13 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 153

அன்றைய கூட்டத்தில் தீர்மானித்தது போலவே அந்த வார ஞாயிறன்று காலையில் வழிபாடு முடிந்ததும் திருமண திட்டக்குழு கூடியது.

முந்தைய கூட்டத்தில் தீர்மானித்தபடி திருமணத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பத்திற்பவர்களை நேர்காணல் செய்து தேர்ந்தெடுப்பதெனவும் அதற்கென பிரத்தியேக குழு ஒன்றை நியமிப்பது எனவும் பாதிரியார் முன்மொழிந்தார்.

அதற்கு ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களுமே எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிரியார் முன்மொழிந்த யோசனையின் சாரம் அவர்களுக்கு பிடிக்கவில்லையென்பதைவிட அதை உண்மையில் முன்மொழிந்தது அவர்கள் அந்நியனாக நினைத்திருந்த நான் என்பதைத்தான் அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை.

இருப்பினும் பாதிரியாரின் உறுதியான நிலைப்பாடு அவர்களை இறுதியில் பணியச் செய்தது. அடுத்த கட்டமாக நேர்காண அமைக்கப்படவிருந்த குழுவில் என்னைப் போன்றவர்களை சேர்ப்பதா வேண்டாமா என்ற சர்ச்சை எழுந்தது.

அதிலும் பாதிரியார் உறுதியாக நின்றார். இத்திட்டத்திற்கென திரட்டப்பட்ட நிதியில் நாற்பது சதவிகிதத்திற்கும் கூடுதலான நிதியை பிற மதங்களைச் சார்ந்த என்னுடைய வாடிக்கையாளர்கள் அளித்திருந்ததால் அவர்களுடைய பிரதிநிதியாக என்னையும் சேர்க்கவேண்டும் என்பது அவருடைய வாதமாக இருந்தது.

அவருடைய வாதத்தை அக்குழுவில் சிறுபான்மையினராயிருந்த  சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஆதரிக்கவே வேறு வழியில்லாமல் அதற்கும் அவர்கள் சம்மதிக்க வேண்டியிருந்தது.

ஆக, அன்றைய கூட்டத்தின் முடிவில் தங்களுடைய மறைமுக திட்டம் நிறைவேறாது போலிருக்கிறதே என்று நினைத்த சிலர் கோபத்துடன் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான கோரம் (Quorum) இருந்ததால் பாதிரியார் முன்மொழிய வேறொருவர் வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தவர்களை நேர்காணல் செய்து அதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த் தகுதி உள்ளவர்களை ஏற்றுக்கொள்வதெனவும் மேலும் தேவைப்படும் எண்ணிக்கைக்கு பங்கு தகவல் பலகையில் ஒரு விளம்பரம் வெளியிடுவதெனவும் அன்றிலிருந்த நடத்தப்படும் எல்லா வழிபாடுகளிலும் இத்திட்டத்தைக் குறித்து அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த உத்திக்கு அடுத்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. அதுவரை தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஒன்றும் வரவில்லை, ஆகவேதான் நாங்களே சிலரை தேர்ந்தெடுத்தோம் என்ற விழாக்குழுவினரின் கூற்றை முற்றிலும் முறியடிக்கும் வகையில் எங்களுக்கு தேவைப்பட்ட எண்ணிக்கைக்கு இரு மடங்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

விழாவிற்கு இன்னும் பத்தே நாட்கள் இருந்த நிலையில் வந்து சேர்ந்திருந்த விண்ணப்பங்களை ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்து அடுத்த இரு தினங்களில் விண்ணப்பித்திருந்த அனைவரையும் நேர்காணல் செய்து அவ்வார ஞாயிற்றுக்கிழமைக்குள் இறுதி பட்டியல் ஒன்றை தயார் செய்தோம்.

அவ்வார திட்டக்குழு கூட்டத்தில் இறுதி பட்டியல் ஒரு சில வாக்குவாதங்களுக்குப் பிறகு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளபட்டு வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.

தூத்துக்குடியிலிருந்த முக்கிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் எல்லோருமே வங்கி மேலாளர் என்ற முறையில் எனக்கு நன்கு பரிச்சயமிருந்ததால் ‘ஜவுளி எல்லாம் திருநெல்வேலி போய் எடுக்கலாம் ஃபாதர்’ என்று குழுவினர் வாதாட அவர்கள் திருநெல்வேலியில் என்ன விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களோ அதையும் விட குறைவாக என்னால் ஏற்பாடு செய்துகொடுக்க முடிந்தது. அத்துடன் இரு ஜோடிகளுக்கு தேவையான திருமணச் சேலை, பட்டு வேட்டி, சட்டை, மேல் துண்டு ஆகியவற்றை ஒரு ஜவுளிக்கடையிலிருந்து இலவசமாகவும் நான் பெற்றுத்தரவே விழாக்குழுவில் என்னை குறை கூறிக்கொண்டிருந்தவர்களும் வாயடைத்து போயினர்.

தேவாலய விழா செவ்வாய்க் கிழமையில் வந்தது. ‘செவ்வாய் கிழமையன்றைக்கு கல்யாணம் செய்யறதில்ல ஃபாதர்..’ என்றுமொரு வாதம் வந்தது. பாதிரியாரும் அதை ஏற்றுக்கொள்ளவே திருவிழாவிற்கு அடுத்த நாள் புதன் கிழமை, ‘பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது..’ என்று ஒரு சில வயதான பெண் உறுப்பினர்களின் பரிந்துரைப்படி திருமண விழாவை நடத்துவதென தீர்மானித்து தூத்துக்குடி பிஷப் ஹவுசுக்கு சொந்தமான அச்சகத்திலேயே எளிமையான அழைப்பிதழை இலவசமாக அடிக்க ஏற்பாடு செய்தோம்.

‘பிரச்சினைக்கு மேல பிரச்சினையா வந்தாலும் கடைசியில கடவுள் கிருபையில சிறப்பா முடிஞ்சிதுய்யா..’ என்று விழாக்குழுவினர் ஒருமித்து பாராட்டும் வகையில் திருமணவிழா எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாமல் மிகச் சிறப்பாக தூத்துக்குடி ஆயரின் தலைமையில் நடந்தேறியது. தேவாலயத்தின் மிக அருகில் இருந்த மாற்று மதத்தைச் சார்ந்தவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தை அவர் மனமுவந்து இலவசமாக அளித்ததும் ஒரு சிறப்பு அம்சம்.

சரி.. திருமணம் சிறப்பாக நிறைந்தேறியது.. விழா முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியும் விழாவிற்கு செலவான மொத்த தொகையை கணக்கிட்டபாடில்லை.

விழாவிற்கு செலவழிக்க சில பெரிய தலைகளிடம் கொடுக்கப்பட்டிருந்த தொகைக்கு அவர்களாகவே முன்வந்து கணக்கு காட்டுவார்கள் என்று நினைத்திருந்தது வீணானது..

விழா முடிந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு அதுவரை சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவைக் கணக்கிட்டு என்னுடைய கிளையில் மீதமிருந்த தொகையையும் ஒரு அறிக்கையாக தயாரித்து பாதிரியாரிடம் சமர்ப்பித்தேன்.

‘இத்தோட என்னெ இதுலருந்து விடுவிச்சிருங்க ஃபாதர். போன ரெண்டு வாரமா இன்னும் மிச்சம் எவ்வளவு இருக்கு சார்னு கேட்டு குழுவிலருக்கற பலரும் ஃபோன்ல கூப்டறாங்க.. என்னால பதில் சொல்லமுடியல..’ என்றேன்.

பாதிரியார் என்னுடைய அறிக்கையைப் படித்துவிட்டு, ‘இன்னும் இவ்வளவு மீதி இருக்கா ஜோசஃப்? அப்படீன்னா இன்னும் கொஞ்சம் ஜோடிகளை சேர்த்திருக்கலாமே?’ என்றார்.

ஆம். நாங்கள் ஒரு ஜோடிக்கு இத்தனை என்று நிர்ணயித்திருந்த தொகையிலிருந்து ஒரு கணிசமான அளவு குறைத்து செலவாகியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் இரண்டு ஜோடிகளுக்கான ஜவுளி, திருமண மண்டபம், அழைப்பிதழ் அச்சடிப்பு, ஆகியவை இலவசமாக கிடைத்ததுதான். அத்துடன் தாலியும் சந்தை விலையிலிருந்து கிராமுக்கு இருபது ரூபாய் குறைத்து கிடைத்ததும் ஒரு காரணம்..

ஆக, மீதமிருந்த தொகையே ஐந்திலக்கத்தை கடந்திருந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட நியதியின்படி இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்படுமானால் சிலவினம் போக மீதமுள்ள தொகையை ஆயரின் பொதுநல நிதிக்கு நன்கொடையாக அளித்துவிட வேண்டும். அந்த நியதிக்கு கட்டுப்பட்டு விழாக்குழுவினர் கையொப்பம் இட்டு அளித்தபிறகுதான் இத்திட்டத்திற்கே அனுமதி கிடைத்தது.

ஆனால் மீதமிருந்த தொகையை கேட்டறிந்த விழாக்குழுவினர் ஒட்டுமொத்தமாக இதை சிக்கனமாக முடித்துதந்த என்னையே குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். ‘இதுக்கு எதுக்குய்யா கஞ்சத்தனம் பண்ணனும்? இன்னும் நல்லா சிறப்பா செஞ்சிருக்கலாமே.. பாட்டு கச்சேரி வச்சிருக்கலாம்.. வாண வேடிக்கை வச்சிருக்கலாம், ஊரெல்லாம் நம்ம எல்லார் பேரையும் போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கலாம்.. அத விட்டுட்டு ஊரெல்லாம் அலைஞ்சி கலெக்ட் பண்ணிட்டு இத்தன பெரிய தொகைய தூக்கி பிஷப்கிட்ட குடுக்கணுமாக்கும்? எல்லாம் வயசு வித்தியாசம் பாக்காம சிலர் சொன்னத கேட்டு செஞ்சதுனாலதான? அவர் என்ன நம்ம ஊரா, சனமா?’ என்று வெளிப்படையாகவே கூட்டத்தில் பேச ஆரம்பிக்க பாதிரியாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது.

‘சரிய்யா.. ஆனது யிரிச்சு.. இப்ப என்ன செய்யணுங்கறீங்க? அதச் சொல்லுங்க.’ என்றார் பாதிரியார்.

‘கூட்டம் முடிஞ்சதும் ஒங்கக்கிட்ட சொல்றோம் ஃபாதர்’ என்று தலைவர் கூற கூட்டம் முடிவுக்கு வந்தது.

அவர் அப்படி கூற காரணம் என்ன என்று எனக்கு நன்றாகவேப் புரிந்தது. அகவே நான் பாதிரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றேன்.

அடுத்த சிலநாட்களில் சில குழு உறுப்பினர்கள் வாயிலாக தலவைர் கூறியதை அறிந்த நான் அன்று மாலையே பாதிரியாரை சென்று சந்தித்து என்னுடைய எண்ணத்தை வெளிப்படையாகவே தெரிவித்தேன்.

பாதிரியாரோ, ‘எனக்கும் நீங்க சொல்றது சரின்னுதான் படுது.. ஆனால் என்னெ என்ன செய்ய சொல்றீங்க ஜோசப்.. உங்களால ஏதாவது செய்ய முடிஞ்சா செஞ்சி இது நடக்காம செய்யப் பாருங்க.. இந்த பங்க விட்டு போகப்போற நேரத்துல நான் ஏதும் பிரச்சினை செய்ய விரும்பல ஜோசப். என்னோட நிலைமைய நீங்க புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்.’ என்றார் பரிதாபமாக.

நான் தூத்துக்குடி வந்து சிலமாதங்களே ஆகியிருந்தாலும் தூத்துக்குடி ஆயர் இல்லத்திலிருந்து அந்த நகரத்திலிருந்த எல்லா தேவாலய பாதிரியார்களிடமும் நட்பை ஏற்படுத்தியிருந்தேன். மேலும் அப்போதிருந்த தூத்துக்குடி ஆயர் முன்பு நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் அங்கிருந்த பள்ளியொன்றின் தலைமையாசிரியராக இருந்தவர். எங்களுக்கிடையில் தஞ்சையில் வைத்தே பரிச்சயமிருந்தது. தூத்துக்குடியில் நான் சென்று சேர்ந்ததுமே அவரை சந்தித்து நட்பை புதுப்பித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த நாளே நான் அவரை நேரில் சென்று இத்திட்டத்தில் மீதமிருக்கும் தொகையை அவருக்கு தெரிவித்து அதை மேலும் தாமதியாமல் கைக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என்னுடைய வேண்டுகோளைக் கேட்டதுமே வியப்புடன் என்னைப் பார்த்தார். ‘ஜோசப் ஒங்களுக்கு பயங்கர துணிச்சல் இருக்கணுங்க.. நீங்க நினைக்கறா மாதிரி ஆளுங்க இல்ல இங்கத்திய கிறிஸ்த்தவங்க.. போகப் போக தெரிஞ்சுக்குவீங்க. அதனாலதான் அந்த பங்கு ஃபாதரே தயங்கியிருக்கார். நீங்க எங்கிட்ட வந்து இந்த மாதிரி சொன்னீங்கன்னு தெரிஞ்சாலே ஒங்களுக்கு எதிரா முச்சந்தியில தட்டியில என்னத்தையாவது எழுதி வச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..' என்றவாறே உரக்க சிரித்தார். 'அதனால நான் உடனே நடவடிக்கை எடுக்காம அந்த ஃபாதர கூப்ட்டு இந்த திட்டத்தோட நிறைவு அறிக்கைய இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அனுப்ப சொல்றேன்.. Based on his report I will initiate action.. அப்படி செய்யறதுனால ஒங்க பேர் அடிபடறதுக்கு வாய்ப்பு இருக்காது. என்ன சொல்றீங்க?’

எனக்கும் அது சரியென படவே அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பினேன்.. அவர் கூறியபடியே பாதிரியார் சமர்ப்பித்த நிதி அறிக்கையின் அடிப்படையில் என்னுடைய கிளையில் மீதமிருந்த மொத்த தொகையும் ஆயரின் பொதுநிதிக்கு மாற்றும்படி அடுத்த சில வாரங்களிலேயே ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆயருக்கு என்னைப் பற்றி என்ன தோன்றியதோ அடுத்த சில மாதங்களில் அவருடைய ஆணையின்படி என்னுடைய வங்கி தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பிரத்தியேக வங்கிகளில் ஒன்றானது. அதன்மூலம் என்னுடைய கிளைக்கு தூத்துக்குடி மற்றும் மறைமாவட்டத்தைச் சார்ந்த பல கிறித்துவ நிறுவனங்களிடமிருந்து கணிசமான வர்த்தக உறவு என் வங்கிக்கு கிடைத்தது.

தொடரும்..

  

4 comments:

துளசி கோபால் said...

நல்லவங்களாவே நடந்துக்கறதும் ரொம்பக் கஷ்டமா இருக்கே!

மனுஷங்களுக்கு எப்பவும் எதிலும் ஒரு போட்டி, பொறாமை எதுக்குங்க இருக்கு?

எப்படியோ உங்க பேரை ரிப்பேர் செய்யத் துடிச்சவங்ககிட்டே இருந்து தப்புனீங்க. அதுவே ஒரு நல்ல விஷயம்தான்.

tbr.joseph said...

வாங்க துளசி,

அந்த சபையிலருந்த தலைவரோ, அல்லது மற்ற உறுப்பினர்களோ கெட்டவங்கன்னு சொல்ல முடியாது. லேசா கொஞ்சம் விளம்பரப் பிரியர்கள்னு வேணும்னா சொல்லலாம்.

நான் பார்த்த வரைக்கும் தூத்துக்குடிவாசிகள் அதுவும் கிறித்துவர்கள் கொஞ்சம் உல்லாசவாசிகள்தான். எதையும் ஆடம்பரமாக செய்வதில் விருப்பம் உள்ளவர்கள். அத்துடன் தங்களுடைய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்..

அந்த உறுப்பினர்களுள் வயதானவர்களுக்குத்தான் என்னை கட்டோடு பிடிக்கவில்லை. இளைஞர்களுக்கு அவர்களுடைய கொள்கைகளில் பிடிப்பில்லை என்றாலும் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தனர். அதுவும் உள்ளூர்வாசிகளாயிற்றே. ஆனால் எனக்கு அந்த பிரச்சினை இல்லையல்லவா? என்ன, மிஞ்சிப்போனா ரெண்டு வருசம் என்ன செஞ்சிர முடியும் இவங்களால என்ற அசட்டு தைரியம்தான் என்னை தைரியமாக அத்தகையோரை எதிர்க்க வைத்தது என்று இப்போது நினைக்கிறேன்.

sivagnanamji(#16342789) said...

இந்த நாட்டின் எழுதப்படாத விதிங்க:
"எல்லோரும் கொடி பிடிக்கும் தொண்டனாத்தான் இருக்கனும்; முடிவெடுக்கும் தலைவனா வரக்கூடாது"எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்யனும்;ஆனா
'இப்படி செய்யுங்கோனு 'மட்டும் சொல்லக்கூடாது. போலித் தலைவர்கள்;விளம்பர மோகிகள்..
"விளம்பரத்தாலெ உயர்ந்தவன் வாழ்க்கை...பாட்டு சத்தம் கேட்குதா?
போகட்டும் விடுங்க..."வீட்டைக்
கட்டிப்பார்;கல்யாணம் செஞ்சு பார்"
என்பாங்க.கல்யாணம்[எத்தனைனு
சொல்லலியோ?]செஞ்சு பார்த்தாச்சு...
[மச்சான்] வீடு கட்டும் பிரச்சனையும்
பார்த்தாச்சு நல்ல அனுபவங்கள்.
வெற்றிகரமான பேங்கர் ஆவதில் இவை உதவி இருக்கும்

tbr.joseph said...

வாங்க ஜி!

வெற்றிகரமான பேங்கர் ஆவதில் இவை உதவி இருக்கும் //

என்னுடைய அலுவலக வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி ஆரம்பகாலத்திலேயே நான் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் என்னை ஒரு வெற்றிகரமான பேங்கராக மாற்றியதோ இல்லையோ பிற்காலத்தில் எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சலை எனக்கு தந்ததென்னவோ உண்மை..

அலுவலக வாழ்க்கையில் நான் சாதித்தவை அப்படியொன்றும் பெரிதாக எனக்கு தோன்றியதில்லை. ஆனால் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மனநிறைவு அளவிட முடியாதது.