23 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 139

என்னுடைய குரலில் இருந்த நிதானம் ஆய்வாளருடைய முகத்தில் அபிரிதமான கோபத்தை காட்டியது.

ஒரு வினாடி என்ன பேசுவதென தெரியாமல் அவர் எதிரே அமர்ந்திருந்த எங்கள் மூவரையும் மாறி, மாறி பார்த்தார். என்னருகில் அமர்ந்திருந்த என்னுடைய மைத்துனர் மேசைக்கடியில் என் கரங்களைப் பற்றி அழுத்தியதிலிருந்து அவருக்கும் நான் பேசியதில் அவ்வளவாக விருப்பமில்லை என்று தெரிந்தது. அவர் என்னைப் பார்த்த பார்வை ‘இது தேவையா மச்சான்?’ என்பதுபோலிருந்தது.

‘என்ன சார் வெளையாடறீங்களா? நீங்க யார்கிட்ட மோதுறீங்கன்னு ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா? நீங்க பாட்டுக்கு மூனுவருசம் கழிச்சி இந்த ஊரவிட்டு இன்னொரு ஊருக்கு போயிருவீங்க. ஆனா ஒங்க மச்சான்? இதே ஊர்ல இன்னும் இருக்கணுமே சார். அத யோசிச்சி பாருங்க. நீங்க பேசாம சமாதானமா போறதுதான் நல்லது சொல்லிட்டேன்.’

‘ஆமா -------------- பெர்னாண்டோ..அதான் ஒனக்கு நல்லது. ஒன் மச்சான் பேச்ச கேட்டுட்டு முட்டாத்தனமா ஏதாச்சும் செஞ்சிட்டு பெறகு அவஸ்த படாதா.’ என்று என்னுடைய மைத்துனரைப் பார்த்து ஏக வசனத்தில் பேசிய அந்த வயதானவரைப் பார்த்து முறைத்தேன்.

‘இவர் யார் சார் இதுல தலையிடறதுக்கு?’ என்றேன் என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல். ‘இந்த நிலத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்னு நா தெரிஞ்சிக்கலாமா?’

ஆய்வாளர் பேச முயல்வதற்குள் அந்த பெரியவர் இடைமறித்து, ‘தம்பி.. மேனேஜர் தம்பி.. வயசு வித்தியாசம் பாக்காமா பேசாதீங்க. நாந்தான் அவருக்கு எல்லாமே.. நீங்க ஒங்க நிலம்னு சொல்லிக்கிட்டு நிக்கறீங்களே அந்த மாதிரி நூறு எடம் எம் மொதலாளிக்கு இருக்குய்யா.. அதெல்லாமே எம் மேற்பார்வையிலதான் இருக்கு. நீங்க வச்சிக்கிட்டிருக்கற பத்திரம் எல்லாமே போலிய்யா.. அது தெரியாம வாங்கிட்டு.. வக்கீல பார்த்தேன்.. வில்லங்கம் பார்த்தேன்னுக்கிட்டு.. சரியான விவரம் தெரியாத ஆளாருக்கீங்களே.. நீங்கல்லாம் என்னத்தத்தான் மேனேஜரா இருந்து குப்பைய கொட்டறீங்களோ..’ என்றார் ஏளனத்துடன்.

என்னுடைய வழக்கறிஞர் கூறிய அறிவுரையை அந்த நொடி சுத்தமாக மறந்துபோனேன். அந்த பெரியவர் என்னை மட்டுமல்ல என்னுடைய மேலாளர் பதவியையுமே அவமானப்படுத்திவிட்டதாக தோன்றிய அந்த வார்த்தைகள்தான் என்னை உசுப்பிவிட்டிருக்க வேண்டும். என்னைக் கட்டுப்படுத்த முயன்ற என்னுடைய மைத்துனரையும் மீறி ஆவேசத்துடன், ‘சார்.. இது ரொம்ப ஓவர். ஒன்னு இந்த ஆள் இருக்கணும். இல்ல நாங்க இருக்கணும். நீங்க விசாரிக்கணும்னு கூப்ட்டீங்க. எங்க வக்கீல் போகவேணாம்னு சொல்லியும் வந்திருக்கேன். நீங்க இந்த நிலம் விஷயமா ஏதாச்சும் கேக்கணும்னா கேளுங்க. பதில் சொல்றேன். இடையில இவர் யார் சார்? இந்த நிலத்துக்கு பாத்தியஸ்தரா? இல்லே இவர் ஏதாச்சும் என் மச்சான் மேல புகார் குடுத்திருக்காரா? இல்லேல்லே.. அப்புறம் எதுக்கு இங்க ஒக்காந்துக்கிட்டு கிண்டலா பேசறார்? இவர வெளிய அனுப்பிட்டு கேக்கறாதாருந்தா கேளுங்க. இல்லேன்னா எனக்கு வேற வேலையிருக்கு. அப்புறமா சொல்லியனுப்புங்க, வந்து பதில் சொல்றோம்.’ என்று எழுந்து நின்ற நான் அப்போதும் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்த என் மைத்துனரைப் பார்த்து, ‘வாங்க.. போலாம்.’ என்றேன்.

என்னுடைய ஆவேசத்தை ய்வாளரே எதிர்பார்க்கவில்லையென்பது அவர் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்ததிலிருந்தே தெரிந்தது. என்னுடைய குரலைக் கேட்டு அவருடைய அறைக்கு வெளியே வராந்தாவில் அமர்ந்திருந்த பலரும் வாசல்வழியே எட்டிப்பார்க்கவே ஆய்வாளர் எழுந்து, ‘சார் கோபப்படாதீங்க. ஒக்காருங்க.’ என்றார்.

நான் அமராமல் நின்றுக்கொண்டு அந்த பெரியவரைப் பார்த்தேன். அவர் என்னுடைய கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு ஏளனப்புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

‘சார் நான் ஒக்காரணும்னா அவர் வெளிய போகணும்.’ என்றேன் பிடிவாதத்துடன்.

ஆய்வாளரின் முகத்தில் கோபத்தைவிட சலிப்பே தெரிந்தது. அந்த பெரியவரைப் பார்த்து, ‘சார் ஒன்னு வெளிய போய் இருங்க. இல்லன்னா பேசாம இருங்க. அதான் நா விசாரிச்சிக்கிட்டிருக்கேன் இல்லே..’ என்றார். பிறகு என்னைப் பார்த்து ‘நீங்க ஒக்காருங்க சார். அவர் இனி வாய் திறக்க மாட்டார். அதற்கு நான் பொறுப்பு.’ என்றார்.

என் மைத்துனரும் என்னைப் பார்த்து ‘ஒக்காருங்க மச்சான்.’ என்று சாடை காட்டவே நான் அமர்ந்து, ‘சார்.. இவங்க நேத்து ராத்திரி வந்து எங்க நிலத்துல வேலியடிச்சது சட்டவிரோதமான செயல். நீங்க ஒத்துக்கறீங்களா இல்லையா?’ என்றேன்.

அவர் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ‘ஒத்துக்கறேன் சார். ஆனா நீங்க என்ன செஞ்சிருக்கணும்? ஒடனே இங்க வந்து புகார் கொடுத்திருக்கணுமா இல்லையா? அதவிட்டுட்டு நீங்க ஒங்க அடியாளுங்கள கூட்டிக்கிட்டு போயி பிரிச்சி போட்டா என்ன அர்த்தம்? அத கேட்டதும் அவரும் அவரோட ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து.. இப்ப என்னாச்சி..? சரிய்யா.. அந்த கைகலப்புல நீங்க அவரோட ஆளுங்கள அடிச்சி காயப்படுத்திட்டாங்கன்னு ஒங்க மேல புகார் கொடுத்திருக்கலாமில்லே.. அப்படி குடுத்திருந்தா ஒங்க மேல ஆக்ஷன் எடுக்க வேண்டி வந்திருக்குமா இல்லையா?’

அவரே மறைமுகமாக எதிரணிக்கு யோசனை கூறுவதுபோலிருந்தது.நாடகப் பாணியில்  வாயை வலக்கரத்தால் மூடிக்கொண்டு அமர்ந்திருந்த பெரியவரும் மூடியிருந்த கைக்குப் பின்னால் புன்னகைப்பது தெரிந்தது.  ஆய்வாளர் கூறியது அடாவடித்தனமாக தோன்றினாலும் அதன் பின்னாலிருந்த நியாயத்தைப் புரிந்துக்கொண்டு வாளாவிருக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்தேன்.

எல்லாம் என்னுடைய மைத்துனரின் புத்திக்கெட்டதனத்தால் வந்த வினை. இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று காலையிலேயே என்னிடம் கூறியிருந்தால் அப்போதே தடுத்து நிறுத்தியிருப்பேன். ஒருவேளை அது என்னுடைய மாமானரின் யோசனையாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் அதே சமயம் பதில் கூறாமல் இருந்தால் அது ஆய்வாளருக்கும் எதிரணிக்கும் சாதகமாகப் போய்விடும் என்று நினைத்தேன். ‘சார் அது எங்க நிலம். அதுல நேத்து ராத்திரி நானும் மேஸ்திரியும் போய் அளந்து அஸ்திவாரம் போடறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் செஞ்சிட்டு வந்திருக்கோம். இன்னைக்கி காலைல எழுந்து பூஜை பண்றதுக்கு போய் நிக்கறோம். எங்க நிலத்துல வேற யாரோ முட்டாப் பய வந்து வேலியடிச்சிட்டு போயிருக்கான். நாங்க அத பார்த்தவுடனே பிச்சியெறிஞ்சிட்டு எங்க பூஜைய நடத்திட்டு போயிருக்கணும். அதச் செய்யாம விட்டதுதான் தப்புன்னு இப்ப நா நினைக்கிறேன். இப்பவும் சொல்றேன்.. எங்க நிலத்துல அத்துமீறி நுழைஞ்சி வேலியடிச்ச இவங்க பேர்ல இன்னைக்கே கேஸ் போடப்போறோம். இது சிவில் மேட்டர். இதுல ஒங்கக் கிட்ட வந்து புகார் கொடுத்து க்ரிமினல் கேசா மாத்துற ஐடியா எங்களுக்கு இல்லை.. இவங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தா கோர்ட்ல வந்து பேசிக்கட்டும். இதுல ஒங்களுக்கு எந்தவிதமான ரோலும் இல்லை¨.. அவ்வளவுதான்.. அதனால எங்கள இனியும் தொந்தரவு பண்ணாதீங்க.. நாங்க வரோம்.’ என்று கிளம்பினேன்..

ஆனால் என்னுடைய மைத்துனரோ இருந்த இடத்திலிருந்து எழுவதாக தோன்றவில்லை.. ‘எதுக்கு ஒக்காந்திருக்கீங்க? வாங்க போலாம்.’ என்றேன்.

அவருடைய அந்த செயல் ஆய்வாளருக்கு சாதகமாக போய்விட்டது. அவர் உடனே.. ‘சார்.. ஒரு நிமிஷம் இருங்க. இந்த பெரியவரப் பத்தி இவ்வளவு நேரம் பேசினீங்களே.. இப்ப நா கேக்கறேன். நீங்க யார் சார் இந்த விஷயத்துல தலையிட்டு நியாயம் பேசறதுக்கு? நிலத்த வாங்கனவர் இங்க இருக்கார். இவருக்கே நீங்க பேசறது பிடிக்கலைன்னு தெரியுது. நீங்க சரியா பார்த்து வாங்காம போனது முட்டாள்தனம். அதுக்கு இவர் மாட்டிக்கிட்டு முளிக்கார். நீங்க தப்ப பண்ண தப்பெ மறைக்கறதுக்காக வீம்பா வம்பு பண்றீங்க.’ என்றார் கோபத்துடன்.

அவரருகில் அமர்ந்த பெரியவர் இப்போது வெளிப்படையாகவே சிரிக்க ஆரம்பித்தார்.
ஆய்வாளருக்கு அவருடைய சிரிப்பு எரிச்சலை மூட்டியது. ‘சார் நீங்க வேற.. சும்மா இருங்க சார். நானே இத எப்படியாவது சுமுகமா முடிச்சிரலாம்னு பாக்கேன். நீங்க வேற..’

அவர் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.

நான் என்னுடைய மைத்துனருடைய எண்ணத்தைப் புரிந்துக்கொள்ள முடியாமல் ஒரு நொடி தடுமாறினேன். இருப்பினும், ‘சார் நீங்க பேசறது கொஞ்சம்கூட நல்லால்லை.. நீங்களா கூப்டுத்தான் நா வந்தேன். நீங்க சொல்றா மாதிரி எனக்கும் இந்த நிலத்துக்கு சம்மந்தம் இல்லைதான். ஆனா நா ஏதோ விசாரிக்காம வாங்குனா மாதிரி பேசி எனக்கும் என் மச்சானுக்கும் இடையில பிரச்சினைய உண்டாக்கிறாதீங்க. நீங்க சமாதானமா போங்கன்னு சொல்றதோட அர்த்தம் எனக்கு விளங்கலை.. ஒன்னு வேணா பண்ணலாம்.. நாங்க வாங்கன தொகைய, பத்திர செலவு, புரோக்கர் செலவு எல்லாத்தையும் கொடுத்திரச் சொல்லுங்க. இவங்க பேருக்கே நிலத்த எழுதிக்குடுத்திடறோம். என்ன சொல்றீங்க?’

என்னுடைய மைத்துனர் திடீரென்று நிமிர்ந்து என்னைப் பார்த்த பார்வையில் என்னுடைய யோசனையை அவரும் ஆதரிப்பதாகவே தோன்றியது. எப்படியாவது இந்த தொல்லையிலிருந்து விடுபட்டால் போதும் என்று நினைத்தார் போலிருக்கிறது. அவரையும் குறை கூறி பயன் இல்லை. அவரோ எந்த நேரத்திலும் வரவிருந்த கப்பல் ஆர்டரை காத்திருப்பவர். இந்த நேரத்தில் வழக்கு என்று தொடுத்தால் எங்கே தூத்துக்குடியிலேயே இருக்க வேண்டி நேருமோ என்று நினைத்திருப்பார்.

என்னுடைய யோசனையை அந்த பெரியவர் ஏற்றுக்கொளிகிறாரா என்ற தோரணையில் அவரைப் பார்த்தார் ஆய்வாளர். ஆனால் அவரோ ஏளனத்துடன், ‘என்ன சார் நீங்க? அந்த நிலத்த நாங்க விக்கவே இல்லை.. எங்க நிலம்னு சொல்லிக்கிட்டிருக்கோம். எவனோ ஒரு களவாணிப்பய அத தன் நிலம்னு இவர ஏமாத்தி வித்திருக்கான். எங்க நிலத்த நாங்க எதுக்கு மறுபடியும் காசு குடுத்து வாங்கறது? இதென்ன கிறுக்குத்தனமா இருக்கு?’ என்றார் ஆய்வாளரைப் பார்த்து.

அவர் பேசிய தோரணை ஆய்வாளருக்கே பிடிக்கவில்லை என்று அவருடைய அடுத்த கேள்வியிலிருந்தே விளங்கியது. ‘சார்.. அது ஒங்க நிலம்னு ஏதாச்சும் அத்தாட்சி இருக்கா? இருந்தா அத காமிங்க?’ என்றார் அவரைப் பார்த்து.

அவர் இதற்காகவே காத்திருந்ததுபோல், ‘சார், முதல்ல இவங்கக் கிட்டருக்கற பத்திரத்த காட்டச் சொல்லுங்க. அப்புறமா எங்கள கேளுங்க. இத மாதிரி நூறு நிலம் எங்க மொதலாளிக்கிட்ட இருக்குன்னு ஒங்களுக்கு தெரியும்தானே..?’ என்றார்.

என்னுடைய மைத்துனரோ ஒரு அப்பாவி. ‘மச்சான் அந்த பத்திரத்த கொண்டு வந்திருக்கீங்களா?’ என்றார் உடனே.

நான் என்னுடைய வழக்கறிஞருடைய சமயோசித யோசனையை நினைத்துப் பார்த்தேன். இல்லை என்று தலையை அசைத்தேன்.

பிறகு ஆய்வாளரைப் பார்த்து, ‘சரி சார். இவர பத்திரங்கள எடுத்துக்கிட்டு எங்க வக்கீல் ஆஃபீசுக்கு வரச்சொல்லுங்க. நாங்களும் எங்க பத்திரத்த எடுத்துக்கிட்டு வரோம். ரெண்டையும் அவரே பார்த்துட்டு சொல்லட்டும்.’ என்றேன்.

பெரியவரோ ஏளனத்துடன் என்னைப் பார்த்தார். ‘அய்யா மேனேசர் அய்யா.. எங்களுக்கும் வக்கீல் இருக்காருய்யா.. அதுவும் எங்க தியேட்டர் முன்னலயே.. நீங்க வேணும்னா அங்க வாங்க.. பேசிக்கிருவோம்.’ என்று அவருடைய வழக்கறிஞருடைய பெயரைச் சொன்னார். நான் அதிர்ந்து போனேன்.

தொடரும்...

21 comments:

sivagnanamji(#16342789) said...

உங்கள் வங்கியின் சட்ட ஆலோசகர்-தானே?அவர் ஆலோசனை எப்படி
இருந்தாலும் உங்கள் மாமனாரின் வக்கீல் பிரண்ட் சரியகத்தானே ஆலோசனை கூறியிருப்பார்?

"பாதகஞ்செய்பவரைக் கண்டால்


நீ பயங்கொள்ள லாகாது பாப்பா;


மோதி மிதித்து விடு பாப்பா-
அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

sivagnanamji(#16342789) said...

"ரௌத்திரம் பழகு"--பாரதி

மணியன் said...

சரியான அடாவடித்தனமாக இருக்கிறதே! நல்ல காலம் நீங்கள் பத்திரத்தை ஸ்கூட்டரிலேயே வைத்து விட்டீர்கள்.

அரவிந்தன் said...

என்ன சார் நீங்கள் சந்தித்த வக்கீலின் பெயரைத்தானே கூறினார்.

tbr.joseph said...

வாங்க ஜி!

பாதகஞ்செய்பவரைக் கண்டால்
நீ பயங்கொள்ள லாகாது பாப்பா;//

அது பாப்பாவா இருக்கும்போது வேணும்னா செய்யலாம். ஆனா இது பணம்படைத்தவர்களும், அதிகாரத்திலிருப்பவர்களும் ஆட்சி செய்கின்ற காலம்.

அவர்களை எதிர்க்க முயல்வது வீணே..

tbr.joseph said...

வாங்க மணியன்,

நல்ல காலம் நீங்கள் பத்திரத்தை ஸ்கூட்டரிலேயே வைத்து விட்டீர்கள்.//

அதற்கு அந்த வழக்கறிஞருக்குத்தான் நன்றி கூறவேண்டும்..

டி ராஜ்/ DRaj said...

ஒண்ணுக்கு ரெண்டு வக்கீல்களிட்ட காட்டி தானே வில்லங்கம் இல்லைன்னு உறுதி பண்ணிக்கிட்டீங்க. அப்போ ஒண்ணும் பிரச்சனை வரக்கூடாதே???? ஒருவேளை எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்து பிரச்சனை பண்றாங்களோ???

sivagnanamji(#16342789) said...

//எதிர்க்க முயல்வது வீனே//
என்ன சொல்ல வர்ரீங்க?
நிலபிரச்சினையில் காம்ப்ரமிஸா?

tbr.joseph said...

வாங்க ராஜ்,

வக்கீல்ங்களும் இதுல கூட்டான்னு கேக்கறீங்களா?

இல்லீங்க.. இது ஒரு தினுசான வில்லங்கம்.. வேணுக்குன்னே வம்பு பண்ண வந்த வில்லங்கம்..

tbr.joseph said...

என்ன சொல்ல வர்ரீங்க?
நிலபிரச்சினையில் காம்ப்ரமிஸா? //

அதில்லை நா சொல்ல வந்தது.. யதார்த்தத்தை சொன்னேன்..

காசு குடுத்து வாங்குன நிலத்துல காம்ப்ரமைஸ் எங்க வந்தது? ஆனா என் மைத்துனருக்கு என்னவோ அந்த ஐடியா இருந்திருக்கு..

துளசி கோபால் said...

டபுள் ஆக்ட் கொடுத்துட்டாரா வக்கீலு?

அப்பக் காசு போனது போனதுதானா?

sivagnanamji(#16342789) said...

நான் அவசரப்பட்டுவிட்டேனோ?
வழக்கறிஞர் பெயெரைத்தானே குமாஸ்தா சொன்னார்?அந்த வக்கீலுக்கு இந்த பிரச்சினையில் சம்பந்தம் உண்டா என்பது இனிதான்
தெரிய வேண்டும்
எத்தர்கள் யார் பெயரை வேண்டுமானலும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள்
------மச்சாதோவுக்கும் இவர் வக்கீலா
இருக்கக்கூடும்

tbr.joseph said...

வாங்க துளசி,

டபுள் ஆக்ட் கொடுத்துட்டாரா வக்கீலு?

அப்பக் காசு போனது போனதுதானா?//

ஒரு நாவல்னா கடைசி சாப்டர படிச்சிட்டு முழுசையும் படிக்கலாம்.ஆனா தொடர்ல அப்படி செய்ய முடியாதே:))

tbr.joseph said...

------மச்சாதோவுக்கும் இவர் வக்கீலா
இருக்கக்கூடும் //

அதென்னவோ சரிதான்.

G.Ragavan said...

ஜோசப் சார். இந்தத் தியேட்டர்காரங்க ரொம்ப அடவடிக்காரங்க. ஒங்க இடத்த வளைக்கப் பாத்தது போல...ஊருல நெறைய வளைச்சு வீடுகளக் கட்டி விட்டிருக்காங்க. இப்பவும் அதச் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ரொம்பச் செல்வாக்கு வெச்சுக்கிட்டுத்தான். இப்ப மந்திரியாயிருக்குற தூத்துக்குடி எம்.எல்.ஏ குடும்பமும் இப்பிடித்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. புது பஸ்டாண்டு பக்கத்துல எடம் வளச்சு ஓட்டல் கட்டுனது இப்பிடித்தான்னு ஊருக்குள்ள பேச்சு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இந்தத் தியேட்டர்காரங்க ரொம்ப அடவடிக்காரங்க//

உண்மைதான்.

ஒங்க இடத்த வளைக்கப் பாத்தது போல...ஊருல நெறைய வளைச்சு வீடுகளக் கட்டி விட்டிருக்காங்க. இப்பவும் அதச் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.//

இருக்கும். அதுக்கு துணை போகத்தான் காவல்துறை இருக்கே.

இப்ப மந்திரியாயிருக்குற தூத்துக்குடி எம்.எல்.ஏ குடும்பமும் இப்பிடித்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. //

இந்த அக்கா அடுத்த அஞ்சி வருஷத்துல தூ..டி யில பாதிய வளைச்சி போடாம இருக்கணும்.. ரொம்ப நாளைக்கப்புறம்லே வந்திருக்காக..

Sivaprakasam said...

<------
பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லிவைத்தவர் பின்னால் வருவதை முன்கூட்டியே உணர்ந்து சொல்பவர்கள் பெண்கள் என்பதை மனதில் வைத்து சொல்லியிருப்பார் போலிருக்கிறது ----->
நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா டோண்டு மாதிரி, "மனைவி சொல்லே மந்திரம்" என்று. எப்போதும் காரியத்தை ஆற்றுகிறவன்/ஆற்ற வைக்கப்படுகிறவன் ஆண்தான்.அதனால், அவனுக்கு உடனே யோசனை வராது.டென்சனாகவும் இருக்கும்.அதனல், உடனிருக்கும் மனைவிக்கு யோசனை நல்லா வரும். மேலும்,குடும்பத்தின் உறவுகள், மனைவியை பொறுத்தே அமைகின்றன. பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். என் விசயத்தில், என் மனைவி அவள் வீட்டு உறவினர்க்கு தொழிலில் முதலீடு பண்ணுவதற்க்கு பணம் கடனாகத் தந்துதான் ஆக வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தாள்.வட்டிக்குதான். இப்போ கடன் "வாராக் கடன்" ண்Pஆ-ல இருக்கு.இதுவே என் வீட்டாருக்கு கடன் தந்து இந்த மாதிரி ஆகியிருந்தால், "நாந்தான் அன்னைக்கெ சொன்னேன்ல பணம் திரும்பி வராது என்று...." சொல்லி அவள் புத்திசாலியாகி இருப்பாள். இப்போ சொல்லுங்க யார் புத்திசாலி என்று கனவனா, மனைவியா. நான் பெரும்பாலான் விசயங்களில் என் மனைவியிடம் யோசனை கேட்கிறேன் என்பது வேறு விசயம்.

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா டோண்டு மாதிரி, "மனைவி சொல்லே மந்திரம்" என்று. //

அவரும் பெருசு, நானும் பெருசு.. இளசுங்களுக்கு எப்படியோ பெருசுங்களுக்குத்தான் தெரியும் மனைவியின் சொல் மந்திரமா இல்லையா என்று.. என்ன டோண்டு சார்?

எப்போதும் காரியத்தை ஆற்றுகிறவன்/ஆற்ற வைக்கப்படுகிறவன் ஆண்தான்.அதனால், அவனுக்கு உடனே யோசனை வராது.டென்சனாகவும் இருக்கும்.அதனல், உடனிருக்கும் மனைவிக்கு யோசனை நல்லா வரும்.//

நூத்துக்கு நூறு சரி. அதுவுமில்லாம நாமளா ஒரு முடிவை எடுத்து அது பேக்ஃபயராயிரிச்சின்னா தப்பு முழுசையும் நாமளே ஏத்துக்க வேண்டிவரும். ஒரு மூளைக்கு ரெண்டு மூளை முட்டி மோதி ஒரு முடிவை எடுத்தா தப்பா போனாலும் உன்னாலதான், உன்னாலதான்னு ரெண்டு பேரும் சொல்லிக்கலாமே:))

"நாந்தான் அன்னைக்கெ சொன்னேன்ல பணம் திரும்பி வராது என்று...." //

அட இந்த டைலாக் எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கே.. எங்க? எங்க வீட்லதான்..

நான் பெரும்பாலான் விசயங்களில் என் மனைவியிடம் யோசனை கேட்கிறேன் என்பது வேறு விசயம். //

பாத்தீங்களா? அப்ப நீங்கதான் புத்திசாலி:)))

Sivaprakasam said...

நான் பெரும்பாலான் விசயங்களில் என் மனைவியிடம் யோசனை கேட்கிறேன் என்பது வேறு விசயம். //
ஒரு சின்ன திருத்தம்.தேவையான(சாதகமான) யோசனை மட்டும். இல்லாட்டி "என்கிட்ட நீங்க எதுவுமே சொல்றது இல்லே" என்ற பழி வருமே!

Sivaprakasam said...

<----
அவரும் பெருசு, நானும் பெருசு....... என்ன டோண்டு சார்?
---->
அவரையும் பெருசுங்க பட்டியல்லே சேர்த்துட்டீங்க? கோவிச்சுக்கப் போறார். அவர் தான் இளமையத்தான் இருக்கரதா சொல்றார்.

tbr.joseph said...

சிவப்பிரகாசம்,

அவர் கோச்சிக்கிட்டாலும் அதான உண்மை..

மனத்தளவுல நானும் சரி, மு.கவும் சரி இளமையாத்தான் இருக்கோம்!!