22 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 138

‘ஆமா சார், அவர் என் மைத்துனர்தான். அவர் உங்க ஸ்டேஷன்லதான் இருக்காரா?’ என்றேன்.

ஆய்வாளர் எரிச்சலுடன், ‘ஆமா சார். அவர் உங்க பேர சொன்னதாலதான் நா ஒங்கள கூப்ட வேண்டியதா போச்சி. வர்றீங்களா இல்லையா?’ என நான் உடனே, ‘இதோ இன்னும் அரை மணியில வரேன் சார்.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு என் மனைவியைப் பார்த்தேன்.

‘என்னங்க வரேன்னுட்டு பேசாம ஒக்காந்திருக்கீங்க? புறப்படுங்க. நானும் வரேன். வீட்டுக்கு போயி அப்பாவையும் கூட்டிக்கிட்டு போவோம்.’ என்ற மனைவியைப் பார்த்து புன்னகை செய்தேன்.

சற்று நேரம் முன்னால்தான் இந்த விஷயத்துல நாம இனி தலையிட வேண்டாங்க. எங்கப்பா பேசினது எனக்கே பிடிக்கலை.. அவங்களாச்சி அந்த நிலம் ஆச்சி என்று சொன்னவர் இப்போது அண்ணனுக்கு ஆபத்து என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்கே வருகிறேன் என்று நிற்கிறார்.

‘அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ போய் ஒங்கப்பாக்கிட்ட ஒன்னுக்கு ரெண்டா சொல்லி.. அவர் ஏற்கனவே ஒரு ஹார்ட் பேஷண்ட்.. ஒன்னு கெடக்க ஒன்னு யிரும். நான் போய் ஒங்கப்பா ஃப்ரெண்ட், வக்கீல பார்த்து பேசிட்டு.. வேணும்னா அவர கூப்டுக்கிட்டு போரேன். எங்க வக்கீல் சரிவர மாட்டார்.’ என்று எதற்கும் இருக்கட்டும் என்று பத்திரங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

வழக்கறிஞரின் வீட்டையடைந்தபோது என்றைக்கும் இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாசலையொட்டியிருந்த அவருடைய அலுவலக அறையிலிருந்த ஒரு சிப்பந்தியிடம் என்னுடைய அடையாள அட்டையை கொடுத்தனுப்பி அவசரம் என்று கூறும்படி கேட்டேன். அவரும் அடுத்த நிமிடமே வந்து, ‘ஒங்கள ஐயா வரச்சொன்னார் சார்.’ என்றார்.

நான் வழக்கறிஞருடைய அறைக்குள் நுழைந்து நான் வந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறினேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரம் என்ன கூறுவதென தெரியாமல் யோசித்தார். பிறகு அதே காவல்நிலையத்திலிருந்த சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை ஆய்வாளரை அழைத்து விசாரித்தார்.

சிறிது நேரம் தொலைப்பேசியில் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு என்னை பார்த்த பார்வையிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறதென்பது எனக்கு விளங்கியது.

நான் பதற்றத்துடன் ‘என்ன சார். ஏதாவது பிரச்சினையா?’ என்றேன்.

‘ஆமாம் சார். நம்ம ------------- (என் மைத்துனர்) தேவையில்லாம நேரடியா போய் பிரச்சினையில மாட்டிக்கிட்டார்.’

‘என்னன்னு சொல்லுங்க சார். காலையில நான் போய் என் Qப்ரெண்ட்ஸ பார்த்துட்டு வரேன்னுதான போனார்?’

‘ஆமாM சார். அவர் ஃப்ரெண்ட்சோட போயி நிலத்துல போட்டிருந்த வேலிய பிச்சி எறிஞ்சிருக்கார். எதிர்த்த வீட்லருக்கற ஆள் ஒடனே அந்த தியேட்டர் ஓனருக்கு ஃபோன் பண்ண அந்த ஆள் தோனிக்கார பயல்களோட போயி ஒங்க மச்சானையும் அவர் கூட வந்த ஆளுங்களயும் அடிச்சதுமில்லாம அவருக்கு தெரிஞ்ச இந்த எஸ்.ஐ. வச்சி ஸ்டேஷனுக்கு பிடிச்சிக்கிட்டு போயிருக்காண்ங்க. ஒங்க மச்சான் ஒங்க பேரையும் போஸ்ட்டையும் சொன்னதும் எஸ்.ஐ. யோசிச்சிருக்கார்.  இன்னும் கேஸ் புக் பண்ணலையாம். அதான் ஒங்கள கூப்ட்டு அனுப்பியிருக்கார்.’

நான் சற்று நேரம் யோசித்தேன். ‘ சார். நம்ம நிலத்துல அந்த ஆள் அத்துமீறி வேலியடிச்சது குத்தமில்லையாமா? அத இவர் பிரிச்சியெறிஞ்சதுதான் குத்தமாம்மா? என்ன சார் அக்கிரம்?’ என்றேன். கோபத்தில் என்னுடைய குரல் தடுமாற வழக்கறிஞர், ‘சார் கோபப்படாதீங்க. கோபத்துல நீங்களும் போய் ஏதாவது ஏடாகூடமா பேசிறாதீங்க. நிதானமா யோசிங்க. அந்த தியேட்டர்காரனுக்கு ரொம்ப செல்வாக்கு இருக்கு இந்த ஊர்ல.. போலீஸ் எல்லாம் அந்த ஆள் கையிலதான்..’ என்றார்.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன சார் சொல்ல வரீங்க? அப்ப இதுக்கு என்னதான் வழி?’

அவர் அவருடைய அறையிலிருந்த வேறு சில வாடிக்கையாளர்களை சிறிது நேரம் வெளியே காத்திருங்கள் என்று அனுப்பிவிட்டு, ‘மிஸ்டர் ஜோசப். நான் ஒங்க கூட வரணும்னா வரேன். ஆனா இப்பத்தைக்கு அது தேவையில்லைன்னு நினைக்கிறேன். நீங்க ஒரு பேங்க் மேனேஜர். ஒங்கக் கிட்ட ஜாக்கிரதையாத்தான் நடந்துப்பார். அந்த எஸ்.ஐ. படு உஷாரான ஆளுதான். என்ன கொஞ்சம் அடாவடியா பேசுவார். சரியா விசாரிக்காம எதையும் செய்ய மாட்டார். அதனாலதான் இன்னும் கேஸ் புக் பண்ணாம இருக்கார்.  நீங்களும் நிதானமா என்ன ஏதுன்னு விசாரிங்க. அவர் ஏதாச்சும் காம்ப்ரமைசா போங்கன்னு சொன்னா யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துருங்க. நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.

எனக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. என்னதான் சட்டம் பேசினாலும் வழக்கறிஞர்கள் அனாவசியமாக நகரிலிருந்த பணமுதலைகளையும், அரசியல்வாதிகளையும் காவல்துறையில் உள்ளவர்களையும் விரோதித்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்பதை இரண்டு வழக்கறிஞர்களுடன் பழகியதிலிருந்தே தெரிந்து வைத்திருந்தேன். இவரை அழைத்துக்கொண்டு சென்று இவர் அவர் முன்னிலையில் வைத்தே எதுக்கு சார் வம்பு, காம்ப்ரமைஸ் பண்ணிக்குங்களேன் என்று கூறிவிட்டால் நம்மால் ஒன்றும் பேச முடியாமல் போய்விடுமே என்றும் நினைத்தேன்.

‘சரி சார்.’ என்று கூறிவிட்டு பத்திரங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

‘அந்த பத்திரக்கட்ட ஸ்கூட்டர்லயே வச்சிட்டு போங்க சார். ஸ்டேஷனுக்குள் கொண்டு போயிராதீங்க. அதுதான் இப்ப ஒங்க கிட்டருக்கற ஒரே ஆதாரம். போலீஸ்காரங்கள நம்ப முடியாது. எதையாச்சும் சொல்லி ஒங்கக்கிட்டருந்து அத பறிக்க பாப்பாய்ங்க.. அது வக்கீல்கிட்ட இருக்கு. வேணும்னா அவர் ஆஃபீஸ்ல வச்சி யார் வேணும்னாலும் பார்த்துக்கலாம்னு சொல்லிருங்க. வேணும்னா எம் பேரை யூஸ் பண்ணிக்குங்க.’ என்றார் என்னுடைய வழக்கறிஞர்.

‘சரி சார். அப்படியே செய்யறேன். ஒங்க அட்வைசுக்கு நன்றி’ என்று கூறிவிட்டு என்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு அடுத்த பத்து நிமிடத்தில் காவல் நிலையத்தை அடைந்தேன்.

எப்போதும் போலவே காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. தூத்துக்குடி நகரில் அந்த நிலையம்தான் மைய நிலையம் என்று அதை பார்த்தாலே தெரிந்தது.

நிலையத்திற்கு முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான வாகனங்கள். வழக்கில் பிடிபட்டு கேட்பாரற்று கிடந்தன. பல வாகனங்களில் சக்கரங்களைத்தவிர உருப்படியாய் ஒன்றும் காணவில்லை. எல்லாம் நம்முடைய காவல்துறையினரின் கைங்கரியம் என்று நினைக்கிறேன். வழக்கு முடிந்து வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நேரத்தில் பழைய இரும்புக்கு போடக்கூடிய நிலையில்தான் வாகனம் ஒப்படைக்கப்படும்போலிருக்கிறது.

நான் என்னுடைய வாகனத்தை நிலையத்திலிருந்து சற்று தள்ளியே நிறுத்தினேன். நான் கொண்டுவந்திருந்த பத்திரத்தை வாகனத்தின் முன்னாலிருந்த பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு நிலையத்திற்குள் நுழைந்து என்னை அழைத்திருந்த துணை ஆய்வாளருடைய பெயரைக் கூறினேன். அதற்குள் அவருடைய அறைவாசலில் கிடந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்த என்னுடைய மைத்துனர் என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தார்.

‘மச்சான் நீங்க அவர் கூப்டதும் வரலைன்னும் ரொம்பவும் எரிச்சலோட இருக்கார். ஒங்க மச்சான் என்னவே பெரிய கலெக்டர் மாதிரி பிஹேவ் பண்றாருன்னு கேட்டுக்கிட்டே இருக்கார்.’ என்றார்.

நான் அவருக்கு மறுமொழி கூறுவதற்கு முன் அறையினுள் இருந்து வெளியே வந்த  ஆய்வாளர் என்னையும் என்னுடைய மைத்துனரையும் பார்த்துவிட்டு, ‘என்னங்க இவர்தான் ஒங்க மச்சானா? கூட்டிக்கிட்டு வாங்க.’ என்றாவறு அவருடைய அறைக்குள் திரும்பிச் சென்றார்.

அவருடைய மேசைக்கு அருகிலிருந்த வேறொரு இருக்கையில் வயதான ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததுமே பழைய கறுப்பு வெள்ளை படங்களில் வருவாரே ஒரு கணக்குப் பிள்ளை அவருடைய நினைவு வந்தது. அந்த திரையரங்கு உரிமையாளரின் கணக்குப் பிள்ளை அல்லது குமாஸ்தாவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இருக்கையில் அமர்ந்த காவல்துறை ஆய்வாளர் என்னைப் பார்த்து, ‘என்ன சார் சாவகாசமா வர்றீங்க? என்ன சொன்னார் ஒங்க வக்கீல்? போகாதீங்கன்னு சொன்னாரா?’ என்றார் ஏளனத்துடன்.

‘கொஞ்சம் அடாவடியா பேசுவார். நீங்களும் கோபப்பட்டு ஏடாகூடமா ஏதும் பேசிறாதீங்க சார்’ என்ற என்னுடைய வழக்கறிஞரின் அறிவுரை நினைவுக்கு வரவே நான் பொறுமையுடன், ‘என்னெ வேறென்ன பண்ண சொல்றீங்க சார்? நீங்க திடீர்னு கூப்டு வாங்கன்னா நா என்னேன்னு நினைக்கிறது? அதான் வந்திட்டேன்லே, என்ன கேக்கணுமோ கேளுங்க.’ என்றேன்.

‘ஒங்க மச்சான் என்ன பண்ணாருன்னு தெரிஞ்சிருக்குமே. அவர் பண்ண அடாவடித்தனத்துக்கு புடிச்சி உள்ள போட்டிருக்கணும். நம்ம --------- மச்சாது அய்யாத்தான் (தியேட்டர் உரிமையாளரின் பெயர்) கேஸ் புக்க பண்ண வேணாம் காம்ப்ரமைஸ் பண்ணி விட்டுருங்க சார் போறும்னார். அதனாலதான் பொறுமையா ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கேன்.’ என்றார்.

அவருடைய வலப்புறத்தில் அமர்ந்திருந்த பெரியவரும் பெருந்தன்மையுடன் ஆமாம் என்று தலையை ஆட்டினார். நான் என் மைத்துனரைப் பார்த்தேன். பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் காவல்நிலையத்திலேயே அமர்ந்திருந்த களைப்பு நன்றாகத் தெரிந்தது. அவர் முகத்திலும் இதிலிருந்து விடுபட்டால் போறும் என்பது தெரிந்தது.

ஆனாலும் நான் அதற்கு நேர்மாறான மனநிலையில் இருந்தேன். இது நான் பார்த்து வாங்கிய நிலம். பத்திரத்தைப் பொறுத்தவரையில் எந்த வில்லங்கமும் இல்லை என்று நகரத்தின் இரு மூத்த வழக்கறிஞர்களால் சான்று பகரப்பட்ட நிலம். முழுவிலையும் கொடுத்து சட்டபூர்வமாக பத்திரம் தயாரித்து பதிவு செய்யப்பட்டிருந்த நிலம். இதில் அத்துமீறி நுழைந்து வேலியடித்தவருடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தீர்மானத்துடன் அவருடைய மேசைக்கு முன்னாலிருந்த இருக்கைகளில் ஒன்றில் நான் அமர்ந்துக்கொண்டு அதுவரை நின்றுக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனரையும் என்னருகில் அமரச் செய்தேன்.

பிறகு ஆய்வாளரைப் பார்த்து, ‘நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு விளங்கல சார். இந்த நிலம் நான் முன்னால நின்னு எங்க பேங்கோட அட்வகேட்ட கன்சல்ட் பண்ணி முழு பர்சேஸ் ப்ரைசுக்கும் பத்திரம் போட்டு ரெஜிஸ்டர் பண்ண நிலம். இதுல ஒருத்தர் அத்துமீறி ராத்திரியோட ராத்திரியா வந்து வேலிய அடிச்சிட்டு போயிருக்கார். அது நீங்க சொன்னீங்களே --------- மச்சாது அய்யா.. அவராத்தா இருக்கும்னு இப்ப கன்ஃப்ரம்டா தெரியுது.. இப்ப உங்கக்கிட்ட அவர் மேல என் மச்சான்  ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுப்பார். வாங்கிக்கறீங்களா?’ என்றேன் நிதானமான குரலில்..

தொடரும்..

21 comments:

arunagiri said...

vida maateengalae...vakeel aiya solliththaana anuppinaaru.

Krishna said...

போடு, போடு,அப்படிப் போடு.

படித்த, நல்ல பதவியில் இருந்து கொண்டு, அதிலும் நேர்மையாய் நடந்துகொண்டிருக்கும் நீங்க, இப்படி செய்யலேன்னா, வேற யாரு செய்யறது.

Krishna said...

மச்சானுக்கு, விழி பிதுங்கிட்டிருக்குமே?

sivagnanamji(#16342789) said...

ஹா! இப்பதான் சரியான track லெ
போக ஆரம்பிச்சிருக்கீங்க...
உங்க மச்சானே இதை செஞ்சிருக்கணும்

துளசி கோபால் said...

ஏங்க டிபிஆர்ஜோ,

அப்பெல்லாம் போலீஸ் நடவடிக்கை எல்லாம் எப்படி இருந்துச்சு? இப்ப சினிமாலே காமிக்கறாங்களே அந்த
மாதிரி அடாவடியா இல்லே மட்டு மரியாதையாவா?

tbr.joseph said...

வாங்க arunagiri,

வக்கீல் கோபப்பட்டு காரியத்த கெடுத்திராதீங்கன்னு சொன்னது என்னவோ உண்மைதான்.

ஆனா அந்த பெரியவரோட ஆணவமான பேச்சும் நடவடிக்கையும்தான் என்ன உசுப்பி விட்டிருச்சின்னு நினைக்கிறேன்..

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

போலீஸ் அதிகாரிகளின் முன் நம்முடைய பதவிக்கெல்லாம் பெரிசா எந்த மதிப்பும் இருக்காதுங்க..

அவங்கள பொறுத்தவரைக்கும் அவங்க வச்சதுதான் சட்டம்.

எனக்கு தெரிந்த அதிகாரிகள், அதாவது வீட்டில் மிகவும் மென்மையானவர்களாக தெரிபவர்கள்கூட போலீஸ் உடையை அணிந்தவுடனே முற்றிலுமாக மாறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

tbr.joseph said...

கிருஷ்ணா,

என்னோட மைத்துனருடைய அணுகுமுறை இந்த விஷயத்தில் ஒரு குழப்பமாகவே இருந்தது.. நாளைய பதிவைப் படித்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

Krishna said...

பதவி, அவர்களுக்கு நம் மேல் மதிப்பு கொடுக்கும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை சார். அது, உங்கள் தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்குமே, அதைச் சொன்னேன்.

tbr.joseph said...

தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்குமே//

நீங்க சொல்றது உண்மைதான். ஒரு வங்கி மேலாளர்மேல் அத்தனை எளிதாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது என்ற எண்ணம் இருந்தது உண்மைதான்..

அத்தோட அது என்னுடைய சொந்த விவகாரம் இல்லையே.. எனக்காக நான் போராடும் நேரத்தில் இருக்கும் மனதைரியத்தைவிட வேறொருவருக்காக போராடும்போது சற்று கூடுதலாகவே இருக்கும் அல்லவா?

G.Ragavan said...

ம்ம்ம்ம்...எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு...ஆளு யாருன்னு....சரி விடுங்க..

நீங்க கடைசீல கேட்ட கேள்வி நிச்சயமா பிரச்சனைல கொண்டு வந்து விட்டிருக்குங்கறதுல சந்தேகம் இல்லை. பிரச்சனை கண்டிப்பா பெருசாயிருக்கும்.

எனக்குத் தெரிஞ்சி போலீஸ் யார் கிட்ட நல்லபடியா நடந்துக்குவாங்கன்னா....அவங்களுக்கு வேண்டியவங்க கிட்ட. மத்தவங்ககிட்ட அப்படி நடந்துக்க மாட்டாங்க. இந்தியாவுல இப்பிடி ஒரு கொடுமை. கலைவாணர் ஒரு படத்துல அம்பதுல இருந்து அறுபதுக்குப் போற மாதிரி கனவு காண்பாரு. அதுல போலீஸ்காரங்க வேலையில்லாம சமூகசேவை செய்வாங்க.....ம்ம்ம்ம்...அவரோட கனவு நனவே ஆகாது போல.

tbr.joseph said...

வாங்க ஜி!

நான் போனது சரியான ட்ராக்காங்கறது காரியம் முடியறத பொறுத்து இருக்கு..

நல்லவிதமா முடிஞ்சா நீங்க செஞ்சது ரொம்பவும் சரின்னு சொல்வார் என் மைத்துனர். வில்லங்கமா முடிஞ்சிருச்சின்னா நீங்க அப்படி பேசினப்பவே நெனச்சேன்னு சொல்வார்..

பொறுத்திருந்து பாருங்க..

அரவிந்தன் said...

அப்படி போடு அறுவாள!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

எனக்குத் தெரிஞ்சி போலீஸ் யார் கிட்ட நல்லபடியா நடந்துக்குவாங்கன்னா....அவங்களுக்கு வேண்டியவங்க கிட்ட. மத்தவங்ககிட்ட அப்படி நடந்துக்க மாட்டாங்க.//

சரியா சொன்னீங்க..

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

அப்படி போடு அறுவாள! //

அறுவா நம்ம மேல விழாம இருந்தா சரி:)

tbr.joseph said...

வாங்க துளசி,

சினிமாவுல காட்டுற அளவுக்கு மோசமில்லைதான்.

ஆனாலும் மோசம்தான்.

ஜி.ரா. பின்னூட்டத்த பாருங்க. அதுதான் சரி.

Sivaprakasam said...

அந்த கடைசி வாக்கியம் சூப்பர்

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

படிக்கும்போது சூப்பராத்தான் தெரியும். ஆனா அது அந்த எஸ்.ஐ. எப்படி வெறுப்பேத்தியிருக்கும்னு யோசிச்சி பாருங்க..:(

sivagnanamji(#16342789) said...

காரியம் முடியறத பொறுத்து.......//
நல்ல படியாக முடியட்டும்...

Sivaprakasam said...

<-------
வாங்க சிவப்பிரகாசம்,

படிக்கும்போது சூப்பராத்தான் தெரியும். ஆனா அது அந்த எஸ்.ஐ. எப்படி வெறுப்பேத்தியிருக்கும்னு யோசிச்சி பாருங்க..:(
---->
உண்மைதான்.அனுபவப்பட்டவங்களுக்குதான் வலி தெரியும். ஆனால் இதைவிட வேறு என்ன சொல்லியிருக்க முடியும். இல்லையெனில், அந்த நிலம் அந்த தியேட்டர் முதலாளிக்கு சொந்தம் என்று நீங்களே ஒப்புக்கொன்டபடி ஆகிவிடாதா?

tbr.joseph said...

இல்லையெனில், அந்த நிலம் அந்த தியேட்டர் முதலாளிக்கு சொந்தம் என்று நீங்களே ஒப்புக்கொன்டபடி ஆகிவிடாதா? //

அப்படி நினைத்துத்தான் நான் அன்று ஆவேசமடைந்தேன். ஆனால் இப்போது நினைத்துப்பார்க்கும்போது என்னுடைய அன்றைய கோபத்தால் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று தோன்றுகிறது.. தொடர்ந்து படியுங்கள், விளங்கும்.