30 June 2006

ஆறோ இது யாரோ..

ஆறோ இது யாரோ..

டோண்டு  அவர்களின் பதிவில்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று துவங்கியிருந்தார்..

அந்த திருமறைக் கட்டளைகள் ஆறு எவை என்று வேதாகமம் கூறுகிறது..

அவை..

களவு செய்யாதே
பொய் சொல்லாதே
கொலை செய்யாதே
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே
பிறர் தாரத்தை விரும்பாதே
தாய் தந்தையரைப் போற்று


எனக்கு பிடித்த மற்ற ஆறு

திரைப் படங்கள்

பார் மகளே பார்,
பாச மலர்,
பாவ மன்னிப்பு,
பார்த்தால் பசி தீரும்,
படித்தால் மட்டும் போதுமா,
மோட்டார் சுந்தரம் பிள்ளை

நடிக, நடிகைகள்

நடிகர் திலகம்,
நடிகையர் திலகம்,
செளகார் ஜானகி
பத்மினி
சரோஜா தேவி
ரங்கா ராவ்

திரைப் பட பாடல்கள்

பார் மகளே பார்..
மலர்ந்தும் மலராத..
ஆலய மணியின் ஓசையை..
அண்ணன் காட்டிய வழியம்மா ..
கண்ணிரண்டும் தாமரையோ.. சின்ன சின்ன கண்ணனுக்கு..
கண்ணா கருமை நிறக் கண்ணா..

எழுத்தாளர்கள்

ஜெயகாந்தன்
கல்கி
நா. பார்த்தசாரதி
சாண்டில்யன்
மணியன்
மெரீனா

மலர்கள்

மல்லிகை
ரோஜா (சிகப்பு என்றால் அதிகமாகவே)
தாமரை (குளத்தில் இருக்கும்போது)
டிசம்பர் கனகாம்பரம்
ஜின்னியா
கேரளாவில் விஷ¤ சமயத்தில் சரமாக பூத்து தொங்கும் மஞ்சள் பூ.. (பெயர் தெரியவில்லை.. சென்னையிலும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.)

வலைஞர்கள்

பின்னூட்ட அரசி துளசி
இப்போது பின்னூட்ட ராசாகவ வலம் வரும் சிவஞானம்ஜி
டோண்டு
கோ. ராகவன்
நாமக்கல் சிபி (என்னை இங்கு அழைத்து வந்ததால் மட்டுமல்ல)
டி.. தி ட்ரீமர் (ப்ளாக் தேச வலைஞர்)

அதற்காக மற்றவர்களை பிடிக்காது என்பதல்ல..ஆறுக்கு மேல எழுத முடியாதேன்னுதான்..

அன்புடன்,
டிபிஆர் ஜோசஃப்

திரும்பிப் பார்க்கிறேன் 163

சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த நிறுவனத்தில் பெரியவரின் குடும்பத்தைச் சாராத ஒரு வழக்கறிஞரும் பாகஸ்தராயிருந்தது நினைவுக்கு வர அவரை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்று யோசித்தேன். அவர் பெரியவரின் குடும்ப வக்கீலாக இருந்ததால் அவரை அழைத்து விவரத்தைக் கூறிவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன்.

அவரும் நான் கூறியதை உடனே குடும்பத்தினருக்கு தெரிவித்துவிடுவதாக உறுதியளித்தார்.

அவர் என்ன சொன்னாரோ எப்படி சொன்னாரோ தெரியவில்லை. அடுத்த பத்து நிமிடத்தில் நிறுவனத்தினுடைய இரண்டு பாகஸ்தர்கள் (அதாவது இரண்டாவது தாரத்தின் மகன்கள் இருவர்) என்னுடைய அலுவலகத்திற்கு வந்தனர்.. கூடவே அந்த வழக்கறிஞரும்..

அவர்களுடைய முகத்தைப் பார்த்ததுமே அவர்களுடைய மனநிலை எனக்கு தெளிவாக புரிந்தது.

நான் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவிடம் வங்கியில் காத்திருந்த மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்ள கூறிவிட்டு என்னுடைய அறைக்கு சென்று அவர்களை சந்தித்தேன்.

பாகஸ்தர்களுள் ஒருவர் கோபத்துடன் என்னைப் பார்த்தார். ‘சார் ஏற்கனவே நீங்க செஞ்ச முட்டாள்தனத்தாலதான் எங்க குடும்பத்துல பிரச்சினை வந்து நல்லாருந்த எங்கப்பாவ இழந்துட்டோம். இனியும் முட்டாத்தனமா ஏதாவது செஞ்சீங்க நாங்க சும்மாருக்க மாட்டோம் சொல்லிட்டேன். அத நேர்ல சொல்லிட்டு போலாம்னுதான் வந்தோம்.. நாங்க வரோம்.’ என்றவாறு எழுந்தார்.

நான் பொங்கிவந்த என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களுடன் வந்த வழக்கறிஞரைப் பார்த்தேன். ‘என்ன சார் விஷயம்? எதுக்கு இப்ப இவர் இவ்வளவு கோபப்படறார்? ஒங்க மேனேஜிங் பார்ட்னர் ஆப்பரஷேன நிறுத்தச் சொல்லி ஃபோன் பண்ணார். இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவரோட ஆள் வந்து இந்த லெட்டரையும் குடுத்து என்னோட அக்னாலட்ஜ்மெண்ட்டும் வாங்கிட்டு போய்ட்டார். உங்க பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட்ல ஒரு பார்ட்னர் விலகினாலும் பார்ட்னர்ஷிப் டிசால்வ் ஆயிரும்னு சொல்லியிருக்கீங்களாம்.. அதும்படி நான் விலகிட்டேன் அதனால பார்ட்னர்ஷிப்புக்கு நீங்க சாங்ஷன் பண்ண ஓவர் டிராஃப்டுல இனி எந்த ஆப்பரேஷனும் அலவ் பண்ணக்கூடாதுன்னு எழுதி குடுத்துருக்கார். அத பார்த்துட்டு நான் ஒங்க பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட்ட படிச்சேன். அவர் சொல்லியிருக்கறாமாதிரிதான் அதுல இருக்கு. என்னைய என்ன பண்ண சொல்றீங்க? ஒங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ இனிமே அந்த கணக்குல நீங்க எந்த வரவு செலவும் செய்ய முடியாது. அத ஃப்ரீஸ் பண்ணியாச்சு.’ என்றேன்.

நான் பேசி முடிக்கும் முன்னரே குடும்பத்தில் கடைக்குட்டி பாகஸ்தர் எழுந்து என்னுடைய சட்டையைப் பிடித்து அடிக்க வர அதைப் பார்த்த என்னுடைய பணியாளர்களும் வங்கியில் குழுமியிருந்த மற்ற வாடிக்கையாளர்களும் என்னுடைய அறைக்குள் ஓடிவர அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஒரு குட்டி கலவரமே நடந்துவிட்டது.

அவருடன் வந்திருந்த வழக்கறிஞர் என்னுடைய சட்டையைப் பிடித்திருந்த பாகஸ்தரின் கரத்தை பிடித்து விலக்கினார். ‘டேய்.. என்ன இது சின்னப் பையனாட்டம்? எதுக்கு அவர் மேல கோபப்படறே.. இந்த க்ளாஸ போடும்போதே தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. அப்போ உங்கண்ணன் சொன்னா சொன்னதுதான்னு சொன்னேள்.. இப்ப பாரு.. அந்த களவாணிப்பய செஞ்ச காரியத்த? அத சொன்னதுக்கு இவர ஏண்டா அடிக்க போற? வாய மூடிக்கிட்டு இங்க இருக்கறதானா இரு.. இல்லையா, போய் கார்ல ஒக்கார். நானும் ஒங்கண்ணாவும் பேசிட்டு வரோம்..’ என்று இரைய அவர் கோபத்துடன் என்னை முறைத்து பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

நானும் சட்டையை சரி செய்துக்கொண்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்து என்னுடன் பணிபுரிந்தவர்களை போய் வேலைய பாருங்க என்பதுபோல் சைகை செய்தேன். அவர்களும் அறையில் குழுமியிருந்த வாடிக்கையாளர்களும் கலைந்து சென்றனர்.

சிறிது நேர சங்கடமான மவுனத்திற்குப் பிறகு பெரியவரின் மகன், ‘மன்னிச்சிருங்க சார்.. அவனுக்காக நா ஒங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இருந்தாலும் நீங்க முன்ன பின்ன யோசிக்காம செஞ்ச காரியந்தான் இவ்வளவு பெரிய பிரச்சினைய உருவாக்கியிருக்கு..’ என்றார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். ‘என்ன சார் சொல்றீங்க? எனக்கு புரியலை.. நா என்ன பண்ணேன்னு சொல்றீங்க?’

அவர் பதிலளிக்க வாய் திறந்ததும் அவரை கையமர்த்திவிட்டு வழக்கறிஞர் என்னைப் பார்த்தார். ‘சார் நீங்க அன்னைக்கு பெரியவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்ததுலருந்துதான் இந்த பிரச்சினையே வந்துது.. அன்னைக்கு இவனோட அம்மா பெரியவர் கூப்ட்டு கேக்காத மாதிரி வீட்டுக்குள்ளாற போனதும் நீங்க காப்பி குடிச்ச க்ளாச அந்தம்மா குப்பையில வீசியெறிஞ்சதும் பெரியவர ரொம்ப அப்செட் செய்யப்போயி வீட்ல அன்னைக்கி ஒரு பெரிய ரகளையே நடந்திருச்சி சார். அதுக்கப்புறம்தான் பெரியவர் வேணும்னே அவர் பேர்லருந்த டெப்பாசிட் ரெசீட்சையெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து ஒங்கக்கிட்ட குடுத்துருக்கார். அப்பவாவது நீங்க இவங்கக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செஞ்சிருக்கலாம்.. நீங்க பாட்டுக்கு அத எல்லாம் கலெக்ட் பண்றதுக்கு பேங்குகளுக்கு அனுப்பிட்டீங்க. சில பேங்க் மேனேஜர்ங்க இவங்கள போயி பார்த்து இத தடுக்க சொல்லியிருக்காங்க. அன்னைக்கும் வீட்ல பெரிய ரகளையே நடந்துது.. இவரோட அண்ணா கோச்சிக்கிட்டு வீட்ட விட்டே போய்ட்டார். பெரியவர் அந்த அதிர்ச்சியில படுத்தவர்தான்.. எழுந்திருக்கவேயில்ல.. அதுக்கு மறைமுகமா நீங்கதான் காரணம்னு அவங்க வீட்ல எல்லாருமே நினைக்கறாங்க.. அதத்தான் இவரும் இவரோட தம்பியும் இப்ப சொன்னது..’ என்றார் மூச்சு விடாமல்.

அதைக் கேட்டதும் எனக்கும் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. நாம் ஏதோ செய்யப் போக இது இப்படி முடிந்துவிட்டதே என்றிருந்தது.

‘இப்ப என்னடான்னா பெரியவரோட மூத்த தாரத்து பையன் சொன்னதவச்சி நீங்க ஆப்பரேஷன ஸ்டாப் பண்ண போறேன்னு சொல்றீங்க. பெரியவரோட ஆத்ம சாந்திக்கு இன்னும் எவ்வளவோ சடங்குங்க இருக்கு. இந்த நேரத்துல இவங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டே வெளிய வரக்கூடாது.. ஒங்க ஃபோன் வந்ததுன்னு இவங்கக்கிட்ட சொன்னதுமே ரெண்டு பேரும் கொதிச்சி போய்ட்டாங்க. அதுல சின்னவருக்கு இயல்பாவே கோவம் ஜாஸ்தி. அதான் அப்படி பிஹேவ் பண்ணிட்டார்.’ என்று தொடர்ந்த வழக்கறிஞரைப் பார்த்தேன்.

‘என்ன சார், நீங்களே இப்படி சொன்னா எப்படி? நீங்க பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் ப்ரிப்பேர் பண்ணப்பல்ல இதப்பத்தி யோசிச்சிருக்கணும்? இந்த ஓவர்டிராஃப்ட நான் ரெக்கமண்ட் செஞ்சிருந்தேன்னா இந்த கண்டிஷன முதல்லயே பார்த்து சொல்லியிருப்பேன். ஆக்சுவலா இப்படியொரு கண்டிஷன இருக்கற பார்ட்னர்ஷிப் ஃப்ர்முக்கு எந்த பேங்க்லயும் இவ்வளவு பெரிய ஓவர்டிராஃப்ட சாங்ஷன் பண்ண மாட்டாங்க.’ என்று நான் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள் பெரியவருடைய மகன் மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்டார்.  

‘என்ன சார் சொல்ல வரீங்க? அப்படியென்ன கண்டுட்டீங்க எங்க ஃபார்ம பத்தி?’

‘சார் நா சொல்ல வந்தத முழுசா கேக்காம கோபப்படாதீங்க. இப்படியொரு கண்டிஷன் ஒங்க பார்ட்னர்ஷிப்ல இருக்கறதுதான் பிரச்சினையே.. யாராவது ஒரு பார்ட்னர் கோச்சிக்கிட்டு வெளியேறுனா கூட ஒங்க பார்ட்னர்ஷிப் டிசால்வாயிரும். புதுசா வேறொரு அக்ரீமெண்ட் போட வேண்டியிருக்கும்..’

‘அதுக்கென்ன சார்.. புதுசா ஒன்னு போட்டுட்டா போச்சி.. இதுக்கு போயி லோன் கிடைக்காதுங்கற மாதிரி பேசறீங்க?’ என்று மீண்டும் அவர் குறுக்கிட என்னையுமறியாமல் எனக்கும் கோபம் வந்தது.

‘சார்.. அர்த்தமில்லாம பேசாதீங்க. நீங்க புதுசா ஒரு அக்ரீமெண்ட் போடற வரைக்கும் இந்த ஓவர்டிராஃப்ட நீங்க யூஸ் பண்ண முடியாது. போறுமா?’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் அப்படியே அதிர்ச்சியில் வாயை மூடிக்கொண்டார். அவருடன் வந்திருந்த வழக்கறிஞரைப் பார்த்தேன். ‘ஏன் சார் இது ஒங்களுக்கு தெரியாதா? அதுமட்டுமா, ஒங்க புது பார்ட்னர்ஷிப்புக்கு புதுசா மறுபடியும் அப்ளிகேஷன் அனுப்பி எங்க எச்.ஓவுல சாங்ஷன் பண்றவரைக்கும் ஒங்களால ஒன்னும் பண்ண முடியாது.. அதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாகும்.. அதுவரைக்கும் என்ன பண்ணுவீங்க?’

இருவரும் தொடர்ந்து மவுனம் சாதிக்க.. நான் தொடர்ந்தேன்..

‘அதனால கோபப்படறத விட்டுட்டு நிதானமா யோசிங்க.. எனக்கு ஒரேயொரு வழிதான் தோனுது.. சொல்றேன்.. ஒங்களுக்கு விருப்பம் இருந்தா செய்ங்க.. கட்டாயம் இல்லை..’

இருவரும் என்னைப் பார்த்தனர். ‘சொல்லுங்க சார்.’ என்றார் பெரியவரின் மகன் தயக்கத்துடன்.

‘இப்போதைக்கு ஒங்க மூத்தவரோட சமாதானமா போயி அவர் கொடுத்த லெட்டர வித்ட்றா பண்ண வைங்க. அதான் நல்லது. அதுக்கப்புறம் ஒங்கப்பாவோட சடங்கெல்லாம் முடிஞ்சதும் புதுசா ஒரு அக்ரிமெண்ட் போட்டு ஒரு காப்பியோட இந்த ஓவர்டிராஃப்ட புது நிறுவனத்துக்கு அப்படியே சாங்ஷன் செய்யச் சொல்லி லெட்டர் ஒன்னு குடுங்க. நான் ரெக்கமெண்ட் பண்ணி அனுப்பறேன். அதுக்கு எங்க எச்.ஓ ஒத்துக்கிட்டு சாங்ஷன் பண்ணா சரி.. இல்லையா, மறுபடியும் ஒரு புது ப்ரொப்போசல அனுப்பி சாங்ஷன் வாங்கிக்கலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாங்ஷன் வாங்கித்தரவேண்டியது என் பொறுப்பு. அப்புறம் ஒங்க இஷ்டம்.. இல்லே.. ஒங்களுக்கு வேற ஏதாவது பேங்க்ல அப்ளை பண்ணனும்னு தோணுதா, தாராளமா செய்ங்க..’ என்றேன்.

அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சிறிது நேரம் குழம்பிப் போய் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு வழக்கறிஞர், ‘இந்த யோசனையத்தான் சார் நானும் இங்க வர்றதுக்கு முன்னால இவங்கக்கிட்ட சொன்னேன்.. கேக்கலையே..’ சப்பைக்கட்டு கட்ட முயல உடன் வந்திருந்தவர் அவர் மீது எரிந்து விழுந்தார்.

‘எதுக்கு மாமா பொய் சொல்றேள்.. நீங்க சொன்னத இவர்கிட்ட அப்படியே சொன்னேன்னு வச்சுக்குங்க.. அப்புறம் ஒங்கள இனி இந்த ரூமுக்குள்ளயே இவர் விடமாட்டார்.. செத்த நேரம் வாய மூடிண்டு இருங்கோ..’

அடப்பாவி மனுஷா என்று மனதுக்குள் அவரை சபித்தேன்.. நிறைய (சாரி.. சில) வழக்கறிஞர்கள் இவரைப் போலத்தான். உதவி செய்கிறேன் என்று கூறிக்கொண்டு உபத்திரவம்தான் செய்வார்கள்..

தொடரும்..29 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 162

பெரியவரின் இறுதி ஊர்வலத்திற்கு ஆட்களோடு ஆட்களாக கலந்துக்கொண்டேன்.

ஒருவருடைய மதிப்பு அவருடைய மரணத்திற்குப் பிறகுதான் தெரியும் என்பதை அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு திரண்டிருந்த மக்கட்கூட்டம் தெளிவுபடுத்தியது.

அன்று இரவு வீடு திரும்பும் வழியெல்லாம் அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர் மரிப்பதற்கு முன்பு என்னிடம் ஒப்படைத்திருந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றப்போகிறேன் என்பதை நினைத்தபோது மலைப்பாக இருந்தது.

என்னுடைய வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு அவர் எடுத்த முடிவு என்னை ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கவைத்திருப்பதுபோல் எனக்கு தோன்றியது.

சாதாரணமாக வைப்பு நிதியில் ஒருவர் கணக்கு துவங்கும்போது அது காலாவதியாகும்போது அசலையும் வட்டியையும் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை அதற்குண்டான படிவத்திலேயே குறிப்பிட வேண்டும்.

சில வாடிக்கையாளர்கள் வைப்பு நிதி தொகையை ஒருவருக்கும் கூடுதலாக அளிக்க நினைத்து அதற்கு படிவத்தில் இடமில்லாதிருக்கும் பட்சத்தில் அதை தனியொரு கடிதம் மூலமாகவும் எழுதிக் கொடுப்பதுண்டு.

ஆகவே பெரியவர் என்னுடைய வங்கிக்கு அளித்ததாக அவர் கையொப்பமிட்டிருந்த கடிதத்தில் நான் எழுதியிருந்ததை வைத்தே அனைத்து தொகையையும் அவருடைய மனைவிக்கு கொடுத்துவிட முடியும்.

ஆனால் அவர் வெற்று காகிதத்தில்தான் கையொப்பமிட்டிருந்தார் என்பது தெரியவந்தால் நிச்சயம் அது என்னை பிரச்சினையில் மாட்டிவிட வாய்ப்பிருந்தது. அதுவும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம்.

அவர் வெற்றுத்தாளை கொடுத்தனுப்பிய ஓட்டுனருக்கு இந்த விவரம் தெரிந்திருக்குமா என்பதும் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பெரியவர் கொடுத்தனுப்பிய உறையும் மூடப்படாமலிருந்ததால்தான் எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது.

சரி வருவது வரட்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் நடந்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

பெரியவரின் மரணம் அவருடைய குடும்பத்தினர் நடத்திவந்த நிறுவனத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் எனக்கு தெரிந்திருந்துதானிருந்தது.

என்னுடைய காசாளர் தெரிவித்தபடி மூத்த தாரத்து மகனான நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்தி உண்மைதான் என்று எனக்கு தெரியவந்தபோது இந்த எண்ணம் மேலும் உறுதிபட இதை எப்படி எதிர்கொள்ளுவதென்பதுதான் என்னுடைய பிரதான கவலையாக இருந்தது.

நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி என்னுடைய கிளையின் மிகப் பெரிய கடன் கணக்குகளில் அந்த நிறுவனத்தின் கணக்கும் ஒன்று. சாதாரணமாகவே குடும்ப நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு எல்லா வங்கிகளுமே யோசிப்பதுண்டு..

என்னுடைய அனுபவத்தில் அத்தகைய நிறுவனங்கள்  பாகஸ்தர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு (முக்கியமாக வீட்டிலுள்ள பெண்களால்தான் இந்த பிரச்சினை துவங்கும்.. அதுவும் கடைக்குட்டிக்கு திருமணம் நடந்த அடுத்த சில மாதங்களிலேயே..) ஆளுக்கொரு பங்காக பிரித்துக்கொடுக்கப்பட்டு சின்னாபின்னமாகி போவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டு என்னுடைய வங்கியிலிருந்து கடனாக கொடுக்கப்பட்டிருந்த கணிசமான தொகையை வசூலிப்பது பிரச்சினையாகிவிட்டால் என்ன செய்வதென்ற கவலையும் சேர்ந்துக்கொண்டது.

பெரியவர் வைப்புநிதியில் விட்டுச் சென்ற தொகை என்னுடைய கிளையிலிருந்து கடனாக கொடுத்திருந்த தொகைக்கு ஏறத்தாழ ஈடாக இருந்தது எனக்கு ஒருவகையில் ஆறுதலாக இருந்தாலும் அதை அவருடைய குடும்ப நிறுவனத்தின் கடனுக்கு வரவு வைத்துக்கொள்வது அவருடைய இறுதி விருப்பத்திற்கு துரோகம் செய்ததுபோலாகுமே என்றும் தோன்ற அவர் வீட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நான் எடுத்த முடிவை நொந்துக்கொண்டேன்..

எப்படியும் அடுத்த சில நாட்களுக்கு இந்த பிரச்சினையைப் பற்றி நான் கவலைப்பட தேவையில்லை என்று நினைத்தேன்.

ஆனால் அடுத்த நாள் காலை என்னுடைய அலுவலகத்தில் மும்முரமாய் இருந்த நேரத்தில் பெரியவருடைய மூத்த தாரத்து மகனிடமிருந்து வந்த தொலைப் பேசி நான் நினைத்திருந்தது தவறு என்பதை உறுதிபடுத்தியது.

‘சார்.. நான் கூப்பிட்டது நேத்து ராத்திரியிலருந்து நான் அந்த ஃபர்ம்ல பார்ட்னர் இல்லேங்கறத தெளிவுபடுத்தத்தான். இன்னைக்கி க்ளியரிங்ல வந்துருக்கற எந்த செக்கையும் நீங்க பாஸ் பண்ணக்கூடாது. அது நான் சைன் பண்ண செக்காயிருந்தாலும். அதே மாதிரி அந்த லோன் அக்கவுண்ட்ல டெப்பாசிட் செஞ்சிருக்கற எந்த செக்கையும் அதுல க்ரெடிட் பண்ணக்கூடாது. நேத்து ஒங்க பாங்க் க்ளோஸ் பண்ணப்போ எந்த அளவு டெபிட் பேலன்ஸ் இருந்ததோ அதுக்கு மேல ஒரு பைசா கூட இருந்தாலும் அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, சொல்லிட்டேன்.. என் கைப்பட ஒரு கடிதமும் எழுதி என் டிரைவர்கிட்ட குடுத்தனுப்பியிருக்கேன்.’ என்றவர் நான் பதிலளிக்கும் முன் இணைப்பைத் துண்டித்துவிட நான் பதற்றத்துடன் என்னுடைய தலைமை குமாஸ்தாவை அழைத்து அன்று காலை க்ளியரிங் ஹவுசில் இருந்து வந்திருந்த அந்த நிறுவனத்தின் செக்குகள் ஏதாவது கணக்கில் பற்று வைத்திருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். என்னுடைய துரதிரஷ்டம் ஏறத்தாழ பத்து, பதினைந்து செக்குகள் பாசாகியிருந்தன. அதன் விளைவாக முந்தைய தின இறுதியிலிருந்த தொகை சில லட்சங்கள் அதிகமாகியிருந்தன.

இப்போது என்ன செய்வது?

வங்கியின் நியதிப்படி வாடிக்கையாளரின் உத்தரவு எந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்ததோ அந்த நேரம்வரை கணக்கில் பற்றோ வரவோ வைத்திருந்த தொகைகளை ரத்து செய்யத் தேவையில்லை. ஆகவே நிர்வாகத்தின் பாகஸ்தர் என்னை அழைத்த நேரத்தை அந்த கணக்கு தொடர்பான புத்தகத்திலும் அதனுடைய கோப்பிலும் குறித்து வைத்தேன்.

அந்த நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தருக்கு இத்தகைய உத்தரவை நிர்வாகத்தின் சார்பாக பிறப்பிக்க உரிமையிருந்தாலும் அதை உடனே செயல்படுத்துவதில் ஒரு சட்டப் பிரச்சினை இருந்தது. அவருடைய உத்தரவின் மீது நிறுவனத்தின் மற்ற பாகஸ்தர்களுடைய விருப்பத்தை தெரிந்துக்கொள்ளாமல் கணக்கின் வரவு செலவை நிறுத்திவிட்டால் சட்ட விரோதமாக வங்கி மேலாளர் செயல்பட்டதால் எங்களுடைய வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டதென அவர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வாய்ப்பிருந்தது.

ஆகவே நிர்வாக பாகஸ்தரின் இந்த உத்தரவின் விவரத்தை உடனே மற்ற பாகஸ்தர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய நிர்பந்தத்தில் நான் இருந்தேன். அதே சமயம் பெரியவருடைய இழப்பின் துக்கத்திலிருந்த அவருடைய குடும்பத்தினரை எப்படி தொந்தரை செய்வதெனவும் யோசித்தேன்.

சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. நிறுவனத்தில் பெரியவரின் குடும்பத்தைச் சாராத ஒரு வழக்கறிஞரும் பாகஸ்தராயிருந்தது நினைவுக்கு வர அவரை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்று யோசித்தேன். அவர் பெரியவரின் குடும்ப வக்கீலாக இருந்ததால் அவரை அழைத்து விவரத்தைக் கூறிவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன்.

அவரும் நான் கூறியதை உடனே குடும்பத்தினருக்கு தெரிவித்துவிடுவதாக உறுதியளித்தார்.

தொடரும்..

28 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 161

நான் என் அலுவலகத்திற்கு திரும்பி ரசீதுகளை வரிசைப் படுத்தி பட்டியலிட்டு நிமிர்ந்தபோது மொத்த தொகையின் அளவைக் கண்டு பிரமித்துப்போனேன்..

அந்த கற்றையிலிருந்த ரசீதுகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்ததால் அன்று இரவு உணவுக்குப் பிறகு என்னுடைய அலுவலக அறையிலமர்ந்து அதை வங்கிகள் வாரியாக பிரித்து ஒவ்வொரு வங்கிக்கும் அனுப்ப வேண்டிய கடிதங்களையும் தயாரித்து முடித்தேன். ஏறத்தாழ நகரிலிருந்த எல்லா அரசு வங்கிகளிலும் அவர் பணத்தை முதலீடு செய்திருந்தார்.

ஒவ்வொரு வங்கியிலுமிருந்தும் கணிசமான தொகை எடுக்கப்படவிருந்ததால் நிச்சயம் அவ்வங்கி மேலாளர்கள் பெரியவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களிலிருந்த வங்கி கிளைகளுக்கு வேண்டுமானால் நான் குறிப்பிட்ட தொகை சிறியதாக இருக்கலாம்.ஆனால் தூத்துக்குடி போன்ற நடுத்தர நகரங்களில் ஏற்கனவே தேவைக்கும் அதிகமாகவே வங்கி கிளைகள் இருந்த காலம் அது.

ஆகவே வங்கிகள் தங்களுக்குள்ளேயே போட்டி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டியிருந்தது. ஊரிலிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களைச் சுற்றி ஏறத்தாழ எல்லா வங்கி மேலாளர்களுமே முற்றுகையிட்டுகொண்டிருப்பர். புதிதாக வைப்பு நிதி கணக்குகள் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருந்த காலத்தில் உள்ள கணக்குகளையாவது காப்பாற்றிக்கொள்வதில் என்னைப் போன்ற மேலாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டியிருந்தது.

ஒரு வைப்பு நிதியின் காலம் முடிவடைந்தாலும் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளருக்கு அதைக்குறித்து அறிவிக்காமல் இருப்பது ஒருவகையில் அது கைவிட்டு சென்றுவிடாமல் இருக்க சில மேலாளர்கள் கடைபிடிக்கும் டெக்னிக்தான். அறிவிப்பை குறித்த காலத்தில் அனுப்பினால் வாடிக்கையாளர் எங்கே அதை எடுத்துவிடுவாரோ என்ற பயம்தான் இதற்கு காரணம்.

சில வாடிக்கையாளர்களும் அப்படித்தான். ஒரு வங்கியில் முதலீடு செய்திருந்த கணக்கை அதன் காலம் முடிந்ததும் வேறொரு வங்கிக்கு மாற்றிவிடுவார்கள். கூடுதல் வட்டி கிடைக்கும் என்ற நோக்கம்தான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் வங்கி மேலாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக இருப்பதுண்டு.

பெரியவர் நினைத்ததைப் போலவே அரசு வங்கிகள் சில நேரங்களில் அவர்களுடைய  வாடிக்கையாளர்கள் மரிக்க நேர்ந்தால் அவருடைய வாரிசுகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்வதில் காலந்தாழ்த்துவார்கள். அதற்கு முக்கிய காரணம் அரசு வங்கிகளின் வர்த்தக அளவு (Business size). அரசு வங்கிகளுடைய வர்த்தக அளவு எங்களைப் போன்ற தனியார் வங்கிகளைவிட பத்து மடங்கு இருக்கும். வாடிக்கையாளர்களின் அளவுக்கதிகமான எண்ணிக்கை அவர்களுக்கு மேலாளர்களின் பிரத்தியேக சேவை (individual service) கிடைக்கவிடாமல்  செய்துவிட வாய்ப்பிருக்கிறது.

******

அடுத்த நாள் காலை அலுவலகத்துக்கு சென்றதுமே முதல் வேலையாக பெரியவருடைய ரசீதுகளை அதனதன் வங்கிகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு என்னுடைய அலுவல்களில் மூழ்கிப்போனேன்.

அன்றும் என்னுடைய உதவி மேலாளர் விடுப்பிலிருந்ததால் பகலுணவு இடைவேளை வரை எதைப்பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் அலுவல்கள் இருந்தன.

நான் பகலுணவுக்காக சென்றுவிட்டு திரும்பி வந்ததும் என்னுடைய தலைமைக் குமாஸ்தா, ‘சார் நீங்க லஞ்சுக்கு போனதும் ரெண்டு மூனு பாங்குலருந்து ஃபோன் வந்தது. நீங்க வந்ததும் உடனே கூப்பிடணுமாம்..’ என்று தொலைப்பேசி வந்திருந்த வங்கிகளின் பெயரை என்னிடம் கூறினார்.

எல்லாமே நான் எதிர்பார்த்திருந்த வங்கிகள்தான். சம்பந்தப்பட்ட எல்லா மேலாளர்களையுமே நான் ஏற்கனவே பல சமயங்களில் சந்தித்திருக்கிறேன்.

ஆகவே அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் எனக்கு போதும், போதும் என்றாகிவிட்டது. ‘சார்.. பெரியவர நேர்ல கேக்காம நீங்க அனுப்புன டெப்பாசிட் ரெசீட்ஸ மாத்த முடியாது சார்.. ஐ அம் சாரி..’ என்றனர் ஒட்டுமொத்தமாக.

‘அது ஒங்க இஷ்டம் சார்.. நீங்க வேணும்னா பெரியவர்கிட்ட ஃபோன்ல பேசிக்குங்க.. ஆனா டிலே பண்ணாதீங்க. ஏன்னா அவருக்கு இதனால interest loss ஏற்படக்கூடாது.. அவ்வளவுதான்.’ என்றேன்.

என்னுடைய விளக்கத்தில் திருப்தியடையாத சில மேலாளர்கள் பெரியவருடைய மகன்களை தொலைப்பேசியில் அழைத்து இந்த விஷயத்தை திரித்து கூறிவிட விஷயம் விபரீதமாகி அவருடைய குடும்பத்திலும் பிரச்சினையாகிவிட்டது. பெரியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த நாளே இரண்டு வெற்றுத்தாள்களில் கையொப்பமிட்டு ஒரு உரையிலிட்டு தன்னுடைய ஓட்டுனரிடம் கொடுத்தனுப்பினார். எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ.. நான் அதை என்னுடைய மேசையில் வைத்து பத்திரப்படுத்தினேன்.

‘எங்கப்பாதான் ஒங்ககிட்ட வந்து சொன்னார்னா நீங்க எப்படி சார் இத எங்கக்கிட்ட சொல்லாம செய்யலாம்? இதுக்குத்தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன்னு ஒரு பிரசெண்ட வாங்கிட்டு வந்து நின்னீங்களோ..’

அவர்களுடைய கோபம் அர்த்தமற்றதென தெரிந்தாலும் அனாவசியமாக அவர்களுடைய விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள விரும்பாத நான்.. ‘சார் இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. நீங்க எல்லாருமா சேர்ந்து ஒங்கப்பாக்கிட்ட பேசுங்க. அவங்க என்னெ கூப்ட்டு ரசீட்சையெல்லாம் திருப்பி குடுத்துருங்கன்னு சொல்லட்டும், இத இத்தோட நிறுத்திடறேன்.’ என்றேன்.

ஆனால் அடுத்த சில நாட்களில் பெரியவர் என்னை அழைக்காததிலிருந்து அவர்களால் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது தெரிந்தது.

நான் அனுப்பியிருந்த வங்கிகளுள் சில மற்றுமே ரசீதுகளுக்கான காசோலையை அனுப்பிவைத்தன. இதை பெரிதுபடுத்தி பிரச்சினையை கிளப்புவதால் பயனில்லை என்பதால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன்.

பெரியவர் என்ன செய்தாரோ தெரியவில்லை எல்லா ரசீதுகளுக்கான காசோலைகளும் அந்த வார இறுதிக்குள் வந்து சேர்ந்தன.  

பெரியவர் ஏற்கனவே என்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்ததால் நான் அவரளித்த ரசீதுகளிலிருந்த தொகையையும் அதற்குண்டான வட்டியையும் சுமார் இருபத்தைந்து ரசீதுகளாக பிரித்து பெரியவருடைய பெயர் மற்றும் வேறொருவருடைய பெயரையும் சேர்க்கும் விதமாக தயாரித்து வரவு வைத்தேன்.

பெரியவர் பயந்ததைப் போல அவருக்கு ஏதாவது விபரீதம் நடந்துவிடக்கூடிய சூழ்நிலை நேர்ந்தால் அவருடைய மனைவியுடைய பெயரையும் சேர்த்துக்கொள்ள ஏதுவாகவே அப்படி செய்தேன். அது வங்கி நியதிகளுக்கு முரண்பட்டதென எனக்குத் தெரிந்தாலும் பெரியவருடைய தர்மசங்கடமான நிலையை மனதில் கொண்டும்.. அவருக்கு அப்படியேதும் நேர்ந்துவிட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையிலுமே அப்படி செய்வதென தீர்மானித்தேன்.

அடுத்த சில நாட்கள் அவர் வருவார், வருவார் என காத்திருந்தேன். ஆனால் அவர் வரவேயில்லை.

என்னுடைய காசாளர் மூலமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதை தெரிந்துக்கொண்டேன். ‘இந்த டெப்பாசிட் விஷயம் அவங்க குடும்பத்துல பெரிய விவகாரமாயிருச்சின்னு பேசிக்கறாங்க சார்.. பெரியவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சின்னு கேள்விப்பட்டேன்.. ஹாஸ்பிட்டல்ல சேக்காம வீட்லயே டாக்டர்ங்கள வச்சி ட்ரீட் பண்றாங்க போலருக்கு.’ என்றார்.

இந்த சூழ்நிலையில் அவரை சென்று சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தாலும் ஏற்கனவே அவருடைய குடும்பத்தினருக்கு என்னை அவ்வளவாக பிடிக்காது என்பதால் என்னுடைய காசாளரையே சென்று கண்டுவிட்டு வருமாறு கேட்டேன்.

அவரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அவருக்கு பழக்கமான அலுவலர் வழியாக பெரியவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் குடும்பத்தில் நடந்த குழப்பத்தில் மூத்த தாரத்து மகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவலறிந்து என்னிடம் வந்து கூறினார்.

அடுத்த சில நாட்களில் நான் எது நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தேனோ அது நடந்தது.

பெரியவர் காலமாகிப் போனார். என்னுடைய கிளையில் அவர் முதலீடு செய்திருந்த கணக்குகளின் படிவங்களில்கூட அவர் கையொப்பமிட்டிருக்கவில்லை. ஆனால் அவர் என்னை சந்தித்த அடுத்த நாள் இரண்டு வெற்றுத்தாள்களில் கையொப்பமிட்டு அவருடைய ஓட்டுனர் வழியாக என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தது நினைவுக்கு வர அதை எடுத்து நானே ஒரு கடித்தை தயார் செய்து என்னுடைய கிளை ரிக்கார்டுகளில் பதிந்துகொண்டேன்..

அக்கடிதத்தில் அவருடைய பெயரில் பல வங்கிகளிலுமிருந்த எல்லா ரசீதுகளையும் மாற்றி என்னுடைய வங்கியில் அவர் பெயரில் ஓராண்டு வைப்பு நிதியில் வைக்கவேண்டுமென்றும் அதற்குள் அவர் மரணமடைய நேர்ந்தால் முழுதொகையும் அவருடைய மனைவியின் பெயருக்கு மாற்றிவிடவேண்டும் என்று எழுதியிருந்தேன்.

பெரியவரின் இறுதிச்சடங்குக்கு போகாமல் இருந்தால் நன்றாயிருக்காதே என்று என்னுடைய காசாளரை துணைக்கு அழைத்துக்கொண்டு என்னுடைய வங்கியின் சார்பாக ஒரு மலர் வளையத்தையும் எடுத்துக்கொண்டு சென்றேன். நான் சென்ற நேரத்தில் பெரியவரின் உடலை வீட்டு முற்றத்தில் தரையில் கிடத்தியிருந்த நிலைகண்டு பதறிப்போனேன்..

கேட்டால் அதுதான் சாஸ்திரமாம். அவர்களுடைய குடும்பங்களில் அவர்கள் கடைபிடிக்கும் பழக்கமாம். அதைப்பார்க்க சகிக்காமல் என்னுடைய மரியாதையை செலுத்திவிட்டு உடனே வெளியேறினேன்..

‘என்ன அக்கிரம் பாத்தீங்களாண்ணே. பெரியய்யா ராசா மாதிரி வாழ்ந்தாங்களே.. இன்னைக்கி இந்த பசங்க அவங்களுக்கு செய்யற மரியாதையை பாருங்க.. நம்ம சாதியில இப்படியெல்லாம் நடக்குமாண்ணே.. என்ன சாஸ்திரமோ போங்கண்ணே.. செத்தவுடனே அது பொணமாம்.. இன்னைக்கி ராத்திரிக்குள்ள எரிச்சிரணுமாம்.. அதுலதான் குறியாயிருக்கானுங்க.. அய்யாவ நம்ம ஊர்ல எவ்வளவு பேருக்கு தெரியும்.. ?கேவலம் அவர ஒரு மேசையில துணிய விரிச்சி கிடத்தியிருந்தாக்கூட வந்து பாக்கறவங்களுக்கு வசதியா இருக்குமில்லண்ணே.. தரையில கிடத்தி வச்சிருக்கறத பாருங்கண்ணே.. இத்தன சொத்து சுகம் இருந்து என்னண்ணே பிரயோஜனம்..?’ என்று வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தில் பணியாற்றிய பணியாட்களின் பேச்சைக் கேட்டபோது அவர்களுக்கு பெரியவர் மீதிருந்த பாசம்கூட சொந்த பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தவாறே அங்கிருந்து கிளம்பினேன்..

தொடரும்..

27 June 2006

Thirumbi Parkiren 160

தேவாலயத்திலிருந்து வெளிவந்தபோது என் மனம் அமைதியடைந்திருந்தது. உள்ளே சென்றபோது என் மனதிலிருந்த அந்த பழிவாங்கும் எண்ணம் வெளியே வந்தபோது சற்றே தணிந்து போயிருந்தது.

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை யாரிடமும் என் மனைவியிடமும் கூட, பகிர்ந்துக்கொள்வதால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்று தீர்மானித்தேன்.

சம்பவம் நடந்த அன்று என்னுடைய உதவி மேலாளரும் விடுப்பிலிருந்ததால் அலுவலகத்தில் அவருடைய வேலையையும் சேர்த்து நானே பார்க்க வேண்டியிருக்க வேலைப் பளு நெட்டி முறித்தது.

ஒரு நொடிப்பொழுதும் ஓய்வில்லாமல் நான் ஆற்றவேண்டியிருந்த அலுவலக கடமைகள் என்னுடைய மனதில் அன்று காலையில் ஏற்பட்ட காயத்தின் வேதனையை மறக்கச் செய்தன.

அன்று மாலை அலுவலக பணியாளர்கள் எல்லோரும் சென்றபின் அலுவலகப் பகுதியை பூட்டிக்கொண்டு வெளியே பால்கணியில் வந்து நின்றேன். கட்டடத்தின் உயரம் காரணமாக மாலை நேரங்களில் வீசும் கடற்காற்று பால்கணியில் நிற்பதற்கு சுகமாக இருக்கும். அதற்காகவே வராந்தாவில் இருந்த இருக்கைகளில் இரண்டை எடுத்து திறந்தவெளி பால்கணியில் இட்டுக்கொண்டு இருட்டும்வரை நானும் என்னுடைய மனைவியும் அமர்ந்திருப்போம்.

சக்கரங்கள் வைத்த ட்ராலி தொட்டியில் படுத்தவாறே என் இளையமகள் நீல வானத்தை பார்த்துக்கொண்டிருக்க வராந்தாவில் அமர்ந்து குழல் விளக்கொளியினடியில் என் மூத்த மகள் தன்னுடைய வீட்டுப்பாடங்களை செய்துமுடிப்பாள். இரவு எட்டு மணியானதும் நால்வரும் அலுவலகத்தின் பின்பகுதியிலிருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்றுவிடுவோம். இதுதான் வழக்கமாக நடைபெற்றுவந்தது. வார இறுதியில் மட்டும் என்னுடைய மாமனார் வீட்டுக்குச் செல்வோம்.

அன்று மாலை நான் பால்கணிக்கு சென்றபோது மாலை சுமார் ஆறுமணியளவு இருக்கும். நான் சாலையை பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய வளாகத்திற்குள் அம்பாசடர் கார் நுழைவதைப் பார்த்தேன். அதை பார்த்த மாத்திரத்திலேயே என்னுடைய மனம் படபடத்தது. வாகனம் வந்து நின்றும் ஓட்டுனரைத் தவிர யாரும் இறங்கவில்லை.

சில நிமிடங்களில் படியேறி மேலே வந்த ஓட்டுனர் என்னிடம் வந்து தயங்கி நின்றார். ‘சார்.. ஐயா வந்திருக்காங்க.’

நான் கோபத்துடன் அவரைப் பார்த்தேன். ‘ஐயான்னா யார்யா? விவரமா சொல்லுங்க.’

‘என்ன சார் தெரியாத மாதிரி கேக்கீங்க. பெரிய ஐயாதான் வந்திருக்காங்க. அவங்களால படிகட்டுல ஏறி வரமுடியாதுய்யா. ஒங்கள பாத்து பேசணும்னுட்டுதான் வந்திருக்காங்க. நீங்க தயவுசெஞ்சு வந்தீங்கன்னா.. கார்லயே ஒக்காந்து பேசலாம்னு...’

அவர் சாதாரணமாக வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரே என்னைத் தேடி வந்திருக்கிறாரென்றால் காலையில் அவருடைய வீட்டில் நடந்த சம்பவ விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தவாறே ஓட்டுனருடன் சென்றேன்.

வாகனத்தின் பின் கதவை திறந்துவிட்டு நான் ஏறி அமர்ந்ததும் கதவை அடைத்துவிட்டு ஓட்டுனர் அகல நான் உள்ளே அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.

அவரோ நான் சற்றும் எதிர்பாராத விதமாக என் கரத்தைப் பற்றிக்கொண்டு, ‘தம்பி இத ஒங்க காலா நினைச்சி கேக்கறேன். காலையில் என் மனைவி செஞ்ச விஷயம் ரொம்ப முட்டாத்தனமானதுய்யா. அது நீங்க போனதுக்கப்புறந்தான் எனக்கு தெரிஞ்சது. அவ சார்புல நா ஒங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் தம்பி.; என்றார்.

அவருடைய குரலிலிருந்த வேதனை என்னை என்னவோ செய்ய நான் பதறிக்கொண்டு என் கையை விடுவித்துக்கொண்டு, ‘என்னய்யா நீங்க? வயசுல பெரியவங்களா இருந்துக்கிட்டு...’

‘இல்ல தம்பி.. நீங்க மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான் எனக்கு ஆறுதலாருக்கும். ஒங்கள நேர்ல பாத்து பேசிட்டுப்போணும்னுதான் வீட்ட விட்டு வெளியவே போவாத நான் ஒங்கள தேடி வந்துருக்கேன்.’ என்றார்.

நான் வேறு வழியில்லாமல், ‘சரிய்யா.. மன்னிச்சுட்டேன்.’ என்றேன்.

அதற்குப்பிறகு சுமார் அரைமணி நேரம் அமர்ந்து தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும், அவருடைய வணிகத்தைப் பற்றியும், தன் மனைவி மற்றும் முத்த தாரத்துப் பிள்ளைகள் மத்தியில் இலை மறைவு காய் மறைவாய் இருந்து வந்த விரோதத்தைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார்.

‘பணம், காசுன்னு கடவுள் ஒரு குறையும் வைக்கல தம்பி. ஆனா கொஞ்ச நாளா குடும்பத்துல சமாதானம் இல்லைங்க.. என் காலத்துக்கப்புறம் இவனுங்க அடிச்சிக்கிட்டு சாவான்களோன்னு மனசு கிடந்து அடிச்சிக்குது. அதுக்கு முன்னால சொத்தக்கூட சமாதானமா பிரிக்க முடியாது போலருக்கு.. அந்த அளவுக்கு வில்லங்கம் இருக்கு...’ என்றவர்.. திடீரென்று ‘தம்பி ஒங்கக்கிட்ட ஒரு அட்வைஸ் கேக்கணுமே?’ என்றார்.

நான் சொல்லுங்க என்பதுபோல் அவரைப் பார்த்தேன். அவர் அமர்ந்திருந்த பக்கத்து கார் கதவை ஏற்றிவிட்டு, ‘தம்பி நா நாலஞ்சு பேங்க்ல கொஞ்சம் தொகை பிக்ஸட் டெப்பாசிட்ல போட்டு வச்சிருக்கேன். கொஞ்சம் பெரிய தொகைதான். ஒங்கக்கிட்டருக்கற இந்த மரியாத அந்த மேனேசர் பயல்க கிட்டல்லாம் இல்லைய்யா.. அதனால நாளைக்கு இதே நேரத்துல அந்த ரசீதையெல்லாம் கொண்டு வந்து குடுக்கேன். என் பிள்ளைங்களுக்குக் கூட தெரியக்கூடாது. அதையெல்லாம் நீங்களே மாத்தி ஒங்க பேங்கல போட்டுக்குங்க. நா சாவகாசமா வந்து கையெழுத்து போட்டுத் தாரேன்.. எனக்கென்னவோ நா ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்னு தோணுதுய்யா.. அதான்.. நீங்க இன்னைக்கி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துன்னு வந்து நின்னீங்க.. இதுமாதிரி என் அனுபவத்துல இந்த ஊர்ல எந்த பேங்க் மானேசரும் வந்து நின்னதுல்லய்யா.. ஆனா எங்க வீட்ல நடந்தத பாருங்க.. நீங்க போனதுந்தான் நா இதப்பத்தி யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். எனக்கு திடீர்னு ஏதாச்சும் ஆயிருச்சின்னா இந்த பணமெல்லாம் ஒரே பேங்க்ல அதுவும் ஒங்களமாதிரி மேனேசர் பொறுப்புல இருக்கறதுதான் நல்லதுன்னு நினைச்சேன்.. நீங்க என்ன சொல்றீங்க தம்பி..’ என்றார்.

தொடர்ந்து பேசியதன் விளைவோ என்னவோ சிறிது நேரம் மூச்சு விடமுடியாமல் தடுமாறிப்போனார். நான் அவருக்கு குறுக்கி எட்டி அவருடைய கார்கதவை திறந்துவிட்டேன். குளிர்ந்த காற்று வாகனத்துக்குள் பரவ சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு வந்தார். வளாக வாசலில் நின்றுக்கொண்டிருந்த ஓட்டுனர் எங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்த பெரியவர், ‘நான் சொன்னது உங்கக்கிட்டயே இருக்கட்டும் சார்.. நான் நாளைக்கு வரேன்.’ என்றார்.

நான் வாகனத்திலிருந்து இறங்கிக்கொள்ள அது கிளம்பிச்சென்றது.

வாகனம் வளாகத்தை விட்டு வெளியேற படிகளில் ஏறி பால்கணியை அடைந்தேன். ‘யாருங்க அது.. பங்களாத் தெரு ஆளுங்க மாதிரியிருக்கு.’ என்றார் என் மனைவி.. ‘அப்படியென்ன காருக்குள்ள ஒக்காந்து அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க.. அவங்கல்லாம் --------------ங்களாச்சே..?’

‘ஒன்னுமில்லை.. நா இன்னைக்கி அவர் வீட்டுக்குத்தான் போயிருந்தேன். அதான் நன்றி சொல்லிட்டு போக வந்திருக்கார்.’ என்றேன்.

என் மனைவி என்னை நம்பாததுபோல் பார்த்தார். ஆனால் மேலே ஒன்றும் பேசவில்லை..

அடுத்த நாள் மாலை பெரியவர் மீண்டும் வந்திருந்து தன்னுடன் கொண்டுவந்திருந்த ஒரு கத்தை டெப்பாசிட் ரசீதுகளை என்னிடம் கொடுத்து, ‘தம்பி இதுல எத்தன இருக்குன்னுக்கூட தெரியாது. சிலதெல்லாம் மெச்சூர் ஆகியே ஒரு வருசத்துக்கும் போல.. ஒரு பேங்குலருந்தும் நோட்டீசும் வரல பாருங்க. இதான் இந்த கவர்ண்மெண்ட் பேங்குங்க சர்வீஸ் செய்யற லட்சணம்...’ என்றார்.

நானும் மேலெழுந்த வாரியாக சில ரசீதுகளைப் பார்த்தேன்.. அவர் கூறியது உண்மைதான். நான் கண்டவற்றுள் சில ரசீதுகள் காலாவதியாகி பதினெட்டு மாதங்கள் ஆகியிருந்தன. ‘ஐயா இதுல ஒரு பிரச்சினையிருக்குங்க.. இந்த ரசீதுகளையெல்லாம் அந்தந்த பேங்குல புதுப்பிக்காம எங்க பேங்குக்கு மாத்துனீங்கன்னா இடைப்பட்ட காலத்துக்கு வட்டி கிடைக்காதுங்கய்யா.. அதனால..’

அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். ‘அதனால அங்கனயே புதுப்பிச்சிட்டு அப்புறமா ஒங்க பேங்குக்கு மாத்திரலாங்கறீங்க?’

நான் ஆமாம் என்று தலையை அசைக்க அவர் சிரித்தார். ‘இதான் தம்பி ஒங்கள மாதிரி சின்ன பேங்க் மேனேசர்ங்க.. ஒங்களுக்கு டெப்பாசிட் கிடைக்கணுங்கறத விட எனக்கு வட்டி நஷ்டம்னு சொல்றீங்க பாருங்க..’ என்றவாறு என்னுடைய தோளில் கைவைத்து அழுத்தினார். ‘விட்டுத்தள்ளுங்க தம்பி.. அசல காப்பாத்திக்கணும்னுதான் நா நெனக்கிறேன். இது அந்த பேங்குங்கள்ல விட்டுட்டு நான் போய் சேர்ந்துட்டேன்னு வச்சிக்குங்க.. ஃபார்மாலிட்டிக்கு மேல ஃபார்மாலிட்டின்னு சொல்லி பணத்த திருப்பி குடுக்காமயே இழுத்தடிப்பாய்ங்க..’

நொடிக்கொருதரம் தன்னுடைய மரணத்தைப் பற்றியே அவர் பேசியது எனக்கு என்னவோ போலிருந்தாலும் அவர் கூறியதில் இருந்த நியாயம் புரியத்தான் செய்தது.

அவர் சிறிது நேரம் கழித்து, ‘தம்பி நா ஒங்ககிட்ட இன்னொரு உதவியும் கேக்கப் போறேன்..’ என்றார் தயக்கத்துடன்..

நான் 'சொல்லுங்கய்யா.' என்றேன். அவர் கேட்டவிதமே என்னை என்னவோ செய்தது.. இத்தனை செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியில்லாத அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

‘எனக்கு ஏதாச்சும் ஒன்னுக்கெடக்க ஒன்னு ஆயிருச்சின்னா.. இந்த ரசீதுலருக்கற பணம் முழுசும் என் மனைவிக்கு போய் சேரணும்.. பிள்ளைங்க கைக்கு போயிறக்கூடாது.. அதுக்கு என்ன செய்யணும் சொல்லுங்க.’

நான் சிறிது நேரம் யோசித்தேன். பிறகு ‘அதுக்கு இந்த ரசீது எல்லாம் ஒங்க அப்புறம் ஒங்க மனைவி பேர்ல சேர்ந்து இருந்தா நல்லது ஐயா..’ என்றேன்..

அது முடியாது என்பதுபோல் தலையை அசைத்தார். ‘அவ பெயர ஜாயிண்டா போட முடியாதுய்யா.. ஒங்க பேங்க்ல போடறதுக்கு அவ நிச்சயமா ஒத்துக்க மாட்டா.. புத்தி கொட்ட பொம்பளை தம்பி.. ஜாதி, தீட்டுன்னுக்கிட்டு மனுசாளுங்கள மதிக்க தெரியாத கொணம்.. சொல்லி, சொல்லி பாத்து விட்டுட்டேன்.. அதனால ஜாய்ண்ட் பேர்ல போட முடியாது. வேற ஏதாச்சும் யோசனை சொல்லுங்க..’

நான் சற்று தயக்கத்துடன், ‘நீங்க ஏதாச்சும் உயிலெழுதி வச்சிருக்கீங்களாய்யா?’ என்றேன்.

‘இதுவரைக்கும் இல்லய்யா.. ஆனா அத எழுதச் சொல்லி நம்ம ------------- (மூத்த தாரத்து மகன்) நச்சரிச்சிக்கிட்டேயிருக்கான். எதுக்கு கேக்கீங்க?’

‘நீங்க உயில் எழுதி வைக்கலேன்னா நீங்க விட்டுட்டு போறதெல்லாம் மொதல்ல ஒங்க மனைவிக்குத்தான் போவும். அதனால இந்த டெப்பாசிட் ஒங்க பேர்ல இருந்தாலே போறும்..’

அவர் சிறிது நேரம் சிந்தனையில் இருந்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் ‘அதுவும் சரிவராதுய்யா.. அதுலயும் ஒரு பிரச்சினையிருக்கு..’ என்றார். பிறகு.. ‘இதுக்கு வேற ஏதாவது வழியிருக்கான்னு யோசிச்சி வைங்க.. நா ஒரு வாரம், பத்துநாள் கழிச்சி கூப்டறேன்.. இந்த ரசீதுங்கள நாளைக்கே அந்தந்த பேங்குக்கு அனுப்பி கலெக்ட் செஞ்சிருங்க..’ என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்..

நான் என் அலுவலகத்திற்கு திரும்பி உடனே அமர்ந்து ரசீதுகளை வரிசைப் படுத்தி பட்டியலிட்டு நிமிர்ந்தபோது மொத்த தொகையின் அளவைக் கண்டு பிரமித்துப்போனேன்..

தொடரும்..

26 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 159

நான் கிளை பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்தலைவருக்கு பிறந்த நாள் என்பதை அவர்களுடைய கோப்பிலிருந்து அறிந்த நான் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று நினைத்தேன்.

அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

சாதாரணமாக என்னுடைய கிளை வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை சேகரித்து வைத்திருப்பேன்.

குறிப்பிட்ட தினத்தன்று நேரில் சென்றோ, தொலைப்பேசி மூலமாகவோ அல்லது வாழ்த்து அட்டைகள் மூலமோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அது குறிப்பிட்டவர்களை சந்தோஷப்படுத்தும் என்பதுடன் அத்தகைய ஒரு சிறிய செயலே என்னுடைய வங்கியுடனான அவர்களுடைய வணிகத் தொடர்பை மேலும் விரிவாக்கவும் வழிசெய்ததை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

நான் குறிப்பிட்ட நிறுவனம் எங்களுடைய கிளையுடன் ஒரு கணிசமான வணிகத் தொடர்பு வைத்திருந்ததால் அதனுடைய பாகஸ்தர்களுடைய பிறந்த நாளையெல்லாம் அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பிலிருந்து குறித்துவைத்திருந்தேன்.

நிறுவனத்தினருடைய குடும்பத்தில் மூத்தவருடைய பிறந்த தினம்  என்பதால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது.

அத்தகைய நேரங்களில் முன்கூட்டியே அறிவித்துவிட்டு செல்வது என்பது முடியாத காரியம். ‘சார் உங்க பேர்த் டேக்கு ஒங்கள விஷ் பண்றதுக்கு வர்றதாருக்கேன்’ என்று கூறினால் நன்றாக இருக்காதல்லவா? ஆகவே முன்னறிவிப்பில்லாமல் செல்வதுதான் சிறந்ததென தீர்மானித்தேன்.

தூத்துக்குடி நகரின் மிகப் பெரிய செல்வந்தர்களுள் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வெறுங்கையுடன் செல்வதும் சரியல்லவே. எதை வாங்கி கொடுப்பது என்று சிறிது நேரம் குழம்பி பூஜையறையில் உபயோகப்படுத்தும் வெள்ளி பாத்திரங்கள் அடங்கிய செட் (அதை தூத்துக்குடி நகரில் விற்பனை செய்யும் வணிகரும் எனக்கு மிகவும் பழக்கமாயிருந்தவர் என்பதால் மார்க்கெட் விலைக்கும் மிகவுக் குறைவாகவே வாங்க முடிந்தது) ஒன்றை வாங்கிக்கொண்டு காலை சுமார் ஒன்பது மணிக்கு புறப்பட்டுச் சென்றேன்.

நான் வீட்டைச் சென்றடைந்தபோது நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் ஒன்றையும் காணாததால் சற்று நேரம் திகைத்துப்போனேன். நான் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி வாசலில் இருந்த பிரம்மாண்டமான கேட்டை திறந்துக்கொண்டு நுழைந்தேன். தூத்துக்குடி நகரில் இருந்த மிகச் சில பங்களாக்களில் ஒன்று அவருடையது. ஒன்றுக்கு மூன்று வாகனங்கள், அதில் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டது போல் தெரிந்தது, வீட்டின் முன் பரந்த அடர்த்தியான்  நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த புல்தரை.

கேட்டிலிருந்து சுமார் முப்பதடி தொலைவில் இருந்த பங்களா வாசலை அடையும்வரை ஆளரவமே இல்லாமல் அமைதியாக இருந்தது எனக்கே ஒருவித தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. I am going to make a fool of myself என்று நினைத்தவாறு வீட்டினுள் இருந்து யாராவது வெளியே வரமாட்டார்களா என்று சில விநாடிகள் காத்திருந்தேன்.

என்னுடைய நல்ல நேரம் வாசலில் இருந்த கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பினேன். அந்த குடும்பத்தில் கடைக்குட்டி மகன் அரை நிஜார், டீசர்ட் சகிதம் உள்ளே நுழைந்து ஸ்கூட்டரிலிருந்து இறங்கினார். கையில் டென்னிஸ் மட்டையுடன் என்னை நோக்கி வந்தவர் என்னுடைய கையிலிருந்த பார்சலையும் என்னையும் ஒரு மாதிரி பார்த்தார்.

சிறிய அளவில் பத்து வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டிருந்த அவருடைய குடும்ப நிறுவனம் இன்று ஓரளவுக்கு வளர்ந்து வெற்றிகரமாக நடக்க என்னுடைய வங்கியிலிருந்து தக்க சமயத்தில் கடனுதவி வழங்கியதும் ஒரு மூல காரணம் என்பது எனக்கும் தெரியும் அவருக்கும் தெரியும்.

ஆயினும் ஏதோ வேண்டாத விருந்தாளியைப் பார்த்தது போலிருந்தது அவருடைய பார்வை. ‘என்ன சார் திடீர்னு.. அதுவும் இந்த நேரத்துல? எங்கயாவது விசேஷத்துக்கு போய்ட்டு வரீங்களா?’

என்ன செல்வதென தெரியாமல் ஒரு சில நிமிடங்கள் தடுமாறிப்போன நான் அவருடைய தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன் என்றேன் தயக்கத்துடன்.

அவருடைய முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா அல்லது குழப்பமா என்பதை தீர்மானிக்க முடியாமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க வீட்டினுள் இருந்து அன்றைய பிறந்தநாள் கதாநாயகரே வெளிய வர நான் அவரை பார்த்ததும் என்னையுமறியாமல் 'many, many happy returns of the day Sir' என்றேன்.

சற்று நேரம் குழப்பத்துடன் நின்ற அவர் பிறகு சிரித்துக்கொண்டே என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘ஒங்க பேங்க்லருக்கற ரெக்கார்ட்ஸ்படி எனக்கு இன்னைக்கி பிறந்தநாள்தான் சார். ஆனா வீட்ல நா பிறந்த நட்சத்திரத்தன்னைக்கித்தான் கொண்டாடுவோம். அதான்நீங்க க்ரீட் பண்ணதும் சட்டுன்னு  என்னால ரெஸ்பாண்ட் செய்ய முடியலை.. ரொம்ப நன்றி சார்.’ என்றார்.

எனக்கு ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வதென தெரியவில்லை. என் அலுவலகத்தில் இருந்த அனைவரும் என்னுடைய உதவி மேலாளரைத் தவிர, எல்லோரும் கிறிஸ்துவர்களாக இருந்ததால் இந்த நட்சத்திர விவகாரம் எனக்கு தெரியாமல் போய்விட்டது. என்னுடைய உதவி மேலாளரும் விடுப்பில் இருந்ததால் வந்தது இந்த தர்மசங்கடமான தவறு.

நான் என் கையில் இருந்த பார்சலை என்னையுமறியாமல் மறைத்துக்கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அதை கவனித்துவிடவே வேறுவழியில்லாமல் அதை அவருடைய கையில் திணித்தேன். ‘ஒரு சின்ன அன்பளிப்பு சார்.’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘ரொம்ப நன்றி சார். உள்ள வாங்க.’என்றவாறு என்னை அழைத்துச் சென்று வரவேற்பறையில் இருந்த சோபா ஒன்றில் அமரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்தார்.

அவருடைய குரலைக் கேட்டு உள்ளிருந்து வந்த வீட்டின் மூத்த மகனும் நிர்வாக பாகஸ்தரும் சரி, அவருடைய இரு சகோதரர்களும் சரி என்னைப் பார்த்த பார்வையில் ‘இவன் எங்க இங்க?’ என்ற தோரனையே தெரிந்தது.

குடும்பத் தலைவர் அதை கவனிக்கவில்லை என்பதுபோலிருந்தது  அவருடைய அடுத்த நடவடிக்கை. வரவேற்பறைக்குள் நுழைந்த தன்னுடைய மருமகள்கள் ஒருவரிடம், ‘வராதவர் வந்திருக்கார். ஒரு காப்பி கொண்டு வாம்மா.’ என அவரும் என்னை ஒருமாதிரி பார்த்தவாறு உள்ளே சென்றார்.

‘நீங்க பேசிக்கிட்டிருங்கப்பா.. எங்களுக்கு ஃபீஸ்க்கு  கிளம்பற நேரம்..’ என்றவாறு பிள்ளைகள் மூவரும் கழண்டுக்கொள்ள நானும் பெரியவர் மட்டும் தனித்துவிடப்பட்டோம்.

பெரியவர் அள்ளிமுடித்த குடுமியும் நெற்றி நிறைய நாமமும் பார்ப்பதற்கு தெய்வீகமாக இருந்தார். அந்த வயதிலும் அவர் அமர்ந்திருந்த தோரனையே கம்பீரமாக இருந்தது. அவர் பேசிக்கொண்டே இருந்தார். ஆனாலும் என்னுடைய மனமோ அவருடைய பேச்சில் ஈடுபடாமல் அங்கிருந்து போய்விடவேண்டுமென்ற சிந்தனையிலேயே இருந்தது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடமாக காப்பி வந்தபாட்டைக் காணோம். நான் சங்கடத்துடன் என்னுடைய வாட்சை பார்க்க அதை கவனித்துவிட்ட பெரியவர் பொறுமையிழந்து எழுந்து உள்ளே சென்று அடுத்த சில நிமிடங்களில் அவரே ஒரு பித்தளை தம்ளர், டபரா சகிதம் வந்தார்.

எனக்கோ சங்கடம் அதிகரித்தது. எழுந்து அவரிடமிருந்து காப்பி டபராவை பெற்றுக்கொண்டு அவசர அவசரமாக குடித்து முடித்துவிட்டு எதிரிலிருந்த மர டீப்பாயில் வைத்துவிட்டு எழுந்து நின்றேன். ‘ரொம்ப நன்றி சார்.’ என்று கிளம்ப பெரியவரும் எழுந்து என்னுடன் வாசல்வரை வந்தார்.

நாங்கள் இருவரும் வாசலுக்கு வெளியே நின்றவாறு ஒரு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வீட்டினுள் இருந்து கையில் ஒரு பித்தளை செம்புடன் வந்த ஒரு வயதான பெண் நான் டீப்பாயில் வைத்திருந்த டபராவைச் சுற்றி செம்பிலிருந்த நீரை தெளித்துவிட்டு கையுடன் கொண்டுவந்திருந்த ஒரு துணியால் டீப்பாயை துடைத்துவிட்டு அதே துணியால் டபராவை சுற்றி எடுத்துச் செல்வதைப் பார்த்தேன்.

என்பக்கமாக பார்த்துக்கொண்டு நின்ற பெரியவர் என்னுடைய பாவை சென்ற திசையில் பார்க்க வீட்டிற்குள் சென்ற அந்த பெண்ணைப் பார்த்தார். ‘She is my wife..’ என்றவாறே அவரை அழைத்தார் ஆனால் அவரோ கணவர் கூப்பிட்டது கேட்காததுபோல் வீட்டிற்குள் சென்று மறைய பெரியவருக்கு தர்மசங்கடமாகிவிட்டது.  என்னைப் பார்ப்பதை தவிர்த்து வாசல் கேட்டை பார்க்கவே எனக்கோ அங்கிருந்து போனால் போதுமென்றிருந்தது.

‘சரி.. சார்.’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டு வாசல் கேட்டை அடயைவும் வீட்டினுள் இருந்து ஒரு பெண்ணின் கோபக்குரல் எழவும் சரியாக இருந்தது. அந்த கோபத்தின் காரணத்தை ஒருவாறு ஊகித்த நான் நின்று கேட்க விருப்பமில்லாமல் என்னுடைய வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டேன்.

ஆனாலும் எனக்கு அப்போதிருந்த மனநிலையில் வாகனத்தை செலுத்த முடியவில்லை. மனத்தில் ஒரு இனம் புரியாத வேதனை.. என்னுடைய வாழ்வில் இப்படியொரு அவமானத்தை நான் சந்தித்ததே இல்லையே என்ற உணர்வு என்னை வாட்டியெடுத்தது.

தஞ்சையில் நான் சந்தித்த அந்த பிராமண வகுப்பைச் சார்ந்த பெரியவரை, கீழ்சாதிப்பெண்ணை தன்னுடைய சொந்த மகளாக வரித்திருந்த அந்த பெரியவரை, நான் அவரைக் காண சென்ற சமயத்திலெல்லாம் என்னை அன்புடன் வரவேற்று தன்னுடைய குடும்பத்தில் ஒருவரைப் போல் நடத்திய அந்த மனித தெய்வத்தை அந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்.

மனம் பதற்றமடைந்திருந்த அந்த நேரத்தில் இதற்கு ஏதாவது ஒரு வழியில் இந்த குடும்பத்தை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது..

அந்த எண்ணம் என் மனதில் தோன்றிய அக்கணமே நான் வியாழக்கிழமைதோறும் வழிபாட்டுக்கு செல்லும் தூய ஜூட்ஸ் தேவாலயத்தின் முன் இருந்ததை உணர்ந்தேன். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதென்பதை உணர்ந்தும் வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டு தேவாலயத்திற்குள் நுழைந்து என் மனம் ஒரு நிலைக்கு வரும்வரை வெறுமனே அமர்ந்திருந்தேன்.

தொடரும்..

24 June 2006

கடந்த பாதை 1

என்னைக் கவர்ந்த நபர்கள் – 1

என்னுடைய தி.பா தொடரில் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நான் சந்தித்த பல நபர்களைக் குறித்தும் எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் குறித்தும் எழுதி வருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களுள் என்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றி எழுதினால் என்ன என்றும் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த வாரம் ஒரு பதிவு தொடர்.

இவர்களுள் என்னுடைய சொந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

இயல்பாகவே எனக்கு ஞாபக சக்தி அதிகம் என்று என் நண்பர்களும், உறவினர்களும் (என்னுடைய மனைவியும் என் இரு மகள்களும் இதில் அடக்கமில்லை. அவர்களைப் பொறுத்தவரை நான் ஒரு absent minded professor) கூறக் கேட்டிருக்கிறேன்.

‘என்னைக்கோ நடந்ததயெல்லாம் எப்படிறா இவ்வளவு கரெக்டா அக்ஷரம் பிசகாம சொல்றே?’ என்று என்னுடைய தாய் மாமன்களுள் ஒருவர் ஒருமுறை அதிசயித்து போயிருக்கிறார்.

சுயபுராணம் பாடாம விஷயத்துக்கு வாங்க சார்....

வந்துவிட்டேன்:)

என்னுடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்.. அதாவது எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய்.. அதாவது நான் சிறுவனாய் அரை நிஜார் அணிந்திருந்த காலந்தொட்டு..

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வந்திருந்த காலத்தில்தான் என்னுடைய சித்திகளுள் ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது.

அப்போது எங்களுடைய குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். தாத்தா, அம்மாச்சி (என் தாயின் அம்மா), மாமா (நான்கு), சித்தி (மூன்று) (என் அம்மா மூன்றாவது. என் பெரியம்மா திருமணம் முடிந்து  தூத்துக்குடியில், மாமா தனிக்குடித்தனம் சென்னையில்.. மாமாவும் அத்தையும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியது ஒரு தனிக்கதை.) என்னுடைய சித்தப்பா (அப்பாவின் ஒரே தம்பி. என்னுடைய மூன்று சித்திகளுள் (அம்மாவின் சகோதரிகள்) ஒருவரைத்தான் அவர் திருமணம் செய்திருந்தார்)  என் நான்கு சகோதரர்கள் மற்றும் என்னுடைய சித்தப்பா குடும்பத்தையும் சேர்த்து சுமார் இருபது பேர் கொண்ட குடும்பம்.

என்னுடைய சித்தி நாணி கோணிக்கொண்டு ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருக்க ஜாக்ஸன் துரையாக நடித்த ஜாவர் சீத்தாராமனைப் போலவும், கட்ட பொம்மனாக நடித்த சிவாஜி கணேசனைப் போலவும் நானே மாறி, மாறி பேசி நடித்துக் காட்டியது இப்போதும் நினைவில் அப்படியே நிற்கிறது.

சர்வர் சுந்தரம் படம் வெளிவந்தபோது நாகேஷின் 'நான் தண்ணிய குடிச்சி வயித்த நிறைச்சிக்குவேன்' என்னும் வசனமும் மிக பிரபலம். அதையும் பேசி நடித்திருக்கிறேன் (எல்லாம் வீட்டில்தான். ஆரம்பப் பள்ளி காலத்தில் பள்ளி மேடைகளிலும் நடித்திருக்கிறேன். அதைப் பற்றி பிறகு..)

எங்களுடைய கூட்டுக் குடும்பத்தின் indisputable தலைவர் என்னுடைய தாத்தாதான்.

நான் ஏறக்குறைய அவரைப் போலவே உருவத்திலும், நிறத்திலும் (‘ஏன் ஒங்க ஹேர் ஸ்டைலும் அப்படித்தான் இருக்கு’ என்று என்னுடைய இளைய மகள் அவ்வப்போது அவருடைய அப்போதைய வழுக்கைத் தலை புகைப்படத்தைப் பார்த்து நக்கலடிப்பதுண்டு) இருக்கிறேன் என்று என்னுடைய தாய் மாமன்களும், சித்திகளும் இப்போதும் கூறுவதுண்டு.

அவருக்கு நான், என் சகோதரர்கள் மற்றும் என்னுடைய சித்தப்பா பிள்ளைகள் (வானரப் பயல்க என்று ‘செல்லமாக’ அழைப்பார் என்னுடைய தாத்தா) எல்லோரும் unanimous ஆக வைத்த ‘செல்லப்’ பெயர் கருப்பு ஹிட்லர்.

நாங்கள் குடியிருந்த வீடு சென்னை வேப்பேரி பகுதியில் சாலையிலிருந்து (காளத்தியப்ப முதலி தெரு என்ற அந்த சாலைக்கு செல்லமாக ‘கோணத்தெரு’ என்று பெயர் இருந்தது. அதற்கு தெரு கோணலாக இருந்தது மட்டுமல்ல.. அதில் வசித்த பெரும்பாலோனோர் பால் வியாபாரம் செய்யும் கோணார் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் ஒரு காரணம்) சுமார் நூறடி உள்வாங்கியிருந்தது. அப்போதே என்னுடைய தாத்தா வீட்டு உரிமையாளரை (அவருக்கு குண்டு செட்டியார் என்ற பட்டம் சூட்டியிருந்தோம். அப்போது சென்னையில் மளிகை மற்றும் எண்ணெய் கடைகள் எல்லாம் செட்டியார் கடைகள் என்றுதான் அழைக்கப்படும்.. அதாவது காமராஜர் முதலமைச்சராவதற்கு முன்பு.. அதற்குப்பிறகுதான் இப்போதும் முடிசூடா மன்னர்களாக சென்னையை வளைத்துப்போட்டிருக்கும் நாடார்களின் பிரவேசம் நடந்தது) மிரட்டி நீண்ட காலத்துக்கு லீஸ் (Lease) போட்டிருந்தார். அதை 'ஒத்தி' என்பார்கள்.

சாலையிலிருந்து வீட்டிற்கு ஒரு நீஈஈஈண்ட சந்து. வாசற்கதவில் இருந்த ஒற்றைக் கதவைத் தள்ளி திறப்பதற்கே பெரிய பாடு.. ('சரியா சாப்ட்டாத்தானடா.. கோழி மாதிரி கொறிச்சா.. ஒரு கதவ தள்றதுக்கு படற பாட்ட பாரு..' இது அம்மாச்சி.. அவர் தாத்தாவுக்கு நேர் எதிர்.. சரியான பயந்தாங்கொள்ளி.. தாத்தா இருக்கும் பக்கமே வரமாட்டார். அடுப்படிதான் அவருடைய நிரந்தர வாசஸ்தலம்.. அப்படியிருந்தும் பத்து பிள்ளைகளா என்று கேட்காதீர்கள்.. அதுதான் அக்காலத்திய தாம்பத்தியம்..) வாசலில் ஒரு சிறு ஓட்டுக் கூரை.. வாசற்கதவுக்கென..

நீண்ட சந்தைக் கடந்து வீட்டை அடைந்தால் வாசலில் இரண்டு நீண்ட திண்ணைகள், வாசலுக்கு இடமும் வலமுமாக.. ஒன்று பெரியதும் மற்றொன்று அதைவிட சற்று சிறியதுமாக..

அதில் பெரிய திண்ணைதான் தாத்தாவின் நிரந்தர இருப்பிடம். அதாவது இரவு உறக்கமும் சேர்த்து.

அவர் படுக்கும் திண்ணையை சுற்றிலும் ச்சாக்கால் (Gunny Cloth - பழைய சாக்கு பைகளை பிரித்து உருவாக்கியதல்ல. புத்தம் புதிய ச்சாக்கு துணி. மீட்டர் கணக்கில் கிடைக்கும்) ஆன ஒரு திரைச்சீலை தொங்கும்.. அதற்கெனவே ஒரு தையற்காரரை வரவழைத்து அளவெடுத்து தைத்தது. திரைச்சீலை காற்றில் பறக்காமலிருக்க திண்ணை விளிம்பில் மரச்சட்டம் அடித்து கொக்கிகளையும் பொருத்தியிருப்பார். திரைச்சீலையின் விளிம்பில் அந்த கொக்கிகளில் மாட்டுவதற்கு ஏதுவாக துணியாலான வளையங்கள் அடிக்கொரு இடைவெளியில் தைக்கப்பட்டிருக்கும். காலையில் விடிந்ததும் சுருட்டி எரவானத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைச்சீலை இரவு  எட்டு மணியானதும் டாண் என்று தளர்த்தப்பட்டுவிடும். திண்ணையின் விளிம்பில் பொருத்தப்பட்டிருந்த கொக்கிகளில் மாட்டிவிட்டால் சூரைக்காற்றிலும் பறக்காமல் உள்ளுக்குள் கும்மென்று இருக்கும்.

காற்றடித்தாலும், மழையடித்தாலும் தாத்தா அசரமாட்டார்.. ‘பலத்த மழைக்காலத்தில் ஓட்டுக் கூரை ஒழுகினாலும் டப்பா, டபரான்னு வச்சிக்குவாரேயொழிய கூரை ஒழுகுதுன்னு வீட்டுக்குள்ள வந்து நான் பார்த்த ஞாபகமே இல்லை..’ என்பார் என்னுடைய தந்தை.. அவருடைய தாய் மாமந்தான் என்னுடைய தாத்தா..

தாத்தாவுக்குத் துணையாக சில நாட்களில் மரவண்டு மாதிரி குளிர்ல சுருண்டு படுத்திருந்த ஞாபகம் லேசா இருக்கு..

அப்போதெல்லாம் மின்சார விளக்கு என்பது எங்களைப் போன்றோருக்கு எட்டாக்கனி. இருட்ட ஆரம்பித்துவிட்டால் அந்த நீஈஈஈண்ட சந்தைக் கடந்து வீட்டு வாசலை அடைவதற்குள் பயத்தில் நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொள்ளும். வாசற்கதவை திறந்துவைத்தால் தெரு விளக்கு வராண்டா முழுவதும் விழும்.. ஆனால் தாத்தா ஒத்துக்கொள்ள மாட்டார். ‘எலேய் மொதல்ல வாசக்கதவ மூடு..’ என்ற அவருடைய குரல் எங்களுடைய மனசுக்குள் ஒலிக்கும்..

தனியாக வர நேர்ந்தால் உரத்தக் குரலில் எம்.ஜி.ர் பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே வாசலை தாண்டியதும் எடுக்கும் நாலு கால் பாய்ச்சலை திண்ணையை அடைந்ததும்தான் நிறுத்துவோம். அதற்கும் தாத்தா ஏசுவார். ‘எலேய்.. நீ ஓடற ஓட்டத்துல தரையே பேர்ந்து போச்சி பார்.. வீட்டுக்காரன் வந்தா தோ இந்த கரியந்தான் ஒடச்சான்னு ஒன்னெ புடிச்சிக் குடுத்துருவேன். அப்புறம் ஒம்பாடு அவர் பாடு..’

‘ஆம்மா.. பெரிய வீடு.. நாம குதிச்சித்தான் ஒடஞ்சிதாக்கும்..’ என்று முனகிக்கொண்டே அவரைக் கடந்துச் சென்றுவிட்டு அவர் அப்படி திரும்பியதும் அவருடைய முதுகுக்குப் பின்னால் நின்று அளவம் காட்டிவிட்டு ஓடிவிடுவோம்..

‘எலேய், நீ அங்கன நின்னுக்கிட்டு என்ன செய்றேன்னு தெரியாதாக்கும்.. தாத்தாக்கு முதுகுலயும் கண்ணுருக்குலே.. தொலைச்சிருவேன் தொலைச்சி..’

அட ச்சை.. இந்த தாத்தாவோட பெரிய ரோதனை.. என்ற எத்தனை முறை மனதுக்குள் சபித்திருக்கிறேன்.

அவருடன் இன்னொரு தொல்லை, இரவானால் அவருக்கு பலகாரம் வாங்கி வருவது..

இருபது பேர் கொண்ட குடும்பத்தில் தினசரி காலைப் பலகாரம் இட்லி, சட்னிதான்.. தாத்தாவுக்கு மிளகு பொடியும் நல்லெண்ணையும் வேண்டும்..

அம்மாச்சி காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆளுக்கு இத்தனையென்ற கணக்கில் (எல்லாம் தாத்தாதான் தீர்மானிப்பார்.. என்னைப் போன்ற சிறுசுகளுக்கு இரண்டு.. இளவட்டங்களுக்கு மூன்று.. பெரியவர்களுக்கு நான்கு.. அவருக்கும் நான்குதான்) இட்டிலியை இரண்டு பெரிய பித்தளை சட்டிகளில் அவித்து எடுத்துவிடுவார்.. ஒவ்வொரு இட்டிலியும் நம் உள்ளங்கை அளவில் பெரிதாக, பூமாதிரி.. (‘கை வலிக்குதுன்னு பாக்காம ஆட்டுங்கடி.. அப்பத்தான இட்டிலி பூ மாதிரி மெத்துன்னு இருக்கும்..’ அம்மாச்சி என் சித்திகளிடம் பாடும் தினசரி பாட்டு)..

அதில் இரண்டை விழுங்கி தண்ணீர் குடித்தால் மதியம் பள்ளியில் பகலுணவு நேரம் வரை திம்மென்றிருக்கும்..

தாத்தாவுக்கு இரவிலும் இட்டிலிதான்.. ஆனால் வீட்டில் காலையில் சுட்ட இட்டிலி பிடிக்காது. மீதியிருந்த மாவில் சுட்டாலும் சாப்பிடமாட்டார். அவருக்கென்று சுடச்சுட ஓட்டலில் இருந்து வாங்கி வரவேண்டும்.

வீட்டில் இருந்த ஏழு பேரப் பிள்ளைகளில் தினம் ஒருவர் என்று டர்ண் (turn) போட்டுக்கொண்டு போவோம் (அதுவும் தாத்தா ப்ளான்தான்).

வீட்டிலிருந்து இறங்கினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சூளை பஸ் ஸ்டாண்டில் அருகில் இருந்த  உடுப்பி ஓட்டலில்தான் வாங்க வேண்டும் என்பது தாத்தாவின் பல நியதிகளில் ஒன்று. இரவு ஏழு மணி அடித்துவிடக்கூடாது.. ‘எலேய்.. இன்னைக்கி யாரோட டர்ண்.. போய்ட்டு வெரசா வாங்கலே.. ஹோம் வொர்க் வந்து செஞ்சிக்கலாம்.. ஓடு..’ என்ற குரல் திண்ணையிலிருந்து வரும்.

எல்லோருக்கும் அவரவருடைய டர்ண் எப்போது என்று தெரிந்திருந்தாலும் தினமும் நீ போ, நீ போ என்று ஒருவரையொருவர் சுட்டிக்காட்டுவோம்..

என்னுடைய அம்மாவைப் போலவே நானும் குடும்பத்தில் மூன்றாவதுதான்.. எனக்கு இரண்டு வயது மூத்தவர் ஒருவர்.. அவரைவிடவும் மூன்று வயதில் எல்லோருக்கும் மூத்தவர்..

மூத்தவர்கள் டர்ண் வந்தால் அவர்கள் மற்றவர்களை ஏவிவிடுவார்கள்.. என்னுடைய தம்பிகளில் ஒருவரும் சித்தப்பாவின் மூன்று பிள்ளைகளில் இருவரும் ஐந்து வயதுக்கும் கீழே..

ஆகவே என்னுடைய மூத்த இரு சகோதரர்களின் டர்ண் வரும்போதும் நான், எனக்கு நேர் கீழே இருந்த தம்பி மற்றும் சித்தப்பா மகன் என மூன்று பேர் மாறி, மாறி செல்ல வேண்டும்..

‘தாத்தாக்கிட்ட போட்டு குடுத்தே.. மவனே ஒன்னெ ஸ்கூல்ல வச்சி மண்டைய ஒடச்சிருவேன்..’ என்ற என்னுடைய மூத்த சகோதரர்கள் இருவருடைய மிரட்டலுக்கு தாத்தாவே தேவலை என்று நினைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக நாங்கள் மூன்று பேரும் மாறி, மாறி செல்வோம்..

‘எலேய்.. மூனு இட்டிலி.. அப்புறம் மிளகுப் பொடி எண்ணெய ஊத்தி.. தனித்தனியா கட்டி வாங்கிட்டு வரணும்னு எத்தனெ தடவ சொல்லியிருக்கேன்.. இன்னைக்கும் எல்லாத்தையும் ஒன்னா ஒரே பொட்டலமா வாங்கிட்டு வந்துட்டியா.. இத போயி உள்ள குடுத்துட்டு மறுபடியும் போய் நா சொன்னா மாதிரி வாங்கிட்டு ஒடியா போ.. நிக்காதே.’

போக ஒரு கி.மீ, திரும்பி வர ஒரு கி.மீ.. ராத்திரி நேரத்தில் கால் கடுக்க பாதி ஓட்டம் பாதி நடையாக ஒன்றுக்கு இரண்டு முறை சென்று வந்ததை இப்போது நினைத்தாலும்..

தாத்தா பயங்கர கோபக்காரர். என்னுடைய தாயே திருமணத்திற்குப் பிறகும் அவரிடம் கோபத்தில் எதிர்த்து பேசிவிட்டு தலையில் குட்டு வாங்கியதை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அம்மாச்சிக்கு அவரைக் கண்டாலே சிம்ம சொப்பனம்.. அம்மாச்சி வாழ்வில் சுதந்திரத்தை அனுபவித்தது தாத்தாவின் மரணத்திற்குப் பிறகுதான் என்றால் மிகையாகாது..

ஆனாலும் தாத்தாவை எனக்கு பிடிக்கும். அவருடைய பெயரைத்தான் எனக்கும் வைத்திருக்கிறது.. சூசை மாணிக்கம்..

ஜோசஃப் என்பதற்கு தமிழில் சூசை என்று பொருள்.. என்னுடைய வீட்டில் என்னுடைய பெயர் சூசை.

தாத்தா எந்த நோயிலும் விழாமல் நான் காட்பாடியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் ஒரே நாள் ஜுரத்தில் காலமானார்..

இன்னும் வரும்..23 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 158

தூத்துக்குடியில் மீன்பிடித் தொழிலுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றிருந்தது மீன், இறால் எனப்படும் சீஃபுட் ஏற்றுமதி.

இவற்றுடன் உலர்ந்த மீன் (கருவாடு), உலர்ந்த இறால் மற்றும் சென்னாங்குனி ஆகியவையும் பெருமளவு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு அடுத்தபடியாக இந்து துணைகண்டத்தில் தூத்துக்குடி துறைமுகம் ஒரு பரபரப்பான துறைமுகம் என்றால் மிகையாகாது.

சமீப காலமாக தூத்துக்குடி துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படவே அதைச் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏதுவான பல தொழில்களும் தூத்துக்குடி நகரில் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதைக் கேள்விப்படுகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் மேலே குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனம் என் வங்கியில் ஒரு கணிசமான தொகையை கடனாக பெற்றிருந்தது.

நான் கிளைக்கு பொறுப்பேற்று முடிந்த கையோடு நான் சென்று சந்தித்த வாடிக்கையாளர்களில் இந்த நிறுவனமும் ஒன்று.

அந்நிறுவனம் ஒரு குடும்ப நிறுவனம். ஏற்றுமதி செய்யும் பொருட்களின் வாசத்தைக் கூட அடியோடு வெறுக்கும் ஒரு இனத்தைச் சார்ந்த குடும்பம் அது.

தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு கிராமத்திலிருந்து தூத்துக்குடி நகருக்கு பல வருடங்களுக்கு முன்பு குடிபெயர்ந்த மிகவும் ஆச்சாரமான குடும்பம் அது என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.

நிறுவனத்தின் பாகஸ்தர்களாக ஒரேயொரு வழக்கறிஞரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான்.

நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தர் (Managing Partner) குடும்பத்தலைவரின் மூத்த தாரத்து மகன். முத்த தாரம் இறந்ததும் இரண்டாவது திருமணம் செய்து அவருக்குப் பிறந்த இரு மகன் மற்றும் இரு மகள்களுடன் அவர்களுடைய கணவன்மார் என குடும்பத்தலைவர், அவருடைய மனைவி மற்றும் இரண்டு மருமகள்களைத் தவிர எல்லோருமே அந்நிறுவனத்தில் பாகஸ்தர்களாக இருந்தனர்.

குடும்பத்தலைவருக்கு நான் பொறுப்பேற்றபோது எண்பது வயதைக் கடந்திருந்தது. ஆனாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவருடைய மேற்பார்வையில் நிறுவனமும் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தது.

என்னுடைய கிளையின் வட்டி வருமானம் (Interest Income) மற்றும் கமிஷன் (Commission) வருமானத்தில் ஒரு கணிசமான விகிதம் அந்த நிறுவனத்திலிருந்துதான் கிடைத்துக்கொண்டிருந்தது என்றாலும் மிகையாகாது.

நிறுவனம் ஈடுபட்டிருந்த தொழில் அக்குடும்பத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்றாலும் அதை வெறும் வர்த்தகமாகவே கருதி திறம்பட நடத்தி வந்தனர்.

நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையையும், பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு தயாராக இருந்தவற்றை வைத்திருந்த கிடங்கை பராமரிக்கும் பொறுப்பையும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த ஊழியர் மற்றும் அதிகாரிகளிடமே ஒப்படைத்து வர்த்தக மற்றும் அலுவலக காரியங்களில் மட்டும் தங்களுடைய கவனத்தைச் செலுத்தி வந்ததைப் பார்த்தேன்.

அவர்களுடைய அலுவலகத்திற்கு முதல் முறை சென்றிருந்தபோது இதை அறியாத நான் அவர்களுடைய தொழிற்சாலையை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கூறினேன்.

நிறுவனத்தின் நிர்வாக பாகஸ்தராகவிருந்தவர், ‘அது வேணுமா சார்?’ என்றார்.

அவருடைய குரலில் இருந்த சங்கடத்தைப் பார்த்த நான் ‘எதுக்கு கேக்கறீங்க?’ என்றேன் வியப்புடன்.

‘இல்ல சார்.. நாங்களே அங்க போமாட்டோம்.. அதுக்குன்னு ------------- ஆளுங்கள (அந்த சமூகத்தினரின் பெயரை அவர் உச்சரித்த விதம் எனக்கு அறவே பிடிக்கவில்லை) வச்சிருக்கோம்.. அவங்கள இங்க வர விடறதில்ல.. இப்ப ஒங்கள அங்க இங்கருக்கற யார் கூடயும் அனுப்ப முடியாது.. அதான் யோசிச்சேன்.’

அவர் கூறியதை ஜீரணிக்க முடியாமல் அவரையும் அவருடனிருந்த அவருடைய சகோதரர்களையும் பார்த்தேன். அவர்களுடைய முகத்திலும் நான் ஏதோ அருவறுக்கத்தக்க காரியத்தை கேட்டுவிட்டதுபோலிருந்தது.

அவர்களுடைய பின்னணியைப் பற்றி என்னுடைய கிளையிலிருந்த அவர்களுடைய கோப்பு மூலமாக அறிந்திருந்ததால் நான் லேசான புன்னகையுடன், ‘சரி பரவாயில்லை. வேறொரு நாளைக்கு ஃபேக்டரியிலருந்து யாரையாச்சும் அனுப்புங்க. நான் நேரா போய் பாத்துக்கறேன்.’ என்றேன்.

அப்போதும் அவர் தயக்கத்துடன், ‘சார் நா அதுக்கு சொல்லல. ஃபேக்டரியில அடிக்கற வீச்சத்த ஒங்களால தாங்க முடியாது. அது அவங்களுக்குத்தான் லாயக்கு. யோசிச்சி சொல்லுங்க. நம்ம டிரைவரே வேணும்னா ஒங்கள கூட்டிக்கிட்டு போயிருவாரு. ஃபேக்டரிக்கு அனுப்பறதுக்கு ஒரு தனி வண்டியே இருக்கு.’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே, ‘நாங்க பேங்க்ல இதையெல்லாம் பாக்க ஆரம்பிச்சா இந்த தொழில்ல நேரடியா ஈடுபட்டிருக்கறவங்களுக்கெல்லாம் லோன் குடுக்க முடியுமா சார்? ஒரு அஞ்சாறு போட்டுக்கு லோன் குடுத்துருக்கோம். அத வசூல் பண்றதுக்கு வாரத்துக்கு ஒரு நாள் ஃபிஷ்ஷிங் ஹார்பருக்கு போய்த்தானே ஆவணும்? நா ஒன்னும் ஒங்கள மாதிரி --------------- (அவருடைய சமூகத்தை மறைமுகமாக குறிப்பிட்டேன்) இல்லையே..’ என்றேன்.

அவர்களுக்கு என்ன தோன்றியதோ நிர்வாக பாகஸ்தர் அவருடைய டிரைவரை அழைத்து தெலுங்கில் ‘இவர கூட்டிக்கிட்டு போய் காமிப்பா..’ என்றார். ஒருவேளை எனக்கு தெலுங்கு தெரியாது என்று நினைத்தார்களோ என்னவோ..

நான் புறப்பட நினைத்து அவர்களுடைய அறையை விட்டு வெளியேறியபோது.. ‘வண்டிய காம்பவுண்டுக்கு வெளிய நிறுத்திரணும், தெரியுமில்லே.. அப்புறம் அப்பாக்கிட்ட பேச்சு வாங்கிட்டு நிக்காதே..’ என்று அவர் தொடர்ந்து தெலுங்கில் அவர்களுடைய ஓட்டுனரை எச்சரிக்க எனக்கு ஓரளவு புரிந்தாலும் அதை பொருட்படுத்தாமல்  என் முன்னே வந்து நின்ற பழைய காலத்திய ஒற்றைக் கதவு (single door) ஸ்டாண்டர்ட் ஹெரால்டை பார்த்தேன்.

அந்த நிறுவனத்தின் பணபலத்தை (financial strength) நன்றாக தெரிந்துவைத்திருந்த நான் என் முன் நின்ற வாகனத்தைப் பார்த்து வியந்தேன். இது ஏதோ காயலாங்கடை வண்டி என்பார்களே.. Scrapக்கு விற்க்கப்பட வேண்டிய வாகனத்தைப் போலிருக்கிறதே என்று யோசித்த நான் அதில் ஏற தயங்கினேன்.

‘ஒங்க டிரைவர முன்னால போகச்சொல்லுங்க சார்.. நான் பின்னால ஸ்கூட்டர்ல போய்க்கறேன்.’ என்றேன்.

எனக்குப் பின்னால் நின்றுக்கொண்டிருந்த பாகஸ்தர்களுள் ஒருவர், ‘சார் இங்கருந்து பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலருக்கு. ரோடும் அவ்வளவா நல்லாருக்காது.’ என்றார்.

அவர்கள் கூறியது உண்மைதான் தூத்துக்குடியில் சீஃபுட் ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கிவந்த இடம் நகரை விட்டு பதினைந்து கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில்தான் இருந்தன. இச்சாலைகளில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்கள் என்பதால் சாலையும் பெரும்பாலும் பழுதுபட்டே இருந்தது.

எனக்கோ அவர்களுடைய தொழிற்சாலையை நேரில் சென்று பார்த்தால்தான் திருப்தி என்று பட்டது. ‘சரி, வேறு வழியில்லை. ஒரு அரை மணி நேரம்தானே’ என்று நினைத்தேன். அத்துடன் இந்த நிறுவன உரிமையாளர்கள் வேண்டுமென்றே என்னை அவர்களுடைய தொழிற்சாலைக்கு செல்லவிடாமலிருக்க இப்படி செய்கிறார்களோ என்றும் தோன்றியது. ஆகவே நான் செல்வதென தீர்மானித்து வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்.  

வாகன ஓட்டுனர் அவர்களுடைய இனத்தைச் சார்ந்தவரல்ல என்பதை அவருடைய பேச்சிலிருந்தே தெரிந்துக்கொண்ட நான் மெள்ள, ‘எதுக்குங்க இந்த மாதிரி வண்டிய இன்னும் வச்சிக்கிட்டிருக்கீங்க?’ என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்துவிட்டு சாலையில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். ‘ஒங்கக் கிட்ட சொல்றதுக்கென்ன சார். அவங்க --------------ங்கன்னு ஒங்களுக்கு தெரியுமில்ல? அவங்க அபேக்டரிக்கு ஒங்கள மாதிரி யாராச்சும் போணும்னா மட்டுந்தான் இந்த வண்டிய எடுப்பாங்க. அப்பவும் ஃபேக்டரி காம்பவுண்டுக்கு வெளியவே நிறுத்திரணும். திருப்பிக் கொண்டுபோய் ஆஃபீஸ் காம்பவுண்டுக்குள்ள அப்படியே ஏத்தி விட்டுறக்கூடாது.. வண்டிய முழுசும் களுவிட்டுத்தான் ஷெட்ல கொண்டு விடணும்..’

அவர் படு சிரத்தையுடன் விளக்க நான் வியப்புடன் அவரை பார்த்தேன். ‘ஏன்?’

‘கவுச்சி இல்லையா சார்....அவங்க அத தீட்டா நினைக்கறாங்க..’

நான் சிரித்தேன். ‘சரிங்க.. வண்டிய களுவிடறீங்க? நீங்க? குளிச்சிட்டுத்தான் உள்ள போவீங்களா?’

அவர் சிறிது நேரம் பதிலளிக்காமல் எதிரே தெரிந்த படுபாதாள குழியில் விழாமல் வாகனத்தை லாவகமாக செலுத்துவதில் குறியாயிருந்தார். பிறகு, ‘சார் நீங்க சொல்றது சரிதான். ஃபேக்டரிக்கு கார கொண்டு போய்ட்டு வந்தா வண்டிய களுவி முடிச்ச கையோட நா அப்படியே ஓடிப்போய் ஆஃபீஸ்க்கு பின்னால காம்பவுண்ட்லருக்கற பைப்புல குளிச்சி வேற டிரெஸ் மாத்திக்கிட்டுத்தான் சார் ஆஃபீஸ்க்குள்ளவே போவேன்.. அதுக்குன்னே இன்னொரு யூனிஃபார்ம் ரெடியா வச்சிருப்பேன்னா பாத்துக்குங்களேன்.. என்ன சார் பண்றது? தப்பித்தவறி அப்படியே ஆஃபீஸ்க்குள்ளாற போனேன்னு வச்சிக்குங்க.. அன்னைக்கே என் சீட் கிழிஞ்சிரும்..’

அவர் கூறியதை சற்று நேரம் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை நான் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு திரும்பி அவர்களுடைய அலுவலகத்திற்குச் சென்றால் என்னையும் உள்ளே விடமாட்டார்களோ..

அதுமட்டுமல்ல. நான் அவர்களுடைய அலுவலகத்திற்கு சென்றிருந்த முதல் நாள் எனக்கு அங்கு கிடைத்த வரவேற்பிற்கும் சில மாதங்கள் கழித்து நான் சென்றபோது கிடைத்த வரவேற்பிற்கும் வித்தியாசம் இருந்ததையும் உணர்ந்தேன்..

ஒருவேளை இடைபட்ட காலத்தில் நான் யார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்..

நான் கிளை பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்தலைவருக்கு பிறந்த நாள் என்பதை அவர்களுடைய கோப்பிலிருந்து அறிந்த நான் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று நினைத்து முன்னறிவிப்பில்லாமல் அவர்களுடைய வீட்டைச் சென்றடைந்தேன்.

அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

தொடரும்..

22 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 157

நான் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை அவருடைய மூன்று மகன்களும் வங்கிக்கு வந்தனர்.

முந்தைய தினம் நான் சென்றிருந்தபோது வாய் திறவாமல் நின்றிருந்தவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தபோது மடைதிறந்த வெள்ளம்போல் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுடனான அன்றைய பேச்சின் முடிவில்தான் தெரிந்தது அவர்களுடைய உண்மையான பிரச்சினை.

எல்லா தொழில்களிலுமே பண முதலைகளின் ஆதிக்கம் இருக்கும். ஆனால் சில தொழில்களில் மட்டும் மாஃபியா என்போமே அதுபோன்றவர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

அத்தகைய தொழில்களில் ஒன்று மீன்பிடித் தொழில். அதுவும் தூத்துக்குடி மற்றும் சென்னைப் போன்ற நகரங்களில் இத்தகையோரின் தொல்லை சொல்லி மாளாது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விடியற்காலை அல்லது இரவு எட்டு மணிக்கு மேல் நானே  இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

என்னுடைய கிளையிலிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு படகு கட்டுமானத்திற்கு மட்டுமல்லாமல் அதன் பராமரிப்பிற்கும், தொழில் அபிவிருத்திக்கும் கூட கடன்கள் கொடுக்கப்பட்டிருந்ததால் நானும் வாரம் ஒரு முறையாவது மீன்பிடி துறைமுகத்திற்கு செல்வது வழக்கம்.

இத்தொழிலில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்கு வங்கிகள் பலவும் கடனுதவி வழங்கின என்றாலும் வங்கிகளிலிருந்த நியமங்கள் வாடிக்கையாளர்கள் நிறைவேற்ற இயலாத வகையில் இருந்தன என்பதும் உண்மை.

கடன் தொகையை காட்டிலும் ஐந்து மடங்கு மதிப்புள்ளவர்களுக்கே (networth) கடன் வழங்குவது, கடன் தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அசையா சொத்தை ஈடாக கேட்பது, கடன் பெறுபவருக்கு ஈடாக networth இருந்த தனிநபர் ஜாமீன் என்பதைப் போன்ற நியதிகள் படிப்பறிவில்லாத பல வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீது ஒரு நம்பிக்கையற்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் இத்தனை நியதிகளையும் கடைபிடிக்க தயாராக இருந்தாலும் கடன் தொகை கைக்கு வர குறைந்தது இரண்டு மாத காலமாவது எடுக்கும் என்பதும் வாடிக்கையாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால் கந்து வட்டிக்காரர்களிடமிருந்து அதிக தாமதம் இல்லாமல் உடனே தேவையான தொகை கிடைப்பதால்  மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருந்ட பலரையும் கந்து வட்டிக்கு கடன் அளிப்பவர்களை அணுகவைத்திருந்தது.

தங்களை நாடி வருவோர் பலரும் ஏறக்குறைய எல்லா திக்குகளிலும் கடனை எதிர்பார்த்து சோர்ந்து போய் வேறு வழியில்லாமலே  வருவர் என்பதும் கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

ஆகவேதான் தாங்கள் முன் வைக்கும் சகல நியதிகளுக்கும் வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பார்கள் என்பது அவர்களுடைய எண்ணம்.

வெற்றுத்தாளில் கையொப்பம் அல்லது கைநாட்டு, ஆளை விழுங்கும் வட்டி விகிதம், இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து வட்டி செலுத்தாத பட்சத்தில் படகில் பிடிபடும் அனைத்து சரக்கையும் கைகொள்தல் என்பது போன்ற நியதிகள் கடனுக்காக விண்ணப்பித்தவர்களை அச்சுறுத்துவதாக இருந்தும் கந்து வட்டிக்காரர்களின் தொழில் மிகச் சிறப்பாகவே நடந்துக்கொண்டிருந்தது.

இத்தகயோரின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்தவர்கள் அவர்களிடமிருந்து பெற்றிருந்த கடனை அடைப்பதற்கே தங்களுடைய தொழிலில் கிடைத்த வருமானம் முழுவதையும் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாலேயே எங்களைப் போன்ற வங்கிகளிலிருந்து பெற்றிருந்த கடனை அடைக்க முடியாமல் தடுமாறினர்.

கந்து வட்டிக்காரர்கள் கடன் அளிக்கும் நேரத்தில் தேனொழுக பேசி வாடிக்கையாளர்களுக்கு  ஏதோ தர்ம சிந்தனையுடன் தொழில் செய்ய உதவி செய்வது போல் நாடகமாடுவர். ஆனால் கடன் தொகையை சரிவர செலுத்த தவறும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்துக்கொள்ளும் விதம் இருக்கிறதே.. அதை நேரில் பார்த்தவர்களுக்கே அதனுடைய தீவிரம் புரியம்.

ஒருமுறை நான் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்த நேரத்தில் இத்தகைய ஒரு வாடிக்கையாளர் நடத்தப்பட்ட விதத்தை நேரில் காண நேர்ந்தது.

அவர் பெற்றிருந்த கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையை கடந்த ஐந்தாறு மாத காலமாக  சரிவர செலுத்தவில்லை போலிருக்கிறது. பலமுறை எச்சரிக்கப்பட்டும் நிலுவையில் நின்ற வட்டித் தொகைய முழுவதுமாக செலுத்தாத அவருடைய இடுப்பில் படகு இழுக்க உதவும் பருமனான வடக்கயிறை கட்டி படகுத்துறையில் ஆழம் மிகுந்த பகுதியில் மூச்சு முட்டும்வரை  வட்டிக்காரருடைய அடிபொடிகள் கீழேயும் மேலேயும் அவரை ஏற்றி இறக்கியதை பார்த்து பதறிப்போனேன்.

பத்து பதினைந்து முறை கடல் நீருக்குள் ஏற்றி இறக்கப்பட்ட அந்த மனிதரை அவர்கள் கடைசி முறையாக நீருக்குள் அமிழ்த்தி வெளியே எடுத்து ஒரு பொருளைப் போல தரையில் வீசியெறிய அவர் மூச்சு விட முடியாமல் திணறியதை பார்த்தும் சுற்றியிருந்தவர்கள் அதைக் கண்டும் காணாததுபோன்று நடந்துக்கொண்டதிலிருந்தே இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம் என்று ஊகித்தேன்.

‘கடன் வாங்குன்னப்ப இளிச்சிக்கிட்டு வாங்க தெரியுதில்லல்லே.. நீட்டுன பத்திரத்துலல்லாம கையெளுத்து போட்டீரா இல்லையா? ரெண்டு மாசம் தொடர்ந்தாப்ல வட்டி வரலைன்னா சரக்கு முழுசும் நீங்களே எடுத்தக்காலாம்னு ஒத்துக்கிட்டுத்தானல்லே கடன் கொடுத்தேன்.. பொறவென்ன? முழுசையும் எறக்கி வச்சிட்டு போய்க்கிட்டே இரு..’ என்ற மிரட்டலுடன் கரையில் வந்து சேர்ந்த படகுகளிலிருந்த சரக்கு முழுவதையும் வலுக்கட்டாயமாக அடியாட்கள் உதவியுடன் கைப்பற்றி அடிமாட்டு விலைக்கு கைகொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

அத்தகைய மிரட்டலுக்கு அடிபணியாதவர்களுடைய உடல் சில தினங்களுக்குப் பிறகு மீன்பிடித்துறையில் நங்கூரமிட்டு நின்ற படகுகள் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சரித்திரமும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சர்வசாதாரணம்.

இத்தகையோரின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு தங்களுடைய தொழிலையும்,  ஒரே சொத்தான படகையும் இழந்துவிட்டு நின்ற பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

அத்தகையவர்களுள் ஒருவர்தான் நம்முடைய மிக்கேல் பர்னாந்து என்பதை நான் அறிந்தபோது அவரிடம் பச்சாதபத்திற்கு பதில் கோபமே எனக்கு ஏற்பட்டது.

‘அப்பாவுக்கு இந்த தோணிக்கு முன்னாலயே ஒரு பெரிய தோணி இருந்திச்சுய்யா. அது வட்டிக்காரங்கக்கிட்டருந்து வாங்கி கட்டுனது. அத கட்டுன நேரமோ தெரியல அடுத்த ரெண்டு வருசம் சீசன் நல்லாவே இல்லை.. அப்பாவால வட்டியும், அசலும் கொடுக்க முடியாம போயி.. வட்டிக்காரங்க அப்பாவோட படக பிடிச்சிக்கிட்டாங்க.. அதுக்கப்புறம் அப்பாவும் நாங்களும் கூலிக்குத்தான் மத்த ஆளுங்க தோணியில போய்க்கிட்டிருந்தோம். பெறவுதான் ஒங்க பேங்க் மேனேசரு பளக்கம் ஆச்சி. அவராவே முன் வந்துதான் இந்த லோன கொடுத்தாருய்யா..’

நான் எரிச்சலுடன், ‘ஒங்க கஷ்டத்த பார்த்துட்டுத்தான் எங்க மேனேஜர் லோன் குடுத்தார். ஆனா ஒங்கப்பா என்ன செஞ்சார்? எங்கக்கிட்டருந்த வாங்குன லோன வச்சி வட்டிக்காரர்ட்டருந்து வாங்குன கடனெ அடைச்சி படகை மீட்டுக்கிட்டார்.. இப்ப எங்க லோன் திருப்பி கட்டாம அப்படியே கெடக்கு’ என்றேன்.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பிறகு அவர்களுள் மூத்தவர், ‘ஆமாய்யா அதான் அப்பா பண்ண முட்டாள்தனம். அது மட்டுமில்லய்யா.. ஒங்கக்கிட்டருந்து வாங்குன கடன் தொகை முழுசையும் அந்த ஆள்கிட்ட கட்டியும் கடன் என்னவோ அடையவே இல்லைய்யா. எங்கப்பா அடைச்ச பணம் முழுசும் வட்டிக்குத்தான் காணும்னு சொல்லிட்டான்.. நாங்க, எங்கப்பா நாலு பேரும் மாடாத்தான் ஒளைக்கோம். ஆனாலும் எங்க மீன்பாடு முளுசையும் அவனே ஆளுங்கள வச்சி அடிமாட்டு வெலைக்கு எடுத்துக்கறான்.. இதுல நாங்க எங்க ஒங்க கடனெ அடைக்கறது?’

அவர் கூறியதில் இருந்த உண்மையும் நியாயமும் எனக்கு புரிந்தாலும் அதை ஆமோதிப்பதுபோல் நான் பதிலுரைத்தால் அதுவே அவர்கள் கூறியதை நான் ஏற்றுக்கொண்டதுபோலாகிவிடும் என்று நினைத்து, ‘இதல்லாம் எங்கிட்ட சொல்லி என்ன பிரயோசனம் தம்பி? அதுக்காக நீங்க எங்க பேங்க்லருந்து வாங்குன கடனெ கட்டாமயே இருந்துரலாம்னு நினைக்கீங்களா?’ என்றேன்.

‘அப்படி இல்லைய்யா. இன்னும் கொஞ்சம் நாள் டைம் குடுத்தா...’

‘எவ்வளவு?’

‘சரியா சொல்ல முடியலய்யா.. ஒரு அஞ்சாறு மாசம்..’

எனக்கு அந்த இளைஞர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆயினும் கடனை அளித்து ஏற்கனவே ஒன்றரை ஆண்டு கடந்திருந்தது. முதல் மாத தவணையைத் தவிர ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் பற்று வைக்கப்பட்டிருந்த வட்டித்தொகை கூட அடைக்கப்படவில்லை.

நிலுவையில் நின்ற தொகை கடன் தொகையைவிடவும் ஒன்றரை மடங்காகியிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட மாதத்தவணையை சரிவர அடைத்தாலே கடன் மற்று வட்டியை திருப்பி செலுத்த இன்னமும் மூன்றாண்டுகளுக்கு மேலாகும். இந்த நிலையில் இனியும் ஒரு ஆறுமாத காலம் அனுமதிப்பதென்பது நிச்சயம் இயலாத காரியம் என்று நினைத்தேன்.

‘நீங்க வெளிய வாங்கியிருந்த கடன் இன்னும் எவ்வளவு பாக்கியிருக்குன்னு தெரியுமா?’ என்றேன்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு இல்லை என்பதுபோல் தலையை அசைத்தனர்.

‘நீங்க மூனு பேரும் எத்தன வரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்றேன்.

தலையைக் குனிந்துக்கொண்டனர்.

இதுதான் இவர்களுடைய தலைவிதி. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த இந்த சமுதாயம் தலைமுறை தலைமுறையாக சீரழிந்துபோவதன் காரணம் இந்த படிப்பின்மைதான்.  

இத்தகைய குடும்பங்களில் ஆண் பிள்ளைகளை ஒரு சொத்து என்பார்கள். எதற்குத் தெரியுமா? ‘ஒமக்கென்னவே.. நாலும் ஆணா போயிருச்சி. தோளுக்கு மேல வளர்ந்த ஒடனே தொளிலில்ல இறக்கிவிட்டுருவீரு.. நம்மள சொல்லு..’ என்று பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சலித்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

உண்மைதான். படிப்புக்கு பேர்போன திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருபகுதியாயிருந்த தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பையே எட்டிப்பார்க்காத மீனவர் சமுதாய இளைஞர் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன்.

‘படிச்சி கொஞ்சம் நாகரீகமாய்ட்டா இந்த பயலுவ இந்த தொழில விட்டே போயிருவான்லய்யா? அப்புறம் இந்த தொழில யார் செய்யறது? இந்த தொளில அவ்வளவு எளிசா வேத்து சாதிக்காரங்க செஞ்சிர முடியுமாய்யா..? கடலுக்குள்ள தெனம் தெனம் உயிர பணயம் வச்சி, காத்த மட்டுமே நம்பி போயி வரோமே அதுக்கு படிப்பு முக்கியமில்லய்யா.. மனசு நிறைய தைரியம்தான்..’

இத்தகைய வாதத்திற்கு என்ன பதில் அளிப்பதென தெரியாமல் வாயடைத்துப்போயிருக்கிறேன்..

நியாயம்தானே..

இவர்களுடைய அறியாமைதானே இவர்களுடைய தொழிலையே சூற¨யாடிக்கொண்டிருந்த கந்து வட்டிக்காரர்களுக்கு மூலதனம்?

நான் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மேலும் ஆறு மாத தவணை கொடுத்தும் பலனில்லாமல் நான் தூத்துக்குடி கிளையிலிருந்து மாற்றலாகி செல்லும்வரை அக்கடன் வசூலாகாமலிருக்கவே எனக்கு பின்னால வந்த மேலாளர் இறுதியில் அவருக்கெதிராக வழக்கு தொடர வேண்டியிருந்தது.

வழக்கின் இறுதியில் தங்களுக்கிருந்த வீட்டையும் சேர்த்து  எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் வந்து நின்ற அக்குடும்பத்தின் நிலையை இப்போது நினைத்தாலும் வேதனைதான் மிஞ்சுகிறது..

இத்தகைய நிலையையடைந்து நிர்க்கதியாய் நின்ற குடும்பங்கள் தூத்துக்குடியில் ஏராளம்.

இவர்களைப் போன்றோரை இந்த நிலைக்கு ஆளாக்கிய கந்துவட்டிக்காரர்களுள் பெரும்பாலோனோர் இதே மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான் உண்மை!

தொடரும்..

16 June 2006

திரும்பிப் பார்க்கிறேன் 156

முகப்பு சுவருக்கு எந்தவித பொருத்தமும் இல்லாத ஒரு ஓட்டு வீட்டைப் பார்த்து அதிர்ந்து நின்றேன்.

இந்த சொத்தின் மதிப்பு  ----- லட்சம் என்று கோப்பில் வாசித்த நினைவு வர.. இதுவா? என்று மலைத்துப் போனேன்.

நாம் சர்வ சாதாரணமாக குறிப்பிடும் வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் சுற்றுச்சுவரை தூத்துக்குடி நகரில் அதுவும் மீனவர் குடியிருப்புகளில் கோட்டைச் சுவர் என்று பெருமையாக குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன்.

அச்சுவருக்கு பின் இருக்கும் வீட்டின் தரம் எப்படியோ கோட்டைச் சுவர் அட்டகாசமான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும்.

சாலையில் வீட்டைக் கடந்து செல்வோருக்கு அது ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை  அளிக்கும். ஆனால் சுவருக்கு நடுவிலிருக்கும் மரக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் (பெரும்பாலான வீடுகளில் சுற்றுச்சுவருக்கிடையில் ஹைதர் காலத்து பாணி மரக்கதவே இருக்கும். அதுவும் பெரும்பாலும் திறந்தே இருக்கும். – இரவு நேரங்களிலும்.) ஒரு சின்ன இரண்டு அல்லது மூன்று கட்டு வீடு இருக்கும்.

தூத்துக்குடியில் பெரும்பாலான வீடுகள் அதாவது நான் முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருந்தபடி, ரயில்வே லைனுக்கு வடக்கே இருந்த பகுதியில், நீள் செவ்வக வடிவில் அமைந்திருக்கும். வாசலில் ஒரு சிறிய அறை. அதைக்கடந்து ஒரு பெரிய ஆல்-இன் -ஆல் அறை (உண்பது, உடை மாற்றுவது, உறங்குவது எல்லாம் இதில்தான்) அதைக் கடந்தால் ஒரு சிறிய அடுக்களை (ச்சாய்ப்பு என்று அதற்குப் பெயர் ‘எலே தனியா ச்சாய்ப்புலருந்து யாருக்கும் வைக்காம மாந்தறியாக்கும்?’ தாய்மார்கள் தங்கள் மகனை ஏசும் இந்த டைலாக்கை எல்லா வீடுகளிலும் கேட்கலாம்) புழக்கடையில் டாய்லெட் இத்யாதிகள்..

இதில் இரண்டு கட்டு என்றால் வாசலையொட்டிய அறை இருக்காது. ஆல்-இன்-ஆல் அறையும் அளவில் சிறியதாக இருக்கும்.

ஒவ்வொரு கட்டுக்கும் வாசல் மற்றும் மரக்கதவு இருக்கும். வசதியில்லாதவர்கள் வீட்டில் கட்டுகளுக்கு இடையில் கதவு இருக்காது..

கதவு இருந்தால் பெண்கள் உடைமாற்றும் போது அறையின் முன்னும் பின்னும் இருக்கும் கதவுகள் அடைக்கப்படும். கதவு இல்லாத வீடுகளில் திரைச்சீலை (ஏட்டி.. சீலை இப்படி அளுக்கு படிஞ்சி கெடக்கே, தொவச்சு போடக் கூடாதாக்கும்..? என்று தாய்மார்கள் தங்கள் மகளை ஏசும் டைலாக்கும் ஏறக்குறைய எல்லா வீட்டிலும்..)

நான் மேலே கூறிய வீடு இரண்டு கட்டும் இல்லாமல் மூன்று கட்டும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் வீடு..

சுவர்கள் சுண்ணாம்பைக் கண்டே வருடங்கள் பல ஆகியிருக்கும். கோட்டைச் சுவரிலிருந்து சுமார் பத்தடி தள்ளி இருந்த அந்த வீட்டைச் சுற்றிலும் நிலம் கிடந்தாலும் மொத்த பரப்பளவு ஐந்து செண்டுக்குள்ளாகவே (பாஷஇயில் ஒரு தாக்கு தூத்துக்குடி ) இருக்கும் என்று நினைத்தேன்.

நாலாப்புறத்திலிருந்தும் வீசிய காய்ந்த மீன் வாடை மீனவர் குடியிருப்பு என்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது.

இந்த சூழலில் இந்த சொத்தின் மொத்த மதிப்பே என்னுடைய கிளை கோப்பில் குறிப்பிட்டிருந்த மதிப்பில் பாதி கூட இருக்காதென்றே எனக்கு தோன்றியது.

எப்படி இந்த சொத்தை ஆதாரமாக வைத்து என்னுடைய நண்பர் கடன் கொடுத்தார் என்று நினைத்தேன்.

என்னுடைய வங்கியில் கடனுக்கு ஈடாக எடுக்கப்படும் சொத்தை மதிப்பிட ஒவ்வொரு ஊரிலும் ஒரு மதிப்பீட்டாளரை (Official Valuer) நியமித்திருந்தனர். அவர்கள் பெரும்பாலும் கட்டட பொறியாளர்களாக இருப்பர்.

அவர்கள் அந்தந்த ஊரைச் சார்ந்தவர்களாக இருப்பதால் நிலத்தின் மதிப்பை சரியாக அறிந்து வைத்திருப்பர். ஒரு சொத்தை மதிப்பிடுகையில் வீட்டின் மதிப்பைவிட அது கட்டப்பட்டிருந்த நிலத்தின் மதிப்புதான் மிக முக்கியம். மதிப்பிடுவது கடினமும் கூட. குறிப்பாக மேலாளர்களுக்கு. ஆகவேதான் அந்தந்த ஊரைச் சார்ந்தவர்களையே மதிப்பீட்டாளர்களாக நியமிப்பது வழக்கம்.

ஆனால் அதிலும் ஒரு பெரும் ஆபத்து இருந்ததை நாளடைவில்தான் எங்களுடைய வங்கி உணர ஆரம்பித்தது. இத்தகைய மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு ஓரிரு ஆண்டு காலம் வரை பாரபட்சமில்லாமல் பணியாற்றுவார்கள்.. அவர்களுடைய மதிப்பீடும் நியாயமானதாக இருக்கும்.

ஆனால் நாளடைவில் வங்கி இவர்களுடைய பணிக்கு அளிக்கும் சன்மானம் குறைவு என்பதை உணர்ந்து சொத்தை அடகு வைப்பவர்களிடம் சேர்ந்துக்கொண்டு அவர்களுக்கேற்றார்போல் மதிப்பீடு செய்து அவர்களிடமிருந்து நேரடியாக ‘கமிஷன்’ பெற துவக்கிவிடுவார்கள்.

சொத்தின் உரிமையாளரும் சொத்தை மதீப்பீடு செய்பவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அவர்களிடைய இத்தகைய ‘ஒற்றுமை’ இருக்கத்தானே செய்யும்!

ஆக இந்த ஒற்றுமையால் பாதிக்கப்படுவது வங்கி மேலாளர்தான்.

ஆனால் இதை முன்கூட்டியே உணர்ந்திருந்த எங்களுடைய வங்கி இதற்கும் ஒரு ‘செக்’ வைத்திருந்தது.

அதாவது மதிப்பீட்டாளரின் மதிப்பீடு நியாயமானதுதான் என்று கிளை மேலாளர் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் இந்த ஒப்புதல் அளிப்பது என்பதை வெறும் சடங்காக நினைத்திருந்த மேலாளர்கள்தான் அதிகம்.

இதற்கு காரணம் இருந்தது.

ஒன்று சொத்து கிளையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்.

இரண்டாவது வாடிக்கையாளர் அந்த ஊரிலேயே செல்வந்தராகவோ அல்லது மிகவும் பலம் உள்ளவராகவோ (ஆள்பலத்தைத்தான் குறிப்பிடுகிறேன்) இருப்பார். அவர் விரும்பினாலொழிய அவருடைய சொத்தை நாம் சென்று, அளந்து, மதிப்பீடு செய்ய முடியாது.

மூன்றாவது வாடிக்கையாளர்+மதிப்பீட்டாளர் கூட்டுடன் வங்கி மேலாளரும் கூட்டாகியிருப்பார்.

நான்காவது வாடிக்கையாளரை அழைத்துவந்த இடைத்தரகர் பயங்கர கில்லாடியாக இருப்பார். வங்கி மேலாளரை எப்படி ‘கைக்குள்’ போட்டுக்கொள்வது என்பதை நன்கு அறிந்திருப்பார்.

இது எதுவும் இல்லையென்றால்  என்னுடைய நண்பரைப் போல படு சோம்பேறியாக இருந்திருப்பார் கிளை மேலாளர்.

‘வேல மெனக்கெட்டு அந்த ஏரியாவுக்கு போய் பாக்கணுமாக்கும். நீங்க சொன்னா சரியாத்தான் சார் இருக்கும்’ என்று கூறிக்கொண்டே மதிப்பீட்டாளர் சமர்பித்த மதிப்பீட்டறிக்கையில் ‘நான் ஒத்துக்கொள்கிறேன்.’ என்று கையொப்பமிட்டிருப்பார்.

‘என்னய்யா என்னத்தெ அப்படி வீட்டையே பாக்கீங்க?’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.

சற்று முன் ஒரேயொரு ஆளாக இருந்த இடத்தில் இப்போது நம் வாடிக்கையாளரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் இருந்தது.

பிறகுதான் தெரிந்தது. அது எல்லாமே அவருடைய குடும்பத்தினர் என்று.

அவருக்கு வளர்ந்த நான்கு ஆண் மக்களும் (எல்லா பயலுவளும் தோணிக்குத்தான் போறாய்ங்க. படிப்பு மண்டைல ஏறுனாத்தானய்யா?), பள்ளிப்பருவத்திலிருந்த ஒரு மகளும் இருந்தனர். அத்துடன் அவருடைய தாரம், தாய், தந்தை, தங்கை என மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட குடும்பம்..

‘இல்லய்யா.. நீங்க ஒழுங்கா வாங்குன கடனெ அடச்சிருந்தா நான் ஏன்யா காலையில எழுந்ததும் ஒங்க வீட்ட தேடி ஒடிவரப்போறேன்.. நீங்க போட்டு கட்டறேன்னு சொல்லி கடன் வாங்கி ஒரு வருசத்துக்கு மேலாயிருச்சி.. அசலையும் கட்டலே வட்டியையும் கட்டலே.. பணத்த குடுத்துட்டு சும்மாவாய்யா ஒக்காந்த்திருப்பாங்க?’ என்றேன்.

‘நீங்க என்னவோ ஒங்க வீட்லருந்து குடுத்தா மாதிரி பேசறீங்க?’ என்ற பெண் குரல் மட்டும் கேட்க என்னுடைய வாடிக்கையாளரைப் பார்த்தேன். அவர் சற்று விலக அவருக்கு பின்னால் இடுப்பில் கை வைத்துக்கொண்டு கண்களில் சினத்துடன் தலைவிரி கோலத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தரவயது பெண்ணை பார்க்க முடிந்தது.

அது அவருடைய மனைவி!

அந்த குடும்பத்திலிருந்த ஆண்களின் எண்ணிக்கை ஆறு.. அவர்கள் எல்லோருமே வாய் மூடி மவுனமாக நின்றுக்கொண்டிருந்தனர்.

நான் அவருக்கு பதிலளிக்காமல் என்னுடைய வாடிக்கையாளரை பார்த்தேன். ‘இங்க பாருங்க. அனாவசியமான பேச்சை கேக்கறதுக்காக நான் இங்க வரல.. இன்னும் ஒரு மாசம் பாப்பேன்.. நீங்களா பேங்குக்கு வந்து இதுவரைக்கும் உண்டான வட்டி அப்புறம் அசல கட்டுனீங்கன்னா மேக்கொண்டு ஒன்னும் ஆக்ஷன் எடுக்க மாட்டேன். இல்லன்னா..’

‘இல்லன்னா என்னத்தையா செஞ்சி கிளிச்சிருவீரு? நீரு நம்ம சாதி ஆளுன்னு சொல்லி கேட்டுருக்கேன்.. ஒமக்கு முன்னாலருந்தவரு --------------- சாதியாருந்தாலும் கேட்டதுமே மவராசனா லோன குடுத்தாரு.. குடுத்தப்பவும் சரி.. அதுக்கும் பெறகும் சரி.. ஒரு தடவ கூட ஒம்மள மாதிரி வீட்டு வாசப்படி வந்துருப்பாராய்யா? சாதி சனம்னு கூட பாக்காம இப்படி விடிஞ்சதும் விடியாததுமா இங்கன வாசப்படி ஏறி வந்து மானத்த வாங்குறீரே இது நல்லாருக்காக்கும் ஒமக்கு’

மீண்டும் அதே பெண்தான்..

இனியும் அங்கு நின்று தர்க்கம் செய்துக்கொண்டிருந்தால் என்னுடைய மரியாதை கெட்டுவிடும் என்பதை உணர்ந்த நான் வாசலை நோக்கி நடந்தேன்..

வாசலைக் கடந்து என்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து வண்டியை முடுக்கவும் வீட்டினுள் இருந்து ஒரு பெண் கோபத்தில் பேசும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

‘ஏட்டி ஒன்னைய பேச சொல்லிச்சா? கடனெ கொடுத்தவுக கேக்காம இருப்பாளாய்யே.. அந்த மனுசன அந்த பேச்சு பேசி அனுப்பறியே அவரு போய் ஏடாகூடமா செஞ்சிப் போட்டார்னா எம் மகனுக்கில்லய்யே நஸ்டம்.. எலேய் ஒம் பொஞ்சாதி பேச்ச கேட்டு கேட்டுதானல்லே நாசமா போனே.. ஒளுங்கா அந்த மேனேசர் அய்யாவ போயி பாத்து சரி பண்ண பாரு.. அந்த மனுசன் நினைச்சா ஒம் போட்டையே மொடக்கி போட்டுருவாருலே.. அப்புறம் இருக்கற தொளிலும் போயி.. நடுத்தெருவுலதான் நிக்கணும்.. கொமரெ (மகள்) கரையேத்தனுங்கறத மறந்துராத. சொல்லிட்டன்..’

வாடிக்கையாளரின் தாயார் போலும்..

தாய்க்கும் தாரத்துக்கு இதுதான் வித்தியாசம் போலும் என்று நினைத்தவாறு வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு திரும்பினேன்..

தொடரும்..