28 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 161

நான் என் அலுவலகத்திற்கு திரும்பி ரசீதுகளை வரிசைப் படுத்தி பட்டியலிட்டு நிமிர்ந்தபோது மொத்த தொகையின் அளவைக் கண்டு பிரமித்துப்போனேன்..

அந்த கற்றையிலிருந்த ரசீதுகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்ததால் அன்று இரவு உணவுக்குப் பிறகு என்னுடைய அலுவலக அறையிலமர்ந்து அதை வங்கிகள் வாரியாக பிரித்து ஒவ்வொரு வங்கிக்கும் அனுப்ப வேண்டிய கடிதங்களையும் தயாரித்து முடித்தேன். ஏறத்தாழ நகரிலிருந்த எல்லா அரசு வங்கிகளிலும் அவர் பணத்தை முதலீடு செய்திருந்தார்.

ஒவ்வொரு வங்கியிலுமிருந்தும் கணிசமான தொகை எடுக்கப்படவிருந்ததால் நிச்சயம் அவ்வங்கி மேலாளர்கள் பெரியவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களிலிருந்த வங்கி கிளைகளுக்கு வேண்டுமானால் நான் குறிப்பிட்ட தொகை சிறியதாக இருக்கலாம்.ஆனால் தூத்துக்குடி போன்ற நடுத்தர நகரங்களில் ஏற்கனவே தேவைக்கும் அதிகமாகவே வங்கி கிளைகள் இருந்த காலம் அது.

ஆகவே வங்கிகள் தங்களுக்குள்ளேயே போட்டி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டியிருந்தது. ஊரிலிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களைச் சுற்றி ஏறத்தாழ எல்லா வங்கி மேலாளர்களுமே முற்றுகையிட்டுகொண்டிருப்பர். புதிதாக வைப்பு நிதி கணக்குகள் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருந்த காலத்தில் உள்ள கணக்குகளையாவது காப்பாற்றிக்கொள்வதில் என்னைப் போன்ற மேலாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டியிருந்தது.

ஒரு வைப்பு நிதியின் காலம் முடிவடைந்தாலும் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளருக்கு அதைக்குறித்து அறிவிக்காமல் இருப்பது ஒருவகையில் அது கைவிட்டு சென்றுவிடாமல் இருக்க சில மேலாளர்கள் கடைபிடிக்கும் டெக்னிக்தான். அறிவிப்பை குறித்த காலத்தில் அனுப்பினால் வாடிக்கையாளர் எங்கே அதை எடுத்துவிடுவாரோ என்ற பயம்தான் இதற்கு காரணம்.

சில வாடிக்கையாளர்களும் அப்படித்தான். ஒரு வங்கியில் முதலீடு செய்திருந்த கணக்கை அதன் காலம் முடிந்ததும் வேறொரு வங்கிக்கு மாற்றிவிடுவார்கள். கூடுதல் வட்டி கிடைக்கும் என்ற நோக்கம்தான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் வங்கி மேலாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக இருப்பதுண்டு.

பெரியவர் நினைத்ததைப் போலவே அரசு வங்கிகள் சில நேரங்களில் அவர்களுடைய  வாடிக்கையாளர்கள் மரிக்க நேர்ந்தால் அவருடைய வாரிசுகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்வதில் காலந்தாழ்த்துவார்கள். அதற்கு முக்கிய காரணம் அரசு வங்கிகளின் வர்த்தக அளவு (Business size). அரசு வங்கிகளுடைய வர்த்தக அளவு எங்களைப் போன்ற தனியார் வங்கிகளைவிட பத்து மடங்கு இருக்கும். வாடிக்கையாளர்களின் அளவுக்கதிகமான எண்ணிக்கை அவர்களுக்கு மேலாளர்களின் பிரத்தியேக சேவை (individual service) கிடைக்கவிடாமல்  செய்துவிட வாய்ப்பிருக்கிறது.

******

அடுத்த நாள் காலை அலுவலகத்துக்கு சென்றதுமே முதல் வேலையாக பெரியவருடைய ரசீதுகளை அதனதன் வங்கிகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு என்னுடைய அலுவல்களில் மூழ்கிப்போனேன்.

அன்றும் என்னுடைய உதவி மேலாளர் விடுப்பிலிருந்ததால் பகலுணவு இடைவேளை வரை எதைப்பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் அலுவல்கள் இருந்தன.

நான் பகலுணவுக்காக சென்றுவிட்டு திரும்பி வந்ததும் என்னுடைய தலைமைக் குமாஸ்தா, ‘சார் நீங்க லஞ்சுக்கு போனதும் ரெண்டு மூனு பாங்குலருந்து ஃபோன் வந்தது. நீங்க வந்ததும் உடனே கூப்பிடணுமாம்..’ என்று தொலைப்பேசி வந்திருந்த வங்கிகளின் பெயரை என்னிடம் கூறினார்.

எல்லாமே நான் எதிர்பார்த்திருந்த வங்கிகள்தான். சம்பந்தப்பட்ட எல்லா மேலாளர்களையுமே நான் ஏற்கனவே பல சமயங்களில் சந்தித்திருக்கிறேன்.

ஆகவே அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் எனக்கு போதும், போதும் என்றாகிவிட்டது. ‘சார்.. பெரியவர நேர்ல கேக்காம நீங்க அனுப்புன டெப்பாசிட் ரெசீட்ஸ மாத்த முடியாது சார்.. ஐ அம் சாரி..’ என்றனர் ஒட்டுமொத்தமாக.

‘அது ஒங்க இஷ்டம் சார்.. நீங்க வேணும்னா பெரியவர்கிட்ட ஃபோன்ல பேசிக்குங்க.. ஆனா டிலே பண்ணாதீங்க. ஏன்னா அவருக்கு இதனால interest loss ஏற்படக்கூடாது.. அவ்வளவுதான்.’ என்றேன்.

என்னுடைய விளக்கத்தில் திருப்தியடையாத சில மேலாளர்கள் பெரியவருடைய மகன்களை தொலைப்பேசியில் அழைத்து இந்த விஷயத்தை திரித்து கூறிவிட விஷயம் விபரீதமாகி அவருடைய குடும்பத்திலும் பிரச்சினையாகிவிட்டது. பெரியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த நாளே இரண்டு வெற்றுத்தாள்களில் கையொப்பமிட்டு ஒரு உரையிலிட்டு தன்னுடைய ஓட்டுனரிடம் கொடுத்தனுப்பினார். எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ.. நான் அதை என்னுடைய மேசையில் வைத்து பத்திரப்படுத்தினேன்.

‘எங்கப்பாதான் ஒங்ககிட்ட வந்து சொன்னார்னா நீங்க எப்படி சார் இத எங்கக்கிட்ட சொல்லாம செய்யலாம்? இதுக்குத்தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன்னு ஒரு பிரசெண்ட வாங்கிட்டு வந்து நின்னீங்களோ..’

அவர்களுடைய கோபம் அர்த்தமற்றதென தெரிந்தாலும் அனாவசியமாக அவர்களுடைய விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள விரும்பாத நான்.. ‘சார் இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. நீங்க எல்லாருமா சேர்ந்து ஒங்கப்பாக்கிட்ட பேசுங்க. அவங்க என்னெ கூப்ட்டு ரசீட்சையெல்லாம் திருப்பி குடுத்துருங்கன்னு சொல்லட்டும், இத இத்தோட நிறுத்திடறேன்.’ என்றேன்.

ஆனால் அடுத்த சில நாட்களில் பெரியவர் என்னை அழைக்காததிலிருந்து அவர்களால் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது தெரிந்தது.

நான் அனுப்பியிருந்த வங்கிகளுள் சில மற்றுமே ரசீதுகளுக்கான காசோலையை அனுப்பிவைத்தன. இதை பெரிதுபடுத்தி பிரச்சினையை கிளப்புவதால் பயனில்லை என்பதால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன்.

பெரியவர் என்ன செய்தாரோ தெரியவில்லை எல்லா ரசீதுகளுக்கான காசோலைகளும் அந்த வார இறுதிக்குள் வந்து சேர்ந்தன.  

பெரியவர் ஏற்கனவே என்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்ததால் நான் அவரளித்த ரசீதுகளிலிருந்த தொகையையும் அதற்குண்டான வட்டியையும் சுமார் இருபத்தைந்து ரசீதுகளாக பிரித்து பெரியவருடைய பெயர் மற்றும் வேறொருவருடைய பெயரையும் சேர்க்கும் விதமாக தயாரித்து வரவு வைத்தேன்.

பெரியவர் பயந்ததைப் போல அவருக்கு ஏதாவது விபரீதம் நடந்துவிடக்கூடிய சூழ்நிலை நேர்ந்தால் அவருடைய மனைவியுடைய பெயரையும் சேர்த்துக்கொள்ள ஏதுவாகவே அப்படி செய்தேன். அது வங்கி நியதிகளுக்கு முரண்பட்டதென எனக்குத் தெரிந்தாலும் பெரியவருடைய தர்மசங்கடமான நிலையை மனதில் கொண்டும்.. அவருக்கு அப்படியேதும் நேர்ந்துவிட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையிலுமே அப்படி செய்வதென தீர்மானித்தேன்.

அடுத்த சில நாட்கள் அவர் வருவார், வருவார் என காத்திருந்தேன். ஆனால் அவர் வரவேயில்லை.

என்னுடைய காசாளர் மூலமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதை தெரிந்துக்கொண்டேன். ‘இந்த டெப்பாசிட் விஷயம் அவங்க குடும்பத்துல பெரிய விவகாரமாயிருச்சின்னு பேசிக்கறாங்க சார்.. பெரியவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சின்னு கேள்விப்பட்டேன்.. ஹாஸ்பிட்டல்ல சேக்காம வீட்லயே டாக்டர்ங்கள வச்சி ட்ரீட் பண்றாங்க போலருக்கு.’ என்றார்.

இந்த சூழ்நிலையில் அவரை சென்று சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தாலும் ஏற்கனவே அவருடைய குடும்பத்தினருக்கு என்னை அவ்வளவாக பிடிக்காது என்பதால் என்னுடைய காசாளரையே சென்று கண்டுவிட்டு வருமாறு கேட்டேன்.

அவரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அவருக்கு பழக்கமான அலுவலர் வழியாக பெரியவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் குடும்பத்தில் நடந்த குழப்பத்தில் மூத்த தாரத்து மகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவலறிந்து என்னிடம் வந்து கூறினார்.

அடுத்த சில நாட்களில் நான் எது நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தேனோ அது நடந்தது.

பெரியவர் காலமாகிப் போனார். என்னுடைய கிளையில் அவர் முதலீடு செய்திருந்த கணக்குகளின் படிவங்களில்கூட அவர் கையொப்பமிட்டிருக்கவில்லை. ஆனால் அவர் என்னை சந்தித்த அடுத்த நாள் இரண்டு வெற்றுத்தாள்களில் கையொப்பமிட்டு அவருடைய ஓட்டுனர் வழியாக என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தது நினைவுக்கு வர அதை எடுத்து நானே ஒரு கடித்தை தயார் செய்து என்னுடைய கிளை ரிக்கார்டுகளில் பதிந்துகொண்டேன்..

அக்கடிதத்தில் அவருடைய பெயரில் பல வங்கிகளிலுமிருந்த எல்லா ரசீதுகளையும் மாற்றி என்னுடைய வங்கியில் அவர் பெயரில் ஓராண்டு வைப்பு நிதியில் வைக்கவேண்டுமென்றும் அதற்குள் அவர் மரணமடைய நேர்ந்தால் முழுதொகையும் அவருடைய மனைவியின் பெயருக்கு மாற்றிவிடவேண்டும் என்று எழுதியிருந்தேன்.

பெரியவரின் இறுதிச்சடங்குக்கு போகாமல் இருந்தால் நன்றாயிருக்காதே என்று என்னுடைய காசாளரை துணைக்கு அழைத்துக்கொண்டு என்னுடைய வங்கியின் சார்பாக ஒரு மலர் வளையத்தையும் எடுத்துக்கொண்டு சென்றேன். நான் சென்ற நேரத்தில் பெரியவரின் உடலை வீட்டு முற்றத்தில் தரையில் கிடத்தியிருந்த நிலைகண்டு பதறிப்போனேன்..

கேட்டால் அதுதான் சாஸ்திரமாம். அவர்களுடைய குடும்பங்களில் அவர்கள் கடைபிடிக்கும் பழக்கமாம். அதைப்பார்க்க சகிக்காமல் என்னுடைய மரியாதையை செலுத்திவிட்டு உடனே வெளியேறினேன்..

‘என்ன அக்கிரம் பாத்தீங்களாண்ணே. பெரியய்யா ராசா மாதிரி வாழ்ந்தாங்களே.. இன்னைக்கி இந்த பசங்க அவங்களுக்கு செய்யற மரியாதையை பாருங்க.. நம்ம சாதியில இப்படியெல்லாம் நடக்குமாண்ணே.. என்ன சாஸ்திரமோ போங்கண்ணே.. செத்தவுடனே அது பொணமாம்.. இன்னைக்கி ராத்திரிக்குள்ள எரிச்சிரணுமாம்.. அதுலதான் குறியாயிருக்கானுங்க.. அய்யாவ நம்ம ஊர்ல எவ்வளவு பேருக்கு தெரியும்.. ?கேவலம் அவர ஒரு மேசையில துணிய விரிச்சி கிடத்தியிருந்தாக்கூட வந்து பாக்கறவங்களுக்கு வசதியா இருக்குமில்லண்ணே.. தரையில கிடத்தி வச்சிருக்கறத பாருங்கண்ணே.. இத்தன சொத்து சுகம் இருந்து என்னண்ணே பிரயோஜனம்..?’ என்று வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தில் பணியாற்றிய பணியாட்களின் பேச்சைக் கேட்டபோது அவர்களுக்கு பெரியவர் மீதிருந்த பாசம்கூட சொந்த பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தவாறே அங்கிருந்து கிளம்பினேன்..

தொடரும்..

23 comments:

துளசி கோபால் said...

சிலருடைய வழக்கம் இதுதான். தரையிலே உருட்டி விட்டுருப்பாங்க.

ஆனாலும் இது இறந்தவங்களுக்குச் செய்யற அவமரியாதைதான். இதுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

இப்ப இந்தியாலே கண்ணாடிப் பெட்டிக்குள்ளெ வைக்கறது பார்த்தேன். இது எவ்வளோ நல்லா இருக்கு.

என்னமோ போங்க. சம்பிரதாயங்களும் சாஸ்த்திரங்களும் மனுஷனுக்காக ஏற்பட்டதுதானே. அது மாறி
அதுகளுக்காக மனுஷன்னே ஆக்கி வச்சிட்டாங்க.

dondu(#4800161) said...

பெரியவர் பிறந்த நாளன்று அவர் வீட்டில் வைத்து உங்களுக்கு இழைக்கப்பட்டது மிகப் பெரிய அவமானம். நீங்கள் கோபப்பட்டதும் மிக நியாயமே. அந்தக் கோபத்தை அதன் போக்கிலேயே விட்டதால் உங்கள் அடிப்படையான நல்ல எண்ணம் அதை வெற்றி கொண்டது. அதுவும் உங்களுக்கு பெருமையளிப்பதே.

பெரியவர் பிறகு தனியாக வந்து மன்னிப்பு கேட்டது அவருக்கு பெருமையளிக்கிறது. அத்தனை டிபாசிட் ரசீதுகளையும் உங்கள் பேங்கில் போடுவதற்காக அவர் கொடுத்தபோது அவருக்கு வட்டி இழப்பு நேரிடும் என நீங்கள் நேர்மையாகக் கூறியதால் அவர் உங்கள் மேல் இன்னும் அதிக நம்பிக்கை வைத்து காலி காகிதங்களில் கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார். நீங்களும் அதை சரியான முறையில் பயன்படுத்தி, அவர் விருப்பம் அவர் மரணத்துக்குப் பிறகு செயல்படுவதற்கு ஆவன செய்திருக்கிறீர்கள்.

இப்படியாக, நீங்கள் இருவருமே இந்த விஷயத்தில் நெருப்பில் புடமிட்டத் தங்கம் போல வெளியில் வந்துள்ளீர்கள். கங்க்ராட்ஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sivagnanamji(#16342789) said...

வங்கிமேலாளர்கள் புத்திரர்களிடம் சொல்லி தூண்டி விடுவார்கள் என்பது
எதிர்பார்க்கப்பட்டதுதான்....ஆனால்
பெரியவரின் மரணம் சற்றும் எதிர்பாராதது.......
"பொய்மையும் வாய்மை யுடைத்த பொறை தீர்ந்த
நன்மை படைக்கு மெனில்"

tbr.joseph said...

வாங்க துளசி,

சம்பிரதாயங்களும் சாஸ்த்திரங்களும் மனுஷனுக்காக ஏற்பட்டதுதானே. அது மாறி
அதுகளுக்காக மனுஷன்னே ஆக்கி வச்சிட்டாங்க. //

ஆமாங்க.. அதுதான் துரதிர்ஷ்டம்..

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

பெரியவர் பிறகு தனியாக வந்து மன்னிப்பு கேட்டது அவருக்கு பெருமையளிக்கிறது//

அத்தனை வயதானவர் இறங்கி வந்து என்னைப் போன்ற ஒரு இளைஞனிடம் மன்னிப்பு கேட்பதென்றால் எவ்வளவு பெரிய விஷயம்.. அப்படி செய்தபோது என்னுடைய பழிவாங்கும் உணர்வு சென்ற இடமே தெரியாமல்போனது..

நீங்களும் அதை சரியான முறையில் பயன்படுத்தி, அவர் விருப்பம் அவர் மரணத்துக்குப் பிறகு செயல்படுவதற்கு ஆவன செய்திருக்கிறீர்கள்.//

வாடிக்கையாளர்களுக்காக வங்கி மேலாளர்கள் இத்தகைய சலுகைகளை செய்வது மிகவும் சகஜம். ஆனால் அதுவே சிலசமயங்களில் அவர்களை சிக்கலில் கொண்டு விட்டுள்ளது என்பதும் உண்மை.

tbr.joseph said...

வாங்க ஜி!

"பொய்மையும் வாய்மை யுடைத்த பொறை தீர்ந்த
நன்மை படைக்கு மெனில்" //

என்னதான் சொல்ல வரீங்க ஜி? ஒன்னும் புரியலையே..

நான் தமிழ் உரைநடையிலயே வீக்.. இதுல குறள் வேறயா?

உரைநடை ப்ளீஸ்:)

ஜயராமன் said...

மிகவும் வருத்தம் அளிக்கிறது தங்கள் பதிப்பு.

அதை வழி மொழிந்து பலரும் உண்மை அறியாமல் உணர்ச்சிவசப்படுவதும் மேலும் விசனம்.

ஹைஸ்கூலில் ஒரு கதை படித்திருக்கிறேன். அதில், தெருக்கூத்தில் ஒருவர் 'பீமசே, நக்க, தையத்தூ, கினானே' என்று பாடுவார். என்னவென்று புரிகிறதா? அதைப்போலத்தான் ....

ஜோசப் சார். நாளை நான் இறந்துவிட்டால் என்னையும் தரையில்தான் கிடத்துவார்கள். என் நண்பரானதால் அவசியம் வருவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கு பின், இப்படி ஒரு பின்பதிவு போட்டு விடாதீர்கள்.

நன்றி

sivagnanamji(#16342789) said...

நியாயத்தை நேர்மையான் ஓன்றை சாதிப்பதற்காகக் கூறப்படும் பொய் கூட உண்மையாகவே அங்கீகரிக்கப்படும்....பெரியவரின் நேர்மையான விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் மேற்கொண்ட முயற்சி]

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்..

நான் என்னுடைய முப்பது வயதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நடந்ததை நடந்தபடியே எழுதுகிறேன்.

ஒரு வாரத்திற்கு முன் உயிருடன் நான் பார்த்த, என் மதிப்பிற்குரிய ஒரு பெரியவரின் உடல் கட்டாந்தரையில் கிடத்தப்பட்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போது என் மனதில் தோன்றியதை அப்படியே வடித்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு பல சமயங்களில் இப்படியொரு அனுபவம் எனக்கு நேர்ந்திருக்கிறது.. அது பழகியும்போனது.

ஆனாலும் ஜெயராமன் இந்த வயதிலும் அப்படிப்பட்ட பழக்கம் சற்றே அநாகரீகமாகத்தான் தோன்றுகிறது..

ஆனால்.. அதை சரியென்று நீங்கள் நினைக்கும்போது இல்லையென்று சொல்ல நான் யார்..

உங்களுடைய மனதை என் பதிவு புண்படுத்தியிருக்குமானால்.. மன்னியுங்கள்..I am really sorry.. I didn't mean to..

tbr.joseph said...

நியாயத்தை நேர்மையான் ஓன்றை சாதிப்பதற்காகக் கூறப்படும் பொய் கூட உண்மையாகவே அங்கீகரிக்கப்படும்....//

உண்மைதான் ஜி!

ஆனால் நான் வெற்றுத்தாளில் எழுதியது பொய்யாக இருக்க முடியாது..

அதைத்தான் பெரியவர் விரும்பியிருக்கவேண்டும்..

ஜயராமன் said...

எது அநாகரீகம். எது நாகரீகம்.

பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது நாகரீகமா? எல்லோருக்குமா? மாமனை கல்யாணம் செய்து கொள்வது நாகரீகமா? எல்லோருக்குமா? தலையை முக்காடு போட்டிருப்பது நாகரீகமா? எல்லோருக்குமா? ஒரே தட்டில் பத்து பேர் பிரியாணி சாப்பிடுவது நாகரீகமா? எல்லோருக்குமா? வயிற்றை தொப்பையை காட்டி உடை உடுத்தி கல்யாணம் பண்ணிப்பது நாகரீகமா? இல்லை, கோட், சூட்டுடன் அழகாக மோதிரம் போட்டுக்கொள்வது நாகரீகமா? இறந்தவுடன் உடலை கழுகுக்கு இறையாக மாடியில் தூக்கிப்போடும் பார்சிகளின் த்த்துவம் எவ்வளவு உன்னதமானது தெரியுமா?

என் தாத்தா 10 பெற்றார். அது இப்பொழுது உங்களுக்கு அநாகரீகமாய் இருக்கலாம்.

இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.

என் நாகரீகம், உங்களுக்கு அருவருப்பு.

அர்த்தமுள்ள இந்து மதம் படித்துப்பாருங்கள். அதில் கண்ணதாசன் பாப்பானின் சாவு காரியத்தை பற்றி என்ன சொல்கிறார் என்று?

இந்த பதிவை பின்னோட்டம் இடக்கூடாது என்று முயன்றேன். பாப்பான் கீப்பான் என்றெல்லாம் தினசரி நிறைய ஆபாச வசைகள் தமிழ்மணத்தில் எனக்கு காணிக்கை ஆனதால். ஆனால், மனது ஆறவில்லை. பின்னோட்டம் இட்டேன். என்ன செய்வது, மேலும் மேலும் தப்பு செய்கிறேன்!!

நன்றி

tbr.joseph said...

அடடடா..

அதை சரியென்று நீங்கள் நினைக்கும்போது இல்லையென்று சொல்ல நான் யார்..//

நான் அநாகரீகம்னு சொன்னதுக்கு கீழ இதையும் சொல்லியிருக்கிறேனே ஜயராமன்..

அப்புறம் இன்னொன்னு,

நீங்க சரின்னு நினைச்சததான எழுதறீங்க ஜயராமன்..

அதை ஏன் நீங்களே தப்புன்னு சொல்றீங்க..

நீங்க நினைச்சத சொல்றதுக்கு யாருடைய பர்மிஷனும் தேவை இல்லை ஜயராமன்..

தாராளமா எழுதலாம்..

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தை படித்திருக்கிறேன்..

ஆனால் அவர் ஒன்றும் எதிலும் அத்தாரிட்டியில்லையே.. அவருடைய அறிவுக்கு எட்டியதை எழுதியிருக்கிறார்...

சரி, சரி.. இத இத்தோட விட்டுரலாமா?

அதுக்காக என்னோட பதிவ படிக்கறத விட்டுராதீங்க:)

G.Ragavan said...

ஜோசப் சார். எண்ணங்களையும் மறுப்புகளையும் சற்று இலைமறைகாயாக எழுதுவது நல்லது என்று தோன்றுகிறது.

ஊரூக்கு ஒவ்வொரு வழக்கம். அவ்வளவுதான். என்றைக்குமே அடுத்தவன் செய்வது அநாகரீகம்தான். அடுத்தவன் பேசும் மொழியைக் கிண்டல் செய்யாதவர் நம்மில் யார்? அடுத்தவன் மதத்தை, இனத்தை, உடையை, பழக்கவழக்கங்களை......வேறுபாடுகள் எங்கும் உண்டு.

அந்தப் பெரியவரை நினைத்தால் கனமாக இருக்கிறது. பாசத்தை விடப் பணம் பெரிதாகப் போனதே!

sivagnanamji(#16342789) said...

சுருக்கமாக;
நீதியை நிலைநாட்ட சில அத்துமீறல்கள்[வெற்றுத்தாளில் நியாயமானதை டைப் செய்துகொள்வது] அனுமதிக்கப்படும்;அது தவறாகக் கருதப்பட மாட்டாது..சரிதானா?

sivagnanamji(#16342789) said...

டிபிஆர் & ஜயராம்
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப"-
[தொல்காப்பியம்]
மணிதர்களிடையில் பொய்மையும் குறைகளும் மலிந்த பின்னர்,அவர்களை நெறிப்படுத்துவதற்காக ஆன்றோர்களால் சாஸ்த்திர சம்பிரதாயங்களும் சடங்குகளும்
உருவாக்கப்பட்டன.தத்துவங்கள்தான்
நிலைக்கும்;சடங்குகள் அல்ல.

tbr.joseph said...

எண்ணங்களையும் மறுப்புகளையும் சற்று இலைமறைகாயாக எழுதுவது நல்லது என்று தோன்றுகிறது.//

உண்மைதான் ராகவன்..

இனி அப்படித்தான் செய்யணும்..

சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

tbr.joseph said...

தத்துவங்கள்தான்
நிலைக்கும்;சடங்குகள் அல்ல. //

நோ கமெண்ட்ஸ்:)

ஜயராமன் said...

மதிப்பிற்குரிய ஐயா சிவஞானம் அவர்களே,

என் கருத்துக்கு மதிப்பளித்து அதற்கு பதில் தந்தது ரொம்ப சந்தோஷம். முதல் முறையாக என் கருத்துக்களில் தங்களின் அபிப்ராயம் கேட்க முடிந்தது.

தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை....

////
டிபிஆர் & ஜயராம்
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப"-
[தொல்காப்பியம்]
மணிதர்களிடையில் பொய்மையும் குறைகளும் மலிந்த பின்னர்,அவர்களை நெறிப்படுத்துவதற்காக ஆன்றோர்களால் சாஸ்த்திர சம்பிரதாயங்களும் சடங்குகளும்
உருவாக்கப்பட்டன.தத்துவங்கள்தான்
நிலைக்கும்;சடங்குகள் அல்ல. ///

த்த்துவத்திற்கும் ஐயர் வீட்டு கருமாதி சடங்குகளுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது, என்ன முரண்பாடு?

என் த்த்துவம் என்ன. அன்பே சிவம். இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனுக்கு உடல், பொருள் கிடையாது. அவனின்றி அணுவும் அசையாது. அவனை உள்ளேதான் உணர முடியும். etc etc.

இவை மாறுவதில்லை. ஏனென்றால், இவை மறுக்க முடியாத உண்மைகள் (அட்லீஸ்ட் எனக்கு...)

சடங்குகள் என்பவை எப்போதுமே பலதரப்பட்டவை. என் சடங்கும், ஜோசப் சார் சடங்கும் ஒருமாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

இதில் ஒன்று உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்று கருதுவதும் முட்டாள்தனம். ஐயர் வீட்டு சடங்கை பார்த்தால் அநாகரீகமாக இருக்கிறது என்று ஜோசப் சார் சொன்னது அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

எது நாகரீகம்? கேரளாவின் முண்டு கட்டுவது அநாகரீகமா? வெளிநாட்டுகாரன் நாம் கையால் சாப்பிடுவது பார்த்து சிரிக்கிறானே, அதனால் நாமெல்லாரும் நாகரீகம் அற்றவர்கள்தானோ?

தரையில்தான் நாமெல்லாரும் படுத்து உறங்குகிறோம். எங்கள் கிராமத்தில் பாயில்தான் படுத்து நான் வளர்ந்தேன். என்ன ஒரு அநாகரீகமான வாழ்க்கை நான் வாழ்ந்திருக்கிறேன் என்பது ஜோசப் சார் பதிவை படித்தபின்தான் தெரிகிறது.

நன்றி

ஜயராமன் said...

துளசி மேடம்,

///சிலருடைய வழக்கம் இதுதான். தரையிலே உருட்டி விட்டுருப்பாங்க. ///

மன்னிக்கவும். இங்கு பெரியவரை 'உருட்டிவிட்டார்களா' என்று ஜோசப் சார் தயை செய்து விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தரையில் துணி விரித்து மேலும் சிலவற்றை தாங்கி பலகையில் தலை வைத்து தெற்கு புறமாக தலை இருக்கும்படி கிடத்தப்படுவார்கள். அவர்களுக்கு குளிப்பாட்டி, புது புடவை அணிவித்து, மாலையுடன் கிடத்தப்படுவார்கள்.

உயிர் இருக்கும்போதே, கட்டிலிலிருந்து இறக்கப்பட வேண்டும். கட்டிலில் அல்லது ஆசனத்தில் ஒருவர் மறைந்தால் அது ஒரு தோஷமாக சொல்லி அதற்கு பரிகாரம் செய்து தகனம் செய்ய வேண்டும் என்று சாத்திரம் சொல்கிறது.

நிலையற்ற இந்த ஐம்புலனால் ஆன இந்த உடல், ஜீவன் சென்றவுடன் அக்னிக்கு சொந்தமாகிறது.

உடல் மண்ணின் அமைப்பு. அதில் உள்ளே இருக்கும் ஜடராக்னி அக்னிக்கு சொந்தம். நீரும், வாயுவும் காற்றில் கலக்கின்றன. அதனால், தரை பட இருக்கும் உடல் அதன் அஸ்திவாரத்தை கடைசியில் பார்க்கிறது.

தாங்கள் இதை கொச்சை படுத்தி இதை மன்னிக்க முடியாத குற்றம் என்று தண்டனையும் தந்து விட்டீர்கள்.

தங்களுக்கு ஒரு நாய்க்குட்டியிடம் இருக்கும் ஒரு நார்மல் அன்பையும் மரியாதையும் கூட பிறர் சம்பிரதாயங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றாதது வருத்தப்பட வைக்கிறது.

நிர்வாண ஊரில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்தான். நான்தான் இங்கு மிஸ்பிட் என்று தோன்றுகிறது...

நன்றி

tbr.joseph said...

தரையில் துணி விரித்து மேலும் சிலவற்றை தாங்கி பலகையில் தலை வைத்து தெற்கு புறமாக தலை இருக்கும்படி கிடத்தப்படுவார்கள். அவர்களுக்கு குளிப்பாட்டி, புது புடவை அணிவித்து, மாலையுடன் கிடத்தப்படுவார்கள்.//

என்னுடைய நினைவில் நிற்கும்வரை இப்படியொரு கோலத்தில் பெரியவரின் சடலம் கிடத்தப்பட்டிருக்கவில்லை..

நிர்வாண ஊரில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்தான். நான்தான் இங்கு மிஸ்பிட் என்று தோன்றுகிறது...//

அதாவது where ignorance is bliss it is folly to be wiseனு நீங்க wise மத்தவங்க எல்லாம் ஞான சூன்யம்னு சொல்ல வரீங்க..

ஹூம்.. நான் இனி ஒன்னும் சொல்லப் போறதில்லை..

ஜயராமன் said...

ஜோசப் சார்,

/// அதாவது where ignorance is bliss it is folly to be wiseனு நீங்க wise மத்தவங்க எல்லாம் ஞான சூன்யம்னு சொல்ல வரீங்க.. ////

நிச்சயமாக இல்லை. நான் சொன்னதற்கு இது மாதிரி அர்த்தம் எப்போதுமே ஆகாது. நிர்வாண ஊரில்... என்ற பழமொழி நீங்கள் எல்லோரும் இந்த சம்பிரதாயத்தை அநாகரீகம் என்று நம்பும்போது நாம் மட்டும் அதை திருத்த முயல்வது என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். அதற்காகத்தான், விளக்கமாக மிஸ்பிட் என்று சொல்லியிருக்கிறேன்.

இதில் ஞான சூன்யம் எங்கிருந்து வந்தது. நானும் பல சம்பிரதாயங்களை பார்க்கிறேன். அவை என்னை சந்தோஷப்படுத்துகின்றன.

இந்த உலகில் ஆண்டவன் அமைப்பில் எத்தனை வினோதமான சமுதாயங்கள் வாழுகின்றன என்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதுதான் cultural diversity. இது போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். இதில் எனக்கு பிறர் சடங்குகளை ப்பற்றி எந்த ஞானமும் தேவையில்லை. அவை அவர்களின் வாழ்வு என்ற உணர்வு மட்டுமே போதும். அதனால்தான், மிஸ்பிட் என்றேன். எனக்கு எல்லாம் தெரியும் என்ற அர்த்தத்தில் அல்ல. அவ்வாறு நினைக்கும் அளவிற்கு நான் மடையன் அல்ல.

இது தங்களுக்கு தப்பாக பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன்

நன்றி

துளசி கோபால் said...

ஜெயராமன்,

தங்கள் மனம் புண்படும்விதம் எழுதியதற்கு வருந்துகின்றேன்.
எனக்குத் தெரிந்தவரை ஒரு ஊரில்( எல்லா சாவுக்கும் நான் சம்மன் இல்லாமல் ஆஜராயிருவேன்)
வெறும் கட்டாந்தரையில் இருக்கும் பல உடல்களைப் பார்த்திருக்கிறேன்.

'உருட்டி விட்டுடுவா'ன்ற பதப்பிரயோகம் பொதுவாகவே அன்று அந்த நாட்களில் வழங்கப்பட்டது.

தெரிந்ததை எழுதினேனே தவிர தங்கள் மனதையோ, அல்லது இன்னுமிதைக் கடைப்பிடிக்கும்
மற்றவர் மனங்களையோ புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.

//ஹூம்.. நான் இனி ஒன்னும் சொல்லப் போறதில்லை.. //

நானும்.

tbr.joseph said...

உங்களுடைய மனதை என் பதிவு புண்படுத்தியிருக்குமானால்.. மன்னியுங்கள்..I am really sorry.. I didn't mean to.. //

இது நான்..

தெரிந்ததை எழுதினேனே தவிர தங்கள் மனதையோ, அல்லது இன்னுமிதைக் கடைப்பிடிக்கும்
மற்றவர் மனங்களையோ புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.//

இது துளசி..

இது தங்களுக்கு தப்பாக பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன்

இது நீங்க..

இத்தோட சாப்ட்டர் க்ளோஸ்..

சரியா ஜயராமன்?