30 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 163

சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த நிறுவனத்தில் பெரியவரின் குடும்பத்தைச் சாராத ஒரு வழக்கறிஞரும் பாகஸ்தராயிருந்தது நினைவுக்கு வர அவரை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்று யோசித்தேன். அவர் பெரியவரின் குடும்ப வக்கீலாக இருந்ததால் அவரை அழைத்து விவரத்தைக் கூறிவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன்.

அவரும் நான் கூறியதை உடனே குடும்பத்தினருக்கு தெரிவித்துவிடுவதாக உறுதியளித்தார்.

அவர் என்ன சொன்னாரோ எப்படி சொன்னாரோ தெரியவில்லை. அடுத்த பத்து நிமிடத்தில் நிறுவனத்தினுடைய இரண்டு பாகஸ்தர்கள் (அதாவது இரண்டாவது தாரத்தின் மகன்கள் இருவர்) என்னுடைய அலுவலகத்திற்கு வந்தனர்.. கூடவே அந்த வழக்கறிஞரும்..

அவர்களுடைய முகத்தைப் பார்த்ததுமே அவர்களுடைய மனநிலை எனக்கு தெளிவாக புரிந்தது.

நான் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவிடம் வங்கியில் காத்திருந்த மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்ள கூறிவிட்டு என்னுடைய அறைக்கு சென்று அவர்களை சந்தித்தேன்.

பாகஸ்தர்களுள் ஒருவர் கோபத்துடன் என்னைப் பார்த்தார். ‘சார் ஏற்கனவே நீங்க செஞ்ச முட்டாள்தனத்தாலதான் எங்க குடும்பத்துல பிரச்சினை வந்து நல்லாருந்த எங்கப்பாவ இழந்துட்டோம். இனியும் முட்டாத்தனமா ஏதாவது செஞ்சீங்க நாங்க சும்மாருக்க மாட்டோம் சொல்லிட்டேன். அத நேர்ல சொல்லிட்டு போலாம்னுதான் வந்தோம்.. நாங்க வரோம்.’ என்றவாறு எழுந்தார்.

நான் பொங்கிவந்த என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களுடன் வந்த வழக்கறிஞரைப் பார்த்தேன். ‘என்ன சார் விஷயம்? எதுக்கு இப்ப இவர் இவ்வளவு கோபப்படறார்? ஒங்க மேனேஜிங் பார்ட்னர் ஆப்பரஷேன நிறுத்தச் சொல்லி ஃபோன் பண்ணார். இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவரோட ஆள் வந்து இந்த லெட்டரையும் குடுத்து என்னோட அக்னாலட்ஜ்மெண்ட்டும் வாங்கிட்டு போய்ட்டார். உங்க பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட்ல ஒரு பார்ட்னர் விலகினாலும் பார்ட்னர்ஷிப் டிசால்வ் ஆயிரும்னு சொல்லியிருக்கீங்களாம்.. அதும்படி நான் விலகிட்டேன் அதனால பார்ட்னர்ஷிப்புக்கு நீங்க சாங்ஷன் பண்ண ஓவர் டிராஃப்டுல இனி எந்த ஆப்பரேஷனும் அலவ் பண்ணக்கூடாதுன்னு எழுதி குடுத்துருக்கார். அத பார்த்துட்டு நான் ஒங்க பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட்ட படிச்சேன். அவர் சொல்லியிருக்கறாமாதிரிதான் அதுல இருக்கு. என்னைய என்ன பண்ண சொல்றீங்க? ஒங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ இனிமே அந்த கணக்குல நீங்க எந்த வரவு செலவும் செய்ய முடியாது. அத ஃப்ரீஸ் பண்ணியாச்சு.’ என்றேன்.

நான் பேசி முடிக்கும் முன்னரே குடும்பத்தில் கடைக்குட்டி பாகஸ்தர் எழுந்து என்னுடைய சட்டையைப் பிடித்து அடிக்க வர அதைப் பார்த்த என்னுடைய பணியாளர்களும் வங்கியில் குழுமியிருந்த மற்ற வாடிக்கையாளர்களும் என்னுடைய அறைக்குள் ஓடிவர அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஒரு குட்டி கலவரமே நடந்துவிட்டது.

அவருடன் வந்திருந்த வழக்கறிஞர் என்னுடைய சட்டையைப் பிடித்திருந்த பாகஸ்தரின் கரத்தை பிடித்து விலக்கினார். ‘டேய்.. என்ன இது சின்னப் பையனாட்டம்? எதுக்கு அவர் மேல கோபப்படறே.. இந்த க்ளாஸ போடும்போதே தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. அப்போ உங்கண்ணன் சொன்னா சொன்னதுதான்னு சொன்னேள்.. இப்ப பாரு.. அந்த களவாணிப்பய செஞ்ச காரியத்த? அத சொன்னதுக்கு இவர ஏண்டா அடிக்க போற? வாய மூடிக்கிட்டு இங்க இருக்கறதானா இரு.. இல்லையா, போய் கார்ல ஒக்கார். நானும் ஒங்கண்ணாவும் பேசிட்டு வரோம்..’ என்று இரைய அவர் கோபத்துடன் என்னை முறைத்து பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

நானும் சட்டையை சரி செய்துக்கொண்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்து என்னுடன் பணிபுரிந்தவர்களை போய் வேலைய பாருங்க என்பதுபோல் சைகை செய்தேன். அவர்களும் அறையில் குழுமியிருந்த வாடிக்கையாளர்களும் கலைந்து சென்றனர்.

சிறிது நேர சங்கடமான மவுனத்திற்குப் பிறகு பெரியவரின் மகன், ‘மன்னிச்சிருங்க சார்.. அவனுக்காக நா ஒங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இருந்தாலும் நீங்க முன்ன பின்ன யோசிக்காம செஞ்ச காரியந்தான் இவ்வளவு பெரிய பிரச்சினைய உருவாக்கியிருக்கு..’ என்றார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். ‘என்ன சார் சொல்றீங்க? எனக்கு புரியலை.. நா என்ன பண்ணேன்னு சொல்றீங்க?’

அவர் பதிலளிக்க வாய் திறந்ததும் அவரை கையமர்த்திவிட்டு வழக்கறிஞர் என்னைப் பார்த்தார். ‘சார் நீங்க அன்னைக்கு பெரியவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்ததுலருந்துதான் இந்த பிரச்சினையே வந்துது.. அன்னைக்கு இவனோட அம்மா பெரியவர் கூப்ட்டு கேக்காத மாதிரி வீட்டுக்குள்ளாற போனதும் நீங்க காப்பி குடிச்ச க்ளாச அந்தம்மா குப்பையில வீசியெறிஞ்சதும் பெரியவர ரொம்ப அப்செட் செய்யப்போயி வீட்ல அன்னைக்கி ஒரு பெரிய ரகளையே நடந்திருச்சி சார். அதுக்கப்புறம்தான் பெரியவர் வேணும்னே அவர் பேர்லருந்த டெப்பாசிட் ரெசீட்சையெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து ஒங்கக்கிட்ட குடுத்துருக்கார். அப்பவாவது நீங்க இவங்கக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செஞ்சிருக்கலாம்.. நீங்க பாட்டுக்கு அத எல்லாம் கலெக்ட் பண்றதுக்கு பேங்குகளுக்கு அனுப்பிட்டீங்க. சில பேங்க் மேனேஜர்ங்க இவங்கள போயி பார்த்து இத தடுக்க சொல்லியிருக்காங்க. அன்னைக்கும் வீட்ல பெரிய ரகளையே நடந்துது.. இவரோட அண்ணா கோச்சிக்கிட்டு வீட்ட விட்டே போய்ட்டார். பெரியவர் அந்த அதிர்ச்சியில படுத்தவர்தான்.. எழுந்திருக்கவேயில்ல.. அதுக்கு மறைமுகமா நீங்கதான் காரணம்னு அவங்க வீட்ல எல்லாருமே நினைக்கறாங்க.. அதத்தான் இவரும் இவரோட தம்பியும் இப்ப சொன்னது..’ என்றார் மூச்சு விடாமல்.

அதைக் கேட்டதும் எனக்கும் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. நாம் ஏதோ செய்யப் போக இது இப்படி முடிந்துவிட்டதே என்றிருந்தது.

‘இப்ப என்னடான்னா பெரியவரோட மூத்த தாரத்து பையன் சொன்னதவச்சி நீங்க ஆப்பரேஷன ஸ்டாப் பண்ண போறேன்னு சொல்றீங்க. பெரியவரோட ஆத்ம சாந்திக்கு இன்னும் எவ்வளவோ சடங்குங்க இருக்கு. இந்த நேரத்துல இவங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டே வெளிய வரக்கூடாது.. ஒங்க ஃபோன் வந்ததுன்னு இவங்கக்கிட்ட சொன்னதுமே ரெண்டு பேரும் கொதிச்சி போய்ட்டாங்க. அதுல சின்னவருக்கு இயல்பாவே கோவம் ஜாஸ்தி. அதான் அப்படி பிஹேவ் பண்ணிட்டார்.’ என்று தொடர்ந்த வழக்கறிஞரைப் பார்த்தேன்.

‘என்ன சார், நீங்களே இப்படி சொன்னா எப்படி? நீங்க பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் ப்ரிப்பேர் பண்ணப்பல்ல இதப்பத்தி யோசிச்சிருக்கணும்? இந்த ஓவர்டிராஃப்ட நான் ரெக்கமண்ட் செஞ்சிருந்தேன்னா இந்த கண்டிஷன முதல்லயே பார்த்து சொல்லியிருப்பேன். ஆக்சுவலா இப்படியொரு கண்டிஷன இருக்கற பார்ட்னர்ஷிப் ஃப்ர்முக்கு எந்த பேங்க்லயும் இவ்வளவு பெரிய ஓவர்டிராஃப்ட சாங்ஷன் பண்ண மாட்டாங்க.’ என்று நான் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள் பெரியவருடைய மகன் மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்டார்.  

‘என்ன சார் சொல்ல வரீங்க? அப்படியென்ன கண்டுட்டீங்க எங்க ஃபார்ம பத்தி?’

‘சார் நா சொல்ல வந்தத முழுசா கேக்காம கோபப்படாதீங்க. இப்படியொரு கண்டிஷன் ஒங்க பார்ட்னர்ஷிப்ல இருக்கறதுதான் பிரச்சினையே.. யாராவது ஒரு பார்ட்னர் கோச்சிக்கிட்டு வெளியேறுனா கூட ஒங்க பார்ட்னர்ஷிப் டிசால்வாயிரும். புதுசா வேறொரு அக்ரீமெண்ட் போட வேண்டியிருக்கும்..’

‘அதுக்கென்ன சார்.. புதுசா ஒன்னு போட்டுட்டா போச்சி.. இதுக்கு போயி லோன் கிடைக்காதுங்கற மாதிரி பேசறீங்க?’ என்று மீண்டும் அவர் குறுக்கிட என்னையுமறியாமல் எனக்கும் கோபம் வந்தது.

‘சார்.. அர்த்தமில்லாம பேசாதீங்க. நீங்க புதுசா ஒரு அக்ரீமெண்ட் போடற வரைக்கும் இந்த ஓவர்டிராஃப்ட நீங்க யூஸ் பண்ண முடியாது. போறுமா?’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் அப்படியே அதிர்ச்சியில் வாயை மூடிக்கொண்டார். அவருடன் வந்திருந்த வழக்கறிஞரைப் பார்த்தேன். ‘ஏன் சார் இது ஒங்களுக்கு தெரியாதா? அதுமட்டுமா, ஒங்க புது பார்ட்னர்ஷிப்புக்கு புதுசா மறுபடியும் அப்ளிகேஷன் அனுப்பி எங்க எச்.ஓவுல சாங்ஷன் பண்றவரைக்கும் ஒங்களால ஒன்னும் பண்ண முடியாது.. அதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாகும்.. அதுவரைக்கும் என்ன பண்ணுவீங்க?’

இருவரும் தொடர்ந்து மவுனம் சாதிக்க.. நான் தொடர்ந்தேன்..

‘அதனால கோபப்படறத விட்டுட்டு நிதானமா யோசிங்க.. எனக்கு ஒரேயொரு வழிதான் தோனுது.. சொல்றேன்.. ஒங்களுக்கு விருப்பம் இருந்தா செய்ங்க.. கட்டாயம் இல்லை..’

இருவரும் என்னைப் பார்த்தனர். ‘சொல்லுங்க சார்.’ என்றார் பெரியவரின் மகன் தயக்கத்துடன்.

‘இப்போதைக்கு ஒங்க மூத்தவரோட சமாதானமா போயி அவர் கொடுத்த லெட்டர வித்ட்றா பண்ண வைங்க. அதான் நல்லது. அதுக்கப்புறம் ஒங்கப்பாவோட சடங்கெல்லாம் முடிஞ்சதும் புதுசா ஒரு அக்ரிமெண்ட் போட்டு ஒரு காப்பியோட இந்த ஓவர்டிராஃப்ட புது நிறுவனத்துக்கு அப்படியே சாங்ஷன் செய்யச் சொல்லி லெட்டர் ஒன்னு குடுங்க. நான் ரெக்கமெண்ட் பண்ணி அனுப்பறேன். அதுக்கு எங்க எச்.ஓ ஒத்துக்கிட்டு சாங்ஷன் பண்ணா சரி.. இல்லையா, மறுபடியும் ஒரு புது ப்ரொப்போசல அனுப்பி சாங்ஷன் வாங்கிக்கலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாங்ஷன் வாங்கித்தரவேண்டியது என் பொறுப்பு. அப்புறம் ஒங்க இஷ்டம்.. இல்லே.. ஒங்களுக்கு வேற ஏதாவது பேங்க்ல அப்ளை பண்ணனும்னு தோணுதா, தாராளமா செய்ங்க..’ என்றேன்.

அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சிறிது நேரம் குழம்பிப் போய் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு வழக்கறிஞர், ‘இந்த யோசனையத்தான் சார் நானும் இங்க வர்றதுக்கு முன்னால இவங்கக்கிட்ட சொன்னேன்.. கேக்கலையே..’ சப்பைக்கட்டு கட்ட முயல உடன் வந்திருந்தவர் அவர் மீது எரிந்து விழுந்தார்.

‘எதுக்கு மாமா பொய் சொல்றேள்.. நீங்க சொன்னத இவர்கிட்ட அப்படியே சொன்னேன்னு வச்சுக்குங்க.. அப்புறம் ஒங்கள இனி இந்த ரூமுக்குள்ளயே இவர் விடமாட்டார்.. செத்த நேரம் வாய மூடிண்டு இருங்கோ..’

அடப்பாவி மனுஷா என்று மனதுக்குள் அவரை சபித்தேன்.. நிறைய (சாரி.. சில) வழக்கறிஞர்கள் இவரைப் போலத்தான். உதவி செய்கிறேன் என்று கூறிக்கொண்டு உபத்திரவம்தான் செய்வார்கள்..

தொடரும்..10 comments:

G.Ragavan said...

அடடா! வழக்குரைஞருக்கும் வருமானம் ஆகனுமா இல்லையா...அதான் இப்படி....அவருக்கும் வாய், வயிறு, குடும்பம், குட்டீன்னு இல்லாமலா இருக்கும். ம்ம்ம்...

மணியன் said...

ஒரு வங்கி அதிகாரிக்கு கணக்கு தெரிவதை விட சட்டம் அதிகம் தெரிய வேண்டும் போலிருக்கிறதே!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அவருக்கும் வாய், வயிறு, குடும்பம், குட்டீன்னு இல்லாமலா இருக்கும்.//

அதானே..

tbr.joseph said...

வாங்க மணியன்,

ஒரு வங்கி அதிகாரிக்கு கணக்கு தெரிவதை விட சட்டம் அதிகம் தெரிய வேண்டும் போலிருக்கிறதே! //

உண்மைதான். கமர்ஷியல் லா என்னும் பாடத்தை எங்களுடைய பயிற்சிக் கல்லூரியில் படிப்பிப்பார்கள். எல்லா கிளைகளிலுமே Indian Partnership Act, Companies Act புத்தகங்களும் இருக்க வேண்டும்.

இவ்விரு சட்டங்களின் அடிப்படை கூட தெரியாமல் ஒரு கிளை மேலாளராக பணியாற்ற முடியாது..

sivagnanamji(#16342789) said...

தி.பா வில் உள்ளது உள்ளபடி எழுதுகின்றீர்கள்;இதை ஒரு தன்வரலாறாகவேக் கருத வேண்டும்
ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு
அதில் ஏற்படும் நிகழ்வுகள்,பங்குபெறும்
பாத்திரங்களைப் பற்றி மட்டும் விவரிக்கும் இந்த உத்தி ஆங்கில அமெரிக்க இலக்கியங்களில் அதிகம்.
பாலகுமாரனின் புனைவுகளிலும் இவ்வுத்தி சிறப்பாக கையாள்ப் பட்டுள்ளது
ஆனால் அவை புனைவுகள்;தி.பா
உண்மை நிகழ்வு.[சட்டையைப் பிடித்து
அடிக்க வருவது,க்ளாஸைக் குப்பைக்
கூடையில் போடுவது,மீணவரின் மணைவி வசைமாரி பொழிவது,காக்கிகள் ஸ்கூட்டரை சேதப் படுத்துவது போன்று]உள்ளதை உள்ளபடி கூறுகின்றீர்கள்.இதில் கூறமுடியாதவற்றை அல்லது வெளிப்படையாகக் கூறமுடியாதவற்றை கறபனைக் கதை எனும் பெயரில் சூரியனில் எழுதுவதாகவேக் கருதுகின்றேன்
ஒருவகையில் தி,பா வின்[விடுபட்ட]தொடர்ச்சியாகவே[epilogue [?]
சூரியன் அமைந்துள்ளது
எனில் தி பா வுடன் ஒப்பிட்டால் சூரியனுக்கு பின்னூட்டங்கள் குறைவாக இருப்பது ஏன்?
தி.பா உண்மை மனிதர்கள் சம்பந்தப்பட்டது;அவர்களின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது;பிறரின் அந்தரங்கத்தை அறியத்துடிக்கும் மனித ஆசை[curiosity]காரண்மா?
ஆத்திரமுறச்செய்யும் சண்டைக்காட்சிகளை விமர்சிக்காமல்,
வேறுவகை விமர்சனத்தில் இறங்கி விட்டேனோ?

dondu(#4800161) said...

என் தந்தையார் 1979-ல் இறந்த போது பல ஃபிக்ஸட் டெபாஸிட்டுகள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மையானவை எய்தர் ஆர் சர்வைவர் அடிப்படையில் என் தந்தை பெயரிலும் என் பெயரிலுமாக இருந்தன. அவற்றில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நான்கு ரசீதுகள் அவர் பெயரில் மட்டும் இருந்தன. நான் பம்பாயில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டவை அவை. மெச்சூரிடி தேதி 1980-ல். அப்போது அவற்றில் என் பெயரையும் இணைக்க நினைத்திருக்கிறார். அப்படித்தான் பேங்க் மேனேஜர் அவருக்கு அறிவுரை கூறியிருந்தார்.

ஆனால் இப்படி அவர் இறந்த சூழ்நிலையில் அவற்றிற்கு சக்சஷன் சான்றிதழ் எல்லாம் தர வேண்டியிருந்தது. அச்சமயம் வேறு மேனேஜர். அவர் சாவகாசமாகக் கூறுகிறார், என் தந்தை அவர் வாழ்நாளிலேயே எப்போது வேண்டுமானாலும் இன்னொரு பெயரை சேர்த்திருக்கலாம் என்று.

அதோடு மட்டுமின்றி, நான் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் செய்த பிறகு, என் மனைவியின் பெயரை சேர்க்கலாம் என முயற்சிக்கும்போது, மறுபடியும் அதே மேனேஜர், அவை மெச்சூர் ஆன பிறகு புது டிபாசிட் போடும்போது செய்யலாம எனக் கூறினார். இவ்வாறு பொறுப்பில்லாமல் பல மேனேஜர்கள் இருந்திருக்கின்றனர்.

உங்களைப் போன்று இவ்வளவு சின்சியரான மேனேஜர்களைப் பார்த்தல் அறிது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

எப்போது வேண்டுமானாலும் இன்னொரு பெயரை சேர்த்திருக்கலாம் என்று.//

அவர் கூறியது சரிதான். எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

பொறுப்பில்லாமல் பல மேனேஜர்கள் இருந்திருக்கின்றனர்.//

எல்லாம் சோம்பல்தான் காரணம். எந்த வங்கியானாலும் அங்கு கிடைக்கும் சேவையின் தரம் அந்த கிளை மேனேஜரைப் பொருத்தே இருக்கும்.

tbr.joseph said...

வாங்க ஜி!

இதில் கூறமுடியாதவற்றை அல்லது வெளிப்படையாகக் கூறமுடியாதவற்றை கறபனைக் கதை எனும் பெயரில் சூரியனில் எழுதுவதாகவேக் கருதுகின்றேன்//

ஓரளவுக்கு உண்மைதான்.

எனில் தி பா வுடன் ஒப்பிட்டால் சூரியனுக்கு பின்னூட்டங்கள் குறைவாக இருப்பது ஏன்?
தி.பா உண்மை மனிதர்கள் சம்பந்தப்பட்டது;அவர்களின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது;பிறரின் அந்தரங்கத்தை அறியத்துடிக்கும் மனித ஆசை[curiosity]காரணமா?//

சார்.. பின்னூட்டம் இடறது ஒரு ஃபார்மாலிட்டி. காண்ட் ரவர்சியா எழுதுனா அதுக்கு பின்னூட்டம் வரும். எல்லாரும் ஒத்துபோறா மாதிரி எழுதும்போது படிச்சிட்டு போயிருவாங்களே தவிர ஒரு சிலர், அடடா இவர் நமக்கு வேண்டியவராச்சேன்னு வேலை மெனக்கெட்டு பின்னூட்டம் போடுவாங்க.

ஒரு தடவ நான் இப்படி ஆதங்கப்பட்டபோது துளசி கேட்டாங்க. ஏன் சார் குமுதம், கல்கியிலலெல்லாம் நாம என்ன பின்னூட்டமா போடறோம்னு.. சரிதானே..

துளசி கோபால் said...

டிபிஆர்ஜோ,

இந்த போஸ்ட்டைப் படிச்சு முடிச்சவுடனே பின்னூட்டம் போட முடியாம வேற வேலை வந்துருச்சு.
இப்ப வந்து பார்க்கறேன், என் 'பேர்' ஏற்கெனவே இடம் பிடிச்சிருக்கு:-)))

பாங்க் மானேஜர் வேலையிலே கெளரவம் எவ்வளவு இருக்கோ அவ்வளோ ரிஸ்க்-ம் இருக்கு.
ஆமாம். ஓவர்சீஸ் பிராஞ்சுக்கு மேனேஜரா வராங்களே, அவுங்களுக்கு எந்தமாதிரியான சட்டங்கள்
தெரிஞ்சிருக்கணும்?

tbr.joseph said...

வாங்க துளசி,

என் 'பேர்' ஏற்கெனவே இடம் பிடிச்சிருக்கு//

உங்க பேர் இல்லாத தமிழ்மண பதிவு இருக்க முடியுமா என்ன? அதுக்குத்தானே பின்னூட்ட ராணிங்கற பேர் ஒங்களுக்கு:)

அப்புறம், ஓவர்சீஸ் பிராஞ்சுக்கு மேனேஜரா வர்றவங்களுக்கு FERA என்கிற அண்ணிய செலவாணி சட்டம் மற்றும் EXIM விதிமுறைகள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்..

டம்ஸ்டிக் விஷயமாவது பரவாயில்லை FERA விதிமுறைகளை மீறினால் அபராதம் கடுமையாக இருக்கும்..