24 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 140

‘என்னய்யா பேயறைஞ்சா மாதிரி போயிருச்சி ஒங்க மூஞ்சி?’ என்று மீண்டும் ஏளனத்துடன் என்னைப் பார்த்த பெரியவரை அப்படியே கழுத்தை நெரித்தாலென்ன என்று எனக்கு தோன்றியது.

சமாளித்துக்கொண்டு, ‘சார் தேவையில்லாம பேசாதீங்க. நீங்க சொன்னீங்களே வக்கீல், அவர் எங்க பேங்கோட லீகல் அட்வைசர். அவர்தான் இந்த நில பத்திரங்கள ஆதியிலருந்து அந்தம் வரைக்கும் பார்த்து ஒரு வில்லங்கமும் இல்லை தாராளமா வாங்கலாம்னு சொன்னவர். அவர் பெயர நீங்க சொன்னதும் நான் கொஞ்சம் அசந்துபோனது உண்மைதான். ஆனா இப்ப நினைச்சிப் பார்த்தா இதுதான் கடவுள் சித்தம்னு தோணுது.. தாராளமா ஒங்க பத்திரத்த கொண்டு வாங்க. அவர் முன்னாலேயே பேசி தீர்த்துக்கலாம். இங்க வேணாம்.’ என்றேன்.

பிறகு ஆய்வாளரைப் பார்த்து, ‘என்ன சார் இப்ப போலாங்களா?’ என்றேன்.

என்னுடைய குரலில் இருந்த அதீத மரியாதை அவருக்கு பயங்கர எரிச்சலை ஏற்படுத்தினாலும் அவரால் வேறொன்றும் பேச முடியாத சூழ்நிலையில் அவருக்கருகில் அமர்ந்திருந்த பெரியவரை எரிச்சலுடன் பார்த்தார். ‘ஏன்யா நீங்க வக்கில் முன்னால பேசி தீர்த்துக்கறதாருந்தா எங்க உயிர ஏன் சார் வாங்கறீங்க? ஒங்களால இன்னைக்கி என் வேலை கெட்டதுதான் மிச்சம். என்னமும் பண்ணிக்குங்க. போங்க. ஒங்க முதலாளி கூப்டு கேட்டா நீங்கதான் தலையிட்டு இந்த யோசனைய சொன்னீங்கன்னு சொல்லிக்கறேன்.’

பிறகு என்னை திரும்பிப் பார்த்து, ‘தாராளமா போங்க சார். ஆனா ஒன்னு.. மறுபடியும் எங்கிட்ட வந்து புகார்னு நிக்காதீங்க. நீங்க இப்ப எடுத்த முடிவிலேயே நிக்க முடிஞ்சா சந்தோஷம்தான். போய்ட்டு வாங்க.’ என்றார்.

ஆனால் அப்போதும் என்னுடைய மைத்துனர் எழாமல் பரிதாபமாக என்னை பார்த்தார். எனக்கோ அவர்மீது படு எரிச்சலாக வந்தது. என்ன மனுஷன் இவர் என்று நினைத்தேன். ஆய்வாளரோ எரிச்சலுடன் அவரைப் பார்த்தார். ‘எழுந்து போங்க சார். ஒங்க மச்சான் பேச்ச கேட்டீங்க உருப்பட்டாப்பலத்தான்.’

அவருடைய மறைமுகக் குற்றச்சாட்டை முற்றிலும் எதிர்பாராத நான் பொங்கி வந்த கோபத்துடன் பதில்பேச முயல சட்டென்று எழுந்த என் மைத்துனர் எழுந்து என்னை லட்சியம் செய்யாமல் வெளியேற நான் அதிர்ச்சியுடன் அவரை பின்தொடர்ந்தேன்.

காவல்நிலையத்திலிருந்து வெளியேறிய என் மைத்துனர்  நான் வருகிறேனா என்றுகூட பார்க்காமல் வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுவிட நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தேன்.

பிறகு சுதாரித்துக்கொண்டு என்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

****

‘என்னங்க இது அநியாயமாருக்கு? நீங்க அண்ணனுக்கு சாதகமாத்தான பேசியிருக்கீங்க? அவங்க எதுக்கு கோச்சிக்கிட்டு போய்ட்டாங்க?’

நான் காவல்நிலையத்திற்கு சென்று வந்த விவரத்தை ஒன்றுவிடாமல் என் மனைவியிடம் கூற என் மனைவி கேட்ட கேள்விகள் இவை..

அதுதான் எனக்கும் விளங்கவில்லை. மணியைப் பார்த்தேன். இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. இனியும் இதையே பேசிக்கொண்டிருந்தால் இரவு முழுவதும் போய்விடும் என்று நினைத்தேன்.

அடுத்த நாள் காலையில் என்னுடைய வட்டார மேலாளர் வருடாந்தர விசிட்டுக்காக வருவதாக அன்று காலைதான் தொலைப்பேசி வந்திருந்தது. நான் கிளைக்கு பொறுப்பேற்ற பிறகு அவர் வரும் முதல் விசிட்.

என்னுடைய கிளை திருவனந்தபுரம் வட்டாரத்தில் வருவதால் என்னுடைய வட்டார மேலாளர் தன்னுடைய நாற்சக்கர வாகனத்திலேயே வந்துவிட்டு அன்று மாலையே திரும்பிச் செல்வது வழக்கம் என்று என்னுடைய உதவி மேலாளர் வழியாக அறிந்திருந்தேன்.

எனவே, ‘பேசினது போறும்ப்பா. பேசினா இன்னைக்கெல்லா பேசிக்கிட்டே இருக்கலாம். இனிமே இதுல நா மறுபடியும் தலையிடறதுக்கு முன்னால ஒங்க அண்ணன் என்ன நினைக்கிறார்னு தெரியணும். நாளைக்கு எங்க ஜோனல் மேனேஜர் வராறு.. அதனால நா காலையில ஆஃபீஸ் போனதும் நீ பொறப்பட்டு ஒங்க வீட்டுக்கு போ... அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம். இப்ப சாப்ட்டு படுக்கலாம்.’ என்று கூறிவிட்டு உணவருந்திவிட்டு உறங்கச் சென்றோம்.

என் மனைவி எப்போதுமே படுத்த அடுத்த நொடியே உறங்கிப் போகும் பேறு பெற்றவர். நான் எப்போதுமே அன்று நாள் முழுவதும் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பேட்டில் சுருக்கமாக எழுதிவைத்துவிட்டுத்தான் உறங்கச் செல்வது வழக்கம்.

அன்று நிறையவே எழுத வேண்டியிருந்தது. எழுதி முடித்துவிட்டு உறங்கச் சென்றபோது மணி நள்ளிரவைக் கடந்திருந்தது..

***

அடுத்த நாள் காலை என் மகளை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு வந்து நிலப் பத்திரத்தை  என் மனைவியிடம் கொடுத்து, ‘உங்கப்பாவோ உங்க அண்ணனோ ஏதாச்சும் கோபப்பட்டா நீயும் கோபப்பட்டு ஏதாவது பேசிறாத. அப்படி ஏதாவது பிரச்சினையாச்சினா நீ பேசாம இத குடுத்திட்டு பொறப்பட்டு வந்துரு. அநேகமா இன்னைக்கி சாயந்திரம் ஆறு இல்லன்னா ஏழு மணிவரைக்கும் எங்க ஜோனல் மானேஜர்கூட வெளிய போவேண்டியிருக்கும். அதனால என்னால அங்க வரமுடியாது.’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.

‘இது ஒங்களுக்கு தேவையில்லாத வேலை. பேசாம நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்திருக்கலாம். இப்ப இதுல ஏதும் பிரச்சினையாயிருமோன்னு பயமா இருக்குங்க. அதுவும் எங்க மைனியப்பத்தி ஒங்களுக்கு தெரியுமில்லே. எங்கம்மா கூட நீங்க நிலத்தப்பத்தி சொன்னதுமே எதுக்குடி உம்புருஷனுக்கு வேண்டாத வேலைன்னு சொன்னாங்க. நான் சொன்னா நீங்க கேட்டிருக்கவா போறீங்க? இப்ப பாருங்க..’ என்று பேசியவரை, ‘சரிப்பா.. நடந்தது நடந்துபோச்சி இனி அதப்பத்தி பேசி என்ன பண்றது? உங்கப்பாவோ ஒங்க அண்ணனோ ஏறுக்கு மாறா பேசினார்னா, அந்த நிலத்த நாங்களே வாங்கிக்கிறோம்ப்பான்னு சொல்லிட்டு வந்துரு. நகைய அடகு வச்சி வாங்கிரலாம். அப்புறம் எந்த பிரச்சினையானாலும் நாம பாத்துக்கலாம்.’ என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.

‘எதையாவது சொல்லி என் வாய அடைக்கறதே ஒங்களுக்கு பொழப்பா போச்சி’ என்று முனகிக்கொண்டே சென்ற என் மனைவியைப் பார்க்கவும் பாவமாகத்தான் தோன்றியது. சொந்த ஊருக்கு வந்து சந்தோஷமாக மூன்று வருடம் இருந்துவிட்டு செல்லலாம் என்றிருந்தவருக்கு தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தியது என்னுடைய அவசரபுத்திதான். அதற்குத்தான் மனைவி சொல்லே மந்திரம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது.

பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லிவைத்தவர் பின்னால் வருவதை முன்கூட்டியே உணர்ந்து சொல்பவர்கள் பெண்கள் என்பதை மனதில் வைத்து சொல்லியிருப்பார் போலிருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இவ்வுலகம் அதை திரித்து நேர் எதிரான பொருளை தந்திருக்கிறது. தஞ்சையிலிருந்து காரில் வரும் நேரத்தில் என் மனைவி என்னிடம் கூறியதை அப்போது நினைத்துப் பார்த்தேன்.

‘இங்க பாருங்க. தூத்துக்குடி போகணும்னு நா கேட்டதுக்காகத்தான் நீங்க கெஞ்சி கூத்தாடி இந்த டிரான்ஸ்ஃபர வாங்கியிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அதுக்காக ஒரேயடியா எங்க வீட்டாளுங்க கூட உறவாடணும்னு இல்லே. போனோம் வந்தோம்னு இப்ப இருக்கற மாதிரித்தான் இருக்கணும். முக்கியமா எங்கண்ணன் விஷயத்துல முன்னே மாதிரி ஜாஸ்தியா உரிமை எடுத்துக்காதீங்க. எங்க மைனி குடும்பமும் தூத்துக்குடிதாங்கறத மறந்துராதீங்க. எங்கண்ணனுக்கு வேண்டியத அவங்களே பார்த்துப்பாங்க.’

அவர் அன்று கூறியது இப்போது அசரீரிபோல் ஒலித்தது. ஆனாலும் அதை குத்திக்காட்டி என்மேல் குற்றம் காண்பவரல்ல என் மனைவி. நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்து என்னை என்வழியிலேயே போகவைத்தவர் அவர்.

அவர் கிளைம்பிச் சென்றதும் நான் குளித்து முடித்து அலுவலகம் சென்றேன்.

இன்று என் வட்டார மேலாளர் வருவது என்னுடைய சக பணியாளர்களுக்கும் தெரியுமாதலால் எல்லோரும் ஒன்பதரை மணிக்கே ஆஜராகியிருந்தனர்.

என்னுடைய வட்டார மேலாளரை எனக்கு முன்பின் அறிமுகமிருக்கவில்லை. அவர் பெரும்பாலும் அவருடைய சொந்த மாநிலமான கேரளத்திலேயே பணிபுரிந்திருந்ததால் அவருடைய பெயரை நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதுவரை அவரை சந்தித்திருக்கவில்லை.

ஆகவே அவரைப்பற்றி என்னுடைய தலைமைக்குமாஸ்தா கூறியதை வைத்துத்தான் அவரை எடைபோட்டிருந்தேன். ‘சார் கொஞ்சம் பந்தா பண்ணுவார் சார். ஆனா ரொம்ப நல்ல மனுஷன். அவர் வந்தா பிராஞ்சுக்குள்ள பெரிசா ஒன்னும் பாக்க மாட்டார். பார்ட்டீசுங்கள பாக்கணும்னுதான் நிப்பார். அதனால நீங்க ஒரு நாலு பார்ட்டீசுங்கக்கிட்ட சொல்லி அவர் வந்ததும் எங்க ஆஃபீசுக்கு, ஃபேக்டரிக்கு நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்ல வச்சிட்டீங்கன்னா போறும் சார்.’

நானும் அவர் விசிட்டுக்கு வருகிறேன் என்று கூறியதுமே ஏற்கனவே கடன் பெற்றிருந்த மூன்று தொழிலதிபர்களிடம் கூறி வைத்திருந்தேன். அவர்களுக்கும் என்னுடைய வட்டார மேலாளரை நன்றாக தெரிந்திருந்தது. அவர் வருகிறார் என்று கூறியதுமே, ‘வரட்டும் சார். நாங்க பாத்துக்கறோம். சார் வந்ததும் நீங்க ஃபோன் பண்ணுங்க போறும். நானே வந்து கூட்டிக்கிட்டு வந்துடறேன் என்று சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் கூறவே என்னுடைய பணி எளிதாகிப் போனது என்று நினைத்தேன்.

ஆனால் நான் நினைத்ததற்கு எதிர்மறையாக என்னுடைய வட்டார மேலாளர் என்னுடைய கிளையின் முந்தைய இரு மேலாளர்களுடன் வந்திறங்கியபோது நான் மலைத்துப்போனேன்.

‘டிபிஆர். என்னோட இந்த விசிட் சாதாரண விசிட் மட்டுமில்லாம ஒங்க ஜாய்னிங் ரிப்போர்ட்ல இவங்க ரெண்டு பேரையும் பத்தி நீங்க ரிப்போர்ட் பண்ணத நேர்ல வெரிஃபை பண்ற விசிட்டாவும் ஆக்கிரலாம்னு நினைச்சி இவங்களையும் திருவனந்தபுரத்துக்கே வரச்சொல்லி என்கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். என்னடா இவன் முன்ன பின்ன சொல்லாம கூட்டிக்கிட்டு வந்திருக்கானேன்னு நினைக்காதீங்க. நான் இதுக்காகத்தான் வரேன்னு சொன்னா நீங்க எங்க டாக்குமெண்ட்ச டாக்டர் பண்ணிருவீங்களோன்னு இவங்க ஃபீல் பண்ணாங்க.. அதான் சொல்லலே. தப்பா நினைச்சிக்காதீங்க. இப்ப பாருங்க. இனி இவங்க குத்தம் சொல்றதுக்கு வழியே இருக்காதில்லே.’

அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தவறு செய்தவர்கள் கூறியதைக் கேட்டு என்னை சந்தேகப்பட்டவரை என்னவென்று சொல்வது?

‘அதனாலென்ன சார். நீங்க தாராளமா பார்க்கலாம். எனக்கு எந்த பிரச்சினையுமில்லே.’ என்றேன்  அசடு வழிந்தவாறு.

என்னுடைய முந்தைய இரு மேலாளர்களும் என்னை ஏதோ எதிரியைப் பார்ப்பதுபோல பார்த்தனர்..

தொடரும்..

19 comments:

துளசி கோபால் said...

பெண் புத்தி PIN புத்தி. கூர்மையான அறிவுன்னு அர்த்தம்.

இப்பவாவது புரிஞ்சாச் சரித்தான்:-))))

வடுவூர் குமார் said...

என்ன!! உங்க வேலையில் இவ்வளவு சிக்கலா?
படிக்க நல்லாதான் இருக்கு ஆனா பாவமாகவும் இருக்கு.
தொடருங்கள்..

sivagnanamji(#16342789) said...

தலைவலிய மறந்தாக்க...
திருகுவலி வந்துவிடும்..
திருகுவலி போனபின்பு..
தலைவலி வந்துருத்தும்

tbr.joseph said...

வாங்க துளசி,

கூர்மையான அறிவுன்னு அர்த்தம்.//

ஓஹோ..இப்படியொரு அர்த்தம் இருக்கோ.. அதனாலதான் குத்தி, குத்தி காமிக்கறீங்களோ:))

tbr.joseph said...

வாங்க வடுவூர் குமார்,

படிக்க நல்லாதான் இருக்கு ஆனா பாவமாகவும் இருக்கு.//

எல்லா வேலையிலயும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும்தானே.. என்ன, எங்க வேலை பணத்தோட டீல் பண்றதுனால கொஞ்சம் பிரச்சினை ஜாஸ்தியாயிருக்கும்..

tbr.joseph said...

வாங்க ஜி!

சரி, இந்த திருகுவலின்னா என்ன?

அரவிந்தன் said...

இந்த ஆய்வுக்குப்பின் பழைய மேலாளர்கள் மேல் நடவெடிக்கை உருதியாகியிருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதற்குதான் உறவினர்களிம் சற்று தள்ளியே இருக்க வேண்டும்.நாம் உதவுவதாக செய்தால் கூட ஏதாவது பிரச்சணை எனில் அது நமது தலையில்தான் விழும்.

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

இதற்குதான் உறவினர்களிம் சற்று தள்ளியே இருக்க வேண்டும்.//


நீங்க சொல்றது ரொம்ப, ரொம்ப சரிங்க.. பட்டாத்தான தெரியுது..

இப்பல்லாம் நீங்க சொல்ற பாலிசிதான்..

சகோதரர்கள் குடும்பத்துடன் எந்த விஷயத்தையும் நிறுத்திக்கொள்கிறேன்.

G.Ragavan said...

சொந்த ஊருக்குப் போயும்..சொந்தக்கங்களுக்குப் பக்கத்துல இருந்தும்...பிரச்சனைகள் வருதுன்னா...என்னதான் செய்றது. கிட்டப் போனால் முட்டப் பகைங்கறது சரியாத்தான இருக்கு.

sivagnanamji(#16342789) said...

திருகுதல்= முறுக்குதல்
உடம்பை வேறு யாராவது
(பலவந்தமாக)முறுக்கினா
ஏற்படும் வலி
("முறுக்"கேசன் ஞாபகம் இருக்குமே

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கிட்டப் போனால் முட்டப் பகைங்கறது சரியாத்தான இருக்கு. //

நாம நம்ம வேலைய மட்டும் பாத்துக்கிட்டிருந்தா பிரச்சினையே வராது. அத விட்டுட்டு சோஷியல் சர்வீஸ்னு போனா முட்டப் பகைதான் வரும்..

tbr.joseph said...

வாங்க ஜி!

என்ன ஜி.. என்னென்னமோ சொல்லி பயமுறுத்தறீங்க..?

மத்தவங்க முறுக்கறதா.. ஒடம்புல தெம்பில்லீங்க.. :))

அதுசரி, யாரந்த 'முறுக்' கேசன்?

sivagnanamji(#16342789) said...

உண்மையிலேயெ "முறுக்"கேசன்
மறந்திட்டீங்களா?
இன்னிக்குதான் தென் மாவட்ட போலீஸ் பயிற்சி பள்ளி ஒன்றிற்கு மாற்றப்பட்டிருக்கார், அந்த முன்னாள்
ஏ.சி
(ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே)

arunagiri said...

தன் வீட்டுக்காரர்கள் என்ன செய்தாலும் சரி, அவர்களோடு ஒட்ட வேண்டும்; புருஷன் வீட்டுக்காரர்கள் என்ன செய்தாலும் தப்பு, அவர்களை வெட்ட வேண்டும் என்று இருக்கும் பெண்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான வீட்டம்மா!

tbr.joseph said...

வாங்க அருணகிரி,

நீங்க சொல்றா மாதிரி பெண்கள் அதிகம் என்றாலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன..

என்னங்க ஒங்க வீட்ல நீங்க எழுதறத படிக்க மாட்டாங்கற தைரியமா:))

tbr.joseph said...

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே//

ஓ அவரா.. எல்லாம் காலத்தின் கோலம்.. இல்ல அலங்கோலம்..

arunagiri said...

ஆமாம் இதையெல்லாம் அவர் படிக்கவே மாட்டார்தான். ஆனாலும் ஒன்று சொல்ல வேண்டும். என் வீட்டம்மா அப்படி எல்லாம் இல்லை, என்றாலும் இதைப்படித்தால் "என்ன இப்படி எழுதி இருக்கீங்க? நான் எல்லாம் அப்படியா இருக்கேன்" என்பார்கள். பிறகு ஒரு கொள்கை விளக்க உரை நிகழ்த்த வேண்டும்.

tbr.joseph said...

"என்ன இப்படி எழுதி இருக்கீங்க? நான் எல்லாம் அப்படியா இருக்கேன்" என்பார்கள்.//


உங்க தன்னிலை விளக்கதோட விஷயம் நின்னுருமா அருணகிரி?

arunagiri said...

வம்புல மாட்டி வைக்காம விட மாட்டீங்க போல இருக்கே...:)