16 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 156

முகப்பு சுவருக்கு எந்தவித பொருத்தமும் இல்லாத ஒரு ஓட்டு வீட்டைப் பார்த்து அதிர்ந்து நின்றேன்.

இந்த சொத்தின் மதிப்பு  ----- லட்சம் என்று கோப்பில் வாசித்த நினைவு வர.. இதுவா? என்று மலைத்துப் போனேன்.

நாம் சர்வ சாதாரணமாக குறிப்பிடும் வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் சுற்றுச்சுவரை தூத்துக்குடி நகரில் அதுவும் மீனவர் குடியிருப்புகளில் கோட்டைச் சுவர் என்று பெருமையாக குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன்.

அச்சுவருக்கு பின் இருக்கும் வீட்டின் தரம் எப்படியோ கோட்டைச் சுவர் அட்டகாசமான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும்.

சாலையில் வீட்டைக் கடந்து செல்வோருக்கு அது ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை  அளிக்கும். ஆனால் சுவருக்கு நடுவிலிருக்கும் மரக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் (பெரும்பாலான வீடுகளில் சுற்றுச்சுவருக்கிடையில் ஹைதர் காலத்து பாணி மரக்கதவே இருக்கும். அதுவும் பெரும்பாலும் திறந்தே இருக்கும். – இரவு நேரங்களிலும்.) ஒரு சின்ன இரண்டு அல்லது மூன்று கட்டு வீடு இருக்கும்.

தூத்துக்குடியில் பெரும்பாலான வீடுகள் அதாவது நான் முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருந்தபடி, ரயில்வே லைனுக்கு வடக்கே இருந்த பகுதியில், நீள் செவ்வக வடிவில் அமைந்திருக்கும். வாசலில் ஒரு சிறிய அறை. அதைக்கடந்து ஒரு பெரிய ஆல்-இன் -ஆல் அறை (உண்பது, உடை மாற்றுவது, உறங்குவது எல்லாம் இதில்தான்) அதைக் கடந்தால் ஒரு சிறிய அடுக்களை (ச்சாய்ப்பு என்று அதற்குப் பெயர் ‘எலே தனியா ச்சாய்ப்புலருந்து யாருக்கும் வைக்காம மாந்தறியாக்கும்?’ தாய்மார்கள் தங்கள் மகனை ஏசும் இந்த டைலாக்கை எல்லா வீடுகளிலும் கேட்கலாம்) புழக்கடையில் டாய்லெட் இத்யாதிகள்..

இதில் இரண்டு கட்டு என்றால் வாசலையொட்டிய அறை இருக்காது. ஆல்-இன்-ஆல் அறையும் அளவில் சிறியதாக இருக்கும்.

ஒவ்வொரு கட்டுக்கும் வாசல் மற்றும் மரக்கதவு இருக்கும். வசதியில்லாதவர்கள் வீட்டில் கட்டுகளுக்கு இடையில் கதவு இருக்காது..

கதவு இருந்தால் பெண்கள் உடைமாற்றும் போது அறையின் முன்னும் பின்னும் இருக்கும் கதவுகள் அடைக்கப்படும். கதவு இல்லாத வீடுகளில் திரைச்சீலை (ஏட்டி.. சீலை இப்படி அளுக்கு படிஞ்சி கெடக்கே, தொவச்சு போடக் கூடாதாக்கும்..? என்று தாய்மார்கள் தங்கள் மகளை ஏசும் டைலாக்கும் ஏறக்குறைய எல்லா வீட்டிலும்..)

நான் மேலே கூறிய வீடு இரண்டு கட்டும் இல்லாமல் மூன்று கட்டும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் வீடு..

சுவர்கள் சுண்ணாம்பைக் கண்டே வருடங்கள் பல ஆகியிருக்கும். கோட்டைச் சுவரிலிருந்து சுமார் பத்தடி தள்ளி இருந்த அந்த வீட்டைச் சுற்றிலும் நிலம் கிடந்தாலும் மொத்த பரப்பளவு ஐந்து செண்டுக்குள்ளாகவே (பாஷஇயில் ஒரு தாக்கு தூத்துக்குடி ) இருக்கும் என்று நினைத்தேன்.

நாலாப்புறத்திலிருந்தும் வீசிய காய்ந்த மீன் வாடை மீனவர் குடியிருப்பு என்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது.

இந்த சூழலில் இந்த சொத்தின் மொத்த மதிப்பே என்னுடைய கிளை கோப்பில் குறிப்பிட்டிருந்த மதிப்பில் பாதி கூட இருக்காதென்றே எனக்கு தோன்றியது.

எப்படி இந்த சொத்தை ஆதாரமாக வைத்து என்னுடைய நண்பர் கடன் கொடுத்தார் என்று நினைத்தேன்.

என்னுடைய வங்கியில் கடனுக்கு ஈடாக எடுக்கப்படும் சொத்தை மதிப்பிட ஒவ்வொரு ஊரிலும் ஒரு மதிப்பீட்டாளரை (Official Valuer) நியமித்திருந்தனர். அவர்கள் பெரும்பாலும் கட்டட பொறியாளர்களாக இருப்பர்.

அவர்கள் அந்தந்த ஊரைச் சார்ந்தவர்களாக இருப்பதால் நிலத்தின் மதிப்பை சரியாக அறிந்து வைத்திருப்பர். ஒரு சொத்தை மதிப்பிடுகையில் வீட்டின் மதிப்பைவிட அது கட்டப்பட்டிருந்த நிலத்தின் மதிப்புதான் மிக முக்கியம். மதிப்பிடுவது கடினமும் கூட. குறிப்பாக மேலாளர்களுக்கு. ஆகவேதான் அந்தந்த ஊரைச் சார்ந்தவர்களையே மதிப்பீட்டாளர்களாக நியமிப்பது வழக்கம்.

ஆனால் அதிலும் ஒரு பெரும் ஆபத்து இருந்ததை நாளடைவில்தான் எங்களுடைய வங்கி உணர ஆரம்பித்தது. இத்தகைய மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு ஓரிரு ஆண்டு காலம் வரை பாரபட்சமில்லாமல் பணியாற்றுவார்கள்.. அவர்களுடைய மதிப்பீடும் நியாயமானதாக இருக்கும்.

ஆனால் நாளடைவில் வங்கி இவர்களுடைய பணிக்கு அளிக்கும் சன்மானம் குறைவு என்பதை உணர்ந்து சொத்தை அடகு வைப்பவர்களிடம் சேர்ந்துக்கொண்டு அவர்களுக்கேற்றார்போல் மதிப்பீடு செய்து அவர்களிடமிருந்து நேரடியாக ‘கமிஷன்’ பெற துவக்கிவிடுவார்கள்.

சொத்தின் உரிமையாளரும் சொத்தை மதீப்பீடு செய்பவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அவர்களிடைய இத்தகைய ‘ஒற்றுமை’ இருக்கத்தானே செய்யும்!

ஆக இந்த ஒற்றுமையால் பாதிக்கப்படுவது வங்கி மேலாளர்தான்.

ஆனால் இதை முன்கூட்டியே உணர்ந்திருந்த எங்களுடைய வங்கி இதற்கும் ஒரு ‘செக்’ வைத்திருந்தது.

அதாவது மதிப்பீட்டாளரின் மதிப்பீடு நியாயமானதுதான் என்று கிளை மேலாளர் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் இந்த ஒப்புதல் அளிப்பது என்பதை வெறும் சடங்காக நினைத்திருந்த மேலாளர்கள்தான் அதிகம்.

இதற்கு காரணம் இருந்தது.

ஒன்று சொத்து கிளையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்.

இரண்டாவது வாடிக்கையாளர் அந்த ஊரிலேயே செல்வந்தராகவோ அல்லது மிகவும் பலம் உள்ளவராகவோ (ஆள்பலத்தைத்தான் குறிப்பிடுகிறேன்) இருப்பார். அவர் விரும்பினாலொழிய அவருடைய சொத்தை நாம் சென்று, அளந்து, மதிப்பீடு செய்ய முடியாது.

மூன்றாவது வாடிக்கையாளர்+மதிப்பீட்டாளர் கூட்டுடன் வங்கி மேலாளரும் கூட்டாகியிருப்பார்.

நான்காவது வாடிக்கையாளரை அழைத்துவந்த இடைத்தரகர் பயங்கர கில்லாடியாக இருப்பார். வங்கி மேலாளரை எப்படி ‘கைக்குள்’ போட்டுக்கொள்வது என்பதை நன்கு அறிந்திருப்பார்.

இது எதுவும் இல்லையென்றால்  என்னுடைய நண்பரைப் போல படு சோம்பேறியாக இருந்திருப்பார் கிளை மேலாளர்.

‘வேல மெனக்கெட்டு அந்த ஏரியாவுக்கு போய் பாக்கணுமாக்கும். நீங்க சொன்னா சரியாத்தான் சார் இருக்கும்’ என்று கூறிக்கொண்டே மதிப்பீட்டாளர் சமர்பித்த மதிப்பீட்டறிக்கையில் ‘நான் ஒத்துக்கொள்கிறேன்.’ என்று கையொப்பமிட்டிருப்பார்.

‘என்னய்யா என்னத்தெ அப்படி வீட்டையே பாக்கீங்க?’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.

சற்று முன் ஒரேயொரு ஆளாக இருந்த இடத்தில் இப்போது நம் வாடிக்கையாளரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் இருந்தது.

பிறகுதான் தெரிந்தது. அது எல்லாமே அவருடைய குடும்பத்தினர் என்று.

அவருக்கு வளர்ந்த நான்கு ஆண் மக்களும் (எல்லா பயலுவளும் தோணிக்குத்தான் போறாய்ங்க. படிப்பு மண்டைல ஏறுனாத்தானய்யா?), பள்ளிப்பருவத்திலிருந்த ஒரு மகளும் இருந்தனர். அத்துடன் அவருடைய தாரம், தாய், தந்தை, தங்கை என மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட குடும்பம்..

‘இல்லய்யா.. நீங்க ஒழுங்கா வாங்குன கடனெ அடச்சிருந்தா நான் ஏன்யா காலையில எழுந்ததும் ஒங்க வீட்ட தேடி ஒடிவரப்போறேன்.. நீங்க போட்டு கட்டறேன்னு சொல்லி கடன் வாங்கி ஒரு வருசத்துக்கு மேலாயிருச்சி.. அசலையும் கட்டலே வட்டியையும் கட்டலே.. பணத்த குடுத்துட்டு சும்மாவாய்யா ஒக்காந்த்திருப்பாங்க?’ என்றேன்.

‘நீங்க என்னவோ ஒங்க வீட்லருந்து குடுத்தா மாதிரி பேசறீங்க?’ என்ற பெண் குரல் மட்டும் கேட்க என்னுடைய வாடிக்கையாளரைப் பார்த்தேன். அவர் சற்று விலக அவருக்கு பின்னால் இடுப்பில் கை வைத்துக்கொண்டு கண்களில் சினத்துடன் தலைவிரி கோலத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தரவயது பெண்ணை பார்க்க முடிந்தது.

அது அவருடைய மனைவி!

அந்த குடும்பத்திலிருந்த ஆண்களின் எண்ணிக்கை ஆறு.. அவர்கள் எல்லோருமே வாய் மூடி மவுனமாக நின்றுக்கொண்டிருந்தனர்.

நான் அவருக்கு பதிலளிக்காமல் என்னுடைய வாடிக்கையாளரை பார்த்தேன். ‘இங்க பாருங்க. அனாவசியமான பேச்சை கேக்கறதுக்காக நான் இங்க வரல.. இன்னும் ஒரு மாசம் பாப்பேன்.. நீங்களா பேங்குக்கு வந்து இதுவரைக்கும் உண்டான வட்டி அப்புறம் அசல கட்டுனீங்கன்னா மேக்கொண்டு ஒன்னும் ஆக்ஷன் எடுக்க மாட்டேன். இல்லன்னா..’

‘இல்லன்னா என்னத்தையா செஞ்சி கிளிச்சிருவீரு? நீரு நம்ம சாதி ஆளுன்னு சொல்லி கேட்டுருக்கேன்.. ஒமக்கு முன்னாலருந்தவரு --------------- சாதியாருந்தாலும் கேட்டதுமே மவராசனா லோன குடுத்தாரு.. குடுத்தப்பவும் சரி.. அதுக்கும் பெறகும் சரி.. ஒரு தடவ கூட ஒம்மள மாதிரி வீட்டு வாசப்படி வந்துருப்பாராய்யா? சாதி சனம்னு கூட பாக்காம இப்படி விடிஞ்சதும் விடியாததுமா இங்கன வாசப்படி ஏறி வந்து மானத்த வாங்குறீரே இது நல்லாருக்காக்கும் ஒமக்கு’

மீண்டும் அதே பெண்தான்..

இனியும் அங்கு நின்று தர்க்கம் செய்துக்கொண்டிருந்தால் என்னுடைய மரியாதை கெட்டுவிடும் என்பதை உணர்ந்த நான் வாசலை நோக்கி நடந்தேன்..

வாசலைக் கடந்து என்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து வண்டியை முடுக்கவும் வீட்டினுள் இருந்து ஒரு பெண் கோபத்தில் பேசும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

‘ஏட்டி ஒன்னைய பேச சொல்லிச்சா? கடனெ கொடுத்தவுக கேக்காம இருப்பாளாய்யே.. அந்த மனுசன அந்த பேச்சு பேசி அனுப்பறியே அவரு போய் ஏடாகூடமா செஞ்சிப் போட்டார்னா எம் மகனுக்கில்லய்யே நஸ்டம்.. எலேய் ஒம் பொஞ்சாதி பேச்ச கேட்டு கேட்டுதானல்லே நாசமா போனே.. ஒளுங்கா அந்த மேனேசர் அய்யாவ போயி பாத்து சரி பண்ண பாரு.. அந்த மனுசன் நினைச்சா ஒம் போட்டையே மொடக்கி போட்டுருவாருலே.. அப்புறம் இருக்கற தொளிலும் போயி.. நடுத்தெருவுலதான் நிக்கணும்.. கொமரெ (மகள்) கரையேத்தனுங்கறத மறந்துராத. சொல்லிட்டன்..’

வாடிக்கையாளரின் தாயார் போலும்..

தாய்க்கும் தாரத்துக்கு இதுதான் வித்தியாசம் போலும் என்று நினைத்தவாறு வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு திரும்பினேன்..

தொடரும்..


6 comments:

துளசி கோபால் said...

//தாய்க்கும் தாரத்துக்கு இதுதான் வித்தியாசம் போலும் என்று நினைத்தவாறு ....//

போட்டீரே ஒரு போடு.

ஆனா, உண்மையைச் சொல்லணுமுன்னா பல வீடுகளிலே, சரி 50%ன்னு வச்சுக்கலாம், தாரமும் தாய் மாதிரிதான் யோசிக்குது.

tbr.joseph said...

ஏங்க துளசி,

தாரமும் தாய் மாதிரிதான் யோசிக்குது. //

இல்லேங்கலே.. ஆனா தாய் அளவுக்கு இருக்குமாங்கறது சிந்திக்க வேண்டிய விஷயம்தான்..

இது யாரையும் குத்தம் சொல்றதுக்காக சொல்லல..

sivagnanamji(#16342789) said...

அனுபவமும் ஆற்றாமையும் பொறுப்புணர்வும் தாயாரிடம் தெரிகின்றது அடாவடித்தனமும் அனுபவமின்மையும் தாரத்திடம்....
இப்படிப்பட்ட மணைவி அமைந்து விட்டால் வம்பு தும்பு வழக்குகளுக்குக் குறைவிருக்காது

tbr.joseph said...

வாங்க ஜி!

இப்படிப்பட்ட மணைவி அமைந்து விட்டால் வம்பு தும்பு வழக்குகளுக்குக் குறைவிருக்காது //

நூத்துல ஒரு வார்த்தைங்க..

நிறைய ஆண்கள் வழிதவறி சென்றுவிடுவதே இத்தைகய தாரம் அமைவதால்தான்.

G.Ragavan said...

தாய் எப்படித் தாரமாக முடியாதோ...அது போலத் தாரமும் தாயாக முடியவே முடியாது.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

தாரமும் தாயாக முடியவே முடியாது. //

அப்படியா சொல்றீங்க? எல்லா தாரமுமேவா அப்படி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க.. நிறைய பேர் வேணும்னா அப்படி இருக்காங்க. இல்லேன்னு சொல்லல.. ஆனா எல்லாருமே அப்படியில்ல..