19 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 137

‘நீங்க போங்க சார். நான் ஒங்க பின்னாலேயே வரேன்.’ என்றேன் காவலரைப் பார்த்து.

அவர் சற்று தயங்கி, ‘சரி சார். நான் சைக்கிள்லதான் வந்திருக்கேன். நீங்க நம்ம கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு பக்கத்துலருக்கற ஸ்டேஷனுக்கு வந்துருங்க.’ என்று கூறிவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறி கிளம்பினார்.

நானும் என் மனைவியும் வீட்டினுள் செல்ல இருந்த நேரத்தில் கீழ் போர்ஷனில் வசித்தவர் வெளியே வந்தார்.

‘ஏறக்குறைய ஒரு மணி நேரமா காத்துக்கிட்டிருந்தார் சார். நானும் நீங்க போங்க சார் அவர் வந்ததும் சொல்றேன்னு சொன்னேன், கேக்கல. சரி வீட்டுக்குள்ளாற வந்து ஒக்காருங்கன்னு சொனேன். அதயும் கேக்காம இங்கனயே நின்னுக்கிட்டிருந்தார். என்ன சார் ஏதாவது பார்ட்டிங்க விஷயமா?’

எனக்கே தெரியாதிருக்கும் விஷயத்தைப் பற்றி இவரிடம் என்ன சொல்ல என்று நினைத்துக்கொண்டு நின்றேன் சிறிது நேரம். பிறகு, ‘எனக்கே தெரியலை சார். போய்த்தான் பாக்கணும். இன்னைக்கி காலைலருந்து ஒரு கோல்ட் பார்ட்டி பிரச்சினை பண்ணிக்கிட்டே இருந்தார். அவர்தான் ஏதாச்சும் போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டாரோன்னு தெரியலை.’ என்றேன்.

என்னுடைய பதிலில் அவர் திருப்தியடையவில்லையென்பது அவருடயை முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ஒருவேளை நானே ஏதாவது தவறு செய்துவிட்டு அகப்பட்டுக்கொண்டிருப்பேன் என்று நினைத்திருந்தாரோ என்னவோ. வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்திருந்த சொத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவருக்கு பொழுது போக வேண்டாமா? நாள் முழுவதும் ஈசிச்சேரில் காலை நீட்டி அமர்ந்துக்கொண்டு வங்கிக்கு வருவோரையும் போவோரையும் பார்த்து போரடித்துவிட்டதோ என்னவோ..

‘என்னங்க நீங்க வரீங்களா இல்ல நா மேல போட்டுமா?’ என்ற என் மனைவியின் குரல் கேட்டதும், ‘இரு நானும் வரேன்.’ என்றவாறு படியேறி மேலே சென்றேன்.

தன்னுடைய அலுவல்களை முடித்துக்கொண்டு வெளிவாசற் கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பவிருந்த என்னுடைய உதவி மேலாளரும் தலைமைக் குமாஸ்தாவும் எங்களைப் பார்த்ததும் கோரசாக, ‘சார் ஒரு கான்ஸ்டபிள் வந்து ரொம்ப நேரம் காத்துக்கிட்டிருந்தாரே.. பாத்தீங்களா?’ என்றனர்.

நான் ஆமாம் என்று தலையை அசைக்க தலைமைக் குமாஸ்தா, ‘சார் நா வேணும்னா உங்கக் கூட வரட்டுமா? அந்த கோல்ட் பார்ட்டிதான் வேணும்னே ஏதாச்சும் செஞ்சிருப்பார்னு நினைக்கிறேன். நீங்க தனியா போவாதீங்க சார்.’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே.. அதெல்லாம் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரு பேங்க் மானேஜர்மேல இவங்களால அவ்வளவு ஈசியா ஆக்ஷன் எடுத்துர முடியுமா என்ன? நா போறதுக்கு முன்னால நம்ம லீகல் அட்வைசர கேட்டுட்டுத்தான் போவேன். நீங்க கவலப்படாம போங்க. தேவைப்பட்டா ஃபோன்ல கூப்டறேன்.’ என்று பதிலளித்துவிட்டு குழப்பத்துடன் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவியை அழைத்துக்கொண்டு பின்னாலிருந்த என்னுடைய குடியிருப்பை நோக்கிச் சென்றேன்.

வீட்டு வாசலில் களைப்புடன் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னுடைய மூத்த மகள் எங்கள் காலடி சப்தம் கேட்டதும் எழுந்து கோபத்துடன், ‘என்ன டாடி இது? எவ்வளவு நேரம் இங்கயே ஒக்காந்திருக்கிறது? பசி வேற வயித்த கிள்ளுது. கதவ திறந்து ஏதாச்சும் தாங்க.’ என நான் பரபரப்புடன் கதவைத் திறந்து அலமாரியில் எப்போதும் தயாராக இருக்கும் தின்பண்டத்தை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு என் மனைவியின் கையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னுடைய இளைய மகளை அள்ளி தூளியில் கிடத்தினேன்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து கிளம்பினேன். ‘என்னங்க, எதுக்கும் வீட்டுக்கு போய் அப்பாவையும் கூட்டிக்கிட்டு போங்களேன். இல்லன்னா அண்ணனையாச்சும் கூட்டிக்கிட்டு போங்க. தனியா போனீங்கன்னா நீங்க எதையாச்சும் சொல்லிட்டு மாட்டிக்கிருவீங்க.’ என்ற மனைவியைப் பார்த்தேன்.

‘என்ன நீ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் ஒங்கப்பா பேசினத சொல்லி வருத்தப்பட்டே. இப்ப போய் அவங்கள கூட்டிக்கிட்டு போங்கங்கறே? அதெல்லாம் ஒன்னும் வேணாம். சும்மா ஏதாச்சும் என்க்வயரியா இருக்கும். நான் நம்ம வக்கீல்கிட்ட் போன்ல கேட்டுட்டுத்தான் போவேன். நீ பயப்படாம கதவ பூட்டிக்கிட்டு இரு. நான் வெளிவாசல் கதவ பூட்டிக்கிட்டு போறேன். வர லேட்டாவும்னா ஃபோன் பண்றேன்.’ என்று சமாதானப்படுத்திவிட்டு கிளம்பினேன்.

என்னுடைய அலுவலக அறையிலிருந்து எங்கள் வங்கி சட்ட லோசகர் அலுவலகத்திற்கு டயல் செய்து அவர் எடுத்ததும் விஷயத்தைக் கூறினேன்.

அவர் உடனே, ‘சார் நீங்க ஒன்னும் போகத்தேவையில்லை. இந்த மாதிரி சாதாரண என்க்வயரிக்கெல்லாம் ஒரு அரசு அதிகாரிக்கு இணையான போஸ்ட்லருக்கற பேங்க் மேனேஜர போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்டற உரிமை ஒரு சாதாரன எஸ்.ஐக்கு கிடையாது. நா அவர்கிட்ட பேசிட்டு ஒங்கக் கிட்ட சொல்றேன். அப்புறமா போனா போறும்.’ என்றார்.

இதேதடா வம்பு என்று சிறிது நேரம் யோசித்தேன். என்னுடைய வழக்கறிஞரைப் பற்றி ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். அவர் தூத்துக்குடி நகராட்சிக்கும் சட்ட ஆலோசகராக இருந்தவர். நகரின் பிரபல வழக்கறிஞர்களு ஒருவர். என்னுடைய வங்கிக்கு வாடிக்கையாளர்களாகவிருந்த பலர் அவருக்கும் வாடிக்கையாளர்களாகவிருந்தனர். அதன் அடிப்படையில் சில சமயங்களில் எங்களுடைய வங்கியை விட எங்களுடைய வாடிக்கையாளர்கள் சார்பாகவே அவர் வாதிடுவதை பார்த்திருக்கிறேன். ஆகவே ஒரு சில சந்தர்ப்பங்களில் எனக்கும் அவருக்கும் தீவிர கருத்து வேறுபாடுகளும் நான் தூத்துக்குடிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்டிருந்தது. அத்துடன் நேரத்திற்கு ஒன்றாக, சில சமயங்களில் அவருடைய முந்தைய கருத்துக்கு நேர் எதிரான கருத்தையும் சிறிது இடைவெளிக்குப் பிறகு அளிக்கக் கூடிய அளவுக்கு முரணானவர் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன்.

இத்தகைய மனிதருடயை அறிவுரையை நம்பி  காவல்நிலையத்திற்கு செல்லாமல் இருந்து பிறகு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து நான் அன்று காலையில் சந்தித்திருந்த என்னுடைய மாமானாருடைய நண்பரான வழக்கறிஞரையும் தொடர்புகொண்டு விஷயத்தை விளக்கினேன்.

அவரும், ‘ஒங்க வக்கீல் சொல்றது சரிதான் சார். அப்படியே ஏதாச்சும் என்க்வயரின்னா என்ன என்க்வயரி, அதுல உங்க பங்கு என்னன்னெல்லாம் சொல்லிட்டுத்தான் கூப்டணுமே தவிர பொத்தாம் பொதுவா ஒருத்தர, அதுவும் ஒரு பேங்க் மேனேஜர ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பற அதிகாரம் ஒரு எஸ்.ஐக்கு இல்ல சார். எதுக்கும் ஒங்க வக்கீல் அவர்கிட்ட பேசிட்டு சொல்ற வரைக்கும் போவேணாம். அதனால ஏதாச்சும் பிரச்சினை வந்தா சொல்லுங்க. நாங்க எதுக்கு இருக்கோம், பாத்துக்கறோம். தைரியமா ஒங்க வேலைய பாருங்க.’ என்று அறிவுறுத்தவே நான் என்னுடைய குடியிருப்புக்கு திரும்பிச் சென்று சிறிது நேரம் என் மகளுடன் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன்.

‘என்னங்க நீங்க போலையா?’ என்ற மனைவியிடம் என் வழக்கறிஞர் கூறியதை சொன்னேன்.

‘அதானே.. என்ன ஏதுன்னு கேக்காம சொன்ன ஒடனே ஓடணுமா என்ன? நா சொன்னா நீங்க கேக்கவா போறீங்கன்னுதான் நானும் சும்மா இருந்தேன்.’ என்று சாதுரியமாக பேசிய என் மனைவியைப் பார்த்து புன்னகைத்தேன்.

சமயத்துக்கு ஏத்தாமாதிரி பேசறதுல ஆண்களைவிட பெண்கள் பயங்கரமான ஆளுங்க.. என்ன சொல்றீங்க?

அரைமணி நேரமாகியும் காவல்நிலைய ஆய்வாளரிடம் பேசிவிட்டு அழைக்கிறேன் என்று கூறிய என்னுடைய சட்ட ஆலோசகரிடமிருந்து  அழைப்பேதும் வராமல் போகவே நான் பதற்றத்துடன் வீட்டிலிருந்த தொலைப்பேசியில் அவரை மீண்டும் அழைத்தேன்.

அவரோ கூலாக, ‘டென்ஷாகாம இருங்க சார். அவர் லைன் பயங்கர பிசியா இருக்கு. ஒருவேளை இப்படி யாராச்சும் கூப்டுவாங்கன்னு தெரிஞ்சி ரிசீவர எடுத்துக் கீழ வச்சிட்டாரோ என்னவோ. இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ட்ரை பண்ணி பேசிட்டு சொல்றேன். அவசரப்பட்டு நாமளா போயி வம்புல மாட்டிக்க வேணாமேன்னுதான் சொல்றேன். இந்தாளுங்கள நம்பவே முடியாது.. நாமதான் முன்னெச்சரிக்கையா இருக்கணும்.’ என்று ஒரு லெக்சர் அடித்தார்.

சரி.. என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லாததால் இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க தயாரானேன்.

அதற்கு தேவையில்லாமல் அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே என் தொலைபேசி அலறியது.

எடுத்ததும் எதிர்முனையிலிருந்து, ‘ஏன் சார். நாங்கல்லாம் கூப்டா வரமாட்டீங்களோ? அதுக்கும் ஒங்க வக்கீல்கிட்ட கேட்டுட்டுத்தான் வருவீங்களோ?’ என்று வந்த குரலில் இருந்த கேலிக்கு பின்னால் ஒலித்த மிரட்டலையும் உணர்ந்த நான், ‘சேச்சே அப்படியெல்லாம் இல்ல சார்.’ என்றேன்.

‘பின்ன என்ன சார்.. கூப்ட்டா வரவேண்டியதுதானே? பேங்க் மேனேஜர்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? நா கூப்டது ஒங்க பேங்க் விஷயமா இல்லே.. அத முதல்ல புரிஞ்சிக்குங்க.’

அவர் எதிர்முனையிலிருந்து பேசியது ஒலிவாங்கிக்கு வெளியே ஒலித்ததால் அதைக் கேட்ட என் மனைவியும் மிரண்டுபோய் அடுக்களையிலிருந்து, ‘என்னங்க.. ஏன் இப்படி கத்தறாரு?’ என்றவாறு ஓடிவந்தார். நான் ஒன்னுமில்லை பேசாம கேள் என்று வாயசைத்துவிட்டு..

‘ஆஃபீஸ் விஷயம் இல்லேன்னா, வேறென்ன விஷயமா கூப்ட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?’ என்றேன்.

‘ஏன் சொல்லாட்டா வரமாட்டீங்களோ?’ அவருடைய குரலில் இருந்த மிரட்டல் தொணி என் மனைவியை சற்று அதிகமாகவே மிரள வைத்தது.

‘அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. சொன்னீங்கன்னா நல்லாருக்கும், அதுக்குத்தான்.’ என்றேன் பணிவுடன்.

‘------------- ஃபெர்னாண்டோங்கறது யார் சார்? இவர கேட்டா ஒங்க பிரதர் இன் லாங்கறார்.’

மறுமுனையிலிருந்து ஒலித்த என்னுடைய மைத்துனரின் பெயரைக் கேட்டதுமே எனக்கு பகீர் என்றது. என் மனைவியும் பதறிப் போய், ‘என்னங்க அண்ணனப் பத்தி கேக்கறாரு? அப்ப அந்த நில விஷயமாத்தான் போலருக்கு.. இதென்னங்க சோதனை..’ என்றார். அதற்குள் அவருடைய கண்கள் இரண்டும் கண்ணீரால் நிறைய இதைப் பார்த்த என் மகளும் எழுந்து, ‘என்னம்மா மாமாவுக்கு என்ன?’ என்றவாறு என் மனைவியின் கால்களைக் கட்டிக்கொண்டு கேட்க நான் என்ன செய்வதென தெரியாமல் ஒரு நிமிடம் திணறிப்போனேன்.

தொடரும்..
13 comments:

துளசி கோபால் said...

//சமயத்துக்கு ஏத்தாமாதிரி பேசறதுல ஆண்களைவிட பெண்கள் பயங்கரமான
ஆளுங்க.. என்ன சொல்றீங்க?//


என்னங்க, இப்படி சைக்கிள் கேப்லே 'ட்ரக்' ஓட்டிட்டீங்களே(-:

ஹூம்..... நல்லது சொன்னா அப்படி ஈஸியாக் கேக்கற ஆளுங்களா நீங்கெல்லாம்? ( மொத்த ஆணினமும்)

இப்பப் பாருங்க, உங்களுக்கோ, அண்ணனுக்கோ எதாவதுன்னா எப்படி கண்ணுலே துக்கம் வந்துருது உங்க
வீட்டம்மாவுக்கு ( மொத்தப் பெண்ணினமும்)

tbr.joseph said...

வாங்க துளசி,

அந்த சமயதுக்கு...

அது ஒங்களுக்காகவே வச்ச பஞ்ச் வரிகள்.

கரெக்டா அதயே புடிச்சி கமெண்ட் (சரியான) அடிச்சிட்டீங்க..

துளசியா கொக்கா..:)

arunagiri said...

அய்யா இந்த மாதிரி சீட் நுனிக்குக் கொண்டு வந்து லாடம் கட்டி நிறுத்துவதில் உங்களுக்கு என்ன ஒரு sadistic pleasure-ஓ தெரியவில்லை. நீங்கள் எல்லாம் வாரப்பத்திரிகையில் தொடர் எழுதலாமுங்க, பிச்சுக்கிட்டுப் போவும்.

tbr.joseph said...

வாங்க அருணகிரி,

sadistic pleasurஆ..

சேச்சே அப்படியெல்லாம் இல்லீங்க.

நான் சாதாரணமா வேர்ட்ல் நாலு பக்கத்துக்கு மேல ஒரு பதிவ எழுதறதில்லேன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன். அப்பத்தான் படிக்கறவங்களுக்கும் போரடிக்காது. அந்த லிமிட் வந்ததும் என்னையுமறியாம தொடரும் போட்டுடறேன்.. அதான் விஷயம்..:)

G.Ragavan said...

அடடா! என்ன பிரச்சனையோ! போலீஸ்காரங்க ஆளு தராதரம் தெரியாமப் பேசுறவங்கங்குறதுதான் உண்மை. ஒரு சிலர் அப்படி இல்லாம இருக்கலாம். ஆனா பெரும்பாலான போலீஸ்கள் மரியாதை தெரியாதவங்களாத்தான் இருக்காங்கங்கறது உண்மைதான். வலைப்பூவுல யாரும் போலீஸ் இருக்கீங்களா? ஒங்க கருத்தையும் வந்து சொல்லுங்க.

sivagnanamji(#16342789) said...

sory உங்க ரீயாக்ஸ்ன் போதுமானதா இல்லே.'கொம்பா முளைச்சிருக்கு' என்றதுமே 'mind your tongue...'என்று ரிடார்ட் செய்திருந்தால் பேச்சு வேறு தினுசா
இருந்திருக்கும்

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆனா பெரும்பாலான போலீஸ்கள் மரியாதை தெரியாதவங்களாத்தான் இருக்காங்கங்கறது உண்மைதான். //

உண்மைதான். என் குடும்பத்திலேயே இரண்டு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் நான் சந்தித்த அந்த அதிகாரி ஒரு அடாவடிதான்.

tbr.joseph said...

என் குடும்பத்திலேயே இரண்டு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். //

ஒரு சிறு தன்னிலை விளக்கம். இவர்கள் இருவருமே மிகவும் அமைதியானவர்கள். என் குடும்பத்தார் என்பதற்காகக் கூறவில்லை.. இலாக்காவிலேயே பிழைக்கத்தெரியாதவர்கள் என பெயரெடுத்தவர்கள்..

tbr.joseph said...

வாங்க ஜி!

sory உங்க ரீயாக்ஸ்ன் போதுமானதா இல்லே//

அப்படீங்கறீங்க. அப்ப எனக்கு வயசு 32தாங்க. அதையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க..

ஒரு வேளை ஒரு பத்து வருஷத்துக்கப்புறம் வேணும்னா அப்படி சொல்லியிருப்பேன்..

டி ராஜ்/ DRaj said...

உங்க மச்சினன புடிச்சு வச்சிருந்தாங்களா என்ன? :(((
நம்ம ஊருல போலீசுக்கு மட்டும் தாங்கள் சேவை செய்யறோம்ங்கறத விட நாட்டாமை பண்ண வந்தோம்ங்கற எண்ணம் தான் அதிகம் :((( வேற எங்கயும் இப்படி அடாவடிகளை நான் பாத்ததில்லை...

tbr.joseph said...

வாங்க ராஜ்,

நம்ம ஊருல போலீசுக்கு மட்டும் தாங்கள் சேவை செய்யறோம்ங்கறத விட நாட்டாமை பண்ண வந்தோம்ங்கற எண்ணம் தான் அதிகம்//

கரெக்டா சொன்னீங்க. அதுக்குத்தான் அரசாங்கம் தங்களையமர்த்தியிருக்கிறதென்ற நினைப்பு அவர்களுக்கு..

லதா said...

// அத்துடன் நேரத்திற்கு ஒன்றாக, சில சமயங்களில் அவருடைய முந்தைய கருத்துக்கு நேர் எதிரான கருத்தையும் சிறிது இடைவெளிக்குப் பிறகு அளிக்கக் கூடிய அளவுக்கு முரணானவர் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். //

//சமயத்துக்கு ஏத்தாமாதிரி பேசறதுல ஆண்களைவிட பெண்கள் பயங்கரமான ஆளுங்க.. என்ன சொல்றீங்க?//

DGM சார்,

அந்த வழக்கறிஞர் ஆணா ? பெண்ணா ?

:-)))

tbr.joseph said...

வாங்க லதா,

அந்த வழக்கறிஞர் ஆணா ? பெண்ணா ?//

ம்..ம்.. ஆண்தான்..

அவர் முன்னுக்கு பின் முரணாத்தான் பேசுவார்.. ஆனா சமயத்துக்கு ஏத்தா மாதிரி பேசுவாரா...

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது:))