08 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 150

அன்று நான் இருந்த மனநிலையில் மேற்கொண்டு எங்கும் செல்ல மனமில்லாமல் வீடுதிரும்பும் எண்ணத்துடன் என்னுடைய வாகனத்தை என் வீடு நோக்கி செலுத்த ஆரம்பித்தேன்.

ஆனால் வழியில் அன்று காலை என்னுடைய மனைவியை என்னுடைய மாமனார் வீட்டில் விட்டிருந்தது நினைவுக்கு வரவே தூத்துக்குடி மையப் பேருந்து (இப்போது அதை பழைய பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்கிறார்கள்) நிறுத்தத்திற்கருகில் இருந்த கடைகள் ஒன்றிலிருந்து என்னுடைய வீட்டுக்கு தொலைபேசி செய்தேன்.

நான் குடியிருந்த வீடு விசாலமானதென்பதால் என் மனைவி தொலைப்பேசி இருந்த அறைக்குள் இல்லையென்றால் பதிலளிக்க எப்படியும் இரண்டு நிமிடங்களுக்கு மேலாகும். ஆனால் அதற்குப் பிறகும் மணியடித்துக்கொண்டே இருக்கவே அவர் வீட்டில் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு என்னுடைய மாமனார் வீட்டிற்கு அழைத்தேன். நல்லவேளையாக அவரே எடுத்தார்.

நான் நீதிமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி குறிப்பிடாமல் உடனே புறப்பட்டு வீடு வந்து சேருமாறு கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். பிறகு புறப்பட்டு வீடு போய் சேர்ந்தேன்.

நான் சென்றடந்த பத்தாவது நிமிடத்தில் என் மனைவியும் என் இரு மகள்களுடன் வந்து சேர்ந்தார்.

வந்ததும் வராததுமாக, ‘நீங்க நேரா அங்க வந்திருக்க வேண்டியதுதானே.. ஒன்னும் சொல்லாம வீட்டுக்கு வந்து சேர்னு நீங்க ஃபோன் பண்ணாலும் பண்ணீங்க அங்க அம்மா என்னாச்சிடி ஏதும் பிரச்சினையா.. எதுக்கு மாப்பிள்ளை இங்க வரலேன்னு குடைஞ்செடுத்துட்டாங்க..’ என்று படபடத்தார்.

நான், ‘இரு.. குளித்துவிட்டு வந்து கூறுகிறேன்.’ என்று கூறிவிட்டு அடுத்த கால் மணியில் குளித்து முடித்துவந்து அன்று காலையிலிருந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினேன்.

‘என்னங்க.. ஒன்னு போனா ஒன்னு வருது. நம்ம நேரமும் சரியில்லை போலருக்கு. அந்த எஸ்.ஐ எதுக்கு ஒங்கள போயி மிரட்டுறான்? நீங்க என்ன செஞ்சீங்களாம்?’

‘அவருக்கும் அந்த பெரியவருக்கும் ஒங்க அண்ணன் நல்லவரா தெரியறாரு. நாந்தான் என்னமோ குறுக்கால நிக்கறா மாதிரி அவங்களுக்கு தோனுதுன்னு நினைக்கிறேன்.’

‘பேசாம நமக்கென்னன்னு இருந்துருவமே. அவங்க எழுதிக்குடுத்தா குடுத்துட்டு போட்டும்..’

என் மனைவி கூறியபடி எப்படியோ போகட்டும் இருந்தாலென்ன என்றுகூட எனக்கு தோன்றியது. அந்த எஸ்.ஐ கெட்ட வார்த்தை கூறி காறி உமிழ்ந்தது என்னைக் குறித்துதான் என்று எனக்கு புரிந்தது.

நான் இத்தனைக்கும் பிறகு அவருடைய மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்க முனைந்தால் அவர் மேலும் கொதிப்படைய வாய்ப்பிருக்கிறது. அவர் கோபவெறியில் எனக்கோ அல்லது என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கோ ஏதாவது செய்துவிடுவாரோ என்றும் நினைத்தேன்.

மேலும் என் மூத்த மகள் படித்த பள்ளிக்கு வெகு அருகாமையில்தான் அந்த திரையரங்கும் இருந்தது. அவர்களுக்கும் என்னுடைய மகளை அடையாளம் கண்டுக்கொள்ள அதிக சிரமம் இருக்காது. என்னுடைய மனைவியையும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஒருபுறம் என் மனைவி, மகளுடைய பாதுகாப்பு.. மறுபுறம் நான் பார்த்து வாங்கிய நிலம் அநியாயமாய் ஒரு அக்கிரமக்காரனிடம் விட்டுக்கொடுப்பதா என்ற ஆதங்கம்.

ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் அன்று இரவு முழுவதும் குழம்பிப் போனேன்.

அந்த எஸ்.ஐ என்னிடம் மிரட்டும் தொனியில் பேசியதை என் மனைவியிடம் கூறாமல் இருந்திருக்கலாமே என்று நான் நினைக்கும் அளவுக்கு அவர் அன்று படுக்கச் செல்லும் வரை புலம்பி தீர்த்துவிட்டார். அவர் அன்று இருந்த மனநிலையைப் பார்த்தால் இனிமேல் அவர் தனியாக வெளியே செல்லக்கூட தயங்குவார் என்றே தோன்றியது. அந்த அளவுக்கு கலங்கிப்போயிருந்தார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சில சமயங்களில் பணமும், அதிகாரமும் படைத்தவர்களுடைய கைப்பாவையாக ஆகிவிடுவது துரதிர்ஷ்டம்தான். இது நம் நாட்டின் தலையெழுத்து என்று நினைத்து அடங்கிப்போவதைவிட என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு வழியில்லை என்பதுதான் அதைவிட துரதிர்ஷ்டம்.

அநீதியை எதிர்த்து போராடவேண்டும் என்று எளிதாக கூறிவிடலாம். ஆனால் அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த துணியும்போது நாம் எதிர்கொள்ளும் அணியின் மிருகபலத்தை உணரும்போதுதான் புரிகிறது அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது.

எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் அன்று இரவை முந்தைய இரவைப் போலவே உறக்கமின்றி கழித்ததுதான் மிச்சம். முந்தைய தினமாவது நான் மட்டும்தான் கலங்கிப்போயிருந்தேன். அன்றோ என்னுடன் சேர்ந்து என்னுடைய மனைவியும் உறங்க முடியாமல்..

அடுத்த நாள் காலையில் கண்விழித்தபோது உறக்கமின்மையால் இருவருமே களைத்துப் போயிருந்தோம். அன்றும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இன்றுடன் இதற்கு ஒரு முடிவு காணவேண்டும் என்று நினைத்தேன்.

என் மனைவியிடம், ‘நான் போய் நமக்கு இந்த நிலத்த வித்தவர பார்த்து கூட்டிக்கிட்டு உங்கப்பா வீட்டுக்கு போரேன். அவர்தானே இந்த சொத்துல வில்லங்கம் ஏதும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தா நானே சொந்த செலவுல தீர்த்துவைக்கறேன்னு பத்திரத்துல எழுதி கையெழுத்து போட்டு குடுத்திருக்கார்? இதுக்கு அவரே ஒங்கப்பா கிட்ட வாக்கு குடுத்தாத்தான் நாம இதுலருந்து விடுபடமுடியும்.’ என்றேன். ‘நான் பாப்பாவ ஸ்கூல்ல விட்டுட்டு போய்ட்டு வரேன். இப்ப போனாத்தான் அவர புடிக்க முடியும்.’

எனக்கு நிலம் விற்றவர் நிலத்தரகர் தொழிலையும் செய்து வந்ததால் அவரை காலை நேரத்தில்தான் வீட்டில் பார்க்க முடியும். நல்லவேளையாய் நான் அன்று சென்று சேர்ந்த சமயத்தில் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

நான் அவரிடம் என்ன ஏது என்று விளக்காமல், ‘நீங்க ஒடனே பொறப்பட்டு எங்கூட எங்க மாமனார் வீடுவரைக்கும் வாங்க’ என்று அவர் மறுப்பேதும் கூறுவதற்கு முன் அவரை நிர்பந்தித்து என்னுடன் அழைத்துக்கொண்டு சென்றேன்.

செல்லும் வழியில் முந்தைய தினம் முழுவதும் நடந்தவற்றை அவரிடம் கூறிவிட்டு, ‘இங்க பாருங்க. நீங்க நிலத்த விக்கும்போது பத்திரத்துல என்ன எழுதிகுடுத்தீங்க? இந்த சொத்துல ஏதாச்சும் வில்லங்கம் இருந்தா நானே என் பொறுப்புல முடிச்சி குடுக்கறேன்னுதான? இந்த வில்லங்கத்துக்கும் நீங்கதான் பதில் சொல்லணும்.. இத நா வாங்கிக் கொடுத்துட்டு போன ஒரு மாசமா படாதபாடு படறேன். இதனால என் வீட்டு வேலையும் முடங்கி போய் கிடக்கு. அத்தோட எனக்கும் என் மாமனார் வீட்டுக்கும் பிரச்சினையாயிருச்சி..’ என்றேன்..

அவரோ ஒன்றும் பதில் பேசாமல் இருந்தார். நான் நேரே என்னுடைய மாமனார் வீட்டை அடைந்ததும் அவரையும் கட்டாயப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.

அங்கு என்னுடைய மாமனாருடன் சேர்ந்து என் மைத்துனருடைய மாமனார், அவருடைய மனைவி மற்றும் என் மைத்துனருடைய மனைவி எல்லோரும் இருந்தனர்.

என்னைக் கண்டதும் ஹாலில் அமர்ந்திருந்த என்னுடைய மைத்துனருடைய மனைவி கோபத்துடன் எழுந்து உள்ளே சென்றுவிட, ‘பாத்தீங்களாய்யா..’ என்பதுபோல் என்னுடன் வந்தவரைப் பார்த்தேன்.

அவரை முதலில் அடையாளம் கண்டுகொள்ளாத என்னுடைய மைத்துனருடைய மாமனார் சட்டென்று எழுந்து அவருடைய சட்டையைப் பிடித்து யாரும் எதிர்பாராத விதமாக அடிக்கச் செல்ல நானும் என்னுடைய மாமனாரும் மிகவும் சிரமப்பட்டு அவரை விலக்கிவிட்டோம்.

என்னுடன் வந்தவர் என்னப் பார்த்தார். ‘நல்லாருக்கு சார் நீங்க செஞ்சது. என்ன ஏதுன்னு சொல்லாம நீங்க வாங்கன்னு சொன்னப்பவே நீங்க ஏதோ வில்லங்கம் செய்யப்போறீங்கன்னு நினைச்சேன். ஆனாலும் நீங்க படிச்ச ஆளாச்சேன்னுதான் நானும் மறுத்துப் பேசாம ஒங்களோட வண்டியில வந்தேன். வர்ற வழியில நீங்க சொன்னதுக்கும் பதில் பேசாம இருந்தேன். இப்ப வந்ததுக்கப்புறம்தான் வெளங்குது நீங்க மனசுல என்ன வச்சிருந்திருக்கீங்கன்னு.. ஏன் சார்.. ஒங்கள மாதிரி ஆளுங்களுக்கு இது நல்லாவா இருக்கு?’ என்றார் கோபத்துடன்.

எனக்கு அவமானமாக போய்விட்டது. நானும் கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்று நினைத்து அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தேன்.

பிறகு அவரை அழைத்து வந்ததற்கான காரணத்தை என்னுடைய மாமனாரிடம் கூறினேன். அவருடைய சம்பந்தி இடையில் குறுக்கிட்டு, ‘இங்க பாருங்க சம்மந்தி.. உங்க மாப்பிள்ளை வேணுக்குன்னே இவர செட்டப் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருக்கார். எதுக்குன்னு தெரியுமில்லே.. என் மேல தப்பு ஒன்னும் இல்லே.. இனி நீங்களாச்சி இவராச்சின்னு தப்பிச்சிக்கிறதுக்குத்தான்.. அதுக்கு நானோ எம்பொண்ணோ ஒத்துக்கறதா இல்ல.. இதுக்கு ஒரு தீர்வு ஒங்க மாப்பிள்ளதான்.. ஒன்னு இந்த நிலத்த அவரையே எடுத்துக்கிட்டு பணத்த குடுக்க சொல்லுங்க.. இல்லையா அதுக்கு பதிலா அவர் வாங்கியிருக்கற நிலத்த எங்களுக்கு குடுத்துர சொல்லுங்க..’ என்றார் ஆவேசத்துடன்.

நான் என்னுடன் வந்தவரை, ‘இப்ப புரியாதேவே.’ என்பதுபோல் பார்த்தேன். அவரும் நிலமையைப் புரிந்துக்கொண்டு, ‘சார் நீங்க நின¨க்கறாக்க ஒன்னும் இல்ல.. அந்தம்மா நிலத்த வித்து அம்பது வருசம் போல ஆயிருச்சி.. அவுக எந்த கோர்ட்ல போனாலும் செல்லாதுய்யா.. அந்தம்மா நிலத்த வித்ததுக்கப்புறம் வாங்குனவுகள்ல எங்கய்யா ஏழாவதோ எட்டாவதோ ஆளு.. எங்கய்யா நிலத்த வாங்கியே பதினேழு வருசம் போல ஆகுது.. எங்களுக்கு முன்னால வித்தவுக ஏதாவது வில்லங்கத்தோட வித்திருந்தா நா பொறுப்பேத்துக்கிட்டு தீர்த்து வச்சிருவேன்.. இது வில்லங்கமே இல்லைய்யா.. அந்தம்மா பணத்திமிர்ல வேணுக்குன்னா வில்லங்கம் பண்ணுது.. நீங்க பேசாம அந்த தட்டிய பிறிச்சி போட்டு காரியத்த பார்ப்பீங்களா? அந்த எஸ்.ஐக்கு போயி பயந்துக்கிட்டு.. நீங்க எதுக்குய்யா ஒங்க மருமகன வாங்கிக்க சொல்றீய..? பேசாம எங்கிட்டயே திருப்பி குடுத்துருங்க.. நா வித்த விலைக்கே எடுத்துக்கறேன்.. நானாச்சி அந்த தியேட்டர்காரனாச்சி, பாத்துக்கறோம்.. நாங்க வாங்கி இத்தன வருசமாச்சி.. கட்டாந்தரையா கிடக்கு.. ஒரு பயலும் வரலே.. இப்ப வந்து என்னத்த பண்றதுக்குன்னு வந்து மல்லுக்கு நிக்கறாக..? நாங்க பாத்துக்கறம்யா.. நாளைக்கே வேணும்னாலும் பத்திர பதிஞ்சிக்கலாம்.. ஒங்க மருமவன வரச்சொல்லுங்க.. சும்மானா சார குத்தஞ்சொல்லாதீங்க..’ என்று படபடத்தார்.

என்னுடைய மாமனார், ‘நீங்க என்ன சொல்றீங்க?’ என்பதுபோல் என்னைப் பார்த்தார்.

நான், ‘இவர் சொல்றா மாதிரியே செஞ்சிருவோம்.. அவர்தான் நானே பாத்துக்கறேன்னு சொல்றார்லே.. இவங்களுக்கும் சொத்து வேணான்னுதான படுது?’ என்றேன்.

அவர் அவருடைய சம்மந்தியைப் பார்த்தார். ‘இதுவரைக்கும் ஆன பத்திரச் செலவு, புரோக்கர் செலவை யார் தர்றது?’ என்றார் அவர் கோபத்துடன்..

‘அத நானே குடுத்திடறேன்..’ என்றேன் நான் அமைதியாக..

என்னுடைய பதில் அங்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்க.. ‘யோசிச்சி சொல்லுங்க சார்.. நான் கிளம்பறேன்..’ என்று என்னுடன் வந்தவர் புறப்பட.. ‘இருங்க நானே கொண்டு பஸ் ஸ்டாண்டுல விடறேன்.’ என்று நானும் அவருடனேயே புறப்பட்டேன்..

எனக்கு அங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தது..

திரும்பிச் செல்லும் வழியில், ‘சார்.. நீங்க ஒன்னுத்துக்கும் கவலைப்படாதீங்க.. ஒங்க மச்சான் நிச்சயமா அந்த நிலத்த விக்க மாட்டார்.. இவரு சும்மா கிடந்து குதிக்கார்.. இனி இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க சார்.. நானே பாத்துக்கறேன்.. அவுகளா வந்து விக்கறேன்னு சொன்னா நானே வாங்கிக்கறேன்.. நாங்க இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்த ஆளுங்க.. எத்தனெ நிலத்த வாங்கி விக்க செஞ்சிருக்கோம்..? இந்த எஸ்.ஐக் கெல்லாம் பயந்தா ஆயிருமா சார்? நீங்க படிச்சவங்க.. அதான் கொஞ்சம் மரியாதையா பேசிக்கிட்டிருக்கீங்க.. இன்னொன்னு சார்.. அந்த தியேட்டர்காரர் வேற ஒங்க சாதி ஆளா போய்ட்டாரு..அதனால ஒங்க மாமனார் வீட்லயும் ஒன்னும் செய்ய முடியல.. ஆனா நாங்க அப்படியில்ல சார்.. எங்க சாதி ஆளுங்க மேல அந்த ஆளோ இல்ல தோனிக்காரப் பயலுவளோ கைய வச்சானுவோ.. அவ்வளவுதான் எங்க சாதி ஆளுங்க சும்மா இருந்துக்க் மாட்டானுவோன்னு அவருக்கு தெரியாதா என்ன?’ என்றார்..

அவர் விட்ட சவாலா, சவடாலா என்று அப்போது எனக்குத் தெரியவில்லை..ஆனால் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த இரு சமூகத்தினரிடையேயும் கலவரம் மூண்டு தூத்துக்குடியே தீப்பிடித்து எரிந்தபோதுதான் புரிந்தது அவர்களுக்கிடையிலிருந்த அந்த குரோதம், வெறுப்பு எல்லாம் எத்தனை ஆழமாக வேரூன்றி போயிருந்தது என்று..

தொடரும்..

17 comments:

அருண்மொழி said...

வெற்றிகரமான 150ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

என்ன சார் சொந்த ஊர் நினைப்பில மும்பைய மறந்துவிட்டீர்களே :)

D The Dreamer said...

//இது நம் நாட்டின் தலையெழுத்து என்று நினைத்து அடங்கிப்போவதைவிட என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு வழியில்லை என்பதுதான் அதைவிட துரதிர்ஷ்டம்//

சரியா சொல்லியிருக்கீங்க சார். எங்களுக்கு நேர்ந்த பல சம்பவங்கள் எனக்கு ஞாபகம் வருது, இதே சிந்தனையும் என்னை வாட்டியிருக்கிறது.
தொடர்ந்து படித்து வருகிறேன் சார்.
அன்புடன்
D the D

sivagnanamji(#16342789) said...

"வேதனைதான் மீதி என்றால் தாங்காது
பூமி.."
நிலம் விற்றவரின் கணிப்பு சரிதான் என்று நினைக்கிறேன்

sivagnanamji(#16342789) said...

என்ன பின்னூட்ட நாயகியக் கூட இன்னும் காணோம். இதெல்லாம்
பார்த்து எல்லோரும் நொந்து நூடுல்ஸ்
ஆயிட்டாங்களா?

துளசி கோபால் said...

//அநீதியை எதிர்த்து போராடவேண்டும் என்று எளிதாக கூறிவிடலாம். ஆனால் அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த துணியும்போது நாம் எதிர்கொள்ளும் அணியின் மிருகபலத்தை உணரும்போதுதான் புரிகிறது அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது.//

இதுதான் சத்தியமான உண்மை. ஊருக்குச் சொல்றவங்க, அவுங்க காரியமுன்னு வரும்போது பம்மறதும்
இதுக்குத்தான்.

பேசாம, நிலத்தை அவருக்கெ திருப்பிடுங்க.

ஆனால் அப்படி நடக்கறதுக்கும் உங்க மச்சினரோட மாமனார் விட்டுருக்கமாட்டார்தானே?

sivagnanamji(#16342789) said...

வெற்றிகரமான 150 வது எபிசோட்..
'கியோரா கொடாவ்' [அர்த்தம் ட்டீச்சரைக் கேளுங்க. அல்லது நியூஸி 18 அய் பாருங்க]

D The Dreamer said...

சார் சொல்ல மறந்துட்டேன்.
sesqui-centuryக்கு வாழ்த்துக்கள்

tbr.joseph said...

என்ன சார் சொந்த ஊர் நினைப்பில மும்பைய மறந்துவிட்டீர்களே //

ஆமாம் அருண்மொழி.. இந்த வாரத்திலிருந்து மீண்டும் தொடர்வேன்..

tbr.joseph said...

வாங்க டி!

இதே சிந்தனையும் என்னை வாட்டியிருக்கிறது.//

உங்களை மட்டுமா.. எத்தனையோ பேரை.. என்ன செய்வது?

tbr.joseph said...

வாங்க ஜி!

நிலம் விற்றவரின் கணிப்பு சரிதான் என்று நினைக்கிறேன் //

ஆமாம்.. பணம் படைத்தவன்கூட ஜாதி என்று வந்துவிட்டால் தயங்கத்தான் செய்வான்.

tbr.joseph said...

இதெல்லாம்
பார்த்து எல்லோரும் நொந்து நூடுல்ஸ்
ஆயிட்டாங்களா? //

சேச்சே.. இதெல்லாத்தையும்விட எத்தனையோ வேதனைகள், சோதனைகள்.. ஒவ்வொருத்தருக்கும்..

tbr.joseph said...

வாங்க துளசி,

இதுதான் சத்தியமான உண்மை. ஊருக்குச் சொல்றவங்க, அவுங்க காரியமுன்னு வரும்போது பம்மறதும்
இதுக்குத்தான்.//

அனுபவப்பட்டப்பிறகுதான இது தெரியவருது..

tbr.joseph said...

வெற்றிகரமான 150 வது எபிசோட்..
'கியோரா கொடாவ்' [அர்த்தம் ட்டீச்சரைக் கேளுங்க. அல்லது நியூஸி 18 அய் பாருங்க]//

பார்த்துட்டா போச்சி..:)

tbr.joseph said...

sesqui-centuryக்கு வாழ்த்துக்கள் //


நன்றி டி!

G.Ragavan said...

உண்மைதான் சார். நான் அப்பொழுது தூத்துக்குடியில்தான் இருந்தேன். அப்பப்பா!!!!!!!!!!! நினைத்தால் இன்னமும் கலக்கமாக இருக்கிறது.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நினைத்தால் இன்னமும் கலக்கமாக இருக்கிறது. //

ஆனால் அதிசயம் பாருங்கள். அத்தனை கலவரத்திலும் அச்சாதியினர் மத்தியில் கட்டப்பட்டிருந்த என் வீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஒரு வேளை மாடியிலும், அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள் குடியிருந்தனர் என்பதால் இருக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

ஜோசப் சார்,

150 பகுதிக்கு வாழ்த்துக்கள்.