23 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 158

தூத்துக்குடியில் மீன்பிடித் தொழிலுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றிருந்தது மீன், இறால் எனப்படும் சீஃபுட் ஏற்றுமதி.

இவற்றுடன் உலர்ந்த மீன் (கருவாடு), உலர்ந்த இறால் மற்றும் சென்னாங்குனி ஆகியவையும் பெருமளவு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு அடுத்தபடியாக இந்து துணைகண்டத்தில் தூத்துக்குடி துறைமுகம் ஒரு பரபரப்பான துறைமுகம் என்றால் மிகையாகாது.

சமீப காலமாக தூத்துக்குடி துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படவே அதைச் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏதுவான பல தொழில்களும் தூத்துக்குடி நகரில் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதைக் கேள்விப்படுகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் மேலே குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனம் என் வங்கியில் ஒரு கணிசமான தொகையை கடனாக பெற்றிருந்தது.

நான் கிளைக்கு பொறுப்பேற்று முடிந்த கையோடு நான் சென்று சந்தித்த வாடிக்கையாளர்களில் இந்த நிறுவனமும் ஒன்று.

அந்நிறுவனம் ஒரு குடும்ப நிறுவனம். ஏற்றுமதி செய்யும் பொருட்களின் வாசத்தைக் கூட அடியோடு வெறுக்கும் ஒரு இனத்தைச் சார்ந்த குடும்பம் அது.

தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு கிராமத்திலிருந்து தூத்துக்குடி நகருக்கு பல வருடங்களுக்கு முன்பு குடிபெயர்ந்த மிகவும் ஆச்சாரமான குடும்பம் அது என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.

நிறுவனத்தின் பாகஸ்தர்களாக ஒரேயொரு வழக்கறிஞரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான்.

நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தர் (Managing Partner) குடும்பத்தலைவரின் மூத்த தாரத்து மகன். முத்த தாரம் இறந்ததும் இரண்டாவது திருமணம் செய்து அவருக்குப் பிறந்த இரு மகன் மற்றும் இரு மகள்களுடன் அவர்களுடைய கணவன்மார் என குடும்பத்தலைவர், அவருடைய மனைவி மற்றும் இரண்டு மருமகள்களைத் தவிர எல்லோருமே அந்நிறுவனத்தில் பாகஸ்தர்களாக இருந்தனர்.

குடும்பத்தலைவருக்கு நான் பொறுப்பேற்றபோது எண்பது வயதைக் கடந்திருந்தது. ஆனாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவருடைய மேற்பார்வையில் நிறுவனமும் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தது.

என்னுடைய கிளையின் வட்டி வருமானம் (Interest Income) மற்றும் கமிஷன் (Commission) வருமானத்தில் ஒரு கணிசமான விகிதம் அந்த நிறுவனத்திலிருந்துதான் கிடைத்துக்கொண்டிருந்தது என்றாலும் மிகையாகாது.

நிறுவனம் ஈடுபட்டிருந்த தொழில் அக்குடும்பத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்றாலும் அதை வெறும் வர்த்தகமாகவே கருதி திறம்பட நடத்தி வந்தனர்.

நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையையும், பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு தயாராக இருந்தவற்றை வைத்திருந்த கிடங்கை பராமரிக்கும் பொறுப்பையும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த ஊழியர் மற்றும் அதிகாரிகளிடமே ஒப்படைத்து வர்த்தக மற்றும் அலுவலக காரியங்களில் மட்டும் தங்களுடைய கவனத்தைச் செலுத்தி வந்ததைப் பார்த்தேன்.

அவர்களுடைய அலுவலகத்திற்கு முதல் முறை சென்றிருந்தபோது இதை அறியாத நான் அவர்களுடைய தொழிற்சாலையை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கூறினேன்.

நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தராகவிருந்தவர், ‘அது வேணுமா சார்?’ என்றார்.

அவருடைய குரலில் இருந்த சங்கடத்தைப் பார்த்த நான் ‘எதுக்கு கேக்கறீங்க?’ என்றேன் வியப்புடன்.

‘இல்ல சார்.. நாங்களே அங்க போமாட்டோம்.. அதுக்குன்னு ------------- ஆளுங்கள (அந்த சமூகத்தினரின் பெயரை அவர் உச்சரித்த விதம் எனக்கு அறவே பிடிக்கவில்லை) வச்சிருக்கோம்.. அவங்கள இங்க வர விடறதில்ல.. இப்ப ஒங்கள அங்க இங்கருக்கற யார் கூடயும் அனுப்ப முடியாது.. அதான் யோசிச்சேன்.’

அவர் கூறியதை ஜீரணிக்க முடியாமல் அவரையும் அவருடனிருந்த அவருடைய சகோதரர்களையும் பார்த்தேன். அவர்களுடைய முகத்திலும் நான் ஏதோ அருவறுக்கத்தக்க காரியத்தை கேட்டுவிட்டதுபோலிருந்தது.

அவர்களுடைய பின்னணியைப் பற்றி என்னுடைய கிளையிலிருந்த அவர்களுடைய கோப்பு மூலமாக அறிந்திருந்ததால் நான் லேசான புன்னகையுடன், ‘சரி பரவாயில்லை. வேறொரு நாளைக்கு ஃபேக்டரியிலருந்து யாரையாச்சும் அனுப்புங்க. நான் நேரா போய் பாத்துக்கறேன்.’ என்றேன்.

அப்போதும் அவர் தயக்கத்துடன், ‘சார் நா அதுக்கு சொல்லல. ஃபேக்டரியில அடிக்கற வீச்சத்த ஒங்களால தாங்க முடியாது. அது அவங்களுக்குத்தான் லாயக்கு. யோசிச்சி சொல்லுங்க. நம்ம டிரைவரே வேணும்னா ஒங்கள கூட்டிக்கிட்டு போயிருவாரு. ஃபேக்டரிக்கு அனுப்பறதுக்கு ஒரு தனி வண்டியே இருக்கு.’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே, ‘நாங்க பேங்க்ல இதையெல்லாம் பாக்க ஆரம்பிச்சா இந்த தொழில்ல நேரடியா ஈடுபட்டிருக்கறவங்களுக்கெல்லாம் லோன் குடுக்க முடியுமா சார்? ஒரு அஞ்சாறு போட்டுக்கு லோன் குடுத்துருக்கோம். அத வசூல் பண்றதுக்கு வாரத்துக்கு ஒரு நாள் ஃபிஷ்ஷிங் ஹார்பருக்கு போய்த்தானே ஆவணும்? நா ஒன்னும் ஒங்கள மாதிரி --------------- (அவருடைய சமூகத்தை மறைமுகமாக குறிப்பிட்டேன்) இல்லையே..’ என்றேன்.

அவர்களுக்கு என்ன தோன்றியதோ நிர்வாக பாகஸ்தர் அவருடைய டிரைவரை அழைத்து தெலுங்கில் ‘இவர கூட்டிக்கிட்டு போய் காமிப்பா..’ என்றார். ஒருவேளை எனக்கு தெலுங்கு தெரியாது என்று நினைத்தார்களோ என்னவோ..

நான் புறப்பட நினைத்து அவர்களுடைய அறையை விட்டு வெளியேறியபோது.. ‘வண்டிய காம்பவுண்டுக்கு வெளிய நிறுத்திரணும், தெரியுமில்லே.. அப்புறம் அப்பாக்கிட்ட பேச்சு வாங்கிட்டு நிக்காதே..’ என்று அவர் தொடர்ந்து தெலுங்கில் அவர்களுடைய ஓட்டுனரை எச்சரிக்க எனக்கு ஓரளவு புரிந்தாலும் அதை பொருட்படுத்தாமல்  என் முன்னே வந்து நின்ற பழைய காலத்திய ஒற்றைக் கதவு (single door) ஸ்டாண்டர்ட் ஹெரால்டை பார்த்தேன்.

அந்த நிறுவனத்தின் பணபலத்தை (financial strength) நன்றாக தெரிந்துவைத்திருந்த நான் என் முன் நின்ற வாகனத்தைப் பார்த்து வியந்தேன். இது ஏதோ காயலாங்கடை வண்டி என்பார்களே.. Scrapக்கு விற்க்கப்பட வேண்டிய வாகனத்தைப் போலிருக்கிறதே என்று யோசித்த நான் அதில் ஏற தயங்கினேன்.

‘ஒங்க டிரைவர முன்னால போகச்சொல்லுங்க சார்.. நான் பின்னால ஸ்கூட்டர்ல போய்க்கறேன்.’ என்றேன்.

எனக்குப் பின்னால் நின்றுக்கொண்டிருந்த பாகஸ்தர்களுள் ஒருவர், ‘சார் இங்கருந்து பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலருக்கு. ரோடும் அவ்வளவா நல்லாருக்காது.’ என்றார்.

அவர்கள் கூறியது உண்மைதான் தூத்துக்குடியில் சீஃபுட் ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கிவந்த இடம் நகரை விட்டு பதினைந்து கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில்தான் இருந்தன. இச்சாலைகளில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்கள் என்பதால் சாலையும் பெரும்பாலும் பழுதுபட்டே இருந்தது.

எனக்கோ அவர்களுடைய தொழிற்சாலையை நேரில் சென்று பார்த்தால்தான் திருப்தி என்று பட்டது. ‘சரி, வேறு வழியில்லை. ஒரு அரை மணி நேரம்தானே’ என்று நினைத்தேன். அத்துடன் இந்த நிறுவன உரிமையாளர்கள் வேண்டுமென்றே என்னை அவர்களுடைய தொழிற்சாலைக்கு செல்லவிடாமலிருக்க இப்படி செய்கிறார்களோ என்றும் தோன்றியது. ஆகவே நான் செல்வதென தீர்மானித்து வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்.  

வாகன ஓட்டுனர் அவர்களுடைய இனத்தைச் சார்ந்தவரல்ல என்பதை அவருடைய பேச்சிலிருந்தே தெரிந்துக்கொண்ட நான் மெள்ள, ‘எதுக்குங்க இந்த மாதிரி வண்டிய இன்னும் வச்சிக்கிட்டிருக்கீங்க?’ என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்துவிட்டு சாலையில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். ‘ஒங்கக் கிட்ட சொல்றதுக்கென்ன சார். அவங்க --------------ங்கன்னு ஒங்களுக்கு தெரியுமில்ல? அவங்க அபேக்டரிக்கு ஒங்கள மாதிரி யாராச்சும் போணும்னா மட்டுந்தான் இந்த வண்டிய எடுப்பாங்க. அப்பவும் ஃபேக்டரி காம்பவுண்டுக்கு வெளியவே நிறுத்திரணும். திருப்பிக் கொண்டுபோய் ஆஃபீஸ் காம்பவுண்டுக்குள்ள அப்படியே ஏத்தி விட்டுறக்கூடாது.. வண்டிய முழுசும் களுவிட்டுத்தான் ஷெட்ல கொண்டு விடணும்..’

அவர் படு சிரத்தையுடன் விளக்க நான் வியப்புடன் அவரை பார்த்தேன். ‘ஏன்?’

‘கவுச்சி இல்லையா சார்....அவங்க அத தீட்டா நினைக்கறாங்க..’

நான் சிரித்தேன். ‘சரிங்க.. வண்டிய களுவிடறீங்க? நீங்க? குளிச்சிட்டுத்தான் உள்ள போவீங்களா?’

அவர் சிறிது நேரம் பதிலளிக்காமல் எதிரே தெரிந்த படுபாதாள குழியில் விழாமல் வாகனத்தை லாவகமாக செலுத்துவதில் குறியாயிருந்தார். பிறகு, ‘சார் நீங்க சொல்றது சரிதான். ஃபேக்டரிக்கு கார கொண்டு போய்ட்டு வந்தா வண்டிய களுவி முடிச்ச கையோட நா அப்படியே ஓடிப்போய் ஆஃபீஸ்க்கு பின்னால காம்பவுண்ட்லருக்கற பைப்புல குளிச்சி வேற டிரெஸ் மாத்திக்கிட்டுத்தான் சார் ஆஃபீஸ்க்குள்ளவே போவேன்.. அதுக்குன்னே இன்னொரு யூனிஃபார்ம் ரெடியா வச்சிருப்பேன்னா பாத்துக்குங்களேன்.. என்ன சார் பண்றது? தப்பித்தவறி அப்படியே ஆஃபீஸ்க்குள்ளாற போனேன்னு வச்சிக்குங்க.. அன்னைக்கே என் சீட் கிழிஞ்சிரும்..’

அவர் கூறியதை சற்று நேரம் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை நான் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு திரும்பி அவர்களுடைய அலுவலகத்திற்குச் சென்றால் என்னையும் உள்ளே விடமாட்டார்களோ..

அதுமட்டுமல்ல. நான் அவர்களுடைய அலுவலகத்திற்கு சென்றிருந்த முதல் நாள் எனக்கு அங்கு கிடைத்த வரவேற்பிற்கும் சில மாதங்கள் கழித்து நான் சென்றபோது கிடைத்த வரவேற்பிற்கும் வித்தியாசம் இருந்ததையும் உணர்ந்தேன்..

ஒருவேளை இடைபட்ட காலத்தில் நான் யார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்..

நான் கிளை பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்தலைவருக்கு பிறந்த நாள் என்பதை அவர்களுடைய கோப்பிலிருந்து அறிந்த நான் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று நினைத்து முன்னறிவிப்பில்லாமல் அவர்களுடைய வீட்டைச் சென்றடைந்தேன்.

அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

தொடரும்..

6 comments:

துளசி கோபால் said...

சாதி போட்ட ஆட்டதுக்கு விதி உங்களைக் கொண்டுபோய் விட்டுருச்சா?

ஜயராமன் said...

தங்கள் அனுபவங்கள் எல்லோருக்கும் பாடமாக இருக்கின்றன.

அந்த நிகழ்ச்சிகளை ஒரு விருவிருப்பான நாவல் போல தாங்கள் எழுதுவது மிகவும் பாராட்டுக்குறியது.

தங்களின் ஞாபக சக்தியும் என் போன்றவர்களுக்கு வியப்பு (கொஞ்சம் பொறாமையும்தான் :-) )

இம்மாதிரி மூடிய மனதுடன் வாழும் சில பேர்களின் நடவடிக்கைகள் மிகவும் கேலிக்குறியவை. என்ன ஒரு மடத்தனம்.

பணத்திற்காக ஒரு தொழில். ஆனால், அது தன் நம்பிக்கைகளுக்கு தோதாக இவர்களுக்கு ஏத்த மாதிரி அபத்தமான சில வழிமுறைகளால் நியாயப்படுத்தி.... இவர்களைப்பார்த்தால் கோபமும், கேலியும் சேர்ந்தே வருகிறது.

இது நடந்தது எத்தனையாவது ஆண்டு என்று தாங்கள் குறிப்பிடவில்லையே? ஏதோ பழங்காலத்தில் தான் இப்படி நடந்ததா இல்லை சமீபத்திலும் இம்மாதிரி ஆட்கள் இருக்கிறார்களா?

நன்றி

tbr.joseph said...

வாங்க துளசி,

என்னுடைய அலுவலக வாழ்வில் இத்தகையவர்களை நிறையவே சந்தித்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் மனம் சோர்ந்துபோகும். என் தந்தை இனம் இது என்று தெரிந்து எந்த ஒருவனும் பிறப்பதற்கு உரிமை இல்லைதானே. ஒரு மனிதனை அவனுடைய இனத்தை வைத்து அவமதிப்பது எந்த வகையில் நியாயம் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

ஆனால் நாளடைவில் பழகிப்போய்விட்டது. மரத்துப் போய்விட்டது என்பதுதான் சரி..

ஆனால் தூத்துக்குடி சம்பவம் என் மனதிலிருந்து அகல பல வாரங்கள் பிடித்தது என்பதென்னவோ உண்மை..

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

நான் குறிப்பிட்ட சம்பவம் 1984ம் ஆண்டு நடந்தது.

இப்போதும் பெரிதாய் ஒன்றும் மாற்றங்கள் வந்துவிடவில்லை.

பணத்திற்காக ஒரு தொழில். ஆனால், அது தன் நம்பிக்கைகளுக்கு தோதாக இவர்களுக்கு ஏத்த மாதிரி அபத்தமான சில வழிமுறைகளால் நியாயப்படுத்தி.... இவர்களைப்பார்த்தால் கோபமும், கேலியும் சேர்ந்தே வருகிறது.//

அவ்வை ஷண்முகியில் கமல் (மாமி) ஜெமினி கணேசனிடம் கேட்பாரே.. நினைவிருக்கிறதா..'நீங்க மாட்ட கொன்னு அந்த தோல ஏற்றுமதி பண்ணி லட்ச, லட்சமா சம்பாதிக்கறீங்களேன்னு!'

அந்த மாதிரிதான்..

இதுபோன்ற ஹிப்போக்ரைட் குடும்பங்கள் தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன..

sivagnanamji(#16342789) said...

காரைக் கழுவறாங்க;காரோட்டிய குளிக்கச்சொல்றாங்க;சரி!மீன் கருவாடு இறால் விற்று வரும் பணத்தையும் கழுவிட்டுதான் எடுத்துப்பாங்கள?ம்ம்ம்...அப்ப மட்டும் "நாய் வித்த காசு குரைக்கவாபோவுது" என்பாங்களா?

tbr.joseph said...

வாங்க ஜி!

"நாய் வித்த காசு குரைக்கவாபோவுது" என்பாங்களா? //

படிக்கும்போதே கோபம் வருதில்லே?

எனக்கும் அப்படித்தான் வந்தது.. அப்போது..

ஆனால் என்ன செய்ய?

சமுதாயத்தை சீர்திருத்த எடுத்த அவதாரம் இல்லையே இது?

பல்லைக்கடித்துக்கொண்டு வெளியில் சிரித்து தொலைக்கவேண்டிய வேலையாயிற்றே..