05 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 147

அவர்கள் இருவருமே ‘ஆமாம்.. அதுமாதிரிதான் இருக்கு..’ என்றனர் தயக்கத்துடன்..

என்னுடைய வழக்கறிஞர் திருப்தியுடன் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவர்கள் இருவருடைய பதில் அவருக்கும் திருப்தியளித்ததை எங்களால் உணரமுடிந்தது.

இந்த நிலப்பத்திரத்தை முதலில் முழுவதுமாக படித்து வில்லங்கம் ஏதுமில்லை என்று சான்றிதழ் கொடுத்திருந்தவருக்கு தன்னுடைய கணிப்பில் தவறேதும் இருந்திருக்குமோ என்ற ஐயமும் இருந்திருக்க வேண்டும். அது இப்போது தீர்ந்தது என்ற நிம்மதி அவருக்கு.

எனக்கும் அப்படித்தான் இருந்தது. நான் என்னுடைய மைத்துனர் மற்றும் மாமனாரைப் பார்த்தேன். அவர்களும் அப்படித்தான் நினைத்திருந்தனர் என்பது அவர்களுடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

ஆனால் அந்த இருவரையும் அழைத்து வந்திருந்த பெரியவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அத்துடன் திரும்பிச் சென்றால் முதலாளி என்ன சொல்வாரோ என்ற அச்சமும் தெரிந்தது.

‘அப்போ இந்த நிலம் இவங்களுதுதான் சொல்றீங்களா வக்கீலய்யா?’

என்னுடைய வழக்கறிஞர் அவரை பொருட்படுத்தாமல் அவருடன் வந்த இருவரையும் பார்த்தார். ‘நீங்களே அது உங்க மதருடைய கையெழுத்துன்னு சொல்லிட்டீங்க. தயவுசெய்து ஒங்க மாமாகிட்ட எடுத்து சொல்லி இவங்கள இனியும் தொந்தரவு செய்யாம இருக்கச் சொல்லுங்க.. ஏன்னா இவங்களுக்கு இந்த நிலத்த வாங்க சர்ட்டிஃபை பண்ணதே நாந்தான். எனக்கு ஒங்க மாமா எப்படி க்ளையண்டோ அதே மாதிரி மிஸ்டர் ஜோசஃப்பும் எங்க க்ளையண்ட்தான்.’

அவர்களுக்கு என்ன தோன்றியதோ உடன் வந்திருந்த பெரியவரை பொருட்படுத்தாமல் எழுந்து ஒன்றும் பேசாமல் சென்றனர்.

அந்த பெரியவரோ.. ‘சார்.. நீங்க இப்படி செய்வீங்கன்னு நா கொஞ்சமும் எதிர்பாக்கல..’ என்றார் வழக்கறிஞரைப் பார்த்து பிறகு என்னையும் என்னுடைய மைத்துனரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார். ‘பசங்களா.. நீங்க அந்த எடத்துல மச்சு வீடு கட்டுறது இருக்கட்டும்.. ஒரு குச்சுவீடு கூட போடறீங்களான்னு பாப்போம்.’

விருட்டென்று கிளம்பிச் சென்றவரை பொருட்படுத்தாமல், ‘நீங்க கிளம்புங்க ஜோசஃப், எனக்கு முக்கியமான ஒரு கேஸ் இருக்கு.’ என்றவாறு எழுந்த வழக்கறிஞரிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தோம்.

தலைக்கு வந்தது தலைப்பாயோடு போனது என்ற திருப்தியில் அன்று மாலையே என் மைத்துனர் புறப்பட்டுச் சென்றார்.

நானும் அன்றோடு அந்த விஷயத்தை மறந்துவிட்டு என்னுடைய அலுவலக வேலைகளில் மூழ்கிப்போனேன்.

என் அலுவலகத்துக்கு அருகிலிருந்த தேவாலயத்தில் ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க நிதி திரட்டியதைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதில் யாரும் எதிர்பாராத அளவு நிதி குவிந்திருந்தது. திருவிழாவிற்கு இன்னும் பதினைந்து நாட்களே மீதமிருந்த நிலையில் தேவாலய பாதிரியாரின் தலைமையில் ஞாயிறு காலை திருப்பலி முடிந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்டிருந்த குழுவின் கூட்டம் நடந்தது.

அதுவரை திரட்டப்பட்டிருந்த நிதியைக் கணக்கில்கொண்டு திருமணம் செய்துவைக்க நாங்கள் நினைத்திருந்த ஐம்பது ஜோடிகளுடன் மேலும் பத்து ஜோடிகளை சேர்த்துக்கொள்ளலாம் என்ற யோசனையை பாதிரியார் முன் வைக்க எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு ஜோடிக்கும் தேவையான தாலி, துணிமனிகள், மிக அத்தியாவசியமான பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள் என அறுபது ஜோடிகளுக்கு வழங்க தேவையான தொகை கணக்கிடப்பட்டது. இச்செலவு போக மீதமுள்ள தொகையை திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

என்னுடைய அலுவலக வாழ்க்கையில் இப்படியொரு சமூகநல திட்டத்தில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம் என்று அன்று மாலை என்னுடைய மனைவியிடமும் அவருடைய குடும்பத்தினரிடமும் கூறி பெருமைப்பட்டுக்கொண்டேன்.

அந்த சந்தோஷம் அடுத்த சில நாட்களிலேயே வேதனையாக மாறியது. நான் மேலே கூறிய குழு கூட்டம் நடந்துமுடிந்த மூன்றாம் நாள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்த ஒருவர் எனக்களித்த தகவலை முதலில் நம்பமுடியாமல் அவரை அவநம்பிக்கையுடன் பார்த்தேன்.

‘என்ன சார் சொல்றீங்க?’ என்றேன்.

‘ஆமாம் சார். நீங்க வேணும்னா அவங்க தயார் செஞ்சி ஃபாதர்கிட்ட குடுத்துருக்கற லிஸ்ட்ட வாங்கி விசாரிங்க. நீங்க நினைக்கறா மாதிரி இது ஒன்னும் சமூகத்துக்கு செய்யற தொண்டு இல்லை சார். அந்த குழுவிலருக்கறவங்களுடைய சொந்த பந்தங்களுக்கு தொண்டு செய்யற திட்டம். வேணும்னா சும்மா பேருக்கு ஒரு அஞ்சாறு ஜோடிகளுக்கு செலவு பண்ணுவாங்க. மத்த ஜோடிங்கல்லாம் அவங்களுக்கு சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க குடும்பத்துலருக்கறவங்களாத்தான் இருக்கும்.’

அவர் கூறியதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல், ‘சரி சார். நான் நீங்க சொன்னத விசாரிச்சி பாக்கேன். ஃபாதர் கேட்டுக்கிட்டதுனாலதான் இந்த குழுவில சேர்றதுக்கே ஒத்துக்கிட்டேன். என்னோட பேங்க் கஸ்டமர்ஸ்கிட்டருந்து கணிசமான நன்கொடையையும் கலெக்ட் பண்ணி குடுத்துருக்கேன். இந்த நிலமையில நீங்க சொல்றத பாக்கும்போது.. இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா எங்க பேங்க் கஸ்டமர்ங்க மத்தியில என் பேரே கெட்டுருமே..’ என்று அவருக்கு விடையளித்து அனுப்பினேன்.

நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போல தூத்துக்குடியின் பிரதான தொழிலான மீன்பிடிக் காலம் சமீபத்திலிருந்ததால் கடன் பெறுவதற்காக அன்று வந்திருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது. ஆகவே சற்று முன் நான் கேள்விப்பட்டிருந்த விஷயத்தைப்பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு என்னை சந்திக்க வந்தவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து அனுப்புவதில் மூழ்கிப்போனேன்.

அன்று மாலை அலுவலக பணிகள் முடிந்து என்னுடைய உதவி மேலாளர் கிளம்பி சென்றதும் நான் அந்த பாதிரியாரை சந்திக்க சென்றேன். தேவாலயத்தின் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்ததால் ஆலயத்தின் வருடாந்த்ர மராமத்து வேலைகள் மும்முரமாக நடந்துக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

பாதிரியார் தன்னுடைய அறையிலிருப்பதாக காவலாளி கூறவே நான் முதல் மாடியிலிருந்த அவருடைய அறையை அடைந்தேன். அவருடன் வேறொருவரும் இருக்கவே நான் சற்றே தயங்கி நின்றேன்.

ஆனால் என்னைப் பார்த்துவிட்டு எழுந்து வந்து என்னை வரவேற்று அறைக்குள் அழைத்து சென்றார். அவருடன் இருந்தவர் என்னைக் கண்டதும் எழுந்து விடைபெற்று செல்ல நான் அன்று காலை கேள்விப்பட்ட விஷயத்தை கூறாமல் பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘என்ன ஃபாதர் ஃபங்ஷன் அரேஞ்ச்மெண்ட்ஸ எல்லாம் ஜருரா நடக்குது போல.’ என்றேன் கேஷ¤வலாக.

அவர் புன்னகயுடன், ‘ஆமா ஜோசப்.. இதுதான் நான் இந்த பங்குலருக்கற கடைசி வருஷம். அதனால கொஞ்சம் சிறப்பா செய்யலாம்னு நினைக்கிறேன். அதனாலதான் இந்த கல்யாணத் திட்டத்தையும் சபையாளுங்க ப்ரொப்போஸ் பண்ணப்போ சரின்னு ஒத்துக்கிட்டேன். அதுக்கான நிதி திரட்டறதுல நீங்க செஞ்ச உதவிய பத்தி சபை உறுப்பினர்கள் எல்லோருமே ரொம்ப பாராட்டினாங்க. நான் கூட இந்த அளவுக்கு நிதி திரட்டமுடியும்னு நினைக்கல ஜோசப். தாங்க் யூ சோ மச்.’ என்றார் உண்மையான மகிழ்ச்சியுடன்.

நான் அவருடைய மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாமல் நான் கூறவந்ததை என்னுடைய மனதிலேயே நிறுத்திக்கொண்டேன். இருப்பினும் நான் கேள்விப்பட்டது உண்மைதானா என்பதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற உறுதியுடனும் இருந்தேன்.

சிறிது நேரம் விழாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘எத்தனை ஜோடிங்கறத தீர்மானம் பண்ணிட்டோம். ஆனா அவங்க யார், யார்னு முடிவு பண்ணியாச்சா ஃபாதர்.’ என்று வினவினேன்.

அவர் வியப்புடன், ‘என்ன ஜோசப், உங்கக்கிட்ட சொல்லலையா? இதுவரைக்கும் முப்பது ஜோடிங்களோட பேர எங்கிட்ட குடுத்திருக்காங்க. பாக்கறீங்களா?’ என்றார்.

நான் சரி என்று தலையை அசைக்க அவர் இழுப்பினுள் இருந்த பட்டியலை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி ஒவ்வொரு பெயராக படித்து பார்த்தேன். நான் கேள்விப்பட்டிருந்தது உண்மையாயிருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு அதிலிருந்த பெயர்கள் அனைத்துமே தூத்துக்குடியில் பெருவாரியான கத்தோலிக்கர்கள் இருந்த ஒரேயொரு சமூகத்தினரைச் சார்ந்ததாகவே தெரிந்தது.

இத்திட்டத்தை முன்மொழிந்த குழுவிலிருந்தவர்களுள் பெரும்பாலும் இதே சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதும் எனக்கு தெரிந்துதானிருந்தது. இதில் ஒன்றும் பெரிதாக தவறு இருக்க வாய்ப்பில்லைதான். ஏனெனில் தூத்துக்குடியில் பரம்பரை பரம்பரையாக கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தவர்களும் இச்சமூகத்தினவர்தான்.

ஆனால் இவர்களில் பெரும்பாலோனோர் குழு உறுப்பினர்களுடைய உறவினர்களாகவோ அல்லது நெருக்கமானவர்களாகவோ இல்லாதிருந்தால் அது போதும் என்று நினைத்தேன். ஆனால் இதை விசாரித்து அறிந்துக்கொள்ளவேண்டுமென்றால் இவர்களுடைய முழு விலாசத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கென்ன வழி என்று ஆலோசித்தேன்.

சட்டென்று ஒரு யோசனை தோன்ற, ‘ஃபாதர் இவங்களோட விலாசமெல்லாம் எனக்கு வேணுமே’ என்றேன்.

‘ஏன் ஜோசப்.. அவங்களுக்கு ஏதாவது லெட்டர் அனுப்ப போறீங்களா?’

‘ஆமா ஃபாதர். எங்க பேங்க் சேர்மன் ஆஃபீஸ்லருந்து இவங்களுக்கு பேங்க் சார்பில ஒரு வாழ்த்து அனுப்பலாம்னு ஒரு யோசனை..’என்று இழுத்தேன்.

‘அப்படியா? ரொம்ப நல்ல யோசனையாருக்கே.. தாங்ஸ் ஜோசப்.’ என்று என்னுடைய உண்மையான நோக்கத்தை உணராமல் உடனே விழா குழுவினர் தயாரித்து கொடுத்திருந்த கோப்பையே என்னிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, ‘நீங்க இத பார்த்து ஒரு பேப்பர்ல எழுதிக்குங்க ஜோசப், நா சர்ச்வரைக்கும் போய் ஒர்க்கர்ச அனுப்பிட்டு வரேன்.’ என்று கிளம்பிச் செல்ல நான் இந்த நல்லவரை ஏமாற்றுகிறேனே என்று வருந்தினேன்.

இருப்பினும் நான் செய்யப்போவது இவரையும் ஒரு இக்கட்டிலிருந்து காக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டு அக்கோப்பிலிருந்த விபரங்களை ஒன்றுவிடாமல் பாதிரியார் அளித்த மூன்று வெள்ளைத்தாள்களில் குறிப்பெடுத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் திரும்பிய பாதிரியாரிடம் கோப்பை திருப்பிக் கொண்டுத்துவிட்டு கிளம்பி என்னுடைய வீட்டுக்குத் திரும்பினேன்.

நான் தேவாலய வளாக வாசலில் நிறுத்திவைத்திருந்த என்னுடைய வாகனத்தை முடுக்கி கிளம்ப என்னுடைய பெயரை யாரோ அழைப்பது கேட்கவே வாகனத்திலிருந்தவாறே திரும்பி என்னை நோக்கி சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தவரை பார்த்தேன்.

பிரையண்ட் நகரில் எனக்கு நிலத்தை விற்றவர். அவர் அருகில் வந்ததும், ‘என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டு வேலையை ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு?’ என்றார்.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன சொல்றீங்க? வீட்டு வேலையா? என் லோனே இன்னும் சாங்ஷன் ஆயி வரலையே?’ என்றேன்.

‘ஒங்க எடத்துல இல்ல சார். ஒங்க மச்சான் நிலத்துல. இன்னைக்கி காலைல அந்த பக்கமா போயிருந்தேன். அஸ்திவாரத்துக்கு நிலத்த தோண்டி போட்டுருந்தத பார்த்தேன். என்னடா ஏதோ வில்லங்கம் அது இதுன்னு சார் சொன்னாரேன்னு ஒங்க வீட்டுக்கு போயிருந்தேன். கீழ் வீட்டுலருக்கறவரு நீங்க வெளிய போயிருக்கீங்கன்னு சொன்னார். சரி போய்ட்டு கொஞ்ச நேரம் செந்நு வரலாம்னு வந்தேன்.. இங்க நிக்கறீங்க. சர்ச்சுக்கு வந்தீங்களோ?’

நான் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தவாறே நின்றேன். என்னிடம் கூட குறாமல் இப்படியொரு காரியத்தைச் செய்ய என்னுடைய மாமனாருக்கு எப்படி மனம் வந்தது என்று நினைத்துக்கொண்டு, ‘ஆமாங்க எங்க மாமனார் சொல்லிக்கிட்டிருந்தாரு.. மறுபடியும் ஏதாவது பிரச்சினை வரதுக்கு முன்னால வேலைய தொடங்கிருவோம் நினைச்சிருப்பார்.’ என்று சமாளித்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

தொடரும்

18 comments:

ஜோ / Joe said...

ஜோசப்சார்,
கடந்த 15 அத்தியாயங்களை நேற்று தான் மொத்தமாக படித்தேன் .நல்ல விருவிறுப்பு .தொடருங்கள்!

tbr.joseph said...

நன்றி ஜோ.

sivagnanamji(#16342789) said...

ஹே! இது என்ன புது சோதனை?
யார் செய்வது?
உங்கள் மாமனாராக இருக்க வாய்ப்பு இல்லை
மச்சானின் மாமனாரோ?எஸ் பி அய்
ஆபீசரின் மாமனாரோ?தியேட்டர் ஓனரோ? ஈகோ பிரச்சினை வந்துவிட்டதோ?

tbr.joseph said...

வாங்க ஜி!

அடடடா நீங்க கேட்ட அத்தனை கேள்விங்களுந்தான் என்னெ போட்டு அன்னைக்கி குடைஞ்செடுத்தது..

sivagnanamji(#16342789) said...

அப்பாடா!இன்றைக்கு ஒருவழியா
துளசிக்கு முந்திக்கொண்டு பின்னூட்டம்
போட்டாச்சு
அவங்க 52 வது திருமணநாள் கொண்டாட்டத்திலே லேட் ஆயிட்டாங்க

துளசி கோபால் said...

கொஞ்சம் பிந்திரக்கூடாதே(-:
அதுக்குள்ளே ஜனங்களுக்குச் சந்தோஷத்தைப் பார்த்தீங்கல்லே?

கோவமாப் போனப் பெரியவரே அஸ்திவாரம் தோண்டி வச்சுட்டாரா?

சிஜி,

உங்க வாய் முகூர்த்தம் இன்னும் 20 வருசம் எங்களுக்கு ஆயுசு கேரண்ட்டியா?
வெரி குட்:-)))

தேங்க்ஸ்.

Krishna said...

ஜி அய்யா

நீங்க முந்திகிட்டாலும், அவங்க உங்க பின்னூட்டம் பார்த்து சந்தோஷந்தான் படுவாங்க, ஏன்னா, முப்பத்திரண்ட, ஐம்பத்திரண்டா ஆக்கிட்டிங்கீல்ல, அதுக்காக...

டிபிஆர் சார்,

அன்றைய இரவு உங்கள் மனநிலையை நினைத்தால்....உறவுகள் உள்குத்தியிருக்காது என நம்புகிறேன். குத்தியிருந்தால், வலி அதிகமாய்த்தான் இருந்திருக்க வேண்டும்.

மணியன் said...

சோதனை மேல் சோதனை, தாங்காது சாமி :)

tbr.joseph said...

அவங்க 52 வது திருமணநாள் கொண்டாட்டத்திலே லேட் ஆயிட்டாங்க //

ஃபிங்கரிங் மிஸ்டேக்னாலும்.. இன்னும் இருபது வருசம் இருந்து 52வது வருடத்தையும் கொண்டாட வாழ்த்துக்கள் துளசி..

tbr.joseph said...

கோவமாப் போனப் பெரியவரே அஸ்திவாரம் தோண்டி வச்சுட்டாரா?//

மனித மனங்கள் எத்தனை வக்கிரமமானவை என்பதை அந்த நிகழ்ச்சிதான் எனக்கு உணர்த்தியது..

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அன்றைய இரவு உங்கள் மனநிலையை நினைத்தால்...//

உண்மைதான் கிருஷ்ணா.. என்னுடன் சேர்ந்து என் மனைவியும் கலங்கித்தான் போனார்..

tbr.joseph said...

வாங்க மணியன்,

சோதனை மேல் சோதனை..

ஆனா ஒவ்வொரு சோதனையும் ஒரு நல்ல படிப்பினையை கற்பித்ததென்னவோ உண்மை..

sivagnanamji(#16342789) said...

துளசி,
அதுக்கு மேலயும் க்யாரண்ட்டி
ஆசீர்வாதம்

jagan said...

i had been reading your blog for some days, you are true in the sense about the information regarding South TN's way of life, casteism in each and every way of life, problems relating to Real Estate, Behaviour of Police, last but not the least.... problem of all people .....problems with respect to relations.. .Power, Money Hungry people are in each corner of life and i have personally seen my Family land being occupied by a group of people, but evicted after long and bitter court struggle. Some times, problems are quite complex that Rule of Law is useless, but only political/Gunda power is helpful in solving problems. Its a good experience to read about your experiences. I am sorry to type in English, as i dont know how to type in tamil in blogs. FYI..i am a newbie in blogosphere.

tbr.joseph said...

துளசி,
அதுக்கு மேலயும் க்யாரண்ட்டி
ஆசீர்வாதம் //

அப்படியே விரும்பும்..

ஜோசஃப்:))

tbr.joseph said...

Hi Jagan,

Thanks for your comments.

It is very easy to learn Tamil Typing. Download the software available (Kural soft Fonts and ekalappai) in the Thamizmanam site and install it. You can use the english keyboard to type in Tamil. It's child's play.. You will get used to it in a jiffy!

Ask Sivagnanamji! He will tell you how he mastered it in 24 hours flat!

sivagnanamji(#16342789) said...

jagan
welcome to ekalaai

G.Ragavan said...

யாரு செஞ்சிருப்பா! எல்லாம் அந்தத் தேட்டர்காரங்கதான்.

என்னது கல்யாணத்துல தில்லுமுல்லா....அப்புறம் என்னாச்சு?