27 June 2006

Thirumbi Parkiren 160

தேவாலயத்திலிருந்து வெளிவந்தபோது என் மனம் அமைதியடைந்திருந்தது. உள்ளே சென்றபோது என் மனதிலிருந்த அந்த பழிவாங்கும் எண்ணம் வெளியே வந்தபோது சற்றே தணிந்து போயிருந்தது.

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை யாரிடமும் என் மனைவியிடமும் கூட, பகிர்ந்துக்கொள்வதால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்று தீர்மானித்தேன்.

சம்பவம் நடந்த அன்று என்னுடைய உதவி மேலாளரும் விடுப்பிலிருந்ததால் அலுவலகத்தில் அவருடைய வேலையையும் சேர்த்து நானே பார்க்க வேண்டியிருக்க வேலைப் பளு நெட்டி முறித்தது.

ஒரு நொடிப்பொழுதும் ஓய்வில்லாமல் நான் ஆற்றவேண்டியிருந்த அலுவலக கடமைகள் என்னுடைய மனதில் அன்று காலையில் ஏற்பட்ட காயத்தின் வேதனையை மறக்கச் செய்தன.

அன்று மாலை அலுவலக பணியாளர்கள் எல்லோரும் சென்றபின் அலுவலகப் பகுதியை பூட்டிக்கொண்டு வெளியே பால்கணியில் வந்து நின்றேன். கட்டடத்தின் உயரம் காரணமாக மாலை நேரங்களில் வீசும் கடற்காற்று பால்கணியில் நிற்பதற்கு சுகமாக இருக்கும். அதற்காகவே வராந்தாவில் இருந்த இருக்கைகளில் இரண்டை எடுத்து திறந்தவெளி பால்கணியில் இட்டுக்கொண்டு இருட்டும்வரை நானும் என்னுடைய மனைவியும் அமர்ந்திருப்போம்.

சக்கரங்கள் வைத்த ட்ராலி தொட்டியில் படுத்தவாறே என் இளையமகள் நீல வானத்தை பார்த்துக்கொண்டிருக்க வராந்தாவில் அமர்ந்து குழல் விளக்கொளியினடியில் என் மூத்த மகள் தன்னுடைய வீட்டுப்பாடங்களை செய்துமுடிப்பாள். இரவு எட்டு மணியானதும் நால்வரும் அலுவலகத்தின் பின்பகுதியிலிருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்றுவிடுவோம். இதுதான் வழக்கமாக நடைபெற்றுவந்தது. வார இறுதியில் மட்டும் என்னுடைய மாமனார் வீட்டுக்குச் செல்வோம்.

அன்று மாலை நான் பால்கணிக்கு சென்றபோது மாலை சுமார் ஆறுமணியளவு இருக்கும். நான் சாலையை பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய வளாகத்திற்குள் அம்பாசடர் கார் நுழைவதைப் பார்த்தேன். அதை பார்த்த மாத்திரத்திலேயே என்னுடைய மனம் படபடத்தது. வாகனம் வந்து நின்றும் ஓட்டுனரைத் தவிர யாரும் இறங்கவில்லை.

சில நிமிடங்களில் படியேறி மேலே வந்த ஓட்டுனர் என்னிடம் வந்து தயங்கி நின்றார். ‘சார்.. ஐயா வந்திருக்காங்க.’

நான் கோபத்துடன் அவரைப் பார்த்தேன். ‘ஐயான்னா யார்யா? விவரமா சொல்லுங்க.’

‘என்ன சார் தெரியாத மாதிரி கேக்கீங்க. பெரிய ஐயாதான் வந்திருக்காங்க. அவங்களால படிகட்டுல ஏறி வரமுடியாதுய்யா. ஒங்கள பாத்து பேசணும்னுட்டுதான் வந்திருக்காங்க. நீங்க தயவுசெஞ்சு வந்தீங்கன்னா.. கார்லயே ஒக்காந்து பேசலாம்னு...’

அவர் சாதாரணமாக வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரே என்னைத் தேடி வந்திருக்கிறாரென்றால் காலையில் அவருடைய வீட்டில் நடந்த சம்பவ விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தவாறே ஓட்டுனருடன் சென்றேன்.

வாகனத்தின் பின் கதவை திறந்துவிட்டு நான் ஏறி அமர்ந்ததும் கதவை அடைத்துவிட்டு ஓட்டுனர் அகல நான் உள்ளே அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.

அவரோ நான் சற்றும் எதிர்பாராத விதமாக என் கரத்தைப் பற்றிக்கொண்டு, ‘தம்பி இத ஒங்க காலா நினைச்சி கேக்கறேன். காலையில் என் மனைவி செஞ்ச விஷயம் ரொம்ப முட்டாத்தனமானதுய்யா. அது நீங்க போனதுக்கப்புறந்தான் எனக்கு தெரிஞ்சது. அவ சார்புல நா ஒங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் தம்பி.; என்றார்.

அவருடைய குரலிலிருந்த வேதனை என்னை என்னவோ செய்ய நான் பதறிக்கொண்டு என் கையை விடுவித்துக்கொண்டு, ‘என்னய்யா நீங்க? வயசுல பெரியவங்களா இருந்துக்கிட்டு...’

‘இல்ல தம்பி.. நீங்க மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான் எனக்கு ஆறுதலாருக்கும். ஒங்கள நேர்ல பாத்து பேசிட்டுப்போணும்னுதான் வீட்ட விட்டு வெளியவே போவாத நான் ஒங்கள தேடி வந்துருக்கேன்.’ என்றார்.

நான் வேறு வழியில்லாமல், ‘சரிய்யா.. மன்னிச்சுட்டேன்.’ என்றேன்.

அதற்குப்பிறகு சுமார் அரைமணி நேரம் அமர்ந்து தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும், அவருடைய வணிகத்தைப் பற்றியும், தன் மனைவி மற்றும் முத்த தாரத்துப் பிள்ளைகள் மத்தியில் இலை மறைவு காய் மறைவாய் இருந்து வந்த விரோதத்தைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார்.

‘பணம், காசுன்னு கடவுள் ஒரு குறையும் வைக்கல தம்பி. ஆனா கொஞ்ச நாளா குடும்பத்துல சமாதானம் இல்லைங்க.. என் காலத்துக்கப்புறம் இவனுங்க அடிச்சிக்கிட்டு சாவான்களோன்னு மனசு கிடந்து அடிச்சிக்குது. அதுக்கு முன்னால சொத்தக்கூட சமாதானமா பிரிக்க முடியாது போலருக்கு.. அந்த அளவுக்கு வில்லங்கம் இருக்கு...’ என்றவர்.. திடீரென்று ‘தம்பி ஒங்கக்கிட்ட ஒரு அட்வைஸ் கேக்கணுமே?’ என்றார்.

நான் சொல்லுங்க என்பதுபோல் அவரைப் பார்த்தேன். அவர் அமர்ந்திருந்த பக்கத்து கார் கதவை ஏற்றிவிட்டு, ‘தம்பி நா நாலஞ்சு பேங்க்ல கொஞ்சம் தொகை பிக்ஸட் டெப்பாசிட்ல போட்டு வச்சிருக்கேன். கொஞ்சம் பெரிய தொகைதான். ஒங்கக்கிட்டருக்கற இந்த மரியாத அந்த மேனேசர் பயல்க கிட்டல்லாம் இல்லைய்யா.. அதனால நாளைக்கு இதே நேரத்துல அந்த ரசீதையெல்லாம் கொண்டு வந்து குடுக்கேன். என் பிள்ளைங்களுக்குக் கூட தெரியக்கூடாது. அதையெல்லாம் நீங்களே மாத்தி ஒங்க பேங்கல போட்டுக்குங்க. நா சாவகாசமா வந்து கையெழுத்து போட்டுத் தாரேன்.. எனக்கென்னவோ நா ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்னு தோணுதுய்யா.. அதான்.. நீங்க இன்னைக்கி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துன்னு வந்து நின்னீங்க.. இதுமாதிரி என் அனுபவத்துல இந்த ஊர்ல எந்த பேங்க் மானேசரும் வந்து நின்னதுல்லய்யா.. ஆனா எங்க வீட்ல நடந்தத பாருங்க.. நீங்க போனதுந்தான் நா இதப்பத்தி யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். எனக்கு திடீர்னு ஏதாச்சும் ஆயிருச்சின்னா இந்த பணமெல்லாம் ஒரே பேங்க்ல அதுவும் ஒங்களமாதிரி மேனேசர் பொறுப்புல இருக்கறதுதான் நல்லதுன்னு நினைச்சேன்.. நீங்க என்ன சொல்றீங்க தம்பி..’ என்றார்.

தொடர்ந்து பேசியதன் விளைவோ என்னவோ சிறிது நேரம் மூச்சு விடமுடியாமல் தடுமாறிப்போனார். நான் அவருக்கு குறுக்கி எட்டி அவருடைய கார்கதவை திறந்துவிட்டேன். குளிர்ந்த காற்று வாகனத்துக்குள் பரவ சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு வந்தார். வளாக வாசலில் நின்றுக்கொண்டிருந்த ஓட்டுனர் எங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்த பெரியவர், ‘நான் சொன்னது உங்கக்கிட்டயே இருக்கட்டும் சார்.. நான் நாளைக்கு வரேன்.’ என்றார்.

நான் வாகனத்திலிருந்து இறங்கிக்கொள்ள அது கிளம்பிச்சென்றது.

வாகனம் வளாகத்தை விட்டு வெளியேற படிகளில் ஏறி பால்கணியை அடைந்தேன். ‘யாருங்க அது.. பங்களாத் தெரு ஆளுங்க மாதிரியிருக்கு.’ என்றார் என் மனைவி.. ‘அப்படியென்ன காருக்குள்ள ஒக்காந்து அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க.. அவங்கல்லாம் --------------ங்களாச்சே..?’

‘ஒன்னுமில்லை.. நா இன்னைக்கி அவர் வீட்டுக்குத்தான் போயிருந்தேன். அதான் நன்றி சொல்லிட்டு போக வந்திருக்கார்.’ என்றேன்.

என் மனைவி என்னை நம்பாததுபோல் பார்த்தார். ஆனால் மேலே ஒன்றும் பேசவில்லை..

அடுத்த நாள் மாலை பெரியவர் மீண்டும் வந்திருந்து தன்னுடன் கொண்டுவந்திருந்த ஒரு கத்தை டெப்பாசிட் ரசீதுகளை என்னிடம் கொடுத்து, ‘தம்பி இதுல எத்தன இருக்குன்னுக்கூட தெரியாது. சிலதெல்லாம் மெச்சூர் ஆகியே ஒரு வருசத்துக்கும் போல.. ஒரு பேங்குலருந்தும் நோட்டீசும் வரல பாருங்க. இதான் இந்த கவர்ண்மெண்ட் பேங்குங்க சர்வீஸ் செய்யற லட்சணம்...’ என்றார்.

நானும் மேலெழுந்த வாரியாக சில ரசீதுகளைப் பார்த்தேன்.. அவர் கூறியது உண்மைதான். நான் கண்டவற்றுள் சில ரசீதுகள் காலாவதியாகி பதினெட்டு மாதங்கள் ஆகியிருந்தன. ‘ஐயா இதுல ஒரு பிரச்சினையிருக்குங்க.. இந்த ரசீதுகளையெல்லாம் அந்தந்த பேங்குல புதுப்பிக்காம எங்க பேங்குக்கு மாத்துனீங்கன்னா இடைப்பட்ட காலத்துக்கு வட்டி கிடைக்காதுங்கய்யா.. அதனால..’

அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். ‘அதனால அங்கனயே புதுப்பிச்சிட்டு அப்புறமா ஒங்க பேங்குக்கு மாத்திரலாங்கறீங்க?’

நான் ஆமாம் என்று தலையை அசைக்க அவர் சிரித்தார். ‘இதான் தம்பி ஒங்கள மாதிரி சின்ன பேங்க் மேனேசர்ங்க.. ஒங்களுக்கு டெப்பாசிட் கிடைக்கணுங்கறத விட எனக்கு வட்டி நஷ்டம்னு சொல்றீங்க பாருங்க..’ என்றவாறு என்னுடைய தோளில் கைவைத்து அழுத்தினார். ‘விட்டுத்தள்ளுங்க தம்பி.. அசல காப்பாத்திக்கணும்னுதான் நா நெனக்கிறேன். இது அந்த பேங்குங்கள்ல விட்டுட்டு நான் போய் சேர்ந்துட்டேன்னு வச்சிக்குங்க.. ஃபார்மாலிட்டிக்கு மேல ஃபார்மாலிட்டின்னு சொல்லி பணத்த திருப்பி குடுக்காமயே இழுத்தடிப்பாய்ங்க..’

நொடிக்கொருதரம் தன்னுடைய மரணத்தைப் பற்றியே அவர் பேசியது எனக்கு என்னவோ போலிருந்தாலும் அவர் கூறியதில் இருந்த நியாயம் புரியத்தான் செய்தது.

அவர் சிறிது நேரம் கழித்து, ‘தம்பி நா ஒங்ககிட்ட இன்னொரு உதவியும் கேக்கப் போறேன்..’ என்றார் தயக்கத்துடன்..

நான் 'சொல்லுங்கய்யா.' என்றேன். அவர் கேட்டவிதமே என்னை என்னவோ செய்தது.. இத்தனை செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியில்லாத அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

‘எனக்கு ஏதாச்சும் ஒன்னுக்கெடக்க ஒன்னு ஆயிருச்சின்னா.. இந்த ரசீதுலருக்கற பணம் முழுசும் என் மனைவிக்கு போய் சேரணும்.. பிள்ளைங்க கைக்கு போயிறக்கூடாது.. அதுக்கு என்ன செய்யணும் சொல்லுங்க.’

நான் சிறிது நேரம் யோசித்தேன். பிறகு ‘அதுக்கு இந்த ரசீது எல்லாம் ஒங்க அப்புறம் ஒங்க மனைவி பேர்ல சேர்ந்து இருந்தா நல்லது ஐயா..’ என்றேன்..

அது முடியாது என்பதுபோல் தலையை அசைத்தார். ‘அவ பெயர ஜாயிண்டா போட முடியாதுய்யா.. ஒங்க பேங்க்ல போடறதுக்கு அவ நிச்சயமா ஒத்துக்க மாட்டா.. புத்தி கொட்ட பொம்பளை தம்பி.. ஜாதி, தீட்டுன்னுக்கிட்டு மனுசாளுங்கள மதிக்க தெரியாத கொணம்.. சொல்லி, சொல்லி பாத்து விட்டுட்டேன்.. அதனால ஜாய்ண்ட் பேர்ல போட முடியாது. வேற ஏதாச்சும் யோசனை சொல்லுங்க..’

நான் சற்று தயக்கத்துடன், ‘நீங்க ஏதாச்சும் உயிலெழுதி வச்சிருக்கீங்களாய்யா?’ என்றேன்.

‘இதுவரைக்கும் இல்லய்யா.. ஆனா அத எழுதச் சொல்லி நம்ம ------------- (மூத்த தாரத்து மகன்) நச்சரிச்சிக்கிட்டேயிருக்கான். எதுக்கு கேக்கீங்க?’

‘நீங்க உயில் எழுதி வைக்கலேன்னா நீங்க விட்டுட்டு போறதெல்லாம் மொதல்ல ஒங்க மனைவிக்குத்தான் போவும். அதனால இந்த டெப்பாசிட் ஒங்க பேர்ல இருந்தாலே போறும்..’

அவர் சிறிது நேரம் சிந்தனையில் இருந்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் ‘அதுவும் சரிவராதுய்யா.. அதுலயும் ஒரு பிரச்சினையிருக்கு..’ என்றார். பிறகு.. ‘இதுக்கு வேற ஏதாவது வழியிருக்கான்னு யோசிச்சி வைங்க.. நா ஒரு வாரம், பத்துநாள் கழிச்சி கூப்டறேன்.. இந்த ரசீதுங்கள நாளைக்கே அந்தந்த பேங்குக்கு அனுப்பி கலெக்ட் செஞ்சிருங்க..’ என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்..

நான் என் அலுவலகத்திற்கு திரும்பி உடனே அமர்ந்து ரசீதுகளை வரிசைப் படுத்தி பட்டியலிட்டு நிமிர்ந்தபோது மொத்த தொகையின் அளவைக் கண்டு பிரமித்துப்போனேன்..

தொடரும்..

11 comments:

துளசி கோபால் said...

பாவம் பெரியவர். ரொம்பப் பெருந்தன்மையா இருக்கார்.

அந்தம்மாதான் எதோ ஆச்சாரம் அனுஷ்டனமுன்னு இருக்குபோல.

அவங்களைச் சொல்லியும் குத்தமில்லை. வளர்ப்பு அப்படி. இல்லீங்களா?

ஜயராமன் said...

ஜோசப் சார்,

பழிவாங்கும் மனநிலையில் நீங்கள் இருந்ததாக போன பதிவில் படித்தது மனதை நெருடியது. தங்களின் உயர்ந்த பண்புக்கு இது என்னவோ ஒப்பவில்லையே என்று தோன்றியது.

நான் நினைத்தது போலவே, இது ஒரு தற்காலிக தடுமாற்றமாகி தாங்கள் மீண்டும் அந்த பெரியவரின் நற்பெயருக்கு பாத்திரமாகியது நிரம்ப மகிழ்ச்சி.

வாழ்க்கையில் மனம் ஊனமுற்றவர்கள் இவர்கள். இவர்கள் சமுதாய சூழலில் சுய எண்ணத்தை தவற விட்டு சூழ்நிலைக்கு அடிமையானவர்கள்.

இவர்கள் பரிதாப்ப்படவேண்டியவர்கள். பழி வாங்கப்பட வேண்டியவர்கள் அல்லர்.

நன்றி

sivagnanamji(#16342789) said...

"சூழ்நிலைக் கைதி"
நல்லதைக்கூட மணம் விட்டுச் சொல்லமுடியாத,செய்யமுடியாத நிலை. பாவம்

Akilan said...

உங்கள் வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கின்றது ஏதோ சிட்னி செல்டன் நாவல் படிப்பது போல இருக்கிறது. என்னை போன்ற இளைஞர்களுக்கு நல்ல பாடமும் கூட.

sivagnanamji(#16342789) said...

//அதுலயும் ஒரு பிரச்சனை இருக்கு..//
திருமணம் சட்ட சம்பிரதாயங்களை
நிறைவேற்றாததோ?

tbr.joseph said...

வாங்க துளசி,

பாவம் பெரியவர். ரொம்பப் பெருந்தன்மையா இருக்கார்.//

உண்மையிலயே ரொம்ப பெரிய மனுஷன்.. அது அவர் இறந்ததுக்கப்புறம் அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு வந்த ஜனத்தைப் பார்த்தே புரிந்துக்கொள்ள முடிந்தது..

வளர்ப்பு அப்படி. இல்லீங்களா? //

ஆமாங்க.. ரொம்ப சரி.

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

தங்களின் உயர்ந்த பண்புக்கு இது என்னவோ ஒப்பவில்லையே என்று தோன்றியது. //

அப்போ இந்த அளவுக்கு அனுபவம் இல்லீங்க.. இள ரத்தம்.. கொதிச்சி போயிருச்சி.. ஆனா அடுத்த நாள் அவர் எனக்கு காட்டிய அன்பு அதை முற்றிலும் தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. அதற்குப்பிறகு அவருக்காக நான் நடத்திய போராட்டம் இருக்கிறதே..

அவருக்கு பிறந்த பிள்ளைகளா இவர்கள் என்பதுபோல் நடந்துக்கொண்டனர் அவருடைய பிள்ளைகள்..

tbr.joseph said...

வாங்க ஜி!

"சூழ்நிலைக் கைதி"//

பெரும்பாலான பகுத்தறிவாளர்கள் அவர்கள் பிரசங்கிப்பதை வீட்டில் செயல்படுத்த முடியாமல் போவதற்கு இதுதான் காரணம் ஜி!

tbr.joseph said...

வாங்க அகிலன்,

என்னை போன்ற இளைஞர்களுக்கு நல்ல பாடமும் கூட.//

எனக்கு ஏற்பட்ட அவமானத்தை எழுதுவது ஏதோ ஒரு பச்சாதாப உணர்வை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்காக இல்லை..

இத்தகைய அவமானங்களையும் தோல்விகளையும் வாழ்வின் யதார்த்தமாக ஏற்றுக்கொண்டு நம்முடைய பாதையில் பிறழாமல் செல்லவேண்டும் என்பதை உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு எடுத்துக்கூறத்தான்.


சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடைபெறும் அவமானங்கள் எங்களைப் போன்றவர்களையும் அன்று பாதித்திருக்கிறது. ஆனால் அது நாளடைவில் மறைந்து போய்விடும் என்று அன்று நாங்கள் நினைத்தது பொய்த்துப்போனதே என்பதுதான் வேதனையாயிருக்கிறது.

இன்றைய தலைமுறையினர் அவர் எந்த சாதி, இனம்,மொழி, மதத்தைச் சார்ந்தவார்களாயிருந்தாலும் இது என் இனம், என் மொழி, என் மதம் என்ற குறுகிய வட்டத்தைவிட்டு வெளி வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய தலைமுறையினரின் ஆவல், ஆதங்கம் எல்லாம்.

அதனால்தான் இன்னமும் இந்த மொழி, இனம், மதம் என்று எழுதும் சில இளம் எழுத்தாளர்களை சாடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு நான் மொழி பற்று இல்லாதவன் என்றோ, பிறமதங்களை இழிவு படுத்துகிறவன் என்றோ பொருள் அல்ல.. இதெல்லாம் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை என்பதை எடுத்துரைக்கவே..

G.Ragavan said...

அவருடைய துணைவியாரின் செயல் எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ...அந்த அளவிற்கு அவருடைய மன்னிப்பும் பாராட்டத்தக்கது. மொத்தத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும் வேண்டும்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இந்த நிகழ்ச்சியைப் பற்றி வேறொருவருடைய சாதியைப் பற்றிய பதிவில் பின்னூட்டமாக கூறியிருப்பதாக ஞாபகம்.