25 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 141

சாதாரணமாக வட்டார மேலாளர்கள் ஒரு கிளையை ஆய்வு செய்யும் நோக்கத்துடன்  விஜயம்
செய்வதில்லை. ஆய்வு செய்வதற்கென பிரத்தியேக அதிகாரிகளைக்கொண்ட பல குழுக்கள் தலைமையலுவலகத்தில் இருக்கும். அவர்களுடைய அன்றாட அலுவலே இத்தகைய ஆய்வுகளை நடத்தி குற்றங்குறைகளைக் கண்டுபிடிப்பதுதான்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அதுபோல் பலதரப்பட்ட கிளைகளிலும் கிளை மேலாளராகவோ (Branch Manager) அல்லது கூடுதல் மேலாளர்களாகவோ (Additional BM) பல ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்களையே இக்குழுவில் சேர்ப்பார்கள். அத்துடன் ஒருவர் ஏதேனும் கிளையில் பணிபுரிந்து செய்யத்தகாதவைகளைச் செய்து பிடிபட்டவராக இருந்தால் அவர்தான் இவ்வலுவலுக்கு மிகவும் லாயக்கானவர் என்று கிண்டலாக மற்ற மேலாளர்கள் கூறுவதுண்டு. 'ஏன்னா திருடனுக்குத்தான வேறொரு திருடன இனங்கண்டுக்கொள்ள முடியும்?' என்பார்கள்.

வட்டார மேலாளர்கள் பெரும்பாலும் ஒரு கிளையின் வணிகத்தை மேலும் வளர்ப்பது எப்படி என்பதை கிளை மேலாளருடனும் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது, தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட கடன் விண்ணப்பங்கள் கிளையில் இருந்தால் அதை சாங்ஷன் செய்வது, கிளையின் முக்கிய வாடிக்கையாளர்களை அவர்களுடைய இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ சென்று சந்திப்பது, வாடிக்கையாளர்களின் கூட்டத்திற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்து அவர்களுடைய குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வது போன்ற விஷயங்களில்தான் அக்கிளைக்கு விஜயம் செய்யும் தினங்களில் கவனம் செலுத்துவார்கள்.

அந்த நோக்கத்துடன்தான் என்னுடைய வட்டார மேலாளரும் வருகிறார் என்று நினைத்திருக்க அவரோ என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் நான் கூறியிருந்தவை சரியானதுதானா என்பதை ஆராய்வதிலேயே குறியாயிருந்தார். ஒருவேளை மேலிடத்திலிருந்து அத்தகைய உத்தரவு அவருக்கு இருந்ததோ என்னவோ.

இருப்பினும் நான் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்படாமல் அவருக்கு தேவையானவற்றையெல்லாம் செய்துகொடுப்பதில் முனைப்பாயிருந்தேன்.

இந்த பரபரப்பினூடே என்னுடைய மனைவி நண்பகல் நேரத்தில் என்னுடைய குடியிருப்பை நோக்கி செல்வது தெரிந்தது. ஆனால் என்னுடைய அறையில் வட்டார மேலாளர் இருந்ததால் என்ன விஷயம் என்று என்னால் கேட்கமுடியாமற்போனது. அதன் பிறகு வேலை மும்முரத்தில் அந்த விஷயத்தை மறந்தே போனேன்.

என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து படித்து அதில் என்னுடைய முந்தைய மேலாளர்களைக் குறித்து நான் எழுதியிருந்த கடன் கணக்குகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் என்னுடைய வட்டார மேலாளரே நேரடியாக என்னுடைய தலைமைக் குமாஸ்தா உதவியுடன் ஆராய்ந்தார்.

அதற்கே அன்றைய நாள் முழுவதும் சென்றுவிடவே மாலை சுமார் ஆறுமணியானதும், ‘டிபிஆர். இன்னைக்கி திரும்பி போமுடியாது போலருக்கு. ஏதாச்சும் ரூம் புக் பண்ணுங்களேன்.’ என்றார் என்னைப் பார்த்து. நான் தூத்துக்குடிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியிருந்ததால் நான் தயக்கத்துடன் என் காசாளரை அழைத்து ‘ஒங்களுக்கு தெரிஞ்ச இடத்துல பாருங்களேன். ஏ.சி ரூமா இருக்கணும்.’ என்றேன்.

ஆனால் என்னுடைய முந்தைய மேலாளர்களுள் ஒருவர் முந்திக்கொண்டு, ‘சார் ரூம்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு தெரிஞ்ச ஃப்ரெண்டோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நான் அவர கேட்டு சொல்றேன்.’ என்றார்.

என்னுடைய வட்டார மேலாளர், ‘அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீங்க இந்த மாதிரி நண்பர்களையெல்லாம் வச்சிக்கிட்டிருக்கறதுனாலதான தேவையில்லாம காரியங்களையெல்லாம் செஞ்சி வச்சிருக்கீங்க. இதுல இவர் ஏதோ ஒங்களப் பத்தி இல்லாத பொல்லாததையெல்லாம் எழுதிட்டாப்பல எச்.ஓல போயி சொல்லி வேலமெனக்கெட்டு என்னெ போய் பாருங்கன்னு ஜி.எம் கூப்ட்டு சொல்றார். நீங்க ரெண்டு பேரும் ஒன்னு பண்ணுங்க. இன்னைக்கே பஸ்சோ, ட்ரெய்னோ புடிச்சி உங்க பிராஞ்சுக்கு போற வேலைய பாருங்க. நான் இவர் வந்தப்புறம் இப்பத்தான் முதல்தடவையா வரேன்.. ஒங்களுக்காக நா வந்த வேலை முடிஞ்சிருச்சி. இனி ஒரு ஜோனல் மேனேஜரா என்ன செய்யணுமோ அத செஞ்சிட்டு நாளைக்கு போறேன்.’ என்று எரிந்து விழுந்தார்.

இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவர்கள் இருவரும் அதிர்ந்துபோய் அவரையும் என்னையும் மாறி, மாறி பார்த்தார்கள். பிறகு சுருதியிறங்கி, ‘சரி சார்.’ என்றனர். அதற்குப்பிறகு அவர்கள் என்னுடைய அறையிலிருந்ததை பொருட்படுத்தாமல், ‘ஏ.சி ரூம் இல்லன்னா கூட பரவாயில்லை டிபிஆர். சும்மா ஒரு ராத்திரிக்குத்தான. கொஞ்சம் க்ளீனா இருந்தா போறும். புக் பண்ணிர சொல்லுங்க. நாம யாராவது கஸ்டமர போய் சந்திச்சிட்டு வரலாம். ஏற்பாடு பண்ணுங்க.’ என்றார்.

எனக்கோ என் குடியிருப்பிற்குச் சென்று என் மனைவியிடம் என் மாமனார் வீட்டில் என்ன நடந்தது என்று விசாரிக்காவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் என்னுடைய வாடிக்கையாளர்களுள் ஒருவரை அழைத்து என்னுடைய வட்டார மேலாளருடைய வருகையை அறிவித்தேன்.

என்னுடைய முந்தைய மேலாளர்கள் இருவரும் அப்போதும் என்னுடைய அறையிலேயே நிற்பதைக் கவனித்த வட்டார மேலாளர் அவர்களை என்ன என்பதுபோல் பார்த்தார்.

‘சார் இவர் சொன்ன டாக்குமெண்ட்ஸ் மிஸ்டேக்ஸ் கரெக்ட் பண்ணணும்னா நாங்க இன்னும் ரெண்டு, மூனு நாள் இருந்தாத்தான் சார் நல்லது. அதனால..’

வட்டார மேலாளருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கோபத்துடன், ‘அத நீங்க இவர் ரிப்போர்ட் பண்ணவுடனே செஞ்சிருக்கணும். அத விட்டுட்டு இவர் பொய் சொல்றார்னு சொல்லி எச்.ஓல போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு இப்ப என்னெ வெரிஃபை பண்ணச் சொல்லி அனுப்புனதுக்கப்புறம் சொன்னா எப்படி? என்னோட ரிப்போர்ட்டை ஜி.எம் முக்கு அனுப்பறேன். அவர் என்ன சொல்றாரோ அப்படியே செய்ங்க. அதுவுமில்லாம நீங்க இப்ப என் ஜோனல் ஆஃபீஸ்க்கு கீழ வொர்க் பண்ணலையே.. ஒங்கள இங்க இருக்க அனுமதிக்கற பவர் எனக்கு இல்லை.. அதனாலதான் ஒங்கள போங்கன்னு சொன்னேன்.’ என்றார்.

அவருடைய இந்த திடீர் மனமாற்றத்தில் என்னுடைய பங்கு ஏதேனும் இருந்ததோ என்ற எண்ணம் அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்தது. ஆனாலும் வேறுவழியில்லாமல், ‘ஓக்கே சார். As you wish’ என்று கூறிவிட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும், ‘டிபிஆர். நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. அவங்க ரெண்டு பேரும் செஞ்சிருக்கற மிஸ்டேக்ச ஒங்களால உண்மையிலேயே சரி செய்ய முடியாதா?’ என்றார்.

நான் எதற்கு இந்த கேள்வி என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘இல்ல எதுக்கு கேக்கறேன்னா.. நீங்க ஊருக்கு புதுசுன்னாலும் ஒங்க அசிஸ்டெண்ட் மேனேஜரும், ஹெட் க்ளார்க்கும் இந்த ஊர்ல ஒரு வருஷத்துக்கு மேல இருக்காங்கதானே.. அவங்களுக்கு இந்த பாரோயர்ச அடையாளம் தெரியுமில்லையா?’

நான் என்னுடைய உதவி மேலாளரையும் தலைமைக் குமாஸ்தாவையும் என்னுடைய அறைக்கு அழைத்து வட்டார மேலாளர் என்னிடம் கேட்ட கேள்வியை அவர்களிடம் கூறினேன். அவர்கள் இருவருமே தங்களுக்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படவில்லையென்று தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் நிறுத்தியிருக்கலாம். என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒருபடி மேலே சென்று, ‘சார் இந்த பாரோயர்ஸ் யாருமே பேங்குக்கு வந்த ஞாபகம் எனக்கு இல்லை. அதனாலதான் நானும்  நம்ம கேஷியரும் இவங்க விலாசத்த தேடிப்போய் பார்த்தும் அங்க இருக்கறவங்க இவங்க வெளியூர் போயிருக்காங்கன்னு சொன்னதும் அது உண்மையா, பொய்யான்னுகூட கண்டுபிடிக்க முடியலை. ஒருவேளை சம்பந்தப்பட்ட ஆளுங்களே இருந்துக்கிட்டு இல்லேன்னு சொன்னா ஆள தெரியாத எங்களால எப்படி சார் கண்டுபிடிக்க முடியும்? அதனாலதான் இவர் சொல்லி நான் பழைய மேனேஜர்ங்க ரெண்டு பேரையும் ஃபோன்ல கூப்ட்டு லீவு போட்டு வந்து பார்ட்டீச மட்டும் காட்டிட்டு போயிருங்க. மத்தத நாங்க பாத்துக்கறோம்னு சொன்னேன். ஆனா அவங்க கேக்கலை. அதுக்கப்புறம்தான் சார் வேற வழியில்லாம அவரோட ஜாய்னிங் ரிப்போர்ட்ட அனுப்பினார்.’ என்றார்.

அவர் சொல்லி முடித்தபோது வட்டார மேலாளரின் முகம் கோபத்தால் கருத்துப்போனது. என்னுடைய தலைமைக் குமாஸ்தாவை அனுப்பிவிட்டு, ‘சரி, டிபிஆர். இந்த விஷயத்த அப்புறமா பேசிக்கலாம். நீங்க வேணும்னா போய் ஒங்க வொய்ஃப் கிட்ட சொல்லிட்டு வந்துருங்க. நாம அந்த பார்ட்டிய போய் பாக்கலாம். அப்புறம் ரூமுக்கு போலாம்.’ என்றார்.

நான் உடனே எழுந்து என்னுடைய குடியிருப்புக்கு விரைந்தேன். நான் வரும்வரை உடுத்தியிருந்த ஆடையையும் மாற்றாமல் காத்திருந்த என் மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே அவர் சென்ற விஷயம் ஏடாகூடமாகிவிட்டது என்பதைப் புரிந்துக்கொண்டேன்.

‘என்ன ஆச்சி, ஏதாச்சும் பிரச்சினையா?’ என்றேன்.

‘ஒங்க ஜோனல் மேனேஜர் போய்ட்டாரா?’

‘ஏன்? நாளைக்குத்தான் போறாராம். இப்ப அவர்கூட வெளிய போறேன். அனேகமா சாப்பாட்ட முடிச்சிக்கிட்டுத்தான் வருவேன். அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.’

‘அப்ப நீங்க போய்ட்டு வாங்க. வந்ததுக்கப்புறம் பேசிக்கலாம்.’ என்றவரைப் பார்த்தேன்.

‘ஒரு அஞ்சி, பத்து நிமிஷம் கழிச்சி போனா ஒன்னும் சொல்லமாட்டார். நீ சொல்லு. ஏதாவது மோசமா சொல்லிட்டாங்களா? ஒன் மொகத்த பார்த்தா ரொம்ப சீரியசாருக்கும்னு தோனுது?’

அவர் சலிப்புடன் எழுந்து நின்றார். ‘ஆமாங்க. நீங்க ஒங்களுக்கு மட்டும் நல்ல நிலமா பாத்து வாங்கிட்டு அவங்களுக்கு வில்லங்கம் புடிச்ச நிலமா பாத்து வாங்கிட்டீங்களாம். மைனி வீட்ல அவங்கப்பா ஆச்சி, போச்சின்னு குதிக்கிறாராம். ஒம் புருஷனால சம்மந்தி வீட்டுக்காரங்கக் கிட்டல்லாம் மானம் போவுதுடிங்கறாங்க அம்மா. அப்பாவ கேக்கவே வேணாம். மருமவனா போய்ட்டாரேன்னு பாக்கறேன்னு சொல்லிட்டாங்கங்க. போறுங்க.. பேசாம ஒங்க ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லி இங்கருந்து இப்பவே போய்ட்டா கூட சரிதான்.’

நான் இதைவிட மோசமான விளைவை எதிர்பார்த்திருந்ததால் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே.. அப்படியெல்லாம் யோசிக்காத.. நம்ம வீட்ட கட்டி முடிக்கறவரைக்குமாவது இங்க இருக்கணும். அப்புறம் பாப்பாவ ஸ்கூல்ல சேர்த்து ரெண்டு மாசங்கூட வலை.. அதுக்குள்ள டிரான்ஸ்ஃபர்னு கேட்டா சிரிக்கப் போறாங்க. இங்க பார், ஒங்கப்பா, அம்மா கோவம்லாம் எத்தனை நாளைக்கு இருக்கப் போவுது? இந்த நிலம் சமாச்சாரத்த எப்படி டீல் பண்றதுன்னு ஒக்காந்து யோசிச்சா எப்படியும் தீர்வு கிடைச்சிரும். நீ மனச போட்டு அலட்டிக்காம ஒன் வேலைய பார். நான் போய்ட்டு வந்திடறேன்.’ என்று ஆறுதலாக கூறிவிட்டு கை கால் கழுவிக்கொண்டு புறப்பட்டு சென்றேன்.

தொடரும்..
22 comments:

நன்மனம் said...

சார், படிச்சிட்டு இருக்கேன்னு சொல்லறதுக்கு தான்.

நல்ல விறுவிறுப்பா இருக்கு.

Krishna said...

ஆக, ஆபிஸுல பிரச்சினை, உங்க நேர்மையான/நியாயமான அணுகுமுறையால, நல்லபடியா முடியப் போகுது.

உறவு/வீட்டுப் பிரச்சினையும் உங்க, திறமையான கையாளலால் நல்லபடியாக முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு இடத்த வாங்கவோ, வீடு வாங்கவோ, பங்கு வாங்கவோ, அதுக்கப்புறமா, யாருக்கும், முக்கியமா சொந்தங்கள் கிட்ட ஆலோசனை சொல்லியிருக்க மாட்டீங்க தானே?

அந்த வயசுல, கொஞ்சம் அதிகப்படியான பொறுமையோடத்தான் இருந்திருக்கீங்க. உங்கள, நீங்க, முன்கோபின்னு சொன்னதா/எழுதியதா ஞாபகம்...

tbr.joseph said...

வாங்க நன்மனம்,

படிச்சிட்டு இருக்கேன்னு...

தொடர்ந்து படிங்க. ஒருத்தருடைய தோல்வியும்கூட நமக்கு பாடமாக அமையலாம் இல்லையா?

அதற்குத்தான் என்னுடைய தோல்விகளையும் கூட மறைக்காம எழுதிக்கிட்டு வரேன்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அலுவலகமானாலும், வீடானாலும் ஒரு பிரச்சினை நல்லபடியா முடியறதுக்கு நம்மளோட திறமையு, பொறுமையும், நல்ல அணுகுமுறையும் மட்டும் போறாது.

எந்த ஒரு பிரச்சினையிலும் நம்ம பங்கு என்னங்கறதும் ரொம்ப முக்கியம். என் பேர்ல தப்பு இருக்கற பட்சத்துல நான் மனம்திறந்து ஒத்துக்கறது மத்தவங்களுக்கு பயந்து, படிஞ்சி போய்ட்டேன்னு அர்த்தமாகாது. மாறாக நம்முடைய தவறுகளை நாம் ஒத்துக்கொள்கிற பக்குவத்தை காட்டும்போது நம்முடைய எதிராளிக்கும் அது பாடமாக அமையும் என்பதுதான் என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நான் முன்கோபியாய்த்தான் இருந்தேன்.. சுமார் நாற்பது வயதை அடையும்வரை. ஆனால் இடம், ஏவல் பாராமல் கோபித்ததில்லை..

tbr.joseph said...

ஒரு இடத்த வாங்கவோ, வீடு வாங்கவோ, பங்கு வாங்கவோ, அதுக்கப்புறமா, யாருக்கும், முக்கியமா சொந்தங்கள் கிட்ட ஆலோசனை சொல்லியிருக்க மாட்டீங்க தானே?//

அப்படி ஒரேயடியா ஒதுங்கி இருந்ததில்லை. என் சகோதரர்கள் குடும்பங்களோடு அதை நிறுத்திக்கொண்டிருக்கிறேன். ஆனால் என் மனைவி குடும்ப விஷயத்தில் அதற்குப் பிறகு தலையிட்டதேயில்லை.

துளசி கோபால் said...

நல்ல விறுவிறுப்பாப் போகுது.

சாவகாசமா பின்னூட்டம் எழுதக் கூட முடியலை. குழம்பு கொதிக்குது.

tbr.joseph said...

வாங்க துளசி,

என்ன குழம்புங்க.. வாசம் இங்கவரைக்கும் தூக்குது..

ம்..ம்..ம்.. அனுபவிங்க..

Sivaprakasam said...

ஆமா, விறுவிறுப்பா போயிட்டுருக்கு.

அரவிந்தன் said...

சார் உங்க தி.பா வை புக்கா போட்டா சூப்பரா விற்கும். அவ்வளவு விறுவிறுப்பு.

tbr.joseph said...

நன்றி சிவப்பிரகாசம்.

அரவிந்தன்.. புக்கா போட்டா விக்குதோ இல்லையோ தர்ம அடி நிச்சயம் கிடைக்கும்.

ஒருவேளை பணியிலிருந்து ஓய்வு பெற்றதுக்கப்புறம் சர்ச்சைக்குரியவிஷயங்களையெல்லாம்எடிட் பண்ணிட்டு செய்யலாம்.

Krishna said...

சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கறதா? மட்டன் பிரியாணிய, மட்டன் இல்லாம பண்ணா, அது சவ சவ சைவ பிரியாணி சார்....

tbr.joseph said...

சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கறதா? மட்டன் பிரியாணிய, மட்டன் இல்லாம பண்ணா, அது சவ சவ சைவ பிரியாணி சார்.... //

அப்போ.. ஜெ, வைகோ மாதிரி Z category security கேக்க வேண்டியதுதான்:))

sivagnanamji(#16342789) said...

//என்ன நடந்தது என்று விசாரிக்காவிட்டால் தலை வெடித்து
விடும் போலிருந்தது //
இப்பமட்டும் என்னவாம்?நிலப்பிரச்சினை என்ன ஆச்சு என்று
தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்
போல்தான் உள்ளது

tbr.joseph said...

வாங்க ஜி!

உண்மைய சொல்லணும்னா இதுல என்ன வில்லங்கம்னு எனக்கும் என் மைத்துனருக்கும் தெரியறதுக்கே ஒரு வாரத்துக்கு மேல எடுத்துது..

எங்க பத்திரத்த போலி, போலின்னு அந்த வயசானவரு சொல்லிக்கிட்டிருந்தாரே தவிர உண்மைய்ல அதுவல்ல பிரச்சினை..

சொல்றேன்..:)

G.Ragavan said...

பிரச்சனை மேல் பிரச்சனை
போதுமடா சாமி
பிரச்சனைதான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
பிரச்சனை மேல் பிரச்சனை
போதுமடா சாமி

இப்பிடி டீ.எம்.எஸ், மெல்லிசை மன்னர் இசையில ஒங்களுக்கு வந்து பின்னணி பாடுனாரா சார்?

மணியன் said...

நான் படித்ததையும் பதிகிறேன்.பல நல்லபாடங்கள் கற்றுத் தரும் தொடர்.

sivagnanamji(#16342789) said...

அவசரப்பட்டு வில்லங்கத்திலே மாட்டிவிட்டவர் உங்கள் மைத்துணர்
என்ன வில்லங்கம்னு நாளை தெரிந்துவிடும்

sivagnanamji(#16342789) said...

சும்மா மசால்வடை வாசம் கம்முண்டு
வந்தா கொதிக்கிற குழம்பெல்லாம்
மறந்திடுமுங்கோ

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சாரிங்க. திடீர்னு ஒரு மீட்டிங்க வச்சிட்டு வாங்கன்னு ஃபோன் வந்ததால வியாழக்கிழமை சாயந்திரம் ஓடிப்போய்ட்டு இன்னைக்கி காலைலதான் வந்தேன்.

சோதனை, பிரச்சினை எவ்வளவுக்கு, எவ்வளவு வருதோ அப்பத்தான் அத எதிர்த்து நிக்கக்கூடிய திறமையும் வளருங்கறது என்னுடைய அபிப்பிராயம். சோதனை வரும்போது டென்ஷனாத்தான் இருக்கும்.. என்னடா இதுன்னு தோனும். ஆனா அத சாமர்த்தியமா ஜெயிக்கற சமயத்துல நமக்கு ஏற்படற சந்தோஷமும் ஒரு பாடம்.. அதுல தோல்வியடையறபோது நமக்கு ஏற்படற துக்கமும் ஒரு பாடம்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

நான் படித்ததையும் பதிகிறேன்//

நமக்கெல்லாருக்குமே நம்ம வாழ்க்கையில ஏதாவது ஒரு கட்டத்துல இந்த மாதிரி சோதனைகள் வந்திருக்கும். அதுல நமக்கு ஏற்பட்ட வெற்றி, தோல்விகளை மையமா வச்சி எல்லோருமே எழுதுனா அத படிக்கற எல்லோருக்குமே அது ஒரு பாடமாருக்கும்..

இந்த மாதிரி பல நண்பர்கள் குழுமற எடத்துல இந்த மாதிரி அனுபவங்கள பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன்.

tbr.joseph said...

அவசரப்பட்டு வில்லங்கத்திலே மாட்டிவிட்டவர் உங்கள் மைத்துனர்//

அப்பிடீம்னு சொல்ல முடியாது ஜி!

அவரோட கோணத்துலருந்து பாக்கும்போது அவர் அவசரப்பட்டார்னு சொல்றதவிட உணர்ச்சிவசப்பட்டுட்டார்னு சொல்றதுதான் சரி. ஒருவேளை இது அவரோட நண்பர்களோட ஐடியாவாவும் இருக்கலாம்.

tbr.joseph said...

சும்மா மசால்வடை வாசம் கம்முண்டு
வந்தா கொதிக்கிற குழம்பெல்லாம்
மறந்திடுமுங்கோ //

அதென்னவோ உண்மைதான்.. மசால்வடை வாசத்துக்கு முன்னால மத்த எதுவுமே நிக்க முடியாது:))