31 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 144

நான் சந்திக்க விரும்பியவரின் வீடு என்னுடைய வீட்டுக்கு செல்லும் பாதையிலேயே இருந்தது..

செல்லும் வழியெல்லாம் இதைப்பற்றியே   என்னுடைய மனைவி பேசிக்கொண்டிருந்தார்.

நானும் அவர் கூறியவற்றையெல்லாம் மவுனமாக கேட்டுக்கொண்டே வாகனத்தை செலுத்துவதில் கவனமாக இருந்தேன்.

தூத்துக்குடி சாலைகள் மேடு பள்ளங்களுக்கு பேர்போனவை. அத்துடன் கடற்கரை மணல் வேறு நகரத்தின் சாலைகளின் இரு மருங்கிலும் குவிந்து காற்றில் போவோர் வருவோரின் கண்களைக் குறிவைத்து தாக்குவதில் படு சமர்த்து.

என்னுடைய வாகனத்தின் முன்பகுதியில் என் கால்களுக்கிடையில் நின்றுக்கொண்டிருந்த மகள் வேறு கண்களில் விழுந்த மணலின் உறுத்தலால் அழத்துவங்க அவளையும் சமாதானப்படுத்திக்கொண்டே ஆளை விழுங்கும் குழிகளில் வாகனம் விழுந்துவிடாமல் ஒரு கைதேர்ந்த வித்தகனைப்போல வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.

அவருடைய வீட்டை நெருங்கியபோது வீட்டு வாசலில் ஒரு அம்பாசிடர் கார் நின்றிருக்கவே என்னுடைய வாகனத்தை அதன் பின்னால் நிறுத்திவிட்டு தூக்கக் கலக்கத்திலிருந்த என் மூத்த மகளை உசுப்பி எழுப்பி கையில் பிடித்தவாறே வாகனத்திலிருந்து இறங்கி நானும் என் மனைவியும் வீட்டிற்குள் நுழைந்தோம்.

நாங்கள் வாசற்படியில் கால் வைக்கவும் வீட்டினுள் இருந்து நான் காண வந்தவர் வேறொரு பெண்ணுடன் வாசலை நோக்கி வரவும் சரியாயிருந்தது. அந்த பெண் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்கவராக தோற்றமளித்தார். அவருடய தோற்றமே நல்ல வசதிபடைத்தவர் என்பதைக் காட்டியது.

அவர்கள் இருவருமே எங்களைப் பார்த்ததும் நின்றனர். என்னுடைய வாடிக்கையாளர் முகத்தில் வியப்பின் ரேகை தெரிந்தாலும் புன்னகையுடன், ‘வாங்க சார்.. வாம்மா..’ என்று இருவரையும் அழைத்ததுடன்.. ‘உங்க ரெண்டு பேருக்குமே ஆயுசு நூறுதான்.. இவ்வளவு நேரம் ஒங்கள பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்..’ என்றவாறு அவருடனிருந்தவரிடம் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

உடனிருந்தவரின் முகத்தில் தோன்றியது அதிர்ச்சியா அல்லது வியப்பா என்று நான் ராய்ந்துக்கொண்டிருக்கும்போதே அவர் என்னுடைய மனைவியைப் பார்த்து, ‘ஏம்மா நீ -------- அண்ணன் மக இல்லே..’ என்றார்.

என் மனைவி ஆமாம் என்று தலையை அசைக்க, ‘அப்போ இவர் ஒங்க வீட்டு மாப்பிள்ளையா?’ என்றார் வியப்புடன் என்னை சுட்டிக்காட்டி.

நான் அவருடைய கேள்வியின் நோக்கம் விளங்காமல் என்னுடைய வாடிக்கையாளரைப் பார்க்க.. அவருடன் இருந்தவர், ‘பாத்தியாடி.. இந்த கூத்த.. இந்த மனுஷன் அவர் அக்கா பேச்ச கேட்டு குடும்பத்துக்குள்ளவே குளப்பம் பண்றத.. எங்க போய் சொல்றது? சரி நா வாரேன்.. வரேம்மா.. நீ என்னத்துக்கு இங்கன வந்தியோ.. அந்த நெல விஷயமாருந்தா ஆற அமர பேசி ஒரு முடிவு பண்ணுங்க..’ என்று சலிப்புடன் கூறியவாறே.. ‘நா வாரேண்டியம்மா.. நீ வேற எதையாவது சொல்லி குட்டைய குளப்பிறாத..’ என்னுடைய வாடிக்கையாளரிடம் கூறிவிட்டு வாசலை நோக்கி செல்ல, ‘ஒரு நிமிஷம் சார்.. வழியனுப்பிட்டு வந்திடறேன்..’ என்றவாறு அவர் பிறகு சென்ற என் வாடிக்கையாளரையே பார்த்துக்கொண்டு நின்றோம் நானும் என் மனைவியும்..

அடுத்த சிலநிமிடங்களில் அவர் மீண்டும் உள்ளே வர அவரைத் தொடர்ந்து நாங்களிருவரும் வீட்டுக்குள் நுழைந்து ஹாலிலிருந்த பணக்காரத்தனமான சோஃபாவில் அமர்ந்தோம். என்னுடைய மூத்த மகள் தூக்கக்கலக்கத்தில் சாமியாடிக்கொண்டிருக்கவே அவளை அப்படியே நான் அமர்ந்திருந்த சோபாவில் கிடத்தினேன்.

எங்களை அமர்த்திவிட்டு உள்ளே சென்ற என்னுடைய வாடிக்கையாளர் சில நிமிடங்களில் புன்முறுவலுடன் எங்கள் முன் வந்தமர்ந்தார்.

நான் எப்படி பேச்சை துவக்குவதென தெரியாமல் சில நொடிகள் தாமதிக்க அவர், ‘நீங்க ரெண்டு பேரும் முதல் தடவையா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க.. ஆனா வந்த விஷயம்தான் ஏடாகூடமா இருக்கும்போல.. எல்லாம் அந்த நிலம் விஷயமாத்தான?’ என்றார்.

நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.. என் மனைவி, ‘இப்ப வந்து போனது...’ என்று இழுத்தார்.

அவர் வியப்புடன், ‘ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னுல்லே நெனச்சேன்.. எங்க வீட்டுக்காரவுகளுக்கு சொந்தம். எனக்கு அக்கா மொற வேணும்.. ------------------ தியேட்டர் ஓனர் இவங்க மாப்பிள்ள தான்.. ஒங்க அப்பாவுக்கும் தூரத்து சொந்தமாச்சே.. அதான் அக்கா போவும்போது குடும்பத்துக்குள்ளவே குளப்பம்னு சொன்னாங்க..’ என்றதும் நான் வியப்புடன் என் மனைவியைப் பார்த்தேன், 'ஏன் நீ இத எங்கிட்ட சொல்லலே' என்பதுபோளல். அவரோ 'எனக்கே இப்பத்தான் தெரியுது' என்பதுபோல் என்னை திருப்பி பார்த்தார்.

எங்கள் இருவருடைய பார்வையின் அர்த்தம் அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். சிரித்தார்.

நான் சற்று சீரியசாக, ‘நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க..’ என்று ஆரம்பித்தேன்.

அவர் சிரித்தவாறு, ‘அதுக்காவத்தான சார் வந்திருக்கீங்க. சும்மா சொல்லுங்க.. நானும் என் மனசுலருக்கறத வெளிப்படையா பேசலாம்னுதான் இருக்கேன்.. நீங்க சொல்லுங்க..’ என்றார்.

நான் என் மனைவியைப் பார்த்தேன்.. அவரும் சொல்லுங்க என்பதுபோல் சைகை செய்ய நான் முந்தைய இரு நாட்களில் நடந்து விஷயங்களை சுருக்கமாகக் கூறினேன். இறுதியில், ‘நீங்க என்னெ இந்த ரெண்டு விஷயமா பேங்க்ல சந்திச்சிருக்கீங்க. நான் என்னோட ஆஃபீஸ் விஷயத்துல கொஞ்சம் கண்டிப்பானவன்னு நீங்களே ரெண்டு மூனு தரம் சொல்லியிருக்கீங்க. அந்த அளவு மெட்டிகுலசா பாக்கறவன் நான்.. அப்படியிருக்கறப்ப என்னோட சொந்த விஷயத்துல.. அதுவும் இவ அண்ணனோட விஷயத்துல கவனக்குறைவா செஞ்சிருப்பேன்னு நினைக்கிறீங்களா?’

அவர் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார். ‘இருக்காதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா வில்லங்கம் ஒங்க பத்திரத்துல இல்ல சார்..  நான் விவரமா சொல்றேன்.. ஆனா இந்த விஷயத்த நா சொன்னதா எந்த ஒரு நேரத்துலயும் நீங்க சொல்லிறக்கூடாது..’ என்றவர் என் மனைவியைப் பார்த்தார். ‘ஒங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்.. இல்லன்னா குடும்பத்துக்குள்ள பிரச்சினையாயிரும்..’ என்றார்.

நாங்கள் இருவருமே இல்லை என்பதுபோல் தலையை அசைக்க அவர் தொடர்ந்தார்.

‘இதெல்லாம் ஒங்க மச்சான் வீட்டுக்கு எதுத்தாப்பலருக்கற பையனோட அப்பா செஞ்ச வேலை.. அவர் மகனுக்குத்தான் தியேட்டர் ஓனரோட அக்கா மகள குடுத்துருக்கு. நீங்க ரெண்டு நாளைக்கு முன்னால ராத்திரி நிலத்த அளவெடுத்துக்க போயிருந்தீங்களாக்கும்?’

நான் ஆமாம் என்று தலையை அசைத்தேன்.

‘அந்த நேரம் பார்த்து அந்த மனுஷன் மகன பாக்கறதுக்கு வந்திருக்கார் போலருக்கு. அவர் ஏற்கனவே ஒங்கள பேங்க்ல பாத்துருக்காராம்.. ஒங்கள பாத்ததுமே.. இவர் இங்க என்ன பண்றார்னு மகன்கிட்ட கேட்டிருக்கார். அவர் நீங்க ஒங்க மச்சானுக்காக நிலம் வாங்குன விஷயம் அந்த புரோக்கர் வழியா கேள்விப்பட்டிருக்கார் போல..  நீங்க அஸ்திவாரம் தோண்டறதுக்கு அளக்கறீங்கன்னு சொல்லியிருக்கார். அவர் அப்படியான்னு கேட்டுட்டு நீங்க வாங்குன புரோக்கர் வீட்டுக்கு போயி எவ்வளவுக்குய்யா வித்தேன்னு கேட்டிருக்கார். அவர் விலைய சொன்னதும் சரின்னுட்டு போய்ட்டாராம்.. அவரோட சம்பந்தியம்மாதான் எங்க அக்காவோட மைனி (திரையரங்கு உரிமையாளரின் மூத்த சகோதரி) போன மனுஷன் சும்மாருக்காம நேரா சம்பந்தியம்மா வீட்டுக்கு போயி ஒங்களுக்கு பிரையண்ட் நகர்ல ஒரு எடம் இருக்குன்னு சொன்னீங்களே அது இப்ப நல்ல விலைக்கு போவுது போலருக்கு.. நீங்க எங்க அங்கன போயி வீடு கட்டப்போறீங்க.. பத்திரத்த எடுங்க.. நான் வித்துக்குடுக்கேன்னு சொல்லியிருக்கார். அவுக.. அது எங்க கிடக்கோ எம்பையன் வந்ததும் பாக்கேன்னு.. சொல்லியிருக்காக.'

நானும் என் மனைவியும் கதை கேட்கும் குழந்தைகள்போல் அமர்ந்திருந்தாலும் இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நான் குழம்பினேன்.

'அவங்க மகன் திருச்செந்தூர் ஸ்டேட் பாங்க்ல ஆஃபீசரா இருக்கார். ஒங்க மச்சான் நிலத்துக்கு எதிர்த்தாப்பலருக்கற பொண்ணோட அண்ணன். அவர் ராத்திரி வந்ததும் அவங்கம்மா சம்பந்தி வந்து போன விஷயத்த சொல்ல.. பையனும் பீரோவ கொடஞ்சி பத்திரத்த எடுத்து குடுத்துட்டு இப்ப ஒன்னும் விக்க வேணாம்.. நாமளே சின்னதா ஒரு வீட்ட கட்டி வாடகைக்கு விடலாம்மான்னு சொல்லியிருக்கார். அவங்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ குளிச்சிட்டு இந்த பத்திரத்த எடுத்துக்கிட்டு போயி சம்பந்தி வீட்ல குடுத்துட்டு வாடான்னுருக்காங்க. அவரும் அம்மா சொல்ல தட்ட முடியாம அத எடுத்துக்கிட்டு போய் குடுத்துட்டு நீங்க அம்மா சொன்னா மாதிரியே செஞ்சிருங்கன்னு சொல்லியிருக்கார்.

அந்த மனுஷன் பத்திரத்த பார்த்துட்டு என்ன தம்பி இது வெறும் காப்பியில்லே ஒரிஜினல் பத்திரம் எங்கன்னு கேட்டிருக்கார். அப்பத்தான் மகனே அத ஒழுங்கா பாத்திருக்கார். இதுதான் அங்கிள் இருந்தது.. மறுபடியும் வேனா பாக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாராம். ஆனா அதுவரைக்கும் காத்திக்கிட்டிருக்க பொறுமையில்லாம அந்த மனுஷன் அந்த பத்திரத்த போட்டு குடைஞ்சி அந்த நிலமும் நீங்க வாங்குனதா சொன்ன நிலமும் ஒன்னுதாங்கறத கண்டுபிடிச்சிட்டு அத தூக்கிக்கிட்டு ராத்திரியே சம்பந்தி வீட்டுக்கு ஓடியிருக்கார். அவரும் அந்த பையனுமா சேர்ந்து ராத்திர பதினோரு மணி வரைக்கும் ஒரிஜினல் பத்திரத்த தேடியிருக்காங்க. இருந்தாதான கிடைக்கும்..? ஆனாலும் ஆசை யார விட்டது? ஒடனே ஏதாவது செய்யணும்னு எங்க -----------மச்சான் (திரையரங்கு ஓனரின் பெயர்) வீட்டுக்கு ஓடியிருக்காங்க.. அவர் என்ன ஏதுன்னு முழுசா கேக்காம ராத்திரியோட ராத்திரியா அவரோட ஆளுங்கள வச்சி தட்டிய அடிச்சிருக்கார்.. அதுக்கப்புறம் நடந்ததுதான் ஒங்களுக்கே தெரியுமே..’

மூச்சுவிடாமல் பேசி முடித்த என்னுடைய வாடிக்கையாளர் சற்று நிறுத்திவிட்டு மணியைப் பார்த்தார்.. இரவு பத்துமணியைக் கடந்திருந்தது..

அவர் கூறியதிலிருந்து எனக்கு ஒரு விவரம் மட்டும் புரிந்தது. இந்த நிலம் திரையரங்கு உரிமையாளருடைய சகோதரிக்கு எப்போதோ சொந்தமாயிருந்திருக்க வேண்டும். அதை பிறகு விற்றுவிட்டு அதை அடியோடு மறந்துபோயிருக்க வேண்டும்.. அதனால்தான் அவர்களிடம் ஒரிஜினல் பத்திரம் இருக்கவில்லை.. ஆனால் அதை ஊர்ஜிதப்படுத்த வேண்டுமென்றால் உடனே என் மாமியார் வீட்டிலிருந்த பத்திரக்கட்டில் இருந்த எல்லா பத்திரங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்..

‘அவங்க பேர் என்னன்னு சொல்லுங்க.. நா பத்திரத்த பார்த்துட்டு சொல்றேன்.’ என்றேன்.

அவர் பெயரைச் சொல்ல மறந்துவிடாமலிருக்க நான் என்னுடைய தொலைப்பேசி புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு எழுந்து நின்றோம். ‘நான் காலைல பத்திரத்த பார்த்துட்டு சொல்றேன்.. அந்த நிலத்த அவங்க ஒருவேளை வித்துட்டு மறந்துபோயிருக்கலாம் இல்லையா?’

அவர் சிரித்தார். ‘பிறகென்ன சார்? அதான் எங்க அக்காவே சொல்றாங்களே.. அவங்க பசங்க ரெண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கற நேரத்துல வித்திருப்பாங்க.. அவங்க வீட்ல இறந்துபோனப்போ பசங்க ரெண்டு பேரும் சிறிசுங்க.. ஒத்தையா நின்னு வளர்த்திருக்காங்க.. அப்ப சல்லிசா வித்திருப்பாங்க.. இப்ப நல்ல விலைக்கு போவுதுன்னு தெரிஞ்சதும்.. மனசு கிடந்து அடிச்சிருக்கும்... ஆசை யார விட்டுது..’ என்றவர் மீண்டும்.. ‘சார்.. தயவுசெஞ்சி நான் சொன்னேன்னு யாருக்கும் தெரிஞ்சிரப்போவுது.. ஒங்க மாமனார் வீட்டாளுங்களுக்குக் கூட தெரியாமப் பாத்துக்குங்க..’ என்றார் உண்மையான அச்சத்துடன்.. ‘எங்க அக்காவுக்கு நல்ல மனசுன்னாலும் எங்க மச்சான் ஒரு மாதிரிதான்.. அதனால சொல்றேன்.. நான் சொன்னேன்னு தெரிஞ்சா அனாவசியமா பிரசினையாயிரும்..’

எனக்கு அவருடைய தர்மசங்கடமான நிலைமை புரிந்தது.. அத்துடன் என்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுள் ஒருவர் வேறு.. ‘பயப்படாதீங்க.. நானோ என் மனைவியோ நிச்சயமா வெளிய சொல்ல மாட்டோம். நீங்க நம்பலாம்..’ என்று உறுதியளித்துவிட்டு புறப்பட்டோம்..

வரும் வழியில்.. ‘என்ன அக்கிரம் பாருங்க.. இப்ப என்ன பண்ண போறீங்க?’ என்றார் என் மனைவி..

‘அந்த பத்திரத்த பார்த்துட்டுத்தான் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்.. ஆனா அதுக்கு முன்னால.. அந்த தியேட்டர் ஓனர்தான் ஒங்கப்பாவுக்கு சொந்தமாச்சே. ஏன் அவர் போய் கேக்காம இருக்காரு?’ என்றேன்..

‘ஏதாச்சும் பிரச்சினையாருக்கும்.. அத வேற தெரிஞ்சிக்கிட்டு நீங்க டென்ஷனாகனுமாக்கும்.. நமக்கு இருக்கற பிரச்சினை போதாம இது வேறயா.. இந்த நில விஷயம் மட்டும் முடிஞ்சா போறும்டான்னுருக்கு.. வீட்டுக்கு போனதும் ஃபோன் பண்ணி பத்திரக்கட்ட தம்பிக்கிட்ட குடுத்துவிடச் சொல்றேன். இப்பவே சைக்கிள எடுத்துக்கிட்டு வாடான்னா வந்துருவான்.. அதப்பாத்தாத்தான் எனக்கு இன்னைக்கி தூக்கம் வரும்போலருக்கு..’
என் மனைவிக்கென்ன எனக்கே அப்படித்தான் தோன்றியது..

அடுத்த அரைமணியில் பத்திரம் வந்தது...

அதை பிரித்து சம்பந்தப்பட்ட பத்திரத்தை எடுத்து படித்ததும் சிரிப்புத்தான் வந்தது..

என்னத்த சொல்ல..?

தொடரும்..11 comments:

Krishna said...

ஓ, அப்படி போகுதா கத...

பாவம், இந்த ஜி அய்யாவும் கரடியா கத்திப் பாத்துட்டார். இன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் அதிகமா எழுதி, அந்த ஸஸ்பென்ஸ உடைச்சாத்தான் என்னவாம்..

எனக்கென்னமோ, வங்கி அதிகாரியா இருந்திட்டு சீரியல் எழுத முடியாதென்பதால், பினாமியா வேறு பெயரில் டி.வி. சீரியல் எழுதிக் கொண்டிருக்கீங்கன்னு தோணுது...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ஒங்களுக்கே தெரியும், நான் தினமும் இரவு 8.30 மணிக்கு மேல்தான் அடுத்த நாள் பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன் என்று.

தி.பா+சூரியன் பதிவுகளை எழுதி முடிக்கவே நள்ளிரவாகிவிடுகிறது..

இரண்டையும் விட முடியாமல் ரெண்டு பெஞ்சாதிகாரனாட்டமா.. இதுல இன்னும் ரெண்டு பக்கம் எழுதுன்னு சொன்னா.. முடியற காரியமா கிருஷ்ணா?

துளசி கோபால் said...

சிரிப்பு வந்துச்சுன்னா ஆபத்தில்லாத விஷயமாத்தான் இருக்கணும்.

இன்னிக்காவது கொஞ்சம் நிம்மதியாத் தூங்கறேன்:-))))

Krishna said...

கலைஞர் மாதிரி (உறுப்பினர்கள் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டிருந்தால், அதில் ஒருசிலதுகளுக்கு மட்டும் பதில் சொல்லி தப்பித்து விடுவது போல), அந்த பினாமி மேட்டர் விஷயத்த மட்டும் கண்டுக்க மாட்டேன்றீங்க... அப்ப, கன்பார்ம்தானா....

tbr.joseph said...

வாங்க துளசி,

சிரிப்பு வந்துச்சுன்னா ஆபத்தில்லாத விஷயமாத்தான் இருக்கணும்.//

ஆமா.. அதாவது எங்களோட பார்வையில அது ஆபத்தில்லாத விஷயம்தான்..

நாந்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே வில்லங்கம் நிச்சயமா பத்திரத்துல இல்லேன்னு..

sivagnanamji(#16342789) said...

தலய சுத்துது சாமி...
உங்க மாமனார் அவருடைய உறவினரை சந்தித்திருந்தாலோ அல்லது உங்கள் மைத்துனர் உங்களிடம் ஆலோசித்துவிட்டு செயல்பட்டிருந்தாலோ எங்களுக்கு
இத்தனை 'எபிசோட்'கள் கிடைத்திருக்காது....

tbr.joseph said...

ஆமா கிருஷ்ணா,

இப்ப சன் டிவியில பரபரப்பாருக்கற கோலங்கள், செல்வி ரெண்டுமே என்னோட பினாமிங்க எழுதறதுதான். யார்ப்பா.. ஏம்பா அடிக்கறீங்க.. ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான?

tbr.joseph said...

வாங்க ஜி!

நல்ல வேளை.. எங்க அடிக்க வந்துருவீங்களோன்னு பயந்துட்டேன்..

கூகுள் டாக்.. கூகுள் ஒதைன்னு ஒரு மென்பொருள் வந்துட்டா அதுவும் (அதாங்க தர்ம அடி) கிடைச்சாலும் கிடைக்கும்..

உங்க மாமனார் அவருடைய உறவினரை சந்தித்திருந்தாலோ அல்லது உங்கள் மைத்துனர் உங்களிடம் ஆலோசித்துவிட்டு செயல்பட்டிருந்தாலோ//

இந்த மாதிரி ஒருத்தரையொருத்தர் கலந்துக்கிட்டு செய்தாத்தான் எந்த தொந்தரவுமே வராதே..

மணியன் said...

உங்களை அந்த வாடிக்கையாளரிடம் போக வைத்தது எது ? இல்லையென்றால் இத்தனை பின்னணி தெரிய வாய்ப்பே இல்லையே! கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் என்பார்கள்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

உங்களை அந்த வாடிக்கையாளரிடம் போக வைத்தது எது ?//

இந்த கேள்வியை நானும் பலமுறை என்னிடம் கேட்டுக்கொண்டதுண்டு..

என்னிடம் அன்று இருந்த தொலைப்பேசி எண்களுடைய நபர்களுள் பரவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சில நபர்களுள் முக்கியமானவர் இவர். அவரும் அந்த தியேட்டர் ஓனரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமே அவரை நான் சந்திக்க காரணம்.

ஆனால் அவரும் அந்த தியேட்டர் ஓனருடைய மனைவியும் உறவினர்களாக இருந்தது ஒருவகையில் அதிர்ஷ்டம் இல்லையென்றால் இறையருள் என்றே கூறவேண்டும்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...இது போன்ற நிகழ்வுகள் அரிதுதான் என்றாலும் எத்தனை பெரிய பிரச்சனையாகியிருக்கிறது. பிரச்சனையெல்லாம் தீர்ந்து எல்லாரும் நல்லாயிருந்தா சரி.