29 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 162

பெரியவரின் இறுதி ஊர்வலத்திற்கு ஆட்களோடு ஆட்களாக கலந்துக்கொண்டேன்.

ஒருவருடைய மதிப்பு அவருடைய மரணத்திற்குப் பிறகுதான் தெரியும் என்பதை அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு திரண்டிருந்த மக்கட்கூட்டம் தெளிவுபடுத்தியது.

அன்று இரவு வீடு திரும்பும் வழியெல்லாம் அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர் மரிப்பதற்கு முன்பு என்னிடம் ஒப்படைத்திருந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றப்போகிறேன் என்பதை நினைத்தபோது மலைப்பாக இருந்தது.

என்னுடைய வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு அவர் எடுத்த முடிவு என்னை ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கவைத்திருப்பதுபோல் எனக்கு தோன்றியது.

சாதாரணமாக வைப்பு நிதியில் ஒருவர் கணக்கு துவங்கும்போது அது காலாவதியாகும்போது அசலையும் வட்டியையும் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை அதற்குண்டான படிவத்திலேயே குறிப்பிட வேண்டும்.

சில வாடிக்கையாளர்கள் வைப்பு நிதி தொகையை ஒருவருக்கும் கூடுதலாக அளிக்க நினைத்து அதற்கு படிவத்தில் இடமில்லாதிருக்கும் பட்சத்தில் அதை தனியொரு கடிதம் மூலமாகவும் எழுதிக் கொடுப்பதுண்டு.

ஆகவே பெரியவர் என்னுடைய வங்கிக்கு அளித்ததாக அவர் கையொப்பமிட்டிருந்த கடிதத்தில் நான் எழுதியிருந்ததை வைத்தே அனைத்து தொகையையும் அவருடைய மனைவிக்கு கொடுத்துவிட முடியும்.

ஆனால் அவர் வெற்று காகிதத்தில்தான் கையொப்பமிட்டிருந்தார் என்பது தெரியவந்தால் நிச்சயம் அது என்னை பிரச்சினையில் மாட்டிவிட வாய்ப்பிருந்தது. அதுவும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம்.

அவர் வெற்றுத்தாளை கொடுத்தனுப்பிய ஓட்டுனருக்கு இந்த விவரம் தெரிந்திருக்குமா என்பதும் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பெரியவர் கொடுத்தனுப்பிய உறையும் மூடப்படாமலிருந்ததால்தான் எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது.

சரி வருவது வரட்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் நடந்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

பெரியவரின் மரணம் அவருடைய குடும்பத்தினர் நடத்திவந்த நிறுவனத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் எனக்கு தெரிந்திருந்துதானிருந்தது.

என்னுடைய காசாளர் தெரிவித்தபடி மூத்த தாரத்து மகனான நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்தி உண்மைதான் என்று எனக்கு தெரியவந்தபோது இந்த எண்ணம் மேலும் உறுதிபட இதை எப்படி எதிர்கொள்ளுவதென்பதுதான் என்னுடைய பிரதான கவலையாக இருந்தது.

நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி என்னுடைய கிளையின் மிகப் பெரிய கடன் கணக்குகளில் அந்த நிறுவனத்தின் கணக்கும் ஒன்று. சாதாரணமாகவே குடும்ப நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு எல்லா வங்கிகளுமே யோசிப்பதுண்டு..

என்னுடைய அனுபவத்தில் அத்தகைய நிறுவனங்கள்  பாகஸ்தர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு (முக்கியமாக வீட்டிலுள்ள பெண்களால்தான் இந்த பிரச்சினை துவங்கும்.. அதுவும் கடைக்குட்டிக்கு திருமணம் நடந்த அடுத்த சில மாதங்களிலேயே..) ஆளுக்கொரு பங்காக பிரித்துக்கொடுக்கப்பட்டு சின்னாபின்னமாகி போவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டு என்னுடைய வங்கியிலிருந்து கடனாக கொடுக்கப்பட்டிருந்த கணிசமான தொகையை வசூலிப்பது பிரச்சினையாகிவிட்டால் என்ன செய்வதென்ற கவலையும் சேர்ந்துக்கொண்டது.

பெரியவர் வைப்புநிதியில் விட்டுச் சென்ற தொகை என்னுடைய கிளையிலிருந்து கடனாக கொடுத்திருந்த தொகைக்கு ஏறத்தாழ ஈடாக இருந்தது எனக்கு ஒருவகையில் ஆறுதலாக இருந்தாலும் அதை அவருடைய குடும்ப நிறுவனத்தின் கடனுக்கு வரவு வைத்துக்கொள்வது அவருடைய இறுதி விருப்பத்திற்கு துரோகம் செய்ததுபோலாகுமே என்றும் தோன்ற அவர் வீட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நான் எடுத்த முடிவை நொந்துக்கொண்டேன்..

எப்படியும் அடுத்த சில நாட்களுக்கு இந்த பிரச்சினையைப் பற்றி நான் கவலைப்பட தேவையில்லை என்று நினைத்தேன்.

ஆனால் அடுத்த நாள் காலை என்னுடைய அலுவலகத்தில் மும்முரமாய் இருந்த நேரத்தில் பெரியவருடைய மூத்த தாரத்து மகனிடமிருந்து வந்த தொலைப் பேசி நான் நினைத்திருந்தது தவறு என்பதை உறுதிபடுத்தியது.

‘சார்.. நான் கூப்பிட்டது நேத்து ராத்திரியிலருந்து நான் அந்த ஃபர்ம்ல பார்ட்னர் இல்லேங்கறத தெளிவுபடுத்தத்தான். இன்னைக்கி க்ளியரிங்ல வந்துருக்கற எந்த செக்கையும் நீங்க பாஸ் பண்ணக்கூடாது. அது நான் சைன் பண்ண செக்காயிருந்தாலும். அதே மாதிரி அந்த லோன் அக்கவுண்ட்ல டெப்பாசிட் செஞ்சிருக்கற எந்த செக்கையும் அதுல க்ரெடிட் பண்ணக்கூடாது. நேத்து ஒங்க பாங்க் க்ளோஸ் பண்ணப்போ எந்த அளவு டெபிட் பேலன்ஸ் இருந்ததோ அதுக்கு மேல ஒரு பைசா கூட இருந்தாலும் அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, சொல்லிட்டேன்.. என் கைப்பட ஒரு கடிதமும் எழுதி என் டிரைவர்கிட்ட குடுத்தனுப்பியிருக்கேன்.’ என்றவர் நான் பதிலளிக்கும் முன் இணைப்பைத் துண்டித்துவிட நான் பதற்றத்துடன் என்னுடைய தலைமை குமாஸ்தாவை அழைத்து அன்று காலை க்ளியரிங் ஹவுசில் இருந்து வந்திருந்த அந்த நிறுவனத்தின் செக்குகள் ஏதாவது கணக்கில் பற்று வைத்திருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். என்னுடைய துரதிரஷ்டம் ஏறத்தாழ பத்து, பதினைந்து செக்குகள் பாசாகியிருந்தன. அதன் விளைவாக முந்தைய தின இறுதியிலிருந்த தொகை சில லட்சங்கள் அதிகமாகியிருந்தன.

இப்போது என்ன செய்வது?

வங்கியின் நியதிப்படி வாடிக்கையாளரின் உத்தரவு எந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்ததோ அந்த நேரம்வரை கணக்கில் பற்றோ வரவோ வைத்திருந்த தொகைகளை ரத்து செய்யத் தேவையில்லை. ஆகவே நிர்வாகத்தின் பாகஸ்தர் என்னை அழைத்த நேரத்தை அந்த கணக்கு தொடர்பான புத்தகத்திலும் அதனுடைய கோப்பிலும் குறித்து வைத்தேன்.

அந்த நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தருக்கு இத்தகைய உத்தரவை நிர்வாகத்தின் சார்பாக பிறப்பிக்க உரிமையிருந்தாலும் அதை உடனே செயல்படுத்துவதில் ஒரு சட்டப் பிரச்சினை இருந்தது. அவருடைய உத்தரவின் மீது நிறுவனத்தின் மற்ற பாகஸ்தர்களுடைய விருப்பத்தை தெரிந்துக்கொள்ளாமல் கணக்கின் வரவு செலவை நிறுத்திவிட்டால் சட்ட விரோதமாக வங்கி மேலாளர் செயல்பட்டதால் எங்களுடைய வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டதென அவர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வாய்ப்பிருந்தது.

ஆகவே நிர்வாக பாகஸ்தரின் இந்த உத்தரவின் விவரத்தை உடனே மற்ற பாகஸ்தர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய நிர்பந்தத்தில் நான் இருந்தேன். அதே சமயம் பெரியவருடைய இழப்பின் துக்கத்திலிருந்த அவருடைய குடும்பத்தினரை எப்படி தொந்தரை செய்வதெனவும் யோசித்தேன்.

சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. நிறுவனத்தில் பெரியவரின் குடும்பத்தைச் சாராத ஒரு வழக்கறிஞரும் பாகஸ்தராயிருந்தது நினைவுக்கு வர அவரை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்று யோசித்தேன். அவர் பெரியவரின் குடும்ப வக்கீலாக இருந்ததால் அவரை அழைத்து விவரத்தைக் கூறிவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன்.

அவரும் நான் கூறியதை உடனே குடும்பத்தினருக்கு தெரிவித்துவிடுவதாக உறுதியளித்தார்.

தொடரும்..

12 comments:

G.Ragavan said...

பாத்தீங்களா சார்...பணம் ரொம்ப இருந்தாலே பிரச்சனை வரும். அளவுக்கு மிஞ்சினா அமுதமே நஞ்சாம்....பணம் எந்த மூலைக்கு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அளவுக்கு மிஞ்சினா அமுதமே நஞ்சாம்....பணம் எந்த மூலைக்கு.//

இந்த காலத்துல அமுதம் கசக்குதோ இல்லையோ பணம் கசக்குறதே இல்லீங்க..

இந்த மதுரை செரீனா மேட்டர பாருங்களேன்.. கோடி ரூபாய்ல ரிசர்வ் வங்கியே இன்னும் வெளியிடாத ரூபாய் நோட்டுகள் இருந்துதாம்..

என்ன அக்கிரமம்?

துளசி கோபால் said...

மரணம் நடந்த வீட்டிலே அடுத்த நாளே என்ன, உடல் அங்கே இன்னும் இருக்கறப்பவே கூட பணத்தாலே என்னென்ன தகராறு, சண்டைகள் எல்லாம் நடக்குது.

எல்லாத்துக்கும் காசுதான் காரணமா?

பணமா? பாசமா?

இதுலே பாவம், நீங்க மாட்டிக்கிட்டீங்களே (-:

sivagnanamji(#16342789) said...

"பணம்- மோகனமான மூன்றெழுத்து
அழகி;;முட்டாளின் மஞ்சத்திலே
கொஞ்சுவாள்;படித்தவனைப் பம்பரமாகச் சுழற்றுவாள்;பாசத்தைக்
கண்டிப்பாள்-நேசத்தைத் துண்டிப்பாள்"--ஒண்ணுமில்லீங்க!இது கலைஞர், 'பணம்'படத்தில் எழுதிய வசனம்

tbr.joseph said...

வாங்க ஜி!

இது கலைஞர், 'பணம்'படத்தில் எழுதிய வசனம் //

கரெக்டான எடத்துல எடுத்து விட்டுட்டீங்க.

அப்ப எழுதுனாலும் இப்பவும் எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க..

இருந்தாலும் ஒங்களுக்கு பயங்கர ஞாபக சக்திங்க..

tbr.joseph said...

வாங்க துளசி,

மரணம் நடந்த வீட்டிலே அடுத்த நாளே என்ன, உடல் அங்கே இன்னும் இருக்கறப்பவே கூட பணத்தாலே என்னென்ன தகராறு, சண்டைகள் எல்லாம் நடக்குது.//

உண்மைதாங்க.. நானே நேர்ல பார்த்துருக்கேன்.

எல்லாத்துக்கும் காசுதான் காரணமா?//

பின்னே.. சமீபத்துல அம்பானி குடும்பத்துல, அப்புறம் டாட்டா குடும்பத்துல கொஞ்ச நாளைக்கு முன்னால கோயங்கா குடும்பத்துல..

எங்கதான் இல்ல?

பணமா? பாசமா?//

பாசமாவது மண்ணாவது.. பணத்துக்கு முன்னால எதுவும் நிக்காது..

sivagnanamji(#16342789) said...

ஹலோ தி.பா 161 க்கு கடைசி பின்னூட்டம் பற்றி நீங்களும் ஒண்ணும் சொல்லலெ;ஜயராமும் ஒண்ணும் சொல்லலே, ஏன்?

tbr.joseph said...

ஜி சார்,

அதான் நேத்தைக்கே இந்த பிரச்சினைய இத்தோட விட்டுருவோம்னு எழுதியிருந்தேனே..

நீங்க சொன்னதுக்கு நா ஒன்னு எழுதுவேன்.. அப்புறம் அவர் ஒன்னு எழுதுவார்..

இது தேவைதானான்னுதான் சைலண்டா இருந்துட்டேன்.

மணியன் said...

//கோடி ரூபாய்ல ரிசர்வ் வங்கியே இன்னும் வெளியிடாத ரூபாய் நோட்டுகள் இருந்துதாம்..// இது என்ன செய்தி சார் ? ரிசர்வ்வங்கியே வெளியிடாத நோட்டுக்கள் என்றால் கள்ள நோட்டுக்களா ?

tbr.joseph said...

வாங்க மணியன்,

அட ஒங்களுக்கு விஷயமே தெரியாதா?

கள்ள நோட்டான்னு கேட்டா ஆமாம்னு சொல்லலாம். ஆனா அது வைக்கப்பட்டிருந்த வங்கியின்ரிசர்வ் வங்கியின் ஆய்வாளர்களே இரண்டு முறை பரிசோதனை செய்தும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு ஒரிஜினாலிட்டி இருக்கிறதாம்..

ஷெரீனா கிட்டருந்து ஆரம்பிச்சி ஜெயலலிதாகிட்ட போயி முடிஞ்சிருக்கு..

அது ஒரு பெரிய கதை..

ஒரு தனி பதிவாவே போடலாம்..

sivagnanamji(#16342789) said...

'வசிஷ்டர் வாயாலெ பிர்ம ரிஷி'ம்பாங்க...உங்க ஞாபக சக்திக்கு முன்னாலே நான் எம்மாத்திரம்?

tbr.joseph said...

...உங்க ஞாபக சக்திக்கு முன்னாலே நான் எம்மாத்திரம்? //

அப்படீங்கறீங்க?