02 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 145

‘இந்த கட்டுலருக்கற பத்திரங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே இந்த சொத்துல எந்த வில்லங்கமும் இருக்காதுங்கறத சொல்லிரலாம்..’ என்ற என்னுடைய மாமனாரின் வழக்கறிஞர் நண்பர் கூறியது நினைவுக்கு வந்தது..

ஆம்.. ஏழெட்டு பேர் கை மாறியிருந்த அந்த நிலத்தை எங்களுடையதுதான் என்று இரவோடு இரவாக வேலியடித்திருந்த நபர் இந்த நிலைத்தை 1956ம் வருடம் அதாவது சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விற்றிருக்கிறார் என்பதை நானும் என் மனைவியும் கண்டபோது நிம்மதியுடன் சிரித்தோம்..

அருகில் நின்றிருந்த என்னுடைய இளைய மைத்துனர், ‘என்ன மச்சான் பத்திரத்த பார்த்துட்டு ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க? எனக்கும் சொல்லிட்டு சிரிங்களேன்..’ என்றார்.

நான் அவரிடம் குறிப்பிட்ட பத்திரத்தைக் காட்டி, ‘இவங்கதான் நம்ம நிலத்துல தட்டியடிச்சிருக்காங்க.. இவங்களுக்கு பின்னால ஏழு பேர் இத வாங்கி வித்துருக்காங்க.. அதனால இவங்க என்ன சொன்னாலும் அது எந்த கோர்ட்லயும் செல்லுபடியாகாது. நீ போய் வீட்ல சொல்லு.. அதோட ஒங்க அண்ணனுக்கு போன் பண்ணி காலைல இங்க வரச்சொல்லு.. வக்கீல போயி பாக்கணும்னு நா சொன்னேன்னு சொல்லு.. பத்திரம் இங்கயே இருக்கட்டும்.’ என்று அவரை வழியனுப்பிவிட்டு வந்தேன்..

நான் வந்ததும், ‘என்னங்க வீட்ல சாப்பிடறதுக்கு ஒன்னும் இல்லை.. நீங்க போயி அந்தோணியார் கோயிலுக்கு எதுத்தாப்பலருக்கற நைட் க்ளப்புல ஏதாச்சும் ஒறப்பா வாங்கிட்டு வாங்க.. காலைலருந்து எங்கம்மா புலம்பி, புலம்பி ஒன்னும் சாப்டக்கூட முடியல.. அந்தக் கடைல கொத்து பரோட்டாவும் சால்னாவும் சூடா, காரமா இருக்கும்.. ஒங்களுக்கு வேணுமோ இல்லையோ எனக்கு வேணும்..’ என்றார். அவருடைய முகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்றுதான் லேசான மகிழ்ச்சி தெரிந்தது.

நானும் சரி என்று கூறிவிட்டு கையில் டார்ச்சுடன் புறப்பட்டேன்.

எனக்கு இந்த நைட் க்ளப் என்றாலே பயங்கர அலர்ஜி. ஆனால் தூத்துக்குடி முழுவதும் இத்தகைய சிறு சிறு உணவகங்கள் அங்கிங்கெனாதபடி முக்குக்கு முக்கு  காணப்பட்டன. தூத்துக்குடிவாசிகள் சரியான சாப்பாட்டு ராமன்கள் என்பது இந்த கடைகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே புரியும். இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு வரை கொடிகட்டி பறக்கும் இந்த உணவகங்களுக்கு பலவற்றிற்கு என்னுடைய கிளையிலிருந்தே கடனுதவி வழங்கியிருந்தேன். வியாபாரம் லாபகரமாக நடந்ததால் எங்களுடைய கிளையிலிருந்த  கொடுத்திருந்த எல்லா கடனுமே சரிவர குறித்த காலத்திற்கு முன்பாகவே திருப்பி செலுத்தப்பட்டிருந்தன.

அதுவும் என்னுடைய கிளையிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் தூத்துக்குடி மத்திய அங்காடி எனும் அளவுக்கு பிரசித்தமான மார்க்கெட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன..  

மாலை ஏழு, ஏழரை மணிக்கு அந்த பகுதியில் சென்றதுமே நம்முடைய கவனத்தை கவர்ந்திழுப்பது நைட் க்ளப்புகளிலிருந்து வரும் சமையல் நறுமணமும், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கல்லில் தாளத்துடன் மாமிசம், முட்டை இத்யாதிகளை கொத்தும் ஓசையும்தான்..

வாசலில் வைக்கப்பட்டிருக்கும் இன்றைய ஸ்பெஷல் லிஸ்ட்டைப் படித்தாலே மிருகவாசிகளுக்கு.. (நான் வெஜிட்டேரியனை இப்படியும் கூறலாம்னு நினைக்கிறேன்) நாக்கில் ஜலம் ஊருவது உறுதி..(விஜிடேரியன் வலைஞர்கள் கீழே கொடுத்துள்ள பட்டியலைத் தவிர்க்கவும்)

தலைக்கறி,
மூளை..
லிவர்..
மட்டன் வறுவல்,
கோழி வறுவல்
சாப்ஸ்
பொறிச்ச மீன்..

பரோட்டா குருமா,
பரோட்டா சால்னா,
சப்பாத்தி குருமா..
ஆப்பம் குருமா..

இன்னும் வாயில் வராத பெயர் கொண்ட ஐட்டங்கள் என்னவெல்லாமோ.. அது தூத்துக்குடிகாரர்களுக்கே விளங்கும்..

அதில் கொத்து பரோட்டா சால்னா என்றால் என் மனைவிக்கு மட்டுமல்ல என் மூத்த மகளுக்கும் உசிர். வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் வேண்டியிருக்கும்.

ஆனால் தூத்துக்குடியிலிருந்த இரண்டு வருடத்தில் நான் ஒரு நாள் கூட அதை ருசிபார்த்ததே இல்லை.. வாங்கி வருவதோடு சரி..

நான் மேலே குறிப்பிட்டிருந்த பகுதியில் இருந்த கடைகளில் இரண்டு, மூன்று கடைகள் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்ததால் என்னுடைய வங்கியின் பெயர் பலகைகள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் என்பது எனக்குத்தெரியும். அத்தகைய கடைகளைத் தவிர்த்துவிடுவதில் குறியாயிருப்பேன்..

இல்லையென்றால் ரெண்டு கொத்து பரோட்டா சால்னா பொட்டலத்திற்காக மேனேசர் வந்து நிக்கறார் பார்னு யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயம்தான்:-)

அன்று என் மனைவிக்கு இருந்த சந்தோஷத்தில் சற்று கூடுதலாகவே பசியிருக்கும் என ஊகித்து ஒன்றுக்கு இரண்டு பார்சலாக வாங்கிக்கொண்டு திரும்பினேன். வரும் வழியில் இருந்த சைவ உணவகத்தில் இரண்டு ப்ளேட் சூடான இட்லி பார்சலையும் (எனக்குத்தான்) வாங்கிக்கொண்டேன்..

ஆக, அன்றைய தினம் ஒருவழியாக நான் எதிர்பார்த்திருந்ததையும் விட சுமுகமாக கழிய இருவரும் நிம்மதியாக அயர்ந்து உறங்கினோம்.

***

அடுத்த நாள் காலை இந்த விஷயத்தின் ஆதிவரை சென்று முடித்துவிடுவது என்ற எண்ணத்துடன் அலுவலகத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுக்க தீர்மானித்தேன்.

‘எதுக்கும் எங்க அண்ணன கூப்ட்டு பேசிட்டு லீவு எடுங்க. அவங்க பாட்டுக்கு நீங்க சொல்ற யோசனைக்கு ஒத்து வரலைன்னா நீங்க லீவு எடுத்தது வேஸ்டாயிருமில்ல..’

அதுவும் சரிதான் என்று தோன்ற தொலைப்பேசியை அணுகினேன்.. அது சரி.. அவர்தான் அவருடைய மாமனார் வீட்டுக்கு போயிருப்பாரே.. அவருடைய தொலைப்பேசி எண் இல்லையே என்று தோன்றியது.

‘அவர் மாமனார் வீட்லல்லே இருப்பார். ஒங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி நம்பர கேப்பமா?’ என்றேன் என் மனைவியிடம்.

‘ஐயோ ஆமால்லே.. அந்த மனுஷன் ஒரு வில்லங்கம் புடிச்சவருங்க.. நீங்க பேசாம எங்கப்பாக்கிட்ட சொல்லிருங்க.. அவங்க அங்க கூப்ட்டு பேசிக்கட்டும்..’

இவ்வாறு நானு என் மனைவியும் தர்க்கித்துக்கொண்டிருக்க என்னுடைய தொலைப்பேசி அடித்தது. எடுத்தேன். என் மைத்துனர்தான்.. ‘ஒங்களுக்கு நூறு வயசு.. மச்சான்’ என்றேன்.

அவர் சிரிப்பதாக காணோம். மனுஷன் அத்தனை டென்ஷனில் இருந்திருக்கிறார். அல்லது அன்றைய கோபம் இன்னும் தீரவில்லை. ‘நீங்க வேற மச்சான். எனக்கு கப்பல்லருந்து ஆர்டர் வந்துருக்கு.. நாளைக்கு சாயந்தரம் றுமணிக்கு மெடிக்கலுக்கு வரச்சொல்லியிருக்கான்.. இன்னைக்கி சாயந்தரமே ட்ரெயின புடிச்சி மெட்றாஸ் போய் ஃப்ளைட்ட புடிச்சி போனாத்தான் சரியாயிருக்கும். அதனால..’

நான் குழப்பத்துடன், ‘அதனால.. என்ன? சொல்லுங்க’ என்றேன்.

‘பேசாம அந்த பயலுக்கே நிலத்த விட்டுக்கொடுத்துரலாம்னு மாமா கிட்ட சொன்னேன்.. அவர் ஒங்க இஷடம் மருமகன்னு சொல்லிட்டார். அதான் நீங்க என்ன சொல்றீங்கன்னு கேக்கறதுக்காக கூப்ட்டேன்..’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. நம்முடைய தரப்பில் விஷயம் சாதகமாக இருக்கும்போது இந்த மனிதர் அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துருவார் போலருக்கே..

என்னதான் இப்போது அவசரப்பட்டு விட்டுக்கொடுத்தாலும் நாளை ஒரு காலத்தில் இதை மீண்டும் குத்திக்காட்ட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? ஆனால் அதே சமயம் இவர் இன்றைக்கே கிளம்பிச் செல்வதும் சாத்தியமாகாதே.. அவருக்கு இந்த அழைப்பை விட்டுவிட்டால் இனியும் அழைப்பு வர ஒரு மாதத்திற்கும் மேலாகிவிடும் என்ற பயமும் இருக்கலாம்.. கணிசமான தொகையை ஊதியமாக பெறுபவருக்கு.. தன்னுடைய இரண்டு மாத ஊதியத்துக்கும் குறைவான மதிப்புகொண்ட நிலம் போனால் போகிறதென நினைத்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

சட்டென்று எனக்கு யோசனை தோன்றியது. ‘மச்சான் அவசரப்படாதீங்க. நீங்க புறப்பட்டு நம்ம வக்கீல் வீட்டுக்கு வாங்க. எனக்கு ஒரு யோசனை தோனுது.. நீங்க பேசாம ஒங்க மாமனார் பேர்லயோ இல்ல தங்கச்சி பேர்லயோ (என் மைத்துனரின் மனைவி) ஒரு பவர் ஆஃப் அட்டார்னி குடுத்துட்டு போயிருங்க. மத்தத நா பாத்துக்கறேன்..’

அவர் நான் கூறிய யோசனையை அவருடைய மாமனாரிடம் கூறியிருப்பார் போலிருந்தது. மறுமுனையில் சிறிது நேரம் பதிலையே காணோம்..

பிறகு, ‘சரி மச்சான். நானும் மாமாவும் புறப்பட்டு வரோம். நா அப்பாவுக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீங்க பத்திரத்தோட வந்துருங்க.’ என்று இணைப்பைத் துண்டிக்க நான் என் மனைவியிடம் அவர் கூறியதை எடுத்துரைத்தேன்..

‘எப்படியோ நல்லபடியா முடிஞ்சா சரிதான்..’ என்றவாறு அவர் தன்னுடைய வேலையை பார்க்க நான் அடுத்த அரை மணியில் குளித்து உடை மாற்றிக்கொண்டு என் அலுவலகத்திற்கு சென்று என்னுடைய உதவி மேலாளர் வரும்வரை காத்திருந்து அவரிடம் கூறிவிட்டு வழக்கறிஞர் வீட்டையடைந்தேன்.

என்னுடைய மைத்துனர் அதுவரை வந்திருக்கவில்லை. நான் வழக்கறிஞரிடம் நேற்று நடந்த சம்பவங்களை சுருக்கமாகக் கூறி குறிப்பிட்ட பத்திரத்தையும் அவரிடம் காண்பித்தேன்.

அவரும் நான் காண்பித்த பத்திரத்தைப் பார்த்துவிட்டு சற்று யோசித்தார். நான் பொறுமையிழந்து, ‘என்ன சார் யோசிக்கறீங்க?’ என்றேன்.

‘இல்லை சார்.. இது தெரியாமயா அவங்க தகராறு பண்றாங்கன்னு நினைக்கறீங்க.. இந்த கையெழுத்தே என்னோடதில்லேன்னா என்ன பண்ணுவீங்க?’

அட ஆமால்லே.. என்று அதிர்ந்துபோனேன் நான்..

தொடரும்..

இது நேற்று நான் இடவேண்டிய பதிவு. நேற்று ஒரு முக்கியமான செமினாருக்கு செல்லவேண்டியிருந்ததால் எழுதிவைத்திருந்தும் பதிய முடியாமற்போனது.

இன்றைய பதிவை சுமார் பகல் ஒரு மணிக்கு பதிகிறேன்.

டிபிர்.

10 comments:

D The Dreamer said...

சான்ட்விச் சாப்பிட்டு நாக்கு செத்து இருக்கும் எனக்கு ஏன் சார் கொத்து பொராட்டாவையும் சால்னாவையும் ஞாபகப்படுத்தறீங்க? :(

இன்னிக்கு டபுள் ட்ரீட் தந்ததற்கு நன்றி சார்

Krishna said...

இன்று, பதிவு இருக்காது என நினைத்து தமிழ்மணத்துக்குள் நுழைந்தால், பதிவு தந்து ஆனந்தப்பட வைத்துவிட்டீர்கள்..

கையெழுத்து என்னுதில்லன்னு சொல்ற பழக்கம் அப்பவே ஆரம்பிடுச்சிடுச்சா? நான்கூட, டான்ஸி ராணி, அடச்சே, ஜான்ஸி ராணிதான் ஆரம்பிச்சு வெச்சாங்கன்னு நினச்சேன்...

துளசி கோபால் said...

என்னங்க, நேத்து மக்கள்ஸ் எல்லாம் எத்தைத்தின்னா பித்தம் தெளியுமுன்னு
இருந்தாங்க. இதுலே உதயகுமார் இதே தலைப்புலே அவரோட பதிவைப் போட்டாரோ இல்லையோ எல்லாரும் அங்கே ஒரே பாய்ச்சல்:-)))))

போய் ஏமாந்துட்டு அவரை வாழ்த்திட்டு வந்தோம்.

அவர் ப்ளொக்குக்குப் பொறந்தநாள். ஒரு வயசுக் குழந்தை!

tbr.joseph said...

வாங்க டி!

எனக்கு ஏன் சார் கொத்து பொராட்டாவையும் சால்னாவையும் ஞாபகப்படுத்தறீங்க? :( //

அதான் ஒங்க பேர்லயே ட்ரீமர்னு இருக்கே.. சாப்டறா மாதிரி கனவு கண்டுருங்க.. சாப்ட்டா மாதிரியே இருக்கும்:)

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

கையெழுத்து என்னுதில்லன்னு சொல்ற பழக்கம் அப்பவே ஆரம்பிடுச்சிடுச்சா? //

இன்னிக்கும் ஒரு மீட்டிங் இருந்தது.. அது திடீர்னு பகலுக்கு மேலேன்னு போஸ்ட்பான் ஆயிருச்சி. அதான் குடுகுடுன்னு வந்து போட்டுட்டு ஓடிறலாம்னு எண்ணம்..:)

tbr.joseph said...

வாங்க துளசி,

இதுலே உதயகுமார் இதே தலைப்புலே அவரோட பதிவைப் போட்டாரோ இல்லையோ எல்லாரும் அங்கே ஒரே பாய்ச்சல்/

இன்றைக்கு காலைல டோண்டு சார் ஃபோன் வந்ததும் என்னடா திடீர்னு நினைச்சேன். நீங்க சொன்னததான் அவரும் சொன்னார்.

உதயகுமாருக்கு போய் வாழ்த்து சொல்லிறவேண்டியதுதான்..

sivagnanamji(#16342789) said...

நேற்று பதிவு இருக்காது என்று பட்ஷி
சொன்னது.எனவெ எதிர்பார்ப்பு இல்லாமல்தான் தமிழ்மணம் வந்தேன்
'திரும்பிப்பார்க்கிறேன்'[உதயகுமார்]ஓர் இனிய அதிர்ச்சி தந்தது..எப்படியோ நான் நினைத்தது
நடந்தது
'இன்றும் இருக்காது....இனி திங்கள்தான்' என்று நினைத்தேன்
போனஸ் கொடுத்துவிட்டீர்கள்
சால்னாவுடன் இட்லி சாப்பிடுவது போலிருந்தது

sivagnanamji(#16342789) said...

முழு விபரமும் தெரிந்துவிட்டால்
உங்கள் மாமனரும் சரி, உங்கள் மாமனாரும் சரி, உங்க மச்சானின் மாமனரும் சரி உங்க மச்சானின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

tbr.joseph said...

வாங்க ஜி!

முழு விபரமும் தெரிந்துவிட்டால்
உங்கள் மாமனரும் சரி, உங்க மச்சானின் மாமனரும் சரி உங்க மச்சானின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் //

உண்மைதான். என்னுடைய மைத்துனரும்கூட கப்பல் ஏறவேண்டும் என்ற அவசரத்தில்தான் அப்படி கூறியிருந்தார். அவருக்கு மட்டும் சொத்தை சும்மா விட்டுக்கொடுக்க மனம் வருமா என்ன?

tbr.joseph said...

கையெழுத்து என்னுதில்லன்னு சொல்ற பழக்கம் அப்பவே ஆரம்பிடுச்சிடுச்சா? //

கிருஷ்ணா.. சொத்து பத்துரத்துலயும், கடன் பத்துரத்துலயும் கையெழுத்து போட்டவங்க இல்லேன்னு சொல்றது ரொம்ப, ரொம்ப சகஜம். அதத்தான் ஜெ அம்மாவும் செஞ்சாங்க..