18 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 136

சில சமயங்களில் வங்கிக்கு வரும் அடாவடி வாடிக்கையாளர்களை மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டுத்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

நான் நேற்று விவரித்த சம்பவத்திற்கு என்னுடைய உதவி மேலாளருடைய கவனக் குறைவும் வங்கி நியதிகளை மீறி நடந்துக்கொண்ட விதமும்தான் காரணம். ஒத்துக்கொள்கிறேன். நியாயமாகப் பார்த்தால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நாங்கள் ஈடு செய்திருக்க வேண்டும். அதுதான் சரி.

ஆனால் அதே சமயம் இச்சம்பவத்தின் மூல காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் வாடிக்கையாளரின் நாணயமற்ற செயலும்தான் என்று எண்ணத்தோன்றுகிறது.

ஆகவேதான் என்னுடைய மனசாட்சி இடித்துரைத்ததையும் மீறி அவரை மிரட்டி பணியவைக்க வேண்டியிருந்தது. எங்களுடைய இச்செயலால் அவருடைய குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நானோ அல்லது எனக்கு உதவி செய்ய வந்த பொற்கொல்லரோ உணராமல் இல்லை.

அவர் தன்னுடைய இயலாமையை உணர்ந்து  உடைந்துபோயிருந்த ஆபரணத்தை அப்படியே பெற்றுக்கொண்டு வெளியேறிச் சென்றபோது அவருக்காக ஒரு நொடி நான் வருத்தப்பட்டது உண்மைதான் என்றாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே என்று நினைத்து சமாதானமடைந்தேன்.

ஆயினும் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து இனியும் இத்தகைய புகார்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்து அனுப்பினேன்.

ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தவுடனே மனம் தீர்க்கப்படாமல் இருக்கும் வேறொரு பிரச்சினைக்கு தாவும் என்பது உண்மைதான்.

என்னுடைய உதவி மேலாளருக்கு நான் எச்சரித்ததில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும் வேறு வழியின்றி எதிர்த்து பேசாமல் அவருடைய இருக்கைக்கு சென்றதும் நான் காலையில் சந்தித்த வழக்கறிஞர் பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லையென்றால் கொடுத்தனுப்புகிறேன் என்றாரே மணி நான்காகிறதே இன்னும் காணவில்லையே அப்படியென்றால் பத்திரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்து குழம்ப ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் நாம் யாரைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோமோ அவரே நம் முன்னே வந்து நிற்பார். ‘அடப்பாவி, இப்பத்தான் ஒன்னப் பத்தி நினைச்சேன். உடனே வந்து நிக்கறயே.. ஒனக்கு சாவே இல்லடா’ என்போம் மகிழ்ச்சியுடன்.

நான் வழக்கறிஞர் அலுவலக சிப்பந்தியைக் காணோமே என்று நினைத்து முடித்த மறு நொடியே நான் காலையில் கொடுத்த பத்திர கட்டுடன் வந்து நின்ற சிப்பந்தியைப் பார்த்ததும் எனக்கும் அன்று அப்படித்தான் தோன்றியது.

‘சார், பத்திரத்துல ஒரு பிரச்சினையும் இல்லையாம். சார் இத ஒங்கக் கிட்ட குடுத்துட்டு வரச் சொன்னாங்க. வேற ஏதாச்சும் தெரியணும்னா சாயந்திரமா கூப்டுவீங்களாம்.’

நான் கட்டை பெற்றுக்கொண்டு, ‘சரி தம்பி. நீங்க போங்க. நான் சார கூப்டுக்கறேன்.’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

பத்திரத்தில் பிரச்சினை இல்லை என்பதில் எனக்கு ஓரளவு மகிழ்ச்சிதான் என்றாலும் இந்த சிக்கலில் தேவையில்லாமல் சிக்கிக்கொண்டோமே என்றும் தோன்றியது.

என்னுடைய அலுவலகப் பிரச்சினையானால் என்னுடைய அனுபவத்தை வைத்து சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் இதுவோ குடும்பத்தில் அதுவும் என்னுடைய மனைவியின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையாயிற்றே. நான் வாங்கிய சொத்து பத்திரத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று வக்கீலே சொல்லிவிட்டார் ஆளை விடுங்கள் என்று ஒதுங்கிக்கொள்ள முடியாதே, என்றெல்லாம் என்னுடைய மனம் கிடந்து அடித்துக்கொண்டது.

சரி, காலையில் என்னுடன் வந்த என்னுடைய மைத்துனர் தன்னுடைய நண்பர்களுடன் இவ்விஷயம்பற்றி கலந்தாலோசிக்கச் சென்றாரே என்ன நடந்தது என்று ஒரு விவரமும் இல்லையே என்று நினைத்த நான் அலுவலகத்தில் இருக்க முடியாமல் என்னுடைய உதவி மேலாளருடன் கூறிவிட்டு என்னுடைய மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

வீட்டிற்குள் நுழையும்போதே அங்கிருந்தவர்களின் மனநிலை எனக்கு ஓரளவு புரிந்தது. என்னுடைய மனைவி என்னைக் கண்டதும் எழுந்து வந்தார். ‘என்னங்க, வக்கீல் ஏதும் சொன்னாரா? அப்பா அரைமணி நேரத்துக்கொருதரம் அவர் வீட்டுக்கு ஃபோன் போட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனா ரிங் போய்ட்டே இருக்கே தவிர யாரும் எடுக்கறா மாதிரி காணோம். ஒங்க கிட்ட ஏதும் சொன்னாரா?’

நான் என் கையிலிருந்த பத்திரங்கள் அடங்கிய உறையை என் மனைவியிடம் கொடுத்து, ‘ஒரு வில்லங்கமும் இல்லையாம். பத்திரத்த திருப்பி கொடுத்து அனுப்பிட்டார். ஆஃபீஸ் பையன் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாலதான் கொண்டு வந்து குடுத்தான். நான் உங்க வீட்டுக்கு ரெண்டு மூனு தடவ ஃபோன் பண்ணேன். எங்கேஜ்டாவே இருந்துது. அதான் நேரா புறப்பட்டு வந்தேன்.’

பத்திரத்தில் வில்லங்கம் இல்லையென்பது என் மனைவிக்கு உண்மையிலேயே நிம்மதியை அளித்திருக்க வேண்டும். ‘அப்பாடா, இனி உங்க தல உருளாது. காலையிலருந்து இதப்பத்தித்தான் அப்பா புலம்பிக்கிட்டே இருக்காங்க. ஏதோ நீங்கதான் சரியா பாக்காம, சரியா விசாரிக்காம வாங்கிட்டா மாதிரி. எனக்கும் கோபம், கோபமாத்தான் வந்துது. அம்மாவுக்காக பொறுத்துக்கிட்டு இத்தன நேரம் இருந்தேன். அந்த பத்திரத்த குடுங்க, எங்கம்மாக் கிட்ட குடுத்துட்டு நாம வீட்டுக்கு போவோம். இனி அவங்க பாடு. நமக்கு வேண்டாம் இந்த தொல்லை.’ என்றார்.

இதை எதிர்பாராத நான், ‘நாம எப்படி அப்படி பட்டும்படாம இருக்க முடியும்னு நினைக்கிறே? அவசரப்படாத. ஒங்க அண்ணன் காலைல போனவரு இதுவரைக்கு வரவே இல்லையா?’ என்றேன்.

நான் கேட்ட கேள்வியில் என்னுடைய மனைவிக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை அவர் உடனே பதிலளிக்காமல் பத்திரத்தை என் கையிலிருந்து பறித்துக்கொண்டு சென்றதிலிருந்தே தெரிந்தது. நானும் பதில் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்து ஹாலில் இருந்த சோபா ஒன்றில் அமர்ந்தேன்.

என்னுடைய மாமனாரைக் காணோம். மாடியில் இருந்திருப்பார் போலிருந்தது. என்னுடைய மனைவி அடுக்களையிலிருந்த என்னுடைய மாமியாரிடம் பத்திரத்தைக் கொடுத்துவிட்டு உடனே வெளியே வந்தார். ஹாலிலிருந்த என்னிடம், ‘என்ன ஒக்காந்துட்டீங்க? அங்க பாப்பா ஸ்கூல்லருந்து வந்திருப்பா. வாங்க போலாம்.’ என்று படபடக்க நானும் வேறு வழியின்றி அவருடன் புறப்பட்டேன்.

என்னுடைய இரண்டாவது மகளை துவாலையில் பொதிந்து கையில் எடுத்துக்கொண்டு என் முன்னே விடுவிடுவென நடந்த என் மனைவியிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் என்னுடைய வாகனத்தை முடுக்கி விக்டோரியா சாலையை அடைந்தோம்.

திடீரென்று பின் இருக்கையில் அமர்ந்திருந்த என்னுடைய மனைவி, ‘இங்க பாருங்க.. இனி நீங்க உண்டு உங்க வேலையுண்டுன்னு இருங்க. தேவையில்லாம ஊருக்கு உதவி பண்றேன்னு எதையாவது செஞ்சிட்டு வம்புல மாட்டிக்காதீங்க. அது யாரா இருந்தாலும் சரி. போறும். நல்லது செய்யப் போயி.. இன்னைக்கி எங்கப்பா பேசினத நினைச்சா பத்திக்கிட்டு வருது. இனி  இந்த நிலத்து விஷயத்துல நீங்க தலையிடக் கூடாது. அவங்களே டீல் பண்ணிக்கட்டும். சொல்லிட்டேன்.’ என்றார்.

அவர் குரலில் எப்போதும் இல்லாமல் ஒரு வெறுப்பும், விரக்தியும் இருந்ததை கவனித்த நான் அவர் அப்போதிருந்த சூழ்நிலையில் நான் ஏதாவது பேசினால் அவருடைய கோபம்தான் அதிகமாகும் என்று நினைத்து வீடு வந்து சேரும்வரை மவுனமாய் இருந்தேன்.

மாலை நேரங்களில் என் வீடு அமைந்திருந்த வெஸ் க்ரேட் காட்டன் எனப்படும் WGC சாலையை அப்போதுதான் பரிசோதனை முறையில் ஒரு வழிப்பாதையாக மாற்றியிருந்தனர். ஆகவே தலையை சுற்றி மூக்கைத் தொடும் விதமாக என்னுடைய மாமனார் வீட்டிலிருந்து ஐந்தே நிமிடத்தில் அடையக்கூடிய என்னுடைய வீட்டை அடைய அரைமணி நேரம் எடுத்தது.

பரீட்சார்த்த முறையில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தில் ஏறக்குறைய தூத்துக்குடி நகரத்திலிருந்த எல்லோருமே எதிர்த்தனர். இருப்பினும் காவல்துறையினருக்கு அஞ்சி வேறு வழியில்லாமல் எல்லோரும் கண்ணில் படுவோரிடமெல்லாம் பரஸ்பர வயிற்றெரிச்சலைக் கொட்டி தீர்த்தவாறே சென்றுக்கொண்டிருந்தனர்.

‘என்ன அக்கிரம்யா.. பெட்ரோல் விக்கற வெலையில இது தேவைதானா?. வீட்லருந்து பிள்ளைங்கள ஸ்கூல்ல விடறதுக்கு அஞ்சே நிமிஷத்துல போய்ட்டு வந்துருவேன். இப்ப பாருங்க. ஹோலி க்ராஸ்லருந்து மேக்கே பஸ்டாண்டு வரைக்கும் போய்ட்டுல்லே மறுவடியும் கிளக்கே வரமுடியுது? என்ன ரூலோ என்ன எளவோ.. போங்க.. நம்ம நேரமும் பெட்ரோலும்தான் ச்செலாவாவுது.’ என்றார் என்னுடைய வாகனத்துக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர்.

'ஆமா இங்க கெடக்குற கெடப்புல இதப்பத்திதான் நினைக்கணும். சோலிய பாத்துக்கிட்டு போவீரா..’ என்று அவர் கடந்து சென்றதும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னுடைய மனைவி முனுமுனுக்க நான் அப்போதிருந்த கவலையையும் மறந்து உரக்க சிரித்தேன்.

என்னுடைய மனைவியோ மேலும் கோபமடைந்து, ‘எதுக்கு இப்ப சிரிக்கீக? மனுஷி படற பாட்டுல ஒங்களுக்கு சிரிப்பாருக்காக்கும். பேசாம வெரசா போங்க. அங்க பாப்பா நின்னுக்கிட்டிருக்கும்.’ என்று சீற வாகனம் என்னையும் மீறி வேகமெடுத்தது.

என்னுடைய அலுவலக வாசலில் இடதுபுறம் ஒரு பெரிய பிரபலமான துணிக்கடையும் வலதுபுறம் அதைவிட பிரபலமான நைட்க்ளப்பும்! (இதற்கென தனியாகவே ஒரு பதிவு போடவேண்டும்) இருக்கவே என்னுடைய வளாகத்திற்குள் நுழைய முடியாதபடி எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

நான் வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என்று என்னுடைய வாகனத்தின் சிக்னலை எரியவிட்டால் கூட யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நைட்க்ளப் கல்லாப் பெட்டியில் இருப்பவர் என்னுடைய வாகனத்தின் சப்தத்தை வைத்தே அது நாந்தான் என்பதைக் கண்டுக்கொள்வார். ‘அண்ணே வழிவிடுங்க. மானேஜர் சார் உள்ளார போயிரட்டும்.’ என்பார்.

அன்றும் அவருடைய எச்சரிக்கைக்குப் பிறகே ஆட்கள் வழிவிட வளாக வாசலில் இருந்த பெரிய இரும்பு கேட் வழியாக உள்ளே நுழைந்தேன். நான் தினமும் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் நின்றுக்கொண்டிருந்தார்.

நான் வாகனத்தை நிறுத்தியதும் என்னுடைய மனைவி இறங்கி நின்று காவலரையே பார்த்தார். ‘என்னங்க எதுக்கு இவரு வந்திருக்காருன்னு கேளுங்க.’ என்று கிசுகிசுக்க நான் என்ன சார் யார் வேணும் என்பதுபோல் அவரைப் பார்த்தவாறே வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

‘நீங்கதான் இந்த பேங்க் மேனசரா?’ என்றவரைப் பார்த்து ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.

‘சார், ஐயா ஒங்கள ஒடனே கையோட ஸ்டேஷனுக்கு கூப்டுக்கிட்டு வரச்சொன்னார்.’

நானும் என் மனைவியும் திடுக்கிட்டு ஒருவரையொருவரைப் பார்த்துக்கொண்டோம்.

தொடரும்..

13 comments:

டி ராஜ்/ DRaj said...

நிலப்பிரச்சனை தான் போலீசு வருகைக்கு காரணமோ??? ஏதாவது கட்ட பஞ்சாயத்து நடந்திருக்குமோ/ நடத்த முயற்சி செய்திருப்பார்களோ???

sivagnanamji(#16342789) said...

ஒரே சஸ்பென்ஸ் மயம்.துப்பறியும் நாவல் மாதிரி ட்விஸ்ட் இருக்கு.
அவங்களுக்கு ஆற்றாமையா இருக்கச்சே ஏதும் சொல்லி வாங்கிக்கட்டிக்காதீங்க
ஆமா ஒரு வங்கி முகவரை இப்படி ஸ்டெசனுக்கு திடீரென வரச்சொல்ல முடியுமா?

tbr.joseph said...

வாங்க ராஜ்,

நிலப்பிரச்சனை தான் போலீசு வருகைக்கு காரணமோ??? //

ஆமாம். வேறென்ன இருக்கப் போவுது அப்படீன்னு அவர பார்த்ததுமே நான் நினைச்சேன்.

tbr.joseph said...

வாங்க ஜி!

ஒரு வங்கி முகவரை இப்படி ஸ்டெசனுக்கு திடீரென வரச்சொல்ல முடியுமா?//

அப்படி ஏதாச்சும் ரூல் இருக்கா என்ன? அதுவுமில்லாம வங்கி அலுவலக நேரம் முடிஞ்சதுக்குப்புறம்தான கூப்ட்டாங்க.

G.Ragavan said...

ம்ம்...கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்ங்குற கதையா இருக்கே...ஒங்க கதை.....

அந்த ரோடு ஒன்வே செய்யும் போது இத்தன நடந்திருக்கா...இருக்கலாம். ஆனா இப்ப....அத ஒன்வே இல்லாம நெனச்சுப் பாக்க முடியுமா? கொஞ்சம் குறுகலான ரோடு வேற......

துளசி கோபால் said...

என்னங்க இப்படி 'திக்'ன்னு தொடரும்னு போட்டுடறீங்க.
எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா நீங்கதான் பொறுப்புன்னு எழுதி வச்சுறட்டுமா?:-))))

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆனா இப்ப....அத ஒன்வே இல்லாம நெனச்சுப் பாக்க முடியுமா? கொஞ்சம் குறுகலான ரோடு வேற...... //

உங்க ஊர்ல இருக்கறதுலயே கொஞ்சம் அகலமான ரோடு WGC Roadதான். அதயே குறுகல்னு சொன்னா என்னாவறது..?

tbr.joseph said...

வாங்க துளசி,

எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா நீங்கதான் பொறுப்புன்னு எழுதி வச்சுறட்டுமா?//

என்னங்க இதுக்கே ஹார்ட் அட்டாக் வந்தா எப்படி? இன்னும் இருக்கே..

ஆனா ஒன்னு.. அந்த கான்ஸ்டபிள பார்த்ததும் என் மனைவியின் முகம் போன போக்கை பார்த்திருக்க வேண்டும்.

அரவிந்தன் said...

உங்களுடைய சூரியன் நாவலைவிட திரும்பிப் பார்க்கிறேன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

என்னுடைய தி.பா. தொடரின் ஒரு logical extensionதான் சூரியன் தொடர்..

இதில் வெளிச்சம் போட்டு காட்ட முடியாதவைகளைக் காட்டத்தான் சூரியன் தொடர்..

sivagnanamji(#16342789) said...

my world பதிவு காணோமே

sivagnanamji(#16342789) said...

//அப்படி எதுவும் ரூல் இருக்கா//
இருப்பதாகவே நினைவு...ஒரு வழக்குரைஞரிடம் கேட்டுப்பாருங்கள்

tbr.joseph said...

வாங்க ஜி!

மை வேர்ல்ட் வெள்ளி அண்ட் சனிக் கிழமைகளில் மட்டுமே தெரியும்:)

அரசு அதிகாரிகளை காவல் நிலையத்திற்கு வரவழைக்க அவர்களுடைய மேலதிகாரிகளின் அனுமதி வேண்டும் என்று ஒரு நியதி உண்டு என்பது தெரியும். ஆனால் கூடாது என்று சட்டம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்குமென்றால் தமிழக அரசு அதிகாரிகளும், பணியாளர்களையும் அரசே நடுநிசியில் கைது செய்ததே.. அது சட்ட விரோதமில்லையா?

ஆனால் ஒரு வங்கி மேலாளரை காவல்நிலையத்திற்கு அழைக்க தகுந்த காரணத்தை முன்கூட்டியே தெரிவிக்காமல் அழைக்கக் கூடாது என்பது வழக்கம். ஆனால் சாதாரண துணை ஆய்வாளரக்கு (S.I) அந்த அதிகாரம் இல்லை என்பது உண்மை. Inspector of Police அல்லது அவருக்கு மேலே இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது என்று என்னுடைய சட்ட ஆலோசகர் கூறியிருந்தார். இப்போது எப்படியோ தெரியவில்லை.