09 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 151

அன்றைய தினம் வீட்டிற்குத் திரும்பியதும் நானும் என் மனைவியும் கலந்து பேசி இனி இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை என தீர்மானித்தோம்.

என்னுடைய மாமனார் வீட்டில் நடந்த சம்பவம் என் மனைவியை மிகவும் பாதித்திருந்தது.

‘நீங்க எதுக்குங்க பத்திரச் செலவ குடுக்கறேன்னு ஒத்துக்கிட்டீங்க? உதவி செய்யப்போனதுக்கு இது தேவையா? எங்க அண்ணனாச்சி அவங்க மாமனாராச்சி. அவங்க என்ன செய்யறாங்களோ செஞ்சிக்கட்டும். அவர் அப்படி பேசினப்போ எங்க வீட்லயும் சும்மா இருந்துருக்காங்க பாருங்க. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. போறும்.. நாம உண்டு நம்ம வேலையுண்டு இருப்போம்.’ என்ற என் மனைவியின் முடிவை மோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியாததால் அப்படியே இருப்பதென தீர்மானித்தேன்.

அடுத்த இரு தினங்களில் எதிர்தரப்பிலிருந்தும் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.

நான் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்திருந்த பட்டியலை என் காசாளரிடம் கொடுத்து அவரால் இயன்றவரை அதிலிருந்தவர்களைக் குறித்து ரகசியமாக விசாரிக்க கூறினேன். அவருக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும் என்னுடைய வேண்டுகோளை மறுக்கவியலாமல் சரி என்று அரைமனதுடன் ஒத்துக்கொண்டார்.

விசாரித்தாரோ இல்லையோ  இரண்டு நாட்கள் கழித்து மாலையில் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பும் வேளையில் என் அறைக்கு வந்தார். ‘சார் நா விசாரிச்ச வரைக்கும் இதுல பாதிக்கு மேல அந்த சபைக்காரங்களுக்கு தெரிஞ்சவங்களாருக்காங்க..  ரெண்டு ஜோடிங்கள்ல ஒரு பொண்ணும், ஒரு பையனும் தலைவருக்கு தூரத்து சொந்தக்காரங்களாம் சார். ஆனா அக்கம்பக்கத்துல விசாரிச்சதுதான். எந்த அளவுக்கு உண்மையாருக்கும்னு சொல்லமுடியாது.’ என்றவாறு நான் அவரிடம் கொடுத்திருந்த பட்டியலை திருப்பிக் கொடுத்தார்.

நான், ‘ரொம்ப நன்றி கோமஸ்.. இந்த உங்கக்கிட்டயே இருக்கட்டும். வெளியில தெரிய வேணாம்.’ என்று அவரை அனுப்பினேன்.

அவரோ தயங்கியவாறு நின்றார்.

‘என்ன கோமஸ்.. சொல்லுங்க.’

‘சார் எனக்கென்னவோ இந்த விஷயத்துல இனியும் விசாரிக்கறேன்னு நீங்க இறங்காம இருக்கறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். நா விசாரிக்கப் போன எடத்துல ஒன்னு ரெண்டு பேருக்கு நா இங்கதான் வேல பாக்கேன்னு தெரிஞ்சிருக்கு.. அவங்க சபையாளுங்கக்கிட்ட போயி சொல்லிற சான்ஸ் இருக்கு.. ஏற்கனவே ஒங்க மச்சான் விஷயத்துல போலீஸ்கிட்ட பிரச்சினை.. ரெண்டு மூனு நாளாவே நீங்க நார்மலா இல்லைங்கறது எங்களுக்கு எல்லாருக்குமே நல்லா தெரியுது. இதுல இந்த பிரச்சினை வேற வேணுமா சார்?’

நான் அவருடைய அறிவுரைக்கு நன்றி தெரிவிப்பதுபோல் புன்னகைத்து அவரை அனுப்பி வைத்தேன். அன்று மாலை வீடு திரும்பியதும் அவர் என்னிடம் கூறியதை என்னுடைய மனைவியிடம் தெரிவித்தேன்.

அவரும் என்னுடைய காசாளர் கூறியதை ஆமோதித்தார். ‘நீங்க மறுபடியும் தேவையில்லாத பிரச்சினையில போயி மாட்டிக்க போறீங்க. பேசாம ஒங்க வேலைய பாத்துக்கிட்டு இருங்க. யார் யாருக்கு கல்யாணம் செஞ்சி வச்சா ஒங்களுக்கு என்ன?’

இருந்தும் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த திட்டத்தை என்னிடம் தேவாலய பாதிரியார் தெரிவித்தபோதும் அதில் என்னையும் பங்குபெற செய்தபோது இருந்த மகிழ்ச்சியும் என்னுடைய வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து கணிசமான தொகையை நன்கொடையாக வசூலித்துக் கொடுத்தபோது இருந்த மனநிறைவும்... இது எல்லாமே ஒரு சிலருடைய சூழ்ச்சியால் வீணாகப் போகிறதே என்று நினைத்தபோது என்னையுமறியாமல் ஆத்திரம் பொங்கியெழுந்தது.

அந்த நில சமாச்சாரத்தில் எனக்கெதிராக இருந்த அணியில் பலபணமும் ஆள்பலமும் நிரம்பியிருந்த ஒருவரும் அவருக்குத் துணையாக காவல் அதிகாரி ஒருவரும் இருந்ததால் என்னால் ஒன்றும் செய்யவியலாமல் போய்விட்டது.

ஆனால் இது அப்படியில்லையே. அந்த குழுவிலிருந்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் இருந்தவர்கள். நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பப் பெண்களுக்கு திருமணம் என்பது வரதட்சிணை காரணமாக ஒரு எட்டாக்கனியாக இருந்ததால்தானே பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி ஒரு ஐம்பது பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது என்ற திட்டத்தை தீட்டினார்கள்?

ஆனால் திரட்டப்பட்ட நிதியைக்கொண்டு உண்மையிலேயே ஏழை மற்றும் ஆதரிக்க யாரும் இல்லாத குடும்பத்து பெண்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் தங்களுக்கு தெரிந்த மற்றும்  சொந்தக்காரர் குடும்பத்திலிருந்தவர்களுக்கே திருமணம் செய்துவைப்பது எந்த வகையில் நியாயம் என்று யோசித்தேன்.

ஆயினும் இதில் என்னால் தனியாளாக என்ன செய்துவிடமுடியும் என்றும் தோன்றியது.

என்னுடைய காசாளர் கிளம்பிச் சென்றதும் அன்று மீதமிருந்த அலுவல்களை முடித்துக்கொண்டு என்னுடைய குடியிருப்புக்கு செல்ல எழுந்தேன்.

என்னுடைய தொலைபேசி அடிக்கவே எடுத்தேன். எதிர்முனையில் தேவாலய பாதிரியார்தான்.

‘என்ன ஃபாதர்?’ என்றேன்.

‘ஜோசப் நீங்க ஒடனே புறப்பட்டு வரமுடியுமா? நம்ம திருமண திட்டக்குழு தலைவர் வந்திருக்கார். அவர் ஒங்கள பத்தி என்னென்னமோ சொல்றார். எனக்கு என்னன்னே விளங்க மாட்டேங்குது. அதனால நீங்க கெளம்பி வந்தீங்கன்னா நல்லாருக்கும்.’

இது நிச்சயம் என்னுடைய காசாளர் மூலமாக நான் நடத்திய விசாரனையின் விளைவு என்பது எனக்கு புரிந்தது. ஆக, இன்னொரு பிரச்சினை முளைத்தெழுந்திருக்கிறது என்ற நினைவுடன் வீட்டுக்குச் சென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு கிளம்பிச் சென்றேன்.

எப்போதும் எங்கு செல்கிறேன் என்று என் மனைவியிடம் கூறிவிட்டுச் செல்லும் நான் ஏனோ அன்று அவரிடம் பக்கத்துல போய்ட்டு வருகிறேன் என்றுமட்டும் கூறிவிட்டு சென்றேன்..

நான் தேவாலயத்தை அடைந்து பாதிரியாரின் அறை இருந்த முதல் மாடிக்கு படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோதே அவருடைய அறையில் காரசாரமான விவாதம் நடப்பது கேட்டது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்பட்டு நிதானத்தை இழக்கக் கூடாது என்று முடிவெடுத்த நான் அவருடைய அறைவாசலில் தயக்கத்துடன் சிறிது நேரம் நின்றேன்.

என்னைக் கண்டதும் அறையிலிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட அறையில் ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது. சபை தலைவர் உட்பட குழு அங்கத்தினர்களுள் பெரும்பாலோனோர் வந்திருந்தனர்.

நான் அறைக்குள் நுழைந்து பாதிரியார் காண்பித்த இருக்கையில் அமர்ந்ததும் தலைவர் என்னைப் பார்த்து, ‘நீங்க செஞ்சிருக்கற காரியம் கொஞ்சம் கூட நல்லால்லை சார்.’ என்றார் கோபத்துடன்.

பாதிரியார் உடனே குறுக்கிட்டு, ‘சார் நா இங்க இருக்கறப்ப நீங்க பேசறது சரியில்லை. நான் ஏற்கனவே உங்க எல்லார் கிட்டயும் சொன்னா மாதிரி ஜோசப்கிட்ட நாந்தான் அந்த லிஸ்ட்ட குடுத்தேன். அவர் அவங்க சேர்மன் ஆஃபீஸ்லருந்து இவங்களுக்கெல்லாம் வாழ்த்து அட்டை அனுப்பறதுக்காகனு சொல்லித்தான் பட்டியலைக் கேட்டார். நானும் கொடுத்தேன். ஒருவேளை அவங்க எல்லாருமே அந்தந்த விலாசத்துல இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கத்தான் அவரோட ஆஃபீஸ் ஸ்டாஃப் கிட்ட கொடுத்து விசாரிக்க சொல்லியிருப்பார்.’ என்றார் தலவைரிடம். பிறகு, ‘என்ன ஜோசப் நான் சொல்றது சரிதானே.. நீங்க அதுக்காகத்தான அனுப்பனீங்க? இல்ல வேற ஏதும் ஹிட்டன் அஜெண்டா இருக்கா? அப்படி ஏதும் இருந்தா நீங்க தாராளமா இங்க சொல்லலாம்.’ என்றார் என்னை பார்த்து.

என்னை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றவே அவர் இப்படி கூறியிருப்பார் என்று நான் நினைத்தேன். அவராகவே ஏற்படுத்திக்கொடுத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், ‘ஃபாதர் நீங்க சொன்னா மாதிரி இதற்கு வேறொரு காரணமும் இருக்கு.’ என்று நான் கேள்விப்பட்ட விவரத்தை சுருக்கமாக, மிகைப்படுத்தாமல் கூறினேன்.

நான் பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவரும், சில அங்கத்தினர்களும் குறுக்கிட முடிவு செய்தாலும் பாதிரியார் அதை உறுதியுடன் தடுத்துவிட்டார்.

நான் கூறி முடித்ததும் அறையிலிருந்தவர்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் என்னை ஏதோ விரோதியைப் பார்ப்பதுபோல பார்த்தனர். அந்த ஒரு சிலர் நான் குறிப்பிட்ட சமூகத்தைச் சாராதவர்கள் என்று கூட்டத்தின் முடிவில் அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்தபோதுதான் தெரிந்தது!

நான் பேசி முடித்ததும் பாதிரியார் சில நிமிடங்கள் ஆலோசனையில் இருந்ததை உணரமுடிந்தது. பிறகு அவர் அறையிலிருந்தவர்களைப் பார்த்து'மிஸ்டர் ஜோசப் ஒரு தனி விசாரனையில் இறங்கியது சரியா தவறான்னு நாம டிஸ்கஸ் செய்யறத விட்டுட்டு அவருடைய விசாரனையில் தெரிய வந்திருக்கற விஷயம் சரியா தவறாங்கறதப் பத்தி டிஸ்கஸ் செஞ்சா நல்லாருக்கும்னு நெனெக்கேன்..’ என்றார்.

தலைவர் உடனே குறுக்கிட்டு, ‘ஃபாதர் நாங்க ஒங்கக் கிட்ட குடுத்துருக்கறது ஒரு முதல்கட்ட லிஸ்ட்தான்.. இன்னும் முப்பது முப்பத்தஞ்சு அப்ளிக்கேஷன் எங்கக்கிட்ட வந்திருக்கு. அவங்களை எல்லாம் கூப்ட்டு பேசிட்டுத்தான் ஃபைனல் லிஸ்ட் தயாரிப்போம். இவர் அதுக்குள்ள முந்திக்கிட்டு இந்த விசாரனை நடத்தியிருக்கணுமான்னு கேக்கோம்..’ என்றார் கோபம் தணியாமல்.

பாதிரியார் அவரை அமைதியுடன் பார்த்தார். ‘நீங்க இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட அவர் ஏதும் தப்பு செஞ்சிரலன்னுதான் நெனக்கேன். அவர் இந்த விஷயம் தெரிஞ்சவுடனே என்னைய கூப்ட்டு சொல்லியிருக்கலாம். ஆனா அவர் அப்படி செய்யலேங்கறதெ அவருடைய நோக்கம் தவறானதில்லங்கறத நிரூபிச்சிருக்கு. பொதுமக்கள்கிட்டருந்து, அதுவும் அவருடைய வங்கியிலருக்கற பிறமதங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்ங்க கிட்டருந்து நாப்பது சதவிகிதத்துக்கும் மேல நிதி திரட்டி தந்திருக்கறப்ப அவர் இதுல முன் ஜாக்கிரதையா இருக்கறதுல எந்த தப்பும் இல்லை.. அதனால இந்த திருமண பெண்களை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன். அதுல ஜோசப்பும் அங்கத்தினரா இருப்பார். இந்த தீர்மானத்த வர்ற ஞாயித்துக்கிழமை இரண்டாவது பூசை முடிஞ்சப்புறம் அங்கத்தினர்களுடைய கூட்டத்துல ஓட்டுக்கு விடுவோம். பிறகு நடக்கவேண்டியதை பார்ப்போம்.’ என்று கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

பாதிரியாரின் முடிவில் அறையிலிருந்த பலருக்கும் சம்மதம் இல்லையெனினும் அவரை எதிர்த்து பேச துணிவில்லாமல் உறுப்பினர்கள் எல்லோரும் கலைந்து செல்ல, ‘ஜோசப் ஒரு நிமிஷம் இருங்க. உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.’ என்றார் பாதிரியார்.

அறையிலிருந்து வெளியேறிய ஒருசிலர் தவிர அனைவருமே என்னை முறைத்துவிட்டு செல்ல நான் அதை பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தேன்.

அறையிலிருந்த அனைவரும் வெளியேறியபின் நான், ‘என்னெ மன்னிச்சிருங்க ஃபாதர். உங்களுக்கு என்னால ஒரு தேவையில்லாத பிரச்சினை..’ என்றேன்.

பாதிரியாரோ அவருடைய இருக்கையிலிருந்து எழுந்து என் கரங்களை பற்றிக்கொண்டு, ‘ரொம்ப தாங்ஸ் ஜோசப். இந்த விஷயம் மட்டும் எனக்கு தெரியாம விழா நடந்து முடிஞ்சி அப்புறமா யார் மூலமாவது பிஷப் ஹவுஸ்வரைக்கும் போயிருந்தா இத்தன வருசமா நா கட்டிக்காத்து வந்த என்னோட பேரே கெட்டுப்போயிருக்குமே.. அதுக்காக ஒங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஜோசப். இனி இந்த விஷயத்துல நானே நேரடியா தலையிட்டு இவங்க முன்மொழியற ஒவ்வொரு குடும்பத்தையும் இண்டர்வ்யூ செய்யப் போறேன். இந்த மாதிரி விஷயம் இனியும் நடக்காம நா பாத்துக்கறேன்.’ என்றார் நன்றியுடன்..

நான் மாடியிலிருந்து இறங்கி சாலைக்கு வந்ததும் என்னுடைய வருகைக்காக காத்திருந்த ஒருசிலர் என்னைக் கண்டதும், ‘சார் சரியான நேரத்துல இந்த விஷயத்த வெளிய கொண்டுவந்துட்டீங்க.. ரொம்ப நன்றி.. நாங்களும் கேள்விப்பட்டோம். ஆனா இத நாங்க பிரச்சினையாக்கியிருந்தா எங்கள கமிட்டியிலருந்தே வெரட்டி இருப்பானுங்க.. நீங்க இந்த ஊர் ஆள் இல்லையில்லையா அதான் தைரியமா போட்டு ஒடச்சிட்டீங்க.’ என்றனர் மகிழ்ச்சியுடன்..

எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் ஒரு தர்மசங்கடமான புன்னகையுடன் சாலையில் இறங்கி என்னுடைய வாகனத்தை நெருங்கினேன்.

என்னுடைய வாகனத்தின் முன்பக்கத்திலிருந்த மெட்டல் பாக்ஸ் உடைத்து திறக்கப்பட்டு அதிலிருந்த என்னுடைய வாகனத்தின் R.C. Book, Insurance, Driving license இத்யாதிகளை வைத்திருந்த பை காணாமல் போயிருந்தது.

நான் அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். சாலையின் இரு மருங்கிலும் இருந்த கடைகள் எல்லாம் திறந்திருக்க சாலையிலும் போக்குவரத்து இருந்தது. நான் வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து சுமார் முப்பதடி தொலைவில் எப்போதும் நிரம்பிவழியும் பஸ் நிறுத்தம் ஒன்றும் இருந்தது.

அப்படியிருக்க யார் இவ்வளவு துணிச்சலுடன் பூட்டியிருந்த பெட்டியைத் திறந்து..

என்னுடைய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து சாலையின் எதிர்புறத்தில் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்த நைட் க்ளப் இரண்டு இருந்தன. அதில் கல்லா பெட்டியிலிருந்த ஒருவரை எனக்கு அறிமுகமிருந்ததால் அவரை அணுகி விபரத்தைக் கூறி அவருக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன்..

அவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி ரகசிய குரலில், ‘சார்.. நீங்க வீட்டுக்கு போங்க சார். நான் நம்ம கட பையன விட்டு வண்டிய கொண்டு விடறேன். அப்புறம் என்ன நடந்துதுன்னு நானே ராத்திரி ஒங்க வீட்டுக்கு வந்து சொல்றேன். இங்க வேணாம்.’ என்றார்.

நான் ‘வண்டிய எடுத்துக்கிட்டு போகமுடியாதபடி’ என்னவாயிருக்கும் என்று விளங்காமல் மீண்டும் என்னுடைய வாகனத்தை நெருங்கி பார்த்தேன். வாகனத்தின் இரு சக்கரங்களும் காற்று இல்லாமல் சுருங்கிப்போய் பரிதாபமாகக் காட்சியளித்தன!

தொடரும்..

16 comments:

துளசி கோபால் said...

ரொம்ப அல்பமா இருக்காங்களே. ஒருவேளை இது உங்களுக்கு விடும் மிரட்டல்???


இங்கே உங்க பதிவுக்கு யார் முதல் பின்னூட்டமுன்னு ஒரு போட்டி திரைமறைவில் நடக்குறது உங்களுக்குத் தெரியுமா?

நான் போட்டியில் இல்லை :-)))))

D The Dreamer said...

//அந்த நில சமாச்சாரத்தில் எனக்கெதிராக இருந்த அணியில் பலபணமும் ஆள்பலமும் நிரம்பியிருந்த ஒருவரும் அவருக்குத் துணையாக காவல் அதிகாரி ஒருவரும் இருந்ததால் என்னால் ஒன்றும் செய்யவியலாமல் போய்விட்டது//

அப்போ அந்த பிரச்சனை அவ்வளவு தானா சார்? எனக்கென்னவோ முடியலைன்னு தோணுது...

tbr.joseph said...

வாங்க துளசி,

ஒருவேளை இது உங்களுக்கு விடும் மிரட்டல்???//

இருக்கும். ஆனா யாருன்னுதான் தெரியலை..

இங்கே உங்க பதிவுக்கு யார் முதல் பின்னூட்டமுன்னு ஒரு போட்டி திரைமறைவில் நடக்குறது உங்களுக்குத் தெரியுமா?//

அட.. அப்படியா? பின்னூட்டம் போடறதே அஞ்சாறு பேருதான்.. அதுல போட்டியா? தேவைதான்:)

tbr.joseph said...

வாங்க டி!

என்னால் ஒன்றும் செய்யவியலாமல் போய்விட்டது//

ஓஹோ.. அதுக்கு அப்படியொரு அர்த்தம் வந்திருச்சோ.. பெரிதாக ஒன்றும் செய்யவியலாமல் போய்விட்டது என்று வேண்டுமானால் எடுத்த்க்கொள்ளலாம்.

இதனுடைய க்ளைமாக்ஸ் ஒன்னு இருக்கு.. அதப்படிச்சதுக்கப்புறம் நான் செஞ்சது பெரிசா இல்லையான்னு சொல்லுங்க..

சுதர்சன் said...

படு த்ரில்லிங்காக போய்க்கொண்டிருக்கிறது. தவறாமல் தினமும் படித்தாலும் பின்னூட்டமிடாத சோம்பேறித்தனத்தை மன்னித்து விட்டுவிடுங்கள். :)

அரவிந்தன் said...

கத்தி போயி வாளு வந்தது டும் டும் டும்

sivagnanamji(#16342789) said...

உங்களை எப்படியும் தன்னிடம் வரச்செய்வதற்கான காக்கியின் கைங்கரியமா?அல்லது சபையினரின்
சதியா?
இதெல்லாம் சகஜமுங்கோ....
தப்பு செய்ய தயங்க மாட்டான்;வெட்கப்பட மாட்டான்.ஆனால் பிடிபட்டால் மட்டுமே ஆவெசப்படுவான்;வெட்கப்படுவான்.
லஞ்சம் வாங்க வெட்கப்படாதவன்
பிடிபட்டால் மட்டும் முகத்தைக் காட்ட
வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டு
கோர்ட்டுக்கு வருவதைப் பார்ய்த்ததில்லையா?

tbr.joseph said...

வாங்க சுதர்சன்,

தவறாமல் தினமும் படித்தாலும் பின்னூட்டமிடாத சோம்பேறித்தனத்தை மன்னித்து விட்டுவிடுங்கள்//

மன்னித்து விட்டுவிட்டேன்..:)

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

கத்தி போயி வாளு வந்தது டும் டும் டும் //

எல்லா சிச்சுவேஷனுக்கும் ஏத்தா மாதிரி ஒவ்வொரு பழமொழி இருக்கில்லே..

அந்த மாதிரிதான் நானும் என் மனைவியும் அன்று நினைத்தோம்.

tbr.joseph said...

வாங்க ஜி!

உங்களை எப்படியும் தன்னிடம் வரச்செய்வதற்கான காக்கியின் கைங்கரியமா?அல்லது சபையினரின்
சதியா?//

அந்த குழப்பத்துலதான் நானும் என் மனைவியும் கலங்கி போயிருந்தோம்.. அதாவது அன்று இரவு நைட் க்ளப் முதலாளி வந்து என்ன நடந்ததென்று விவரிக்கும்வரை..

அதற்குப்பிறகுதான் அந்த க்ளைமாக்ஸ்..

G.Ragavan said...

இந்தப் பிரச்சனை இப்ப முடியாது போல...பேசாம வாய் மூடி அடுத்து நடந்தது என்னன்னு கேக்க வேண்டியதுதான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இந்தப் பிரச்சனை இப்ப முடியாது போல...//

முடிஞ்சா மாதிரிதான்.. இன்னும் ஒரேயொரு க்ளைமாக்ஸ்..

sivagnanamji(#16342789) said...

ஆனா அந்த க்ளைமேக்ஸெ தெரிஞ்சுக்க இன்னும் 65 மணி நேரம் ஆகும்
[திங்கள் மதியம் வரையில் காத்திருக்க
வேண்டும்]

tbr.joseph said...

திங்கள் மதியம் வரையில் .../

காலங்கார்த்தாலெயே போட்டுட்டா?

அன்னைக்கி எனக்கு ஒரு கான்ஃப்ரன்ஸ் இருக்கறதுனால ஒன்பதரைக்கெல்லாம் போட்டுட்டு போறேன்:)

இலவசக்கொத்தனார் said...

சீக்கிரம் இந்த் 2 பிரச்சனைகளையும் புடிங்க. அடுத்து போலாம்.

tbr.joseph said...

வாங்க இ.கொ.

முடிஞ்சிருச்சின்னு போடறதுக்கு எத்தன நாழியாவும்.. ஆனா நிஜ வாழ்க்கையில பிரச்சினைகள் அவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருதா என்ன?

நாம விலகிப் போலாம்னு நினைச்சாலும் சில பிரச்சினைகள் நம்மை விடறதில்லையே.. அதுபோலத்தான் இந்த இரு பிரச்சினைகளும்..

ஆனா முழுசையும் சொல்ல நினைச்சா நல்லாருக்குதில்ல.. அதனால இன்னும் ரெண்டு பதிவுகள்ல முடிச்சிடறேன்..