07 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 149

அந்த எஸ்.ஐக்கு எங்கே நான் அவரைப் பற்றி மஜிஸ்த்ரேட்டிடம் கூறிவிடுவேனோ என்று பயம் இருந்திருக்கலாம்.

நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் நான் சந்தித்த ஜில்லா முன்சீஃபைப் பற்றி கூறியிருக்கிறேன். செட்டில்மெண்ட் வழக்குகளில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் தொகைகளை (Suit Deposit) சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையிலிருக்கும் காலத்தில் வங்கிகளில் வைப்பு நிதிகளில் முதலீடு செய்வது வழக்கம். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதத்தைவிட தனியார் வங்கிகள் அதிக வட்டி அளித்துவந்ததால் நீதிபதிகள் அவற்றை எங்களைப் போன்ற தனியார் வங்கிகளில் முதலீடு செய்யவே விரும்புவர்.

அப்படித்தான் எனக்கும் தஞ்சையில் இருந்த சமயத்தில் கணிசமான தொகை வைப்பு நிதியாகக் கிடைத்திருந்தது. ஆகவே அப்படியொரு உறவு தூத்துக்குடி நீதிமன்றத்திலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்றுதான் நான் பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மஜிஸ்திரேட் பொறுப்பிலிருந்தவரை சந்தித்தேன். அவரும் என்னுடைய சமூகத்தைச் சார்ந்தவராக இருந்ததால் எங்களுடைய முதல் சந்திப்பிலேயே என்னை அவருக்கு பிடித்துபோனது. அத்துடன் அவருடைய இரு மகள்களுமே என்னுடைய மூத்த மகள் படித்துவந்த பள்ளியில்தான் படித்தனர். நாங்கள் இருவரும் சென்ற தேவாலயமும் ஒன்றுதான். நீதிமன்ற வளாகத்திலேயே இருந்த அவருடைய குடியிருப்பில் நான் அவரை ஒருமுறை சென்று சந்தித்திருக்கிறேன்.

ஆகவேதான் அவரால் என்னை உடனே அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது.

ஆயினும் அவருடனான என்னுடைய அலுவலக நிமித்தமான தொடர்பை என்னுடைய தனிப்பட்ட தேவைக்கு உபயோகப்படுத்திக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. அவர் என்னதான் நீதிமன்ற அதிகாரியாக இருந்தாலும் ஒரு நில தகராறில் ஈடுபட்டு பிரச்சினை விபரீதமாகிவிட்டால் அவருடைய பெயரும் அனாவசியமாக அடிபடுமே. அத்துடன் அந்த திரையரங்கு உரிமையாளரும் என்னுடைய சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் ஒருவேளை அவருக்கும் இவரை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் நினைத்ததால் அவர் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டதும், ‘ஒன்னுமில்லை சார். நான் எங்க பேங்க் வக்கீலைப் பார்க்க வந்தேன்.’ என்று விடைபெற்றுக்கொண்டேன்.

அதற்குள் எங்களிருவரையும் கடந்து சென்ற அந்த எஸ்.ஐ. திரும்பி எங்கள் இருவரையும் பார்ப்பதை உணர்ந்தேன். சேம்பரை விட்டு வெளியே வந்த மஜிஸ்திரேட் அவருடைய வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த அறைக்குள் நுழைய நான் வராந்தாவில் வழக்கறிஞர்களின் அறையை நோக்கி நடந்தேன்.

என்னையும் மஜிஸ்திரேட்டையும் சேர்த்து பார்த்த எஸ்.ஐ. இனியாகிலும் என்னுடைய வம்புக்கு வரமாட்டார் என்றே எனக்கு தோன்றியது.

என்னுடைய வழக்கறிஞர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இல்லாததால் நான் அறைக்கு வெளியே வராந்தாவில் சிறிது நேரம் நின்றேன். என்னை அதிக நேரம் காக்க வைக்காமல் அடுத்த சில நிமடங்களிலேயே அவருடைய வழக்கை முடித்துக்கொண்டு வெளியே வந்த என்னுடைய வழக்கறிஞர் என்னைக் கண்டதும், ‘வாங்க ஜோசப். வாங்க, உள்ள ஒக்காந்து பேசலாம்.’ என்றவாறு என்னுடைய தோளில் சிநேகத்துடன் கைவைத்து அழைத்துச் சென்றார். வராந்தாவின் மறுகோடியில் நின்று அதே எஸ்.ஐ எங்களை கவனித்ததை நானும் கவனித்தேன்.

அறைக்குள் நுழைந்து அங்கிருந்த அவருடைய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்கள் நட்புடன் என்னைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு அவரவர் வேலையில் மூழ்கிப்போக நானும் அவரும் ஒரு மேசையின் எதிரும் புதிருமாக அமர்ந்தோம்.

‘நாம நெனச்சது சரிதான் ஜோசப். இது அவங்க வேலைதான். அவங்க ஐடியா என்னன்னு புரியலைன்னாலும் ஒங்க மச்சான வேணும்னு வம்புக்கு இழுக்கணுங்கறதுதான் அவங்க ப்ளானுன்னு நா நெனக்கேன். ஆக்சுவலா இது ஒரு சிவில் மேட்டர். அவங்க வேணும்னா ஒங்க மேல கேஸ் போடலாம். நீங்க மேற்கொண்டு அந்த நிலத்துல ஏதும் செஞ்சிராம ஸ்டே வாங்கலாம். அவங்களோட கையெழுத்து போலின்னு வாதாடலாம்.. ஆனா அவங்க பெட்டிஷன்  ஃபைலிங் லெவல்ல டிஸ்மிஸ் ஆறதுக்கும் சான்ஸ் இருக்கு. அப்படியே அக்செப்ட் பண்ணாலும் ஒங்களுக்கு எதிரா ஸ்டே கிடைக்க சான்ஸே இல்ல.. அதனால இத க்ரிமினல் கேசா மாத்தி போலீச வச்சி ஒங்கள மிரட்டி பணியவைக்கலாம்னு நெனக்காங்கன்னு நெனக்கேன்.. ஆனா அது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம்னு எனக்கு தோனலை.. ஆனாலும் என்ன பண்றது? பணம் இருக்கு.. அதனால அடியாளுங்க, போலீஸ்னு போமுடியுது..’

ஒரு சராசரி வாடிக்கையாளரைப் போன்று அவர் அங்கலாய்த்ததிலிருந்தே இதிலிருந்து லேசாக அவர் பின்வாங்குவதை நான் உணர்ந்துக்கொண்டேன். அவர் அந்த திரையரங்கு உரிமையாளருக்கும் வழக்கறிஞர் என்பதால் இந்த விஷயத்தில் அவரால் பாரபட்சமில்லாமல் செயல்பட இயலாது என்றும் எனக்கு தோன்றியது.

இருப்பினும், ‘இப்ப என்ன செய்யலாம்னு தோனுது சார்?’ என்றேன்.

அவர் சிறிது நேர லோசனைக்குப் பிறகு, ‘எனக்கு தெரிஞ்ச பி.பி. (Public Prosecutor) யோட விலாசம் தரேன். நீங்க அவர போயி பாருங்க. அவர் சொன்னா ஒருவேளை இந்த எஸ்.ஐ. ஒதுங்கிக்கறதுக்கு சான்ஸ் இருக்கு.. இல்லன்னா வேறொன்னு செய்யலாம். அதுல ஒங்களுக்கு எந்த அளவுக்கு இஷ்டம் இருக்கும்னு தெரியல..’ என்று இழுத்தார்.

‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

‘நீங்களே நேரா நம்ம ஊர் எஸ்.பிய பார்த்து இந்த எஸ்.ஐ. மேல கம்ப்ளெய்ண்ட் செய்யலாம். நீங்க ஒரு பேங்க் மேனேஜர்ங்கறதுனால ஒங்கள பாக்கறதுக்கு அவர் சம்மதிப்பார். அவர் சந்திச்சி ஓரலா ஒரு கம்ப்ளெய்ண்ட் பண்ணுங்க.. அவர் எழுதி குடுங்கன்னு சொன்னா எங்கிட்ட வாங்க. நானே டீடெய்லா டிராஃப்ட் பண்ணி தாரேன்.. என்ன சொல்றீங்க?’

எனக்கும் அது நல்ல யோசனையாகவே தோன்றியது. இதையேதான் என்னுடைய மாமனாருடைய நண்பரும் கூறினார். நான் உடனே சரி என்று சம்மதித்து எழுந்து நின்றேன். ‘ரொம்ப தாங்ஸ் சார்.’ என்றேன். பிறகு என்னுடைய மாமானாருடைய நண்பரை எங்கு சந்திக்கலாம் என்று வினவினேன்.

‘அவர் கேஸ் ஏதும் இல்லைன்னா இங்கதான் வரணும்.. நா வேணும்னா நம்ம குமாஸ்தாவ விட்டு தேடிப்பாக்க சொல்றேன். நீங்க இங்கயே இருங்க.’ என்று கூறிவிட்டு தன்னுடன் கொண்டு வந்திருந்த வழக்கு சம்பந்தமான கட்டை எடுத்துக்கொண்டு விடுவிடுவென்று வெளியேறினார்.

பத்து நிமிடமாகியும் அவரோ அல்லது அவருடைய குமாஸ்தாவோ வராததால் நான் பொறுமையிழந்து அந்த அறையிலிருந்த வேறொரு வழக்கறிஞரிடம் நான் சந்திக்க விரும்பிய வழக்கறிஞரின் பெயரைச் சொல்லி அவர் எங்கு இருப்பார் என்று கேட்டேன். அவர், ‘தெரியல சார். இங்க அஞ்சாறு கோர்ட் ரூம்ஸ் இருக்கு. அதுல ஏதாச்சும் ஒன்னுல அவரோட கேஸ் வந்திருக்கும். அது முடிஞ்சா அவரே இங்க வந்துருவார். எப்ப வருவார்னெல்லாம் கரெக்டா சொல்லறது கஷ்டம்.’என நான் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பினேன்.

நான் வெளியேறி என்னுடைய வாகனத்தைக் கிளப்ப, ‘என்ன சார்.. பெரிய, பெரிய ஆளுங்களையெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க போலருக்கு.’ என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

ஒரு கேலி புன்னகையுடன் அந்த எஸ்.ஐ என் முன்னே நிற்க அவருடன் அந்த பெரியவரும்.. அதே எகத்தாளமான புன்னகையுடன்.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். நாங்கள் பேசுவதை கேட்கும் தொலைவில் ஒருவரையும் காணோம்.

நான் வாகனதை அணைத்துவிட்டு அதிலே சாய்ந்து நின்றவாறு அவர்கள் இருவரையும் பார்த்தேன். ‘சொல்லுங்க சார். இப்ப என்ன வேணும் ஒங்களுக்கு?’ என்றேன்.

அவர் வியப்பும் கேலியும் கலந்த குரலில், ‘எனக்கா? எனக்கொன்னும் வேணாம் சார்.’ என்றார்.

‘அப்ப இவருக்கு ஏதாச்சும் வேணுமாருக்கும்.. கேட்டு சொல்லுங்க’ என்றேன் அவருடன் நின்றிருந்தவரைக் காட்டி..

எஸ்.ஐ யுடைய முகத்தில் தோன்றி மறைந்த கோபத்தை நான் பொருட்படுத்தாமல் அந்த பெரியவரைப் பார்த்தேன். ‘என்னய்யா சொல்லுங்க. ஒங்க மனசுல என்ன இருக்கு?’

அவர் உடனிருந்த எஸ்.ஐ ஐ பார்க்க அவர் எரிச்சலுடன், ‘சார் ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைச்சி பேசாதீங்க. பேசாம மொதலாளி குடுக்கறத வாங்கிக்கிட்டு ஒங்க மச்சான நிலத்த எழுதிக்குடுத்துறச் சொல்லுங்க. இதுக்கும் மேல வம்பு பண்ணீங்கன்னா... ஒங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்..’ என்ற எஸ். ஐ ஐ பார்த்தேன்.

நான் பதிலேதும் கூறாமல் என்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து  அவர்கள் இருவரையும் பார்த்தவாறே கிக் ஸ்டார்ட்டரை ஓங்கி உதைத்தேன்.. வாகனம் உயிர் பெற்றதும்.. முதல் கியரில் இடவும் எஸ்.ஐ முன்னுக்கு வந்து, ‘என்ன சார் நா சொல்லிக்கிட்டேருக்கேன். நீங்க பாட்டுக்கு கிளம்பறீங்க?’ என்றார் மிரட்டல் தொனியில்..

நான், ‘அதான் சொல்லிட்டீங்களே சார். நிலத்த வாங்குனவர் கிட்டயாவது கேக்கணுமில்ல..? நீங்க சொன்னத அவர்கிட்ட சொல்றேன்.. அவர் விருப்பப்பட்டா நீங்க சொன்னா மாதிரி செஞ்சிட்டு போட்டும்.. எனக்கென்ன வந்துது?’ என்று கூறிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வாகனத்தை கிளப்பிக்கொண்டு புறப்பட்டுச் சென்றேன்.

எனக்குப் பின்னால் கெட்ட வார்த்தையுடன் நிலத்தில் அவர் காறி உமிழ்ந்ததை பொருட்படுத்தாமல் நான் வாகனத்தின் வேகத்தை கூட்டி நீதிமன்ற வளாகத்தை கடந்து சாலையை அடைந்தேன்.

ஆனால் அந்த சிறிய தூரத்தைக் கடக்கும்வரை கோபமும் அச்சமும் கலந்த ஒரு நிலையில் படக், படக்கென்று என் இதயம் கிடந்து அடித்துக்கொண்டதையும்  வாகன ஹாண்டில்பாரைப் பிடித்திருந்த என் கைகளும் க்ஸிலரேட்டரில் வைத்திருந்த என் காலும் என்னையுமறியாமல் தந்தியடித்ததையும் இப்போதும் மறக்கமுடியவில்லை என்னால்..

தொடரும்..

7 comments:

துளசி கோபால் said...

விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதை
மாதிரியில்லே போய்க்கிட்டு இருக்கு.

எல்லாம் வீண் பிடிவாதமும் அகம்பாவமும்தான் காரணம்.

அந்தப் பெரியவருக்கு வயசுக்கேத்த புத்தி வேணாமா?

tbr.joseph said...

வாங்க துளசி,

அந்தப் பெரியவருக்கு வயசுக்கேத்த புத்தி வேணாமா? //

அதானே.. அவர் அவரோட முதலாளியவிட பயங்கரமான ஆளுன்னு பிறகுதான் தெரிஞ்சது..

sivagnanamji(#16342789) said...

இல்லீங்க ஜோசப்,இந்த மாதிரி கூலிக்கு மாரடிக்ரவங்களுக்கு ஏதேனும் ஒரு வம்பு வழக்கு இருநதாதான் பொழப்பு ஓடும்
தஞ்சை மாவட்டத்லெ பார்த்திருப்பிங்க
ஒவ்வொரு பண்ணையாருக்கும் ஒரு கைத்தடி இருப்பான்.பிரச்சனைய அவனே கிளப்பிவிடுவான்.போலீசுக்கு போனேன் கோர்ட்டுக்கு போனேன் அங்கெ கொடுத்தேன் இங்கெ கொடுத்தேன் னு கணக்கு எழுதுவான்
அவன் புத்திதான் அப்டினா படிச்ச இவன் புத்தி எங்கேபோச்சு

G.Ragavan said...

ம்ம்ம்...உண்மைதான் ஜோசப் சார். இந்தியாவில்தான் காவல்துறை என்பதை நாம் ஒதுக்கி வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களோடு பேசுவது பழகுவதே கெட்டது என்று நினைக்கிறோம். அந்த அளவிற்கு அவர்கள் சீரழிந்து போயிருக்கிறார்கள். ஆட்சி மாறினால் இவர்களும் மாறுவதும் மாற்றப்படுவதும் என்று அரசியல்வாதிகள் தூக்கிப் போடுவதற்கு அலைகின்ற நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இவர்கள் திருந்துவது இப்பொழுது நடக்குமென்று தெரியவில்லை.

tbr.joseph said...

வாங்க ஜி!

அவன் புத்திதான் அப்டினா படிச்ச இவன் புத்தி எங்கேபோச்சு?//

இதுல பெரியவர்=அவன்

முதலாளி=இவன்.. சரிதானே..

இவனவிட அவன் பயங்கரமான ஆளுதான்.. தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயுங்கறா மாதிரி..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இவர்கள் திருந்துவது இப்பொழுது நடக்குமென்று தெரியவில்லை. //

உண்மைதான்.

sivagnanamji(#16342789) said...

இல்லீங்க ஜோசப்...இவன்றது அரசாங்க சம்பளம் வாங்கிறவனெ