06 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 148

வீடு திரும்பியதும் நான் சற்று முன் கேள்விப்பட்டதை என்னுடைய மனைவியிடம் தெரிவித்தேன்.

‘என்ன சொல்றீங்க நீங்க? அப்படியே அவரையும் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு போயிருக்கலாமில்ல? ரெண்டு நாளைக்கு முன்னாலதானங்க நாம வீட்டுக்கு போயிருந்தோம்? இப்படி ஒரு ஐடியா இருந்தா நம்மக்கிட்ட சொல்லாமயா இருந்துருப்பாங்க? எனக்கென்னவோ இது எங்க மைனியோட அப்பா வேலையாத்தான் இருக்கும்னு தோனுது.’ என்று படபடத்தார் என்னுடைய மனைவி.

எனக்கும் அந்த எண்ணம் இல்லாமல் இல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியாக இப்படியொரு வேலையில் இறங்கியிருப்பாரா அதுவும் என்னுடைய மாமனாருக்குத் தெரியாமல்? நில விஷயத்தில் தனக்கு அதிகாரம் அளிக்க என்னுடைய மாமனார் விரும்பவில்லை என்பது அவருக்கு மனவருத்தம் அளித்ததென்னவோ உண்மைதான் என்றாலும் அதற்காக இப்படியொரு விபரீதத்தில் அவர் இறங்கியிருக்க மாட்டார் என்றே தோன்றியது.

எதற்கும் என்னுடைய மாமனார் வீட்டுக்கு ஃபோன் செய்து கேட்டாலென்ன என்று தோன்றவே என்னுடைய எண்ணத்தை என்னுடைய மனைவியிடம் தெரிவித்தேன்.

‘கேட்டுரலாந்தான். ஆனா இப்பவே மணி ஒன்பதாகப் போவுது. நீங்க இந்த விஷயத்த பேசப்போயி அப்பா டென்ஷனாயி ஒன்னு அவங்களே இங்க பொறப்பட்டு வந்துருவாங்க. இல்லன்னா நம்மள அங்க வரச்சொல்வாங்க. இந்த நேரத்துல அவங்க வந்தாலும் பிரச்சினை நாம போனாலும் பேசி, பேசி.. நாம திரும்பி வர்றதுக்கு நடுராத்திரியாயிரும். காலைல பாத்துக்கலாம்.’ என்றார்.

அவர் கூறியது சரிதான். இந்த விஷயத்தில் அவருடைய பங்கு ஏதும் இல்லாத நிலையில் அவர் யார் இதற்கு காரணமாயிருப்பார்கள் என்று நினைத்தே டென்ஷனாகிவிட வாய்ப்பிருந்தது.

ஆகவே மனதில் கிடந்த உழன்ற சிந்தனைகளை விலக்கி வைத்துவிட்டு உண்டு முடித்து உறங்கச் சென்றோம்.

நில விஷயம் போறாதென்று தேவாலய திருமண திட்டக் குளறுபடியும்  சேர்ந்துக்கொண்டு இரவு முழுவதும் படுக்கையில் புரண்டு, புரண்டு படுத்ததுதான் மிச்சம். துளி நேரமும் உறங்கவில்லை.

காலையில் எழுந்தபோது உடலும் மனமும் சோர்ந்துபோய் அசதியாக இருந்தது. இன்று எனக்கு முன்னே இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அலுவலகம் சென்று பலனில்லை என்ற தீர்மானத்துடன் என்னுடைய உதவி மேலாளர் தங்கியிருந்த விடுதிக்கு தொலைப்பேசி செய்து நான் அன்று அலுவலகத்திற்கு விடுப்பு என்று கூறினேன்.

குளித்து முடித்து என்னுடைய மூத்த மகளை அவளுடைய பள்ளியில் சென்று விட்டுவிட்டு வீடு திரும்பினேன். அதற்குள் என்னுடைய மனைவி இளைய மகள் சகிதம் புறப்பட்டு தயாராக நிற்கவே என்னுடைய மாமனார் வீட்டுக்கு தொலைபேசி செய்து அறிவித்துவிட்டு கிளம்பி சென்றேன்.

நான் எதிர்பார்த்தது போலவே நிலத்தில் வேலை நடந்திருந்த விபரம் ஒன்றும் என்னுடைய மாமனாருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் உடனே அவருடைய சம்பந்தி வீட்டுக்கு தொலைபேசி செய்தார். அவரும் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று அறிவித்துவிடவே என்னுடைய மாமனாரின் பதற்றம் கூடியது.

‘இப்ப என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்களேன்.’ என்றார் என்னைப் பார்த்து.

தன்னுடைய சம்பந்தியை இனிமேலும் சந்தேகிக்க என்னுடைய மாமனாருக்கு விருப்பமில்லை. அவர் அப்படியே செய்திருந்தாலும் தன்னிடமிருந்து அதை மறைக்கவேண்டிய தேவையில்லை என்பது அவருடைய வாதம்.

என்னுடைய மைத்துனரும் மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து மும்பை சென்ற அடுத்த நாளே புறப்பட்டு ஐரோப்பா துறைமுகங்கள் ஒன்றில் முகாமிட்டிருந்த அவருடைய கப்பலில் ஏறிவிட்டார் என்பதை தொலைப்பேசியில் தான் அவரிடம் அறிவித்தபோதுகூட தன்னிடம் இந்த விஷயத்தைப் பற்றி அவர்  ஒன்றும் கூறவில்லையாதலால் அவர் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்றும் கூறவே மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

அன்று என்னுடைய வங்கி வழக்கறிஞரை சந்தித்தப் பிறகு அடுத்த நாளே நான் அவரை வேறொரு அலுவல் விஷயமாக சந்தித்தபோதும், ‘இனிமே உங்க விசயத்துல அவங்க தரப்பிலருந்து யாரும் தலையிடமாட்டாங்க ஜோசப். ஆனா ஒன்னு. இனியும் நீங்க அந்த நிலத்த சும்மா போடாதீங்க. சீக்கிரம் ஒரு பக்கா காம்பவுண்ட் சுவரையாவது எழுப்பிருங்க.’ என்றாரே என்று நினைத்தேன்.

அதையும் நான் என்னுடைய மாமனாரிடம் எடுத்துரைத்தேன். அப்ப யாராயிருக்கும் என்ற சிந்தனையில் அவருக்கு ஏற்பட்ட பதற்றம் என்னையும் தொற்றிக்கொள்ள என்ன செய்யலாம் என்று எல்லோரும் கூடிப் பேசி உடனே கிளம்பிச் சென்று அவருடைய வழக்கறிஞர் நண்பரை சந்திப்பதென தீர்மானித்தோம்.

என்னுடைய மாமனார் அவரை தொலைப்பேசியில் அழைத்து விபரத்தை சுருக்கமாகக் கூறிவிட்டு உடனே புறப்பட்டு வந்தால் சந்திக்க முடியுமா என்று வினவினார். அவரும் சம்மதிக்கவே நானும் அவரும் புறப்பட்டுச் சென்றோம்.

நல்லவேளை, அவருடைய அலுவலகத்தில் அன்று வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாமல் அவரும் அவருடைய ஜூனியர் இருவர் மட்டுமே இருந்தனர்.

நானும் என்னுடைய மாமனாரும் அன்று என்னுடைய வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தவற்றை எடுத்துரைத்தோம்.

‘அவர் எங்க முன்னாலயே இனி இவுகளுக்கு தொல்லை ஏதும் குடுக்கக்கூடாது சொன்னாருய்யா. அதனால எம்மகன்  ஊருக்கு போறதுக்கு முன்னால நீங்க சொன்ன பவர் விஷயத்தையும் செய்யாம விட்டுப்போட்டோம். எனக்கென்னமோ அந்த பயல்க மறுபடியும் என்னமோ செஞ்சிருக்கான்வன்னு தோனுது.. என்ன செய்யலாம் சொல்லுங்க.’ என்றார் என்னுடைய மாமனார்.

என்னுடைய வழக்கறிஞரும் அவருடைய உதவியாளர்களும் சிறிது நேரம் தங்களுக்குள் விவாதித்தனர். அப்போது அவருடைய உதவியாளர் ஒருவர் கூறியதில் விஷயம் இருந்தது.

‘சார் அவங்க வக்கீலே பத்திரத்துல எந்த வில்லங்கமும் இல்ல அதனால இந்த விசயத்துல இனிமேலும் நீங்க தலையிடறது நல்லதில்லேன்னிருக்காங்க. ஆனா அவங்க சைட்ல இந்த விஷயத்த அவ்வளவு ஈசியா விடமாட்டாங்கன்னு நெனக்கேன். நம்ம கைவிட்டுப்போன நிலத்த இவங்களும் அனுபவிக்கக்கூடாதுன்னு வேணுக்குன்னே தகராறு செய்யறதுக்காவ சும்மா நிலத்த தோண்டி போட்ருக்கான்வன்னு நெனக்கேன்.’ என்றார். ‘எனக்கென்ன தோனுதுன்னா அவங்க நிலத்த தோண்டன விசயம் யார் மூலமாவது இவங்களுக்கு தெரியவந்து தகராறுன்னு வந்தா அடிதடியில எறங்கி விசயத்த கிரிமினல் கேசா மாத்திரலாம்னு நெனச்சிருப்பாங்க. இது அந்த இன்ஸ்பெக்டரோட ஐடியாவாக் கூட இருக்கும்.’

‘இருக்கும்யா.. அந்த வயசானவர் சவால் விட்டுட்டு போனப்பவே அவுக ஆளுங்க லேசுல இத விட்டுக்குடுத்துர மாட்டானுவோன்னு நினைச்சேன். இப்ப இதுக்கு என்னதான் வழிய்யா..?’ என்றார் என்னுடைய மாமனார்.

வழக்கறிஞரும் என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறியது எனக்கு வியப்பளிக்கவில்லை. அவருக்கும் ஊரில் பெரிய செல்வாக்குடைய அந்த திரையரங்கு உரிமையாளர் விஷயத்தில் கவனம் தேவை என்று தோன்றியிருக்க வேண்டும்.

‘மிஸ்டர் ஜோசப்.. நீங்க எதுக்கும் ஒங்க வக்கீல்கிட்ட பேசிப் பாருங்களேன்.. என்னால ஒன்னுமட்டும் சொல்ல முடியும். இதுல நீங்களா போயி போலீஸ்கிட்ட புகார் குடுத்தாலும் பிரச்சினைதான். நிச்சயமா ஒங்க புகார வாங்க மாட்டாங்க. நீங்களே பேசி தீர்த்துக்கறோம்னுதானய்யா போனீங்க, இப்ப நீங்களே அவுங்க அடிச்சிருந்த தட்டிய பிரிச்சிப் போட்டு நிலத்த தோண்டிட்டு இப்ப எங்கக்கிட்ட வரீங்களான்னு கேசையே ஒங்க மேல திருப்பினாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே.. அந்த எஸ்.ஐ. அந்த மாதிரி ஆளுதான். ஒங்க வக்கீல் முனிசிபல் வக்கீலாவும் இருக்கறதுனால கவர்ன்மெண்ட் ப்ராசிக்கியூட்டர்ஸ நல்லா தெரிஞ்சிருக்கும். அவுக மூலமா இந்த எஸ்.ஐ. கிட்ட பேசி பாக்கலாம்.’ என்றவர் என் மாமனாரைப் பார்த்தார். ‘என்னய்யா சொல்றீங்க?’

என்னுடைய மாமனார் என்னை பார்த்த பார்வையில் இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம் என்ற பொருள் தெளிவாகத் தெரிந்தது. அதனால நீங்கதான் பிரச்சினையை தீர்த்துவைக்கணும் என்பதுபோன்ற ஒரு எண்ணமும் தெரிந்தது அவருடைய பார்வையில்.

‘ஏன் ஒங்களுக்குத்தான் அந்த ஆள் சொந்தமாச்சே போய் கேளுங்களேன்..’ என்று கேட்டுவிடலாம்தான். ஆனால் அதற்குப் பிறகு மாமனார்-மருமகன் உறவிலேயே விரிசல் ஏற்பட்டுவிடுமே..

ஆகவே.. ஆனது ஆகிவிட்டது.. விசயத்தை அத்துடன் முடிக்காவிட்டால் எனக்கே பெரிய பிரச்சினையாக மாறிவிடக்கூடிய வாய்ப்பிருக்கிறதென்று நினைத்தவாறு வழக்கறிஞருடைய அனுமதியுடன் என்னுடைய வழக்கறிஞருடைய அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்தேன் அவரை நேரில் வந்தால் சந்திக்க இயலுமா என்று வினவினேன்.

அவர், ‘ஜோசப் நான் கோர்ட்டுக்கு பொறப்பட்டுக்கிட்டிருக்கேன். இன்னைக்கி பத்தரைக்கு முனிசிபாலிட்டி என்க்ரோச்மெண்ட் கேஸ் ஒன்னு இருக்கு. அதுக்கு ஏற்கனவே மூனு வாய்தா வாங்கியாச்சி. அதனால நீங்க ஒன்னு செய்ங்க.  பதினோரு மணிக்கு கோர்ட்டுக்கு வந்துருங்க. ரெண்டு பேருமா போயி அந்த எஸ்.ஐ.ய பார்த்து பேசலாம். தைரியமா வாங்க. எங்கிட்ட வாலாட்ட மாட்டார். அப்படி ஏதும் எடக்கு மடக்கா பேசினா பாத்துக்கலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.

நான் உடனே சரி என்று சம்மதித்தேன். மீண்டும் அந்த எஸ்.ஐ.ஐ சென்று சந்திப்பது எத்தனை உசிதமாயிருக்கும் என்று தோன்றினாலும் அதைவிட்டால் வேறு வழியில்லை என்று தோன்றியது.

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு என்னுடைய மாமனாரிடமும் வழக்கறிஞரிடம் விவரித்தேன்.

‘எனக்கும் அது நல்ல ஐடியான்னுதான் தோனுது. நானும் இன்னும் அரை மணி நேரத்துல கோர்ட்டுக்குத்தான் போறேன். நீங்க வரும்போது என்னையும் வந்து பாருங்க. நான் ஃப்ரீயாருந்தா நானும் வரேன். நாங்க ரெண்டு வக்கீல்ங்க வந்தா அந்த எஸ்.ஐ அடங்கி ஒடுங்கி இருப்பான். சரி வரலையா நேரா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர பாப்போம். எனக்கென்னவோ அவன் வேலையாத்தான் இருக்கும்னு தோனுது.’ என்றார் வழக்கறிஞர். பிறகு என் மாமனாரிடம், ‘அய்யா நீங்க தைரியமா போங்க. ஒங்க மருமகன் ஒரு பேங்க் மேனேஜர். ஒங்க மகன் விஷயத்துல வேணும்னா கொஞ்சம் அதிகாரமா பேசுவான். இவர்கிட்ட அவன் ஜம்பம் ஒன்னும் பலிக்காது. இவர் வேணும்னா நேரா நம்ம எஸ்.பிக்கிட்டவே போய் பெட்டிஷன் கொடுக்கலாம். அவர் பஞ்சாபிக்காரர். பேங்க் மேனேஜர்னா ஒடனே பார்ப்பார். அதுக்கு தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்.. பார்ப்போம்..’ என்றவாறு அவர் எழுந்து நிற்க நானும் மாமனாரும் புறப்பட்டோம்.

நானும் அவருடன் சென்று அவர் வீட்டில் நான் விட்டுவைத்திருந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி என்னுடைய அலுவலகம் சென்று நான் முன்பே எடுத்து வைத்திருந்த பத்திர நகல்களை எடுத்துக்கொண்டு பொது மருத்துவமனையையொட்டியிருந்த நீதிமன்றத்தை அடைந்தேன்.

நான் என்னுடைய வழக்கறிஞரைத் தேடிக்கொண்டு வழக்கறிஞர்களுடயை பொது அறையை நோக்கிச் செல்லவும் தூத்துக்குடி ஜில்லா மேஜிஸ்திரேட் அவருடைய சாம்பரிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவரை நான் ஏற்கனவே வங்கி அலுவல் விஷயமாக இரண்டு, மூன்று முறை சந்தித்திருந்ததால் அவர் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு புன்னகையுடன், ‘என்ன மிஸ்டர் ஜோசப் எங்க இந்த பக்கம்?’ என்று வினவ அந்த நேரம் பார்த்து நீதி மன்ற வராந்தாவில் எங்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த அந்த எஸ்.ஐ. திகைத்துப் போய் எங்கள் இருவரையும் மாறி, மாறி பார்க்க மேஜிஸ்த்ரேட் அவரை திரும்பி பார்த்ததும் விரைப்புடன் நின்று சல்யூட் வைத்தவரைப் பார்த்து வேண்டுமென்றே, ‘எப்படி சார் இருக்கீங்க?’ என்று வினவினேன்.

அவருடைய முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே!

தொடரும்

10 comments:

Krishna said...

அப்பாடா, உள்குத்து இல்ல போல..

எப்பவும், அலெர்டா இருந்திருக்கீங்க சார். சரியான நேரத்தில ஒரு கொக்கி போட்டிருக்கீங்களே?

நானும் மானசீகமா, அந்த எஸ்.ஐ முகம் போன போக்கை கண்டு களித்தேன்...

துளசி கோபால் said...

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, 'கருடா செளக்கியமா?'

இப்படித்தானே?

sivagnanamji(#16342789) said...

ஆ! இப்பதான் சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்ற டேக்டிஸ் வந்திருக்கு...
இனி எல்லாம் சரியாகும்


...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

சரியான நேரத்தில ஒரு கொக்கி போட்டிருக்கீங்களே?//

கொக்கி போட்டதென்னவோ சரிதான். ஆனா அவர் அதுலல்லாம் சிக்கக்கூடிய ஆளாங்கறதுதான முக்கியம்?

tbr.joseph said...

வாங்க துளசி,

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, 'கருடா செளக்கியமா?'//

பரமசிவன் கழுத்துலருக்கற பாம்பி நிரந்தரமா அங்கயே இருக்கறதாச்சே. ஆனா நம்ம கேஸ் அப்படியா என்ன? ஏதோ ஒரு அசட்டு தைரியம்.. அப்படி செஞ்சேன்..

tbr.joseph said...

வாங்க ஜி!

ஆ! இப்பதான் சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்ற டேக்டிஸ் வந்திருக்கு...
இனி எல்லாம் சரியாகும்//

அப்படீங்கறீங்க. அப்படி முடிஞ்சா நல்லதுதான்..

G.Ragavan said...

ஆகா...........நீங்க சொல்லச் சொல்ல எனக்குத் தூத்துக்குடி கோர்ட்டோட அந்தப் பழைய கம்பீரமான கட்டடமும் அதுக்கு முன்னாடி இருக்குற நவாப்பழ மரங்களும் நினைவுக்கு வருது. எத்தன வாட்டி பகலிரவு பாக்காம அங்க போய் நவாப்பழம் பொறுக்கீருப்பேன். பகல்லயோவது ஆளுங்க இருப்பாங்க. இருட்டுதான் வசதி. ஆனா என்ன...முடிஞ்சப்புறம் மத்தத வாயில போட்ட மாதிரி லேசா வாயத் தொடச்சிக்கிட்டு வந்துர முடியாது. :-))

அப்புறம் அந்த எஸ்.ஐ என்ன சொன்னாரோ? என்ன ஆச்சோ...நாளைக்குக் காத்திருப்போம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

தூத்துக்குடி கோர்ட்டோட அந்தப் பழைய கம்பீரமான கட்டடமும் அதுக்கு முன்னாடி இருக்குற நவாப்பழ மரங்களும் நினைவுக்கு வருது//

ஆமாம்.. ஆனா மரத்துலருக்கற பழத்துல பாதிக்குமேல விழுந்து நம்ம ஷூவுல ஒட்டிக்கிட்டு பாடா படுத்தும்.

நான் தூத்துக்குடியிலருந்து மாறி வந்து ஒரு அஞ்சு வருசத்துக்கப்புறம் ஒரு பெர்சனல் விஷயமா கோர்ட்டுக்கு போனப்போ இதே எஸ்.ஐ (அப்ப ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருந்தார்) பேரை கொட்டை எழுத்துல போஸ்டர்ல போட்டு அவரைக் கைது செய்னு கோர்ட் வளாகத்துலயே ஒட்டி வச்சிருந்தாங்க. அந்த அளவுக்கு infamous ஆனார்.. பயங்கரமான ஆள்.. கொஞ்ச நாளைக்கு முன்னால ஆட்டம் போட்டு அப்புறம் முத்திரைத் தாள் கேஸ்ல மாட்டுனாரே முத்துக்கருப்பன்.. தோற்றத்துல அவர மாதிரியே இருப்பார். மு.கவை டி.வியில பாக்கும்போதெல்லாம் அந்த எஸ்.ஐ ஞாபகம் வரும்..

sivagnanamji(#16342789) said...

//முத்திரைத்தாள் கேஸ்ல மாட்டுனாரெ....//
அப்டி மாட்டுனவர் அலி னு நினைக்கிறேன். சரிதானா?

tbr.joseph said...

அப்டி மாட்டுனவர் அலி னு நினைக்கிறேன். //

சரிதான். ஆனா மு.கவும் அதே கேஸ்ல மாட்டிக்கிட்டார்னு நினைக்கிறேன்..