்பதுபோல் பார்த்தார்.

நான், ‘ஏன்னு பாருங்க சார். இந்த ப்ளான்லருக்கற பார்க்கிங் ஏரியா சைஸ பாருங்க. நம்ம பில்டிங்க்லருக்கற பார்க்கிங் ஏரியாவையும் பாருங்க. இந்த படத்துலருக்கற சைசுல பார்க்கிங் ஏரியா இருந்தா இப்ப நாம நம்ம கார நிறுத்தறதுக்கு படற அவஸ்தை இருக்காதில்லே. எனக்கென்னவோ நம்ம பில்டிங்கலயும் இந்த மாதிரிதான் செஞ்சிருக்கணும்னு தோனுது.. நீங்க என்ன நினைக்கறீங்க?’ என்றேன்.

அவருக்கும் நான் கூறியதிலிருந்த நியாயம் புரிந்திருக்க வேண்டும். அவர் வைத்திருந்த அம்பாசடர் காரை கட்டட வளாகத்தில் ஏற்றி இரக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தவர்.
‘எனக்கும் அப்படித்தான் தோனுது சார்.’ என்றவர் சட்டென்று, ‘சார் ஒருவேளை நம்ம பில்டிங் ப்ளான்லயும் அப்படித்தான் இருக்குமோ என்னவோ?’ என்றார்.

அப்படி ஆரம்பித்த சம்பாஷனையின் இறுதியில் எங்களுடைய குடியிருப்பின் வரைபடத்தையும் பார்ப்பது என்று தீர்மானித்தோம். ஆனால் அடுத்த வந்த ஒரு வாரம் அவர் கட்டடத்தை எழுப்பிய ராம்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததுதான் மிச்சம். வரைபடம் கிடைக்கவே இல்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் என்னுடைய வங்கி சட்ட ஆலோசகரை அணுகினோம்.

அவர் வியப்புடன், ‘என்ன சார்.. நீங்கல்லாம் படிச்சவங்க. நீங்களே இப்பிடி செஞ்சா இப்படி? அதுக்குத்தான CMDA இருக்கு? நீங்க எந்த கம்பெனியோட பில்டிங்ல ஃப்ளாட் வாங்கப்போறீங்கன்னு தீர்மானிச்சதுமே அங்க போய் ப்ளான் காப்பிக்கு அப்ளை பண்ணியிருக்கலாமே? அது சரி. நீங்க கம்பெனி ஆஃபீசுக்கு போயும் அவங்க பில்டிங்கோட ப்ளான தர மறுக்கறாங்கன்னா இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால நீங்க சம்மதிச்சீங்கன்னா அஃபிஷியலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம்.’ என்றார்.

அவருடைய பரிந்துரைப்படியே என்னுடைய நண்பர் தனிப்பட்ட முறையில் அதற்கடுத்த சில நாட்களில் நோட்டீஸ் அனுப்ப பிரச்சினை வில்லங்கமாகிப்போனது. நிறுவனத்தின் அடியாட்கள் அவரை தொலைப்பேசியிலும் நேரிலும் நேரங்காலம் தெரியாமல் வந்து மிரட்ட அவர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றுவிட்டார்.

பிறகுதான் தெரிந்தது. நான் என்னுடைய அலுவலக கோப்பில் பார்த்த வரைபடத்திலிருந்ததைப் போலத்தான் இருந்தது என்னுடைய குடியிருப்பு வரைபடத்திலும். ஆனால் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கியிருந்த இடத்தை தரைதளத்திலிருந்த குடியிருப்புகளுடன் சேர்த்து மேல் தளங்களிலிருந்த குடியிருப்புகளை விட பெரியதாக அமைத்து நல்ல விலைக்கு விற்று காசாக்கியிருந்தார்கள் நிறுவனத்தினர்.

இந்த நிறுவனத்தினர் இத்தகைய தில்லுமுல்லுகளுக்கு மிகவும் பிரபலமானவர்கள் என்பதும் பிறகுதான் பல உரிமையாளர்களுக்கும் தெரிய வந்தது. நாளடைவில் இந்நிறுவனத்தினரின் தில்லுமுல்லுகள் அளவுக்கு மீறிப் போக CDMA அவர்களுடைய பெயரை  Black list செய்தது.

ஆனால் அவசரப்பட்டு எந்த விசாரனையும் செய்யாமல் ஒரு நிறுவனத்தின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்து குடியிருப்புகளை வாங்கியவர்கள் எத்தனை துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும்?

அதேபோன்று என்னுடைய அடுத்த நிலத்துக்காரர் என்னுடைய நிலத்தில் சில அடி தூரம் ஆக்கிரமித்ததைக் கண்டதும் ஏற்பட்ட கோபம் அடங்கும் முன்பே என்னுடைய பொறியாளர் பரிந்துரைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவசரப்பட்டு அவர் அமைத்திருந்த வேலியை பெயர்த்தெடுக்க விஷயம் விஸ்வரூபமெடுத்தது.

அவர் காவல்துறையில் எனக்கெதிராக கொடுத்திருந்த புகாரை விசாரிக்க அடுத்த நாள் காலை சுமார் ஏழு மணிக்கு என்னுடைய பகுதியிலிருந்த  காவல் நிலையத்திலிருந்து ஒரு காவலர் வந்தபோதுதான் விவகாரத்தின் வீரியம் எனக்கு தெரியவந்தது.

நல்லவேளையாக ராஜேந்திரன் வீட்டில் இருந்தார். நான் விசாரிக்க வந்தவரை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று நானும் அவருமாக நடந்ததை விவரித்தோம்.

ராஜேந்திரன் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சிமெண்ட் விவகாரத்தை விவரித்து அன்று அவர் காவல் நிலையத்தில் கொடுத்திருந்த புகாரை வற்புறுத்தி திருப்பி பெற வைத்ததிலிருந்தே அவர் அவ்வப்போது செய்து வந்திருந்த சிறு சிறு தகராறுகளையும் விவரித்தார். அத்துடன் காவலரை என்னுடைய நிலத்திற்கு அழைத்துச் சென்று அவர் க்கிரமித்திருந்த இடத்தையும் காண்பித்தோம்.

அவருக்கு என்னுடைய செயலில் இருந்த நியாயம் புரிந்ததுபோல்தான் தெரிந்தது. இருந்தும், ‘சார் நீங்க சொல்றது எனக்கு புரியாம இல்லை. ஆனா புகார்னு வந்தப்பிறகு விசாரிக்காம இருக்கமுடியாதில்லையா? அதுக்குத்தான் ஐயா என்னெ அனுப்பிருக்கார். நீங்க இப்ப சொன்னத நான் ஐயாக்கிட்ட போயி சொல்லுதேன். அவர் என்ன நினைக்காரோ அதுப்படித்தான் நடக்கும். நீங்க எதுக்கும் ஆஃபீஸ் போற வழியில ஒரு எட்டு ஸ்டேசனுக்கு வந்துட்டு போயிருங்க.’ என்றார்.

‘ஸ்டேசனுக்கா? நானா? எதுக்கு?’ என்றேன்.

அவர் புன்னகையுடன், ‘ஐயா.. இது நீங்க நெனக்கறா மாதிரி ஈஜியா முடியற விசயம் இல்லேங்க.. அவரா அவர் குடுத்திருக்கற கம்ப்ளெய்ண்ட வித்ட்றா பண்றவரைக்கும் இது சம்பந்தமா கூப்டறப்ப எல்லாம் நீங்க ஸ்டேசனுக்கு வந்துதான்யா ஆகணும். ஒங்கள மாதிரி படிச்சவங்களுக்கு இது சங்கடந்தானாலும் வேற வழியில்லங்கய்யா.. நீங்க செஞ்சது சரியா கூட இருக்கலாம். இல்லேங்கலே.. ஆனா இந்த மாதிரியான புகாருக்கு வழியில்லாம செஞ்சிருந்துருக்கலாம்னுதான் எனக்கு தோனுது.. நம்ம ஐயாவும் ஒரு மாதிரி ஆளுங்க.. நீங்களா ஸ்டேசனுக்கு வந்து ஒங்க பக்கத்துலருக்கற நியாயத்த எடுத்து சொல்லி இந்த விசயத்த சுமுகமா முடிச்சிக்கறதுதான் நல்லது.. நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. அப்புறம் ஒங்க இஷ்டம்..’ என்றவாறு கிளம்பிச் செல்ல நான் திகைத்துப் போய் ராஜேந்திரனைப் பார்த்தேன்.

தொடரும்..

22 July 2006

கடந்து வந்த பாதை 3

செல்வராணி டீச்சர்

ஹீரோ ஒர்ஷிப் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். என்னுடைய பள்ளி பருவத்தில் எனக்கு ஒருவர் மீது ஹீரோயின் ஒர்ஷிப் இருந்தது.

அவர்தான் என்னுடைய பள்ளி ஆசிரியை செல்வராணி. சகலகலாவல்லி.

அவருடைய பதவி என்னவோ ஓவிய ஆசிரியைதான். ஆனால் அவரில்லாமல் அந்த பள்ளியே அசையாது என்பதுபோன்ற ஒரு ஆதிக்கம்....

ஓவியம் வரைவது அவர் கற்றறிந்தது. ஆனால் கல்லாதது உலகளவு என்பார்களே அதுமாதிரி அவருக்கு கைவராத கலைகளே இல்லையெனலாம்.

பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தின விழா, தலைமையை ஆசிரியையின் பிறந்தநாள் விழா என எல்லா விழா கொண்டாட்டங்களையுமே அவருடைய ஈடுபாடில்லாமல் நடத்தவே முடியாது.

அதனால்தான் அவரை சகலகலாவல்லி என்றேன்.

நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியளித்து, இயக்கி வேண்டுமென்றால் அவரும் நடித்து கலக்கிவிடுவார்.

என்னுடைய அதே பள்ளியில் மெர்சி என்றொரு ஆசிரியையும் இருந்தார்.

என்னுடைய நாயகியான செல்வராணி என்னைப்போலவே கருத்த மேனியைக்கொண்டவர் என்றால் அந்த மெர்சி செக்கச் செவேல் என ஜொலிக்கும் கலரில்..

செல்வராணி தலித் இனத்தை சார்ந்த சராசரி பொருளாதாரத்தில் நடுத்தரத்துக்கும் சற்று தாழ்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர். குடும்பத்தில் மூத்தவர். இரு தங்கைகள், இரு தம்பிகள், உடல் ஊனமுற்ற தாய். தந்தையை இளம் வயதிலேயே பறிகொடுத்தவர் என்பதால் முப்பது வயதைக் கடந்தும் திருமணத்தைப் பற்றி சிந்திக்கக்கூட திராணியில்லாமல் இருந்தவர்.

மெர்சியோ நேர் எதிர். சென்னை வேப்பேரி வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஜவுளிக்கடை முதலாளியின் ஒரே வாரிசு. மேற்குடியினர் என்று என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். அழகும் பணமும் அந்த காலத்திலேயே பட்டதாரி ஆசிரியை என்ற கர்வமும்..

அவரும் படு திறமைசாலிதான். அவருக்கும் செல்வராணி டீச்சருக்கிருந்த எல்லா திறமைகளும் இருந்தன. அவர் ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஆசிரியை. அந்த வகுப்பு மாணவர்கள் பங்குபெறும் நாடகங்களை மெர்சி டீச்சரே எழுதி இயக்கி தனக்கு பிடித்த நல்ல நிறமுள்ள, அம்சமான மாணவர்களை மட்டுமே தெரிந்தெடுத்து நடிக்கவைப்பார்.

அவருக்கு என்னைப்போன்ற கருத்த நிறமுள்ள மாணவர்களை ஏன் சக ஆசிரியர்களைக்கூட கண்டாலே பிடிக்காது. வெறுப்பை நேரே முகத்திற்கு முன்னரே காட்டுவார். ஆகவே நான் அவருடைய வகுப்பில் படித்தாலும் என்னை அவருடைய எந்த நாடகத்திலும் தேர்வு செய்யமாட்டார்.

நான் ஆறாவது படித்து முடிக்கும்வரை செல்வராணி டீச்சருக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். அவருடைய எல்லா நாடகங்களிலும் குறிப்பாக கிறித்துவ மத வேதபுத்தகத்திலிருந்து தயாரிக்கப்படும் நாடகங்களில் நிச்சயம் நான் இருப்பேன். ‘மேக்கப் போட்டுட்டா கருப்பென்ன செவப்பென்னடா.. நல்லா வசனம் பேசி நடிச்சா போறும்.’ என்பார். அவர் வசனம் பேசி, நடித்துக்காட்டுவதில் பாதியை செய்தாலே போதும்.. சமாளித்துவிடலாம். அப்படியொரு திறமையான நடிகை அவர். அவரே பாடல்களை எழுதி ஒரு ஆர்மோனிய பெட்டி மற்றும் தபேலா சகிதம்  இசையமைத்து, அவரே பாடவும் செய்வார். இனிமையான குரலுக்கும் சொந்தக்காரர் அவர்.

எனக்கு நினைவிலிருக்கும்வரை எங்களுடைய பங்கு தேவாலயத்தில் (எனக்கு திருமணம் நடந்ததும் இதே தேவாலயத்தில்தான். அத்தனை வருடங்கள் ஒரே பங்கில் இருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!) செல்வராணி டீச்சர்தான் ஆர்மோனியத்தை வாசிப்பார். பாடகர் குழுவில் யார் வந்தாலும் வராவிட்டாலும் ஒற்றை ஆளாக இருந்து ஜமாய்த்துவிடுவார். பார்ப்பவர்களையெல்லாம் கடித்துக் குதறும் எங்களுடைய பங்கு குருவும் கூட செல்வராணி டீச்சரை தனி மரியாதையுடன் நடத்துவார்.

என்னுடைய பள்ளியில் ஆறாம் வகுப்புவரையிருந்த மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் ஒரு குழுவாகவும் அதற்குமேல் எட்டாவது வரை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் வேறொரு குழுவாகவும் பிரிந்து நிற்பதை பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ மாணவர்களும் அப்படித்தான்.

பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டங்களும் கூட இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறு நாட்களில்தான் நடக்கும். முதல் குழுவினருக்கு செல்வராணி டீச்சர் தலைவி என்றால் மெர்சி டீச்சர் இரண்டாவது குழுவுக்கு தலைவி.

ஆறாம் வகுப்பு வரை செல்வராணி டீச்சரின் நாடகங்களில் எல்லாவற்றிலும் நான் இருந்தேன். ஏழாம் வகுப்புக்கு மாறியதும் மெர்சி டீச்சர் எனக்கு வாய்ப்பளிப்பார் என்று காத்து ஏமாந்தது இப்போதும் நினைவிருக்கிறது. ஒருநாள் ஏமாற்றத்துடன் நான் வகுப்பில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தபோது செல்வராணி டீச்சர் வந்து என்னை அப்படியே அணைத்து ஆறுதலளித்து என்னை தேற்றியதும் இன்றும் நினைவில் நிற்கிறது. அன்று முதல் அவர்களுடைய நாடகங்களில் என்னையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அதுவே மெர்சி டீச்சருக்கும் அவருக்கும் இடையே இருந்த பகையை ஊதி பெரிதாக்கியது.

அவர்களுக்கிடையே அவ்வப்போது நடந்த சில்லறை தகராறுகளையும் வாக்குவாதங்களையும் இப்போது நினைத்து பார்க்கிறேன். வேடிக்கையாக இருக்கிறது..

நான் எட்டாவது முடித்து காட்பாடி செல்ல இதெல்லாம் மனதில் நீங்காத நினைவாக நின்றுபோனது..

அதன் பிறகு நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்தும் என்னுடைய பள்ளி இருந்த அதே சாலையில்தான் வசித்துவந்தோம். நாங்கள் சென்றதும் அதே தேவாலயம்தான்.

செல்வராணி டீச்சரை நான் பலமுறை சாலையில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் என்னை அவர் அடையாளம் தெரிந்தும் தவிர்க்க முயன்றதை பார்த்திருக்கிறேன். என்னுடைய பள்ளிப்பருவதில் நான் பார்த்த டீச்சரல்ல அவர். முகமெல்லாம் சோர்ந்துபோய், துள்ளல் இல்லாத நடையுடன் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். அப்போதெல்லாம், ‘என்ன டீச்சர் என்னெ அடையாளம் தெரியலையா.. நாந்தான் டீச்சர் போஸ்கோ’ என்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய பெயரைப் பற்றி ஒரு இடைச்செருகல். என்னுடைய முழுப்பெயர் தாமஸ் போஸ்கோ ரொசாரியோ ஜோசஃப் ஃபெர்னாண்டோ (அப்பாடா முழுசா மூச்சுவிடாம சொல்லிட்டேன்) முதல் பெயர் என்னுடைய தந்தையுடையது. இரண்டாவது, என்னுடைய தாய் மாமன் (இரண்டாவது மாமா) மூன்றாவது, என்னுடைய சித்தியின் பெயர் (Our Lady of Rosaryயைக் குறிக்கிறது எனவும் கொள்ளலாம்) நான்காவது பெயர் என்னுடைய தாத்தா சூசை மாணிக்கம். ஐந்தாவது, என்னுடைய குலப்பெயர். என்னுடைய பள்ளியிறுதி மற்றும் பி.காம் பட்ட சான்றிதழ்களிலெல்லாம் இந்த முழுப்பெயரும் இருக்கும்.. குலப்பெயரைத் தவிர.. என்னுடைய தந்தை நல்லவேளையாக இந்த குலப்பெயரை ஆரம்பத்திலேயே தவிர்த்திருந்தார். நான் பணியில் சேர்ந்தபோதுதான் அதை சுருக்கி டி.பி.ஆர். ஜோசஃப் என்று வைத்துக்கொண்டேன். (ஆமா, இது ரொம்ப முக்கியம்!)

செல்வராணி டீச்சர் தயக்கத்துடன், ‘தெரியாமயா.. நீ பண மரம் மாதிரி வளர்ந்து நிக்கற.. ஒங்கிட்ட நின்னு பேசறதுக்கே தயக்கமாருக்கு.. ஒங்கப்பாக்கிட்டதான் ஒன்னைய பத்தி அப்பப்ப கேட்டுக்குவேன்..’ என்றவாறு கழன்றுக்கொள்வார்.

என்னுடைய திருமணம் தூத்துக்குடியிலும் பின்னர் சென்னையில் இதே பங்கு ஆலய வளாகத்தில் வரவேற்பும் (Reception) நடந்தபோதுகூட ‘வரமுடியவில்லை போஸ்கோ’ என்று தன் சகோதரருடைய பிள்ளைகள் மூலம் செய்தியனுப்பியது நினைவிருக்கிறது.

அப்போதுதான் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார் என்பதை அறிந்துக்கொண்டேன். பிறகு அவரை சந்திக்கவே முடிந்ததில்லை.

பிறகு நானும் பதவி உயர்வு பெற்று ஊர் ஊராக மாறிச் சென்று 1987ம் ஆண்டு மீண்டும் சென்னை கிளை ஒன்றிற்கு மேலாளராக திரும்பி வந்தேன். சென்னை கீழ்ப்பாக்கம் அன்னை பாத்திமா பங்கு தேவாலயத்துக்கு அருகில் குடியிருந்தேன். அதே வளாகத்தில்தான் மெர்சி ஹோம் இருந்தது (ரஜினிகாந்தும் குட்டி மீனாவும் நடித்த ‘அன்புள்ள ரஜினி’ திரைப்படத்தை இங்குதான் படம் பிடித்தனர்).

என்னுடைய அலுவலக விஷயமாக அந்த மெர்சி ஹோம் இல்லத்தின் தலைவியாகவிருந்த கன்னியரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது, ‘ஒங்களுக்கு சேத்துப்பட்டுலருக்கற முதியோர் இல்லத்துல பார்ட் டைம் சோஷியல் ஒர்க்கரா வேல செய்யறதுக்கு விருப்பமா?’ என்றார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சரி என்று சம்மதித்தேன். அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலையே முதியோர் இல்ல தலைவியை சென்று சந்தித்து அந்த வார இறுதியிலிருந்தே என் பணியை துவக்கினேன்.

ஒவ்வொரு வாரமும் சனி மாலையும் ஞாயிறு காலையிலிருந்து நண்பகல் வரை சென்றால் போதும்.

இல்லத்திலிருந்த முதியோர்களுக்கு உணவூட்டுவது, அவர்கள் உடுத்த உதவுவது, சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து வளாகத்தினுள் மாலை உலா அழைத்து செல்வது இப்படிப்பட்ட சிறு, சிறு உதவிகளை செய்வதுதான் நம் பணியாக இருக்கும்.

இல்லத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்தனர். அவர்களுடன் மாலை நேரங்களில் அமர்ந்து அவர்கள் கூறுவதை கேட்பதும் ஒரு பணியாகும். ஆனால் அதுதான் மிகவும் சிரமமான பணி. ஒவ்வொருவருடைய கதையும் ஒரு தனி சோகம். கேட்கவே மனம் தாங்காது. அங்கு பணியாற்றிய சுமார் இரண்டாண்டு காலத்தில் (அதன்பிறகு மாற்றலாகி சென்றுவிட்டதுதான் காரணம்) எத்தனை நாள் நிம்மதியாக உறங்கியிருப்பேன் என்பது கேள்விக்குறி. அவர்களுடைய அனுபவத்தை கேட்டு  நம்முடைய மனம் அப்படி  பதறிப்போகும்.. அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகவே கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்..

அந்த இல்லத்திலேயே பலர் மரித்துவிடுவர். நாள்தோறும் ஒரு மரணமாவது இருக்கும். அந்த சமயங்களில் அவருடைய பிள்ளைகளும், சகோதர, சகோதரிகளும் போடும் நாடகங்களை நேரில் பார்க்கவேண்டும். என்ன உலகமடா இது என்று எண்ணத்தோன்றும்..

வாழ்ந்த காலத்தில் யாருக்கும் வேண்டப்படாதவர்களாகிவிடும் இவர்களுடைய மரணத்திற்குப்பிறகு சடலத்தை கொண்டு செல்ல துடிக்கும் துடிப்பு என்ன, மேள தாளத்துடன் அவர்களை அலங்கார ஊர்திகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதென்ன..

அப்படி பல மரணங்களை சந்தித்து வெறுத்துப்போய் நாளடைவில் அந்த சம்பவங்களையே கண்டுகொள்ளாமலிருக்க ஆரம்பித்தோம் நானும் என்னைப் போன்ற சக ஊழியர்களும்.

ஆனால் அன்று ஏனோ தெரியவில்லை என்னால் அப்படி இருக்க முடியவில்லை..

அந்த மரணத்திற்கு வந்திருந்த பலரும் எனக்கு அறிமுகவானவர்களாக இருந்தனர். அதாவது என்னுடைய பள்ளி தோழர்கள், என்னுடைய பழைய வேப்பேரி தேவாலய நண்பர்கள், பாடகர்குழுவைச் சார்ந்தவர்கள் என ஏறத்தாழ எல்லோருமே எனக்கு பரிச்சயமான முகங்களாகவே இருந்ததும் ஒரு காரணம்..

என்னை அடையாளம் கண்டுகொண்டு புன்னகை செய்த என் பள்ளி தோழன் ஒருவரை அணுகி, ‘யார்றா.. ஒங்க ஒறவுக்காரங்க யாராச்சுமா?’ என்றேன்.

அவர் வியப்புடன், ‘என்னடா போஸ்கோ தெரிஞ்சிதான வந்திருக்கே.. அப்புறம் எதுக்கு கேக்கே?’ என்றார்.

‘இல்லடா.. நா இங்கதான் பார்ட் டைம் ஒர்க்கரா இருக்கேன். எல்லா வாரமும் சனி, ஞாயிறு இங்கதான் இருப்பேன். அதான் வந்தேன்.. யார்றா இறந்தது?’ என்றேன்.

‘நம்ம செல்வராணி டீச்சர்றா. இன்னைக்கி காலைலதான் இறந்துருக்காங்க. டீச்சருக்கு பிரதர்ஸ், சிஸ்டர்சுன்னு இருந்தும் யாருமே அவங்க குடுத்த விலாசத்துல இப்ப இல்லையாண்டா.. என்ன அநியாயம் பாத்தியா? அப்படியே இருந்தாலும் அதெப்படிறா நமக்கு தெரிஞ்சிருக்கறப்ப அவங்க யாருக்கும் தெரியாம இருக்கும்? ஆனா இதுவரைக்கும் யாருமே வரல பாரேன்.. அதான் இங்கருக்கற சாப்பல்லயே பூசைய வச்சிட்டு நாங்களே கீழ்பாக்கம் கல்லறையில அடக்கம் செஞ்சிரலாம்னு நிக்கோம்.’

நாமளும் போன ஒரு மாசமா இங்க வந்துக்கிட்டிருக்கோம். இவங்கள மிஸ் பண்ணிட்டோமே என்று மாய்ந்து போனேன். கூட்டத்தை விலக்கிக்கொண்டு தேவாலய பீடத்திற்கு முன்பு சவப்பெட்டியில் வைத்திருந்த உருவத்திற்கு அருகில் சென்று பார்த்தேன். ‘இவங்களா, இவங்களா என்னோட செல்வராணி டீச்சர்?’என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய உருவம் முற்றிலுமாக சீர்குலைந்து போயிருந்தது. இவர்களை நான் பலமுறை இதே இல்லத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று நினைத்தபோது மனம் ஆறவில்லை..

பிறகுதான் தெரிந்தது..

அவர் வளர்த்து ஆளாக்கிவிட்ட இரு சகோதரர்களும், சகோதரிகளும் நல்ல நிலையில் சென்னையிலேயே இருந்தும் யாரும் அவரை தங்களுடன் வைத்து காப்பாற்ற விரும்பவில்லை என்று..

‘பாவிப்பயலுக.. வாழ்ந்தபோது வராட்டாலும் சாவுக்காவது மூனாம் மனுசங்கபோல வந்து போகக்கூடாது?’ என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மரணத்துக்கு வந்திருந்த ஒரு வயதானவர்..

அதானே?********


21 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 176

சுற்றுச் சுவர் எழுப்புதல்..

சாதாரணமாக இரு நாடுகளுக்கிடையில் எல்லைப் பிரச்சினை இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இந்திய துணைகண்டத்தில் அமைந்திருக்கும் எல்லா நாடுகளுக்கிடையிலும் இந்த பிரச்சினை இருக்கிறது..

ஏன் இப்போதெல்லாம் மாநிலங்களுக்கிடையிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

நாடுகளும் மாநிலங்களும் தங்களுக்குள் ஒரு கிலோ மீட்டர் நிள அகல நிலங்களுக்கு சண்டையிட்டுக்கொள்வதை பார்த்த நாம் ஒரு அடி நீள அகல துண்டு நிலத்துக்காக சண்டையிட்டுக்கொள்வதில் தப்பில்லையே..

கிராமப்புற, நகர மற்றும் பெரு நகர மக்களிடையிலும் இந்த போக்கு சர்வசாதாரணமாக காணப்படுகிறது.

ஓரடிக்கு ஈரடி நிலப் பரப்பிற்காக வெட்டுண்டு மாண்டவர் ஏராளம், ஏராளம். இதில் அப்பா-மகன், அண்ணன் - தம்பி என்ற உறவுகள் எல்லாமே அடிபட்டுப்போவதையும் பார்த்திருக்கிறோம்.

அப்படித்தான் நடந்தது என்னுடைய விஷயத்திலும்.

என்னுடைய நிலத்தில் வடக்கே பிரையண்ட் நகர் சாலை. தெற்கே ஒரு காலி வீட்டு மனை, கிழக்கேயும் இருந்த ஒரு காலி மனையில் ஒரு சிறிய ஓட்டு வீடும் அதன் பின்புறத்தில் ஒரு எடுப்பு கழிவறையும்.. மேற்கே நண்பர் ராஜேந்திரனின் வீடு.

என் நிலத்திற்கும் ராஜேந்திரனுடைய நிலத்திற்கும் இடையில் அவர் எழுப்பிய செங்கற்சுவர் இருந்தது. ‘சார் நமக்குள்ள இது என் சுவர், உங்க சுவர்னு பிரச்சினையெல்லாம் வரக்கூடாது. இது நான் வீடு கட்டறப்போ என்னுடைய பாதுகாப்புக்காக கட்டுனது. இந்த ஏரியா நான் வீடு கட்டுனப்போ பொட்டல் காடா கிடந்தது. அதனால நாலு பக்கமும் றடிக்கு சுவர என் செலவுலயே கட்டுனேன். இப்ப போய் உங்கபக்கம் கட்டுன சுவருக்கு நீங்க பாதி பணம் தாங்கன்னு கேக்கறதெல்லாம் நாகரீகமில்லா செயல்னு எனக்கு படுது. இருந்தாலும் ரெக்கார்டுக்கு இது நம்ம ரெண்டுபேருக்கும் பொது சுவர்னுன்னே வச்சுக்குவோம். அந்த பக்கம் நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம்.’ என்றார் பெருந்தன்மையுடன்.

னால் கிழக்கே இருந்த நில உரிமையாளரைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவருக்கு அதற்கு கிழக்கேயும் ஒரு நிலம் இருந்தது. அதில்தான் அவர் வீடு கட்டியிருந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். அவளுக்கு சீதனமாக கொடுக்க அந்த நிலத்துக்கும் என்னுடைய நிலத்துக்கும் இடையிலிருந்த நிலத்தை வாங்கி ஒரு சிறு அறை மட்டும் உடைய ஓட்டு வீட்டை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். நிலம் காலியாக கிடந்தால் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் மட்டுமே அந்த வீடு.

அவர் ஒரு அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகவும் அவருடைய மனைவி அரசு ரம்ப பள்ளியில் சிரியையாகவும் இருந்தனர். கணவர், மனைவி இருவருமே நல்லவர்கள்தான் என்றாலும் தங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களென ராஜேந்திரன் குடும்பத்தினர் மதிப்பதில்லை என்ற சிறுவருத்தம் இருந்தது. அத்துடன் அவர்கள் இருவருமே சுபாவத்திலேயே சட்டென்று சினம் கொள்பவர்கள் என்பதாலும் இவ்விரு குடும்பங்களிடையேயும் சுமுகமான உறவு இல்லை என்பதை ரம்பத்திலேயே அறிந்துவைத்திருந்த நான் அதைக்கண்டுக்கொள்ளாமல் இரு குடும்பத்தினரிடையேயும் சமமாகவே பழகிவந்திருந்தேன்.

அவர்தான் என்னுடைய மேஸ்திரியினுடைய ட்கள் சிமெண்டை களவாடியதை கேள்விப்பட்டு அவர்களை அடிக்கப்போய் அநியாயமாக அடிபட்டவர். என்னை கலந்துக்கொள்ளாமல் காவல்துறையினரிடம் புகார் செய்து பிறகு என்னுடைய வற்புறுத்தலால் அதை பின்வாங்கியவர். அந்த மனவருத்தம் வேறு இருந்தது.

அந்த மனவருத்தும் நான் வீட்டு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பல சமயங்களிலும் சிறு சிறு சச்சரவாக வெளிபட்டுக்கொண்டே இருந்தது. சில சச்சரவுகள் உண்மையிலேயே சிறுபிள்ளைத்தனமானது என்பதால் அதை இங்கு எழுதினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள். கவே அது தேவையில்லை என்று விட்டுவிடுகிறேன்.

னால் வீட்டைச் சுற்றி சுவர் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக என்னுடைய நிலத்துக்கும் அதற்கு கிழக்கே இருந்த அவருடைய நிலத்துக்கு இடையிலிருந்த நிலத்தை அளக்க முற்பட்டபோது எழுந்த பிரச்சினை சிறுபிள்ளைத்தனமானதல்ல.

அந்த இடைபட்ட நிலத்தை அளக்க முக்கியமான காரணம் சுவர் சாலையிலிருந்து என்னுடைய நிலத்தின் பின்புறம் வரை நேராக அதாவது கோணல்மாணலாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

ராஜேந்திரன் வீட்டுக்கும் என்னுடைய நிலத்துக்கும் இடைபட்ட தூரம் பத்தடி இருந்தது. அதாவது எந்த ஒரு வீட்டைச் சுற்றியும் ஐந்தடி தூர இடைவெளி இருக்க வேண்டும் என்பது முனிசிபல் நியதி. ராஜேந்திரனும் வீட்டைக்கட்டும்போது இந்நியதியைக் கடைப்பிடித்திருந்ததால் நிலத்தின் முகப்பிலிருந்து பின் விளிம்பு வரை இடைவெளி ஒரே சீராக பத்தடி இருந்தது.

னால் என்னுடைய நிலத்திற்கு கிழக்கே இருந்த நிலத்துக்கிடைய இருந்த இடைவெளி முகப்பில் பத்தடியில் துவங்கி, போகப் போக சுருங்கி சுமார் நான்கு, நான்கரை அடியாக இருந்தது நிலத்தை அளக்கும்போது தெரியவந்தது.

நிலத்தின் மொத்த அளவான 33X66 அடி என்று வைத்து பார்த்தால் என்னுடைய நிலத்தில் காலி இடம் 5X66=330 அடி இருக்க வேண்டும். நிலத்தை விட்டுத்தள்ளுங்கள். னால் சாலையிலிருந்து எழுப்பப்பட்டும் சுற்றுச் சுவர் நிலத்தின் தெற்கே கட்டப்படும் சுவரோடு சென்று சேரவேண்டுமென்றால் வழி நெடுக ஒரே சீராக ஐந்தடி நிலம் வேண்டியிருக்குமல்லவா?

எங்கள் இருவர் நிலத்துக்கும் இடையில் சுவருக்கு பதிலாக பனை மட்டைகளை வைத்து வேலியடித்திருந்ததால் அது நாளடைவில் இடம் பெயர்ந்து என்னுடைய நிலத்திற்குள் வந்திருக்கலாம் என்றார் என்னுடைய பொறியாளர். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

ஆகவே என்னுடைய பொறியாளர் பரிந்துரைத்தபடி என்னுடைய மேஸ்திரி மற்றும் அவருடைய ட்களை வைத்து பனைமட்டை வேலியை அப்படியே பெயர்த்தெடுத்து என்னுடைய அஸ்திவார விளிம்பிலிருந்து ஐந்தடி அளந்து என்னுடைய நிலத்தின் எல்லையில் பொருத்தினோம்.

எனக்கோ, என்னுடைய பொறியாளருக்கோ மிகச்சாதாரணமாக தெரிந்த அந்த செயல் அந்த நில உரிமையாளருக்கு அக்கிரம செயலாக தெரிந்தது. அதுவும் அவர்கள் இல்லாத நேரத்தில் நாங்கள் செய்த செயல் திருட்டுத்தனமான, அடாவடித்தனமானதாக தோன்றியது.

அவரும் அவருடைய மனைவியும் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அக்கம்பக்கத்து ஆட்கள் வத்தி வைக்க அன்று இரவே விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

முந்தைய நாள்வரை என்னுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவர் இந்த பிரச்சினையை குறித்தும் என்னுடன் பேசியிருக்கலாம். மனிதர் அப்படி செய்யாமல் நேரே சென்று போலீசில் புகார் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அதுவும் யாரிடம்? என்னுடைய மைத்துனர் நில விவகாரத்தில் தலையிட்டு அடாவடியாக நடந்துக்கொண்ட ஆய்வாளரிடம். என்னுடைய நிலமும் அவருடைய அதிகார எல்லைக்குள் இருந்ததுதான் காரணம்!

எனக்கும் அந்த ஆய்வாளருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை என்பது விஷயம் சுமுகமாக தீர்க்கப்பட்டதும்தான் எனக்கு தெரியவந்தது.

ஆனால் அதை சுமுகமாக தீர்க்க நான் பட்டபாடு?

தொடரும்..

20 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 175

‘சார் நேத்து நீங்க வந்தப்போ ஒங்க தேவையை சரியா புரிஞ்சிக்காம ஒரு ரேட் சொல்லிட்டேன். எம் பையன் சாயந்திரம் வந்து என்னைய சத்தம் போட்டுட்டான். அதனால..’ என்று இழுத்தார்.

அவருடைய தயக்கத்தின் காரணத்தை புரிந்துக்கொண்ட நான் புன்னகையுடன், ‘சொல்லுங்க.. இப்ப என்ன ரேட்?’

அவர் கூறிய விலையை கேட்டதும் முந்தைய நாள் என்னுடைய மேஸ்திரியிடம் கூறிய கணக்கு என்னுடைய நினைவுக்கு வந்தது. மேஸ்திரி நான் கூறிய கணக்கை உடனே அமர்ந்து ‘கணக்கு’ செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

கடப்பா தட்டுகளுக்கு இன்று பட்டறை உரிமையாளர் கூறிய விலை மேஸ்திரியைக்கொண்டு கான்க்ரீட் தட்டுகளை செய்வதைவிட சுமார் ஐம்பது சதவிகிதம் கூடுதல் என்பது புரிந்தது.

இருந்தாலும் வீம்புக்கு இதையே வாங்கினால் என்ன என்று எனக்கு தோன்றினாலும் அதனால் நஷ்டமடையப் போவது நான்தானே என்றும் தோன்றியது.

‘சரிங்க.. அப்புறமா வந்து சொல்றேன்.’ என்று கிளம்பினேன்.

அவருக்கு என்ன தோன்றியதோ என் பிறகே வந்தார். ‘சார்.. என்ன கிளம்பிட்டீங்க? நான் சொல்றது இருக்கட்டும் சார். நீங்க ஒங்களுக்கு கட்டுபடியாகற ரேட்ட கேளுங்களேன்.’

நான் திரும்பி அவரை ஆழமாக பார்த்தேன். ‘ஏண்ணே.. நா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?’

அவருக்கு புரிந்திருக்கவேண்டும். தலையை குனிந்துக்கொண்டார்.

இனிமேலும் அவரை புண்படுத்த விரும்பாமல் அங்கிருந்து கிளம்பினேன்.

அலுவலகம் செல்லும் வழியெல்லாம் இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தவாறே சென்றேன்.

என்னுடைய மேஸ்திரியிடமோ அல்லது பொறியாளரிடமோ இதைப் பற்றி பேசுவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்பது எனக்கு புரிந்தது.

பட்டறைக்கு அவர் சென்றதை நான் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளக் கூடாது என்றும் ஏதோ நானே மனம் மாறி கடப்பா தட்டுகளுக்கு பதிலாக கான்க்ரீட் தட்டுகளை அவரைக் கொண்டே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு உணர்த்தவேண்டும் என்ற தீர்மானத்துடன் என்னுடைய அலுவலகத்தையடைந்து என்னுடைய அலுவல்களில் மூழ்கிப்போனேன்.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் என்னுடைய மேஸ்திரி வரவில்லையென்பதால் அவருக்கு நான் பட்டறைக்குச் சென்று விசாரித்ததும் கடப்பா கற்கள் வேண்டாமென்று நான் முடிவெடுத்திருந்ததும் தெரிந்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். அடுத்த கட்ட வேலையை துவங்க இன்னும் ஒருவாரம் இருந்ததால் நானும் அவராகவே வரட்டும் என்று காத்திருந்தேன்.

மூன்று நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை மேஸ்திரி மட்டும் தனியாக வந்தார். வீட்டைச் சுற்றிலும் ஒருமுறை வலம் வந்தார். அப்போதுதான் அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்த நான் அவரைப் பார்த்து, ‘என்ன மேஸ்திரி பாக்கீங்க?’ என்றேன்.

‘ஒன்னுமில்ல சார். நாளைலருந்து ஸ்லாப் வேலைய துவக்கலாம்னு பாக்கேன். கடப்பா ஸ்லாப் வாங்கி வைக்கறேன்னு சொன்னீங்களே. அதான் வாங்கிட்டீங்களான்னு பாத்தேன். ஒன்னும் காணலையே சார்.. வாங்கலீங்களா?’

நான் பதிலேதும் கூறாமல் அவரையே சற்று நேரம் பார்த்தேன்.

‘என்ன சார்? வாங்கினீங்களா இல்லையா? வாங்கலன்னா மேக்கொண்டு என்ன செய்யறதா உத்தேசம்?’

நான் சற்று நேரம் யோசித்தேன். பிறகு அவரை வைத்தே கான்க்ரீட் தட்டுகளை செய்வதென தீர்மானித்திருந்ததை கூறினேன்.

அவரால் நம்பமுடியவில்லை. ‘என்ன சார்? என் வேலைய அன்னைக்கி கிண்டலடிச்சீங்க? இப்ப என்ன திடீர்னு?’

நான் அவரை கூர்ந்து பார்த்தேன். ‘இல்ல மேஸ்திரி.. நான் சொல்றபடியே நீங்க செஞ்சீங்கன்னா போறும்.. சைசும் சின்னதா நான் நெனச்சா மாதிரியே வரும். செலவையும் சுருக்கிரலாம்.’ என்றேன்.

அவருக்கு நான் கூறியது புரிந்ததோ இல்லையோ, ‘அப்ப நாளைக்கு கம்பி கட்டுறவங்களயும் வரச் சொல்லலாம் இல்ல?’ என்றார்.

‘வரச்சொல்லுங்க. மொத்தமா இன்னும் இருபது ஸ்லாபுங்க வேணும். வேணுங்கற கம்பி இங்கயே லோக்கலா வாங்கி வச்சிருக்கேன். ஆனா நாளைக்கு நீங்களும் சித்தாளுங்களும் வரவேணாம். நான் எல்லா ஸ்லாபுகளுக்கும் உண்டான கம்பிய கட்டி முடிச்சிட்டு அவங்ககிட்டவே சொல்லியனுப்பறேன். அப்புறம் வந்தாப்போறும்.’

நான் கூறியதில் அவருக்கு திருப்தியில்லை என்பது அவருடைய பார்வையிலிருந்தே புரிந்தது. என்றாலும் அவர் பதிலேதும் கூறாமல் சைக்கிளில் ஏறிச் சென்றார்.

அவர் மறையும்வரை காத்திருந்தாற்போல் என்னுடைய நண்பர் ராஜேந்திரன் அவருடைய வீட்டு வாசலிலிருந்து என்னை அழைத்தார்.

‘என்ன சார், மறுபடியும் ஏதாச்சும் பிரச்சினையா? கோச்சிக்கிட்டு போறா மாதிரி தெரியுது?’ என்றார் சிரித்தவாறு..

‘ஆமா சார். ஆனா டாக்ட்ஃபுல்லா ஹேண்டில் பண்ணிட்டேன்னு நினைக்கேன். பார்ப்போம்..’ என்று அதை மேலும் விவரிக்காமல் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் விடுப்பு எடுத்துக்கொண்டு வேலையாட்களுடன் அமர்ந்து எனக்கு தேவையான தட்டுகளுக்கு கம்பி கட்டி முடித்தேன். பிறகு அவர்களை அனுப்பிவிட்டு அடுத்த நாள் ராஜேந்திரன் ஏற்கனவே எனக்கு அறிமுகப்படுத்தியிருந்த கொத்தனாரையும் சித்தாளையும் வைத்து சமையலறை அலமாரிக்கு தேவையான தட்டுகளை என்னுடைய நேரடி பார்வையில் முக்கால் இஞ்ச் உயரத்துக்கும் கூடாமல் போட்டு முடித்தேன். கீழ் பாகமும் சீராக இருக்க வேண்டுமென்று ஏற்கனவே மேஸ்திரி தயார் செய்துவைத்திருந்த கான்க்ரீட் தட்டுகளின் மீது வைத்து போடச் சொன்னேன்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் தண்ணீர் விட்டு அதே கொத்தனாரை அழைத்துவந்து தட்டுகளை பெயர்த்தெடுத்தேன். நான் விரும்பியதுபோலவே கச்சிதமாக இருந்தது. கொத்தனாரை நன்றியுடன் பார்த்தேன்.

சாதாரணமாக ஒரு மேஸ்திரி வேலை செய்துக்கொண்டிருக்கும் இடத்தில் வேறொருவர் வந்து வேலையை செய்யமாட்டார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே இவரை அழைத்ததுமே வந்து செய்து கொடுத்தாரே என்ற நன்றியுணர்வு எனக்கு.

‘நீங்க நாளையும் அடுத்த நாளும் வந்திருந்து மீதியிருக்கற எல்லா ஸ்லாபுகளையும் இதே சைஸ்ல போட்டுகுடுத்தா நல்லாருக்கும்’ என்றேன்.

அவரோ ‘சார் நீங்க ஒரு ஷெல்புக்கு மட்டும் போட்டு குடுங்கன்னு சொன்னாதால எனக்கு இதுல அவ்வளவா விருப்பமில்லேன்னாலும் ராஜேந்திரன் சாருக்காக செஞ்சி குடுத்தேன். மீதியிருக்கறத ஒங்க மேஸ்திரிய வச்சி போட்டுக்கறதுதான் சார் நல்லது. அப்படி அவர் இந்த வேலைய செய்ய மாட்டேன்னு சொன்னா நா வந்து செஞ்சி தரேன்.’ என்றவாறு விலகிக்கொண்டார்.

ஆக என்னுடைய மேஸ்திரியை இந்த விஷயத்தில் எப்படி எதிர்கொள்வது என்று சிந்தனையில் அன்று இரவு முழுவதும் கழிந்தது.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் என்னுடைய வட்டார மேலாளர் என்னுடைய கிளைக்கு முந்தைய இரு மேலாளர்களுடன் வந்திருந்ததால் இதைப்பற்றி சிந்திக்கவே நேரமில்லாமற்போனது.

வார இறுதியில் என்னுடைய பொறியாளர் மட்டும் தனியாக வந்திருந்தார். அதுவும் நல்லதாக போனது.

அவரிடம் அவருடைய மேஸ்திரி இட்டு வைத்திருந்த தட்டுகளையும் நான் வேறொரு கொத்தனாரை வைத்து இட்டிருந்த தட்டுகளையும் காண்பித்தேன். அத்துடன் மேஸ்திரி கடப்பா பட்டறைக்குச் சென்று செய்திருந்த சில்மிஷத்தையும் சுருக்கமாக எடுத்து கூறினேன்.

அவருடைய மவுனமும் அவருடைய முகம் போன போக்குமே அவருடைய மனதிலிருந்த குற்ற உணர்வை தெளிவாக காட்டிக்கொடுத்தது. ஆனாலும் அதை குத்திக்காட்டாமல் இருந்தேன்.

‘சரி சார். நீங்க சொல்றது புரிஞ்சிது. நாளைலருந்து மேஸ்திரிய வரச்சொல்றேன்.. நீங்க சொல்றா மாதிரியே அவர் போட்டு தந்துருவார். அதுக்கு நான் கியாரண்டி.’ என்றவாறு கிளம்பிச் சென்றார்.

அவர் கூறியபடியே அடுத்த நாள் முதல் மேஸ்திரியும் அவருடைய ஆட்களும் நாள் தவறாமல் வந்திருந்து மீதமிருந்த வேலைகளை அடுத்த நாற்பத்தைந்து நாட்களில் முடித்து தர வீட்டைச் சுற்றிலும் இடவேண்டிய காம்பவுண்ட் சுவரைத் தவிர எல்லா வேலைகளும் மளமளவென முடிந்தது.

அடுத்து என்னுடைய வேறொரு நம்பகமான வாடிக்கையாளர் அமைத்து கொடுத்திருந்த ஆசாரி தன்னுடைய வேலைகளை துவங்கி அடுத்த இருபது நாட்களுக்குள் வீட்டுக்கு தேவையான வாசல் மட்டும் ஜன்னல் கதவுகள், சுவர் அலமாரிகளுக்கு தேவையான ப்ளைவுட் கதவுகள், ஷ்ட்டர்களை சிறப்பாக முடித்து கொடுத்தார்.

அடுத்து தூத்துக்குடியிலேயே பிரபலாமாயிருந்த ஒலி, ஒளி அமைப்பாளர்களான ஒரு நிறுவனத்தின் உரிமையாளருடைய மேற்பார்வையில் அடுத்த பத்து நாட்களில் மின்சார வயரிங் வேலைகளும் முடிந்தது.

அடுத்து ராஜேந்திரன் பரிந்துரைத்த மொசைக் தரை இடுபவரை வரவழைத்து அந்த வேலையும் அடுத்த இரண்டு நாட்களில் முடிந்தது.

அடுத்து என்ன?

வீட்டைச் சுற்றிலும் சுவரெடுக்க வேண்டியதுதான் பாக்கியிருந்தது.

அதையும் முடித்து என்னுடைய குடிசைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பை என்னுடைய புதுவீட்டுக்கு நீட்டி எடுத்தால் மொசைக் தரை பாலிஷ் வேலையை துவக்கிவிடலாம்..

ஏற்கனவே சுவருக்கு வண்ணம் பூசுபவரை அமர்த்தி செம் ஒரு கோட் அடித்து முடித்திருந்ததால் தரை பாலிஷ் வேலை முடிந்ததும் வண்ணம் பூசும் வேலையையும் முடித்தால் கிரஹப்பிரவேசத்திற்கு நாள் குறித்திவிடலாம் என்ற நினைப்பில் படுக்கச் சென்றேன்..

சுற்றுச் சுவர் எழுப்புதல்.. புதுவீட்டுக்கு மின்சார இணப்பை நீட்டுதல்..

இந்த இரண்டு வேலைகளிலும் நான் எதிர்பாராத சிக்கல்கள் எழப்போகின்றன என்பதை உணராதவனாய்..


தொடரும்..

19 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 174

(இதைப் படிக்க இங்கு செல்லுங்கள் http://mail.google.com/mail/?view=att&disp=attd&attid=0.1&th=10c8549887db476f)

லிண்டெல் மட்டத்தில் கான்க்ரீட் பெல்ட் இட்டு முடிக்கும்வரை பல தடங்கல்களை சந்தித்த என்னுடைய வீட்டின் கட்டுமானப்பணி அதற்குப் பிறகு மளமளவென நடந்தது.

ஸ்டார்ட்டிங் ட்ரபிள் என்பார்களே அதுபோல் அஸ்திவார நிலையிலிருந்து எனக்கும் என்னுடைய பொறியாளர் மற்றும் மேஸ்திரி கூட்டணிக்கும் இடையே இருந்த தன்மான போராட்டங்கள் நாளடைவில் வேலையின் மும்முரத்தில் குறைந்து பிறகு முற்றிலும்  இல்லாமல்போனது.

இதற்கு என்னுடைய நண்பர் ராஜேந்திரனின் தலையீடு குறைந்துபோனதும் ஒரு காரணம். என்ன காரணத்தினாலோ அவருடயை தலையீட்டை பொறியாளர்-மேஸ்திரி கூட்டணிக்கு அறவே பிடிக்கவில்லை. இதையுணர்ந்த ராஜேந்திரனும் இரவு நேரங்களில் என்னிடம் பேசுவதோடு நிறுத்திக்கொண்டார்.

ஆனாலும் மேஸ்திரி என்னுடைய கட்டுமானப் பொருட்களை வீணடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவர் வேண்டுமென்றே இதைச் செய்தாரா இல்லை அவருக்கு அனுபவம் போறாத காரணத்தால் அவரையுமறியாமல் இதைச் செய்தாரா என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

இதில் நான் மேலே கூறிய இரண்டாவது ஐயம் எனக்கு ஏற்பட காரணமாயிருந்தது  சுவர் அலமாரிகளுக்கு தட்டுகளைத் தயாரிப்பதில் அவர் செய்த குளறுபடி. அவருடைய செய்கையால் எனக்கு பணமும் நேரமும் வீணானதுதான் மிச்சம். அத்துடன் அவருடைய வேலையின் தரமும் எனக்கு மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது.

சுவர் அலமாரிகளுக்கு கடப்பா கருங்கற்களிலான தட்டுகள் வைப்பது இப்போதெல்லாம் சென்னையில் மிகவும் சகஜமாகிவிட்டது. ஏன், நான் சென்னையில் வசித்து வந்த குடியிருப்பில் அப்போதே இத்தகைய தட்டுகளைக் கொண்ட அலமாரிகள்தான்.

ஆகவே என்னுடைய வீட்டிலும் இத்தகைய தட்டுகளை வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை என்னுடைய பொறியாளரிடமும் மேஸ்திரியிடமும் கூறினேன். பொறியாளரோ, ‘சார் அதெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும்னு காரண்டி குடுக்க முடியாது. பின்னால ஏதாச்சும் ஹெவியா ஜாமான வச்சி தட்டு ரெண்டா ஒடங்சிருச்சின்னு நீங்க புகார் சொன்னீங்கன்னா என்னால ஒன்னும் செய்யமுடியாது. யோசிச்சிக்குங்க. அதுவுமில்லாம தூத்துக்குடியில க்வாலிட்டியான கல்லெல்லாம் கிடைக்கும்னு எனக்கு தோனல. மதுரையிலோ இல்லன்னா திருநெல்வேலியிலோ கிடைக்கலாம். நமக்கு வேண்டிய அளவுல வெட்டி குடுப்பாங்களான்னு கேட்டுப்பார்த்தாத்தான் தெரியும்.’ என்று கழன்றுக்கொண்டார்.

மேஸ்திரியோ ஒரு ஏளனச் சிரிப்புடன், ‘என்ன சார் நீங்க. கான்க்ரீட் ஸ்லாபே சில சமயத்துல ஒடஞ்சி விழுந்துருது. நீங்க கடப்பா கல்லுங்கறீங்க? அதெல்லாம் சரிபட்டு வராது சார். நானே கம்பி கட்டி சூப்பரா ஒரு அலமாரிக்கு வேண்டியத போட்டு தாரன். பார்த்துட்டு சொல்லுங்க.’ என்றார்.

அப்போது தளம் போட்டு முடித்திருந்தது. இனி அலமாரிகளை அமைத்து பூச்சு வேலையும் செய்து முடித்தால் முக்கால் வீடு முடிந்த மாதிரிதான். மேஸ்திரியுடைய யோசனையில் எனக்கு எந்தவித ஒப்புதலும் இல்லையென்றாலும் இந்த நேரத்தில் இவரை பகைத்துக்கொள்ள வேண்டுமா என்று நினைத்து, ‘சரிங்க மேஸ்திரி. கிச்சன் அலமாரிக்கு வேண்டிய ஸ்லாப செய்ங்க. பாத்துட்டு சொல்றேன்.’ என்றேன்.

அவர் வேலையை துவக்கிய விதமே எனக்கு அதிருப்தியை அளித்தது. ‘என்ன மேஸ்திரி மணல் தரையில வச்சி போடறீங்க? கீழ் பகுதி ஒழுங்கில்லாமல்ல இருக்கும்?’ என்றேன். அவர் அலட்சியமாக, ‘சார் ஒன்னு நீங்க செய்ங்க. இல்லன்னா நா செஞ்சி முடிக்கற வரைக்கும் பொறுமையா இருங்க.’ என்றார்.

அவர் தொடர்ந்து செய்வதைப் பார்த்து பொறுமையிழந்த நான் அதற்கு மேலும் அங்கு நின்று அவர் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் கோபத்தில் ஏதாவது சொல்லப்போய் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிடுமோ என்ற அச்சத்தில் என் மனைவியிடம் ‘அப்பப்போ வந்து பாத்துக்க’ என்று கூறிவிட்டு ஏற்கனவே எடுத்திருந்த விடுப்பை ரத்து செய்துவிட்டு அலுவலகம் திரும்பினேன்.

அவர் சமையலறைக்குத் தேவையான தட்டுகளை செய்து முடிக்கும்வரை அதை சென்று பார்ப்பதில்லை என்றும் தீர்மானம் செய்து அந்த வேலை நடந்த பக்கமே செல்லாமலிருந்தேன் ஒரு வார காலம்.

கூரையை அமைத்து பதினைந்து நாட்கள்வரை தண்ணீர் விட்டு கெட்டிப்படுத்த வேண்டியிருந்ததால் அலமாரி தட்டுகளை அமைக்க மேஸ்திரியும் இரண்டு சித்தாள்கள் மட்டுமே வேலைக்கு வந்து சென்றனர்.

ஒரு வார காலம் முடிந்ததும் மேஸ்திரியாகவே வந்து, ‘சார் வாங்க. வந்து நம்ம வேலைய பார்த்துட்டு சொல்லுங்க.’ என்றார் பெருமையுடன்.

முந்தைய நாள் இரவுதான் அவர் வீடு திரும்பியதும் நான் பொறுக்கமாட்டாமல் சென்று பார்த்திருந்தேன். அவருடைய வேலையின் தரத்தைக் கண்டு கொதித்துபோய் ராஜேந்திரனையும் அழைத்து காண்பித்திருந்தேன்.  

இருப்பினும் என்னுடைய கோபத்தை வெளியே காட்டாமல் அவருடன் சென்றேன். அவர் தட்டுகளை மூடியிருந்த சாக்கு துணியை எடுத்து பெருமிதமாக, ‘பாத்தீங்களா சார். இந்த அளவுக்கு ஸ்மூத்தா அதே சமயத்துல ஸ்ட்ராங்கா ஒங்க கடப்பா ஸ்லாப் இருந்துருமா?’ என்றார்.

நான் சலிப்புடன், ‘ஒன்னு செய்ங்க மேஸ்திரி. இந்த ஸ்லாபுகள ஒங்களுக்கு சும்மாவே குடுத்துடறேன். ஒங்க வீட்லயோ இல்ல நீங்க வேற எங்கயாச்சும் வீடு கட்றீங்கன்னா அங்கயோ வச்சிக்குங்க. என் வீட்ல வேணாம்.’ என்றேன்.

மேஸ்திரியின் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே. ‘என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? போன ஒருவாரமா என் வேலைய எல்லாம் விட்டுப்போட்டு செஞ்சிருக்கேன். நான் இதுவரைக்கும் கட்ன வீட்லல்லாம் என் கைபடதான் சார் ஸ்லாப செய்யறது வழக்கம். யாருமே இதுவரைக்கும் ஒங்கள மாதிரி சொன்னதில்ல சார்.’ என்றார்.

நான் இதைக்குறித்து மேலும் விவாதிக்க விரும்பாமல், ‘மேஸ்திரி நீங்க ஒன்னு செய்ங்க. வீட்ல நாம வைக்கப்போற எல்லா அலமாரி தட்டுங்களோட அளவையும் எழுதி குடுங்க. இங்க போல்ட்டன்புரத்துல ஒரு கடப்பா ஸ்டோன் பட்டறை இருக்கறத பார்த்தேன். எல்லாத்தையும் அவங்கக்கிட்டவே ஆர்டர் செஞ்சா வெல கொறச்சி தரேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க ஃபிட் பண்ணி குடுத்தா போறும்.’ என்றேன்.

அவர் அவ்வளவு எளிதில் சம்மதிப்பதாயில்லை. ‘சார் நீங்க வேணுக்குன்னே என்னைய அவமானப் படுத்தறீங்க. இதுல என்ன கொறைய நீங்க கண்டுட்டீங்க. சொல்லுங்க.’

நான் என்னுடைய கையோடு கொண்டு வந்திருந்த மெட்டல் டேப்பைக்கொண்டு அவர் இட்டிருந்த தட்டுகளில் ஒன்றின் உயரத்தை (Thickness) அளந்தேன். ‘இத பார்த்தீங்களா, ரெண்டு இஞ்ச் இருக்கு. அலமாரியோட மொத்த ஒயரமே ஆறடி. நீங்க செஞ்சிருக்கற ஆறு ஸ்லாபையும் அதுல ஏத்துனேன்னு வைங்க. தட்டுங்களுக்கு நடுவுல பத்து இஞ்ச் கூட முழுசா கிடைக்காது. கடப்பா கல் ஸ்லாபுன்னா அதிகபட்சம் போனா அரை இஞ்ச் இருக்கும்.’

மேஸ்திரி நக்கலுடன், ‘இருக்கும். சாமான் வச்சீங்கன்னா ரெண்டா ஒடஞ்சி விழும்.’ என்றார்.

அதுவரை பொறுமையுடன் இருந்த நான், ‘சும்மா பேச்சுக்கு விவாதம் பண்ணாதீங்க. கிச்சன் ஷெல்ஃப்ல என்ன ஆட்டுக்கல்லையா தூக்கி வைக்கப்போறேன்? மளிகை சாமாங்கள தானங்க? நீங்க என்னமோ ஒரு யானைய தூக்கி வைக்கறாமாதிரி ஸ்லாபுக்கும் மேலயும் கீழயும் முக்கால் இஞ்ச் அளவுக்கு சிமெண்ட பூசி வச்சிருக்கீங்க? இந்த ஸ்லாப போடறதுக்கு நீங்க யூஸ் செஞ்ச கம்பி, கான்க்ரீட், பூச்சுக்கு சிமெண்ட், ஒங்களுக்கும் சித்தாள்ங்களுக்கும் குடுத்த கூலிய கணக்கு பண்ணா கடப்பா ஸ்லாபோட விலையவிட கூடத்தான் இருக்கும். இந்த சைஸ் ஸ்லாபுகள் வச்சி ஷெல்ஃப செஞ்சேன்னு வைங்க. பாக்கறவங்க சிரிப்பாங்க. முன்ன பின்ன கடப்பா ஷெல்ஃப பாக்காத ஆள்கிட்ட பேசறாமாதிரி எங்கிட்ட பேசாதீங்க.’ என்றேன் எரிச்சலுடன்.

மேற்கொண்டு பேச வாய் எடுத்த மேஸ்திரி என்ன நினைத்தாரோ, ‘சரி சார். ஒங்க இஷ்டம். நா அளவுங்கள குறிச்சி குடுக்கேன். தட்டுங்கள வாங்கி குடுங்க. வச்சித் தாரன். ஆனா ஒன்னு நாள பின்ன கீறல் விழுந்துருச்சுன்னு எங்கிட்ட வந்து நிக்காதீங்க. இப்பவே சொல்லிட்டேன்.’ என்று பயமுறுத்த நான், ‘அப்படியெல்லாம் நடக்கவும் நடக்காது.. அப்படியே நடந்தாலும் நிச்சயம் ஒங்கக்கிட்ட வந்து நிக்க மாட்டேன்.’ என்றேன் பிடிவாதமாக.

ஆக, அந்த பிரச்சினை அத்துடன் முடிந்தது.

அப்படித்தான் நான் நினைத்தேன்.

அடுத்த நாளே மேஸ்திரி குறித்துக்கொடுத்த அளவுகளை எடுத்துக்கொண்டு என்னுடைய அலுவலகம் செல்லும் பாதையிலிருந்த அந்த பட்டறைக்குச் சென்றேன்.

அந்த பட்டறையிலிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் ஒரு போக்குவரத்து சந்திப்பு இருந்தது. அது ஒரு நாற்புற சந்திப்பானதால் சாதாரணமாகவே வாகனப் போக்குவரத்து இருக்கும்.

அன்று வழக்கத்திற்கு மாறாகவே வாகன நெரிசல் இருந்ததால் சந்திப்பில்  காத்திருக்க நேர்ந்தது. காவல்துறை அதிகாரியும் அங்கு இருந்ததால் அவர் சைகை காட்டும்வரை சந்திப்பைக் கடக்க முடியாமல் என் வாகனத்தில் அமர்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் அந்த பட்டறையின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு சைக்கிளில் ஏறிச் சென்றவரை கவனித்தேன்.

என்னுடைய மேஸ்திரி!

இங்கயும் தன் கைவரிசையைக் காட்ட வந்துவிட்டார் போலிருக்கிறது என்று நினைத்து நொந்துபோனேன்..

நான் நினைத்தது சரியாக இருந்தது.

முந்தைய நாள் என்னை சிரிப்புடன் வரவேற்று உபசரித்த பட்டறை முதலாளி என்னைக் கண்டதும், ‘சார் நேத்து நீங்க வந்தப்போ ஒங்க தேவையை சரியா புரிஞ்சிக்காம ஒரு ரேட் சொல்லிட்டேன். ஆனா எம் பையன் சாயந்திரம் வந்து என்னைய சத்தம் போட்டுட்டான். அதனால..’ என்று இழுத்தார்.

தொடரும்..