12 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 152

அன்று மாலை நடந்ததற்கு யார் பொறுப்பாயிருந்திருக்க முடியும் நான் ஒருவாறு யூகித்திருந்ததுதான்.

அதை என்னுடைய வாடிக்கையாளர் அன்று இரவு வந்து உறுதிப்படுத்தியபோது எனக்கு ஆத்திரம் பொங்கி வந்தாலும் ஆத்திரப்பட்டு எந்த பயனும் இல்லையென்பதால் ‘அப்படீங்களா? ஒருவேளை ஆள் அடையாளம் தப்பிப்போயி செஞ்சிருப்பாங்க. நீங்க போங்க. நா காலையில ஸ்டேஷனுக்கு போய் பாத்துக்கறேன்.’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

என்னுடைய பதிலை அவர் முழுவதும் நம்பவில்லையென்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. இதுவரை என்னுடைய குடும்பத்தினருக்குப் பிறகு என்னுடைய கிளையில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் இப்போது வெளியில் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் தெரிந்துவிட்டதே. இது பரவினால் என்னுடைய பெயருக்கு நிச்சயம் களங்கம் வர வாய்ப்பிருக்கிறது என்று நினைத்த நான் இனியும் வாளாவிருப்பது நல்லதல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

ஆனால் இந்த விஷயத்தில் இனி தலையிடுவதில்லை என்று அன்று காலையில்தானே தீரிமானித்திருந்தோம் என்றும் தோன்றியது. இப்போது போய் திடீரென்று நான் என் மனதில் நினைத்திருந்த  விஷயம் குறித்து என் மனைவியிடம் பேசினால் அவர் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்று யோசித்தேன்.

நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதுடன் வீனாக கவலைப்பட்டு குடும்பத்தில் இருந்த நிம்மதி போய்விடவும் வாய்ப்பிருக்கிறதென நினைத்து அவரிடம் இருந்து இந்த விஷயத்தை தற்சமயம் மறைப்பதெனவும் தீர்மானித்தேன்.

‘யாருங்க இந்த நேரத்துல?’ என்றவரிடம், ‘ஒரு கஸ்டமர். நாளைக்கு கோல்ட் லோன் வேணுமாம். அதுக்கு இப்பவே ரிசர்வ் பண்ண வந்திருக்கார்.’ என்றேன்.

ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். மீன்பிடி சீசன் ஆரம்பித்துவிட்டாலே தங்க நகைகள் மீது கடன் வாங்குவோர் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிடும். ஆகவே தினமும் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இருபது டோக்கன்கள் கொடுப்பது வழக்கம். அவர்களுக்கு கடன் வழங்கி முடிப்பதற்கே பகல் இரண்டு மணி வரை ஆகிவிடும். அந்த டோக்கன்களை வாங்குவதற்கு சில நாட்களில் பயங்கர போட்டி நடக்கும். சிலர் முன் ஜாக்கிரதையாக முந்தைய நாள் மாலையே வந்து நிற்பது வழக்கம்.

அந்த விஷயம் என் மனைவிக்கும் தெரியும் என்பதால், ‘நல்ல ஆள்தான் போங்க. நீங்கதான் கொஞ்சம் பத்து பேருக்கு கூட கொடுத்தாதான் என்ன?’ என்றவாறு அவருடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

என்னுடைய மனைவி படுத்தவுடனே உறங்கிப்போகும் சாதி. நான் அதற்கு நேரெதிர்.

அன்று இரவு உணவிற்குப்பின் என்னுடைய மனைவி ஆழ்ந்து உறங்கியபின் எழுந்து என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று நான் மனதில் நினைத்திருந்ததை செயல்படுத்த ஆரம்பித்தேன். இன்று இருப்பதைப் போல் அன்று கணினி வசதி இருக்கவில்லையே. கோத்ரெஜ் தட்டச்சு இயந்திரம்தான் ஒரே கதி. மனதில் நினைப்பதை அப்படியே தட்டச்சு செய்துதான் எனக்குப் பழக்கம். எழுதி வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யும் பழக்கம் எனக்கு இல்லை. இன்றுவரை அப்படித்தான். எந்த மொழியானாலும்.

இம்முறையிலிருந்த ஒரே தொல்லை காகிதம் வீணாவதுதான். கணினியில் நமக்குத் தேவையான திருத்தங்களை அவசியப்படும்போதெல்லாம் செய்து இறுதியில் நகல் எடுத்தால் போதும். ஆனால் தட்டச்சு இயந்திரத்தில் ஒரேயொரு தவறு இருந்தாலும் மீண்டும் எல்லாவற்றையும் அடிக்க வேண்டும். இதனால் நேரமும் வீணாவதுண்டு.

என்னுடைய கிளையில் பழைய உபயோகமில்லாத படிவங்கள் நிறைய இருந்ததால் காகிதம் வீணாவதைப் பற்றி கவலையில்லை. ஆனால் நேரம் வீணாவதை தவிர்க்கமுடிந்ததில்லை.

அன்று இரவு சுமார் பதினோரு மணிக்கு துவங்கிய வேலை இரண்டு மூன்று நகல் எடுத்த பிறகு எனக்கு திருப்தியளிக்கவே இறுதி நகல் எடுத்து வைத்துவிட்டு உறங்கச் செல்லும்போது அதிகாலை இரண்டு மணி.

என்னுடைய மனைவிக்கு நான் எழுந்து சென்றதோ திரும்பி வந்து படுத்ததோ தெரிந்ததோ இல்லையோ. அதைக்குறித்து ஒன்றும் கேட்காததிலிருந்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தேன்.

அடுத்த நாள் காலை பதினோரு மணியானதும் என்னுடைய உதவி மேலாளரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு தூத்துக்குடி நகர எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்றேன்.

அத்தகைய அலுவலகங்களுக்குச் செல்லும்போது தொலைபேசியில் அழைத்து நாம் சந்திக்க விரும்புபவர் இருக்கிறாரா என்று விசாரித்துவிட்டுச் செல்வதுதான் உசிதம் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.

நான் அங்கு சென்ற நேரம் அவர் தன்னுடைய அதிகாரிகளுடன் ஏதோ ஆலோசனையில் இருந்திருக்கிறார். அவருடைய பி.ஏ விடம் என்னுடைய அடையாள அட்டையை (visiting card) கொடுத்து அவரை ஒரு தனிப்பட்ட விஷயமாக சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினேன்.

அவர் என்ன விஷயமாக நான் எஸ்.பியை சந்திக்க வந்தேன் என்பதை சுருக்கமாக எழுதிக்கொடுத்தால் அவரிடம் அளிப்பதாகவும் அவர் என்னை சந்திக்க விரும்பினால் அழைப்பதாகவும் தெரிவிக்கவே நான் கையோடு உரையிலிட்டுக்  கொண்டுவந்திருந்த கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பினேன்.

மதியம் மூன்று மணிவரை எந்த தகவலும் இல்லை. அவருடைய காரியதரிசியை மீண்டும் அழைத்தாலென்ன என்று நினைத்தேன். இருப்பினும் அவரே தேவைப்பட்டால் அழைக்கிறேன் என்று கூறியிருந்தாரே என்று நினைத்து மாலைவரை காத்திருந்து அப்படியும் அவரிடமிருந்து அழைப்பு வரவில்லையென்றால் நேரில் சென்று சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன்.

மாலை நான்கரை மணி. என்னுடைய அலுவலக வாசலிலிருந்த அழைப்பு மணியை யாரோ அடிப்பதாக என்னுடைய மனைவி வீட்டிலிருந்து இண்டர்காமில் அழைத்தார்.

என்னுடைய கிளை வர்த்தக நேரம் காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை. அது முடிந்ததும் என்னுடைய அலுவலக வாசற்கதவை அடைத்துவிடுவது வழக்கம். வாசலில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணி என்னுடைய குடியிருப்பில் ஒலிக்கும் வண்ணம் பொருத்தியிருந்தேன்.

என்னுடைய மனைவியிடமிருந்து அழைப்பு வந்ததும் என்னுடைய சிப்பந்தியை அழைத்து யாரென்று பார்க்கச் சொன்னேன். கதவு திறந்ததும் உள்ளே நுழைந்தார் ஒரு கான்ஸ்டபிள். ‘ஒங்க மேனேஜர் எங்கய்யா?’ என்று எரிச்சலுடன் கேட்பது கேட்டது.

அடுத்த நிமிடம் என்னுடைய அறைக்கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தவர் தன்னுடைய கையிலிருந்த உறையை என் மேசை மீது வீசியெறிந்தார். அதிலிருந்து வெளியே விழுந்தன என்னுடைய வாகனத்தின் ஆதாரங்கள்! நேற்று என்னுடைய வாகனத்திலிருந்து களவு போனவை.

‘ஒங்கதான்னு சரி பாத்துக்குங்க சார். கண்ட எடத்துலயும் வண்டிய நிறுத்திட்டு போயிற வேண்டியது. அப்புறம் இத காணம், அத காணம்னு எஸ்.பி அய்யாக்கிட்ட போயி புகார் கொடுக்க வேண்டியது. ஏன் சார் எதுக்குத்தான் போய் புகார் கொடுக்கறதுன்னு ஒரு வரைமுறை இல்லையா?’

என்னுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறியவரை வியப்புடன் பார்த்த என்னுடைய உதவி மேலாளரும் மற்ற பணியாளர்களும் அவர் வெளியேறியதும் ஒட்டுமொத்தமாக என்னுடைய அறைக்குள் நுழைந்தனர்.

நான் நேற்று மாலை நடந்தவற்றையும் இன்று காலை எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று புகார் எழுதிக்கொடுத்துவிட்டு வந்த விஷயத்தையும் சுருக்கமாகக் கூறினேன்.
நான் கூறி முடிக்கும்வரை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பிறகு என்னுடைய காசாளர் தயக்கத்துடன், ‘சார் நீங்க செஞ்சது சரியா தவறான்னு கேக்கலை. ஆனா நல்லா யோசிச்சித்தான செஞ்சீங்க?’ என்றார்.

நான் ஆமாம் என்று தலையை அசைத்தேன்.

அவர் அருகிலிருந்த தலைமை எழுத்தாளரைப் பார்த்தார். அவர், ‘அந்த எஸ்.ஐ மோசமான ஆளுன்னு கேள்விப்பட்டிருக்கேன் சார். அதனாலதான் கவலையாயிருக்கு. உடனே ஒன்னும் செய்யாட்டியும் அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சி...’

என்மீது அவர்களுக்கிருந்த அக்கறை தெளிவாகத் தெரிந்தது. ஆனால் நேற்றைய சம்பவத்துக்குப் பிறகு எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதை அவர்களுக்கு விளக்கிவிட்டு நான் எஸ்.பி யிடம் சென்று புகார் அளித்தது என்னுடைய மனைவிக்கும் தெரியாது என்பதால் இதைப் பற்றி யாரும் வெளியில் விவாதிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்களை அனுப்பிவிட்டு எஸ்.பியின் காரியதரிசியை அழைத்தேன்.

அவரும் எஸ்.பியைப் போலவே பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர்தான். ‘சார் ஒங்க லெட்டரை படிச்சிட்டு சார் பயங்கர கோபமாயிட்டார். மீட்டிங்கு வந்திருந்த எஸ்.ஐ வரச்சொல்லி அங்கயே வார்ன் பண்ணிட்டார். ஒங்க ஸ்கூட்டரோட பேப்பர்ஸ் எல்லாம் இன்நேரம் வந்திருக்கணுமே..’

நான், ‘வந்துவிட்டது சார். ரொம்ப நன்றி’ என்றேன்.

‘நாட் அட் ஆல். எங்க எஸ்.ஐ யோட முட்டாள்தனத்துக்கு அவரே மன்னிப்பு கேட்டுக்கிட்டதா சொல்லச் சொன்னார். இனிமே அவர் இந்த விஷய்த்துல தலையிடமாட்டார்னு சொல்லச் சொன்னார் சார். டோண்ட் வொர்ரி அபவுட் ஹிம். பை.’ என்றவாறு அவர் இணைப்பைத் துண்டிக்க நிம்மதியுடன் என்னுடைய வாகன மெக்கானிக்கை அழைத்து இரண்டு சக்கரங்களிலும் பங்க்ச்சர் ஒட்டியாகிவிட்டதா என்று விசாரித்தேன்.

அடுத்த அரை மணியில் அவராகவே ஒரு பணியாளிடம் என்னுடைய வாகனத்தை கொடுத்தனுப்ப நான் உடனே புறப்பட்டு தூத்துக்குடி நகரில் மிகவும் பிரசித்தமான தூய. ஜூட்ஸ் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்குச் சென்றேன்.. கடவுளுக்கு இந்த தொல்லையிலிருந்து என்னை விடுவித்ததற்காக நன்றியை செலுத்த.

ஆமாம்.. அன்றைக்குப் பிறகு அந்த எஸ்.பி என்னுடைய விஷயத்தில் தலையிடவில்லை.

ஆனால் அடுத்த இரண்டு வாரத்தில் அந்த நிலத்தை உரிமை கொண்டாடியவர்களிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. என்னுடைய மைத்துனர் தரப்பிலிருந்து என்னுடைய மாமனாரின் நண்பர் பதில் அனுப்பினார்.

ஆனால் அதில் திருப்தியடையாத எதிரணியினர் தூத்துக்குடி ஜில்லா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். என்னுடைய மைத்துனரை வழக்கு முடியும்வரை அந்த நிலத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் (Development) செய்ய தடை செய்யவேண்டுமென்று கோரிக்கை வைக்க என் மைத்துனர் தரப்பில் அதை பத்திர நகல்களை ஆதாரமாகக் காட்டி எதிர்க்க இரு தரப்பினருடைய வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது..

அடுத்த சில மாதங்களிலேயே என்னுடைய மைத்துனருடைய மாமனார் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி ஒரு பெரிய பூட்டை மாட்டினார்.

ஆனால் வழக்கு தொடர்ந்தது. தூத்துக்குடி ஜில்லா கோர்ட்டில் என்னுடைய மைத்துனருக்கு ஆதரவாகவும் மதுரை மேல் கோர்ட்டில் அவருக்கு எதிராகவும் தீர்ப்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் என்னுடைய மைத்துனர் மேல் முறையீடு செய்தார். அந்த நேரத்தில் அதாவது வழக்கு தொடர்ந்து பத்துவருடங்கள் கழித்து நான் சென்னையில் இருந்த நேரத்தில் வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தது, என்னுடைய மைத்துனருக்கு ஆதரவாக. அதனையடுத்து நிலத்திற்கு சொந்தம் கொண்டாடிய அந்த பெண்மனி தன்னுடைய எண்பதாவது வயதில் மரிக்கவே வழக்கு அத்துடன் நின்றுபோனது.

வழக்கு முடிவு சாதகமாக வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக அவர் பத்துவருடங்களுக்கும் மேலாக பட்டபாடு, அலைந்த அலைச்சல்...

இதற்கெல்லாம் ஒருவகையில் நானுந்தானே காரணம் என்று நினைத்து ஆரம்பத்தில் மருகாத நாளே இல்லையெனலாம். ஆனால் நாளடைவில் அதை நான் மறக்க முடிந்தாலும் என்னுடைய மைத்துனருடனான உறவில் ஏபட்ட விரிசல் மட்டும் பல வருடங்களுக்கு அப்படியே இருந்தது..

அந்த நிலம்?

இப்போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் யூதாஸ் நிலத்தைபோல் அப்படியே கிடக்கிறது..

பராமாரிப்பின்றி பாழடைந்துப் போன சுற்றுச் சுவரும்.. துருப்பிடித்துப்போன இரும்பு கேட்டும்..

‘இத்தன பேர் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வித்ததுலருந்தே ஒங்க மாப்பிள்ளைக்கு தெரிஞ்சிருக்க வேணாம்.. இது ஒரு விருத்தியில்லால நிலம்யா.. இது இப்படியேதான் கெடக்கும்..’என்று ஒரு எல்லாம் ‘தெரிந்த’ ஜோசியர் என்னுடைய மைத்துனருடைய மாமனாரிடம் கூறிவிட்டாராம்..

ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினரின் மூட நம்பிக்கையை  என்னவென்று போய் சொல்வது? வெட்கக் கேடு..

‘எப்படியோ போட்டும் விடுங்க..’ என்ற மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நானும் அதன் பிறகு அவர்கள் குடும்ப விஷயத்தில்  தலையிடவே இல்லை..

எப்போதாவது தூத்துக்குடி செல்லும்போது போவதோடு உறவு நின்றுபோனது. அதுவும் மாமனாரும் மாமியாரும் மரித்தபிறகு நின்றுபோனது..

தொடரும்..

18 comments:

dondu(#4800161) said...

"ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினரின் மூட நம்பிக்கையை என்னவென்று போய் சொல்வது? வெட்கக் கேடு."

என்னுடைய கல்லூரித் தோழன் ஷாஹுல் ஹமீதின் மாமனார் ராகு காலம், கரி நாள் எல்லாம் பார்ப்பாராக்கும். அதற்கு என்ன கூறுகிறீர்கள்?

அது இருக்கட்டும், நீங்கள் விஷயத்தை சரியாகப் பார்த்து சில மூவ்கள் எடுத்திராவிட்டால், மைத்துனருக்கு நஷ்டம் இன்னும் அதைக அளவில் அல்லவா போயிருக்கும்? அது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவில்லையா?

அந்த வயதானவரின் ரியேஷன் என்ன? அந்த எஸ்.ஐ. இன்னும் செர்வீசில் இருக்கிறாரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

பத்துவருசம் கோர்ட் கேஸ்ன்னு சொன்னாவே நிம்மதி போச்சுதான்.

இப்படி நிலத்தாலே நம்ம சொந்தத்துலேயும் சம்பந்திங்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லை. பசங்க படுதான் கஷ்டமாப் போச்சு.

உங்க மனவி படுத்தவுடன் தூங்கிருவாங்களா? அது ஒரு பெரிய அதிர்ஷ்டமுன்னு சொல்லுங்க.

நல்லா இருக்கட்டும்.

மணியன் said...

//அன்றைக்குப் பிறகு அந்த எஸ்.பி என்னுடைய விஷயத்தில் தலையிடவில்லை. //

எஸ்.ஐ என்று இருக்க வேண்டுமோ?
விறுவிறுப்பாகச் சென்று சுபமாக முடிந்தது; ஆனால் உறவில் ஏற்பட்ட விரிசலால் வருத்தமே. மூன்றாம் மனிதர்கள் நம்மைப் புரிந்து கொள்ளும்போது நமது சொந்தங்களால் முடியாமற் போவது விசித்திரம்தான்.

அரவிந்தன் said...

ஆக போலிஸே உங்களுடைய வாகனத்தை உடைத்துவிட்டனர்.எங்கே போய் சொல்லுவது ?

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

ராகு காலம், கரி நாள் எல்லாம் பார்ப்பாராக்கும். அதற்கு என்ன கூறுகிறீர்கள்?//

நான் என்ன சொல்வது? அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. எங்களுடைய (கிறித்துவ)குடும்பத்தில் அப்படி ஒரு பழக்கம் இல்லை.. அதனால் அப்படி எழுதினேன்.

அது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவில்லையா?//

புரியாமலா இருந்திருக்கும்? மனைவி சொல்லே மந்திரம் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்களே? புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

அந்த வயதானவரின் ரியேஷன் என்ன? //

தெரியலை சார். அதற்குப்பிறகு நான் அதில் தலையிடவில்லை. என் மைத்துனர் ஊரில் இல்லையாதலால் என்னுடை மாமனார் வீட்டிலும் அதில் தலையிடவில்லை. எல்லாம் அவருடைய மாமனாரும், மனைவியுந்தான்.

அந்த எஸ்.ஐ. இன்னும் செர்வீசில் இருக்கிறாரா?//

அவர் அடுத்த சில வருடங்களில். இன்ஸ்பெக்டரானார். நான் ஒருமுறை தூத்துக்குடி சென்றபோது அவரை கைதுசெய்யக் கோரி ஊரெங்கும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்.

tbr.joseph said...

வாங்க துளசி,

பத்துவருசம் கோர்ட் கேஸ்ன்னு சொன்னாவே நிம்மதி போச்சுதான்.//

உண்மைதான். ஆனால் அதற்கு அந்த வழக்கை சரிவர என்னுடைய மைத்துனர் குடும்பம் கையாளாததும் ஒரு குறை. வக்கீலுக்கே போதும் போதும் என்றாகிவிட்டது.

அது ஒரு பெரிய அதிர்ஷ்டமுன்னு சொல்லுங்க.//

ஆமாம். அதிலென்ன சந்தேகம்? ஐ மீன் எனக்கும் அது அதிர்ஷ்டம்தானே.. அவர் உறங்கியதும் நான் வீட்டைவிட்டு வெளியே போய் திரும்பி வந்தாலும் அவருக்கு தெரியவே தெரியாதே:))

tbr.joseph said...

வாங்க மணியன்,

எஸ்.ஐ என்று இருக்க வேண்டுமோ? //

ஆமாம் மணியன்.. எஸ்.ஐ என்பதுதான் சரி.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

ஆக போலிஸே உங்களுடைய வாகனத்தை உடைத்துவிட்டனர்.எங்கே போய் சொல்லுவது ? //

அதிலென்ன அதிசயம் இருக்கிறது? என் மண்டையை உடைக்காமல் விட்டார்களே:)

G.Ragavan said...

நீங்க கடைசிப் பின்னூட்டத்துல சொன்னதுதான் உண்மை. ஒங்க மண்டைய ஒடைக்காம விட்டாங்களே. போலீஸ்னாலே பொதுவா அப்பிடித்தாங்க. நம்பிக்க வர மாட்டேங்குதுங்க.

சரி. இப்ப மச்சினரு கூடச் சரியாப் போயிருச்சா?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சரி. இப்ப மச்சினரு கூடச் சரியாப் போயிருச்சா? //

ஆமாம்னும் சொல்லமுடியல. இல்லேன்னும் சொல்லமுடியல.. வருவோம்.. போவோம்கற நிலைமையில இருக்கு.. பெரிசா ஒன்னும் ஒட்டுதல் இல்லை.

Murthi said...

ஒரு சிறிய நிலப் பிரச்சினையினால் உங்கள் மைத்துனர் வழி சொந்தம் விட்டுப்போய்விட்டது என்ற விஷயம் வருத்தத்திற்குறியது.இவ்வளவு போரட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலம் வெறும் கட்டாந்தரையாகவே கிடப்பது இன்னும் சோகம்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது இதுதானோ?.

நாம் எடுக்கும் ஒரு சில சிறிய முடிவுகள் தவறாகும் போது அதற்கு நாம் கொடுக்கும் விலை பெரிது.

Sivaprakasam said...

தினமும் ஒங்க பதிவை மறக்காம படிக்கிறேன். பின்னூட்டமிடத்தான் முடியலே.
<---
ஆமாம்னும் சொல்லமுடியல. இல்லேன்னும் சொல்லமுடியல.. வருவோம்.. போவோம்கற நிலைமையில இருக்கு.. பெரிசா ஒன்னும் ஒட்டுதல் இல்லை -->
உறவுகள் நல்லா இருந்தா ஒட்டலாம். இல்லையினா தூர இருந்தாலே நல்லது.

sivagnanamji(#16342789) said...

நான் இன்னிக்கு ரொம்ப லேட்.கம்யூட்டர் ரொம்ப ட்ரபுள் பண்ணிட்டது....நான் சொன்னபடி இது
காக்கியின் கைங்கரியம்தான். நல்ல வேளை பெட்டிஷனை எஸ்.பி கிட்டெ கொண்டு போனீங்க பொலீஸ் ஸ்டெஷனுக்கு போகாமல் இருந்தீங்களே.....
பேராசைக்காரனுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்ட்டத்திற்கு ஈடு என்ன?
ம்ம்ம்ம்...வாழ்க்கையில் இப்படிப் பட்ட
ஜந்துக்களையும் சந்திக்கின்றோம்.....

arunagiri said...

"ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினரின் மூட நம்பிக்கையை என்னவென்று போய் சொல்வது? வெட்கக் கேடு."

ஏன் கிறிஸ்துவத்தில் "மூட" நம்பிக்கையே இல்லையா? கலாசார அடிப்படையில் "மூட" நம்பிக்கைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றனவே தவிர கிறித்துவம் ஒன்றும் "மூட" நம்பிக்கைகளுக்கு விலக்கு அல்ல.
பூமி சூரியனைச்சுற்றுகிறது என்பதைக்கூட 359 வருடங்களாக வரை சர்ச் ஒப்புக்கொள்ளாமல் 1992 October 31-இல்தான் ஒருவழியாக ஒப்புக்கொண்டது. இன்றும் கூட அறிவியல் பூர்வ பரிணாமக் கோட்பாட்டை சர்ச் மறுக்கிறது.

சிலரது வாழ்வியல் நம்பிக்கைகள் பிறருக்கு "மூட" நம்பிக்கைகள். கடவுள் நம்பிக்கையே சிலருக்கு "மூட" நம்பிக்கையாகத் தெரிவதில்லையா, அதுபோலத்தான்.

நம்பிக்கை, நம்பிக்கையின்மை என்று சொல்வது வேறு; "மூட" நம்பிக்கை என்று சொல்லும் arrogance வேறு. (arrogance என்றது உங்களை அல்ல; அந்த வார்த்தைப் பிரயோகத்தை).

நேர்த்தியான உங்கள் பதிவினில் இந்த வாக்கியம் மட்டும் ஒரு சுருதி பேதம்.

tbr.joseph said...

வாங்க மூர்த்தி,

இவ்வளவு போரட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலம் வெறும் கட்டாந்தரையாகவே கிடப்பது இன்னும் சோகம்.//

சோகம் என்பதுதான் சரி. ஆனால் அதற்குப் பின்னணி ஒரு ஜோசியரின் 'அருள்வாக்கு' தான் என்பது அதைவிட சோகம். இது எதிரணியினருக்கு ஒருவித மாரல் விக்டரி. அவர்கள் விரும்பியதும் இதுதானே. அந்த நிலத்துக்கு நாலாபுறமும் மாடிவீடுகள் எழும்பி கம்பீரமாக நிற்கும்போது இது மட்டும்...

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது இதுதானோ?//

இது எந்த அளவுக்கு சரி என்று எனக்குத் தெரியவில்லை. நம் பங்குக்கு நாமாக ஒரு முடிவை எடுத்துவிட்டு பழியை தெய்வத்தின் மீது போடுவது சரிதானா? நம் திறமைகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அல்லது தெய்வத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைத்தால் இதுதான் நடக்கும்..

நாம் எடுக்கும் ஒரு சில சிறிய முடிவுகள் தவறாகும் போது அதற்கு நாம் கொடுக்கும் விலை பெரிது//

நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான். ஆனால் அதற்கும் நான் குறிப்பிட்ட சம்பவத்துக்கும் எந்த சம்பவமும் இல்லை. ஏனெனில் அந்த நிலத்தை வாங்குவதிலோ அல்லது அதில் ஒரு வீட்டைக் கட்ட எடுத்த முடிவிலோ எந்த தவறும் இல்லை என்பதை நீதிமன்றமே தீர்ப்பளித்தப்பிறகு இந்த முடிவுகள் எப்படி தவறானவையாக இருக்க முடியும்? ஆனால் ஒன்று நான் நிலம் வாங்கிய விஷய்த்தில் தலையிட்டது தவறு என்பதுதான் உங்கள் வாதம் என்றால் நீங்கள் கூறியதை ஒத்துக்கொள்கிறேன். அதற்கு நான் கொடுத்த விலை பெரியதுதான்.

tbr.joseph said...

வாங்க ஜி!

நான் இன்னிக்கு ரொம்ப லேட்.//

நீங்க தெனமும் வர்றதே ரொம்ப பெரிய விஷயம் ஜி!

நல்ல வேளை பெட்டிஷனை எஸ்.பி கிட்டெ கொண்டு போனீங்க பொலீஸ் ஸ்டெஷனுக்கு போகாமல் இருந்தீங்களே..... //

நா மட்டும் ஸ்டேஷனுக்கு போயிருந்தா அன்னைக்கி இருந்த மனநிலையில ஒன்னுக்கெடக்க ஒன்ன பேசி நிச்சயமா பிரச்சினையில மாட்டிக்கிட்டிருப்பேன். வேறொருத்தருக்காக தைரியமா போலீசுக்கு போலாம். ஆனா நமக்காக நாமளே அதுவும் தனியா போகவே கூடாது.

பேராசைக்காரனுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்ட்டத்திற்கு ஈடு என்ன?//

சரியா சொன்னீங்க ஜி! பேராசைக்காரர்கள்தானே இன்று நாட்டையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றனர்.

tbr.joseph said...

வாங்க arunagiri,

ஏன் கிறிஸ்துவத்தில் "மூட" நம்பிக்கையே இல்லையா?//

நான் கூறவந்ததை தவறாக கற்பித்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். கிறித்துவத்தில் என்ற வார்த்தையை நான் பிரயோகிக்கவில்லை. கிறித்துவ குடும்பத்தில் என்றேன். கிறித்துவக் குடும்பங்களில் தெய்வ நம்பிக்கையையின் அதன் மகத்துவத்தையும் பற்றி பள்ளிப்பருவத்திலிருந்தே போதித்து வருவது வழக்கம். தெய்வத்தின்மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் அதற்காக உங்களுக்கு இறைவன் கொடுத்த திறமையை வீணடிக்காதீர்கள். உங்கள் கடமையை செய்துவிட்டு இறைவனின் உதவியைக் கேளுங்கள். என்றுதான் வலியுறுத்தப்படுகிறது. மேலும் ஜோஸ்யம், பில்லி சூனியம், ராகு காலம், நல்ல நேரம் என்பதெல்லாம் மூடநம்பிக்கை என்பதையும் போதிப்பது வழக்கம்.

நான் சாதாரணமாக மதத்தைப் பற்றிய வாதத்தில் எல்லாம் இறங்குவதே இல்லை. இறைநம்பிக்கை நம் எல்லோருடைய வாழ்விலும் பிரதானமானது. அதை ஒரு கிறித்துவ குடும்பம் எப்போதும் மறக்கலாகாது என்பதைத்தான் சிறுவயது முதலே தேவாலயங்களில் வலியுறுத்துவர்.

அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

தெய்வத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அறிவுஜீவிகள் என்றோ நம்பிக்கையுள்ளவர்கள் மூடர்கள் என்றோ பொருள் அல்ல.

மனிதனால் உருவாக்கப்பட்ட அதுவும் அதையே ஒரு தொழிலாக சிலர் நடத்தி வரும் ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பது மூட நம்பிக்கை என்பதுதான் என் வாதம்.

அதுவும் இறை நம்பிக்கையும் ஒன்றாகிவிடாது.

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

தினமும் ஒங்க பதிவை மறக்காம படிக்கிறேன். //

நன்றிங்க.

பின்னூட்டமிடத்தான் முடியலே.//

அதனால பரவாயில்லை:)

உறவுகள் நல்லா இருந்தா ஒட்டலாம். இல்லையினா தூர இருந்தாலே நல்லது. //

கரெக்டா சொன்னீங்க. கெட்டதுக்கு இல்லாத சொந்தம் நல்லதுக்கு மட்டும் எதுக்கு?