15 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 155

தூத்துக்குடிக்கு பிரதான தொழில் மீன்பிடித்தொழில் என்று  ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து தூத்துக்குடியில்தான் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் இருந்தது.

மீன்பிடித் தொழிலுக்கு அத்தியாவசியமானவை படகுகள். அன்றைய நிலவரப்படி டீசல் மோட்டார் பொறுத்தப்பட்ட படகு ஒன்றை கட்டி முடிப்பதற்கு சுமார் மூன்றிலிருந்து நான்கு லட்சம் வரை ஆனது.

அவற்றிற்கு கடனுதவியளிக்க தூத்துக்குடியிலிருந்த எல்லா வங்கிகளுமே தயாராயிருந்தன. ஆனால் அதிலும் சிக்கல் இருந்தது. நேரடியாக வங்கிகளை அணுகி கடனுதவி கோருபவர்களை நம்பிக்கையில்லாமல் மேலாளர்கள் ஏற இறங்கி பார்த்துவிட்டு ஒரே வார்த்தையில் இல்லை என்று கைவிரித்துவிடுவார்கள்.

வங்கி மேலாளர்களில் பலருக்கும் ஆள் பாதி டை பாதி என்பதில் அபார நம்பிக்கை. வெள்ளையும் சொள்ளையுமாய் வருபவர்களை 'வாங்க சார், வாங்க' என்று அழைத்து உபசரிப்பார்கள்..

மீன்பிடித்தொழிலுக்கும் ஆடைக்கும் சம்பந்தமே இல்லை.. ‘தோணில போற பயல்க..’ என்ற பட்டம் கட்டப்பட்டிருப்பவர்கள்..

அவர்களுடைய ஆடையும், அவர்களுடைய பேச்சுமே அவர்களை காட்டிக்கொடுத்துவிடும்.. அந்த சமூகத்தைச் சார்ந்த படித்தவர்களே.. ‘இவனுகளாலத்தான் நம்ம சாதியோட பேரே ரிப்பேராயி கிடக்கு..’ என்று அவர்களைக் கண்டதுமே விலகிச் செல்லும் அளவுக்கு இருக்கும் அவர்களுடைய ஆடையும் பேச்சும்..

அவர்களுக்கு சொத்து என்பதெல்லாமே அவர்களுடைய தொழிலுக்கு பயன்படும் படகு, வலை இத்யாதிகள்தான்.

தமிழ்நாடு மீன்வளத்துறை தன் பொறுப்பில் வங்கிகளிடமிருந்து படகுகளை கட்டவும், வாங்கவும் கடனுதவி பெற்று தருவதில் ஈடுபட்டிருந்தாலும் அதற்கும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளை ‘சரிகட்ட’ வேண்டியிருக்கும்.

‘இங்கன பாரும்யா.. பேங்குல கேக்குற சொத்தும், ஜாமீனும் ஒம்மால கொண்டு வர முடியாதுல்லவே.. பிறவென்ன? சாரு கேக்கற கமிசன குடுத்துட்டு லோன வாங்கிட்டு போவீரா.. என்னத்தையோ ரூல் பேசிக்கிட்டி நிக்கீரு.. நீர் வேணாம்னு இந்தால போனா அந்தால கேக்கறத குடுக்கறதுக்கு ஆளுங்க வரிசையில நிக்குல்லா.’ என்று அலுவலக வாசலில் நின்று பேரம் பேசிக்கொண்டிருக்கும் சிப்பந்திகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

வங்கிகளிடமிருந்தும் கந்து வட்டிக்காரர்களிடமிருந்தும் கடன் பெற்றுத் தருவதற்கு இடைத்தரகர்களும் நிறையவே இருந்தனர். அவர்களும் அச்சமூகத்தினராக இருந்ததால் யாருக்கு, எப்போது, எவ்வளவு கடன் தேவையிருக்கும் என்பது அத்துப்படி. தேவைப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷன்.. அதுமட்டுமே அவர்களுடைய நோக்கமாயிருக்கும்.

வங்கிகளுக்கு தேவைப்படும் சொத்து, தனிநபர் ஜாமீன் என்னும் நியதிகளுக்கு கட்டுப்பட வசதியும், வாய்ப்பும் இருப்பவர்களை வங்கிகளிடமும் அது இல்லாதவர்களை கந்துவட்டிக்காரர்களிடமும் கொண்டு செல்வது இவர்களுடைய தொழில்.

இத்தகைய இடைத்தரகர் ஒருவர் மூலம் என்னுடைய கிளைக்கு வந்தவர்தான் மிக்கேல் பர்னாந்து (புனைப்பெயர்).

நான் கிளைக்கு பொறுப்பேற்றபோது என்னுடைய கிளையில் படகு கட்டுமானத்திற்கென கொடுக்கப்பட்டு நிலுவையில் நின்ற கணக்குகளின் எண்ணைக்கை ஆறு.. ஏறத்தாழ பதினைந்து லட்சம் வரை அசலும் வட்டியுமாக முடங்கிக் கிடந்தது.

அதில் ஒரு வருடத்திற்கும் மேலாக வசூலாகமலும் சில கணக்குகள் இருந்தன...

சாதாரணமாக தூத்துக்குடியில் ஜூன் மாத இறுதியில் துவங்கும் மீன்பிடி சீசன் எனப்படும் காற்றுக்காலம் செப்டம்பர் மாத இறுதிவரையில் நீடிக்கும்.

இக்காலத்தில் மீன்களுடன் சிங்க ரால் எனப்படும் ராட்சத இறால்களும் கணிசமான அளவு பிடிபடும். காற்று பலமாய் இருந்தால் சீசன் நன்றாக இருக்கும் என்று அர்த்தம். அப்படிப்பட்ட  சூழலில் இந்த மூன்று மாத காலத்தில் கிடைக்கும் வருமானம் ஒரு படகு கட்டவோ வாங்கவோ பெற்றிருந்த கடனை எளிதாக அடைத்துவிடக்கூடிய அளவுக்கு இருந்ததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

இருப்பினும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான படகு உரிமையாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் கிடைத்த உபரி வருமானத்தைக்கொண்டு புதிய படகுகளை கட்டுவதில் முனைப்பாய் இருப்பார்களே தவிர வங்கிகளிலிருந்து கடனாய் பெற்ற தொகையை திருப்பி செலுத்த மாட்டார்கள்.

அவர்களுக்கு புதிய படகுகள் தேவையிருந்ததோ இல்லையோ ‘இருக்கட்டுமேண்ணே.. ஒங்கக்கிட்ட வேலை செஞ்ச அந்த பயலே இப்போ ரெண்டாவது படகு வேலைய ஆரம்பிச்சிட்டான். நீங்க மட்டும் போறும்னு இருந்தா எப்படிண்ணே? அவன் ரெண்டு படகு வச்சிருந்தா நமக்கு அதுக்கு மேல ஒன்னாச்சும் இருக்க வேணாமாண்ணே’ என்று அடிபொடிகள் தூண்டிவிட படகு உரிமையாளரின் ஈகோ காற்றடித்த பலூனாக ஊதிவிடும்..

‘நீ சொல்றது சரிதாம்லே..’ என்று காரியத்தில் இறங்கிவிடுவார்.

‘நீங்க முதல்ல வாங்குன போட்டுக்கு பணத்த கட்டுங்க.. அப்புறம் ரெண்டாவது போட்டுக்கு கடன் குடுக்கறத பத்தி யோசிக்கலாம்’ என்று வங்கி மேலாளர் கண்டிஷன் போடுவார் என்பது  தரருக்கு நன்றாகவே தெரியும்..

‘ஒங்க கைலதான் ரொக்கமா இருக்குல்லண்ணே.. அத வச்சி வேலைய தொடங்கிருவோம்.. பிறவு போறாததுக்கு நம்ம அண்ணாச்சிக்கிட்ட கடன ஒடன வாங்கி முடிச்சுருவோம். அடுத்த சீசனும் மாதா புண்ணியத்துல நல்லாருக்காமயா போயிரும்?’ என்ற தரகரின் பேச்சைக்கேட்டு கையிலிருக்கும் தொகையை முடக்கி துவக்கிவிடுவார்..

இவர்களுக்கெல்லாம் பாதுகாவலியாக (Patron Saint) அவர்கள் வரித்திருந்தது தூத்துக்குடியில் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பரிசுத்த பனிமய மாதாதான். வருடந்தோறும் மீன்பிடிக்காலம் முடிவடையும் சமயத்தில்தான் அந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சீசன் நன்றாக இருந்தால் விழாவும் சிறப்பாக அம¨யும். இல்லாவிட்டால் டல்லடிக்கும். அதைப்பற்றி பிறகு.

ஒரு படகு கட்டுவதற்கான (body building) முழுத்தொகையும் டீசல் எஞ்சினும் தயாராக கைவசம் இருந்தால் ஆறு மாத காலத்திலிருந்து ஒன்பது மாத காலத்திற்குள் ஒரு படகை கட்டி முடித்துவிடமுடியும்.

டீசல் எஞ்சினுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு கையிலிருக்கும் தொகையை வைத்து கட்டுமான வேலையை துவக்குவார்கள்.. கட்டுமான வேலைக்கே பணம் பற்றாக்குறையாகி எஞ்சின் டெலிவரிக்கு வந்து நிற்கும் நேரத்தில் வேறு வழியில்லாமல் கந்து வட்டிக்காரரை அணுகுவார்கள்..

அடுத்துவரும் சீசனில் முழுத்தொகையையும் வட்டியுடன் அடைத்து தீர்க்க வேண்டும். இல்லையென்றால் படகில் பிடிபடும் முழுவதையும் நானே எடுத்துக்கொள்வேன் என்ற நிபந்தனையுடன் கடன் வழங்கும் கந்து வட்டிக்காரர் சீசன் துவங்கியவுடனே மீன்பிடித்துறையில் சென்று நிற்பார்..

அப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக்கொண்டவர்தான் நான் மேலே குறிப்பிட்ட மிக்கேல் பர்னாந்து.

என்னுடைய முந்தைய மேலாளருக்கு பரிச்சயமாயிருந்த தரகர் ஒருவர் வழியாக வங்கியை அணுகியவர் இவர். அவருடைய குடும்ப பின்னணியை சரிவர விசாரித்தறியாத என்னுடைய நண்பர் தரகரின் வார்த்தைகளை நம்பி அவருக்கு ஒரு படகு கட்டுமானத்திற்கு தேவையான தொகையில் 75 விழுக்காடு தொகையைக் கடனாக வழங்கியிருந்தார். சொத்து மற்றும் தனிநபர் ஜாமீன் என வங்கியின் நியதிகள் எல்லாமே கடைபிடிக்கப்பட்டிருந்தன.

ஆனால் உண்மையில் நடந்ததென்னவென்றால் அவர் வங்கியிலிருந்து பெற்ற கடனை அவர் ஏற்கனவே கந்து வட்டிக்காரரிடம் கடனாக பெற்றிருந்த தொகையை திருப்பியடைக்க உபயோகப்படுத்தியதுதான்.

சாதாரணமாக டீசல் எஞ்சினுக்கான தொகையை நேரடியாக அதனுடயை டீலருக்கு காசோலை மூலமாக வங்கியே செலுத்துவது வழக்கம். வாடிக்கையாளருடைய பூர்வீகத்தை விசாரித்தறியாத என்னுடைய நண்பர் இதையாவது செய்திருக்கலாம். ஆனால், ‘நா ஏற்கனவே ஒரு எஞ்சின வாங்கி வச்சிருக்கேன்யா.. அந்த பில்லுதான் இது.. மூனு மாசந்தான் ஆவுது.. நீங்க வேணும்னா வந்து பாத்துட்டு குடுத்தா போறும்யா..’ என்ற வாடிக்கையாளரின் கூற்றை நம்பிக்கொண்டு அவர் குறிப்பிட்ட எஞ்சினையும் சென்று பார்க்காமல் முழு தொகையையும் ஒரே தவணையில் கொடுத்துவிட அவருக்கு கந்து வட்டி கடனை அடைக்க எளிதாகிப்போனது..

மூன்று மாதங்களுக்கு முன்புதான் எஞ்சினை வாங்கினேன் என்று வாடிக்கையாளர் கூறியதில் பொய் ஏதும் இல்லை. ஆனால் அதை வைத்து ஏற்கனவே ஒரு படகு கட்டி முடிக்கப்பட்டிருந்ததைத்தான் அவர் மறைத்திருக்கிறார். அதற்கென கந்து வட்டிக்காரரிடமிருந்து பெற்றிருந்த கடனைத்தான் அவர் வங்கி கடன் கொண்டு அடைத்திருக்கிறார் என்பதே நான் நேரடியாக விசாரித்தபோதுதான் தெரியவந்தது.

ஒருவேளை அவர் கடன் பெற்ற வருடமோ அல்லது அதற்கடுத்த வருடமோ மீன்பிடி சீசன் நன்றாக இருந்திருந்தால் வங்கியிலிருந்த பெற்றிருந்த கடனை ஓரளவுக்காவது அடைத்திருப்பார். ஆனால் இரண்டு வருடங்கள் தொடர்ந்து சீசன் பொய்த்துவிட தூத்துக்குடியில் இத்தொழிலை நம்பியிருந்த பல நூறு குடும்பங்களும் திண்டாடிப்போயிருந்தன.

நான் கிளை பொறுப்பை ஏற்றெடுத்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய பெயரில் இருந்த கோப்பில் அவர் அளித்திருந்த விலாசத்திற்கு நான் பலமுறை சென்றும் அவரை சந்திக்க முடியாமல் போகவே அவருடைய வீட்டு விலாசத்தை தேடிக் கண்டுபிடித்து ஒருநாள் காலையில் சென்றேன்.

வீட்டின் முகப்பு சுவற்றைப் பார்த்ததும் பரவாயில்லை ஆள் நல்ல வசதியானவர்தான் என்று நினைத்தேன். என்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு திறந்தே கிடந்த கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தவன் முகப்பு சுவருக்கு எந்தவித பொருத்தமும் இல்லாத ஒரு ஓட்டு வீட்டைப் பார்த்து அதிர்ந்து நின்றேன்.

‘யாருய்யா?’ என்ற ஒரு முரட்டுக்குரலுடன் என் முன் வந்து நின்றவரைப் பார்த்தேன்..

ஆறடிக்கும் கூடுதல் உயரத்தில், பரந்த தோள்களுடன் இடுப்பில் ஒரு கைலியும் துவைத்து பல மாதங்களாகியிருந்த பனியனும்..

‘இங்க மிக்கேல் பர்னாந்துன்னு..’ என்று நான் இழுக்க..

‘நாந்தாய்யா.. நீங்க யாரு? ஒங்களுக்கென்ன வேணும்?’ என்று அதிகாரத்துடன் கேட்டவரை மீண்டும் ஒருமுறை ஏற இறங்க பார்த்தேன்..

அவருடைய பெயரில் வங்கியில் நிலுவையில் நின்ற தொகைக்கும் இவருக்கும் தொடர்பே இல்லையே.. இவரிடமிருந்து என்னால் என்ன வசூல் செய்ய முடியும் என்று நினைத்தேன்..

என்னை நான் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் பெயர் மற்றும் நான் யார் என்று தெரிந்ததும் அவர் பணிவுடன் பேசுவார் என்று நினைத்தேன்..

அவரோ எரிச்சலுடன், ‘ஏன்ய்யா, நீங்க என்ன சும்மாவா கடன் குடுத்திருக்கீய? இந்த சொத்த முழுசும் அடகு வச்சிருக்கேன்.. என்னமோ ஒங்க பணத்த தூக்கிக்கிட்டு ஓடிப்போய்ட்டா மாதிரி காலலை எளுந்ததும் அதுவுமா ஓடி வந்திருக்கீங்க?’ என்றார் என்னை விரட்டியடிக்காத குறையாக..

தொடரும்..

5 comments:

துளசி கோபால் said...

செய்யறது தில்லுமுல்லு. இதுலே
பேச்சு மட்டும் வீராப்பா?

தடாலடி ஆளுங்களுக்குத்தான் காலம் போல இருக்கு.

வெளியேதான் ஷோ காமிக்கறாரா?

அந்த மாதாதான் பார்க்கணும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

இதுலே
பேச்சு மட்டும் வீராப்பா?//


அட்டாக் ஈஸ் தி பெஸ்ட் ஃபார்ம் ஆஃப் டிஃபென்ஸ் ஆச்சே.. கடன் வாங்குனவர் வீராப்பா பேசினா கடன் குடுத்தவர் அடங்கி போயிருவாருல்ல?

தடாலடி ஆளுங்களுக்குத்தான் காலம் போல இருக்கு.//

இதுல மட்டுமா? ஒலகம் முழுசுமே அதான நடக்குது.

வெளியேதான் ஷோ காமிக்கறாரா?//

தூத்துக்குடி முழுசுமே முக்கியமா இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோருமே ஷோ பேர்வழிகள்தான்.. அதற்காகத்தானோ என்னவோ நாம் சுற்றுச் சுவர் என்பதை அவர்கள் 'கோட்டை சுவர்' என்பார்கள்.. சுவர் மட்டுந்தான் கோட்டை மாதிரி இருக்கும்.. உள்ளுக்குள்ள் வீடு பெரும்பாலும் ஒரு கட்டு அல்லது அதிகம் போனால் இரு கட்டு வீடாக இருக்கும்..

G.Ragavan said...

நீங்க சொல்லச் சொல்ல எனக்கு தூத்துக்குடீல இருந்த பழைய மறைஞ்சி போன நினைவுகளும் படங்களும் நினைவுக்கு வருது. ம்ம்ம்....அது ஒரு சுகமான காலம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ம்ம்ம்....அது ஒரு சுகமான காலம்.//

நம்முடைய இளமைக் காலம் நமக்கெல்லாருக்குமே சுகமான காலந்தான்..

அந்த பள்ளிப்பருவம்.. மீண்டும் வராதா என்ற ஏக்கம் நம் எல்லோருக்குமே இருக்கத்தான் செய்யும்.

இன்றைய இளைய தலைமுறைக்கு அதை அப்படியே கேமராவில் பதிந்து வைத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது..

ஆனால் நமக்கோ.. ஐ மீன் என்னைப் போன்றோருக்கு, அந்த பாக்கியம் இருக்கவில்லை..

sivagnanamji(#16342789) said...

வாங்க மைக்கேல் ப்ர்னாந்து வாங்க.
நீங்களும் உங்கள மாதிரி ஆளுகளும் இனி வீர தீர பராக்ரமத்தை காட்டுங்க.ஆனா ஒண்ணு....சரியான ஆபீசர்ட்டேதான் மாட்றீங்க;மறந்துடாதீங்க