29 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 142

என்னுடைய வட்டார மேலாளர் சந்திக்க விரும்பிய வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு என்னுடைய காசாளர் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பியபோது இரவு பத்து மணி.

அவரை அறையில் விட்டுவிட்டு உடனே வீடு திரும்பலாம் என்று நினைத்திருந்த என்னை அவர் வலுக்கட்டாயமாகப் பிடித்து அமர்த்தினார்.

நாங்கள் சந்தித்திருந்த வாடிக்கையாளர் தூத்துக்குடியில் மிகவும் பெரும்புள்ளி. செல்வந்தர். தூத்துக்குடியில் இருந்த மிகப்பெரிய பங்களாக்களுள் ஒன்று அவருடையது. காலங் காலமாக தொழில் மற்றும் வணிகம் நடத்தி வந்தவர். என்னுடைய கிளை திறக்கப்பட்ட 1979ம் ஆண்டிலிருந்தே கணக்கு வைத்திருந்தவர்.

என்னுடைய வட்டார மேலாளாருக்கு அவரை நன்கு பரிச்சயமிருந்ததால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பியவர் படு உற்சாகத்தில் இருந்தார். அவரும் என்னுடைய வாடிக்கையாளரும் குடிப்பழக்கமும் உள்ளவர்கள் என்பதால் அவருள் இறங்கியிருந்த மேலை நாட்டு சரக்கு அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருந்ததை உணர்ந்தேன். நான் சென்னையிலிருந்த சமயங்களில் இத்தகைய பார்ட்டிகளில் ‘கலந்து’கொள்வதுண்டு..

ஆனால் தூத்துக்குடியில் என் மனைவி குடும்பத்தினர் முன்பு ‘நல்ல பிள்ளையாக’ காண்பித்துக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பில் ‘அதை’ விட்டு சற்று தள்ளியே இருந்தேன்.

உற்சாகத்திலிருந்த என்னுடைய வட்டார மேலாளர் நேரம் போவது தெரியாமல் என்னுடைய வங்கியில் நடந்த மேல் மட்ட விவகாரங்களை விலாவாரியாக விவரிக்க எனக்கோ முள்மேல் நிற்பது போலிருந்தது..

ஆனாலும் சட்டென்று எழுந்து சென்றால் என்ன நினைத்துக்கொள்வாரோ என்ற நினைப்பில் வேறு வழியில்லாமல் மனதுக்குள் சபித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். நான் அன்று மனதுக்குள் கூறியது வெளியே கேட்டிருந்தால் அன்றே என்னுடைய பதவி பறிபோயிருக்கும்!

மதுவின் பாதிப்பில் கேலியும் கிண்டலுமாக (இருவர் சேர்ந்துவிட்டால் அந்த இருவரைத்தவிர மற்றவர்களைப் பற்றி பேசுவதில்தான் எத்தனை ஆனந்தம்!) பேசிக்கொண்டிருந்தவர் சட்டென்று சீரியசாகி, ‘டிபிஆர் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்’ என்றார்.

நான் சலிப்புடன், ‘சொல்லுங்க சார்.’ என்றேன். மணி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

‘ஒங்க ரிப்போர்ட்ட பத்தி எச்.ஓல என்ன பேசிக்கிட்டாங்கன்னு ஒங்களுக்கு தெரியுமா?’

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். இத சொல்றதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?

‘நீங்க எழுதுன விஷயம் சீரியசானதுதான் இல்லேங்கலே.. ஆனா  நீங்க யூஸ் பண்ண லாங்வேஜ் கொஞ்சம் ரஃபா இருந்துதுன்னு நம்ம ஜி.எம்மே ஃபீல் பண்ணார் டிபிஆர். ஒங்க நன்மைக்குத்தான் சொல்றேன்.. இந்த மாதிரி ரிப்போர்ட்ஸ் எழுதும்போது கோபப்படாம, நிதானமா யோசிச்சி எழுதணும்னு சொல்றதுக்குத்தான் ஒங்கள கொஞ்ச நேரம் இருங்கன்னு சொன்னேன்.’

நான் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

‘நீங்க மேனேஜராயி ரெண்டு மூனு வருஷந்தான் ஆகுது. இதான் நீங்க சார்ஜ் எடுக்கற முதல் ப்ராஞ்ச். நீங்க முன்னாலருந்த ரெண்டு ப்ராஞ்சுமே நீங்களே ஓப்பன் பண்ணது. நீங்க சார்ஜ் எடுத்த ப்ராஞ்ச பத்தியும் முன்னாலருந்த மேனேசர்ங்கள பத்தியும் நீங்க எழுதனா மாதிரி ஒங்களப்பத்தி ஒங்களுக்கு பின்னால வந்த மேனேஜர்ங்க எழுதியிருந்தா ஒங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அத யோசிச்சி பாத்தீங்களா?’

என்னையுமறியாமல் சட்டென்று எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதாவது நான் ஏதோ செய்யக்கூடாதவைகளை என்னுடைய முந்தைய இரு கிளைகளிலும் செய்திருந்ததுபோலவும் எனக்கு பின்னால் வந்து பொறுப்பேற்ற மேலாளர்கள் பெருந்தன்மையுடன் அதை பொருட்படுத்தாமல் இருந்துவிட்டது போலவுமல்லவா இருக்கிறது இவர் கூறுவது என்று நினைத்தேன். இருப்பினும் குடிகாரன் பேச்சு பொழுதுவிடிஞ்சா போச்சு என்ற நினைப்பில் அவர் மதுவின் தாக்கத்திலிருந்த சமயத்தில் கூறியதை பெரிதுபடுத்தாமல் எழுந்து நின்றேன்.

‘சார் உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி சார். நான் இப்ப கிளம்பலேன்னா நம்ம பில்டிங்குக்கு கீழ இருக்கறவர் கேட்ட பூட்டிருவார். அப்புறம் என்ன சப்தம்போட்டாலும் வீட்டுக்குள்ளருக்கறவருக்கு கேக்காது.. அதனால நான் கிளம்பறேன் சார். நாளைக்கு பாக்கலாம்.’ என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

என்னுடைய ஸ்கூட்டரையும் கொண்டுவராததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த என் குடியிருப்பை நடந்தே அடையவேண்டியிருந்தது. தூத்துக்குடியில் அப்போதெல்லாம் ஆட்டோக்களைப் பார்ப்பதே அரிது.. அதுவும் நள்ளிரவில் என்றால் கேட்கவே வேண்டாம். ஆள் அரவமில்லாத WGC சாலையில் தெருநாய்களின் பற்களில் சிக்கிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்ததே பாக்கியம் என்று நினைத்தேன்.

நான் வட்டார மேலாளரிடம் கூறியதில் இந்த கேட் விஷயம் உண்மையானதுதான்.

என்னுடைய அலுவலக வளாகத்தின் முகப்பில் அமைந்திருந்த ஹைதர் காலத்து இரும்பு கேட் சுமார் பதினைந்தடி உயரம் இருக்கும். அதை முழுவதுமாக திறந்து நான் பார்த்ததே இல்லை. பகல் வேளைகளில் ஒரு ஐந்தடி அகலத்துக்கு திறந்து வைத்திருப்பார்கள். கீழ் வீட்டில் இருப்பவர்களின் மீன்பிடி வாகனங்கள் வந்து செல்லும் நேரங்களில் அவை உள்ளே வந்து செல்வதற்கு தேவையான அளவு திறந்து மூடிவிடுவார்கள்.

தினமும் நள்ளிரவுவரை கேட் திறந்தே இருக்கும். மீன்பிடித்துறையிலிருந்து படகில் வேலைபார்க்கும் அட்கள் வந்து சேர்ந்ததும் கேட்டை மூடினால் அடுத்த நாள் காலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். வளாகத்தின் முகப்பிலிருந்து் பிரதான கட்டிடம் முப்பதடி தொலைவில் இருந்ததால் மூடிய கேட்டிலிருந்து தொண்டைக் கிழிய சப்தமிட்டாலும் வீட்டினுள் இருப்பவர்களுக்கே கேட்க வாய்ப்பே இல்லை.

ஆகவே தான் நானும் அவரும் ஆளுக்கொரு சாவியை வைத்திருப்போம். ஆனால் அன்று அவசரத்தில் அதை எடுக்க மறந்துப்போனேன். ஆகவேதான் ஓட்டமும் நடையுமாக என்னுடைய குடியிருப்பை அடையவேண்டியிருந்தது. நல்ல வேளை, நள்ளிரவைக் கடந்திருந்தும் அன்று அவர்களுடைய பணியாட்கள் வந்திருக்கவில்லை. திறந்திருந்த கேட் வழியாக உள்ளே நுழைந்து மாடியை அடைந்தேன்.

என் குடியிருப்பு அமைந்திருந்த கட்டிடம் பழங்காலத்து கட்டிடம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். என்னுடைய முதல் மாடியைப் பற்றி ஏற்கனவே ஒரு பயங்கரமான கதை அக்கம்பக்கத்தில் பரவியிருந்தது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய அலுவலகம் அமைந்திருந்த பகுதியில்தான் அதனுடைய உரிமையாளர் வசித்து வந்திருக்கிறார். அதாவது கீழ்வீட்டில் வசித்து வந்தவருடைய ஒன்னுவிட்ட மூத்த சகோதரர். அவரை ஏதோ ஒரு மோசடிக்கும்பல் ஒரு கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் வெறும் காகிதங்களை நோட்டுக் கற்றையைப் போல் கொடுத்து கணிசமான ஏமாற்றிவிட்டார்களாம். அதாவது கற்றைகளில் முன்னும் பின்னும் மட்டும் நிஜ கரன்சி நோட்டுளும் இடையில் அதே அளவிலால வெற்று காகிதங்களையும் வைத்து திரைப்படங்களில் வருவதுபோல ஏமாற்றியிருக்கிறார்கள்..

மனுஷன் அதை கவனியாமல் தன்னிடமிருந்த கடன் பத்திரத்தில் வரவு வைத்து திருப்பி கொடுத்துவிட்டாராம். கடன் பெற்றவர்கள் திரும்பி சென்றதும்தான் விஷயம் இவருக்கு தெரிந்திருக்கிறது. அதன்பிறகு இவர் போய் விவகாரம் செய்ய மோசடிக்கும்பல் இவரை நையப்புடைத்து வயல்வெளியில் வீசிவிட்டு சென்றுவிட ஒரு நாள் முழுவதும் வயல்வெளியில் குற்றுயிராய் கிடந்திருக்கிறார். பிறகு வழியில் சென்றவர்கள் அவரை இனங்கண்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நாளிலிருந்தே அவருடைய போக்கில் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கையில் கிடைத்த காகிதங்களையெல்லாம் அடுக்கி ஒன்று, இரண்டு என்று எண்ண ஆரம்பித்துவிடுவாராம். நாளடைவில் புத்தி பேதலித்து வெளியுலகத்துக்கு அஞ்சிய செல்வந்தர் குடும்பம் அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவைக்க நள்ளிரவில் அவர் எழுப்பும் அவலக்குரல் அக்கம்பக்கம் எங்கும் கேட்குமாம்.

இது நானும் என் மனைவியும் அங்கு வசிக்க ஆரம்பித்த சில வாரங்களில் வீட்டு வேலைக்கு வரும் வாயாடி பெண் வழியாக என் மனைவி கேட்டறிந்தது.

அன்றிலிருந்து என் மனைவிக்கு அந்த வீட்டில் இரவு நேரங்களில் தனித்து இருப்பது என்றால் ஒருவித பயம் இருந்தது. நான் எத்தனை தைரியம் அளித்தும் பயனிருக்கவில்லை. ஆகவே நான் வெளியூர் செல்லும் சமயங்களில் எல்லாம் அவரை என்னுடைய மாமியார் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம்.

நான் ஊரில் இருக்கும் நேரங்களில் அலுவல் விஷயமாக வெளியே எங்கு சென்றாலும் இரவு பத்து மணிக்குள் வீடு திரும்பிவிடுவேன். என்னுடைய குடியிருப்பு இடம் என்னுடைய அலுவலகத்திற்கு பின்புறத்தில் இருந்ததால் நான் வெளியே செல்லும்போதே அலுவலகப் பகுதியில் இருக்கும் விளக்குகளை எரியவைத்துவிட்டுத்தான் செல்வேன். அத்துடன் என் அலுவலக வாசலின் முன்புற கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு செல்வதும் வழக்கம்.

இல்லையென்றால் முகப்பு வாசலிலிருந்து மணியடித்ததும் சுமார் நூறடி தொலைவில் இருந்த குடியிருப்பில் இருந்து ஒருவர் வந்து வாசற்கதவை திறப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் இரவு நேரங்களில் மின்சப்ளை நின்றுவிட்டால் கேட்கவே வேண்டாம் கதவை எத்தனை பலமாகத் தட்டினாலும் குடியிருப்பில் கேட்கவே கேட்காது.

ஆகவே நான் மறந்தாலும் ‘வாசக் கதவை பூட்டிட்டு போயிருங்க. அப்புறம் இருட்டுனதுக்கப்புறம் வந்து பெல்லடிச்சாலும் நா வந்து திறக்க மாட்டேன். சொல்லிட்டேன்.’ என்பார் என் மனைவி.

இதற்குப் பின்னால் வேறொரு காரணமும் இருந்ததை நான் பிறகுதான் தெரிந்துக்கொண்டேன். ‘எக்கா.. நீங்க கிறிஸ்துவங்க. ஆவின்னு சொன்னாலும் நம்ப மாட்டீங்க. ஆனா அந்த ஐயா இருந்த ரூமுக்குள்ள இப்பவும் அவர் ஆவி நடமாடுதாங்க்கா..’ என்று என் பணிப்பெண் என் மனைவியை பயமுறுத்தி வைத்திருக்கிறாள்!

தொடரும்..

18 comments:

sivagnanamji(#16342789) said...

நிலம் பற்றிய சஸ்பென்ஸ் என்றைக்குத்தான் உடைப்பீங்க?
வெள்ளி,சனி,ஞாயறு,திங்கள் 4 நாட்கள்...ஈஈஈஈஈஈஈ..தலை வெடித்துவிடும் போலிருக்கு..

tbr.joseph said...

வாங்க ஜி!

என்ன பண்றதுங்க.. எல்லாம் என்னுடைய வட்டார மேலாளரால.. இந்த நேரம் பார்த்து அவர் வந்துக்கிட்டு.. சே.. நாளைக்கு போயிருவார்..:)

G.Ragavan said...

அடடா! ஏற்கனவே ஒரு ஆவி விஷயத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்கீங்க....இன்னொரு ஆவியா....

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அது தஞ்சாவூர் ஆவி.. இது உங்க ஊர் ஆவி..:)

துளசி கோபால் said...

இன்னிக்கு உங்க 'பதிவிலும்' ஆவிகளின் நடமாட்டமா?

சிஜி,

வலைப் பதிவாளர் சந்திப்புலெயே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கலாம்.:-))))

அரவிந்தன் said...

சார் சீக்கிறம் உங்க மேலாளரை அனுப்பிவிட்டு நிலப்பிரச்சனைக்கு வாங்கசார்......


உங்களுக்கு பின்னுட்டமிட தொடங்கியா வலைப்பூவில் நான் பதிவுகளை தொடங்கியுள்ளேன்.பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும்.
http://aravintaz.blogspot.com/

மேலும் வலைப்பூவை மேம்படுத்தவும் சொல்லித்தாருங்கள்.

tbr.joseph said...

வாங்க துளசி,

உங்க 'பதிவிலும்' ஆவிகளின் நடமாட்டமா?//

அப்படீன்னா.. வேற யார் பதிவிலயும் ஆவி நடமாடுதா.. எங்க?

வலைப் பதிவாளர் சந்திப்புலெயே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கலாம்//

கேக்காம இருப்பாரா.. சொன்னா சஸ்பென்ஸ் போயிருமில்ல..:)

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

உங்க மேலாளரை அனுப்பிவிட்டு நிலப்பிரச்சனைக்கு வாங்கசார்......//

நாளைக்கு அவர் போனதும் முதல்வேலை அதுதான்..

பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும்.//

நிச்சயமா..

மணியன் said...

உங்க மேலாளர் உங்களை மட்டும் வெறுப்பேற்றவில்லை, எங்களையும் தான்.:))

tbr.joseph said...

வாங்க மணியன்,

என்ன பண்றது சில சமயங்கள்ல அப்படித்தான். பொறுமைய சோதிக்கறா மாதிரி இருக்கும்..

sivagnanamji(#16342789) said...

//நாளைக்கு போய்டுவார்,,,//
அவர் போனலென்ன அல்லது இருந்தாலென்ன...நாளைக்காவது சஸ்பென்ஸ் உடையுமா? அதான் கேள்வி
துளசி அக்கா
கேட்கத்தான் நினைத்தேன்...ஆனா பேச்சு அந்த பாயின் ட்டை நெருங்கும்பொழுது கட் பன்னிட்டோம்
ரொம்ப ப்ரஸ் பன்னக்கூடதில்ல
அப்றம்...'"அப்பிடீனு கனவு கண்டு
திடுக்கிட்டு எழுந்தே"னு கதய முடிச்சுடுவார்

tbr.joseph said...

அவர் போனலென்ன அல்லது இருந்தாலென்ன...நாளைக்காவது சஸ்பென்ஸ் உடையுமா? அதான் கேள்வி//

ஏங்க, எனக்கே அவர் போய் ரெண்டு நாள் கழிச்சித்தான் இந்த வில்லங்கத்தோட முடிச்சே அவிழ்ந்தது. அப்போ நான் எப்படி முடிய பிச்சிக்கிட்டு அலைஞ்சிருப்பேன்.. அதுல ஒரு பர்செண்டாவது இத படிக்கறவங்களுக்கு தோனவேண்டாமா..

துளசி அக்கா//

இதென்ன மதுரை ஸ்டைல்ல.. நீங்க துளசிய அக்காங்கறீங்க.. அவங்க ஒங்கள அண்ணாங்கறீங்க..

யாராவது ஒரு ஆள் அவங்க வயசு ஏத்தாமாதிரி கூப்ட வேண்டாமா..

'"அப்பிடீனு கனவு கண்டு
திடுக்கிட்டு எழுந்தே"னு கதய முடிச்சுடுவார் //

கண்டிப்பா அப்படியிருக்காது:)

Krishna said...

//ஏங்க, எனக்கே அவர் போய் ரெண்டு நாள் கழிச்சித்தான் இந்த வில்லங்கத்தோட முடிச்சே அவிழ்ந்தது.//

ஆஹா, இன்னும் ரெண்டு நாளைக்கு சஸ்பென்ஸ் தொடரும்னு சந்தடி சாக்கில சொல்லிட்டீங்களா...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ஆஹா, இன்னும் ரெண்டு நாளைக்கு சஸ்பென்ஸ் தொடரும்னு..

ஆஹா.. விஞ்ஞானியாச்சே.. கண்டுபிடிக்கமாட்டீங்க?

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னா மாதிரி யான் அடைந்த டென்ஷனும் இவ்வைகையம் அடைய வேணுமா, வேண்டாமா.. அதான்..:)

இலவசக்கொத்தனார் said...

ஆவி பறக்க வரும் உங்கள் பதிவில் பறக்கும் ஆவியா? பேஷ். பேஷ். ரொம்ப நன்னாயிருக்கே.

tbr.joseph said...

வாங்க இ.கொ.

ஆவி பறக்க வரும் உங்கள் பதிவில் பறக்கும் ஆவியா? பேஷ். பேஷ். ரொம்ப நன்னாயிருக்கே//

எது? பறக்கற ஆவியா படுத்தற ஆவியா?

Sivaprakasam said...

<-----
அவர் போனலென்ன அல்லது இருந்தாலென்ன...நாளைக்காவது சஸ்பென்ஸ் உடையுமா? அதான் கேள்வி--->
அப்படிப் போடுங்க

tbr.joseph said...

வாங்க சிவா..

<--- அவர் போனலென்ன அல்லது இருந்தாலென்ன...நாளைக்காவது சஸ்பென்ஸ் உடையுமா? அதான் கேள்வி--->
அப்படிப் போடுங்க //

ஒரு சிவா இன்னொரு சிவாவ சப்போர்ட் பண்றது ஒன்னும் புதிசில்லையே..:)