30 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 143

அன்றும் என்னுடைய வட்டார மேலாளர் என்னுடனே இருந்ததால் அன்றும் அவர் புறப்பட்டுச் செல்லும்வரை வேறு வழியில்லாமல் என்னுடைய பெர்சனல் விஷயங்களைப் பற்றி சிந்திக்கவும் நேரமில்லாமற்போனது.

அத்துடன் தன்னுடைய முந்தைய தின நடத்தைக்கு உண்மையிலேயே அவர் வருத்தப்பட்டிருப்பார் போலிருக்கிறது. ‘டிபிஆர். உங்களுடைய அறிக்கையில கொஞ்சம் ஸ்ட்ராங்கான லாங்வேஜ் யூஸ் பண்ணியிருந்தாலும் கொஞ்சமும் மிகைப்படுத்தாம உள்ளத மட்டும் எழுதியிருந்ததுனால அத அப்படியே அக்செப்ட் பண்ணிக்கணும்னு ஜி.எம்முக்கு எழுதலாம்னு இருக்கேன்.’ என்றார்.

நான் என்னுடைய நேற்றைய பதிவில் குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சி என்பதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்கின்ற அளவுக்கு அவர் எனக்கு அறிவுரைகளுக்கு மேல் அறிவுரையாக அள்ளி வீசிவிட்டுத்தான் அன்று பிற்பகல் என்னிடமிருந்து விடைபெற்று சென்றார். என்மேல் அவர் வைத்திருந்த அக்கறைதான் அவரை அப்படி பேசவைத்தது என்று நினைத்து நானும் அவர் கூறியதை மறுத்துப் பேசாமல் கேட்டுக்கொண்டேன்.

என்னுடைய பொறுப்பேற்கும் அறிக்கையில் குறிப்பிட்ட குளறுபடிகளை முதன்முதலில் கண்ட நேரத்தில் என்னுள் ஏற்பட்ட கோபம் என்னுடைய அறிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது என்பதை அவர் எடுத்துக்காட்டியபோதுதான் எனக்கு விளங்கியது. அலுவலக பொறுப்பை நிறைவேற்றும் வேளையில், முக்கியமாக எழுத்துவடிவத்தில்  ஒரு அறிக்கையை மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் சமயங்களில், எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்முடைய தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தலாகாது என்ற அவருடைய அறிவுரையை இன்றுவரை நான் கடைபிடித்து வருகிறேன்.

***

அவர் விடைபெற்று சென்ற உடனே என்னுடைய குடியிருப்பிற்கு விரைந்தேன்.

அன்று காலையில் நான் அலுவலகத்திற்கு புறப்படும் நேரத்தில் என்னுடைய மாமியார் தனியாக வந்திருந்தார். என்னுடைய வட்டார மேலாளரை அவருடைய அறையிலிருந்து அழைத்துக்கொண்டு ஒரு வாடிக்கையாளரை காண செல்லவேண்டியிருந்ததால் அவரிடம் நின்று பேச எனக்கு நேரம் இருக்கவில்லை.

அவர் எதற்காக வந்திருந்தார், என்ன கூறினார் என்பதை தெரிந்துக்கொள்ள முடியாமல் காலையிலிருந்து தவித்த தவிப்பு எனக்குத்தான் தெரியும். இருப்பினும் என்ன செய்ய? என்னுடைய வட்டார மேலாளர் விடைபெற்று செல்லும்வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்திருப்பதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

என்னுடைய குடியிருப்பை நோக்கிச் செல்வதைக் கண்ட என்னுடைய தலைமைக் குமாஸ்தா, ‘சார், மேடம் ஒங்க மதர் இன் லா கூடவே பொறப்பட்டு போயிட்டாங்க. நம்ம ஜோனல் மேனேஜர் போனதும் ஒங்கள அங்க வரச் சொல்லிட்டு போனாங்க.’ என்றார்.

நான் உடனே என்னுடைய உதவி மேலாளரிடம் சொல்லிகொண்டு புறப்பட்டுச் சென்றேன்.

செல்லும் வழியெல்லாம் ஏதேனும் புதிய பிரச்சினையாயிருக்குமோ என்று நினைத்துக்கொண்டே சென்றேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் வைத்து என்னிடம் கோபித்துக்கொண்டு என்னுடைய மைத்துனர் கிளம்பிச் சென்றதிலிருந்தே ஏதோ ஒன்று சீரியசாக நடக்கப்போகிறது என்று எண்ணியிருந்தேன். அத்துடன் அதற்கு மறுநாள் வீட்டிற்கு சென்ற என்னுடைய மனைவியிடம் அவருடைய பெற்றோர் இருவருமே கோபித்துக்கொண்டது வேறு எனக்கு அந்த எண்ணத்தை உறுதிபடுத்தியிருந்தது.

என்னுடைய மைத்துனரின் மாமனாரும் தூத்துக்குடியில் செல்வாக்கு நிறைந்தவர் எனக்கு தெரியும். முந்தைய  திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவிருந்த பரவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருடைய நெருங்கிய உறவினர் அவர். ஆகவே அவருடைய மருமகன் விஷயத்தில் அவ்வளவு எளிதாக யாரும், அவர் எத்தனை வசதிபடைத்தவராகவோ, அல்லது செல்வாக்குள்ளவராகவோ இருந்தாலும் தலையிட்டு பாதகம் விளைவித்துவிடமுடியாது என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

ஆனால் கேவலம், ஒரு சாதாரண வீட்டு மனை விஷயத்தில் ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர் நேரடியாக தலையிடுவாரா என்று எண்ணமும் இருந்தது. அது எப்படியிருந்தாலும் நான் தேவையில்லாமல் என்னுடைய மைத்துனர் விஷயத்தில் தலையிட்டிருக்க வேண்டாமோ என்ற எண்ணமும் கடந்த இரு தினங்களாக எனக்கு இருந்ததும் உண்மைதான்.

ஒரு வங்கி மேலாளர் என்ற பதவியிலிருக்கும் ஒருவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசு அதிகாரிகளிடம் மோதுவதை தவிர்க்கவேண்டும் என்பதும் என்னுடைய அலுவலக ஷரத்துகளில் ஒன்று என்பதும் எனக்கு தெரியாமல் இல்லை. என்னுடைய பதவியை என்னுடைய தனிப்பட்ட விஷயத்திற்கு தவறாக பயன்படுத்தினேன் என்ற விஷயம் என்னுடைய தலைமையகத்திற்கு தெரியவரும் சூழ்நிலையில்  என் மீதே நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பதும் எனக்கு தெரிந்திருந்தது.

ஆகவே இனியாவது இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் என்னுடைய மாமனார் வீட்டை சென்றடைந்தேன்.

வீட்டில் என்னுடைய மனைவியும், மாமியார் மட்டுமே இருந்தனர். என்னுடைய மூத்த மகளையும் என்னுடைய இளைய மைத்துனர்களில் ஒருவர் பள்ளிக்கே சென்று அழைத்து வந்திருந்தார்.

நான் என்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியதுமே என்னுடயை மனைவி பதட்டத்துடன் என்னை நோக்கி வந்தார். ‘என்னங்க இவ்வளவு நேரம் சென்னு வர்றீங்க?’ என்றார் படபடப்புடன்.

நான் ‘ஏன் என்ன விஷயம்?’ என்றேன்.

‘இன்னைக்கி காலைல நாலஞ்சி தோணிப்பயல்க அண்ணன் வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போயிருக்கான்க. அண்ணனும் மைனியும் பயந்துபோயி வீட்ட பூட்டிக்கிட்டு மைனி வீட்டுக்கு போய்ட்டாங்களாம். அதுக்கப்புறம் மைனியோட அப்பா அந்த தியேட்டர் முதலாளி வீட்டுக்கு போயிருக்காங்க. அவர் இவர யாருன்னு தெரிஞ்சும் மரியாதையில்லாம பேசிட்டாராம். அந்த சமயத்துல அந்த இன்ஸ்பெக்டரும் அங்க இருந்திருக்காரு. ஒங்க மருமகன ------------- ரூபாய வாங்கிட்டு நிலத்த எழுதிக்குடுத்துர சொல்லுங்க. இல்லனா விசயம் பிரச்சினையாயிரும்னு மிரட்டியிருக்காரு. அத்தோட நீங்க இந்த விஷயத்துல இனியும் தலையிட்டா ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு ஒங்க மேல ரிப்போர்ட் பண்ணுவேன்னும் சொன்னாங்களாம்.’

என் மனைவி கூறிக்கொண்டிருக்கும்போதே நான் வீட்டுக்குள் சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். என்னுடனேயே படபடப்புடன் பேசிக்கொண்டு வந்த என் மனைவி நான் பதிலேதும் கூறாமல் யோசித்தவாறே அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், ‘என்னங்க நீங்க, நான் பேசிக்கிட்டேயிருக்கேன். நீங்க பாட்டுக்கு என்னத்த யோசிச்சிக்கிட்டிருக்கீங்க?’ என்றார்.

நான் வரும்போதெல்லாம் புன்னகையுடன் வாசல்வரை வந்து வரவேற்கும் என்னுடைய மாமியார் நான் வந்தது தெரிந்தும் சமையலறையிலேயே இருந்ததைக் கண்டதும் எனக்கு லேசான அதிர்ச்சியாயிருந்தும் அதைப்பற்றி வருந்தும் மனநிலையில் நான் இல்லை.

என் மனைவி கூறிய, ‘இனியும் தலையிட்டா ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு ஒங்க மேல ரிப்போர்ட் பண்ணுவேன்னும் சொன்னாங்களாம்’ என்ற வார்த்தைகளே என்னைச் சுற்றி, சுற்றி வந்தன. அப்படியொரு சூழலை நினைத்துத்தான் நானும் வரும் வழி முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருப்பினும் இத்தனக்கும் பிறகு நான் என்னுடைய நிலைமைக்கு அஞ்சி ஒதுங்கிச் சென்றால் என்னுடைய மனைவியின் குடும்பத்தினருடனான என்னுடைய உறவில் நிச்சயம் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தோன்றவே இதில் நிச்சயம் இறுதியாக ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய மவுனத்தின் பின்னணி புரியாமல் என்னுடைய மனைவி மீண்டும், ‘என்ன நா கேட்டுக்கிட்டேயிருக்கேன்.. நீங்க..’ என்று துவங்கவே நான், ‘என்னெ கொஞ்சம் யோசிக்கவிடு..’ என்று எரிந்து விழுந்தேன்.  

‘ஆமா.. முன்னே பின்னே யோசிக்காம செஞ்சிர வேண்டியது.. இப்போ யோசிச்சி என்னெ பிரயோசனம்? இது நேத்து போலீஸ் ஸ்டேஷன்ல வீராப்பா பேசும்போது யோசிச்சிருக்கலாமில்லே..’ என்று முனுமுனுத்தவாறு என் மனைவி உள்ளே செல்ல நான் என்னுடைய கைப்பையில் எப்போதும் வைத்திருக்கும் சிறிய தொலைப் பேசி இண்டெக்ஸ் புத்தகத்தை (இப்போதிருப்பது போல் செல் ஃபோன் வசதிகள் இல்லாத காலமாயிற்றே. ஆகவே முக்கியமான சிலருடைய தொலைப் பேசி எண்களை ஒரு சிறு பாக்கெட் இண்டெக்ஸ் புத்தகத்தில் குறித்து அதை எப்போதும் கைவசம் வைத்திருப்பது என்னுடைய வழக்கம். என்னுடைய சக மேலாளர்கள் பலருக்கும் இப்பழக்கம் இருந்தது என்பது எனக்கு தெரியும்.) எடுத்து யாரையாவது தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்க வேண்டுமே என்று எண்ணத்தில் ஒவ்வொரு பெயராக வாசித்தேன்.

சட்டென்று ஒரு பெயரில் என்னுடைய கவனம் சென்றது. அவரைக் குறித்து ஏற்கனவே முன்னொரு பதிவில் கூறியிருக்கிறேன். அவர் ஒரு ஷிப் ச்சாண்ட்லிங் நிறுவனத்தை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பெண். பரவர் சமுதாயத்தைச் சார்ந்தவராயினும் தான் ஃபெர்னாண்டஸ் என்றும், பரம்பரை, பரம்பரையாகவே படித்தவர்கள்.. ரயில் பாதைக்கு தெற்கே உள்ளவர்கள் என்றெல்லாம் தன்னைப் பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டவர் என்று அவரைப்பற்றி விவரித்திருக்கிறேன். அவருடைய கணவர் பிரையண்ட் நகரில் என்னுடைய நிலத்திற்கெதிராக வீடு கட்டிக்கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அவரை அழைத்து இந்த திரையரங்கு உரிமையாளரைப் பற்றி விசாரித்தாலென்ன என்று தோன்றியது. உடனே என்னுடைய மனைவியை அழைத்து என்னுடைய யோசனையைக் கூறினேன். அவருடைய பெயரைக் கேட்டதுமே அதுவரை பேசாமலிருந்த என்னுடைய மாமியார், ‘யார் அவளா? வேற வெனையே வேணாம். நீங்க எதையாச்சும் ஒன்னெ சொல்லப்போக, அவ அத ரெண்டா, மூனா திரிச்சி அங்க போயி சொன்னாலும் சொல்லிருவா. அவளும் அந்த குடும்பத்த சேர்ந்தவதான். அத மறந்துராதீங்க.. நம்ம பரவ சாதியில பொறந்துட்டு ஏதோ கொஞ்சம் படிச்சிட்டோம்கற திமிர்ல நம்ம சாதியவே குறச்சி சொல்லி அலைஞ்சிக்கிட்டிருக்கறவளாச்சே அவ..’ என்று கூற நான் என்ன செய்வதென தெரியாமல் விழித்தேன்.

என்னுடைய மனைவியோ என்னருகில் வந்து, ‘இங்க பாருங்க நீங்க சொன்ன ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா அம்மாவுக்கும் அவுகளுக்கும் அவ்வளவா ஒத்துக்காது. நாம ஒன்னு செய்யலாம். வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு கிளம்பி போற வழியில அவுக வீட்டுக்கு போய்ட்டு போலாம். ஃபோன்ல சொல்றதவிட நேரா பாத்து கொஞ்சம் விளக்கமா பேசலாமில்லே.. என்ன சொல்றீங்க?’ என்றார் ரகசியமாக.

எனக்கும் அது நல்ல யுக்தியாக தோன்றவே சரியென்று கிளம்பினேன். நாங்களிருவரும் சட்டென்று கிளம்பினால் என்னுடைய மாமியாருக்கு சந்தேகம் ஏற்படுமே என்று நான் நினைத்தாலும் அவர் அன்று இருந்த மனநிலையில் அதை பெரிதுபடுத்தமாட்டார் என்று நினைத்தேன்.

நான் நினைத்ததுபோலவே நாங்கள் கிளம்புவதையே அவர் பொருட்படுத்தியதாக தோன்றவில்லை. என் மனைவி அவரிடம் சொல்லிவிட்டு இளைய மகளை எடுத்துக்கொண்டு புறப்பட நான் விளையாடிக்கொண்டிருந்த என் மூத்த மகளை வலுக்கட்டாயமாக கிளப்பிக்கொண்டு புறப்பட்டேன்.

ஆனால் புறப்படும் நேரத்தில் நான் சந்திருக்க எண்ணியிருந்தவருடைய வீட்டுக்கு தொலைப்பேசி செய்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமற்போனது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று கூறவியலாத அளவுக்கு இருந்தது அவர்களுடனான என்னுடைய அன்றைய சந்திப்பு..தொடரும்..22 comments:

துளசி கோபால் said...

அதானே, //யோசிக்க வேண்டிய நேரத்துலே யோசிக்காம இப்ப.....//
உங்க மனைவி சொன்னதுலே என்ன தப்பு இருக்கு? அதான் 'எண்ணித்துணிக கருமம்...'னு சொல்லிட்டு போயிட்டாரே ஒருத்தர்.

(முழுசாச் சொன்னா பதவுரை எழுதணுமாமே. அதுக்குதான் இப்படி :-))))))

tbr.joseph said...

வாங்க துளசி,

இந்த 'எண்ணித்துணிக கருமம்...'னு சொல்றது பெண்களைப் பொறுத்தவரை ஆண்களை அதுவும் முக்கியமாக கணவர்களைக் குறை சொல்வதுதானே:)

Krishna said...

என்ணித்துணியரதுன்னா, எங்கிருந்து ஆரம்பிக்கரது...

மாமனார் ஊருக்கு மாற்றலாகி வந்ததையா, நிலம் நல்ல விலைக்கு வரும்போது நல்ல மனது கொண்டு மாமனாருக்கு அதை வாங்கும்படி சொன்னதையா, பொறுமையா முடிக்க வேண்டும்னு சொன்னப்புறமும், அடாவடியா வேலிய பிரிச்செறிஞ்சுட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிற மச்சானை மாட்டவிடாம, போலீசை மடக்க வேண்டிய விதத்தில மடக்கி நிலமையை கையாண்டதையா, எதன்னு புரியலீங்கய்யா. நானும் நீங்க செஞ்சதையேதான் செய்வேன்னு தொணுது. ஒரு வேளை, நானும் தேறாத கேஸோ, இணைவி கிட்ட வாங்கி கட்டிக்க வருமோ...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

நீங்க சொன்னீங்களே அதுல எதுவுமே தப்பு இல்லேங்கறது என்னோட வாதம்.. எல்லாமே தப்புங்கறது.. அதாவது நீங்க மொதல்ல சொன்னத தவிர்த்து, என் மனைவி சாரி இணைவியோட வாதம்..

வாதப் பிரதிவாதங்கள்தானே ஒரு தாம்பத்தியத்தின் சாரமே.. இல்லன்னா தாம்பத்தியத்துல ஒரு ருசியே இருக்காது கிருஷ்ணா..

கணவன் குறைசொல்றாரேங்கறதுக்காக இணைவியும், இணைவி குறைசொல்றாரேங்கறதுக்காக கணவனும் கோச்சிக்கிட்டா நம்ம கை நம்மள அடிக்கிதேன்னு நொந்துக்கறா மாதிரி..

எப்படி என்னோட தாம்பத்திய ரகசியம்.. கால் நூற்றாண்டு அனுபவமாச்சே..

எத்தன வாத பிரதிவாதங்கள கடந்து வந்திருக்கோம்..:))

அரவிந்தன் said...

இந்த பெண்களுக்கு எப்படா கணவன் தவறிலைப்பான் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.உடனே திட்டிதீர்த்துவிடுவார்கள்.

Krishna said...

பெரிய விஷயங்கள்ல, என்னோட முடிவுப்படியும், சின்ன சின்ன விஷயங்கள்ல, என்னோட இணைவியோட முடிவுப்படியும் நடந்துப்போம்னு, மண வாழ்க்கையில வெற்றி பெற்றவங்க சொல்றாங்களே சார், அது உண்மையா...:-)

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

உடனே திட்டிதீர்த்துவிடுவார்கள். //

தூத்துக்குடிகாரங்க நேரடியா திட்ட மாட்டாங்க.. நக்கலா முனகிட்டு என்னென்னு முறைச்சா ஒன்னுமில்ல.. நானே எனக்குள்ள பேசிக்கிட்டேம்பாங்க..

நேரடியா முகத்த பார்த்து திட்டறவங்ககூட பரவாயில்லைங்க..

ஹூம்.. பாதிக்கப்பட்ட கணவன்மார் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சிரலாம் போலருக்கு..

sivagnanamji(#16342789) said...

இன்னிக்கும் தின்னவேலி இருட்டுக்கடை அல்வாதான்....
சஸ்பென்ஸை உடைக்கல்லெ.அதை
மறந்துட்டு பதவுரை,பொழிப்புரை னு
துளசி பேசிட்டு இருக்காங்க

tbr.joseph said...

பெரிய விஷயங்கள்ல, என்னோட முடிவுப்படியும், சின்ன சின்ன விஷயங்கள்ல, என்னோட இணைவியோட முடிவுப்படியும் //

இது ஒரு ஆணாதிக்க குணமுடையவர் கூறியதாக இருக்கலாம். தாம்பத்தியத்தில் எந்த விஷயமானாலும் வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு யாருடைய முடிவு இருப்பவற்றில் சிறந்ததாக உள்ளது என்று இருவருமே நினைக்கிறார்களோ அதன்படி நடப்பதுதான் சிறந்தது..

இது நான் எடுத்த முடிவு, இது நீ எடுத்த முடிவு என்கின்ற நோக்கம் ஈகோ சம்பந்தப்பட்டவர்களின் கூற்று..

மண வாழ்க்கையில வெற்றி பெற்றவங்க ...//

மண வாழ்க்கையில் வெற்றி என்பது ஓவ்வொருவருடைய சிந்தனைகளின் போக்கைப் பொருத்தே இருக்கும்..

மனத்தளவில் நிம்மதி,சந்தோஷம் இருந்தால்போதும் என்பவர்களும் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் வெற்றி பெற்றால் போதும் மற்றதெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்..

இதில் எது உண்மையான வெற்றி என்று தீர்மானிப்பது கணவன் - இணைவி இருவரின் எண்ணத்தைப் பொறுத்து அமையும்.

G.Ragavan said...

ஜோசப் சார்....நீங்க சொல்ற விஷயங்கள்ள இருந்தே இந்தப் பிரச்சனைக்கு முடிவு என்னவாயிருக்கும்னு தெரியுது. ஆனாலும் பொறுத்திருக்கிறேன். ஆலை வாய்க்கும் ஆனை வாய்க்கும் ஆனது ஆகுமா!

tbr.joseph said...

வாங்க ஜி!

சஸ்பென்ஸை உடைக்கல்லெ.அதை
மறந்துட்டு பதவுரை,பொழிப்புரை னு
துளசி பேசிட்டு இருக்காங்க //

ஒங்களுக்கு பொறுமை போறாது ஜி!

பேராசிரியரா இருந்து ஓய்வு பெற்றாகிவிட்டாயிற்றே.. இன்னுமா பொறுமை வரவில்லை..

நாளைக்கு பாதியும் அடுத்த நாள் மீதியும் விலகிவிடும்..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆலை வாய்க்கும் ஆனை வாய்க்கும் ஆனது ஆகுமா! //

என்ன ராகவன், நா கேள்விப்படாத பழமொழியாருக்கு..

இதுக்கு பதவுரை எழுதுங்களேன்..

அப்பத்தானே நீங்க சொல்றது சரியா இல்லையான்னு சொல்ல முடியும்?

sivagnanamji(#16342789) said...

//பாதிக்கப்பட்ட கணவன்மார் சங்கம்
ஒண்ணு..//
அப்படிப்பட்ட ஆங்கில இனையதளம்
ஒன்று பார்த்தேன்....ம்..அதுலெ ஒண்ணும் புதிசா இல்லெ

Krishna said...

சார், சார், ஸ்டாப் ஸ்டாப்...

என்னங்க சார் நீங்க..

இந்த ஈராக் மேல புஷ் படையெடுக்கற விஷயம், முஷரப் பாகிஸ்தானிய அதிபரா நீடிக்கனுமா இல்லையான்ற விஷயம், இட ஒதுக்கீடு விஷயத்தில உச்ச நீதிமன்றம் தலையிடலாமா கூடாதான்ற விஷயம் போன்ற முக்கியமான பெரிய விஷயங்கள்ல, நாங்க சொல்ற மாதிரியும், இந்த, குழந்தைங்க என்ன படிக்கனும், யார் யாருக்கு என்ன செய்யனும், எந்த உறவுங்ககிட்ட எப்படியெப்படி நடந்துக்கணும்,எங்க வீடு வாங்கணும் போன்ற சின்ன சின்ன விஷயங்கள்ல வீட்டம்மாங்க சொல்ற மாதிரியும் நடந்துக்கிடறுதுதான் எங்க இனிய மண வாழ்வின் ரகசியம்னு சொல்றாங்களே அதைச் சொன்னேன் சார்...

tbr.joseph said...

கிருஷ்ணா,,

அதாவது ஆண்கள் உலக விஷயங்களிலும் பெண்கள் வீட்டு விஷயங்களிலும்..

அடடா.. நீங்க மாக்ரோன்னா உங்க இணைவி மைக்ரோ விஷயங்கள்ல முடிவெடுக்கணும்..

அத புரிஞ்சிக்காம நான் பாட்டுக்கு தத்துவம் பேசிக்கிட்டு..

ஹூம்.. தூத்துக்குடிகாரங்களே மேல் போலருக்கு.. வேலூர்க்காரங்க ஒரு படி மேலேயே போய் நக்கலடிக்கறீங்க.. என் இணைவி சொல்றா மாதிரி நான் சில நேரங்கள்ல ட்யூல்லைட்தான் போலருக்கு:))

துளசி கோபால் said...

சி.ஜி,

நிஜமாவே உங்களுக்குப் பொறுமை போதாது. பின்னூட்டங்கள் எல்லாம்
சரியாவே படிக்கறதில்லை போல இருக்கே.:-)))
போனபதிவுலே
//ஏங்க, எனக்கே அவர் போய் ரெண்டு நாள் கழிச்சித்தான் இந்த வில்லங்கத்தோட
முடிச்சே அவிழ்ந்தது.//
இப்படி எழுதியிருக்காரே. அப்ப எப்படி இன்னிக்கு உடையும் சஸ்பென்ஸ்.

என்னமோ போங்க :-)))

துளசி கோபால் said...

பெரிய விஷயம் சின்ன விஷயமுன்னா யார்யார் முடிவெடுக்கணும்.

என்ன குழம்பு, எந்த நகைக்கடைக்குப் போகலாம், எந்த நாட்டுக்கு ஹாலிடே
போகலாம்ன்ற பெரிய விஷயங்களிலே கணவனும்,

அல்ப விஷயங்களான, வீடு கட்டறது, வாங்கறது, பட்டுப்புடவை, என்ன நகை இதெல்லாம்
மனைவி முடிவு செஞ்சால் வம்பே இல்லை:-)))

tbr.joseph said...

//பாதிக்கப்பட்ட கணவன்மார் சங்கம்
ஒண்ணு..//
அப்படிப்பட்ட ஆங்கில இனையதளம்
ஒன்று பார்த்தேன்....ம்..அதுலெ ஒண்ணும் புதிசா இல்லெ //

ஒங்களுக்கு ஒன்னுமே புதுசா இருக்காதுங்க.. ஆனா நம்ம அரவிந்தன், கிருஷ்ணா போன்றவங்களுக்கு ஏதாச்சும் புதுசா தோனுமில்லே.. அட்ரஸ சொல்லுங்க..

tbr.joseph said...

அல்ப விஷயங்களான, வீடு கட்டறது, வாங்கறது, பட்டுப்புடவை, என்ன நகை இதெல்லாம்
மனைவி முடிவு செஞ்சால் வம்பே இல்லை//

அடடா துளசி, என்னே ஒங்க பெருந்தன்மை..

ஹூம்..

Krishna said...

இணைவிக்கு யாரை அறிமுகப்படுத்தி வைத்தாலும் வைக்கலாம், இந்த துளசி மேடத்தை மட்டும் அறிமுகப்படுத்தவே கூடாதுடா சாமி...

tbr.joseph said...

இந்த துளசி மேடத்தை மட்டும் அறிமுகப்படுத்தவே கூடாதுடா சாமி... //

அப்படியா.. நோ கமெண்ட்ஸ்..

எதுக்கு வம்பு..

G.Ragavan said...

// tbr.joseph said...
வாங்க ராகவன்,

ஆலை வாய்க்கும் ஆனை வாய்க்கும் ஆனது ஆகுமா! //

என்ன ராகவன், நா கேள்விப்படாத பழமொழியாருக்கு..

இதுக்கு பதவுரை எழுதுங்களேன்..

அப்பத்தானே நீங்க சொல்றது சரியா இல்லையான்னு சொல்ல முடியும்? //

என்ன ஜோசப் சார் இது. பழமொழிக்கெல்லாம் பதவுரையா?

ஆலை வாயிலயும் ஆன வாயிலயும் விழுந்த கரும்பு திரும்பி வந்திருக்கா? ஆனா இங்க ஆனயும் ஆலயும் நீங்களா அவங்களான்னுதான் பிரச்சனை.