16 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 134

நான் ஏற்கனவே கூறியிருந்தேன் தூத்துக்குடியில் வணிகம் செய்வோர்  தங்க நகைகளை வெறும் ஒரு அணிகலனாக மட்டும் பார்க்காமல் தங்களுடைய தற்காலிக கையிருப்பை முதலீடு செய்யும் ஒரு அசையும் சொத்தாகவும் நினைத்திருந்தனர் என்று.

வணிகர்களுடைய எண்ணம் இதுவானாலும் அவர்களுடைய இல்லத்தரசிகளுடைய எண்ணமோ அது ஒரு சொத்து என்பதுடன் அணிகலனாகவும் இருக்க வேண்டும் என்றும் குடும்பத்தில் நடக்கும் வைபவங்களில் தங்களுடைய மதிப்பை சக குடும்பத்து பெண்கள் மத்தியில் உயர்த்தவும் உதவ வேண்டும் என்பதாகவிருந்தது.

நான் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பணிபுரிந்திருக்கிறேன். வெறெங்கும் பார்த்திராத அளவுக்கு அழகான, ஆர்ப்பாட்டமான வடிவங்களில் நகைகளை தூத்துக்குடியில்தான் பார்த்திருக்கிறேன். அத்தனை சிறியு நகரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய, நடுத்தர, சிறிய நகைக்கடைகள் அமோகமான செயலாற்றி வந்தன. இக்கடைகளைச் சார்ந்து பல பொற்கொல்லர் குடும்பங்கள் இருந்தன. இவர்களில் பெரும்பாலோனோர் திறமை வாய்ந்தவர்கள்.

நகரத்தில் பெரிய கடைகளில் ஒன்று எங்களுடைய வங்கியிலும் கடனுதவி பெற்றிருந்ததால் அவர்களுடைய செயல்பாட்டைப் பற்றி நான் நன்றாகவே அறிந்திருந்தேன். தங்க நகைகளில்
நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்ய ஏதுவாக தங்கத்துடன் செம்பு கூடுதலாக சேர்ப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். 'இல்லன்னா வேலபாடு செய்யும்போது தங்கம் ஒடஞ்சி போயிரும்சார்' என்பார் கடை முதலாளி. ஆகவே தூத்துக்குடியில் செய்யப்பட்ட நகைகள்  நாளடைவில் தங்களுடைய ஒரிஜினல் நிறத்தை இழந்து காணப்படுவது மிகவும் சகஜம்.

இத்தகைய நகைகளை உரைக்கல்லில் உரைக்கமாலேயே மாற்று கண்டுபிடிப்பது சற்று சிரமம். நகைகள் அசலா போலியா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக வேண்டுமானால் உரைக்கல் மற்றும் ஆசிடை உபயோகிக்கலாம். ஆனால் நககைகளின் மாற்றைக் கண்டுபிடிக்க சாதாரணமாக உரைக்கல்லில் உரைத்தாலே அதன் நிறத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.ஆனால் அதற்கு அனுபவம் வேண்டும்.

ஆகவே பெரும்பாலான வங்கி மேலாளர்கள் தங்கத்தின் தரத்தில் ஏதேனும் ஐயமிருந்தால் தங்களுக்கு தெரிந்த நகைக்கடைகளில் கொடுத்து பரிசோதிப்பார்கள். நானும் அப்படி சில சிமயங்களில் செய்திருக்கிறேன். ஆனால் கணிசமான தொகையைக் கடனாக பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் மட்டுமே அப்படி செய்வது வழக்கம்.

கடன் தொகை ஐம்பதாயிரத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு தெரிந்தவரை நாங்களே தோராயமாக தரத்தை கணக்கிட்டு தேவைப்பட்டால் கொடுக்கப்படும் தொகையில் சற்றே குறைத்து வழங்கிவிடுவோம்.

சாதாரணமாக ஒரு கிளைக்கு பொறுப்பேற்கும் நேரத்தில் முந்தைய மேலாளர் இருக்கும் நேரத்திலேயே கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த எல்லா நகைகளையும் தரம் பார்த்து கொடுக்கப்பட்ட கடன்களில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா என்பதை சரிபார்த்துவிடவேண்டும் என்பது நியதி.

நான் தூத்துக்குடி கிளையை பொறுப்பேற்கும் சமயத்தில் அங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் கூடுதலான தங்க நகைக் கடன்கள் இருந்தன. அவற்றையெல்லாம் உரைக்கல்லில் உரைத்து சரிபார்ப்பதென்பது இயலாத காரியம் என்பதால், கடன் தொகை ஐம்பதாயிரத்திற்கு மேலிருந்த கணக்குகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளின் எண்ணிக்கை, அவற்றின் மொத்த எடை, கடன் பெற்றிருப்பவர்கள் வங்கியின் நிரந்த வாடிக்கையாளர்கள்தானா, அல்லது நிரந்தர வாடிக்கையாளர்களால் அறிமுகப்படுத்தப்ட்டிருந்தனரா என்பதை மட்டும் சரிபார்த்து முடித்திருந்தேன். அவற்றின் எண்ணிக்கையே ஐந்நூற்றுக்கும் மேலிருந்தது.

நான் கடந்த பதிவில் புகார் செய்ய வந்திருந்த வாடிக்கையாளரின் நகைக்கடன் ஐம்பதாயிரத்திற்கு சற்று குறைவாயிருந்திருக்கிறது. ஆகவே அதை நான் சரிபார்த்திருக்கவில்லை. அதில்தான் இருந்தது பிரச்சினை.

என்னுடைய உதவி மேலாளர் தூத்துக்குடி கிளைக்கு மாற்றலாகி வந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தன. அவர் குமாஸ்தா பதவியிலிருந்து உதவி மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டதும் முதன் முதலாக பதவியேற்றது இந்த கிளையில்தான்.

ஆகவே அவர் தங்க நகைகளை அசலா, போலியா என்பதை கண்டுபிடிப்பதற்கான பயிற்சிவகுப்பில் பங்கு பெற்றிருந்தாலும் செயல்முறை பயிற்சி பெற்றிராதவர். அசலா, போலியா என்பதை கண்டுபிடிப்பதற்கே அனுபவமில்லாதவர் தங்கத்தின் மாற்றை எப்படி கண்டுபிடித்திருந்திருப்பார் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள். மேலும் அவருக்கு கலர் ப்ளைண்ட்னஸ் எனப்படும் நிறத்தை எளிதில் பிரித்தரிய முடியாத ஒரு குறையும் இருந்திருக்கிறது.

ஆகவே உரைக்கல்லில் நகைகளை சற்று அதிகமாகவே அழுத்தி தேய்த்துவிடுவார். அதையும் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு எதிரிலேயே செய்வார். நான் பொறுப்பேற்ற முதல் நாளே அவருடைய இந்த செயலைக் கண்டு அவரை அழைத்து ‘தயவு செய்து அப்படி செய்யாதீர்கள். உங்களுக்கு தரத்தில் ஏதானும் ஐயம் இருந்தால் மதிப்பை சற்று குறைத்து கணக்கிடுங்கள். அதற்கு சம்மதிக்காத வாடிக்கையாளரிடம்  அவற்றை ஈடாக எடுக்க முடியாது என்று தன்மையாக கூறிவிடுங்கள்.’ என்று எச்சரித்தேன்.

ஆனாலும் அவருடைய பாணியைத் தொடர்ந்து கடைபிடித்துவரவே பல வாடிக்கையாளர்களிடம் ஏச்சும் பேச்சும் வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். சரி, பட்டு தெரிந்தால்தான் நாளடைவில் இப்பழக்கத்தை கைவிட்டுவிடுவார் என்று நானும் அவர் போக்கிலேயே விட்டுவிட்டேன்.

ஆனால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட வாடிக்கையாளருடைய விஷயத்தில் என்னுடைய உதவிமேலாளர் செய்திருந்த விஷயம் (மடத்தனம் என்றே சொல்லத்தோன்றுகிறது) சற்று கூடுதல்தான்.

சுமார் இருபது பவுன் மதிப்புள்ள ஒட்டியாணத்தை அவர் உரைக்கல்லில் தேய்த்ததில் ஒட்டியாணம் இரண்டாக உடைந்து போயிருந்தது. அத்துடன் அவர் உடைந்த பகுதியில் ஆசிடை தடவி பரிசோதனை செய்த இடத்தில் விரலளவுக்கு கருப்பான ஒரு அடையாளமும் இருந்தது.

அதைப் பார்த்த நானே அதிர்ந்துபோனபோது வாடிக்கையாளரைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

‘இப்ப என்ன சார் சொல்றீங்க? இத எடுத்துக்கிட்டு நா வீட்டுக்கு போனா வீட்ல இருக்கறவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு ஒரு நிமிஷம் நெனச்சி பாருங்க. எனக்கு கல்யாணம் முடிஞ்சே இன்னும் முழுசா ரெண்டு வருஷம் ஆகலே. கல்யாணத்துல போட்ட நகைய அடகு வச்சேன்னு நினைச்சால மாமனார் வீட்ல காறித்துப்பிருவாங்க. இதுல ஒட்டியாணத்த ரெண்டா ஒடச்சி.. ஆசிட ஊத்தி.. அது கூட பரவால்லைய்யா.. கேட்டா அடகு வைக்க வந்தா டெஸ்ட் பண்ணித்தான்  எடுப்போம். மாத்து கம்மியாருந்ததாலத்தான் கருப்பாயிருச்சின்னு திமிரா பேசறான் சார் இந்தாளு...’

வாடிக்கையாளர் இறுதியில் என்னுடைய உதவி மேலாளர் கூறியதாக கூறியதில் தவறேதும் இல்லை. நகையில் அதிக அளவில் இருக்கும் செம்பு மட்டுமே ஆசிட் பட்டதும் நிறம் மாறுவதுண்டு.

ஒட்டியாணத்தில் சற்று தூக்கலாகவே செம்பு கலக்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனாலும் அதை இரண்டாய் உடைந்துபோகும் அளவுக்கு என்னுடைய உதவி மேலாளர் உரைத்திருக்க வேண்டாம். மேலும் உரைக்கல்லில் உரைக்கப்பட்ட தீற்றின்மேல்தான் ஆசிடை வைத்துப் பார்க்கவேண்டுமே தவிர நகைகளின் மீது வைக்கக்கூடாது என்பது பயிற்சி வகுப்பில் முதலில் சொல்லிக்கொடுக்கப்படும் பாடம்.

‘என்ன சார் ஒன்னும் சொல்லாம பார்த்துக்கிட்டே இருக்கீங்க? இதுக்கு என்ன வழி? அதச்சொல்லுங்க.’ என்ற குரலை சற்றே உயர்த்திய வாடிக்கையாளரைப் பார்த்தேன். அவரிடம் எந்தவிதத்தில் பேசி சமாதானம் செய்ய முடியும் என்று தெரியாமல், ‘சார் இவர் பண்ணது தப்புதான். ஒத்துக்கறேன். இதுக்கு இப்ப என்ன பண்ணணும்னு சொல்லுங்க. செய்யறோம். கோபப்பட்டு ஒன்னும் ஆவப்போறதில்லை.’ என்றேன் தயக்கத்துடன்.

அவருக்கு மேலும் கோபம் ஏற்பட்டது. மனைவியை சமாதானப்படுத்துவதைவிட மாமனார் வீட்டிலிருப்பவர்களை எப்படி சமாளிப்பது என்பதுதான் அவருடைய கவலையாயிருந்தது. அந்த இயலாமைதான் கோபமாக வெடித்தது.

‘என்னய்யா பொறுப்பில்லாம பேசறீங்க? என்னெ கேட்டா? இவரையே கேளுங்க. சார், ஒன்னும் வேணாம். நான் நீங்க குடுத்த கடன வட்டியோட திருப்பிக்கட்டிட்டேன். நா அடகு வச்ச நகைய நான் வச்சா மாதிரி திருப்பிக்குடுத்துறுங்க. அவ்வளவுதான்.’

அவர் எளிதாக கூறிவிட்டார். எப்படி அவர் அடகு வைத்ததுபோலவே திருப்பிக் கொடுப்பது என்பது விளங்காமல் நான் என்னுடைய உதவி மேலாளரைப் பார்க்க அவர் பரிதாபமாக விழித்தார்.

தொடரும்..12 comments:

Krishna said...

அது அவ்வளவு கடினமான வேலையில்லை சார். அவரை, அங்கிருக்கும் பழைய பானையை உடைக்கச் செய்துவிட்டு, அதே பானையே மீண்டும் ஒழுங்காய் தர வேண்டுமென மிரட்டிவிட்டால் போயிற்று...

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அதே பானையே மீண்டும் ஒழுங்காய் தர வேண்டுமென மிரட்டிவிட்டால் போயிற்று... //

சோக்கு? அது ஒங்க நகையில்லேல்லே.. :)))

sivagnanamji(#16342789) said...

இதான் சார் சபார்டினெட்களோட
அணுகுமுறை..நாம ரூல் படி ஸ்ட்ரிக்டா இருந்தா அவங்க 16 அடி
பாஞ்சு நம்மளா வெறுப்பேத்திடுவாங்க

tbr.joseph said...

வாங்க ஜி!

அவங்க 16 அடி
பாஞ்சு நம்மளா வெறுப்பேத்திடுவாங்க/

அனுபவம் பேசுது இல்லையா? என்ன பண்றது? இந்த மாதிரி சிச்சுவேஷனையெல்லாம் மேனேஜ் பண்ணணும்தானே மேனேஜர்னு பேர் வச்சிருக்காங்க?

இலவசக்கொத்தனார் said...

என்னங்க. ஆபிஸ் விஷயத்தை மட்டும் சொல்லிட்டு வீட்டு பிராபளத்தை அம்போன்னு விட்டுட்டீங்க?

tbr.joseph said...

வாங்க இ.கொத்தனார்,

ஆபிஸ் விஷயத்தை மட்டும் சொல்லிட்டு வீட்டு ..//

நீஈஈஈஈளமா எழுதுனா படிக்கறதுக்கு போரடிச்சிருமில்லே.. அத நாளைக்கு சொல்றேன்.. அதோட அதுக்கு முந்தைய பதிவில எழுதன ப்ராப்ளமும் இருக்கே..

D The Dreamer said...

வாடிக்கையாளரையும் திருப்திபடுத்தனும், சக ஊழியரையும் விட்டுக்கொடுக்கமுடியாது :( சிக்கல் தான். உங்களுக்கு தினுசு தினுசா பிரச்சனை வருதே சார் :)

tbr.joseph said...

வாங்க D!

வாடிக்கையாளரையும் திருப்திபடுத்தனும், சக ஊழியரையும் விட்டுக்கொடுக்கமுடியாது//

அதுதான் பிரச்சினையே.. ஆனாலும் இது எல்லா அலுவலகங்களிலயும் வர்ற பிரச்சினைதான். ஆனா என்ன வங்கியாகும்போது எல்லா பிரச்சினைக்கு பின்னாலயும் பணம் சம்பந்தப்பட்டிருக்கறதுனால சிக்கலாயிருது....

துளசி கோபால் said...

என் சைஸு ஒட்டியாணம்ன்னா அது ரெண்டாப் பிரிஞ்சாலும், ரெண்டு சின்ன ஒட்டியாணமா அவுங்க புள்ளைங்களுக்குச்
சரியா இருந்திருக்கும்.:-)))))

ஹூம்... இப்ப என்ன பண்ணப்போறீங்க? அழிச்சுட்டுப் புதுசாப் பண்ணப்போறீங்களா?

G.Ragavan said...

ஆகா.....இதெல்லாம் டூ மச்...

ஒரு நகைய எப்பாடு பட்டு வாங்கீருப்பாங்க....இப்பிடியெல்லாம் செய்றது ரொம்பத் தப்பு.

அந்த ஆள் எகிறுனா...அது தப்புல்ல.

பொதுவாகவே தூத்துக்குடியில வாங்குன நகைகளுக்குச் சென்னையில நல்ல வெலைக்கு எடுக்குறாங்க. குறிப்பா WGC ரோடுல இருக்குற அந்தப் பெரிய கடைல வாங்குன நகைகளுக்கு ஓரளவு நல்ல மாத்து இருக்கு. அதுவே மோசம்னா சென்னை நகைகளைப் பத்தி நெனச்சுப் பாருங்க.

tbr.joseph said...

வாங்க துளசி,

அழிச்சுட்டுப் புதுசாப் பண்ணப்போறீங்களா?//

அதுவும் ஒரு ஆப்ஷனாயிருந்தது. ஆனா மனுஷன் பெண்டாட்டி ஒத்துக்கமாட்டாங்க சார் என்றபோது பிறகு என்னதான் செய்வது என்று தெரியாமல் மண்டையை பிய்த்துக்கொண்டு நின்றதை இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஒரு நகைய எப்பாடு பட்டு வாங்கீருப்பாங்க....//

நீங்க சொல்றது ரொம்பவும் சரி.. அத என்னோட உதவி மேலாளர் புரிஞ்சிக்கிட்டு உடனே மன்னிச்சிக்குங்கன்னு ஒரு வார்த்த சொல்லியிருந்த அந்த அளவுக்கு வாடிக்கையாளர் கோபிச்சிருக்க மாட்டார். அனுபவக்குறைவுதான் காரணம்.

அப்புறம் ராகவன், சென்னையில பெரிய கடைகளத் தவிர பழைய நகைய வாங்கி உருக்கி புதுசா செய்யறதுனால மாற்று எப்பவுமே மாத்து கம்மியாத்தான் இருக்கும். கடை முத்திரை இருக்கான்னு பாத்து வாங்கணும்..